சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வருடல் - சிறுகதை

வருடல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
வருடல் - சிறுகதை

கீதா கைலாசம், ஓவியங்கள்: ஸ்யாம்

முதல் நாள் - இரவு

ரஞ்சித்தின்மேல் கோபமாக வந்தது. போனைத் தலைமாட்டில் கிடத்தி, கட்டிலின்மேல் உட்கார்ந்தாள். ஞானசெளந்தரிக்கு, ராத்திரியில் தனியாகத் தூங்குவதென்றால் பயம். அதிலும் கட்டிலுக்கு அடியில் பார்த்துவிட்டுப் படுக்கும் பழக்கம் பிரசித்தி. கட்டிலின் மேலும், பாதி கீழுமாக இருந்த போர்வையை மடித்துவிட்டு, தம்பிடித்து, காதில் விழும் ரஞ்சித் குரலை `கள்ளக்காதலன்தான் கட்டிலுக்கு அடியில ஒளிவான்… ஹஹா’ கேட்டுக்கொண்டே தரையில் குப்புறப்படுத்துப் பார்த்தாள். `ஹூ…’ என்ற சத்தம் கேட்க, பயத்துடன் எழுந்து வாசற்கதவைச் சோதித்துவிட்டு வந்து படுத்தபடியே போர்வையை இழுத்தாள். ஈஇஅ இப்படி தனியாகத் தூங்கவேண்டிய அவசியமில்லை. குழந்தைகளும் கூடவே இருக்கலாம். ரஞ்சித் மட்டுமல்ல குற்றவாளி. இந்த ஏற்பாடு மொத்தமும் சந்திரலேகாவினுடையது.

கட்டில் காலில் மாட்டினாற்போல் போர்வை முனை `வர மாட்டேன்’ என, அவள் சரிந்து தரையில் அமர்கிறாள். பார்வை கட்டில் அடியில். ஏதோ ஓர் அசைவை உணர்கிறாள். சர்வமும் படபடக்க, பார்வையை போர்வை பிம்பத்திலிருந்து அகற்றாமலேயே போனை எடுக்கிறாள். `ஐயோ..!’ பக் பக் அதிகமானது. வியர்த்துக் கொட்டியது. கத்தினாலும் போர்வைவாசிக்கு மட்டுமே கேட்கும். பொட்டு சத்தமின்றி அழ ஆரம்பித்தாள். ஒரு நொடி சாமி படத்தைப் பார்த்துவிட்டுப் பார்வையைப் போர்வைக்குத் திருப்பினாள். இப்போது போர்வை வெறுமனே தரையில். படக்கென இழுத்தாள். அதே அந்த `ஹூ…’ சத்தம். `தனியா தூங்க முடியாது. காப்பாத்து. ரஞ்சித் இங்கிருந்தா `ஏதோ சத்தம் என்னன்னு பாருங்க’ன்னுட்டுத் தூங்கியிருப்பேன். இன்னிக்குக் கடைசி நாள், ஊருக்கே போயிடுறேன்’ ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள் சாமியிடம்.

``ஞானசெளந்தரி.”

வருடல் - சிறுகதை

`அந்த உருவம்தானா... என்ன கனிவு குரல்ல... கொஞ்சவா போகுது... ச்சீ!’ அவள் விசும்பல் வெளியே கேட்டது.

கனிவான குரலின் ஒரு வார்த்தை, ஒரு வரியானது. ``செளந்தரி திரும்பு. வந்திருப்பது நான்.”

`சந்தேகமே இல்லை, ரஞ்சித் குரல், இது சாத்தியமா?’ விறைத்துத் தரையோடு இருந்த ஞானசெளந்தரியின் மனதில் திகில்கள் உருகித் தவித்தன. `திரும்பலாமா... ரஞ்சித் எப்படி இங்கே? பேயாகவா... ஆவியாகவா... கோரப்பல்லும் கலைந்த முடியுமாகவா? வெள்ளை ஜிப்பா... கறுப்பு அங்கி? இல்லை பறந்துகிட்டும் நின்னுகிட்டும் ஏதோ மேகம் மாதிரியா?’

குரல் முதுகைத் தொடவே சடக்கெனத் திரும்பிவிட்டாள்.

``நிஜம்மாவே நீங்களா?”

``ஆமா.”

``சின்ன வயசு போட்டோவுல பார்த்த மாதிரி இருக்கீங்க. கனவுதானே?”

``கிள்ளிப்பாரேன்.”

அவள் கை நீட்ட, ரஞ்சித் குனிந்து கிள்ளுகிறான்.

``ஆ… ஆ...”

``நம்புகிறாயா?”

``ம்ம்... நிஜம்தான், நீங்கதான்.”

ரஞ்சித், பல வருடம் பழக்கப்பட்டவனாக அந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறான்.

``செளந்தரி, பயந்தழுது என்னவோபோல் இருக்கிறாய். இன்று போய், காலை வருகிறேன். ஆபீஸில் இரண்டு நாள்களுக்கு விடுப்பு சொல்லிவிடு. சந்திப்புக்குத் தயாரா இரு.”

நெடும் நிசப்தம். தரையில் படுத்து, கண்களை இறுக மூடினாள். `இவரு போன அப்புறம்தானே வேலையில சேர்ந்தேன்? கிள்ளினது இன்னும் வலிக்குதே. சாமி... தூங்கிடணும். காலையில காபி குடிச்சதும் விளங்கிடும்… தெரபிஸ்டைப் பார்த்தேயாகணும். என்னைத் தொட்டும் பார்ப்பாரா? பேச முடியாம குமுறிக்கிட்டிருக்கிற பலதுல சிலதையாவது சொல்ல முடியுமா? வந்தது வந்தாச்சு. உடனே மறைவானேன்? பார்க்க என்னமோபோல இருக்கேன்னாரே? பயந்திருப்பார்… பாவம். நாளைக்கு கனகாம்பரமும் வாடாமல்லியும் கலந்த புடவையை உடுத்தணும்’ மனதுள் கேள்விகளை ஓட்டியபடி சாமி சத்தியமாய்த் தூங்கிவிட்டாள்.

இரண்டாம் நாள் - காலை

அரக்கபரக்க பாத்ரூமுக்குள் நுழைந்தாள். புடவையை மாற்றிக்கொண்டு, தலை வாரி, பொட்டைச் சரிசெய்து மை இட்டு, சாமியை ஒரு கிளான்ஸ் பார்த்து, கண்ணாடியில் தன்னை முழுவதுமாகப் பார்த்துவிட்டு, சமையலறைக்குப் போனாள். காபிப்பொடி வாசனை மூக்கைத் துளைத்தது. `ஆஹா... தூங்கி எழுந்ததும் யாராவது கையில காபியோடு நிக்க மாட்டாங்களான்னு எத்தனை நாள் ஆசை அது?’ ரஞ்சித், டைனிங் டேபிள் அருகில் நின்றபடி காபி டம்ளரை நீட்டினான்.

``நீங்க காபிலாம் போடலாமா?”

``ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கினேன்.”

``யாரிடம்?”

``மேல் ஆளரிடம்.”

``மேலயா... பேரு?”

``அர்த்தமற்ற கேள்விகளைத் தவிர். இந்தச் சந்திப்பு, என் ஆன்மாவுக்கான ஒரு முக்கிய நிகழ்வு.”

உட்கார்ந்து காபியை ருசித்தாள். புடவையைப் பார்த்திருப்பாரா... என்னை ரசிக்கிறாரா?

``ஷல் ஐ ஸ்டார்ட்?”

``சரி.”

``செளந்தரி, நான் மூணு மாதம் கோமாவில் இருந்தேன்.”

``84 நாள். கோமா இல்ல... மயக்கம். அது எதுக்கு இப்ப? குழந்தைங்க, அம்மா பற்றிப் பேசலாம். நானும்…”

``எனக்கு ஆறு மாதம் முன்னால் இறந்து வந்தவர்கள்கூட நிம்மதியாக இருக்கிறார்கள். நான் மட்டும், இரண்டு வருடமாகியும் அலைந்துகொண்டிருக்கிறேன்.”

``அலைச்சல் கீழயா?”

``மேலே. அங்கு சட்டமும் திட்டமும் வேறு. சாகும்போது ஆழ்மனதில் சந்தேகங்களே இருக்கக் கூடாதாம்.”

``சந்தேகமா?”

``மூன்று சந்தேகங்கள் இருந்திருக்கின்றன. சந்தேகம் மொத்தமாய்த் தீர, மூன்று கேள்விகளை நான் கேட்டாக வேண்டும்.”

`மூணு நாள். மூணு கேள்வி. கணக்கா இருக்காங்க மேல.’

``நினைவுகளை மறந்து நான் என் உலகம் என்று இருக்க வேண்டும். ஆன்மாவை விடாமல் நோகடிக்கும் கேள்விகள் அவை. கோ ஆப்பரேட் ப்ளீஸ்.”

