
இறையுதிர் காடு - 22

அன்று மாலை நேரம். பலத்த காற்றோடு மழை வருவதற்கான அறிகுறிகள் வானில் தெரிந்தன. கருமேகங்களின் திரளுதலும் முறுக்கலும் வானில் பல மேகச்சித்திரங்களை உருவாக்கியிருந்தன. போகரின் கொட்டாரத்தில் மரங்களிடம் பெரும்தள்ளாடல். வெயிலில் காயப் போட்டிருந்த வேர்களையும் விதைகளையும் அள்ளிப் பானைக்குள் போடும் முனைப்பில் பலர் இருக்க, மேய்ந்தபடியிருந்த ஆடு மாடுகளை சிலர் இழுத்துப் பட்டியில் அடைத்தபடியிருந்தனர். அப்போதுதான் கன்னிவாடி சென்று வந்த சாரட்டும் முகப்பில் வந்து நின்றது. சங்கனும் புலிப்பாணியும் முதலில் இறங்கிட, பின்னாலேயே மா, பலா, வாழை எனக் கன்னிவாடியின் தாவரச் செல்வங்களும் இறங்கிடத் தொடங்கின.
சங்கன் சாரட் ஓட்டியைக் கனிவாய்ப் பார்த்து, ``மிக்க நன்றி. நாங்கள் வருகிறோம்’’ என்றான்.
``நாங்கள்தான் நன்றி கூற வேண்டும். எங்கள் வேழரைக் காப்பாற்றிவிட்டீர்களே!’’
``இது மருத்துவன் கடமையப்பா. பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை...’’ என்றான் புலிப்பாணி.
பிறகு இருவரும் போகரின் ஓய்வறைக் குடில் நோக்கி நடந்தனர். அதற்குள் மழை வலுக்கவும் ஓட்டமாய் ஓடினர். மண் மேல் விழுந்த துளிகளும் அதுவரை நிலவிய உஷ்ணமும் கலந்து ஒரு வகை வாசம் எழும்பியது. அதே நேரம் விண்ணில் ஒரு மின்னல் கொடி பரவி, ஆயிரம் யானைகள் ஒரு விநாடிப்புள்ளியில் தங்களுக்குள் மோதிக்கொண்டாற்போல் ஒரு சத்தமும் எழும்பி, பிறகு ஆகாசக்கண்ணாடி விரிசல் கண்டு விள்ளல் விள்ளலாய் விழுவதுபோலவும் ஒலித்தது. அந்தச் சத்தத்தைச் சகிக்க இயலாதபடி மரக்கிளைகளில் ஒடுங்கியிருந்த பறவைகளில் பல உயிரை விட்ட நிலையில் பொத் பொத்தெனக் கீழே விழவும் செய்தன.
நல்லவேளையாக சங்கனும் புலிப்பாணியும் அவர் ஓய்வறைக்குள் நுழைந்து, மூச்சு வாங்க நின்றனர். போகர் அப்போது கிழார்களிடம் `அண்ட பிண்டம்’ பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர்களும் ஏடுகளில் பதிவுசெய்துகொண்டிருந்தனர். பார்வையாலேயே இருவரையும் அமரச் சொன்னார் போகர். அப்போது தூரத்து மலைச்சாரல் மேல் பெரும் இடி ஒன்று விழும் சப்தம் ஒலித்து அவ்வளவு பேர் உடம்புக்குள்ளேயும் இனம்புரியாத ஒரு கூச்சம் ஏற்பட்டு, பிறகு விலகியது.
அதன் நிமித்தம், சங்கன் காதிரண்டையும் அழுத்தமாய்ப் பொத்திக்கொண்டிருந்தான். நெடுநேரம் கழித்தே கைகளை மெல்ல விடுவித்தான். போகர் அதைக் கண்டு சிரித்தார்.
``என்ன சங்கா... இடிச்சத்தம் நாராசமாய் உள்ளதா?’’
``ஆம் குருபிரானே.’’
``இந்தச் சத்தம் ஓர் உண்மையையும் உணர்த்துகிறது. அது என்னவென்று கூறுவீர்களா?’’
``எனக்கு எதுவும் புலனாகவில்லை குரு...’’ என்றான் புலிப்பாணி.

`இடிச்சத்தத்தில் போய் உணர என்ன இருக்கிறது?’ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டான் சங்கன். கிழார்களும் விழித்தனர். மழையானது சல்லடையால் சலித்ததுபோல் பெய்யத் தொடங்கியிருந்தது. போகரும் தான் கேட்ட கேள்விக்கு, தானே பதில் கூறத் தொடங்கினார்.
``இடிச்சத்தம் என்பது, ஒலியின் விகார வடிவம். இந்த ஒலி, எப்போதும் தானே தனித்து உருவாகாது. இது உருவாக இன்னொன்று வேண்டும். அதாவது இரட்டைத்தன்மை!
ஒலியின் ஒழுங்கிற்குட்பட்ட வடிவமே மொழியாகிறது.
ஒலியின் பண்பட்ட வடிவமே இசையாகிறது
ஒலியின் அடங்கிய வடிவமே மௌனமாகிறது.
செவிட்டுத்தன்மை மௌனமாகாது. அது ஓர் ஊனம்!
இந்த உலகில் ஒளியின்றி ஸ்பரிசத்தால் மட்டுமேகூட ஒருவர் வாழ்ந்திட முடியும். ஒலியின்றி வாழ்வது மிகமிக அசாத்தியம். அதனால் ஒலி முதலாயும் ஒளி பிறகாகவும் என்றானது. இதில் ஒலிவடிவானதே நம் மனம். நம் உடல், காட்சிக்குப் புலனாகும் ஒன்று. அதாவது, ஒளியால் பார்த்து உணர முடிந்த ஒன்று. நாம் இப்படி ஒலி, ஒளி எனும் இரண்டுக்கும் ஆட்பட்டிருந்தாலும் ஒலியை முன்னிறுத்தி அதன் வடிவான மனதை மையப்படுத்தியே நமக்கு `மனதர்’ என்கிற பெயர் உண்டானது. அதுவே காலத்தால் திரிந்து `மனிதர்’ என்றானது.
இந்த உடல், ஒரு நாள் மண்ணாகிவிடும். ஆனால், நம் மொழியாகிய ஒலி - நம்மை மனிதனாக்கிய ஒலி அவ்வாறு ஆகாது. இப்போது நான் சொல்வதை எழுதிவைத்தால் அது காலகாலத்துக்கும் அப்படியே இருக்கும். நான் சொன்னதைப் பிறர் வாசிக்கும்போது ஒலிச்சப்தம் மட்டுமே மாறும். கருத்து மாறாது. எனது அழியாப் பெருவாழ்வு என்பது, என் கருத்து வாழ்வதில்தான் உள்ளது. அந்தக் கருத்து ஒலிக்குள்தான் என்னால் பதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒலியைப் போற்றுவதும் கொண்டாடுவதும் முக்கியம்’’ - இடியைத் தொட்டுக் கேள்வி எழுப்பிய போகர், இடி ஒலியைச் சாக்கிட்டு ஒலிக்கு அளித்த விளக்கத்தால் அங்கே அவ்வளவு பேருக்குமே ஒரு பிரமிப்பு ஏற்பட்டிருந்தது. இதனூடே கிழார்களிடம் இந்தப் பேச்சால் சில கேள்விகளும் எழும்பின.
``போகர் பிரானே, சில கேள்விகள்...’’
``கேளுங்கள். கேட்கத் தெரிந்தவனே வளருபவன்.’’
``ஒலி குறித்த தங்கள் கருத்துக்கு எங்களிடம் யாதொரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆயினும், ஒலியின் வடிவான மொழிகுறித்துச் சில கேள்விகள் உள்ளன.’’
``கேளுங்கள். விடை என்னிடம் இருந்தால் நிச்சயம் உரைப்பேன்.’’
``அப்படியானால், எல்லாக் கேள்விகளுக்கும் உங்களிடம் விடை இல்லை என்றாகிறதே!’’
``அதுதான் உண்மை. அறியப் பெறுவதை வைத்தே அறிவு விசாலமடைகிறது. அறியப் பெறுவது என்பது, நம் சுற்றுச்சூழலை வைத்தே அமைகிறது. என் சூழல் எவ்வளவு பெரிதோ அவ்வளவுக்கு என் அறிவும் பெரிதாய் விளங்கிடும். உங்கள் கேள்விக்கான விடை, என் சூழலுக்குள் இல்லாமல்கூட இருக்கலாமல்லவா?’’
``இதை, தன்னிலை விளக்கம் என்பதா, இல்லை, தங்களின் பணிவு என்பதா?’’

``கேட்கவேண்டிய கேள்விகளைக் கேளுங்கள்... இதுபோன்ற கிளைக் கேள்விகளைத் தவிருங்கள்.’’
போகர், கிழார்களின் பாராட்டைப் பெரிதாகக் கருதாமல் தீர்க்கமாய்ச் சொன்ன கருத்துகூட அவர்களுக்கு ஆச்சர்யமளித்தது. அந்த ஆச்சர்யத்தோடு கிழார்களிடம் கேள்விகளும் ஆரம்பமாயின.
