Published:Updated:

அதிர்வு - சிறுகதை

அதிர்வு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அதிர்வு - சிறுகதை

பிரசன்ன கிருஷ்ணன் - ஓவியங்கள்: அரஸ்

அதிர்வு - சிறுகதை

பிரசன்ன கிருஷ்ணன் - ஓவியங்கள்: அரஸ்

Published:Updated:
அதிர்வு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அதிர்வு - சிறுகதை

ந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் சரவணன் வெள்ளைப் பலகையில் மார்க்கரை வைத்துப் பல வட்டங்களை வரைந்து கொண்டிருந்தான். அண்மையில் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்த இருவர் சரவணனுக்குக் கீழே வேலை செய்யவும், சரவணனின் பொறுப்பில் இருந்த சில வேலைகளைப் பகிர்ந்துகொள்ளவும் நியமிக்கப்பட்டிருந்தனர். எதிரே சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்கள் வந்துகொண்டிருந்த கொட்டாவி நிரையை அடக்கிக்கொண்டு சரவணன் வரைந்து கொண்டிருந்த வட்டங்களையும் அதன் விளிம்பில் எழுதப்பட்டிருந்த சொற்களையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வட்டங்கள் அவர்களுடைய ஆழ்மனநிலையில் உள்ள சிறுபிராய நினைவுகளை எழுப்பி துயில் நிலைக்கு அழைத்துச் சென்றது. சரவணன் பலகையிலிருந்து திரும்பி சயனத்திற்கு முன் இருக்கும் இருவரின் முகக்கலையையும் பார்த்து உதட்டைப் பிதுக்கி ‘தூங்காதீங்க...’ என்று தூக்கத்தைக் கலைக்கும் தொனியில் சத்தம் போட்டான்.

இன்று சரவணனின் குரல் சராசரிக்கும் மேலான ஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து சிறிய அல்லது நீண்ட கால அவகாசத்திற்கு அலுவலக வேலையாக ஃபுக்குஷிமா வரும் இந்திய நண்பர்களுக்கு சரவணன் ஒரு நல்ல தோழனாகவும் வழிகாட்டியாகவும் இருப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அனைவரின் மனதிலும் சிரிக்கும் புத்தனைப் போன்று பெரும் பிம்பமாக இருந்த சரவணன் இன்று காலையிலிருந்து நாஜி படைத் தலைவனில் ஒருவனாக உருவெடுக்கத் தொடங்கினான். அலுவலக நேரங்களில் தமிழ் அறவே கூடாது என்று அறிவுரைத்துக்கொண்டே இருக்கும் சரவணன் தமிழில் பேசுகிறான். நேற்று இரவே சரவணனுக்கு அளிக்கப்பட்ட சிறந்த பணியாளனுக்கான விருது பலருக்கும் தூக்கத்தைக் கலைத்தது. அலுவலகத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்ட புன்னகையை அவனிடம் வழங்கி வாழ்த்துகள் சொல்லிச் சென்றனர். அண்மையில் ஜப்பானிற்கு வந்த இருவரும் யாதொன்றும் புரியாமல் சரவணனுக்கு அளிக்கப்பட்ட விருதினால் அவன்பால் இன்னும் பெரிய பிம்பத்தை ஏற்றி வைத்தார்கள். ஆனால், காலையிலிருந்து சரவணன் குரலில் அளவிற்கு மீறிய எத்தனமும் மற்றவர் மீதான பரிகாசமும் தெரிந்தது.

அதிர்வு - சிறுகதை

‘நீங்க இங்க வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. புரியுது. ஆனா, சீக்கிரம் இந்த கோட் ஸ்ட்ரக்சர்லாம் புரிஞ்சுக்கோங்க.. ப்ளீஸ் டோன்ட் ஸ்லீப்’ என்று சரவணன் கெஞ்சலும் எரிச்சலும் கலந்த ஒரு குரலில் கூறினான். இருவரும் உண்மையிலேயே ஒருவித குற்ற உணர்விற்குள் சென்றுகொண்டிருந்தார்கள். திடீரென்று சரவணன் மறுபடியும் இருவரின் மனதிலும் புனித பிம்பத்துக்குள் நுழைந்தான். சரவணன் மாறுகிறானா அல்லது அவனைச் சுற்றியுள்ள வர்களின் மனம் மாறிக்கொண்டிருக்கிறதா? ஃபுக்குஷிமா அலுவலகத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மொத்தம் எட்டு. இங்கு சரவணன் தான் உயரிடத்தில் இருப்பவன். வாடிக்கையாளர்களை, பேசி பேசியே கவர முதலில் ஜப்பானிற்கு அனுப்பப்பட்டதும் சரவணன்தான். அதன் பிறகு ஃபுக்குஷிமா வரும் அனைத்து இந்திய நண்பர்களுக்கும் சரவணன் ஒரு வழிநடத்துநர் போல் அறியப்பட்டான். அண்மைக்காலங்களில் சரவணன் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாக மாறிக்கொண்டிருப்பது அங்கிருக்கும் இந்திய நண்பர்களுக்குத் தெரியத்தொடங்கிற்று அல்லது அவர்களே அப்படி நினைத்துக்கொண்டார்கள். நண்பர்களுக்கு, ஏதாவது ஒரு நிரந்தர பிம்பத்தில் இந்த சரவணன் அடைக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஆசானாகவோ, நல்ல நண்பனாகவோ, மேல் அதிகாரியாகவோ, நுட்பமாக சுய தம்பட்டம் அடிக்கும் ஒருவனாகவோ சரவணன் மாறிக்கொண்டே இருக்கிறான்.

