Published:Updated:

காந்தியைப் பின்பற்றும் கமல்ஹாசனின் கொள்கைதான் என்ன? ஹலோ... ப்ளூடிக் நண்பா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காந்தியைப் பின்பற்றும் கமல்ஹாசனின் கொள்கைதான் என்ன? ஹலோ... ப்ளூடிக் நண்பா
காந்தியைப் பின்பற்றும் கமல்ஹாசனின் கொள்கைதான் என்ன? ஹலோ... ப்ளூடிக் நண்பா

`காந்தியைப் பின்பற்றுவதாகச் சொல்லும் கமல்ஹாசன் கட்சி தொடங்கி முழுதாய் ஓராண்டு நிறைவடைந்தும் இன்னும் கட்சியின் கொள்கைகளைத் தெளிவாய் அறிவிக்கவில்லை என்பது எத்தனை பெரிய முரண்!’

மஹாத்மா காந்தி அக்டோபர் 22, 1925-ல் ‘யங் இந்தியா’ இதழில் 7 கொடிய சமூகத் தீமைகளைப் பட்டியலிட்டிருந்தார். அதற்கு 7 மாதங்கள் முன் ஃப்ரெட்ரிக் லூயிஸ் டொனால்ட்சன் என்ற பாதிரியார் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் ஆற்றிய உரையிலிருந்துதான் காந்தி அவற்றை எடுத்தாண்டிருந்தார். அவை: 1. உழைப்பற்ற‌ செல்வம் 2. மனசாட்சியற்ற‌ மகிழ்ச்சி 3. ஒழுக்கமற்ற அறிவு 4. அறமற்ற வணிகம் 5. மனிதநேயமற்ற‌ அறிவியல் 6. தியாகமற்ற மதம் 7. கொள்கையற்ற அரசியல்.

கடைசிப் பாவத்தைக் கவனியுங்கள். காந்தியைப் பின்பற்றுவதாகச் சொல்லும் கமல்ஹாசன் கட்சித் தொடங்கி முழுதாய் ஓராண்டு நிறைவடைந்தும் இன்னும் கட்சியின் கொள்கைகளைத் தெளிவாய் அறிவிக்கவில்லை என்பது எத்தனை பெரிய முரண்!

சரி, அது கிடக்கட்டும். சத்ரியனாக இருந்து போரடித்து சாணக்கியனாகிவிட்டார்கள் பா.ம.க-வினர். குடுமி கையிலிருக்கையில் சீட் எண்ணிக்கை முக்கியமில்லை என சடங்குக்கு ஐந்து போதுமென்கிறார்கள் பா.ஜ.க-வினர். கேப்டன் என்பதால் டாஸ் போட்டு பூவா கையா எனப் பார்க்கிறார். மிச்சம் மீதியில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நிற்கப் போகும் தொகுதிகள் ஒற்றை இலக்கமா, இரட்டையா என பெட் கட்டலாம்.

****

திருப்பத்தூரில் வழக்கறிஞர் சினேகா பார்த்திபராஜா என்பவர் சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை இந்தியாவிலேயே முதன்முறையாக வாங்கியிருக்கிறார். முற்போக்குச் சிந்தனையாளர்கள் மத்தியில் இதற்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

சில விமர்சனங்கள் எழுந்ததையொட்டி `நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் அல்ல’ என்று நேர்காணல்களில் திரும்பத் திரும்பப் பதிவு செய்கிறார் சினேகா. ஆனால், இந்த `சாதியற்றவர்’ என்ற சான்றிதழால் என்ன நடைமுறைப் பயன் என யோசிக்கிறேன்.

சாதிச் சான்றிதழ் இன்று இருப்பது ஒடுக்கப்பட்டோரை அடையாளம் கண்டு உரிய உரிமைகள் கிடைக்கச் செய்வதற்குத்தானே தவிர, சாதிப் பெருமிதத்துக்காகவோ, சாதி அவமதிப்புக்காக‌வோ அல்ல. சொல்லப் போனால் சாதியை ஒழிப்பதன் முதல்படிதான் சாதிச் சான்றிதழ். அப்படியிருக்கையில் தானே வலியப்போய் சாதியில்லை என்று சான்று வாங்குவானேன்? எதுவுமே வாங்காமல் இருந்தாலே அந்நிலைதானே!

பள்ளியில் மதம் சொல்வது கட்டாயமில்லை என்றும், சாதி கேட்கலாகாது என்பதுமே இன்று போராட வேண்டிய விஷயங்கள். கல்லூரியில்/வேலையில் சேரத்தான் சாதி அடையாளம் தேவைப்படுகிறது. அதற்கு மட்டும் சான்றிதழ் கேட்டால் போதுமானது.

இன்ன சாதி என்று வெளியில் சொல்லும் உரிமையும் எந்தச் சாதியும் இல்லை என்று சான்றிதழில் சொல்லும் உரிமையும் உயர்சாதியினருக்குத்தான் இருக்கிறது! அவர்கள் வேண்டுமானால் இதைச்செய்யலாம். மற்றபடி, சாதிச்சான்றிதழைக் கிழித்துவிட்டால் சாதியொழிந்துவிடும் என்று சொல்வதன் நீட்சியாகவே இதைப் பார்க்க முடிகிறது.

***

‘K.G.F: Chapter 1’ இரு பாகங்களைக் கொண்ட கன்னடப் படத்தின் முதற்பகுதி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் பதிப்பித்திருக்கிறார்கள். மொத்தமே ஒரு மணி நேரம்தான் படமெடுத்திருப்பார்கள்போல. கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளும் ஸ்லோ மோஷனில் இரண்டரை மணி நேரப் படமாகிவிடுகிறது! வெப்சீரிஸில் எபிஸோட் கணக்கில் ஓடுவதுபோல் நூறு பாத்திரங்கள் வருகின்றன‌. மொழிபெயர்ப்பு என்றாலும் தமிழ் வசனங்கள் தீப்பொறி. ஆனால், படத்தின் தனித்துவம் அதன் அபாரமான மேக்கிங்!

குறிப்பாக, படத்தின் தேர்ந்த‌ ஒளிப்பதிவு (புவன் கௌடா). கிராஃபிக்ஸ் நாவல்களின் அனுபவத்தை அசைபடத்தில் கொணரும் முயற்சி - ‘300’ என்ற‌ ஆங்கிலப்படம்போல. கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்போல் அத்தனை அழகு. அமெரிக்க ஒளிப்பதிவாளர் Joseph V. Mascelli சொல்லும் ஒளிப்பதிவின் ஐந்து ‘C’க்களை - Camera Angles, Continuity, Cutting, Close-ups, Composition - இப்படத்தின் வழி பாடம் நடத்தலாம். குறிப்பாக நிறங்கள், லைட்டிங், ஸ்பேசிங் போன்ற‌ கம்போசிஷன் விஷயங்கள் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரமாதம்!

கோலார் தங்க வயலில் மக்கள் அடிமைகளாக இருந்தது உண்மைதான் என்றாலும் அந்த வரலாற்றுக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமில்லை. இது Masculine Heroism பேசும் usual படம்தான். இதில் ரஜினி நடித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் எழாமல் இல்லை!

“Larger than life” என்பார்கள். உள்ளடக்கத்திலும் ஆக்கத்திலும் அப்படியானதொரு படம். இந்தியப் படமொன்றை இப்படியான தரத்தில் பார்க்கவே ஆசைஆசையாய் இருக்கிறது! சமீப காலங்களில் இப்படி ஆச்சர்யப்படுத்திய இன்னொரு படம் Goodachari (தெலுங்கு).

கேஜிஎஃப் கன்னட சினிமாவின் பாகுபலி! (அமேசான் ப்ரைமில் வெளியிட்டுள்ளன‌ர்.)

***

‘கழிமுகம்’ பெருமாள்முருகனின் பதினொன்றாவது நாவல். காலச்சுவடு வெளியீடு.

இணையவாசிகள் பட்டியல் வேறெனினும், என்வரையில் தமிழின் சமகால இலக்கிய மும்மூர்த்திகளுள் ஒருவர் பெருமாள்முருகன். `மாதொருபாகன்’ கருத்துரிமைப்போரின் பக்கவிளைவான சர்வதேச வெளிச்சத்தால் இன்று இலக்கிய நோபல் போட்டியிலுள்ள‌ ஒரே தமிழ் எழுத்தாளர். பொதுவாக, அவரது புத்தகங்கள் வெளியானதும் உடனடியாக வாசித்துவிடுவேன். அப்படித்தான் அவரது முந்தைய 10 நாவல்களையும் வாசித்தவன் என்ற முறையில் அவற்றுள் பலவீனமான ஒரு புனைவென இதையே சொல்வேன்.