``ரெடி...”

``முதல் கேள்வி. நான் மயக்கநிலைக்குப் போவதற்கு முன்னால் ஒரு வருடத்துக்கும்மேலாக நோய்வாய்பட்டிருந்தேனே, எனக்கு வந்த உடம்பு கடுமையானதென்று தெரிந்தும் நீ சரியான மருத்துவரை ஏன் கொண்டு வந்து நிறுத்தவில்லை?”
அவளுக்குள் இருக்கின்ற அதே கேள்வி. குற்ற உணர்வு இருக்கிறது. அதற்காக ரஞ்சித் அவளைக் கூண்டில் ஏற்றிவிட முடியுமா?

``அடுத்த கேள்வி. மயக்கமாய் இருந்த அந்த 84 நாள்களில் நான் உயிர் பிழைக்கவேண்டி, பிரத்யேக முயற்சி என்ன செய்தாய்?”

இதுவும் ஞானசெளந்தரியை அலைக்கழிக்கும் கேள்விகளில் ஒன்று. அதனால்தானே ஒரு குழந்தை ஹாஸ்டலிலும், இன்னொன்று பாட்டி வீட்டிலுமாகப் படிக்கின்றன. `நீ ஒரு வேலைக்குப் போ. அம்மா, அண்ணன், குழந்தைகளும் இங்கு வந்து உன்னைப் பார்த்துவிட்டுப் போகட்டும். நீ இங்கு இருந்து, தொடர்ந்து கவுன்சலிங் எடுத்துக்கொள்’ என்று சந்திரலேகா அப்படி யோசனை சொன்னது.

``கடைசிக் கேள்வி. நான் 84 நாள்கள் மயக்கமாக இருந்தபோது நீ என்னை ஏமாற்றினாயா? இன்று மட்டில் எனக்குத் தேவையெல்லாம் யார் என்பதில்லை. ஏன் நீ ஏமாற்றினாய் என்பது மட்டுமே.”

நாமாகவே மனதைக் குழப்பிக்கொள்வது வேறு. நிற்கவைத்து அதையே ரஞ்சித் கேட்டால், அது எதில் சேர்த்தி?

``ஏமாற்றினாயா? மூணாவது கேள்வி. ஏன் ஏமாற்றினாய்? நாலுங்க.”

``வாய் தவறிவிட்டது. ரிவோக் செய்தாலும், மூன்றுக்கே அனுமதி.”

``மேலே வாய் தவறலாமா? ஏன் ஏமாற்றினாய்னு வெச்சுக்குங்க. அதுல ரெண்டும் அடங்கும்.”

அவளே திருத்தமும் சொல்லி, ரஞ்சித்தும் திருத்திக் கேட்டாயிற்று.

``எனக்கு அவகாசம் வேணும்.”

``நாளை கடைசி நாள்.”

இன்னொரு கடைசி நாள்.

``எங்கள் மனது வேறு, உலகம் வேறு. உனக்குப் புரியாது. நாளை வருகிறேன்.”

`உனக்குப் புரியாது’ மட்டும் அச்சு அசலாக அப்படியே. அவள் தலை கனத்தது. டைனிங் டேபிளில் சாய்ந்தாள்.

இரண்டாம் நாள் - மாலை

தன் மனநல ஆலோசகரும், தெரபிஸ்ட்டுமான டாக்டர் சந்திரலேகாவுக்கு போன் செய்தாள். நடந்தவற்றை மார்பு படபடக்கச் சொல்லி முடித்தாள். 

``ரஞ்சித்தே கேள்விகளைக் கேட்கிறதால, கிடைச்சிருக்கிற வாய்ப்பை நீ பயன்படுத்திக்கணும்.”

``என் நினைவுகள் எல்லாத்தையும் நானே மறக்கணும்னு பார்க்கிறேன் டாக்டர். அப்பன்னு பார்த்து இவர், ஆத்மா கஷ்டம்னுட்டு…”

``நினைவுகளை மறக்கவோ, நீக்கவோ முடியாது. அதைப் புரிஞ்சுக்கிற விதமும், அதனால ஏற்பட்ட பாதிப்பும் மாற முடியும்... மறக்கவும் முடியும். ரஞ்சித் முகத்துக்கு நேரா சொல்றது, உன் மனசுக்கு ஒரு வழியா, முடிவா தெளிவைக் கொடுக்கலாம்.”