சரவணன் நேற்று இரவு வந்த விருது பற்றிய மின்னஞ்சலை அலைபேசியில் பார்த்துவிட்டு உள்ளுக்குள் அடக்கமுடியாமல் வைத்துக்கொண்டிருந்த உவப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அறை நண்பர்களிடம் உதட்டில் கீற்றுப் புன்னகையுடன் பகிர்ந்துகொண்டான். எக்காரணம் கொண்டும் தனக்குள் இருக்கும் பெரு மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்று அவனுடைய பெருநிறுவனக் கலாசாரம் அவனை வளர்த்தெடுத்திருக்கிறது. நேற்று இரவே அடுத்த நாள் இரவு ஃபுக்குஷிமா அலுவலகத்தில் தனக்காக நடக்கப்போகும் விழாவிற்கு எந்த உடை அணியலாம் என்று கற்பனையில் மூழ்கி விட்டான். பகிரியில் குறுஞ்செய்திகள் மூலம் வாழ்த்துகள் வந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் அவன் மனம் ஒரு துள்ளல் கண்டு அடங்கியது.

காலையில் அலுவலகம் வந்தவுடன் தனது உயர் தர உடையை கழிவறைக் கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டு இருப்பிடத்திற்கு வந்து உட்கார்ந்தான். ஃபுக்குஷிமாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் இந்த விருதுச் செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. அலுவலகத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு முன் ஜப்பானிய வாடிக்கையாளர்கள் வந்து வாழ்த்து சொல்வதும் அதைப் பெறுவதும் அவனுக்கு ஒரு போதை போன்றது. நினைத்ததைப்போல் அனைத்து நண்பர்களும், வாடிக்கையாளர்களும் அவன் இருப்பிடத்திற்கே வந்து வாழ்த்து சொன்னார்கள். முக்கியமாக மனித வள மேலாண்மைத் துறையில் எப்போதும் முட்டி வரை மட்டுமே பாவாடை அணிந்து வரும் அகாரி வந்து கைகுலுக்கிச் சென்றதில் அவனுக்கு ஏக மகிழ்ச்சி. ஆறாம் தளத்திலிருந்து அவனுக்காகக் கீழே வந்து வாழ்த்து கூறினாள். அந்த ஒரு தருணத்தை யாராவது புகைப்படம் எடுக்க மாட்டார்களா என்று ஏங்கினான். ஜப்பானிற்கு வந்து இவ்வளவு நாள்கள் கடினமாக உழைத்ததற்கு பலனாக இந்த விருது கிட்டியது அவனுடைய தன்னம்பிக்கையை வெகுவாகக் கூட்டியது.

அந்த ஐந்தாம் தளத்தில் சரவணன் வெள்ளைப் பலகையில் ஏதேதோ கிறுக்கிக்கொண்டிருக்க, அறையில் விகாரமான ஒரு மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைக்க சரவணன் ‘சரி.. அடுத்த கோட் டிசைன் பாப்போம்’ என்று கூறி, வெள்ளைப்பலகையில் கை வைத்தான். சரவணன் அருகில் உள்ள மேசையின் மீதிருந்த கண்ணாடிக் குவளையின் மேற்பரப்பில் அலை அலையாக விரிவதைக் கண்டான். சில நொடிகளில் மொத்தக் கண்ணாடிக் குவளையும் மென்னொலியுடன் அதிர்ந்துகொண்டிருந்ததைக் கண்டு சரவணன் சற்றுக் குழம்பிப்போனான். சுருங்கிய புருவங்களுடன் எதிரிலிருந்த இருவரிடமும் திரும்பி ‘இஸ் சம்திங் ராங்?’ என்று வினவினான். அப்போதுதான் சரவணனுக்கு அந்த அதிர்வலைகள் கடத்தப்பட்டது. நில அதிர்வு அல்லது பூகம்பம் போன்ற நிகழ்வெல்லாம் திருச்சியிலிருந்து வந்த சரவணனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிர்வு - சிறுகதை

நிலைமை புரிய சில நொடிகள் ஆவதற்குள் சரவணன் சந்திப்பு அறையின் வெளியே சென்று பார்த்தான். மக்கள் எந்தவிதக் கூச்சலும் போடாமல் பதற்றமும் படாமல் வெளிச்சென்று கொண்டிருந்தனர். அங்கிருந்த சில இந்தியர்கள் மட்டும் நடையில் பதற்றமும் முகத்தில் சவக்களையும் கூடி வெளிக்கதவை விரைவாக அடைந்தனர். சரவணன் இருவரிடமும் திரும்பி ‘சீக்கிரம் வாங்க... எல்லாரும் வெளிய போறாங்க... எர்த் குவேக்தான்’ என்றான். சரவணனின் மனதில் அது பூகம்பம்தான் என்று உறுதியான பின் ஒரு பீதியும் அதே சமயத்தில் ஒரு அடங்கா மகிழ்ச்சியும் குடிகொண்டது. 12ஆம் வகுப்பு வரை ஏதோ ஒரு பள்ளியில் படித்து, ஏதோ ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டப்படிப்பைப் புரியாமல் முடித்து, எல்லோரையும் போல் ஏதோ ஒரு தொழில்நுட்ப வேலையில் அமர்ந்த அவனுக்கு இந்தப் பூகம்பம் ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது. இந்தியாவில் உள்ள நண்பர்களிடம், பெற்றோர்களிடம், வருங்கால மனைவியிடம், பிள்ளைகளிடம் அவனுக்கு ஏதோ சொல்ல ஒரு தனித்துவ சம்பவம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.

மேசையில் உள்ள கணினி மற்றும் இதர பொருள்கள் அனைத்தும் அதிர்ந்து கொண்டி ருந்தன. சரவணன் அனைத்துக் காட்சி களையுமே பயம் கலந்த உணர்வுடன் மனதில் ஏற்றிக்கொண்டான். கணினி மற்றும் இதர பொருள்கள் சேதமடையுமா? அப்போது எத்தனை நாள்கள் அலுவலகத்தை அடைத்து வைப்பார்கள்? தகவல்கள் அனைத்தும் திரும்பக் கிடைக்குமா? புராஜெக்ட் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் மின்னஞ்சலில் காப்பு இருக்குமா? என்று ஓரிரு நொடிகளில் அவன் மனதில் அலுவலகம் பற்றிய அனைத்து சங்கடங்களும் வந்து போயின. மின்தூக்கியைப் பயன்படுத்தாமல் அனைவரும் மாடிப்படியில் கீழிறங்கிக் கொண்டிருந்தனர். அவன் மாடிப்படிகளை நெருங்கியபோது ‘இரவு நடக்க வேண்டிய கொண்டாட்டம்  என்னவாகும்?’ என்று தோன்றியது. அலுவலகக் காப்பு பற்றிய கவலைகளெல்லாம் ஒரே நொடியில் பின்னுக்குச் சென்று அன்றிரவு நடக்க வேண்டிய விழா நடக்காதே என்ற கவலை மேலோங்கி இருந்தது.

உள்ளுக்குள் எரிச்சலும் பயமும் கலந்த உணர்வுடன் மாடிப்படிகளில் கீழிறங்கிக் கொண்டிருந்தான். அங்கங்கு கயிறு கட்டித் தொங்க விடப்பட்டிருந்த உயர்தர விளக்குகள் அனைத்தும் இடது, வலது என ஊசலாடிக் கொண்டிருந்தன. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைத் தாங்கிய சட்டகங்களும் 180 டிகிரி சுழன்றது. சரவணனுக்கு ஏதோ ஒரு மாய உலகில் மாட்டிக்கொண்டுவிட்டோம் என்று தோன்றியது. பூகம்பம் பற்றிய மேலதிக கற்பனையிலிருந்து விலகி இப்போது வெறும் பயம் மட்டும் ஆட்கொண்ட மனதுடன் பிறரைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

வாயிற்கதவை நெருங்கும்போது கதவின் கீல்கள் முற்றிலுமாகச் சேதமடைந்து சாய்ந்து விழுவதற்குத் தயாராக இருந்தது. சரவணன் வேறு வழியே இன்றி அதைத் தாங்கிப் பிடிக்கும் பொறுப்பிற்குத் தள்ளப்பட்டான். கதவின் மீது முதுகை வைத்துத் தாங்கிப் பிடிக்க மற்றவர் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். ‘நான் ஏன் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்று ஒரு நொடி அவனுக்குத் தோன்றி மறைந்தது. ஆனால், அதற்குள் மாடிப்படியில் அகாரி இறங்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவள் முன் தான் இப்படி ஒரு சாகசச் செயலைச் செய்துகொண்டிருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது. தன்னுடைய உதவும் மனப்பான்மையை அவள் அங்கீகரிப்பாள். அதன் மூலமே அவன்மீது அவளுக்கு மிகுந்த மரியாதை உணர்வு ஏற்படும். தனக்குத் தெரிந்த சொற்ப ஜப்பானிய மொழியை வைத்து ஆவலுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். முடிந்தால் அந்த உறவை பலப்படுத்தி விசேஷமான ஓர் உறவிற்கு இட்டுச் செல்ல முடியும். சரவணன் ஒரு ஜப்பானியப் பெண்ணுடன் காதல் வயப்பட்டு அங்கேயே குடி பெயர்ந்துவிட்டான் என்று திருச்சியில் அனைவரும் அவனைப் பற்றிச் சலம்புவார்கள்.

இப்படியாக இரண்டே நொடிகளில் அவனுடைய கற்பனை பல்வேறு பிம்பச் சிதறல்களைக் கொட்டியவாறு அவனுடைய மனதைக் குளிர்வித்தது. அகாரி கையில் ஒலிபெருக்கியுடன் கீழிறங்கிக்கொண்டிருந்தாள். அவனைக் கடந்து வாயிலுக்கு வெளியே செல்லும் போது அவன் வேண்டுமென்றே முகத்தை மிகுந்த கடினமான ஒரு வேலையைச் செய்வதுபோல் வைத்துக்கொண்டான். அவள் அவனை ஒரு நன்றிப் புன்னகையுடன் கடந்து சென்றாள். உள்ளம் அரை நொடி பொங்கி வழிந்தது. அவள் சென்றவுடன் கதவை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்தான். அப்போது யாரும் மேலிருந்து கீழே வரவில்லை.

அதிர்வு - சிறுகதை

வெளியே பணியாளர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். மற்ற அலுவலகத்திலிருந்தும் மக்கள் அங்கங்கு கூடி ஜப்பானிய மொழியில் கதைத்துக் கொண்டி ருந்தனர். இங்கு வந்த புதிதில் அனைவரும் ஒன்றேபோலத் தெரிந்த ஜப்பானியர்கள் இப்போது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனியான புற அடையாளங்கள் சரவணனுக்குத் தெரிய ஆரம்பித்தது. அவர்கள் பேசுவது காக்கைக் கூட்டம் இரைச்சலிடுவது போன்றிருந்தது. சரவணன் இதர இந்திய நண்பர்கள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் நின்றுகொண்டான். அவனுடைய நண்பர்கள் அனைவரும் தாங்கள் ஏதோ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தருணத்தில் இருப்பதுபோன்ற உணர்வை அடைந்தார்கள். உடனே தன் இந்திய நண்பர்களிடமும், உறவினர்களிடமும் தெரிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த அசாதாரண உணர்வைத் தக்க வைக்கும் முன்பே அகாரி ஒலிபெருக்கியில், ‘யாரும் பயப்படத் தேவையில்லை. ஒரு 15 நிமிடம் வெளியே காத்திருப்போம். நிலைமை சரியானவுடன் உள்ளே போகத் தொடங்குவோம்’ எல்லோருக்கும் புரிய வேண்டுமே என்றுணர்ந்து  தன்னுடைய உடைந்த ஆங்கிலத்தில் கூறினாள்.

இந்தியப் பணியாளர்கள் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் அவர்களுக்கு விளங்கிற்று, ஃபுக்குஷிமா போன்ற பிரதேசங்களில் பூகம்பம் என்பது அசாதாரண விஷயமெல்லாம் இல்லை என்று. மக்கள் அனைவரும் அன்றாடச் செயல்களில் ஒன்றுபோல இதைக் கருதுகிறார்கள். சிறிது நேரம் கழித்து அறிவித்தபடியே பணியாளர்கள் அனைவரும் கட்டடத்துக்குள் நுழைந்தனர். ஊர்த் திருவிழாவில், சாமி வந்து ஆடிய பின்னர் அமைதி அடைந்த ஒருவரின் குணாம்சம் அந்த அலுவலகக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்தது. உள்ளே நுழையவே சரவணன் மற்றும் அவன் குழுவிற்கு சற்று திகிலாக இருந்தாலும் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் கட்டடத்திற்குள் முன்னேறினர்.

கணினிகள், மேசையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், தாள்கள் என அனைத்தும் அலங்கோல மாகக் கிடந்தன. சீராகச் செல்லும் ரோட்டில் அமைந்துள்ள மிகப் பெரிய வேகத்தடையைப் போன்று அந்த நாளின் இயல்பான தருணங்களின் நடுவே இந்த 30 நிமிடங்கள் அமைந்தது. சரவணனும், இரு புதிய பணியாளர்களும் மீண்டும் சந்திப்பு அறைக்கே சென்றனர். சரவணன் சந்திப்பு அறையின் சுவரில் சற்றுச் சாய்ந்திருந்த பலகையை நேராக்கி மறுபடியும் வட்டங்களை வரைந்து அதைச் சுற்றிச் சொற்களையும் எழுத ஆரம்பித்தான். அவன் கைகள் நடுங்குவது அவனுக்கே தெரியவந்தது. பூமி அதிர்ந்ததால் உடலில் அந்த அதிர்வு கடத்தப்பட்டதுபோல. சரவணன் நிதானமான மனநிலையை வரவழைத்துக்கொண்டு வேலைக்குள் புக எத்தனித்தான். இரவு நிச்சயம் தனக்கான விழா உண்டு என்றும் எண்ணிக்கொண்டான்.

பத்து நிமிடம்கூட நகரவில்லை. மீண்டும் கண்ணாடிக்குவளைகளும் மேசைகளும் அதிர்வலைகளை எழுப்பியது. இம்முறை அதிர்வுகள் சில நொடிகளில் பன்மடங்காகப் பெருகியது. சரவணனும் மற்ற நண்பர்களும் இம்முறை எந்த விதக் குழப்பமுமின்றி உடனடியாகக் கட்டடத்தை விட்டு வெளியேறினர். மீண்டும் அலுவலகத்திற்கு வெளியே கூடல். மீண்டும் அகாரி ஒலிபெருக்கியில் அறிவுறுத்தல்களை வழங்கிக்கொண்டிருந்தாள். இம்முறை சற்று நீண்ட நேரம் எடுத்துக்கொண்டாள். இறுதியில் இன்று அலுவலகம் செயலுறாது என்றும், பூகம்பத்தின் தாக்கம் வெகுவாக இருக்கும் என்றும் கூறினாள்.

2011 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வந்த தொடர் பூகம்பங்கள் இதுவரை ஜப்பானில் நிகழ்ந்த பூகம்பங்களில் மிகப்பெரியது என்றும் ஃபுக்குஷிமா அருகில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டு மக்கள் அடுத்தடுத்த நாள்களில் அகற்றப்படுவார்கள் என்றும் அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இவர்களிருக்கும் இடத்தில் பெரிதாக சேதாரம் எதுவும் ஏற்படவில்லை.

அலுவலகத்தின் நெருக்கடிநிலை கூடுகைப் பகுதியிலி ருந்து அனைவரும் கலைய ஆரம்பித்தனர். தங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்ற புதிரில் சிக்கிக்கொ ண்டிருந்த இந்திய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி அடுத்து என்ன செய்வது என்று விழித்துக்கொ ண்டிருந்தனர். சாலையில் வாகனங்கள் நிரம்பி வழிந்துகொண்டிரு ந்தன. ஜப்பானிற்கு வந்து இப்போதுதான் இவ்வளவு வாகனங்க ளையும் ஒரே இடத்தில் சரவணன் காண்கிறான். அனைவருக்குள்ளும் இப்போது உடனடி யாக முகநூலில் இந்த நாளைப் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்தது. ஆனால், அலைபேசியில் இணையம் வேலை செய்யவில்லை. அலைபேசியின் அலைக்கற்றையும் பலவீனமாக இருந்தது. அலுவல கத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் அங்கிருந்த சாலை நெரிசலைச் சரி செய்ய உதவி புரிந்து கொண்டிருந்தார். அலுவலகத்தில் அந்த ஆசாமி ஒருவர்தான் சற்று முன்கோபக்காரர் என்று பெயர் வாங்கியவர். சொன்ன நேரத்திற்கு எதிர்பார்த்த வேலை வரவில்லை என்றால் இடுங்கிய கண்களில் ரத்த நரம்புகள் தெளிவாகத் தெரிய சத்தம் போடுவார். திட்டைப் பெற்றுக்கொள்பவர் மறுமொழியின்றித் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு அன்றைய நாளை அமைதியில் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சரவணன் மற்றும் குழுவினர் இப்போது அவர் செய்யும் வேடிக்கையான செயலை நின்று பார்த்துவிட்டு, அவர் ஏன் திடீரென்று சாலை நடத்துநர் ஆகிவிட்டார் என்று குழம்பி அருகிலிருந்த ஒரு நண்பரின் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தனர்.

