கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

கை... கை... தும்பிக்கை!

கை... கை... தும்பிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
கை... கை... தும்பிக்கை!

சீ.சூர்யா ஓவியம்:ஜெயசூர்யா

கை... கை... தும்பிக்கை!

ழங்காலத்தில் யானைகளுக்கு இப்போது மாதிரி தும்பிக்கை இல்லை. கொஞ்சம் நீளமான மூக்குதான் இருந்தது. ஒரு காட்டில் யானை கூட்டம் வசித்து வந்தது. அதில் ஒரு குட்டி யானை அனைவரிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். அனைவருமே அதைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள்.

ஒருமுறை அதன் மனதில் ஒரு கேள்வி தோன்றியது. ‘முதலையின் இரவு உணவு என்ன?’

அந்தக் கேள்வியை சித்தாப்பா யானையிடம் கேட்டது. அதற்கு அவர் ‘‘ரொம்ப முக்கியம்’’ என்று முறைப்புடன் உதைத்தது.

அந்த உதையில் நெருப்புக்கோழி அத்தையின் முன்னால் விழுந்தது யானைக்குட்டி. ‘‘ஏன் அழுகிறாய்?’’ எனக் கேட்டார் அத்தை.

‘‘சித்தப்பா உதைச்சுட்டாங்க. அத்தை, முதலையின் இரவு உணவு என்ன என்று கேட்டேன் அது தப்பா?’’ என்றதும், நெருப்புக் கோழி கடுப்பாகி, ‘டொக் டொக்’ என யானைக்குட்டியின் தலையில் கொத்தியது.

கை... கை... தும்பிக்கை!

யானைக்குட்டி வெறுத்துப்போய், ‘‘யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’’ என்றபடி கிளம்பியது. வழியில் வந்த முயல் ஒன்று, என்ன விஷயம் என்று கேட்டது.

யானைக்குட்டி ‘‘சொன்னா அடிக்கக் கூடாது. அப்போதான் சொல்வேன்’’ என்றது. முயல் அடிக்க மாட்டேன் என்றதும், ‘‘முதலையின் இரவு உணவு என்ன?’’ என்று கேட்டது.

‘‘எந்த ஏரி சாம்பல் நிறமும் பச்சை நிறமும் கலந்து இருக்கிறதோ, அந்த ஏரியில் உள்ள முதலையிடமே கேள்’’ என்றது.

குட்டி யானை சந்தோசமாக கிளம்பியது. ஊரு விட்டு ஊரு... காடு விட்டு காடு என எப்படியோ சாம்பல் பச்சை நிற ஏரியைக் கண்டுபிடித்துவிட்டது.

அந்தப் பக்கமாக வந்த பாம்பு ஒன்று, ‘‘இது எங்க ஏரியா. இங்கே உனக்கு என்ன வேலை?’’ என்று கேட்க, யானைக்குட்டி விஷயத்தை சொன்னது.

‘‘ஆபத்தை அல்வா மாதிரி நினைச்சு பார்க்க வந்திருக்கியே... சரி, உனக்கு உதவி செய்யறேன். ரெண்டு பேருமே கேட்கலாம்’’ என்றது.

கை... கை... தும்பிக்கை!

ஏரி நீரை நெருங்கி கால்களால் கலக்கியது யானைக்குட்டி. உள்ளேயிருந்து நீளமான வாயுடன் உருவம் ஒன்று வந்தது.

‘‘ஹலோ... இங்கே முதலை யாருப்பா?’’ எனக் கேட்டது யானைக்குட்டி.

‘‘யாரைப் பார்த்ததுமே பயமும் மரியாதையும் வருதோ அவன்தான் முதலை. அதாவது, நான்தான்’’ என்றது.

‘‘ஓஹோ... எனக்கு அப்படி ஒண்ணும் வரலை. ஆனாலும், உன்கிட்ட ஒரு கேள்வி. உங்க இரவு உணவு என்ன?’’

‘‘அதைத் தெரிஞ்சுக்கணுமா? கொஞ்சம் முன்னாடி வா’’ என்றது முதலை.

கை... கை... தும்பிக்கை!

யானைக்குட்டி குனிந்தது, அதன் மூக்கை பட்டென்று பிடித்துக்கொண்டு நீருக்குள் இழுத்தது முதலை. யானைக்குட்டி அலற, பாம்பு பாய்ந்து அருகில் இருந்த மரத்தின் கிளையில் ஏறியது. யானைக்குட்டியைப் பிடித்து இழுத்தது.

நீருக்குள் முதலை இழுக்க... நிலத்தில் பாம்பு இழுக்க... யானைக்குட்டியின் மூக்கு நீண்டு... நீண்டு...

ஒரு கட்டத்தில் முதலை ‘ச்சீ போடா!’ என விட்டுவிட... நீண்ட மூக்குடன் ஓட்டம் பிடித்தது யானைக்குட்டி.

அன்றிலிருந்துதான் யானைகளுக்குத் தும்பிக்கை உருவானது.