Published:Updated:

`எளிய மக்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்றவன் நான்!’ - எஸ்.ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

`எளிய மக்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்றவன் நான்!’ - எஸ்.ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

`எளிய மக்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்றவன் நான்!’ - எஸ்.ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

`எளிய மக்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்றவன் நான்!’ - எஸ்.ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

`எளிய மக்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்றவன் நான்!’ - எஸ்.ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

Published:Updated:
`எளிய மக்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்றவன் நான்!’ - எஸ்.ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

``பிறந்த ஊரில் சொந்த மக்களால் பாராட்டு பெறுவதுதான் எழுத்தாளனுக்குப் பெரும் மகிழ்ச்சி. எனக்குள் இருந்த அந்த ஏக்கம் தற்போது தீர்ந்துவிட்டது’’ என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். நெடுங்குருதி, யாமம், துயில், நிமித்தம், இடக்கை, சஞ்சாரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவருக்கு சஞ்சாரம் என்ற புதினத்துக்காக 2018-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது சொந்த கிராமமான மல்லாங்கிணற்றில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

செம்மலர் ஆசிரியர் ச.அ.பெருமாள் பேசும்போது, `நாதஸ்வர கலைஞர்கள் குறித்து சஞ்சாரம் நாவல் எழுதப்பட்டுள்ளது. காரியாபட்டி, கல்குறிச்சி போன்ற ஊர்களில் முன்பு பல நாதஸ்வர கலைஞர்கள் இருந்தார்கள். ஆனால், இன்று தஞ்சாவூரிலேயே நாதஸ்வர கலைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை. விழாக்களுக்குக் கூட நாதஸ்வரத்துக்கு பதிலாக கேரளாவிலிருந்து செண்டை மேளங்களை அழைத்து வருகிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

பேராசிரியர் பர்வீன்சுல்தானா பேசும்போது, `ஒவ்வொரு நாட்டையும் தோண்டினால் என்னென்னமோ பொருள்கள் எல்லாம் கிடைக்கும். ஆனால், இங்கே தோண்டினால் பல கதைகள் கிடைக்கும். கதைசொல்லி என்ற பெயர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கேரளாவில் எழுத்தாளர் ஓ.விஜயனுக்கு இடம் ஒதுக்கி நான்கரை கோடி ரூபாயில் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டின் நிலை வேறு. சினிமாவை விட்டுவிட்டு புத்தகம் வாசியுங்கள். வாசிக்கத் தெரிந்த சமூகம் அரசியல், நாகரிகத்தை தானே தீர்மானித்துக் கொள்ளும்’ எனத் தெரிவித்தார்.

எழுத்தாளர் பாரதிகிருஷ்ணகுமார் பேசும்போது, `எஸ்.ராமகிருஷ்ணனைப் பார்த்து நான் எழுத ஆரம்பித்தேன். என்னைப் பார்த்து அவர் பேச ஆரம்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், ஆயிரக்கணக்கான பக்கங்களை அவர் எழுதியிருந்தாலும் அதில் எந்த ஆபாசமும் இல்லை. கேரளாவில் எழுத்தாளர்களுக்கு தனி மரியாதை உண்டு. ஆனால், இங்கே இல்லை’ எனத் தெரிவித்தார்.

ஏற்புரை வழங்கிய எஸ்.ராமகிருஷ்ணன், `உலகம் முழுவதும் சென்று மொழி தெரியாத எத்தனையோ பேர்களுக்கு மத்தியில் பேசியுள்ளேன். ஆனால், இன்று சொந்த ஊர் மக்களுக்கு நடுவில் பேசுவது மிகவும் பெருமையாக உள்ளது. ஊர் என்பது நிலம், வீடு, தெரு மட்டுமல்ல. அது ஒரு நினைவு. ஏதோவொரு நினைவுதான் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறது. நான் கற்றுக்கொள்வதற்கு கிராமத்தில் உள்ள நூலகம் பெரும் உதவியாக இருந்தது. ஊர் வரலாற்றைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஊரின் நினைவு இருக்கும்.

கேரள எழுத்தாளர்களுக்கு விருது கிடைத்தால் அவர்கள் தங்கள் சொந்த ஊரில் சொந்த மக்களால் பாராட்டப்படுவார்கள். இதுபோல் நமக்கும் நடக்காதா என்ற ஏக்கம் எனக்குள்ளும் இருந்தது. இப்போது அந்தக் குறை நீங்கியுள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எந்த எழுத்தாளனுக்கு விருது கொடுத்தாலும் சொந்த மக்களோடு, சொந்த நிலத்தில் கொண்டாடப்படும் போது அவர்கள் உண்மையிலேயே அங்கீகரிக்கப்படுகிறார்கள். என் வாழ்க்கை எனக்கானது மட்டும் அல்ல. நம் அனைவருக்குமானது.

நான் எளிய மனிதர்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்டவன். ஞானிகளிடமிருந்து அல்ல. சாதாரண விவசாயிகள், சாதாரண மக்களிடமிருந்துதான் அரசியல் ஞானத்தை கற்றுக்கொண்டேன். அந்த மனிதர்களின் பிரதிநிதியாக நான் எந்த சபையிலும் இருப்பேன். அவர்களுக்காகத்தான் என் குரல் எப்போதும் ஒலிக்கும். எளிய மனிதர்களின் வாழ்க்கையே எழுத்துகளில் கொண்டு வருவேன்.

`நீ விரும்பியபடி இரு. ஆனால் என்ன செய்தாலும் சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்’ என என் வீடு எனக்குச் சொன்னது. நான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வு இது. கஷ்டங்களையும் விரும்பி ஏற்றுக்கொண்டேன். யாரும் என்னை நிர்பந்திக்கவில்லை. நாம் உலகைப் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நம்மோடு இருப்பவர்களை புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சரியாக வாழவில்லை என்று அர்த்தம். வாழ்க்கை அர்த்தமானது. வாழும் காலங்களை பயனுள்ளதாக வாழ வேண்டும். அப்படி ஒரு பணியைச் செய்ததற்காக நான் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.