``போகர்பிரானே... கல்லும் மண்ணும் தோன்றும் முன்பே நம் தமிழ்மொழி தோன்றிவிட்டதாகப் போற்றப்படுகிறதே. அப்படியானால், உலகத்தவரின் பொதுமொழியாகத் தமிழ்தானே இருக்க வேண்டும். ஏன் அவ்வாறில்லை?’’
``நல்ல கேள்வி... தமிழ் மொழி மூத்த முதுமொழி. அதில் சந்தேகமே இல்லை. கவிதைக்கு மிகையும் பொய்யும் அழகும் அழுத்தமும் சேர்க்கும். அதன் பொருட்டு சற்று மிகைபடச் சொல்லப்பட்டதே அந்தக் கருத்து. உலகப் பொதுமொழியாகத் தமிழ் இல்லாமல்போக, ஒரே காரணம்தான் உள்ளது. தமிழன் இந்த பரதம் எனப்படும் நாவலந்தீவின் கூரிய பாகமான தென்னாட்டோடு நின்றுவிட்டான். அவன் வாழப் போதுமான சகலமும் இங்கேயே அவனுக்குக் கிடைத்துவிட்டன. ஆறு வகைப் பருவநிலை, ஐவகை நிலத்தன்மை, அறு சுவை என இங்குள்ளதுபோல் உலகில் வேறெங்கும் இல்லை.
உலகம் முழுக்க அவன் பயணித்தான். ஆனால், தனது நாடு என்று அவன் இந்த மண்ணையே கருதினான். அதனால் பாதகமில்லை. தமிழ் மொழி ஒரு தாயாக இருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பிறமொழிகள் தோன்றிடக் காரணமாகியது. இப்போதும் எப்போதும் இலக்கணச் சுத்தத்தோடு ஒட்டுமொத்த உலகத்துக்கும் அரிய கருத்தைச் சொல்லும் திருக்குறள், திருமந்திரம் போன்ற காலத்தால் அழியாத நூல்கள் தமிழில் மட்டும்தான் உள்ளன. இதுவே அது முதுமொழி என்பதற்கும் சான்று.
மிக மேலான ஒரு கருத்தும் உண்டு. எந்த ஒரு மொழியும் அது சார்ந்த சமூகத்தோடு நின்றுவிடும். ஆனால், தமிழ் மட்டும் சமூக எல்லை கடந்து வானைத் தொட்டு தேவ சம்பந்தம் உடையதாகவும் உள்ளது. அந்தச் சம்பந்தம்தான் தண்டபாணியாகிய முருகன். அவன் தந்தை சிவன்! இவர்கள் தொடர்புடைய தமிழ் மொழி நிகழ்வுகள் இங்கே ஏராளம், சித்தர்களாகிய என் போன்றோரின் தலைமகனாய்க் கருதப்படும் அகத்தியர் பெருமான்கூட `அகத்தியம்’ எனும் பெயரில் இலக்கண நூலையே படைத்தார்.
கால வெள்ளம் அதைக் கொண்டு சென்றுவிட்டபோதிலும் அவர் காட்டிய வழியில்தான் என் போன்றோர் நடக்கிறோம். கிழார்களாகிய உங்களைக்கொண்டு என் கருத்துச் செல்வமும் எழுத்துகளால் சேமிக்கப்படுகிறது’’ - போகரின் நெடிய விளக்கத்தைத் தொடர்ந்து புறத்தில் பெய்துவந்த மழையும் ஒரு முடிவுக்கு வந்திருந்தது.
``பிரானே, வெளியே புறத்தில் பெருமழை. இங்கே அகத்தில் குருமழை. இரண்டும் ஒருசேர நின்றுள்ளது. அரிய செய்திகள், விளக்கங்கள். மனதுக்கு நெகிழ்வாக உள்ளது’’ என்றார் அருணாசலக்கிழார்.
``மகிழ்ச்சி. உங்கள் கன்னிவாடிப் பயணமும் வெற்றியாக முடிந்துவிட்டதுதானே?’’ என்று சங்கன், புலிப்பாணிப் பக்கம் திரும்பினார் போகர்.
``ஆம் குருபிரானே, திருமேனி வேழர் சில நாளில் நடமாடத் தொடங்கிடுவார். அவர் மனைவியார் அவரோடு சேர்ந்து விரைவில் தங்களை தரிசனம் செய்ய இங்கே வர இருப்பதாகவும் கூறியுள்ளார்!’’
அதைக் கேட்டுப் புன்னகைத்த போகர், ``பொதுவானவன் நான். என் சார்ந்த எல்லாமே மனிதகுலத்துக்கும் பொதுவானவை. என் வரையில் வாழ்க்கை என்பது உண்மையில் கழியும் பொழுது மட்டுமே. கழிந்துபோனவை திரும்பப்போவதில்லை. வரும் பொழுதுகள் எப்படி என்பதும் வரவரத்தான் தெரியும். எனவே, வாழும் நொடிகளை அர்த்தமுள்ள செயல்களால் நிரப்பிக்கொண்டே செல்ல வேண்டும், அவ்வளவுதான்!’’ என்று கூறியபடியே சற்று விலகிச் சென்று சாரல் விழும் ஓர் இடத்தில் நின்றவராய் வெகுதூரத்தில் தென்பட்ட மலைப்பரப்பைப் பார்த்தார். பிறகு, புலிப்பாணியைப் பார்த்தார். அவர் ஏதோ கட்டளையிடப்போகிறார் என்பது அவனுக்கும் புரிந்தது.

``புலி... நாளை நீ, அதோ அந்தத் தொடர்மலைச் சிகரத்தின் உச்சி பாகத்துக்குச் செல்ல வேண்டும்’’ என்றார்.
``உத்தரவு குருவே...’’
``ஏன் செல்ல வேண்டும் தெரியுமா?’’
``தங்கள் கட்டளையை நிறைவேற்ற...’’
``அது என்ன கட்டளை என அறியவேண்டாமா?’’
``அறியக் காத்திருக்கிறேன்.’’
``நல்ல சீடன் நீ. கற்பூர புத்தி உனக்கு!’’
``எல்லாம் தங்கள் ஆசிகளால் மட்டுமே குருவே...’’
``மகிழ்கிறேன். உன் தெளிந்த பதில்களால் மிக மகிழ்கிறேன். நாளை நீ அங்கே ஏன் செல்ல வேண்டும் என்பதையும் கூறிவிடுகிறேன். நெடுநாள்களுக்குப் பிறகு நல்லதொரு கோடைமழை பெய்துள்ளதல்லவா?’’
``ஆம் குருவே!’’
``இந்த மழை வேளையில் ஒரு பேரிடி இடித்ததுதானே?’’
``ஆம் குருவே...’’
``அநேகமாய் அது ஏதாவது பாறை நீர்த்தேக்கத்தில்கூட விழுந்திருக்கும்’’ - அவர் அப்படிச் சொல்லவும் கூர்ந்து கவனித்தான் புலிப்பாணி. கிழார்களும் சங்கனும்கூட அவர் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று கூர்ந்து நோக்கினர்.
``புலி... எப்போதும் பாறைப் பள்ளங்களில் பாயும் இடி, அந்தப் பள்ளத்து நீரில் தன் பெரும் மின்னாற்றலைப் பாய்ச்சியிருக்கும். இதனால் நீரின் உட்கூறுகளில் பெருமாற்றம் ஏற்பட்டு அந்த நீர் சற்றே தைலத்தன்மைக்கு மாறியிருக்கும். அந்த நீரை `உதகநீர்’ என்று சித்தம் கூறுகிறது. அந்த உதகநீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சுரைக்குடுவைகளில் அடைத்து எடுத்து வா.’’
``அப்படியே செய்கிறேன் குருவே...’’
``குருபிரானே... அந்த உதகநீரின் பயன்பாட்டைக் கூற இயலுமா?’’ - அருணாசலக்கிழார்தான் இடையிட்டுக் கேட்டார்.
``கூறுகிறேன். உதகநீர் கொண்டு ஒரு களிமண் சிலை செய்தால் அது கற்சிலைபோலாகிவிடும்’’ - என்று சிறு இடைவெளி விட்டவர், ``நன்கு புசித்துவிட்ட நிலையில் ஒரு குவளை உதகநீர் அருந்தினால், புசித்த உணவு அவ்வளவும் கல்லாகி வயிற்றில் பெரும்பாரம் ஏற்பட்டு உடல் இயக்கமே குளறுபடியாகிச் சுருண்டு விழுந்து இறக்க நேரிடும், தெரியுமா?’’ என்று கேட்க, அனைவரின் புருவங்களும் வளைந்து, அவர்கள் முகங்களில் ஆச்சர்ய ரேகை ஒரு மின்னல்போலவே ஓடி மறைந்தது.
இன்று அந்த ஜோதிடர், தன் விரல் மோதிரக்கற்களை ஒரு மேனரிசம்போல் துடைத்தபடியே இருந்தார். பாரதி அருகில் வந்து நிற்கவும் ஏறிட்டார். பாரதியும் ஆரம்பித்தாள்.
``நான் எம்.பி-யோட பொண்ணு... நீங்க?’’
``அச்சா, பைட்டோ பேட்டி...’’ என்று இந்தியில் பேசிய அவர், தன் அருகில் இருந்த இருக்கையைக் காட்டினார். அவள் அமராமல் தொடர்ந்தாள்.
``இட்ஸ் ஓகே... நீங்க யார்னு சொல்லவே இல்லையே.’’
``நான்... நான் யார்னு எனக்கே தெரியல. ஆனா, எல்லாரும் என்னை ஒரு நல்ல ஜோசியக்காரன்னு சொல்றாங்க’’ - முன்பு இந்தியில் பேசியவர், நல்ல தமிழில் தத்துவமாய் பதில் கூறவும் பாரதிக்கு எரிச்சல்தான் வந்தது. அடக்கிக்கொண்டு தொடர்ந்தாள்.
``நல்லா தமிழ் பேசறீங்களே..!’’
``பன்னெண்டு பாஷை பேசுவேன்!’’
``பெரிய விஷயம்தான். இப்ப இங்க எதுக்கு வந்தீங்க?’’
``உன் அப்பா என் க்ளையன்ட். அவர் இப்படி ஆஸ்பத்திரியில படுத்திருக்கும்போது எப்படி வந்து பார்க்காம இருக்க முடியும்!’’
``உங்ககிட்ட அப்பா ஜோசியம் பார்த்தா, உடனே அவர் உங்க க்ளையன்ட்டா?’’
``தொடர்ந்து ஆலோசனை கேட்கிறவங்கள வேற எப்படிச் சொல்றது?’’
``சரி... அப்பாவைப் பார்த்துட்டீங்கதானே?’’
``உம்... பார்த்துட்டேன்.’’
``கிளம்பவேண்டியதுதானே?’’ - அவள் நாகரிகமாக இடத்தை காலிபண்ணச் சொல்வது அவருக்குப் புரிந்தது. ஒரு சிரிப்பு சிரித்தவர், ``உன் பேர் என்ன பாப்பா?’’ என்று பதிலுக்குக் கேட்டார்.
``ஏன்... அப்பா உங்ககிட்ட என்னைப் பத்தியெல்லாம் சொன்னதில்லையா?’’
``சொல்லியிருக்கார். அவரோட ஒரே பொண்ணுதானே நீ?’’
``ஆமா... நான் அவர் பொண்ணுன்னு தெரியும். ஆனா, பேர் மட்டும் தெரியாதா?’’

``நிறையபேரைப் பார்க்கிறதால ஞாபகம் வெச்சுக்க முடியல பாப்பா. ஆனா, உன் ஜாதகத்தை நான் பார்த்திருக்கேன். அது நல்லா ஞாபகமிருக்கு! நீ எதையும் அவ்வளவு சுலபத்துல நம்ப மாட்டே. கேதுன்னு ஒரு கிரகம் இருக்கு. அதுதான் உன்னோட பலம் - பலவீனம் எல்லாமே.’’
``என்கிட்டயே ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா? நான் பேர்ல மட்டும் பாரதி இல்ல... அந்த பாரதி பாடின மாதிரி `ஜோதிடம்தனை இகழ்’னு இகழ்ந்து வாழ்பவள்’’ - பாரதி ஆவேசமாகப் பேசவும், அரவிந்தன் அருகில் வந்து அவளைப் பார்வையாலேயே தணித்தவனாகப் பேச ஆரம்பித்தான்.
``என் பேர் அரவிந்தன் ஜோசியரே. நீங்க, பாரதி அப்பா எழுந்து நடப்பார்னு சொன்னதா கேள்விப்பட்டேன். ஒரு நம்பிக்கை தர்றதுக்காகத்தான் நீங்க சொல்லியிருக்கணும்னு நினைக்கிறேன். அந்த வகையில ரொம்ப சந்தோஷம். இப்ப எதுக்கு வெயிட் பண்றீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?’’ - அரவிந்தன் நேராக விஷயத்துக்கு வந்தான்.
அவரும் மேலும் கீழுமாய்ப் பார்த்துவிட்டு ``இந்த கிருஷ்ணகுமார் நந்தா பற்றி உங்களுக்கு சரியா தெரியல. நான் ஒரு சத்தியவாக்கு ஜோசியன். ஜோசியம் ஒரு கணக்கு. அது ஒண்ணும் மிஸ்டரி இல்லை. அந்தக் கணக்கை எல்லோராலும் சரியா போட முடியுறதில்ல. அதனாலதான் ஜோசியம்னா சிலர் தப்பா நினைக்கிறாங்க.’’
``சரி, நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க? சுருக்கமா அதை எங்ககிட்ட சொல்லுங்க.’’
``உங்ககிட்ட சொல்லத்தானே காத்துக்கிட்டிருக்கேன்.’’
``இது என்ன புது ட்விஸ்ட்! நாங்க தற்செயலா இங்க வந்திருக்கோம். யாருக்குமே தெரியாது.’’
``ஆனா, எனக்குத் தெரியும்...’’
``போதும் மிஸ்டர் கிருஷ்ணகுமார் சாந்தா... ஸாரி நந்தா. நாங்க ஏற்கெனவே ஒரு மிஸ்டிக்கலான சூழ்நிலையில, ரொம்பவே குழப்பத்துல இருக்கோம். எங்களை நீங்க இன்னும் குழப்பாதீங்க. எங்களை அட்ராக்ட் பண்ணவும் நினைக்காதீங்க.’’

``மிஸ்டர் அரவிந்தன்... நான் உங்கள அட்ராக்ட் பண்ணவேண்டிய அவசியமே எனக்குக் கிடையாது. நான் பணத்துக்கு ஜோசியம் பார்க்கிறவனும் கிடையாது. ஜோசியம், என் வரையில நான் சிங்கப்பூர் NTU-ல படிச்ச லாஜிஸ்டிக்ஸ், அப்புறம் ஸ்மார்ட் புராடெக்ட் டிசைன் இன்ஜினீயரிங்கைவிட மதிப்பான ஒரு சப்ஜெக்ட்.’’
``ஓ... நீங்க ஃபாரின்ல எம்.எஸ் பண்ணவர்னும் சொல்லவர்றீங்களா?’’ - அரவிந்தன் கேட்டவிதமே மதிப்பாக இல்லை. அது அந்த ஜோதிடருக்கும் புரிந்தது.
பதிலுக்குச் சிரித்தவர் ``மிஸ்டர் அரவிந்தன்... நான் சொல்லவேண்டியதைச் சொல்லிட்டுப் புறப்படுறேன். என் வரையில மிஸ்டர் ராஜாமகேந்திரன் வித்தியாசமான ஒரு ஜாதகர். அவர் இப்ப படுத்தபடுக்கையா இருக்கலாம். ஆனா, இவர் திரும்ப எழுந்து நடப்பார். இவருக்கான மருந்து இவர் வீட்லயே இருக்கு. அந்த மருந்தை கூடியசீக்கிரம் இவர் பயன்படுத்துவார். பல தெய்விக அனுபவங்கள் இவருக்கும், குறிப்பா இவர் மகளான இவங்களுக்கும் ஏற்படும். காரணமில்லாம ஒரு காரியமுமில்லை. மேல தூக்கி எறியப்படுற பொருள் இந்தப் பூமியில எப்படி கீழ விழுந்தே தீரணுமோ, அப்படி இவர்கள் சம்பந்தப்பட்ட நான் இப்ப சொன்ன விஷயங்களும் நடந்தே தீரும். அதேபோல் ஒரு நல்ல மனுஷன் சாபமும் இவங்களை விடாம துரத்தும். அதுலேருந்து தப்பிக்கணும்னா, என் பேச்சைக் கேட்கணும். அது என்னன்னு நான் சொல்லத் தொடங்கியப்போ அவருக்கு மயக்கம் வந்து கெடுத்துடுச்சி. அதனால பரவாயில்லை. நான் சொன்னதெல்லாம் நடக்கும். நடக்க நடக்க நம்பிக்கை வரும். அப்ப நானும் திரும்ப வருவேன். எனக்கும் சில தேவைகள் இருக்கு... அது அப்ப ஈடேறும்னு நான் நம்புறேன்’’ என்ற கிருஷ்ணகுமார் நந்தா, எழுந்து அழகாய்க் கும்பிட்டுவிட்டுக் கிளம்பவும் அரவிந்தனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. இப்படி ஒரு போக்கை அவன் கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லை.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த கணேசபாண்டியன், ``இவர் சொன்னதுல, `ஐயா நடப்பார்’னு சொன்னதைக் கேட்க நல்லா இருக்கு. மருந்து வீட்ல இருக்குன்னு சொல்றாரே. அதுதான் புதிரா இருக்கு’’ என்றபடி, ``சரி சரி வாங்க... ஐயாவைப் பார்க்கலாம்’’ என்று உள்ளே அவர்களை அழைத்துச் சென்றார்.
ராஜா மகேந்திரன், ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தார். எதிரில் டாக்டரும் வந்தார்.
``டாக்டர், இவங்கதான் ஐயாவோட பொண்ணு.’’
``ஐ நோ... ஐ நோ... போன தடவை வந்தப்பவே பார்த்தேனே.’’
``டாக்டர், அப்பாகூட இப்ப பேச முடியுமா?’’
