தொடர்கள்
Published:Updated:

ஜெஸ்ஸி : சிறுகதை

ஜெஸ்ஸி : சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெஸ்ஸி : சிறுகதை

06.06.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சிறுகதை...

னிக்கிழமை இரவு 11 மணி. அந்த மலைப்பிரதேச நகர சர்ச்சின் அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. சர்ச்சுக்கு உட்புறமும் வெளிப்புறமும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு இருளாக இருந்தது.

ஜெஸ்ஸி : சிறுகதை
ஜெஸ்ஸி : சிறுகதை

ஈஸ்டரை முன்னிட்டு, பாஸ்கா திருவிழிப்பு சடங்குக்காக நாங்கள் சர்ச் முன் கூடியிருந்தோம். பிரதான வாயிலின் கதவு அருகே நாங்கள் நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தோம். குளிர், எங்கள் உடலில் ஊடுருவி உடம்பைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. வாயிலில் ஃபாதர் பெரிய பாஸ்கா மெழுகுவத்தியைப் பற்றவைக்க, சர்ச் கதவு திறக்கப்பட்டது. ஃபாதர் சர்ச்சினுள் நுழைய, நாங்கள் நெருக்கியடித்துக்கொண்டு ஃபாதரின் பின்னால் சென்றோம்.

 என் அம்மாவும் என் மனைவி வியான்னியும் என் கைகளை இறுகப் பிடித்தபடி உள்ளே நுழைந்தனர். ஃபாதர் சர்ச்சின் நடுவில் நின்றுகொண்டு, ``கிறிஸ்துவின் ஒளி இதோ...’’ என்று பாடல்போல் பாடினார். நாங்கள் பதிலுக்கு ராகமாக, ``இறைவனுக்கு நன்றி” என்று பாடினோம். ஃபாதரின் கையில் எரிந்த பாஸ்கா மெழுகுவத்தியிலிருந்து பலரும் தங்கள் மெழுகுவத்தியைப் பற்றவைத்துக்கொண்டனர். பிறகு, அவர்களிடமிருந்து மக்கள் தங்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொண்டார்கள். ஒவ்வொருவராக மெழுகுவத்தியைப் பற்றவைக்க, சர்ச்சுக்குள் இருளில் மெழுகுவத்தி வெளிச்சம் சட்சட்டெனத் தோன்றும் காட்சியைக் காண அற்புதமாக இருந்தது. நானும் வியான்னியும் கையில் எரியும் மெழுகுவத்திகளுடன் ஒரு வரிசையில் நின்றுகொண்டோம்.

வியான்னிக்கு அந்தப் பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல், ``மேடம், கொஞ்சம் லைட் தர்றீங்களா?” என்று கேட்க, இருளில் குரல் வந்த திசையைப் பார்த்தேன். மெழுகுவத்தி வெளிச்சத்தில் அந்தப் பெண் முகம் மங்கலாகத் தெரிய, பரிச்சயமான முகம்போல் இருந்தது. வியான்னியின் மெழுகுவத்தியில் அவள் தனது மெழுகுவத்தியை ஏற்றியவுடன் எழும்பிய வெளிச்சத்தில் சட்டெனத் தெளிவாகத் தெரிந்த முகத்தைப் பார்த்து நான் அதிர்ந்தேன். ``கர்த்தரே..!” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டேன். அவள் ஜெஸ்ஸி. அந்தக் குளிரிலும் எனக்கு வியர்த்தது. இனி வாழ்நாளில் எப்போதும் பார்க்க மாட்டோம் என நினைத்துக்கொண்டிருந்த ஜெஸ்ஸியை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். அவள் என்னை கவனிக்கவில்லை.

அப்போது பீடத்துக்குச் சென்ற ஃபாதர்,

``வானகத் தூதர் அணி மகிழ்வதாக…

இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக…’’

என்று பாட ஆரம்பிக்க, மக்களின் சலசலப்புச் சத்தம் ஓய்ந்தது.

நான் சாய்ந்து ஜெஸ்ஸியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக் குளிரில், காற்றில் மிதந்து வந்த ஜெரோனியா மலர்களின் அற்புதமான நறுமணத்துக்கு நடுவே, மெழுகுவத்திச் சுடரின் ஒளி முகத்தில் பிரகாசிக்க, பளிச்செனத் தோற்றமளித்த ஜெஸ்ஸியைப் பார்க்கப் பார்க்க…. எனக்குக் கால்கள் நடுங்கின. காலம் அவள் அழகில் சேதாரங்களை விளைவிக்க முயன்று, பரிதாபமாகத் தோற்றுப்போயிருந்தது. ஜெஸ்ஸிக்கு இப்போது 40 வயது இருக்கும். ஆனால், இன்னும் முகத்தில் முதுமையின் சாயலின்றி, இளமையின் கடைசிப் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தாள். எப்போதும் முகத்தருகில் நூறு நட்சத்திரங்கள் ஜொலிப்பது போன்ற பிரகாசத்துடன் இருக்கும் ஜெஸ்ஸியின் முகத்தில், அந்தப் பிரகாசம் இன்னும் இருந்தது.

அவள் என்னைப் பார்த்தால் அடையாளம் தெரியுமா? பரிசுத்தமான பனிமலர்கள், தங்களை ரசித்தவர்களையெல்லாம் நினைவில் வைத்திருக்குமா என்ன?

ஃபாதர், ``ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்று கூறியபோது, ஜெஸ்ஸி தன் பின்தலையிலிருந்து நழுவிய சந்தன நிற ஸ்கார்ஃபை அழகாக நடுத்தலைக்கு ஏற்றிக்கொண்டாள். மெழுகுவத்திச் சுடர் காற்றில் ஆடுவதற்குத் தகுந்தாற்போல், ஜெஸ்ஸியின் முகத்தில் மெழுகுவத்தியின் வெளிச்சம் கண்கள், கன்னம், நெற்றி, உதடு என்று வெவ்வேறு இடங்களில் மாறி மாறி கூடுதல் பிரகாசத்தைத் தந்துகொண்டிருந்தது.

ஃபாதர் ``இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்” என்று கூற, என் மனத்தின் நடுக்கம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. மீண்டும் மீண்டும் ஜெஸ்ஸியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. வியான்னி பார்த்துவிட்டால் வம்பு. கணவர்கள், மனைவிகளுக்குப் பின்னால் நான்கடி தொலைவில் வேறு ஒரு பெண்ணை ஒரே ஒரு விநாடி பார்த்தால்கூட, சட்டெனக் கண்டுபிடித்துவிடும் அபூர்வ ஆற்றல் படைத்தவர்கள் மனைவிகள். மேலும், உள்ளுக்குள் சிறியதாக ஒரு பதற்றமும் இருந்தது. எனவே, அங்கிருந்து செல்ல விரும்பி வியான்னியிடம், ``வியான்னி, நான் இப்ப வந்துடுறேன்” என்றேன்.

``வந்து அரை மணி நேரம்கூட ஆகல... அதுக்குள்ள சிகரெட்டா?” என்றாள் கோபமாக.

``குளிருது, ஒரு தம் போட்டா நல்லாருக்கும்.”

``ஞானஸ்நான வார்த்தைப்பாடெல்லாம் இருக்கு. அதுக்குள்ள கிளம்புறீங்க” என்றாள் வியான்னி சீற்றமாக.

``பரவாயில்லை, இப்ப வந்துடுறேன்” என்ற நான் மெழுகுவத்தியை வியான்னியிடம் கொடுத்துவிட்டு, வேகமாக நகர்ந்து சர்ச் வாசலை நோக்கி நடந்தேன்.

சர்ச்சிலிருந்து கீழே இறங்கிய படிக்கட்டுகள், சற்று முன்பு பெய்த மழையில் நனைந்து இருந்தன. கொத்துக் கொத்தாக பிகோனியாப் பூக்கள் படிக்கட்டுகளில் மழையில் நனைந்து கிடந்தன. இப்போது நன்கு குளிரடிக்க, நான் அவிழ்த்துவிட்டிருந்த ஜெர்கினின் ஜிப்பை மேலே இழுத்துவிட்டுக்கொண்டேன். பாக்கெட்டிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தபடி வேகமாகப் படிகளில் இறங்கினேன். தாமதமாக வந்த ஒரு பெரியவர் மட்டும் மெதுவாகப் படிக்கட்டு ஏறி வந்துகொண்டிருந்தார்.

சாலையில் யாரும் இல்லை. நான் ஒரு சாம்பிராணி மரத்தடியில் நின்றுகொண்டு சிகரெட்டைப் பற்றவைத்து, குப்குப்பென நான்கு முறை புகையை இழுத்து விட்ட பிறகுதான் மனம் சற்று அமைதியானது. மரம் காற்றில் அசைய, கிளைகளிலிருந்து மழைநீர் என்மீது சொட்டியது. அங்கிருந்து சர்ச்சுக்குள் மின்விளக்குகள் போடப்படுவது தெரிந்தது. அப்போது மெதுவாகக் காற்றடிக்க, மீண்டும் காற்றில் ஜெரோனியா மலர்களின் மணம். நான் ஆழ்ந்து அந்த வாசனையை உள்ளே இழுத்தபோது, ஜெஸ்ஸியின் முகம் மனதுக்குள் ஒளிர்ந்தது. ஜெஸ்ஸியை முதன்முதலாக, இதேபோல் ஜெரோனியா மலர்களின் நறுமணத்துக்கு நடுவேதான் பார்த்தேன்.

அது... நக்மாவும் மீனாவும் ரோஜாவும் சினிமாவில் தங்கள் செல்வாக்கை இழக்க ஆரம்பித்திருந்த, சச்சின் டெண்டுல்கர் தனது கரியரில் உச்சத்தில் இருந்த 1990-களின் பிற்பகுதி. நான் எம்.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடித்துவிட்டு வேலை கிடைக்காமல், மொத்தச் சமூகத்தின் மீதும் விரோதமாக இருந்த நாள்கள் அவை. கம்யூனிஸ்ட் புத்தகங்கள் எல்லாம் படித்துவிட்டு அனைவரையும், ``நீங்கள்லாம் பூர்ஷ்வா” என்று சொல்லிக்கொண்டிருந்த, `அக்னி வளையம், ரத்த சாட்சியம், குருதிப்புனல்’ என்பது போன்ற வயலன்ட்டான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த, கவிதை எழுதும் மகன்கள் உருப்படாமல் போய்விடுவார்கள் என்று அப்பாக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம்.

என்னை `தெண்டச்சோறு’ என்று எப்போதும் கரித்துக்கொண்டிருக்கும் அப்பாவிடமிருந்து எனக்கு விடுதலை தேவைப்பட்டது. எனவே, ஏதேனும் ஒரு நல்ல வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்று வங்கிப்பணி, அரசுப்பணித் தேர்வுகளுக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். கூடுதல் தகுதியாக இருக்கட்டும் என டைப்ரைட்டிங் கிளாஸ் சென்றுகொண்டிருந்தபோதுதான் முதன்முதலாக ஜெஸ்ஸியைப் பார்த்தேன்.

எங்கள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இருந்த கிளாஸோ ஸ்கொயர் சாலையின் முனையில் இருந்த சிறிய குன்றின் மீது ஒரு சர்ச் இருந்தது. டைப்ரைட்டிங் கிளாஸ் செல்வதற்கு முன்பு அந்த சர்ச்சுக்கு எதிரே இருந்த புல்மேட்டில் நின்று நானும் எபியும் தம்மடித்துக் கொண்டிருந்தபோதுதான் அவளைக் கவனித்தேன்.

எதிரே தெரிந்த சர்ச் படிக்கட்டுகளில் அவள் மட்டும் தனியாக இறங்கி வந்தாள். மெலிதாகப் பெய்துகொண்டிருந்த மழைக்கு நடுவே, தலைக்கு மேல் குடையுடன் வந்துகொண்டிருந்தாள். அழகிய பெண்கள் தொலைவிலிருந்தே ஏதோ ஒருவிதத்தில் தங்கள் உடையில், நடையில், உடல்மொழியில் தாங்கள் அழகிகள் என்பதை உணர்த்திவிடுகிறார்கள். நீலநிறச்சேலை அணிந்திருந்த அவள், தலையில் வெள்ளை நிற ஸ்கார்ஃப் கட்டியிருந்தாள். ஸ்கார்ஃப் மறைத்ததுபோக, பாதிக்கன்னங்கள், அரை நெற்றி, மூக்கு, உதடுகள் மட்டும் தெரிந்ததற்கே அசந்துபோனேன். அரைநிலாவும் அழகுதானே!
அவள் சாலையிலிருந்து இறங்கி, டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இருக்கும் திசையை நோக்கித்தான் நடந்து கொண்டிருந்தாள். குடை பிடித்தபடி தீவிரமான யோசனையுடன் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த எபியின் தோளைத் தொட்டு, ``டேய்... அங்க பாருடா” என்று அவளைக் காண்பித்தேன். ஒரு விக்கி மரத்துக்குப் பின்னால் மறைவாக நின்றபடி அவளைக் கவனித்தோம். அப்போது அவள் சாலையோரம் இருந்த ஒரு குட்டை மரத்தில் பூத்திருந்த மஞ்சள் பூக்களைப் பார்த்ததும் நின்றாள். இடது கையில் குடையைப் பிடித்தபடியே குதித்து ஒரு பூவைப் பறிக்க முயன்றாள். மழையின் வேகம் அதிகரித்தது. அவள் ஒவ்வொரு முறை குதித்தபோதும், மழையில் நனைந்த அவளது ஸ்கார்ஃப் தலையிலிருந்து மெல்லச் சரிய ஆரம்பித்தது. நான் அவள் தலையிலிருந்து ஸ்கார்ஃப் மொத்தமாகச் சரியப்போகும் தங்க விநாடிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன்.