``முயற்சி பண்றேன். தேங்க் யூ.”

மூன்றாம் நாள் - காலை

4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. காபி போட்டுக் குடித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தாள். `எப்ப வருவார் இன்னிக்கு... கதவைத் தட்டி காலிங் பெல் அடிக்கும் வேலையெல்லாம் கிடையாதே!’

``இன்னொரு காபி?’’

எதிரே காபி கப்புடன் ரஞ்சித்.

பெரிய பரீட்சைக்குத் தயாராவதைப்போல் இருந்தது ஞானசெளந்தரிக்கு.

``செளந்தரி.”

``பட் பட்டுனு எங்கிட்ட பதில் இல்லை. மனசுல சொல்ல முடியாத…”

``நான் உன்னைப் புரிந்துகொள்ளவோ, மன்னிக்கவோ வரவில்லை.”

``மூணாம் மனுஷன் மாதிரி நடந்துக்கிறீங்க.”

``எதிர்காலம், அன்பு இரண்டுக்கும் என்னுலகில் இடமில்லை. அந்த மாதிரியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டால், நான் அலைபாய ஆரம்பிப்பேன். எங்களுக்கென சட்டதிட்டங்கள் இருக்கின்றன.”

``ஏன் டிராமாலலாம் பேசற மாதிரி தமிழ் பேசறீங்க?”

``என் வடிவமைப்பு அப்படி. பதில்களைச் சொல்லி என்னை அனுப்பிவிடு.”

``கேட்காம அன்னிக்குப் போனீங்க. இப்ப கேட்டுட்டுப் போகப்போறீங்க. பதில் இப்ப முடியாதுங்க.”

``இன்று இரவு திரும்பிவருகிறேன்.”

``ஆமாம்... ஏன் அப்படிக் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சு நேத்து பயமுறுத்தினீங்க?’’

``நேரடியாக வந்திருந்தால் நம்புவது மேலும் கடினமாக இருந்திருக்கும். நீ சுவாரஸ்யமாய் போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தாய்.”

``உங்களுக்கு வீடியோ கண்ணுக்குத் தெரியுமா?”

``தெரியாது. என்னால் உன்னைப் பார்க்க முடிகிறதே...”

பக்கென்றது. அந்த மூணாவது கேள்விக்கும் வீடியோவுக்கும் அவர் முடிச்சுப்போட்டு… உடனே கிளம்பினால் தேவலை. அடுத்த நொடி ஆளைக் காணவில்லை. அப்பாடா!

சந்திரலேகாவுக்கு போன் போட்டு தன்னால் பேச முடியாமல்போனதைப் பற்றிப் புலம்பினாள். ``இதுக்கு ஒரே வழி, என்னை ரஞ்சித்தா நினைச்சு நமக்குள்ள ஒரு ஒத்திகை பார்த்துக்கிறதுதான்” சந்திரலேகா ஆறுதல் சொன்னாள். ரஞ்சித்தின் கேள்விகளை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு அதற்கான பதில்களோடும் தயாராக வரச் சொன்னாள்.

வருடல் - சிறுகதை

மூன்றாம் நாள்-மதியம்

க்ளினிக் ரிசப்ஷனில் சந்திரலேகாவுடனான ஒத்திகையை ஒத்திகை பார்த்தபடியே கடைசி நாள் பதற்றத்தைக் கடத்திக்கொண்டிருந்தாள். திடுமென ``நீங்க போலாம் மேடம்” என்ற குரல் கேட்டுப் படபடத்து உள்ளே நுழைந்தாள்.

``ஞானசெளந்தரி, ரிலாக்ஸ்.”

``எனக்கு அவர் பண்றது பிடிக்கவேயில்லை.”

``போன ரஞ்சித்தைப் பற்றி, அவர் இப்படியில்ல... அப்படி யில்லைன்னெல்லாம் சொல்லிட்டிருக்க முடியுமா?”

``இறந்த அவருக்கும் நீங்க தெரபிஸ்ட்டா?”

``ம்ம்... ஆரம்பிக்கலாமா உன் கணவனாகியவனுடன் ஒரு கலந்துரையாடல்?’’

``கேளுங்க டாக்டர். இல்லல்ல ரஞ்சித்.”

சந்திரலேகா கேள்விகளை ஒருமுறை பார்த்துக்கொண்டு ரஞ்சித்தாக ஒத்திகையைத் தொடங்கினாள்.

``கேள்வி 1: எனக்கென மெனக்கெட, ஒரு டாக்டரை நீ தேடிப் பிடித்தி ருக்கலாமே?”

``உங்களை மொதல்ல பார்த்த நம்ம ஃபேமிலி டாக்டர், அப்பறம் பார்த்த டென்டிஸ்ட், ஈ.என்.டி, கார்டி யாலஜிஸ்ட், கடைசியா உங்களுக்குன்னு வாய்ச்ச நியூராலஜிஸ்ட் இவங்க எல்லாருமே அவங்க வேலையில ஏதோ ஒண்ண கவனிக்கவோ செய்யவோ சொல்லவோ தவறிட்டாங்க.”

``நீயா, இல்லை, மருத்துவர்களா தவறியது?”

``அவர் குறுக்குக் கேள்வி கேட்க மாட்டாரு. கேள்விக்குக் கணக்கிருக்கு.”  
 
``நமக்குள்ள எந்த ரூல்ஸும் வேண்டாம்.”

``நான் எப்படி அவங்க வேலைய பார்க்க முடியும்? நீங்க ஊருக்குப் போனீங்களே அதுக்கு அந்த நியூராலஜிஸ்ட் அனுமதிச்சிருக்கக் கூடாது. டென்டிஸ்ட் தவறான பல்லுக்கு ட்ரீட்மென்ட் குடுத்தாரு. இதெல்லாம் நீங்க போனதுக்கப்புறமா, நான் பல கூகுள் தேடல்களுக்கு அப்புறம் புரிஞ்சுக்கிட்டது.”

``சோ... தவறியது நீ. கேள்வி 2: நான் 84 நாள் மயக்கத்தில் இருந்தபோது என்னை உயிரோடு தக்கவைக்க என்ன செய்தாய்?”

``தெரியாத ஊர்... அங்க எமர்ஜென்சியா கொண்டுபோய் அட்மிட் பண்ணவேண்டிய நிலைமை. உங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு கையெழுத்து போடச் சொன்னாங்க.”

``போட்டிருப்பாய்.”

``கையெழுத்து போட்டதால உடனே மயக்கம் கொடுத்து, வென்டிலேட்டர் வெச்சு, உயிர் பொழைக்கவைக்கிற முயற்சிகளை மேற்கொண்டாங்க. அன்னிக்கே உங்க அண்ணனும் மாமாவும் வந்துட்டாங்க. அது முதல் நாள்.’’

``மை காட்! அதன் பிறகு 83 நாள்கள்தான் நான்...’’

``அங்கேருந்து ரெண்டே நாள்ள சென்னை ஹாஸ்பிட்டலுக்கு ஷிஃப்ட் பண்ணினோம்.’’ 

``உயிர் பிழைக்க நீ எடுத்த தனிப்பட்ட முயற்சிகள் பற்றி?”

``எல்லா ட்ரீட்மென்ட்டும் உங்க அண்ணா, மாமா, பல டாக்டர்கள் எல்லாரும் கலந்து ஆலோசிச்சுதாங்க தீர்மானம் பண்ணினோம்.”

``உயிருக்கெனத் தனி முயற்சி செய்யவில்லை.’’

“......................”

``யூ ஆர் டூயிங் வெல். இதேபோலப் பேசிடு.’’

``கடைசிக் கேள்வியையும் கேட்டுடுங்க.’’

``எஸ்... கேள்வி 3: என்னை ஏன் ஏமாற்றினாய்?”

``ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருந்தேன். அன்னிக்கு உங்க…”

``காரணம் தேவையில்லை.”

``சொல்றபடி சொல்றேனே... ஹாஸ்பிடல்லயே ரூம் போட்டு அங்கேயே இருந்தேன். நானும் அந்த 84 நாளும். அப்ப வேற யாரோ எப்பவோ எதுக்கோ அன்பா பேசினது என் நினைவுல வந்தது. அந்தக் கனிவான முகமும் மனசுல வந்து வந்து போனது ஆறுதலா இருந்தது. ஆனா, அதுக்கப்பறம் நான் அந்த முகத்தைச் சந்திக்கவேயில்ல.”

``அப்புறம் என்பதைப் பற்றி, என் உலகிலோ எனக்கோ கவலையில்லை. நீ ஏமாற்றினாய்.”

``என்ன நீங்க..?” 

``நான்தானே கடுமையா பேசறேன். ரஞ்சித் உன்னை விமர்சிக்கப்போறதில்லை.”

``ம்ம்ம்... சரி.”

``கிளம்பு. ஞாபகம்வெச்சுக்கோ. பயம் தேவையில்லை.”

மூன்றாம் நாள் - இரவு

மணி 10 ஆகியும் ஆளைக் காணவில்லை. `இது என் உலகம்’ சொல்லிப்பார்த்தாள். `என் உலகில் பயமில்லை. இங்கு என்னை யார் கேள்விகள் கேட்பது?’ ஹிஹி… சிரிப்பு வந்தது. கூடவே ஹூஹூ... வென ஒரு சத்தமும் கேட்க, படபடவென பயமும் வந்தது.

``தயாரா?”

`நாளேலேருந்து இந்த முகத்தையும் குரலையும் காணமாட்டோமே!’

``நேத்திக்கு, நான் யோசிச்ச பதிலெல்லாமே வேற.”

``அந்தப் பதில்கள் போதும். சொல்... சொல்...”

``ரஞ்சித் உங்கள் கேள்விகளுக்கான என் பதில், என் கேள்வியும் அதற்கான உங்கள் பதிலும்தான்.”

``கேள்விகள் ஏதும் நீ கேட்காதே செளந்தரி.”

``உங்களுக்காவது என் உலகத்துக்கு வர வழி தெரிஞ்சிருக்கு. உங்க உலகத்துல பர்மிஷன், ரிவோக், மனநிம்மதி எல்லாம் இருக்கு. நீங்க என்னை ஒரு கொலைகாரியா நினைச்சுக்கிட்டு, அதுக்கு என் பதில்களால உங்கள் மனசை சமாதானமும் ஆக்கிக்கிட்டீங்கன்னா நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்? என் மனச்சாந்தி, அது உங்களுக்கு முக்கியமில்லை; எனக்கு முக்கியம்.’’

``என் உயிருக்காக நீ எடுத்த முயற்சியைச் சொல்லலாம். என்னையே நினைத்துக்கொண்டிருந்தாய் என்ற பதிலாகவும் அது இருக்கலாமே.’’

``அப்படிப்பட்ட பதில்களே எங்கிட்ட இல்லைன்னா..? இருங்க. காபி எடுத்துட்டு வந்துடுறேன். தூக்கமே வராம ராத்திரியில காபி பழகிடுச்சு எனக்கு.”

கையில் காபியுடன் வந்து உட்கார்ந்தாள். உறிந்து, `ஹூ...’ என்று சத்தம் போட்டுக் குடித்தாள்.

``சீக்காளியா இருந்தது நான். இறந்ததும் நான்.”

``என்ன..?”

``அப்படி வெச்சுக்குவோம். ஒரு அசம்ஷன்.”

``கேள்.”

``கேள்வி 1: உங்களுக்குப் பதிலா எனக்கு கண் பார்வை ரெண்டு ரெண்டா தெரிய ஆரம்பிச்சு. என் கால் தசைகள் தளர்ந்து தேய்ந்துபோய் நடக்க முடியாமலும் ஆயிருந்தா, நீங்க எனக்காக உங்க வேலையை விட்டிருப்பீங்களா? என் கையைப் பிடிச்சுக்கிட்டு எனக்குத் துணையா தினமும் பாத்ரூம் வரை நடந்திருப்பீங்களா? நான் நிறைய அழுதிருப்பேன். என்னைப் பொறுத்திருப்பீங்களா? டாக்டர்கள்கிட்ட நான் பொறந்ததுலேருந்து இருக்கிற என் மெடிக்கல் ஹிஸ்டரியெல்லாம் சொல்லியிருப்பீங்களா?”

………

``பதில் சொல்லத் தேவையில்லை.”

``நல்ல வேளை.”

``கேள்வி 2: எனக்காக கூடுதல் நர்ஸுகள், கூடுதல் வேலையாள்கள், நண்பர்கள், உறவினர்கள், போட்டீங்க. இத்தனை இருந்தும் நான் பிழைக்கலையே ஏன்? குழந்தைகளை என்ன சொல்லிப் பக்குவப்படு த்தினீங்க? பதில் தேவையில்லை.”

``கேள்வி 3: ஒண்ணரை வருஷமும் டிவி, சினிமா பார்க்கும்போது அதில் வரும் பெண்களை, அவங்க மார்பகங்களைப் பார்க்காம தொட நினைக்காம இருந்திருப்பீங்களா? இல்ல வேறு சில பெண்களை கற்பனைக்கூட செய்யாம தொடாம இருந்தி ருப்பீங்களா? என்னைப் பார்த்தா நான் எலும்பும் தோலுமா உங்களுக்கு அம்மாவா வேற காட்சியளிச்சிருப்பேன். பதில் எனக்கு வேண்டாங்க ரஞ்சித்.”

``கேள்வி நாலு.”

``நான்கு இல்லை. நாற்பது.”

``என் உலகம். என் கேள்விகள் இங்கு என் இஷ்டம்.”

``கேள்வி 4: இந்தக் கேள்விக்கு, தீர்மானமான பதில் வேணும் எனக்கு. என்னுடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில நீங்க என்ன பேசியிருப்பீங்க?”

``என்ன பேச வேண்டும்?”

``நான் உங்களோட நினைவஞ்சலியின்போது ரெண்டு வருஷமும் பேசினதெல்லாம் சொல்லவா?”

``கற்பனை எனக்கு அப்பாற்பட்டது.”

``இங்கு என் சாவு கற்பனை… உங்க பேச்சு, அது எப்படி கற்பனையாகும்?”

……….

``என் நினைவஞ்சலி முதல் வருடம். கூட்டமா உட்காந்துட்டிருக்காங்க 100 பேர். பேச்சை ஆரம்பிங்க... மைக் வேணுமா?”

``நூறா… ம்ம்ம்... என்ன..?”

``உங்க பதில்ல உண்மையிருந்தா உங்க நிம்மதியும் அதுல இருக்கும். அவகாசம் வேணுமா?”

ரஞ்சித் எழுந்து நிற்கிறான்.

`பேசப்போறாரா?’

``எங்களுக்குக் கல்யாணம் ஆன புதிதில் அவளை அறிமுகப்படு த்துகிறேன், `இவள் என் மனைவி’ என்று. அந்த வார்த்தை, புதிதாக இருந்தது. அன்றிலிருந்து என் வாழ்க்கையில் நடந்த சில வெற்றிகள் பல தோல்விகள் எல்லாவற்றிலும் கூடவே இருந்திருக்கிறாள் என் மனைவி. என் குடும்பத்தில் பலரும் மாறி மாறி சிக்கல்களுக்கு ள்ளானபோதும் அவள் அருகில் இல்லாமல் இருந்ததேயில்லை. அவளின்றி இத்தனை சுமுகமாகக் கடந்திருக்க முடியுமா அந்த நாள்களை என்று நினைத்துப்பார்க்கவேண்டிய நாள் இன்று. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது அவள் சரியான நேரத்தில் என்னை ஆட்டோவில் ஏற்றவில்லையெனில், என்னால் உயிர் பிழைத்து அதன் பிறகும் வாழ்ந்திருந்து, இப்படி இன்று மனைவியின் நினைவஞ்சலியில் பேசியிருக்க முடியாது.”

``இதற்குமேல் கூட்டத்தில் பேச முடியாது.”

``கூட்டமா... மெய்ம்மறந்து ட்டீங்களா? பேசுங்க… நல்லாருக்கு.”

``என் கனவு ஒவ்வொன்றும் அவளுக்குத் தெரிந்திருந்தது. நான் எந்த அளவுக்கு செளந்தரியின் கனவுகளுக்கு ஊக்கமாக இருந்தேன் என யோசித்தால், எனக்கு வெட்கமாக இருக்கிறது. அவள் கனவுகள் பற்றி அவளிடம் ஒரு நாளும் உட்கார்ந்து நான் பேசியதில்லை. அவள், என் வாழ்க்கைக்குள் வந்தாள். நானும் செளகரியமாக இருந்ததென்று அவளை அங்கேயே இறுகப் பிடித்து வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கைக்குள், என் கனவுகளுக்குள், என் குடும்பத்துள் அவள். அவளுக்குள் நான் போகவேயில்லை. எனக்கு நேரமில்லை. நேரம் ஒதுக்கவில்லை.

நாங்கள் இருவரும் சேர்ந்து ஒருவகையில் என் வாழ்க்கையை மட்டும்தான் வாழ்ந்திருக்கிறோம். எனக்கு, மனதிடமான ஒருவர் என் அருகில் தேவைப்பட்டிருக்கிறது வாழ்நாள்பூராகவும். பார்க்கப்போனால், பயந்தாங்கொள்ளி என்றுதான் அவளை நான் கிண்டல் செய்துள்ளேன். இப்போது புரிகிறது என் மனைவியை நான் பாராட்டத் தவறிவிட்டேன் என்று. ஒருவேளை அவளுக்கு முன்பே நான் இறந்திருந்தால், திரும்ப வந்து `ஏன் என் உயிரைத் தவறவிட்டாய்?’ என்று உறுதியாய்க் கேட்டிருப்பேன். ஏனெனில், எல்லாமே அவள் பொறுப்பு என்று என் மனதுக்கும் உடம்புக்கும் உயிருக்கும் அப்படிப் பழக்கமாகிவிட்டன.

இறுதியாகச் சொல்ல விரும்புவது இது மட்டுமே. நான் இறந்துபோய் அவள் உயிரோடு இருந்திருந்தால்... அதுதான் சரியானது. ஏன்? அப்படித்தான் ஆகியிருக்க வேண்டும். நான் இறந்து அவள் உயிரோடு இருந்தால் மட்டுமே, நான் என் வாழ்க்கை என்பது ஒதுங்கி, ஓரம்போய் அவள் வாழ்க்கை ஆரம்பித்திருக்கும். அவள் கனவுகளை நோக்கி அவள் போக ஆரம்பிக்க முடியும்.”

``நீங்க பேசினதுல எதிர்காலம், அன்பு, இப்படி எல்லாமே பார்த்தேனே. அதிகப்பிரசங்கியா கேள்விகளைக் கேட்டு, உங்க உலக நிம்மதியைக் கெடுத்தேனா?”

``வேறு எதுவுமே இத்தனை தெளிவை எனக்குக் கொடுத்திருக்காது செளந்தரி. என் உலகத்தில் காலடி வைத்த அடுத்த நொடியே என் ஆன்மாவின் கசடுகளை சில சிக்னல்கள் காண்பித்துவிடும்.”

``கிளம்பிடுவீங்க. ஏதாவது லைட்டா பேசிட்டுப் போங்க.”

``12 அடிக்க சில நொடிகளே உள்ளன.”

``இதே கடிகாரம்தானா அங்கேயும்?”

…….

``ஒரே ஒரு அணைப்பு. அழுத்தமா...”

……..

``சரி…வேணாம். கல்யாணம் ஆன புதுசுல ஞாபகமிருக்கா? அதேபோல ஒரு தடவை என் கன்னத்தை லேசா உங்க புறங்கையால வருடிட்டுப் போங்க.”

……..

``நீங்களும் சந்திரலேகா மாதிரி குறுக்கவே பேசாம இருக்கீங்க.”

…….

``இப்படி இரு, இருக்காதேன்னு நாலு வார்த்தையாவது ஆறுதலா சொல்லிட்டுப் போங்க.”

``இனி உனக்கு அவர் ஆசை, அவர் முடிவு என்று ஏதும் கிடையாது. உன் வருங்காலம் உன்னுடையது மட்டுமே. நீயே தீர்மானம் செய்துகொள்ளலாம். இனி எல்லாம் உன் ஆசை, உன் எண்ணம், உன் முடிவே.”
மயான அமைதி.

வருடல் - சிறுகதை

நான்காம் நாள் - காலை

புன்னகைத்தாள் ஞானசெளந்தரி. மிக நிதானமாய் தன் கைகளையும் முகத்தையும் கழுத்தையும் தன் கைகளால் வருடி விட்டுக்கொண்டாள்.

அரை மணி கழித்து விஷயத்தைச் சொல்வதற்காக சந்திரலேகாவின் நம்பரைச் சுழற்றினாள்.

குழந்தைகளைத் தன்னுடன் அழைத்து வைத்துக்கொள்ள ஆசைப்பட்டதை உடனடி முடிவாக்கினாள். வேலையை விட்டுவிடும் யோசனையைத் தன் பாஸுக்கு ராஜினாமா கடிதத்தில் தீர்மானமாக எழுதிவைத்தாள். `செளந்தரிக்குக் கனவு உண்டு’ என்று இனிமை ததும்பச் சொல்லிப்பார்த்துக்கொண்டாள். இந்த எண்ணம் போதுமே. கனவு ஒன்றே போதுமே.

கணவனாகிப்போனவனுடன் நடந்த கலந்துரையாடலால் இன்று ஞானசெளந்தரியின் மனம் என்றுமில்லாமல் லேசாகி, புதிய நாளை நோக்கி ஓடத் தொடங்கியது.

ஞானசெளந்தரிக்கு அன்றிலிருந்து தூக்கமாத்திரைகள் தேவைப்படவில்லை.