``ஸாரிம்மா... ஒரு ஸ்பெஷல் மெடிசினை ட்ரை பண்ணிக்கிட்டிருக்கோம். ஆஸ்திரேலியாவுல ஒரு கேஸ்ல இட் வாஸ் வெரி சக்சஸ்ஃபுல்... அந்த மெடிசின்ல மயக்க நிலைங்கிறது இம்பார்ட்டன்ட்.’’
``அப்பாவால இனி நடக்க முடியாதுன்னு சொன்னீங்களாமே..?’’
``அஃப்கோர்ஸ்... கொஞ்சம் சாஞ்சு உட்காரலாம். பாத்ரூம் டாய்லெட்டுக்கெல்லாம் கொஞ்சம் மூவாகலாம். ஆனா, இதுநாள் வரை நடந்த மாதிரி நடக்கிறதுங்கிறது இட்ஸ் இம்பாசிபிள்.’’
``டாக்டர், ஒருவேளை சித்தா, ஆயுர்வேதம்னு ட்ரை பண்ணினா சாத்தியமோ?’’ - அரவிந்தன்தான் இடையிட்டுக் கேட்டான். அந்தக் கேள்வி அந்த டாக்டருக்குப் பிடிக்கவில்லை என்பது அவர் முகம் போனபோக்கில் நன்றாகத் தெரிந்தது.
``எனக்கு அதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது மிஸ்டர். அலோபதியால முடியாதுன்னு உறுதியா சொல்ல முடியும்.’’
``இப்பல்லாம் எலும்பு முறிஞ்சா ஆர்ட்டிஃபிஷியல் போன்லாம்தான் வந்திருக்கே?’’
``இவரோட பிரச்னை முதுகுத் தண்டுவடத்துல... டிஸ்க் ஷிப்ட் ஆனதோட மைன்யூட் பிளட் வெசல்ஸ் எல்லாம் சிதைஞ்சேபோச்சு. ஆகையால, டேமேஜ் ஆன பார்ட்டை பைபாஸ் பண்ணி சர்ஜரி செய்திருக்கோம். இதுக்குமேல நான் சொன்னா, உங்களுக்கு எங்க மெடிக்கல் டேர்ம்ஸ் தெரிஞ்சிருக்கணும். இல்லைன்னா புரியாது.’’
``அப்ப... இனி இவர் எங்கேயாவது போகணும்னா வீல்சேர்தானா?’’
``ஆமா... இப்போதைக்கு, குறைஞ்சது ஒரு வருஷமாவது அவர் அசையாம படுத்திருக்கணும். இல்ல பாத்ரூம் போறதுகூட சிக்கலாயிடும்’’ - டாக்டர் சொன்னபடியே நடக்கவும் செய்தார். அதுவே இனி நின்று பேசவோ உட்கார்ந்து பேசவோ எதுவுமில்லை என்பதுபோல் இருந்தது.
``டாக்டர், அப்ப எதுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்?’’ என்று அவரோடு நடந்தபடி நறுக்கெனக் கேட்டான் அரவிந்தன்.
``பிரச்னை, முதுகுத்தண்டுவடத்துல மட்டுமில்லை, தலையிலயும் அடிபட்டதுல பல சமயங்கள்ல அவருக்கு தான் யார்னே தெரியாமப்போய் எங்க கேள்விக்கும் அவரால பதில் சொல்ல முடியல. டாப் டு பாட்டம் ஸ்கேன் பண்ணதுல, தலையில ஒரு பிளட் க்ளாட் தெரியவந்தது. அதுக்குத்தான் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்’’ - அதற்குமேல் அரவிந்தன் எதையும் கேட்கவில்லை. ராஜாமகேந்திரன் அருகில் சென்று சில விநாடி உற்றுப்பார்த்தனர். பிறகு புறப்பட்டுவிட்டனர். கணேசபாண்டியிடம் மட்டும் ஆதங்கம்.
``சேர்ந்தாப்ல எட்டு மணி நேரம் இவர் படுத்துத் தூங்கி நான் பார்த்ததில்ல தம்பி. ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்னே ஓடின மனுஷன். காலம் இப்படிக் கொண்டுவந்து சாச்சிடுச்சு.’’
``விடுங்க... இந்த விஷயத்துல நாம அந்த ஜோசியர் சொன்னதை நம்புவோம்.’’
``ரைட் தம்பி... எனக்கும் அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு. அந்த ஜோசியரும் சொன்ன மாதிரி லேசுப்பட்ட ஆள் கிடையாது தம்பி. எவ்வளவு சென்ட்ரல் மினிஸ்டருங்க அவர் பாக்கெட்ல தெரியுமா?’’