போகும் வழியில் எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன அல்லது அடைக்கப்படக் காத்திருந்தன. இங்கு நடைபெறும் அனைத்தும் அவர்களுக்குப் பல போர்ப் படக் காட்சிகளையும், ஹாலிவுட்டில் இயற்கைச் சீற்றங்களை வைத்து எடுக்கப்பட்ட படக்காட்சிகளையும் நினைவு படுத்தின. ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த காட்சிகளை எடுத்துக் கூறிக் கதைத்துக் கொண்டிருந்தனர். வழியில் ஒரே ஒரு தள்ளு வண்டிக் கடை மட்டும் திறந்திருந்தது. அங்கே ‘யாகிட்டோரி’ எனப்படும் கோழி உணவு வகைகள் மற்றும் இதர அசைவ உணவுகள் தென்பட்டன. வழக்கம்போல் காசைப் பகிர்ந்து கொள்வதில் அவர்களிடையே வெளிச்சொல்ல முடியாத தடுமாற்றம் இருந்தது. அவர்கள் வெளியே சென்று உணவருந்தும் அனைத்து வேளைகளிலும் பணம் கொடுக்கும் தருணத்தில் ஏதோ ஒரு விகாரமான அமைதி நிலவும். அதைக் கலைக்க யாரோ ஒருவர் முயற்சி எடுப்பார். இன்று சரவணன் அதைச் சரி செய்தான். ‘இன்னிக்கு எனக்கு நடக்க வேண்டிய பார்ட்டி தான் நடக்கல, அட்லீஸ்ட் இங்க நான் பே பண்றேன்’ என்றான். மற்றவர்கள் அதை உள்ளுக்குள் மகிழ்வாக எண்ணி, வெளியே அரை மனதுடன் ஒப்புக்கொள்வதுபோல் ஒப்புக்கொண்டனர்.

அருகிலிருந்த நண்பனின் வீட்டிற்கு சரியாக 20 நிமிட நடைக்குப் பின் வந்து சேர்ந்தனர். வீட்டிற்குச் சென்றதும்தான் தெரிந்தது, மின்சாரம் மற்றும் தண்ணீர் எதுவும் வரவில்லை என்று. வாங்கி வந்த கோழி பாவமாக அவர்களின் அருகில் சூடாக்கப்படக் காத்திருந்தது. ஒவ்வொருவரும் அதற்குள் வீட்டிற்கு, நண்பர்களுக்கு அழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால், அலைபேசியில் அலைக்கற்றை இன்னும் முழுதாக வரவில்லை. வீட்டில் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் வேலை செய்யாத அலைபேசியை நோண்டுவது போல நோண்டிக் கொண்டிருந்தனர். நேரம் கடக்கக் கடக்க இறுக்கம் சற்று அகன்று அன்றைய நாளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் நடந்த வெவ்வேறு அசாதாரண நாள்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருந்தனர்.

ஆடும் கட்டடங்கள், இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிர் துறந்த மனித உடல்கள், ரிக்டர் ஸ்கேலில் 7.7 போன்ற தொலைக்காட்சிச் செய்திகளாகவே அறிந்திருந்த சரவணன் இன்று நேரடியாக அதிர்வை உணர்ந்ததன் மூலம் தன் மனதில் உள்ள பூகம்பம் பற்றிய வரையறுக்கப்பட்ட கருத்துகளுக்கும் உண்மையான நிகழ்வுக்கும் எவ்வளவு இடைவெளி என்பதை விளங்கிக்கொண்டதாக எண்ணினான். மனதின் கற்பனைக்கும் எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளி என்றெண்ணிக்கொண்டான். மாபெரும் அழிவைக்கூட அவன் இன்னும் காணவில்லை, ஒரு சாதாரண அதிர்வை மட்டுமே அன்று கண்டுணர்ந்தான். ஆனாலும் அவனுள் ஏதோ ஒன்று குலுக்கப்பட்டதாகத் தோன்றியது. கதிரவன் மங்கி இருள் சூழத் தொடங்கியிருந்தது. நண்பர்கள் விடாமல் பேசிக்கொண்டே இருந்தனர். கதை பேசுவது என்பது இவர்களுக்கு போதை போன்றது. எந்த ஒரு அசாதாரண சம்பவத்தையும் பேசிப் பேசியே கரைத்துக்கொள்கிறார்களோ என்று சரவணன் எண்ணிக்கொண்டிருந்தான். உரையாடலில் பெரிதாகக் கலந்துகொள்ள மனமில்லாமல் சரவணன் தன்னுள் ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருப்பதை கவனித்துக்கொண்டி ருந்தான்.

அப்போதுதான் அந்த விசும்பல் ஒலி அவர்கள் காதில் விழத் தொடங்கியிருந்தது. பக்கத்து வீட்டில் ஒரு பெண்மணி ஜப்பானிய மொழியில் ஏதேதோ உளறிக்கொண்டே அழுது கொண்டிருந்தாள். இவர்களில் சிலர் வெளியே என்னவென்று விசாரிக்கச் சென்றனர். காலை சென்ற கணவன் இன்னும் வீடு வந்து சேரவில்லை. அலைபேசியும் வேலை செய்யவில்லை. எங்கு உள்ளான், எப்படி இருக்கிறான் என்பதும் தெரியவில்லை. இவர்கள் தங்களுக்குத் தெரிந்த குறைந்த ஜப்பானிய மொழியை வைத்துக்கொண்டு அந்தப் பெண்மணிக்கு சமாதானம் செய்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.

இரவு தண்ணீருக்கு என்ன செய்வது என்று யோசிக்க அவர்கள் வெளியே சென்று தேடிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர். வீட்டில் அமர்ந்திருக்கப் பிடிக்காமல் அனைவருமே வெளியே செல்ல முற்பட்டனர். வெளியே செல்லும்போது அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் அருகே ஒரு கூட்டம் கூடியிருந்தது. அனைவருமே ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். சரவணன் அந்த நாடகத்தை ஒரு மின்னல் வெட்டுப் பார்வையுடன் கடந்து சென்றான்.