அவள் நான்காவது முறை எக்கி அந்தப் பூவைப் பறித்தபோது, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பொன்தருணத்தில் அவள் ஸ்கார்ஃப் சரிந்து அவள் கழுத்தில் வந்து நின்றது. முழு முகத்தையும் பார்த்தவுடன் பிரமிப்பின் உச்சிக்குச் சென்றேன். பௌர்ணமி நிலாமீது யாரோ தண்ணீர் தெளித்தாற்போல் மழைத்துளிகள், பிரகாசமான அவள் முகத்தில் ஒட்டியிருந்தன. அப்போது காற்றில் மிதந்து வந்த ஜெரோனியாப் பூக்களின் மணம் அவளிடமிருந்தே வருவதுபோல் உணர்ந்தேன்.

பூப்பறித்த மகிழ்ச்சியில் அவள் சந்தோஷமாகச் சிரித்தபோதுதான் எனக்குத் தெரிந்தது, இதுவரையிலும் இந்த உலகில் நான் சிரிப்பு என நினைத்துக்கொண்டிருந்ததெல்லாம் சிரிப்பல்ல என்பது. தங்கத்தகட்டில் வெயில் அடித்தாற்போல், அவள் முகம் இளம் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது. நிறத்தைவிட அந்த முகத்தில் இருந்த உயிர்ப்புதான் என்னை அசரடித்தது. பொதுவாக ஓவர் கலராக இருக்கும் பெண்களின் முகம் உயிர்ப்பின்றி, ஷோகேஸ் பொம்மைபோல் இருக்கும். ஆனால் அவள் கண்களில், சிரிப்பில், முகபாவங்களில் பரிபூர்ணமான ஓர் உயிர்ப்பு இருந்தது. அவள் இதுநாள் வரையிலும் என் மனதுக்குள் எந்தப் பெண்ணும் ஏற்படுத்தாத சலனங்களை முதன்முதலாக ஏற்படுத்தினாள்.

அவள் நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டே எபியிடம், ``என்னா கலர்ல்ல? அவ பிறந்தப்ப டாக்டர், நர்ஸுக்கெல்லாம் கண்ணு கூசியிருக்கும்டா!” என்ற என்னை, எபி ஆச்சர்யத்துடன் பார்த்தான். தொடர்ந்து நான், ``இந்த உலகத்துல பிறந்ததுலயிருந்து எந்தத் துன்பத்தையும் அனுபவிக்காத மாதிரி அவ முகத்துல சந்தோஷமான ஒரு உயிர்ப்பு இருக்குடா” என்ற என்னை, எபி உற்றுப்பார்த்தான்.

``என்னடா பாக்குற?”

``இவ்ளோ பேசுவியா நீ?” என்றான். பொதுவாக நான் அதிகம் பேசக்கூடிய ஆள் அல்ல.

``நான் பேசலடா, அவளோட அழகு பேசவைக்குது. யார்றா அது?”

``தெரியலையே, நம்ம சர்ச் இல்லன்னு நினைக்கிறேன்.”

``நம்ம சர்ச்ன்னா சன்டே மாஸ்ல பாத்திருப்போமே, எந்த ஏரியா?” என்றபோதுதான் அவள் எங்கள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை நோக்கிச் செல்வதைக் கவனித்தேன். ``டேய், நம்ப இன்ஸ்டிட்யூட்தான்டா போறா, வாடா...” என்ற நான், வேகமாக சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்தேன்.

எபி, ``டேய், 75 காசுடா!” என்று கையில் பாதி இருந்த சிகரெட்டைக் காட்டினான். ``சீ வா…” என்று நான் எபியின் கையைப் பிடித்து இழுக்க, அவன் முணுமுணுத்துக்கொண்டே சிகரெட்டைக் கீழே போட்டான். சரிவில் வேகமாக இறங்கினோம்.
நாங்கள் இன்ஸ்டிட்யூட் மாடிக்கு வேகமாகப் படியேறிச் சென்றபோது, இருபது டைப்ரைட்டிங் மெஷின்களும் தடதடவென சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தன. அவள் இன்ஸ்ட்ரக்டர் டேபிள் எதிரே உட்கார்ந்திருந்தாள். இப்போது அருகில் முகத்தை இன்னும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. 20 வயது இருக்கலாம். நீலநிற ஜாக்கெட்டுக்கு மேல், வெற்று முதுகில் அழகாகச் சிதறி இருந்த மழைத்துளிகள், வாழ்நாள் முழுவதும் உலராமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

நான் முதல் வரிசையில் இருந்த எனது நான்காம் நம்பர் மெஷினில் அமர்ந்தபோது, இன்ஸ்ட்ரக்டர் அவளிடம் ``என்ன டைம் வர்றீங்க?” என்றார்.

அவள், ``ஈவ்னிங் ஃபை டு சிக்ஸ்” என்றபோது எனக்கு சந்தோஷமாக இருந்தது. நாங்கள் சிக்ஸ் டு செவன். முன்கூட்டியே வந்து அவளைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

கையில் இருந்த நோட்புக்கைப் பிரித்துப் பார்த்த இன்ஸ்ட்ரக்டர், ``ஓகே வாங்க. உங்க பேரு?” என்றார்.

``ஜெஸ்ஸி.”

``ம்... நாளைக்கு வர்றப்ப 30 ரூபா ஃபீஸ் எடுத்துட்டு வந்துடுங்க” என்றதற்கு அவள் சிரித்தபடி தலையை ஆட்டினாள். பிறகு ஒருவரையும் ஏறிட்டுப் பார்க்காமல், தலையைக் குனிந்துகொண்டு வெளியே நடந்தாள். நான் அவள் பெயரை மெதுவாக உச்சரித்துப்பார்த்தேன் ``ஜெஸ்ஸி…’’ பின்னால் அமர்ந்திருந்த எபியைப் பார்த்து, ``உலகத்துலயே ரொம்பவும் அழகான மூணு எழுத்து என்ன தெரியுமா?” என்றேன்.

``என்ன?” என்றான் அவன் கண்களில் குழப்பத்துடன்.

``ஜெ….ஸ்….ஸி…..” என்று கூற, அவன் ``ஆண்டவா...” என்று கையெடுத்துக் கும்பிட, சிரித்தேன்.

அன்று கிளாஸ் முடிந்து இரானியன் டீக்கடையில் நானும் எபியும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, 9 மணிக்குமேல் ஆகியிருந்தது. பக்கத்து வீட்டு ரேடியோவில் `மாலையில் யாரோ மனதோடு பேச...’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

நான் கேட்டைச் சாத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தபோது, என் போஸ்ட்மாஸ்டர் அப்பா ஹாலில் அமர்ந்து பைபிள் படித்துக்கொண்டிருந்தார். நான் மெதுவாக அவரைத் தாண்டிச் செல்ல, ``சார் இவ்ளோ நேரம் எங்க போயிட்டு வர்றீங்க?” என்றார்.

``சும்மா, எபியோடு பேசிட்டு வந்தேன்.”

``ம்... அம்மாகிட்ட 50 ரூபாய் கேட்டியாமே, எதுக்கு?”

``ஆர்.ஆர்.பி எக்ஸாமுக்கு டிராஃப்ட் எடுக்க.”

``போன வாரம் ஏதோ எக்ஸாமுக்கு வாங்கினியே அது..?”

``ஸ்டேட் பாங்க் புரொபிஷனரி ஆபீஸர் எக்ஸாம்” என்றவுடன் சட்டெனக் கோபமான அப்பா, ``கிறிஸ்தவனா பொறந்துட்டு பொய் சொல்லாதடா. அந்த எக்ஸாம் இந்த எக்ஸாம்னு காசு வாங்கி சிகரெட் குடிச்சுக்கிட்டு, புத்தகம் வாங்கிக்கிட்டுத் திரியுற” என்றதற்கு, நான் பதில் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டேன். சத்தம் கேட்டு, உள்ளிருந்து அம்மாவும் என் தங்கை மெட்டில்டாவும் ஹாலுக்கு வந்தனர்.

``இந்த மாசத்துலயிருந்து நீ வாங்குற காசுக்கெல்லாம் கணக்கு எழுதி வைக்கச் சொன்னனே, எழுதி வெச்சிருக்கியா?” என்றவுடன் நான் நிமிர்ந்து அடிபட்டாற்போல் அப்பாவைப் பார்த்தேன். போன மாதம் ஒரு சண்டையின்போது அப்பா என்னிடம், அவரிடம் நான் வாங்கும் பணத்துக்குக் கணக்கு எழுதச் சொல்லியிருந்தார். ஏதோ கோபத்தில் சொல்கிறார் என எழுதவில்லை. `எழுதவில்லை’ என்று சொன்னால் திட்டுவார் என்று, ``ம்... எழுதியிருக்கேன்” என்றேன்.

``எங்க... எடுத்துட்டு வந்து காமி” என்றவுடன் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்ன செய்வது எனப் புரியாமல் விழித்தேன். அப்பா, ``ஏன் நாயே முழிக்கிற? போய் கணக்கை எடுத்துட்டு வா” என்றவுடன் என்ன செய்வது எனப் புரியாமல் மாடி அறைக்கு ஏறினேன். அவசர அவசரமாக டைரியை எடுத்து ஒன்றாம் தேதியிலிருந்து, நானே உத்தேசமாக ஒரு பொய்க் கணக்கு எழுத ஆரம்பித்தேன்.
``எவ்ளோ நேரம் நாயே...” என்று அப்பா படிக்கட்டுக்குக் கீழிருந்து குரல்கொடுத்தார். நான் அடுத்து என்ன எழுதுவது எனப் புரியாமல் டைரியைப் பார்த்தபடி, ``டைரியைத் தேடிட்டிருக்கேன்” என்றபோது குரல் அடைத்து, கண்கள் கலங்கின. கீழே அம்மாவின் குரல் கேட்டது.

``என்னங்க இது, பெத்த பையனுக்குச் செலவு பண்றதுக்குப் போயி கணக்கு எழுதிக் கேட்டுக்கிட்டு... டேய், அதெல்லாம் வேண்டாம்” என்று அம்மாவின் குரல் கேட்க, மனம் நிம்மதியானது. ``நீங்க உள்ளே வாங்க” என்று அம்மா, அப்பாவை அழைத்துக்கொண்டு செல்ல, என்னை அறியாமல் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

மறுநாள் முழுவதும் சோகமாக இருந்த நான், டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் கிளம்பும் நேரம் வந்தவுடன் உற்சாகமானேன். ஜெஸ்ஸியின் முகம் மனதில் தோன்றி மறைய, வேக வேகமாகக் கிளம்பினேன்.

அன்றிலிருந்து எபி எல்லாம் வருதற்கு முன்பே, 5.45 மணிக்கே இன்ஸ்டிட்யூட் சென்றுவிடுவேன். வெளியே வராண்டாவில் ஜன்னல் ஓரம் மறைந்தாற்போல் அமர்ந்துகொண்டு ஜெஸ்ஸியைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவள் ஒரு தவம்போல் எங்கும் கவனத்தைச் சிதறவிடாது, மிகவும் சீரியஸாக கைடு புக்கைப் பார்த்து டைப் அடித்துக்கொண்டிருப்பாள். ஏனோ தெரியவில்லை, ஜெஸ்ஸி அவள் வயதுப் பெண்கள்போல் இல்லாமல் பெரும்பாலும் சேலைதான் அணிந்து வந்தாள். எங்கள் ஊர்ப் பெண்கள், டேலியாப் பூ பெரிதாக இருக்கும் என அதைத் தலையில் வைத்துக்கொள்ள ஆர்வம்காட்ட மாட்டார்கள். ஆனால் ஜெஸ்ஸி, தினமும் தலையில் சிறிய மஞ்சள் டேலியாப் பூவைச் சூடியபடிதான் வருவாள்.

டைப்படிப்பது, மிகவும் இயந்திரத்தனமான காரியம். அந்த இயந்திரத்தனத்துக்குள்ளும் ஓர் அழகைக் கொண்டுவர ஜெஸ்ஸியால் மட்டுமே முடியும். ஏதேனும் தவறாக டைப்படித்துவிட்டால், டக்கென நாக்கைக் கடித்தபடி சலித்துக்கொள்ளும்போது ஒருவித அழகாக இருப்பாள். இன்ஸ்டிட்யூட்டுக்கு வெளியே மழை பெய்துகொண்டிருந்தால், அவ்வப்போது விழிகளை உயர்த்தி ஜன்னல் வழியாக மழையை ஒரு பார்வை பார்த்துவிட்டு டைப்படிப்பது வேறு ஓர் அழகு. கட்டைவிரலைக் கடித்தபடி கைடு புக்கைப் பார்த்துவிட்டு, சற்றே விழிகளை மேல்நோக்கித் தூக்கிச் சிந்திக்கும்போது ஜெஸ்ஸி வேறுவிதமாகத் தோற்றமளிப்பாள்.

ஜெஸ்ஸி, இன்ஸ்டிட்யூட்டில் யாருடனும் பேசுவதில்லை. ஏதேனும் சந்தேகமிருந்தால் இன்ஸ்ட்ரக்டரிடம் இரண்டொரு வார்த்தை பேசுவாள். அவ்வளவுதான். ஆண்களை எதிரில் கண்ட அடுத்த கணமே, `சீ... பொறுக்கிப்பசங்களா’ என்பதுபோல் சட்டென்று தலையைக் குனிந்துகொள்வாள். பெண்களிடம்கூட அதிகம் பேச மாட்டாள். அவள் அடித்து முடித்து எழுந்தவுடன், நான் உள்ளே சென்று அந்த மெஷினில் அமர்ந்துகொள்வேன். ஒருமுறைகூட ஜெஸ்ஸி திரும்பி, `யார் இவன்... தனது மெஷினில் உட்காருகிறான்’ எனப் பார்த்ததேயில்லை.

ஒரு நாள் நான் ஜன்னல் வழியாக ஜெஸ்ஸியைத் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருக்க, எபி ஓங்கி என் தோளில் தட்டியபடி வந்து அமர்ந்தான்.

``என்னடா அப்படிப் பார்க்கிற? அவளைப் பார்க்கிறப்ப உன் கண்ணுல அப்படி ஒரு வெளிச்சம். அவ உன்னைப் பார்க்கிறாளா?”

``ம்க்கும். அவ என்னைக்கி, யாரைடா பார்த்திருக்கா? இப்ப நாம எங்கேயாச்சும் அவள ரோட்டுல பார்த்து `ஹாய்’ சொன்னாகூட நம்மள அடையாளம் தெரியுமோ என்னமோ!” என்றபடி ஜெஸ்ஸியைப் பார்த்த நான், ``எனக்கு ஒரு ஆசைடா” என்றேன்.

``என்ன?”

``இந்த உலகம் முழுக்க அழிஞ்சுபோயி, நானும் அவளும் மட்டும் இந்த உலகத்துல தனியா இருந்தா எப்படி இருக்கும்?” என்றவுடன் அதிர்ந்துபோன எபி, ``நானும் அழிஞ்சுடணுமா?” என்றான். நான் புன்னகையுடன் தலையை ஆட்டினேன்.

``தனியா ரெண்டு பேரும் என்னடா பண்ணுவீங்க?”

``ரெண்டு பேரும் இந்த மலை முழுக்க, மழையில நனைஞ்சுகிட்டு, கையைக் கோத்து நடந்துகிட்டே இருப்போம்.”

``நீங்க சும்மா நடந்து போறதுக்கு, நாங்க ஏன்டா அழியணும்? நாங்க பாட்டுக்கும் ஒரு ஓரமா வாழ்ந்துட்டுப்போறோமேடா” என்ற எபியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எனவே, பெருந்தன்மையுடன், ``சரி, நீ மட்டும் இருந்துட்டுப்போ” என்றேன். எபி சிரித்தபடி என்னை எட்டி உதைத்தான்.

நாள்கள் ஓடின. தினம்தோறும் பார்க்கப் பார்க்க, ஜெஸ்ஸியின் அழகு கூடிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றியது. எவ்வளவோ அழகான பெண்கள்கூட தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கணத்தில், கொட்டாவி விடும்போதோ, அழும்போதோ, வெயிலில் வியர்த்து விறுவிறுத்து நடக்கும்போதோ, தூங்கி எழுந்த நிமிடத்திலோ அழகின்றிக் காணப்படுவர். ஆனால், நான் ஜெஸ்ஸியை ஒரு தருணத்தில்கூட அழகின்றிப் பார்த்ததில்லை. நிமிடத்துக்கு ஒரு முறை, தனது கைக்குட்டையில் வைத்திருக்கும் அழகிலிருந்து கொஞ்சம் அள்ளி முகத்தில் பூசிக்கொள்வதுபோல், ஜெஸ்ஸி எல்லா நிமிடங்களிலும் அழகாகவே இருந்தாள்.

பவர்ஹவுஸ் குவார்ட்டர்ஸில் இருக்கும் பணியாளர்களுக்காக, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அன்று கிளப்ஹவுஸ் கலையரங்கில் திரை கட்டி சினிமா போடுவார்கள். குவார்ட்டர்ஸில் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால், மற்றவர்களும் பார்க்கலாம். ஒருமுறை குவார்ட்டர்ஸில் இருக்கும் என் காலேஜ் நண்பன் காதர், ``இன்னைக்கி கிளப்ஹவுஸ்ல `இதயத்தை திருடாதே’ படம் போடுறாங்கடா” என்று எங்களை அழைத்துச் சென்றான்.

அந்த அரங்கில் ஏறத்தாழ 200 பேர் இருந்தார்கள். நாங்கள் ஒரு தூண் ஓரம் தரையில் அமர்ந்துகொண்டோம். படம் ஆரம்பித்தது. நாகார்ஜுனாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, டாக்டராக வந்த அருணாவிடம் ``நீங்க என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா?” என்று நாகார்ஜுனா கேட்டபோதுதான் ஜெஸ்ஸியைக் கவனித்தேன். சற்றுத் தள்ளி வேறு தூணையொட்டி, ஒரு பெண் அருகில் ஜெஸ்ஸி அமர்ந்திருந்தாள். அன்று ஜெஸ்ஸியின் சேலையில் கறுப்பு நிறத்தில் வெள்ளைப்பூக்கள் மலர்ந்திருந்தன. தரையில் அமர்ந்து முழங்கால்களை உயர்த்தி மடக்கி, இரண்டு கைகளாலும் முழங்கால்களை அணைத்தபடி லேசாகச் சாய்ந்தாற்போல் அமர்ந்து படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் தூண் மறைவில் அவள் கவனிக்காதவாறு அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே ``இவ எப்படிடா இங்க?” என்றேன் காதரிடம்.

``ஜெஸ்ஸிய உனக்குத் தெரியுமா?”

``ம். எங்க டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்தான். ரெண்டு மாசமா வந்துட்டிருக்கா.”

``ம்… இங்கதான் பக்கத்துல ஜே.ஆர் புரத்துல வீடு. லாஸ்ட் இயர்தான் காலேஜ் முடிச்சா. எங்க டிஇ பொண்ணு, ஜெஸ்ஸியோட காலேஜ் ஃப்ரெண்டு. அவகூட சினிமா பார்க்க வருவா, அவகிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துக்க மாப்ள” என்றான் காதர்.

``ஏன்டா?”

``அவங்க அப்பா ஹெச்.எம். ஒரே பொண்ணு. பயங்கர செல்லம். அதனால அம்மாப்பா கிழிச்ச கோட்டைத் தாண்டவே மாட்டா. அவங்க ஏரியாவுல ஒருத்தன் லவ் லெட்டர் குடுத்திருக்கான். அதை அப்படியே கொண்டுபோய் அவங்க அப்பாகிட்ட குடுத்துட்டா. அவரு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணி பெரிய பஞ்சாயத்தாயிடுச்சு. அரவிந்த் சுவாமியே வந்து அவகிட்ட ஐ லவ் யூ சொன்னாலும் `எங்க அப்பாகிட்ட வந்து கேளுங்க’ன்னு சொல்லிடுவா. வேர்ல்டு பெஸ்ட் டாட்டர் அவார்டு குடுக்கணும்னா இவளுக்குத்தான் குடுக்கணும்” என்றான்.

நான், காதர் சொல்வதை அரைகுறையாகக் கேட்டுக்கொண்டே ஜெஸ்ஸியைப் பார்த்தேன்.

திரையின் வெளிச்சம் அவள் முகத்தில் பட, படத்தில் வரும் காட்சிகளுக்கேற்ப அவளுடைய முகத்தில் உணர்ச்சிகள் மாறிக்கொண்டேயிருந்தன. கதாநாயகி கிரிஜா தன் அப்பா விஜயகுமாரிடம், ``அம்மா இல்லாத பொண்ணுப்பா. வெறும் வயித்தோடு படுத்தா கெட்ட கெட்ட கனவெல்லாம் வரும் தெரியுமா?’’ என்றபோது ஜெஸ்ஸியின் முகம் கிரிஜாவுக்காக அவ்வளவு பரிதாபப்பட்டது. காய்கறி மார்க்கெட்டில் ஓர் இளைஞனிடம் கிரிஜா, ``நம்ப ரெண்டு பேரும் எங்கேயாச்சும் ஓடிப்போயிடலாமா?” என்று கேட்டபோது, அந்த முழங்கால் கைகளை விலக்காமல் உடம்பைப் பின்னால் சாய்த்து, அவ்வளவு அழகாகச் சிரித்தாள். மருத்துவமனையில் கிரிஜாவின் கன்னத்தில் நாகார்ஜுனா முத்தம் கொடுத்தபோது ஜெஸ்ஸியின் முகத்தில் தோன்றிய வெட்கத்தைப் பார்க்க முடிந்தவர்கள், இந்தப் பிறவி எடுத்ததன் பலனை அடைந்து விட்டார்கள். கல்லறையில் நாகார்ஜுனாவைப் பயமுறுத்துவதற்காக சவப்பெட்டியிலிருந்து `ஓ…ஓ…ஓ…’ என்று கிரிஜா எழுந்தபோது ஜெஸ்ஸியின் முகத்தில் தெரிந்த பயத்தைப் பார்த்து, மணிரத்னத்தின் மீது மிகவும் கோபப்பட்டேன்.

அன்று இரவு நெடுநேரம் வரை தூக்கம் வரவேயில்லை. மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஜெஸ்ஸியின் முகம் தோன்றி, என்னைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது. திடீரென ஜெஸ்ஸியின் அழகைப் பற்றி ஒரு கவிதை தோன்றியது. உடனே எழுந்து வேக வேகமாக எழுதிவிட்டுப் படித்துப்பார்த்தேன். அதுவரை நான் எழுதிய கவிதைகளிலேயே அதுதான் நல்ல கவிதையாகத் தோன்றியது.
அதை ஒரு பத்திரிகைக்கு அனுப்பினேன். அதற்கு முன்பு நான் அனுப்பிய எந்தக் கவிதையும் பிரசுரமானதில்லை. ஆனால், ஜெஸ்ஸியைப் பற்றிய அந்தக் கவிதை உடனே பிரசுரமானது. புத்தகத்தில் வந்த கவிதையை எபியிடம் காண்பித்தேன். எபி சந்தோஷத்துடன், ``சூப்பர் கவிதை மாப்ள… பேசாம ஜெஸ்ஸிகிட்ட காமிச்சு உன்னைப் பத்திதான் எழுதினேன்னு சொல்லிடேன்” என்றேன்.

``காமிச்சு, ஐ லவ் யூ சொல்லச் சொல்றியா? டேய், நீ ஜெஸ்ஸிய சராசரி மனுஷி மாதிரி நினைச்சிட்டிருக்கியா? முட்டாள், தேவதைடா. அதுவும் ராணி தேவதை. அதுகிட்ட போய் இதையெல்லாம் காமிச்சுக்கிட்டு. இந்த மாதிரி ஆயிரம் பேர் அவளைப் பற்றிக் கவிதை எழுதுவான். ஜெஸ்ஸி, நம்ம கைக்கெல்லாம் எட்டாத, ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவை பூக்கிற தேவ மலர்டா. பார்த்து ரசிக்கலாம். அவளை நெருங்கிறதுக்குக்கூட ஒரு தகுதி வேணும்டா. அவகூட சேர்ந்து வாழலாம்னு நினைக்கிறதெல்லாம் பேராசைடா” என்றேன்.

 அதற்குப் பிறகு சில நாள்கள்தான் என்னால் ஜெஸ்ஸியைப் பார்க்க முடிந்தது. எனது கவிதை பிரசுரமான ஒரு வாரம் கழித்து, நான் எழுதியிருந்த பி.எஸ்.ஆர்.பி தேர்வில் பாஸாகி, சென்னையில் ஒரு வங்கியில் கிளார்க் வேலைக்கு ஆர்டர் வந்தது. ஏறத்தாழ இரண்டு வருடகாலமாக என் அப்பாவின் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருந்த எனக்கு, பெரிய விடுதலையாக இருந்தது. ஆர்டரை அப்பாவிடம் காண்பித்துவிட்டு அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவர், `ஒரு மளிகைக் கடையில பொட்டலம் கட்டுற வேலைகூட உனக்குக் கிடைக்காது’ என்று சபித்திருந்தார். ஆனாலும் அவர் முகம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

நான் மனதுக்குள் அவரோடு பேசினேன். ``இதோடு முடியவில்லை அப்பா. என் அடுத்த இலக்கு ஐ.ஏ.எஸ்.’’ ஐ.ஏ.எஸ் பாஸாகிவிட்டு இதேபோல் ஆர்டரைக் காண்பித்து, அவர் முன்னால் நிற்கும் காட்சியை நினைக்க நினைக்க, அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. எனது நீண்ட நாள் ரகசியக் கனவு அது. முதலில், சுமாரான ஒரு வேலையில் அமர்ந்து அப்பாவிடமிருந்து தப்பிக்க வேண்டும். பிறகு ஐ.ஏ.எஸ்-க்குப் படிக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களிடம் எல்லாம் என்னைக் கேவலமாகப் பேசிய அப்பா முன் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீஸராக வந்து நிற்கவேண்டும். எனவே, சென்னையில் என் அடுத்த வேலை, ஐ.ஏ.எஸ்-க்குப் படிப்பதுதான். ஆனால், இனிமேல் ஜெஸ்ஸியைப் பார்க்க முடியாது என்பதுதான் வருத்தமாக இருந்தது.

நான் சென்னை கிளம்புவதற்கு முந்தைய நாள் இன்ஸ்டிட்யூட் சென்றேன். அன்று நான் ஜன்னல் வழியே என் வாழ்வின் மகா அற்புதமான காட்சியைப் பார்த்தேன். டைப்படித்துக் கொண்டிருந்த ஜெஸ்ஸியின் டைப்ரைட்டிங் மெஷின் மீது ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. அதைப் பார்த்தவுடன் ஜெஸ்ஸியின் கண்களில் அப்படி ஒரு வெளிச்சம். அன்று வயலெட் நிறச் சேலை அணிந்திருந்த ஜெஸ்ஸி, மெதுவாகக் குனிந்து தனது உதடுகளைக் குவித்து வண்ணத்துப்பூச்சியின் மீது ஊதினாள். ஆனால், அது நகரவேயில்லை. மீண்டும் மீண்டும் அழகாக ஊதினாள். வண்ணத்துப்பூச்சி அசையவேயில்லை. அந்த வண்ணத்துப்பூச்சியை ஜெஸ்ஸி மெதுவாகப் பிடித்து, கையை உயர்த்தி விட, வண்ணத்துப்பூச்சி பறந்தது. வெளியே செல்லும் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்துக்கொண்டே அவள் தன் கன்னத்தைத் துடைக்க, வண்ணத்துப்பூச்சியின் சிறகில் இருந்த ஆரஞ்சு நிற சாயம் அவள் கன்னத்தில் அழகாக ஒட்டிக்கொள்ள... அதை அறியாமலேயே அவள் டைப்படித்துக் கொண்டிருந்தாள். அன்றுதான் அவளைக் கடைசியாகப் பார்த்தது.

சென்னையில் பணியில் சேர்ந்து, வேலைக்குச் சென்றுகொண்டே ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குப் படிக்கப் படிக்க… ஜெஸ்ஸியின் நினைவுகள் குறைந்தன. வங்கித்தேர்வில் தேர்ச்சிபெற்ற நம்பிக்கையில் வெறித்தனமாகப் படிக்க ஆரம்பித்தேன். சென்னையில் அலுவலக வேலைப்பளு, அலுவலகம் விட்டு வந்தவுடன் படிப்பு என, மெல்ல மெல்ல ஜெஸ்ஸி என் நினைவில் மங்க ஆரம்பித்தாள்.
ஓராண்டு சென்னையில் படித்து, என்னால் ஐ.ஏ.எஸ்-ஸில் தேர்ச்சி அடைய முடியவில்லை. எனவே, இரண்டு ஆண்டுகள் லாஸ் ஆஃப் பேயில் லீவு போட்டுவிட்டு, டெல்லியில் ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்து, பேய்த்தனமாகப் படித்தேன். இடையில் டெல்லியிலிருந்து ஊருக்கு வந்தபோது, ஜெஸ்ஸிக்குத் திருமணம் ஆகிவிட்ட தகவலைக் காதர் கூறியபோதுகூடப் பெரிதாக வருத்தப்படவில்லை. சில மாதங்கள் ஒரு பேரழகியை ரசித்தோம். அவ்வளவுதான்.

தொடர்ந்து, நான் தீவிரமாக ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படித்தேன். இரண்டு ஆண்டுகள் இன்டர்வியூ வரை சென்றும், ஐ.ஏ.எஸ் தேர்வை கிளியர் பண்ண முடியவில்லை. மூன்றாம் ஆண்டில் ஐ.ஆர்.எஸ் கிடைக்க, அது போதும் என நினைத்து அமைதியானேன். பிறகு இரண்டு ஆண்டுகளில் வியான்னியுடன் திருமணம். இரண்டு ஆண்டுகளில் இரண்டு பையன்கள். அஹமதாபாத், விசாகப்பட்டினம், கௌஹாத்தி என இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு, கடந்த ஓர் ஆண்டாகத்தான் சென்னையில் இருக்கிறேன். எனவே, பல ஆண்டுகள் கழித்து, இப்போதுதான் ஈஸ்டர் சமயத்தில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன்.

ஏறத்தாழ 20 வருடங்கள் கழித்து, இன்றுதான் ஜெஸ்ஸியைப் பார்க்கிறேன். ஜெஸ்ஸி இந்த ஊரில்தான் இருக்கிறாளா? இல்லையே... காதர் அவளை மும்பையில் கட்டிக் கொடுத்திருப்பதாகத்தானே கூறினான். என்னைப்போல் ஈஸ்டருக்கு வந்திருக்கிறாளா? தெரியவில்லை.

கிட்டத்தட்ட மாஸ் முடியும் நேரத்தில்தான், மீண்டும் சர்ச்சுக்குச் சென்றேன். கும்பல் நெருக்கியடிக்க, நான் வாசலிலேயே நின்றுகொண்டேன். திருப்பலி முடிந்து அம்மாவும் வியான்னியும் வெளியே வந்தனர். என்னை நோக்கி வந்த அம்மா, ``எங்கடா போயிட்ட?” என்றாள்.

``சும்மா கார்ல உட்கார்ந்திருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்” என்றபோது அம்மாவின் அருகில் நின்ற வியான்னி கோபத்தில் என்னை முறைத்துக்கொண்டே இருந்தாள்.

``சரி... குளிருது, வா காபி குடிச்சுட்டுப் போலாம்” என்று அம்மா கேம்ப் ஃபயர் போட்டிருந்த இடத்தை நோக்கி அழைத்துச் சென்றாள். சர்ச்சுக்கு வெளியே உறவினர்களும் நண்பர்களும் கும்பல் கும்பலாக சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். கேம்ப் ஃபயர் அருகில் ஹாட்கிராஸ் பன்னும் காபியும் கொடுத்துக்கொண்டிருந்தனர். நீண்ட கியூ இருந்தது. எதிரே கிளாரா அக்காவைப் பார்த்ததும் அம்மாவும் வியான்னியும் நின்று பேச ஆரம்பித்தனர். நான் கிளாரா அக்காவிடம் `ஹேப்பி ஈஸ்டர்’ சொல்லிவிட்டுச் சுற்றிலும் பார்த்தேன். ஜெஸ்ஸி எங்கேயாவது கண்ணில் படுகிறாளா என்று.

ஜெஸ்ஸி - சிறுகதை
ஜெஸ்ஸி - சிறுகதை

அப்போது காபியுடன் எதிரே வந்த அலெக்ஸ் அங்கிளைப் பார்த்தேன். அப்பாவுக்கு தூரத்து உறவினர். அவ்வப்போது உறவினர் வீட்டு விசேஷங்களில் சந்திப்போம். என்னைப் பார்த்தவுடன் சந்தோஷமான அங்கிள், ``ஏய்… எப்ப வந்த?” என்றவர், ``ஹேப்பி ஈஸ்டர்’’ என்று ஒரு கையால் என் தோளை அணைத்து வாழ்த்து தெரிவித்தார். ``அப்பா எங்கே?” என்றார்.

``அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. வரல. அம்மா மட்டும் வந்திருக்காங்க” என்று சற்றுத் தள்ளி கிளாரா அக்காவுடன் பேசிக்கொண்டிருந்த அம்மாவையும் வியான்னியையும் காண்பித்தேன்.

``பசங்க வரலையா?”

``ரெண்டு பசங்களுக்கும் எக்ஸாம். அதான் விட்டுட்டு வந்துட்டோம்.”

அப்போது ஒரு பெரியவர், ``அலெக்ஸ்… ஹௌ ஆர் யூ?” என்று அவரை நோக்கி வர, ``நான் இப்ப வரேன்” என்று நகர்ந்தேன். அம்மாவும் வியான்னியும் வந்தவுடன் காபி கியூவில் நின்றுகொண்டோம். ஏறத்தாழ இரண்டு நிமிடம் வரிசையில் நகர்ந்த பிறகுதான் கவனித்தேன். சற்றுத் தள்ளி அலெக்ஸ் அங்கிள் இப்போது ஜெஸ்ஸியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். அலெக்ஸ் அங்கிளுக்கு ஜெஸ்ஸியைத் தெரியுமா? ஜெஸ்ஸியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டிருந்தவனைப் பார்த்தால், 45 வயதில் அவள் கணவன்போல இருந்தான்.

நாங்கள் காபியை வாங்கிக்கொண்டு வந்தோம். அப்போது அம்மாவும் வியான்னியும் தூரத்தில் ஃப்ளாரன்ஸ் ஆன்ட்டியைப் பார்த்துவிட்டு, ``ஹாய் ஃப்ளாரன்ஸ்” என்று வேகமாக நடந்தனர். ``நீங்க போங்க. நான் இப்ப வரேன்” என்று அவர்களை அனுப்பிவிட்டு, அலெக்ஸ் அங்கிளை நோக்கி நடந்தேன். இப்போது அலெக்ஸ் அங்கிள் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு நிறைய பேரைத் தெரியவில்லை. அப்பா ஜே.ஆர் புரத்துக்கு புது வீடு வாங்கி வந்துவிட்டதால், இப்போதுதான் முதன்முதலாக இந்த பங்கு சர்ச்சுக்கு வருகிறேன்.

அங்கிருந்து பத்தடி தொலைவில், ஜெஸ்ஸி யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் நின்ற இடத்தில் மட்டும் வெளிச்சம் சற்று அதிகமாக இருப்பதுபோல் எனக்கு ஒரு பிரமை.
என்னைப் பார்த்ததும் என் அருகில் வந்த அலெக்ஸ் அங்கிள், ``பின்னாடி பிங்க் கலர் ஸாரி கட்டிக்கிட்டு ஒரு லேடி நிக்குது பாரு” என்று ஜெஸ்ஸியை நோக்கிக் கையைக் காண்பித்தார்.
``ம்... அவங்களுக்கு என்ன?” என்றபடி காபியை அருந்தினேன்.

``ஜெஸ்ஸின்னு பேரு. அவங்க அப்பா எனக்கு ஃபிரெண்டு. போன வருஷம்தான் இறந்துபோனாரு. அவரு ஜெஸ்ஸிக்கு மாப்ள தேடிக்கிட்டிருந்தப்ப, ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்தாரு. ஏதாச்சும் கவர்ன்மென்ட் வேலை மாப்ள இருந்தா சொல்லுன்னு சொன்னாரு. அப்ப நீ பேங்க்ல வேலையில இருந்தே. உன் ஞாபகம் வந்துச்சு. சொன்னேன்” என்றவுடன் எனக்கு உள்ளுக்குள் சொரேலென்றது. தொடர்ந்து அலெக்ஸ் அங்கிள், ``வீட்டுல, ஜான் கல்யாணத்தப்ப எடுத்த போட்டோ ஆல்பத்துல நீ இருந்த. போட்டாவப் பார்த்து அவருக்குப் பிடிச்சுப்போயிடுச்சு. உங்க வீட்டுல பேசச் சொன்னாரு. உங்க அப்பாகிட்ட கேட்டேன். `நீ ஐ.ஏ.எஸ் பாஸ் பண்றவரைக்கும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன்னு சொன்னாரு.”

`ஆமாம்… அப்படித்தான் சொல்லியிருந்தேன்’ என்ற என் மனம் நடுங்கியது. தொடர்ந்து மாமா, ``அப்பவும் மனசு கேட்காம நான் உனக்கு டெல்லிக்கு எஸ்.டி.டி போட்டுக் கேட்டேன். நீ பொண்ணு யாரு, என்னன்னுகூடக் கேட்கலை. இன்னும் மூணு வருஷத்துக்குக் கல்யாணப் பேச்சே எடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்ட… ஞாபகமிருக்கா?”

அப்போது என்னிடம் யார் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தாலும் உடனே, `பொண்ணு யார், எந்த ஊர்?’ என்றுகூட விசாரிக்காமல் கட் செய்துவிடுவேன். ஆனால், ஒரு நாள் ஜெஸ்ஸிக்காகவும் கேட்பார்கள் என எனக்கு எப்படித் தெரியும்?

தொடர்ந்து அலெக்ஸ் அங்கிள், ``அப்பவும் நான் கல்யாணம் பண்ணிட்டுப் படிடான்னு சொன்னேன். நீ `கல்யாணம் ஆனா, ஃபோக்கஸ் போயிடும். வேண்டாம்’னுட்ட” என்றபோது, என் இதயம் நடுங்குவதை என்னால் துல்லியமாக உணர முடிந்தது. கடைசியில் நானே ஜெஸ்ஸியை நிராகரித்திருக்கிறேனா! ஜெஸ்ஸிக்குத் திருமணமாகிவிட்டதாகக் காதர் சொன்னபோது வராத வேதனை, இப்போது வந்தது.

``அதனால யாரும் குறைஞ்சுபோயிடலை. ஜெஸ்ஸியும் மும்பையில ஒரு சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஆபீஸரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. நீயும் வியான்னி மாதிரி நல்ல பெண்ணைக் கட்டிக்கிட்ட. கர்த்தர் எழுதி வெச்சிருக்கான்ல… யாருக்கு யாருன்னு” என்று அலெக்ஸ் அங்கிள் சொன்னதை அவ்வளவு சுலபமாக என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பெரும் துயரத்துடன் நான் ஜெஸ்ஸியையே பார்த்துக்கொண்டிருந்தபோது, லேசாக மழை தூற ஆரம்பித்தது. எனது இத்தனை வருட வாழ்க்கையில், ஐ.ஏ.எஸ் எழுதவேண்டும் என ஆசைப்பட்டதற்காக முதன்முதலாக வருத்தப்பட்டேன்.

இன்றுவரையிலும் நான் ஒரு வார்த்தைகூடப் பேசியிராத ஜெஸ்ஸியைப் பார்த்தேன். எனது முதல் கவிதை, மழைத்தூறலில் நனைந்தபடி படிகளில் கீழிறங்கிச் சென்றுகொண்டிருந்தது.

- ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியம்: ஸ்யாம்

(06.06.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து..)