``பாண்டிண்ணே, அந்தாள் பேச்சை விடுங்க... நாங்க இப்ப பழநி போய்க்கிட்டிருக்கோம். சொல்லச் சொல்லக் கேக்காம, பாட்டி போய் மண்டைய உடைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க. பார்த்துக் கூட்டிக்கிட்டு வரத்தான் போறோம்.’’
``தெரியும் பாப்பா... பாட்டிம்மா போன் பண்ணிச் சொன்னாங்க. அங்க போயிட்டு மலைக்குப் போகாம வந்துடாதீங்க’’ - கணேசபாண்டியன் அப்படித்தான் பேசுவார் என்று எதிர்பார்த்தவள்போல் அதற்கு ஒரு பதில் கூறாமல் வெளியே டிரைவரோடு பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி அமர்ந்தாள். அரவிந்தன் முன்னால் ஏறிக்கொள்ள காரும் புறப்பட்டது.

காருக்குள்...
பாரதி, இறுக்கமாய் வெளியே பார்த்தபடி வந்தாள். ஜோதிடர் பேச்சு அவளை பாதித்திருக்க வேண்டும்.
``என்ன பாரதி... ஜோசியர் சொன்னதைப் பற்றிய யோசனையா?’’
``ஆமா... அப்பா இப்படி இன்னும் எத்தனை பேர்கிட்ட என்னைப் பற்றிப் பேசியிருக்காரோ தெரியல...’’
``ஓ... உன் ஜாதகத்தைப் பார்த்துட்டதா சொன்னார்ல..?’’
``மண்ணாங்கட்டி... ஜாதகமாம் ஜாதகம். ஆனா, நீங்க கொஞ்சம் நம்புற மாதிரி தெரியுதே!’’
``இல்லையே... நான் எப்ப சொன்னேன் நம்புறேன்னு?’’
``இப்பதான் பாண்டியண்ணன்கிட்ட ஜோசியர் சொன்னத நம்புவோம்னு சொன்னீங்க. அதுக்குள்ள மறந்துபோச்சா..?’’
``ஒரு பாசிட்டிவ் தாட்டா நினைச்சு சொன்னேன் பாரதி. ஜோசியமா நம்பி இல்லை...’’
``எனக்கு இப்ப பாசிட்டிவ் தாட், நெகட்டிவ் தாட்டுங்கிறதுலகூட நம்பிக்கைபோயிடுச்சி அரவிந்தன். இப்ப என்னைச் சுற்றி நடக்கிற எந்த ஒரு விஷயத்தையும் நான் கற்பனைகூடச் செய்துபார்த்ததில்லை. ஆனா, என்னென்னமோ நடக்குது. இந்தப் பழநி விஷயத்துலகூட எவ்வளவு உறுதியா இருந்தேன் தெரியுமா?’’
``பீ கூல்... ஓப்பன் மைண்டோட இரு. நிச்சயமா சொல்றேன், காரணமில்லாம இந்த உலகத்துல ஒரு காரியமுமில்லை. ஒரு பெரிய காரணம் இருக்கு.’’
``என்ன காரணமோ... பார்ப்போம்!’’
``பை த பை... உங்க அப்பாவுக்கு மருந்து வீட்லயே இருக்குன்னு அந்த ஜோசியர் சொன்னதை யோசிச்சியா?’’
``அது ஒரு உளறல்... அதுக்குமேல நான் அதைப் பற்றி யோசிக்கத் தயாராயில்லை.’’
``ஒரு போஸ்ட் கிராஜுவெட், உளறுறதுக்காகவா டெல்லியில இருந்து வருவான்?’’ - பொடிவைத்து அரவிந்த் கேட்க, கூர்மையாக பாரதியும் பார்த்திட...
``என்ன பாரதி... கோபப்படப்போறியா இல்ல யோசிக்கப்போறியா?’’
``அர்விந்த், என்ன சொல்றீங்க..?’’
``உன் வீட்ல மருந்து இருக்கிறதைப் பற்றித்தான் கேள்வியே... நீ இருக்குன்னு நினைக்கிறியா இல்லைன்னு நினைக்கிறியா?’’
``உங்களுக்கே இது முட்டாள்தனமா படலை. மருந்து இருக்க, என் வீடு என்ன மெடிக்கல் ஷாப்பா?’’
``மருந்து மெடிக்கல் ஷாப்லதான் இருக்கணுமா என்ன... ஏன் அது ஒரு பெட்டிக்குள்ள இருக்கக் கூடாது?’’ - அரவிந்தன் கேட்கவும் பாரதியிடம் திகைப்பு!
- இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: ஸ்யாம்