நீண்ட தூரம் நடந்து சென்ற பின்னரும் கடைகள் ஒன்றும் திறந்திருப்பதாகத் தெரிய வில்லை. மாலையில் அசைவ உணவுகளை வாங்கிய இடத்திற்குச் சென்றும் பார்த்தாகி விட்டது. அந்தக் கடையும் மூடப்பட்டிருந்தது. அப்போதே தண்ணீர் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒருவன் வருத்தப்பட்டுக்கொண்டான். மற்றொருவன் தான் சீண்டப்பட்டவனாக அதற்கு மறுமொழி தந்தான். சற்று நேரத்தில் அவர்களிடையே நிலவிய சூடான வாக்குவாதம் எல்லையைக் கடக்கக் காத்திருந்தது. சரவணன் இதை ஊகித்ததால் அந்த உரையாடலைத் தடுக்க முயன்றான். இதற்கிடையில் வேறு இருவர் அலுவலகப் பிரச்னையைக் கொண்டு வந்து வேறொரு வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். சரவணன் இந்த சம்பாஷணையையும் தடுக்க முயற்சி செய்து தன்னுடைய பக்குவத்தை நிலைநிறுத்த முயன்றான். அவர்களுள் சரவணன் எப்போதும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்ட ஒருவனாகவே கருதப்பட்டான். எந்தக் காரியத்தையும் நிறுத்தி நிதானமாக யோசித்து அமைதியாகக் கையாளும் ஒருவனாகத் தன்னைக் காண்பித்துக் கொண்டான். இதனாலேயே அவனுள் ஏகப்பட்ட உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கப்பட்டு அடிக்கடி தலைவலிக்கு ஆளாவதுண்டு. சரவணனைப் பொறுத்த வரை மென்பொருள் தொழிலில் உள்ளவர்களில் யாரொருவர் தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கி, பிறரை, பொறுமையாகப் பேசியே தன் வழிக்குக் கொண்டு வருவார்களோ அவர்களே உயர்ந்த இடத்திற்கு வெகு விரைவில் செல்ல முடியும் என்றும் மற்றவரிடத்தில் தான் மிகவும் பக்குவமான மனிதன் என்று பெயர் வாங்க முடியும் என்றும் கருதினான். இதனாலேயே அவன் அலுவலகத்தில் நடக்கும் பல பஞ்சாயத்துகளில் தானே உள்நுழைந்து அதைத் தீர்த்து வைப்பதன் மூலம் தன்னைப் பக்குவமானவனாகக் காட்டிக்கொள்ள முனைவான்.

சில மைல்கள் கடந்த பின்தான் ஒரே ஒரு கடை நாளை அதிகாலை திறக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பலகையைக் கண்டார்கள். ஆக, இன்று தண்ணீருக்கு வேறு எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும். என்ன செய்வது என்று குழம்பியவாறு வீடு வந்து சேர்ந்தனர். அந்தப் பெண்மணியின் அழுகையும் புலம்பலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். சரவணன் கடைசியாக வீட்டினுள் நுழையும்போது ஒரு கை அவன் தோலைத் தொட்டது. யாரென்று திரும்பிப் பார்த்தான். ‘உங்களிடம் இரவிற்குத் தண்ணீர் இருக்கிறதா? வேண்டு மென்றால் என் வீட்டிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்’ என்று இதே அடுக்கு மாடிக் கட்டடத்தின் மேல்தளத்தில் வசிக்கும் ஒரு பெண்மணி கூறினாள். இவன் நண்பர்களிடம் இதைப் பற்றி அறிவித்துவிட்டு அந்தப் பெண்மணியின் வீட்டிற்கு ஒரு போத்தல் தண்ணீரைப் பெறுவதற்குச் சென்றான்.

அதிர்வு - சிறுகதை

அந்தப் பெண்மணியின் வீட்டில் பொருள்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஜன்னலையொட்டி ஒரு வயதான பெண் வெளியே சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவன் வந்ததையும் கவனிக்கவில்லை  இவன்  அங்கு இருப்பதையும் உணரவில்லை. இவன் வீட்டைச் சுற்றிப் பார்க்க விரும்பினான். அறைகளுக்குள் சென்று பார்க்கலாமா என்று அந்தப் பெண்மணியிடம் அனுமதி கேட்டான். அவள் “தாராளமாக” என்று கூறினாள். உள்ளே ஓரறையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நடு வயது ஆண் காலுறை எதுவும் அணியாமல் கிடத்தப்பட்டிருந்தான். இவனைப் பார்த்ததும் புத்தி சுவாதீனம் இல்லாத தோற்றத்தில் இருக்கும் அவனிடமிருந்து விளங்கமுடியா சத்தம் ஒன்று எழும்பியது. இவன் சட்டென்று கூச்சம் கொண்டவாறு அந்த அறையை விட்டு விலகினான். இன்னொரு அறையில் சென்று பார்த்தபோது பலவாறாகப் புகைப்படங்கள் சிதறப்பட்டிருந்தன. அனைத்துமே கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள். இவன் அருகே சென்று அதைப் பார்க்கத் தொடங்கினான். அப்போது அந்தப் பெண்மணி அவன் இருந்த அறைக்கு வந்து சேர்ந்தாள்.

‘இது என் மாமியாரின் அறை. அவர்களுக்கு இந்த அறை இப்படி அலங்கோலமாக, புகைப்படங்கள் சிதறப்பட்டிருப்பதுதான் பிடிக்கும்... அவர்களின் கணவன் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவிற்கு எதிராகப் போர் செய்த சிப்பாய்’ என்று கூறினாள். சிறிது இடைவெளி விட்டு ‘என் கணவருக்கு 40 வயது ஆனபோதுதான் எங்களுக்குத் திருமணம் நடந்தது. என் கணவன் 50 வயது வரை நன்றாக இருந்தார். ஆனால் அவருடைய உடலில் பல மாற்றங்கள் 50 வயதிற்கு மேல் வந்தடைந்தது. இதுவரை கேள்விப்படாத நோய்கள் எங்கெங்கோ இருந்து வந்து தாக்கி அவருடைய உயிரையும் காவு வாங்கிவிட்டது’ என்று கூறி முடித்தாள். இவன் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘இதெல்லாம் என்ன புகைப்படங்கள்?’ என்று வினவினான். ‘தெரியவில்லை? நாகசாகி, ஹிரோஷிமா பற்றிய புகைப்படங்கள். என் மாமியார் அந்தச் சம்பவம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. அவர்களும் முழு மூளை வளர்ச்சி பெற்றவர் அல்ல.’ சரவணன் அறையை விட்டு வெளியே வந்து தண்ணீர்ப் போத்தலைப் பெற்றுக்கொண்டு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, சென்று வருவதாகக் கூறினான். சரவணனுக்கு அந்த மன நலம் குன்றிய இளைஞனைப் பற்றிக் கேட்கத் தோன்றவில்லை. அது தானாகவே புரிந்துவிட்டதாக எண்ணினான்.

நண்பனின் வீட்டிற்கு வந்தவுடன் அந்தத் தண்ணீர்ப் போத்தலை ஒவ்வொருவராக வாங்கிக் குடிக்க ஆரம்பித்தனர். அப்போது அங்கிருந்த ஒருவன் அளவு எடுத்துக் குடிக்க வேண்டியதைப் பற்றிக் கூறினான். ஒருவொருக்கொருவர் சண்டை போடாமல் இருக்க வீட்டில் இருந்த ஒரு மார்க்கரை எடுத்து வந்து போத்தலின் வெளிப்பக்கத்தில் ஒருவருக்கு இவ்வளவு என்று அடையாளத்தைக் குறித்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாய் தண்ணீரைக் குடித்த பின்னர் அளவு கடந்துவிட்டதா என்று பரிசோ தித்துக்கொண்டனர். ஒவ்வொருவருமே அளவைத் தாண்டி ஒரு சொட்டாவது தன் வாய்க்குள் விழுந்துவிடாதா என்று உள்ளுக்குள் ஆசைப்பட்டுக்கொண்டனர். தாகமே இல்லையெனினும் சிலர் விடாப்பிடியாகத் தண்ணீரைக் குடித்தனர். தாங்கள் செய்வதும், உள்ளுக்குள் நினைப்பதும் அனைவருக்குமே ஒருவருக்கொருவர் சொல்லாமல் மற்றவருக்கு விளங்கியது. இத்தனை மூடி மறைத்தலுக்கும், அவர்களுக்கிடையே எப்போதும் இருக்கும் பதற்றத்திற்கும் அவர்களுடைய சொற்ப நாள் பழக்கம்தான் காரணமோ என்று சரவணன் நினைக்கத் தொடங்கினான். நீண்ட நாள் நண்பர்கள் இதுபோன்ற நிலையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்களா என்று அவனுக்குள்ளேயே வினவிக்கொண்டான்.

நண்பர்கள் அனைவரும் நாளைக் காலை தாங்கள் கண்டுவந்த பல்பொருள் அங்காடியிலிருந்து எப்படி தண்ணீர்ப் போத்தல்கள் எடுக்கலாம் என்று கலந்துரை யாடினர். அந்தக் கடையின் தோராயமான வரைபடத்தை வரைந்து எங்கெங்கு எல்லாம் வழி இருக்கும், எப்படி எல்லாம் சென்று தண்ணீர்ப் போத்தல்களை எடுத்து வரலாம் என்று அலசி ஆராய்ந்துகொண்டிருந்தனர்.

சரவணன் அந்த உரையாடலில் பெரிதும் மனமில்லாமல் கலந்துகொண்டு எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான். அவனுடைய மௌனத்தைக் கலைக்கும் வண்ணம் ‘என்ன சரவணன், நைட் பார்ட்டி கேன்சல் ஆயிடுச்சேன்னு வருத்தமா?’ என்று வினவினான் ஒரு நண்பன். சரவணன் சிரித்துக் கொண்டே ‘இல்ல, நான் வேற ஏதோ திங்க் பண்ணிட்டிருந்தேன்’ என்று பதிலுரைத்தான்.

இரவு எல்லோரும் தூங்கிய பின் சரவணனின் மனதினுள் ஏனோ இதுவரை தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை நினைத்துக் கொண்டிருந்தான். ஜப்பானிற்கு வந்து வேலை பார்க்க பலரிடம் சூட்சுமமாகப் பேசியது, பல நேரங்களில் பலரைப் பற்றிப் பின்புறம் அவதூறாகப் பேசி அடுத்தடுத்த பணி உயர்விற்குச் சென்றது, உயர் அதிகாரிகளில் பலரை உடனே தன் கைகளுக்குள் போட்டுக்கொள்ள பக்குவம் எனப்படும் மனநிலையை அவர்கள் முன் நிறுவிக் கொண்டது என்று பல சிந்தனைகளுக்கு உள்ளானான். ‘இவை எல்லாம் ஏன் இன்று திடீரென்று முளைக்க வேண்டும்? என்ன ஆயிற்று எனக்கு’ என்று உள்ளுக்குள் வினவிக் கொண்டு, ‘இது ஏதோ தற்காலிக அதிர்ச்சி, அதிர்வு... நாம் இதுநாள் வரை காத்து வந்த பக்குவம் என்ற போர்வையில் தந்திரமான மனநிலைதான் நம் வாழ்க்கைக்கு நல்லது’ என்று தனக்குத் தானே அறிவுரைத்துக்கொண்டான். காலையில் அவனுடைய உயர் அதிகாரி சாலை நெரிசலைக் கலைக்க உதவி செய்ததன் காட்சி பலமுறை அவனுடைய மனக்கண்ணுக்கு வந்து போயின. புரண்டு படுத்தான். தூக்கம் வருவதாக இல்லை. சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ எண்ணங்கள் வருவது ஏதேனும் அர்த்தத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறதா அல்லது வெறும் மனப் பிதற்றலா?

தன் வாழ்வில் நடந்த பெருஞ்சோகத் தருணங்களை நினைத்துப் பார்த்தான். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்தன. அதையும் பெருஞ்சோகம் என்றெல்லாம் கூற முடியாது. ஒருவேளை பேரழிவுகளும் பெருந்துயரும்தான் பேரன்பைக் கொடுக்கின்ற னவா? வாழ்க்கையை, பெற்றோர்களும் சுற்றத்தார்களும் போட்ட நேர்க்கோட்டில் பயணித்த இவனைப் போன்றவர்களுக்குப் பேரன்பும் பேருதவியும் வழங்கும் மனம் வருமா?

இதுவரை அவன் உதவி செய்து பலனடைந்த சிலரை நினைத்துப் பார்த்துக்கொண்டான். அலுவலகத்தில் பலருக்கு இவன் சிபாரிசில் உயர் பதவி கிடைத்ததை நினைவுபடுத்திக் கொண்டான். ஆனால், உண்மையிலேயே அந்த உதவியை எந்த வித சுயநலமுமின்றிச் செய்தோமா என்று ஆராய்ந்தான். தன்னுடைய அணியில் இருப்பவரின் பதவிகள் உயர்ந்தால் தான் இன்னும் மேலே மேலே செல்ல முடியும் என்பதல்லவா நோக்கம்? அலுவலகத்தில் இவனுக்கு உண்மையான நண்பர்கள் என்று யாராவது இருக்கிறார்களா? சரி, தனிப்பட்ட முறையில் பிறந்த நாளுக்கெல்லாம், பல ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று இலவச சிற்றுண்டி அளிப்பது? அதுவும் மற்றவரிடம் அந்த தானத்தைப் பற்றிப் பெரிதாகக் கூறிக் கொண்டு தன்னைப் பற்றிய உயர் பிம்பத்தைக் கூட்டிக்கொள்ளத்தானே? சரி, காதலியின் கனவுகளுக்கு உறுதுணையாக இருந்து உதவி புரிவது? அதுவும், தான் வேண்டிய சமயங்களில் உடல் சார்ந்த இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவும் அவனுக்கென்று ஒரு பெண்துணை தேவை என்ற பாதுகாப்பு மனநிலையை நிறைவு செய்யவும்தானே?

இப்படியாகப் பல தொடர்பே இல்லாத கேள்விகள் அவனை வதைத்துக்கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் அவனால் இந்தச் சிந்தனைகளுக்கான ஆதாரத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் எண்ணங்கள் அதன் லயத்திற்கு வந்து முட்டி மோதி அதுவாகவே அமைதியானது. இவன் எதையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை. காலையில் அலுவலகச் சுவரில் மாட்டப்பட்டிருந்த சட்டகங்கள் இடமும் வலமுமாய் ஆடிக்கொண்டிருந்தது அவன் மனக்கண்ணில் வந்துகொண்டே இருந்தது. அப்படியே தூங்கியும் போனான்.

வேகமாக முதுகில் தட்டிய பின்னரே சரவணன் எழுந்தான். உமிழ்நீர் வழியத் தூங்கிய அவன், சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்தான். அனைவரும் பல் விளக்கிக்கொண்டு, இருக்கும் சொற்ப தண்ணீரை உபயோகித்துக் கொண்டிருந்தனர். ‘என்ன சரவணன், கனவு ஏதோ வந்திருக்கும் போல... சரி, சரவணன் நீங்க பல் தேச்சு வாய் கொப்பளிக்க தண்ணி இல்ல... போய்த்தான் வாங்கி வரணும்’ என்று ஒரு நண்பன் கடைசிச் சொட்டுத் தண்ணீரையும் காலி செய்துவிட்டு, சிரித்துக்கொண்டே கூறினான்.

நேற்று அழுதுகொண்டிருந்த பெண்மணியின் கணவன் இன்று காலை வந்து சேர்ந்திருக்கிறான். அவர்களின் வீட்டில் நான்கைந்து பேர் நின்று நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். சற்று நெருங்கி விசாரித்ததில், அந்தக் கணவன் நேற்றிரவு முழுக்க போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக்கொண்டதாகவும், எல்லாம் தெளிவான நிலைக்கு வர இரவு முழுக்க ஆகிவிட்டது எனவும் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தான். கணவனை மீண்டும் கண்ட மகிழ்ச்சியில் அந்தப் பெண்மணியின் புன்னகை அவ்வளவு உண்மையாக இருந்தது. சரவணனுக்கு அந்தப் புன்னகையின் மீது மிகுந்த பொறாமையாக இருந்தது ஒரு நொடி.

அனைவரும் அந்தப் பல்பொருள் அங்காடிக்குச் சென்றனர். நினைத்த படியே ஏக கூட்டம். மக்கள் வரிசையில் காத்திருந்தனர். சிலர் கிடைக்கும் வழிகளில் உள் புக முனைந்துகொண்டிருந்தனர். இவர்களுடைய அணியும் திட்டம் தீட்டியவாறு பல குறுக்கு வழிகளில் புகுந்து கடையில் உள்ள பல பொருள்களைச் சூறையாட ஆரம்பித்தனர். சரவணன் தன் பங்கிற்கு ஐந்து தண்ணீர்ப் போத்தல்களை இரண்டு கைகளில் எடுத்து வந்துகொண்டிருந்தான். கடையின் வெளியே அவன் நண்பர்கள் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு வயதான பெண்மணி ஒரு கையில் ஒரே ஒரு தண்ணீர்ப் போத்தலையும், மறு கையில் மூன்று வயது மதிக்கத் தக்க குழந்தை ஒன்றையும் தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள். இவன் எதனாலோ உந்தப்பட்டவனாக தனக்குத் தானே எதையோ நிரூபித்துக்கொள்ள, நடையில் சற்று உற்சாகமும் மனதில் ஒரு தற்பெருமையும் எழ, அந்த வயதான பெண்மணியிடம் சென்று ‘இந்த ஒற்றைப் போத்தல் நிச்சயம் பத்தாது. இந்த ஒன்றையும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று தன் கையில் உள்ள ஒரு தண்ணீர்ப் போத்தலை அவளிடம் நீட்டினான்.

அந்த வயதான பெண்மணி அவனைச் சிரிப்புடன் பார்த்து ‘ரொம்ப நன்றி. என் நாட்டு மக்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறார்கள். எனக்கு ஒரே ஒரு போத்தல் போதும். என்னைவிடப் பெரிய குடும்பங்கள் எல்லாம் வரிசையில் அங்கு காத்திருக்கின்றன’ என்று ஒரு நாடக வசனத்தை எந்த வித நாடகத் தன்மையுமின்றிக் கூறி அவனைக் கடந்து சென்றாள். அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.