இது ஒரு தலைமுறை இடைவெளிக் கதை. விடுதியில் தங்கி கல்லூரியில் படிக்கும் மகன் 75,000 ரூபாய்க்கு ஒரு செல்போன் வாங்கித் தரத் தன் தந்தையிடம் கோருவதை ஒட்டிய நிகழ்வுகளே இதன் ஒன்லைன். ஒரு சிக்கலை எடுத்துக்கொண்டு (உதா: மாதொருபாகன் - குழந்தையின்மை; கங்கணம் - திருமணமாகாமை; ஆளண்டாப்பட்சி - புல‌ப்பெயர்ச்சி; பூக்குழி - கலப்பு மணம்) அதை வந்தடைந்த பாதை, அதன் பின்பான வாழ்க்கை, அது பற்றிய‌ பல கோணப் பார்வைகள் எனச் சம்பவங்களைக் கோத்துக் கதை கூறும் பெருமாள்முருகனின் வழமையான‌, வலிமையான‌ உத்திதான் இதிலும்.

மதிப்பெண்ணைக் குறிவைத்த பள்ளிக்கூடங்கள், அடக்குமுறையைப் பிரயோகிக்கும் பொறியியல் கல்லூரிகள், அரசாங்க அலுவலக நடைமுறைகள் எனப் பலவற்றையும் நாவல் பகடி செய்கிறது. ஒரு மேசைக்கணிணியைக்கூடக் கையாள அஞ்சும் அரசு ஊழியரான தந்தை நவீன ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை, மனதில் உருப்பெருக்கிக் கொண்ட ஆபத்துகளை அஞ்சுவதே மையச்சரடு. ஆனால், அது தேவைக்கதிகமாகத் திரும்பத் திரும்ப வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்படுவது சற்று அலுப்பூட்டுகிறது.

நாவலின் பிரதானச் சிக்கல் அதன் பிற்பகுதியில் ஒரு நீதிக்கதைபோல் நண்பரைச் சந்திக்கும் நிகழ்வின் மூலம் பிரச்னைக்குத் தீர்வைச் சொல்லியிருப்பதுதான். ஒரு தெலுங்குப் படத்தில் நாயகன், நாயகியின் வீட்டில் தங்கி / நாயகி, நாயகனின் வீட்டில் தங்கி அனுபவங்கள் பெறுவதுபோல் இருக்கின்றன‌ அவ்விடங்கள். அவரது முந்தைய அர்த்தநாரி நாவலிலும் மாலை போட்டுக் கோயிலுக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்களின் வழி காளி பாத்திரம் மனம் மாறுவதாக இருக்கும். ஆனால், அதில் இத்தனை நாடகத்தன்மை இல்லை. தவிர, இறுதியில் முந்தைய தலைமுறையே விட்டுக் கொடுப்பதாக முடித்திருந்தாலும், இரு தலைமுறைகளின் தரப்பு நியாயங்களையும் சமமாகச் சொல்லவில்லை. தந்தை தரப்பு விவரமாக கூடுதல் உணர்வெழுச்சியுடன் இதில் பேசப்படுகிறது. (ஆசிரியரே ஒரு தந்தை என்பதால் இப்படி நேர்ந்திருக்கலாம்.)

பிரச்னைக்குப் பின் மீண்டும் எழுத வந்த பெருமாள்முருகன் இன்னும் பிடிவாதமாக மனிதர்களைப் பாத்திரங்களாக்கி எழுதுவதைத் தவிர்ப்பதைக் கவனிக்கலாம். `பூனாச்சி’ ஆடுகளை வைத்து எழுதப்பட்ட‌ நாவல். `கழிமுகத்தி’லோ அசுரர்களே பாத்திரங்கள். எருமைக்கறியுண்ணும் அசுரர்கள். (என்ன ஜாக்கிரதை! பசுவல்ல; எருமை) கல்யாண வயது வந்தால் ஆண்குறி பொன்னிறமாய் மின்னும் இனத்தவர்கள். வரதட்சணையாய் அதற்குத் தங்கத்தில் பூண் போடத் தயாராயிருக்கும் மாமனார் கொண்ட குழுவினர்.

“எங்களை அசுரன் என்றா சொல்கிறாய்?” என எவரும் சினந்தெழாதிருக்க வேண்டும்! 

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களை கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!

***

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு