Published:Updated:

சுட்டி குட்டிக் கதைகள்

விகடன் விமர்சனக்குழு

சுட்டி குட்டிக் கதைகள்

பிரீமியம் ஸ்டோரி
சுட்டி குட்டிக் கதைகள்

மீராவின் கிராஃப்ட்!

விடுமுறையில் கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு வந்திருந்தாள் ஏழாம் வகுப்பு மீரா. தினமும் விளையாடப் போகும்போது, மரத்தடியில் வேப்பங்கொட்டைகளைச் சேகரித்துவந்து மஞ்சள் பையில் போட்டுக்கொண்டிருந்தாள்.

சுட்டி குட்டிக் கதைகள்

‘‘எதுக்கு இதைச் சேகரிக்கறே?” என்று அம்மா கேட்டபோது, ‘‘அப்புறம் சொல்றேன்’’ என்றாள்.

‘‘இலை, குச்சிகளை வெச்சே விதவிதமா கிராஃப்ட் செய்வா. அந்த மாதிரிதான் எதுக்காவது இருக்கும்’’ என்றார் அப்பா. அதற்குப் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள் மீரா.

ஒரு வாரம் கழித்து சென்னைக்குப் புறப்பட்டபோது, ‘‘அப்பா, சென்னைக்குப் பக்கத்துல போனதும் நான் சொல்ற இடத்துல எல்லாம் காரை நிறுத்தணும். அங்கேயெல்லாம் பாதை ஓரமா இந்த வேப்பங்கொட்டைகளைப் போடப்போறேன். நூறு போட்டா பத்தாவது முளைக்குமில்லே. இதுல கிராஃப்ட் செஞ்சா வீட்டுக்கு மட்டும்தான் அழகு. விதைச்சா ஊருக்கே அழகு’’ என்றாள்.

அப்பாவும் அம்மாவும் மீராவை அணைத்துக்கொண்டனர்.

- அ.காருண்யா, தாரமங்கலம்.

புத்திசாலி காக்கா!

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அது ‘கா... கா...’ன்னு கத்திட்டே தண்ணியைத் தேடி ரொம்ப தூரம் போச்சாம். வழியில ஒரு வீட்டுக்கு வெளியே 20 லிட்டர் தண்ணீர் கேனைப் பார்த்துச்சாம். ஆனா, அதில் ரொம்ப உள்ளேதான் தண்ணீர் இருந்துச்சாம்.

சுட்டி குட்டிக் கதைகள்

‘இதை எப்படிடா குடிக்கிறது?’ன்னு யோசிச்ச காக்கா, அதை செல்போன்ல போட்டோ எடுத்து, ‘க்ரோ ஃப்ரெண்ட்ஸ்’ வாட்ஸஅப் குரூப்ல போட்டு, ஆலோசனை கேட்டுச்சாம். ‘கற்களைப் போடு’, ‘பக்கத்துல ஸ்ட்ரா கிடக்கா பாரு’, ‘அடியில ஓட்டையைப் போடு’ன்னு காக்காவுக்கு காக்கா ரிப்ளை பண்ணுச்சுங்களாம். அப்போ, அந்த குரூப்லேயே புத்திசாலின்னு பெயர் எடுத்த ஒரு காக்கா, ‘இன்னிக்கு கிடைச்சா போதும்னு நினைக்காம ஆற்றோரமா வாங்க. எல்லோரும் சேர்ந்து நம்ம அலகுகளால் தூர் வாருவோம். மத்தவங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும்’னு பதில் போட்டுச்சாம்.

மற்ற காக்கைகள் லைக் போட, இந்தக் காக்காவும் ஒரு ஹாட்டின் விட்டுட்டு ஆற்றங்கரை நோக்கிப் பறந்துச்சாம்.

- பா.ஷஹஸ்ரா, சேலம்

மல்ட்டி கலர்!

சந்தியா அவள் அப்பாவிடம் கேட்டாள். ‘‘அப்பா, சயின்டிஃபிக்கா இல்லாம ஜாலியா திங்க் பண்ணி சொல்லணும். கடவுள் சில பறவைகளைக் கறுப்பு வெள்ளையாகவும் சில பறவைகளை வண்ணமாகவும் ஏன் படைச்சார்?’’

சுட்டி குட்டிக் கதைகள்

வெவ்வேறு பதில்களைச் சொல்லி தோற்றுப்போன அப்பா, ‘‘சரி, நீயே சொல்லு’’ என்றார்.

‘‘நமக்கு இப்போ கலர் டிவி, ஸ்மார்ட்போன்னு டெக்னாலஜி வந்த மாதிரி, கடவுளுக்கு டெக்னாலஜி வந்ததும் கலர்ல படைச்சார். அதுக்கு முன்னாடி டெக்னாலஜி இல்லாம ப்ளாக் அண்டு வொயிட்ல படைச்சார்’’ என்று கலகலவெனச் சிரித்தாள் சந்தியா.

- மு.தாபினா, மேட்டுப்பாளையம்.

மண் உண்டியல்!

ஊருக்கு வந்திருந்த தாத்தா, தினமும் மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு பேரன் அகிலேஷுக்கும் பேத்தி அவந்திகாவுக்கும் கதைகள் சொல்வார். அன்று சேமிப்பு பற்றி ஒரு கதை சொன்னார். அதைக் கேட்டதும், ‘‘இனிமே நாங்களும் அப்பா, அம்மா கொடுக்கிற காசுல சேமிக்கிறோம்’’ என்றாள் அவந்திகா.

‘‘நாளைக்கே உண்டியல் வாங்கித் தரேன்’’ என்றார் தாத்தா.

சுட்டி குட்டிக் கதைகள்

மறுநாள் உண்டியலுடன் வந்த தாத்தாவைப் பார்த்தும், ‘‘என்ன தாத்தா இது? மண் உண்டியல். சூப்பர் மார்கெட்ல அழகழகா கார்ட்டூன் உண்டியல் இருக்கு தெரியுமா’’ என்றான் அகிலேஷ்.

 “அதெல்லாம் பார்க்க மட்டும்தான் அழகு. இந்த மண் உண்டியல் சுற்றுச்சூழலுக்கும் அழகு. உடைஞ்சாலும் மண்ணோடு மண்ணாகும்’’ என்றார்.

புரிந்துகொண்ட இருவரும் மண் உண்டியலை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டனர்.

- எஸ்.ஆர்.ரமணன், செம்பட்டி

  ஓவியங்கள்: ரமணன்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.

முகவரி: சுட்டி குட்டிக் கதைகள்,சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு