பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சிறுகதை: அன்நோன்

சிறுகதை: அன்நோன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை: அன்நோன்

மயிலன்.ஜி.சின்னப்பன்

புதிய மொபைல் வாங்கி மூன்று நாள்களே ஆன நிலையில், கிஷோர் தன்னுடைய வழக்கமான அழைப்பொலியை இன்னும் அதில் அரங்கேற்றவில்லை. அதனாலேயே அதிகாலைத் தூக்கத்தில் வந்த அந்தத் தொடர் அழைப்புகள் முதல் நான்கைந்து முறை தவறிப்போயின. முந்தைய இரவின் பணிச்சுமையும் காரணமாக இருக்கலாம். தூக்கத்தினுள் ஆழ்மனம் இது தனக்கான அழைப்பல்ல, அதைப் பொருட்படுத்தாமல் தன் 26 வயதுக்கான கனவுகளில் அவன் சஞ்சரிக்கலாம் என்று எழுப்பாமலேயே ஆறுதல் சொல்லியது. ஆனாலும் புற உலகம் அவ்வளவு சுலபத்தில் அதை அனுமதிப்பதில்லை. ஆறாவது அழைப்பு. அதிகாலைத் தொலைபேசி அழைப்புகள் அளவுக்கு கிஷோரை உஷ்ணமடையச் செய்யும் வேறொரு விஷயம் எதுவுமில்லை. குறிப்பாக, உப்புச்சப்பற்ற மருத்துவமனை அழைப்புகள். செவிலியர்கள் ஒருவிதத்திலான பொறுப்புத் துறப்புக்காக அழைப்பது. கிஷோருக்கு அவர்களைக் கடிந்துகொள்ளவும் முடிவதில்லை.

சிறுகதை: அன்நோன்

ஒருவழியாக அந்த அழைப்புக்குக் கொட்டாவியுடன் செவி கொடுக்கையில், நிர்மலா சிஸ்டர் மறுமுனையில் வெறுப்போடு கூச்சலிட்டாள்.

``சார்... உங்க ராஜராஜசோழன், டாய்லெட்டுக்குள்ள போயி கதவ அடச்சுக்கிட்டாரு. முக்கால் மணி நேரம், கதவ ஒடச்சுதான் வெளிய கொண்டுவந்திருக்கோம். தயவுசெஞ்சு இன்னிக்கு ஜெனரல் வார்டுக்கு மாத்திடுங்க.’’
இது எதிர்பார்த்திருந்த விஷயம்தான் என்பதால், கிஷோர் ஓர் அலட்சிய பாவத்துடன், ``சரி சிஸ்டர், ரவுண்ட்ஸ் வரும்போது பாத்துக்கலாம்’’ என்றான்.

``இல்ல சார், நானே இப்ப மாத்திவிடுறேன். நீங்க வந்து டிரான்ஸ்ஃபர் நோட்ஸ் மட்டும் போடுங்க’’ என்றது மறுமுனை.

கிஷோர் ஒரு மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு, ``நான் ரவுண்ட்ஸ் வந்ததும் மாத்தலாம். இந்த விஷயத்துக்காக எனக்கு இன்னொரு போன்கால் வரக் கூடாது’’ என்று சொல்லி, இணைப்பைத் துண்டித்தான். அதன் பிறகு தூக்கமே வரவில்லை. தவிர்க்க முடியாத கட்டத்துக்கு அந்தப் பிரச்னை வந்துவிட்டது என்பதை, அவன் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இன்று அது நிச்சயம் நடந்துவிடும். அதிகாலை 5.15 மணி. எழுந்து விடுதி வாசலுக்கு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான்.

டந்த மார்ச் மாதக் கடைசி வாரத்தில் எதிர்பாராமல் மழை பெய்திருந்த ஓர் இரவு. பின்னிரவு 2 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர், நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் தள்ளிக்கொண்டு வந்தார். ரத்தம் தோய்ந்த கந்தலான சட்டை. செம்பட்டையாகி, சிக்கிச் சிதைந்து திரிதிரியாக நீண்டுச் சுருண்டு வளர்ந்திருந்த தலை மயிர். வாந்தியும் ரத்தமும், அழுக்கும் புழுதியும் கலந்த மிக மோசமான துர்நாற்றம்.

பணியில் இருந்த நர்ஸ், ஸ்ட்ரெச்சரைக் கடந்தபடி அந்த 108 பணியாளரிடம் கேட்டார், ``அன்நோனா?’’

``ஆமா சிஸ்டர்.’’

``இந்த மழையில எங்கிருந்துதாம்ப்பா இதெல்லாம் புடிக்கிறீங்க..?’’

``..........’’

``ஏ.ஆர் என்ட்ரி போட்டுட்டு, ஜீரோ-டிலே வார்டுல அப்படியே இந்த ஸ்ட்ரெச்சர்லயே போயி இறக்கிவுட்ரு.’’

``கேஷுவால்ட்டி வண்டிக்கு மாத்திக்கலாம் சிஸ்டர்.’’

``இத ஏத்தி இறக்க, இப்ப எங்க போயி நான் ஆள் சம்பாதிக்கிறது? நீயே வார்டுல வுட்ரு.’’

மருத்துவமனை ஸ்ட்ரெச்சர் ஊழியர்கள் அங்கிருந்து கவனமாகக் கழன்றுகொண்டனர்.

ஜீரோ-டிலே வார்டில் அந்த நேரத்தில் கிஷோர்தான் பணியில் இருந்தான். இந்த ஸ்ட்ரெச்சர் அந்த வார்டுக்குள் நுழைந்ததும், அங்கு இருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் முகம் சுளித்தனர். கிஷோர் இன்னொரு மாஸ்க் அணிந்துகொண்டான்.

``அன்நோனா?’’

``ஆமா சார், ஆக்ஸிடென்ட்... மாரியம்மன் கோயில் வாசல்ல பிச்சை எடுக்கிறவராம். மழையில ஏதோ குறுக்க ஓடும்போது டாட்டா ஏஸ் குட்டியானை அடிச்சிருச்சு.’’

``கான்ஷியஸா?’’

``வண்டியில வரும்போது அனத்திட்டே வந்தார் சார், இப்போ அன்கான்ஷியஸ் ஆயிட்டாரு.’’

``சரி, இறக்குங்க…” என்றவன், “ஸ்டாஃப்...

எம்.என்.ஏ-வ வரச்சொல்லுங்க” என்றான் சத்தமாக.

அந்த வார்டின் கடைசிக் கட்டிலில் அந்த நோயாளி கிடத்தப்பட்டார். வாயிலிருந்து வாந்தி குபுக் குபுக்கெனப் பொங்கி, பக்கவாட்டில் வழிந்தது. சுவாசக் குழாய்க்குள் வாந்தி புரைக்கேறி கொர் கொர் என்று ஒவ்வொரு மூச்சும் ஓர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவதாய் ஒலித்தது. சாக விட்டுவிடலாம் என்றால், பத்து நிமிடங்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும்.

உடனடியாக நெருங்கிப் போய் அவரை மீட்டெடுக்க முடியாத சூழ்நிலை - அவ்வளவு அழுக்கும் துர்நாற்றமும். கிஷோர் தன் முழுக்கைச் சட்டையின் கைப்பட்டியை முழங்கைக்கு மேல் இழுத்துவிட்டுக்கொண்டு, கையுறைகளை அணிந்தபடி அந்த மனிதரின் தாடையை இடதுபுறமாகத் திருப்பி, மேற்கொண்டு வெளியேறிய வாந்தியை மூச்சுக்குழாய்க்குள் போகாதபடி பிடித்துக்கொண்டான். நர்ஸ் ஒருவரும் எம்.என்.ஏ ஒருவரும் உதவிக்கு வந்தார்கள். தொண்டை வரை சக்‌ஷன் இயந்திரக்குழாய் செலுத்தப்பட்டு, தேங்கி இருந்த வாந்தி உறிஞ்சியெடுக்கப்பட்டது. அந்த மனிதர் மூச்செடுக்கும் விதத்தை, கிட்டத்தட்ட முப்பது விநாடிகள் கவனித்தபடியிருந்த கிஷோர், ``சிஸ்டர், இன்ட்டுபேஷனுக்கு ரெடி பண்ணுங்க’’ என்றான்.

``வெயிட் பண்ணிப்பார்க்கலாமா சார். ஆக்ஸிஜன் சாச்சுரேஷன் 90 இருக்கு. O2 மட்டும் வெச்சுப்பார்க்கலாமா?’’

``இல்ல... விட்டா ஆஸ்ப்பிரேட் ஆகியே போய்ச்சேர்ந்திடுவாரு. நீங்க வென்ட்டிலேட்டர் அரேஞ்ச் பண்ணுங்க.’’

``அதுக்கில்ல சார்... ஈ.டி டியூப் ஷார்ட் சப்ளை... செவ்வாய்க்கிழமைதான் இண்டென்ட் போடணும். இப்போ எமர்ஜென்சிக்கு ஆறு டியூப்தான் கையில இருக்கு. அன்நோனுக்கெல்லாம் போட்டு வேஸ்ட் ஆக்கணுமா? சர்வைவ் ஆகுற பேஷன்ட் யாருக்காது யூஸ் பண்ணிக்கலாம்’’ - நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அந்த மனிதர் இன்னொரு முறை வாந்தியெடுத்தார். கிஷோர் அதற்குமேல் யோசிக்கவில்லை.

``சிஸ்டர், டியூப் 8.5 சைஸ் ஒண்ணு கொடுங்க’’ ஆணையிடும் தொனி அது.

தொண்டைக்குள் குழாய் செல்லும் நேரம் சரியாக இன்னொரு முறை வாந்தி - கிஷோரின் முகத்தில் பளிச்செனச் சிதறித் தெறித்தது. ஒருவழியாகக் குழாய் செலுத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பணியில் இருக்கும் நர்ஸிங் மாணவி ஒருத்தி, அவசரமாக ஓடிப்போய் ரூம் ஸ்ப்ரே ஒன்றை எடுத்துவந்து அவ்விடம் தெளித்தாள். மல்லிகைப்பூ வாசம் வீசிய அந்த ஸ்ப்ரேவும், தன்மீது தெறித்திருந்த வாந்தியின் துர்நாற்றமும் கலந்தடித்த நொடியில் கிஷோர் இரவு உட்கொண்டிருந்த ஹாஸ்டல் மெஸ் சப்பாத்தி, குமட்டிக் கொண்டு தொண்டை வரை வந்துபோனது.

அந்த இடம், சோம்பலான முறையில் சுத்தம் செய்யப்பட்டது. ஹவுஸ் சர்ஜன் மாணவன் ஒருவன், அந்த நோயாளியின் உடல் காயங்களுக்குத் தையல் போட்டுவிட்டான். இரவுப் பணியில் இருந்த பார்பர் குடித்துவிட்டு எங்கேயோ சுருண்டுபோய்விட, தலைக் காயங்களுக்கு மட்டும் தையல் போட முடியாமல், ரத்தம் கசிந்து, காய்ந்து அந்த மனிதரின் அலங்கோலமான தலையை ரத்தப் பிசுக்காக்கியது. அவரின் கந்தலான ஆடைகள் நறுக்கி வீசப்பட்டன. அம்மணமாகக் கிடந்தவரைச் சுற்றி, பல பொத்தல்கள் உள்ள ஒரு திரை மறைப்புக்காக விரிக்கப்பட்டது. ஆபரேஷனுக்காகப் போயிருந்த இன்னொரு நோயாளியின் பழைய வேட்டி ஒன்று, அந்த மனிதரின் மீது போர்த்தப்பட்டது.

எம்.என்.ஏ-வையே அவரது தலைமயிரை மழிக்குமாறு கிஷோர் கேட்டான். முதலில் கொஞ்சம் தர்மசங்கடத்துடன் ஒப்புக்கொண்டவர், பின்னாலிருந்து அந்த நர்ஸ் ஏதோ சைகை காட்ட, தனக்கு மொட்டையடிக்கத் தெரியாது என்று அவர் மறுத்துவிட்டார்.

``சார், அந்த ஆளு அல்போன்ஸ் நைட் டியூட்டியில 12 மணிக்குமேல எங்கே போறான்னே தெரியலை, நீங்க இங்கே இருக்கிற வொர்க்கரை வெச்சு அவன் வேலையைச் செய்யச் சொல்றீங்க?’’

``சிஸ்டர், இந்தப் பஞ்சாயத்தெல்லாம் பேச இதுவா நேரம், ஸ்கால்ப்ல நல்லா ப்ளீட் ஆகுது... சூச்சர் பண்ணணும்னுதானே கேட்கிறேன்?’’

``இப்டி சும்மா அட்ஜஸ்ட் பண்ணிட்டே இருந்தா, குனியறவங்களையே நீங்க குட்டிக்கிட்டு இருப்பீங்க சார். அந்த ஆளு வந்து மொட்டையடிக்கட்டும்’’ தன் விண்ணப்பத்தை மீறியும் ஒரு செயற்கை சுவாசக்குழாயை தண்டம் செய்துவிட்டான் என்ற பொருமல் அது.

அந்த ஹவுஸ் சர்ஜன் மாணவனே ஒரு பிளேடால் காயங்களையொட்டிக் கொஞ்சமாக முடியைச் சிரைத்துவிட்டு, தையல் போட்டுவிட்டான். கிஷோர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்களுக்கு அது தேர்வு நேரம் என்பதால், இரண்டாம் ஆண்டின் முடிவில் இருக்கும் கிஷோர்தான் அன்று இரவு சீனியர் பட்டதாரி மாணவன். அன்றைய அவசர சிகிச்சை சேர்க்கைகளுக்கான பொறுப்பில் இருக்கும் உதவிப் பேராசிரியர் மருத்துவர் சங்கர நாராயணன், தனக்கான ஓய்வறையில் உறங்கிக்கொண்டிருப்பார். தூக்கத்திலிருந்து விழிக்கும்போதெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பில், ``எதுவும் பிரச்னை இல்லையே, டவுட்னா கூப்பிடுப்பா’’ என்று சொல்லிவிட்டு, உறங்கிப்போவார். எனவே, நான்கு மாவட்டங்களுக்கான தலைமை மருத்துவமனையான அந்த மருத்துவக் கல்லூரியில் அந்த இரவுக்கான கேப்டன் கிஷோர்தான். எனவே, சின்னச் சின்ன விஷயங்களை அவன் பெரிதாகப் பொருட்படுத்தாமல் கடந்துபோகப் பழகியிருந்தான்.

சேர்க்கப்பட்டு தோராயமாக முக்கால் மணி நேரம் கழித்து அந்த நோயாளியின் நாடித்துடிப்பு பலவீனமாகத் தொடங்கியது. கிஷோர், மூன்று சலைன் பாட்டில்களை வேகமாகச் செலுத்தச் சொன்னான். நாடித்துடிப்பில் பெரிய முன்னேற்றமில்லை. அருகில் இருந்த ஹவுஸ் சர்ஜன் மாணவி, உதட்டைப் பிதுக்கினாள்.

``போயி, மூணு யூனிட் பிளட் எடுத்துட்டு வா’’ என்று கிஷோர் சொன்னதும் அவள் ரத்த வங்கிக்கு ஓடினாள்.

வெளிக்காயங்களில் இருந்த ரத்தக்கசிவு நின்றுபோயிருந்த நிலையில், கை, கால், இடுப்பு எலும்புகளிலும் சேதம் இல்லாததால், வயிற்றில்தான் அவனுக்கு சந்தேகம். அழுத்திப் பார்க்கையில் முன்பு இருந்ததைவிட வயிறு கல் மாதிரி ஆகியிருந்தது. குடல் அடிபட்டு பெரிட்டோனைட்டிஸ் வந்ததற்கான அறிகுறி அது. ஆனால், படிப்படியாக ரத்த அழுத்தம் குறைய ஆரம்பித்ததும், கிஷோர் சட்டென ஓர் ஊசியை வயிற்றில் குத்தி உறிஞ்சிப் பார்த்தான். ரத்தம். வயிற்றுக்குள்தான் ரத்த இழப்பு. துரிதமானான்.

``சிஸ்டர், அன்நோன் பேஷன்ட்ட சி.டி-க்கு ஷிஃப்ட் பண்ணுங்க.’’

``சார், ஃப்ரீ சி.டி-க்கு சங்கரநாராயணன் சார் சைன் வேணும்.’’

``அவர் சைனை நான் போடுறேன். நீங்க ஷிஃப்ட் பண்ண ரெடி பண்ணுங்க.’’

`மார்ச்சுவரிக்குப் போக வேண்டியதை ஸ்கேனுக்கும் தியேட்டருக்கும் கொண்டு போறேன்னு மல்லுக்கட்டுறார்’

  - கொஞ்சம்  சத்தமாகவே முணுமுணுத்தாள்.

சி.டி ஸ்கேன் அறையில் இருக்கும் ஊழியர், ``இலவச சி.டி எடுக்க, கல்லூரியின் டீன் கையெழுத்தும் முத்திரையும் அவசியம்’’ என்று சட்டம் பேசினார்.

``அந்த ரூல்ஸ்லாம் எனக்கும் தெரியும் பாஸ். நைட்ல எப்படி டீன் சைன் வாங்க முடியும்? டியூட்டி சர்ஜன் சைன் பண்ணியிருக்காருல்ல.’’

``இல்லை சார். எங்களுக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன் அதுதான் சார். டீன் சைன் வேணும். இல்லைன்னா, ரேடியாலஜி சீஃப் சைன் வேணும்.’’

``நைட்ல எது நடக்காதோ, அதையே கேளுங்க.’’

கிஷோர் உடனே சங்கரநாராயணனுக்கு போன் செய்தான். முழுவிவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டவர், ``பேஷன்டுக்கு பீபி படுத்துருச்சிங்கிற... எதுக்கு சி.டி எடுத்து டைம் வேஸ்ட் பண்ற?’’

``சார், சாலிட் ஆர்கன் இஞ்சுரி ஸ்டேட்டஸ் பார்த்துடலாம்னுதான் சார். ஹெட் இஞ்சுரியும் ரூல் அவுட் பண்ணணும்.’’

``தெரியுதுய்யா, இப்ப வார்டுக்குக் கொண்டுபோயி, ஃப்ளூயிடும் பிளட்டும் போடு... பீபி பிக்கப் ஆச்சுன்னா, பேஷன்ட்ட தியேட்டருக்குத் தள்ளு. இல்லைன்னா விட்டுடு. அன்நோன்தானே… யாரும் உன்னை எதுவும் கேட்கப்போறதில்லை. ஏன் இந்த நேரத்துல டெக்னீஷியன்கூடெல்லாம் சச்சரவு பண்ணிட்டிருக்க? நாளைக்கு ஏதாச்சும் என்கொயரின்னு என்ன கூப்பிடுவானுங்க. விட்டுத்தொலை.’’

அநேகமாக இதைச் சொல்லிவிட்டு அவர் உறங்கியிருக்க வேண்டும். கிஷோர் ஒரு நிமிட மெளனத்துக்குப் பிறகு ஸ்ட்ரெச்சரை நேரடியாக தியேட்டருக்குத் தள்ளச் சொன்னான். ஏன் அப்படி அந்த நேரத்தில் முடி வெடுத்தான் என, பின்னாளில் யோசிக்கும்போது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. குறைவான ரத்த அழுத்தத்துடன், மிக பலவீனமான நாடித்துடிப்பு டன், செயற்கை சுவாசத்தில் சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளியை, அதுவும் கேட்பார் யாருமற்று அநாதையாக அடிபட்டுக் கிடந்த ஒரு பிச்சைக்காரரை, எதற்காக இத்தனை வம்படியாக அவன் அறுவைசிகிச்சைக்கு ஆயத்தப்படுத்தினான் என்று அவனுக்கே நகைப்பாக இருந்தது. ஒருவேளை, அந்த நோயாளி விஷயத்தில் எல்லோரும் அவனுக்கு எதிர்துருவத்தில் நிற்பதால் அவனது ஈகோ சுரண்டப்பட்டிருக்கலாம் அல்லது சாவின் வாசலில் இருக்கும் ஒருவனை ஒற்றை ஆளாக நின்று தேற்றவேண்டும் என்ற சவால் அவனுக்குப் பிடித்திருக்கலாம். சீனியர்கள் கிளம்பிவிட்ட நிலையில், சங்கரநாராயணன் தியேட்டருக்கும் வர மாட்டார் எனும் நிலையில், அந்தக் கடினமான அறுவைசிகிச்சையைத் தனியனாகச் செய்ய வேண்டும் என்ற மாணவப் பருவ வேட்கையாகக்கூட இருக்கலாம் அல்லது அவனுக்கே தெரியாமல் அவன் நிஜமாகவே கருணை உள்ளம் கொண்டவனாக இருக்கலாம்.

தியேட்டருக்குள் அந்த மனிதரைக் கொண்டு சேர்த்ததும் சம்பிரதாயமாக சங்கரநாராயணனுக்கு கிஷோர் அதைத் தெரிவித்தபோது, மறுமுனையிலிருந்து அவன் எதிர்பார்த்த பதில்தான் வந்தது, ``புரொசீட் பண்ணுப்பா. எதுவும் டிஃபிக்கல்ட்டினா கூப்பிடு.’’

அவர் சொன்ன அப்படியான `டிஃபிக்கல்ட்டி’ ஏற்பட்டு, அதற்காக அவரை அழைத்தால் .`ஒண்ணும் பிரச்னையில்லைப்பா, அப்படியே க்ளோஸ் பண்ணிக்கோ... அதான் நீயே முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணிட்டியே, நான் வந்து மட்டும் புதுசா என்ன பண்ணிடப்போறேன்?’ என்று  சொல்வார் என்பதும் கிஷோருக்குத் தெரியும் தியேட்டரில் அந்நேரப் பணியில் இருந்த செவிலி வந்து, ``சார், பேஷன்ட் அன்நோன்கிறதால நான் மேட்ரனுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன், உங்க சைடுலேருந்து ஆர்.எம்.ஓ-க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு சார்கிட்ட கன்சென்ட் வாங்கணும்னு சொன்னாங்க சார்.’’

``தெரியும் சிஸ்டர். நான் பார்த்துக்கிறேன்.’’

``இல்ல சார், ஆர்.எம்.ஓ சார்கிட்ட சொல்லாம உள்ளே ஷிஃப்ட் பண்ண வேணாம்னு மேட்ரன் சொன்னாங்க சார்.’’

``சரி தாயே... நான் பேசிடுறேன். நீங்க போயி ஆகுற வேலையைப் பாருங்க, சொத்த ரீசனுக்காக டிலே பண்ணிட்டு இருக்காதீங்க’’ என்று சொல்லியபடி, கிஷோர் ஆர்.எம்.ஓ-வுக்கு போன் செய்தான்.

``சார், நான் சர்ஜரி பீஜி கிஷோர் பேசறேன். ஒரு அன்நோன் பேஷன்ட் எமர்ஜென்சி லேப்பராட்டமிக்காக எடுக்குறோம் சார். உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணிடலாம்னு...’’

``டியூட்டி சர்ஜன் யாருப்பா?’’

``டாக்டர் சங்கரநாராயணன் சார்.’’

``அப்புறம் என்னப்பா, சார் எல்லாத்தையும் பார்த்துப்பார். கேரி ஆன்.’’

சங்கரநாராயணன், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இசைந்துபோவதற்கே அளவெடுத்துச் செய்யப்பட்டவர். எந்த வம்புதும்புக்கும் அவரது பணி நேரங்களில் இடமில்லை. அது இல்லை / இது இல்லை / ஆள் போதவில்லை... எந்தச் சச்சரவுக்கும் இடமளிக்காத அனுசரிப்பு. இத்தனைக்கும் மனிதர் தன் பணி நாளில் அந்த ஓய்வறையை விட்டு வெளியே வரவே மாட்டார். வேலை நடக்கிறதா, அதன் தரம் என்ன என்பதில் எல்லாம் எவருக்கும் அக்கறையில்லை. பிரச்னை இல்லாமல் இயந்திரம் ஓட வேண்டும், அவ்வளவுதான்.

அடுத்த மூன்று மணி நேரம், அது கிஷோரின் காடு. மயக்கமருந்து கொடுக்கப்பட்ட அந்த நோயாளி, அறுவை அரங்கின் படுக்கையில் கடைசி மூச்சுடன் கிடத்தப்பட்டிருந்தார். சீனியர்களின் துணையின்றி, கடந்த ஒரு வருடத்தில் எண்ணற்ற அறுவைசிகிச்சைகள் அவன் செய்திருந்தாலும், எங்கேயும் எதுவும் சிக்கல் என்றால், உதவிக்கு சீனியர் மாணவர்கள் அழைக்கும் நிலையில் இருந்தார்கள். கடந்த இருமுறை இதுபோன்ற சூழலில், பணியில் மரு.செண்பகராமன் இருந்தார். சங்கரநாராயணனுக்கு நேரெதிர். இந்நேரத்துக்கு சி.டி எடுக்கும் பஞ்சாயத்துக்கு டீனைத் தூக்கத்தி லிருந்து எழுப்பியிருப்பார். மொட்டையடிக்க வராத அல்போன்ஸுக்கு மெமோ போயிருக்கும். தான் இருந்தும் அந்த வேலையைச் செய்ய மறுத்த எம்.என்.ஏ-வைக் கதறவிட்டிருப்பார். இப்போது, கிஷோருக்கு இது முதல் அமில சோதனை. அவன் இரண்டாம் யோசனை எதுவுமின்றி ஏற்கெனவே அதற்குத் தயாராகியிருந்தான்.

வயிற்றைக் கிழித்து உள்ளே போனதும் கிட்டத்தட்ட ஒன்றரை லிட்டர் ரத்தம். மண்ணீரலில் அடி. சிறுகுடலில் மூன்று இடங்களிலும், பெருங்குடலில் ஓரிடத்திலும் காயம். உடைந்து சிதைந்துபோயிருந்த மண்ணீரல் அகற்றப்பட்டது. குடல் சேதங்களை சரிசெய்யத் தொடங்கினான். கலைநயம் என்பது, பொறுமையாக நிறுவப்படும் நேர்த்தி என்பதைப் பொய்யாக்கும்விதத்தில், கிஷோரின் கைகள் ஒருசேர வேகமாகவும் நுணுக்கமாகவும் இயங்கிக்கொண்டிருந்தன. தாண்டவம் என்று சொல்ல வேண்டும்.

அறுவைசிகிச்சை முடிந்து ஐ.சி.யு-வுக்குக் கொண்டுசெல்வதற்கு ஸ்ட்ரெச்சர் உடனே ஏற்பாடாகவில்லை. ஆகாது. பைசா தேறாத அன்நோன் கேஸ். யார் தள்ள முன்வருவார்கள்? கிஷோர் அறுவைசிகிச்சை முடித்து ரத்தம் தெறித்த அந்த அங்கியையும் கையுறைகளையும் கழற்றாமல் அப்படியே எல்லாவற்றையும் அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

``ஸ்ட்ரெச்சருக்கு எவ்வளவுன்னு சொன்னா, நான் கொடுத்துடுறேன்’’ என்று சத்தம் போட்டதும்தான் வேலை நடந்தது. ஒருவழியாக அந்த அன்நோன் நோயாளி காலை 7.15 மணிக்கு ஐ.சி.யு-வுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டார்.

ஐ.சி.யு-வில் பொறுப்பில் இருந்த நண்பனிடம், ``இந்த ஆளு பொழைக்கணும். என்ன பண்ணுவியோ... இழுத்துப் புடிச்சிரு’’ என்று கிஷோர் கண்களைச் சிமிட்டிப் புன்னகைத்து விட்டுப் புறப்பட்டான்.

காலை 10 மணிக்கு டாக்டர் செண்பகராமனிடம் ரவுண்ட்ஸில் அந்த நோயாளியைப் பற்றியும், இரவு நடந்தவை பற்றியும் கிஷோர் விளக்கிச் சொன்னான். மண்ணீரல் அகற்றப்பட்டதற்குப் போடவேண்டிய தடுப்பூசிகள், மருத்துவமனை மருந்தகத்தில் ஏன் இல்லை என்பதைப் பற்றி, செண்பகராமன் மருத்துவமனைக் கண்காணிப்பாளருக்கு போன் செய்து விசாரித்துக்கொண்டிருந்தார். அதற்குள் தலைமைப் பேராசிரியரும் வந்துவிட்டார்.

``என்ன செண்பகராமன், காலையிலேயே முகம் செவந்திருக்கு?’’

``குட் மார்னிங் சார். நைட் ஒரு எமர்ஜென்சி ஸ்ப்ளீனெக்டமி பண்ணியிருக்காங்க. அன்நோன் பேஷன்ட். அதான் வேக்ஸின்ஸ் அவைலபிளிட்டி கேட்டுட்டிருக்கேன்.’’

``அதுக்கெல்லாம் பெரிய வேல்யூவே கிடையாது... விடுங்க, தேவையில்லை.’’

இப்படி, தான் படித்த காலத்திலேயே தேங்கிப்போய், இன்றைய அறிவியல் சொல்வதை ஏற்க மறுப்பவர்களிடம், செண்பகராமன் மேற்கொண்டு வாதாட மாட்டார்.

``அப்புறம், ஸ்ப்ளீனெக்டமி யாரு பண்ணது... கிஷோரா?’’

``யெஸ் சார்.’’

``நாங்க படிச்சப்போலாம் ஸ்ப்ளீனெக்டமிலாம் சீஃப் கேஸ். பீஜி-லாம் கிட்டயே போக முடியாது. நீ செக்கண்டு இயர்லேயே தனியா பண்ணியிருக்க. கட்டாயம் ட்ரீட் கொடுக்கணும் மேன் நீ.’’

``ஷ்யூர் சார்... பேஷன்ட் பொழைச்சதும்.’’

``அப்ப பொழைக்காதுன்னு நீயே முடிவுபண்ணிட்ட’’ என்று ஒரு வெடிச்சிரிப்புடன் சொன்னார். கிஷோர் அதற்கு பதிலே சொல்லவில்லை.

செண்பகராமன் இந்த உரையாடலை இடைமறித்து, ``வேக்ஸின்ஸ்... டீன்கிட்ட பேசி லோக்கல் பர்சேஸ்ல அரேஞ்ச் பண்ண முடியுமா சார்?’’

``அன்நோன்தானே... ஷோல்டரை இறக்கிக்கோங்க.’’ 

மதியம் 1 மணிக்கு செண்பகராமன் தன்னுடைய தனியார் மருத்துவமனையிலிருந்து வேக்ஸின் கொடுத்து அனுப்பினார். ஒருவழியாக டீனிடம் கையெழுத்து வாங்கி, தலைக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டிருந்தது. புறமண்டை ஓட்டில் ஒரு தெறிப்பும், முன் மூளையில் பொட்டுப் பொட்டாக ரத்தக்கசிவும் இருந்தன. தலைக்காயத்துக்கு அறுவைசிகிச்சை அவசியமில்லை. எனினும், சுயநினைவை பாதிக்கும் அளவுக்கு பலமான காயம். எப்படியும் சில நாள்களுக்கோ வாரங்களுக்கோ செயற்கை சுவாசம் அவசியப்படப்போகிறது என்பது தெளிவானதும், செண்பகராமனிடம் கிஷோர் தகவலைச் சொன்னான்.

சிறுகதை: அன்நோன்

``அப்ப மதியம் தூங்கி எழுந்து வந்து இன்னிக்கு நைட்டே ட்ரக்கியாஸ்டமி பண்ணிவிட்டுடு, அன்நோன் பேஷன்ட். ஆள் வேற ஒரு மாதிரி இருக்காரு. நாத்தம் அடிக்குதுன்னு யாரும் கிட்டயே போகாம டியூப் பிளாக் ஆகி செத்துடப்போறாரு!’’

கடந்த 36 மணி நேர உறக்கமற்ற உடல் சோர்வால் பீடிக்கப்பட்டிருந்தாலும், கிஷோர் அன்றிரவே அந்த நோயாளியின் தொண்டையில் துவாரம் போட்டு, தொடர் செயற்கை சுவாசத்துக்கு ஏதுசெய்தான். அன்றிலிருந்து முதல் இரண்டு நாள்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. மூன்றாவது நாள் மதியம், யதேச்சையாக வேறொரு வேலையாக ஐ.சி.யு-வுக்குள் கிஷோர் நுழைந்தபோது அந்த அன்நோன் நோயாளியை அவருக்கான கட்டிலில் காணவில்லை.

``கணபதிபாபு வீட்ல வேலைபார்க்கிற மெய்டோட அப்பாவாம். லிவர் ஆப்ஸஸ். இப்ப 11 மணிக்குதான் அட்மிஷன். அதுக்குள்ள ஆபரேட் பண்ணி ஐ.சி.யு-வுக்குக் கொண்டு வந்துட்டாங்க. டீன் அப்படியே ஸ்ட்ரெச்சர் பின்னாடியே வர்றாப்டி. கணபதிபாபுவை வெச்சு அவங்க கட்சியில மூவ் பண்ணிதான இவரு டீன் போஸ்ட் வாங்குனாப்டி. விஸ்வாசம். ஒரே ஆளுங்க வேற...’’ - ஐ.சி.யு பணியில் இருந்த நண்பன் விளக்கிச் சொன்னான்.

``அதுக்கு ஏன்டா இந்த ஆளோட வென்ட்டி லேட்டரை எடுத்தீங்க, வேற மெஷினே இல்லையா?’’

``மொத்த பன்னெண்டுல, நாலுதான் பிராப்பரா ரன்னிங். ஒண்ணு இப்பவோ அப்பவோன்னு இருக்கு. மீதியெல்லாம் அடிவாங்கிக் கெடக்கு. சர்வீஸுக்கு இன்னும் ஆள் வரலை. அதுவும் ரெஸ்ட் இல்லாம ஓடிட்டே இருந்தா, வீணாப் போகாம என்னாவும்?’’

``அந்த மனுஷன் வென்ட்டிலேட்டர் இல்லாம செத்துத்தொலஞ்சுறப்போறான்டா!’’

``என்னய என்னடா பண்ணச் சொல்ற? அன்நோன் பேஷன்ட் வெண்ட்டிலேட்டரைக் கழட்டி இந்த ஆளுக்குப் போடுன்னு டீன் சொல்றாப்டி.’’

``இதுக்கு, பேசாம அன்னிக்கு ராத்திரி அடிபட்ட இடத்துலேயே இந்த ஆளு செத்திருக்கலாம்.’’

``டென்ஷன் ஆகாத, வென்ட்டிலேட்டர் இல்லாமயே தாக்குப்புடிக்கிறாரு... வந்து பாரு. நானும் மெஷினைக் கழட்டினதும் ஆளு நாக்கவுட்னு நினைச்சேன், கம்பா நிக்கிறாப்டி, வந்து பாரு.’’

கிஷோருக்கு திருப்தியே இல்லை. அவரிடம் மூச்சிரைப்பும் சோர்வும் தென்படவே செய்தன. எப்படியும் சில மணிநேரத்தில் திணறல் அதிகமாகிச் செத்துப்போவார் என்பதுதான் நிஜம்.

`இந்தக் கைக்கூலி டீனுக்கு வென்ட்டிலேட்டர் அவ்வளவு அவசியம்னா, வீணாப்போனதை யெல்லாம் சர்வீஸ் பண்ண ஏற்பாடு செய்யணும். அதை விட்டுட்டு, ஒருத்தன் மூச்ச உருவி இன்னொருத்தனுக்குக் கொடுக்கச் சொல்லி யிருக்கான்’ மனதுக்குள்ளேயே காறி உமிழ்ந்து கொண்டான்.


மேற்கொண்டு எதுவுமே செய்ய முடியாத நிலையில், அந்த நண்பனிடம் சலிப்புடன் சொன்னான்,

``மோசமாயிடாமப் பார்த்துக்கோ.’’


``வந்திருவாரு மச்சி... விடு நான் பார்த்துக்கிறேன்.’’


மோசமாகாமல் இவனால் என்ன பார்த்துக்கொள்ள முடியும். மூச்சுத்திணறல் வந்தால் வென்ட்டிலேட்டர் இல்லாமல் உட்கார்ந்து வாயால் ஊதப்போகிறானா? மோசமானால் `மோசமாகிவிட்டார்’ என்று அறிக்கையில் பதிவுசெய்வான். ரொம்பவே திணறல் ஏற்பட்டால், சுற்றி திரை வைக்கப்படும். இந்தத் `திரை வைத்தல்’ என்பது, கிட்டத்தட்ட `கடைசியா முகத்தைப் பார்க்கிறவங்க எல்லாரும் பார்த்துக்கோங்க’ ரக காரியம்தான். கிஷோர் மனம் பொறுக்காமல் செயலற்றதாய்ச் சொல்லி ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த வென்ட்டி லேட்டர்களில் எதுவும் வேலைசெய்கிறதா என்று ஆய்வு செய்ததும் பயனில்லாமல்தான் முடிந்தது.

``இதே அந்த பேஷன்ட்டுக்கு எவனாவது சொந்தக்காரன் வாசல்ல நின்னா, இப்டி வென்ட்டிலேட்டரைக் கழட்டி மாத்தியிருக்க முடியுமா? அன்நோன்கிறதாலதான் இவ்ளோ இளக்காரம்.’’

``எம்.எல்.ஏ வந்து சொன்னா, உனக்கோ எனக்கோ உடம்பு முடியாம ஐ.சி.யு-ல இருந்தாலும், நம்ம வென்ட்டிலேட்டரையும் கழட்டி மாத்துவான் இந்த டீனு. என்னமா பம்முறாங்கிற!’’

கிஷோர், இதற்குமேல் இதை ரொம்பவும் யோசிக்க வேண்டாம் என்று கடந்துபோக முயன்றான். யோசித்து எதுவும் ஆகப்போவ தில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதன்முறையல்ல. மரணங்களும் அவனுக்கு மரத்துப்போன ஒன்றுதான். இருந்தாலும் இந்த மனிதன் பிழைக்க வேண்டியவன். எதற்காக அடிபட்டு சாலையில் கிடந்தவனை, அந்தக் கொட்டும் மழையிலும் எவனோ ஒரு வழிப்போக்கன் கவனிக்க வேண்டும்? எதற்காக அவன் இவனைத் தாண்டிப் போகாமல் 108-க்கு அழைக்க வேண்டும்? எதற்காக சம்பவ இடத்திலேயே மரணிக்காமல் இவன் உயிரை இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்? எதற்காக அதிகாலையில் தூக்கத்தை விரயமாக்கி அவ்வளவு உடல்சோர்வையும் கடந்து மூன்று மணி நேரம் இந்த அறுவைசிகிச்சையைச் செய்திருக்க வேண்டும்? நிகழும் செயல்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஏதோ ஓர் அர்த்தம் பொதிந்திருக்கும் எனில், இந்தச் செயல்களுக்கெல்லாம் இப்போதைய அர்த்தம் என்ன? அப்படி எதுவும் இருந்திருந்தாலும், இப்போது எல்லாவற்றையும் ஓர் அரசியல்வாதியின் தொலைபேசி அழைப்பு அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது.

கிஷோர் பிரபஞ்சத்தின் அத்தனை திருவோடுகளுக்காகவும் கவலைப்படுபவன் அல்ல என்றாலும், கண் முன்னால் ஏந்தப்படும் கைககளை நிரப்பும் எண்ணமுடையவன். அவனால் இதில் என்ன செய்துவிட முடியும்? எம்.எல்.ஏ-வை எதிர்த்து என்ன பேசிவிட முடியும்? டீனை எதிர்த்து என்ன பேசிவிட முடியும்? சங்கரநாராயணனை எதிர்த்துகூட எதுவும் பேச முடியாது. ஜனநாயகம் உருவாக்கியிருக்கும் 99 சதவிகித ஊமை இந்தியப் பிரஜைகளில் அவனும் ஒருவன். அதை அவன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கிளம்புவதற்கு முன், ஒருவேளை அந்த மனிதர் அன்றிரவு மூச்சுத்திணறல் அதிகமாகி இறந்துபோனால், தன்னிடம் தெரிவிக்க வேண்டாம் என்று தன் நண்பனிடம் சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டான்.

தூக்கம் என்பதுதான் மனதுக்கு எவ்வளவு சிறந்த சிகிச்சை! எத்தனை சால்ஜாப்புகளை உள்ளூர விதைத்து நம்மை சுரணையற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. சுரணையற்று இருப்பதைவிட வாழ்வதற்கென்ன சிறந்த ஆயுதம் வேண்டும். அடுத்த நாள் காலை, கிஷோருக்கு யார்மீதும் கோபமில்லை. சாந்தமாக அன்றைய நாளுக்குத் தயாரானான்.

ஐ.சி.யு-வுக்குள் நுழைந்த போது எதிர்பார்த்தபடி அந்த மனிதரின் படுக்கையில் வேறு ஒருவர் இருந்தார். கடந்திருந்த நேரம் அனுமதித்திருந்த சமாதானத்தை மீறி ஏதோ ஒரு மனப்புழுக்கம் அவனைத் துவைத்தது. அது கோபமல்ல. ஒருவிதமான தோல்வியுணர்ச்சி என்று வேண்டுமானால் சொல்லலாம். அங்கு இருந்த அவனுக்கான மற்ற இரு நோயாளிகளைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது, நர்ஸ் இடைமறித்துச் சொன்னார், ``காலையில ஐ.சி.யு வேக்கன்சி தேவைப்பட்டுச்சு. இருக்கிறதுல அவருதான் ஓரளவுக்கு ஸ்டேபிளா இருந்தாரு. அதான் கீழ போஸ்ட்-ஆப் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணிருக்கோம்.’’

``யார்?’’

``அந்த அன்நோன் கேஸ்.’’

கிஷோர், ஒரு விநாடி நடுங்கிப்போனான். அவசரகதியில் ஓடிப்போய் அந்த மனிதரை முழு உயிராய்ப் பார்த்தாலும், அவர் உயிரோடு இருப்பதை, சுற்றியிருக்கும் மின்திரைகள் உறுதிப்படுத்தினாலும், கையால் தொட்டுப்பார்த்ததும், அதற்கு அந்த உடல் அசைவு கொடுத்ததும் கிஷோருக்கு அப்படியே உலுக்கிச் சிலிர்த்துப்போனது. ஏதுமற்ற ஒருவன் என்பதால் மட்டும் உயிர் வாழ்தல் மறுக்கப்பட்டு விடுமா என்ன? உலக நியதிகளைப் புறந்தள்ளித் தன்னைத்தானே மீட்டுக்கொண்ட பெருவாழ்வு அது.

அதன்பிறகு அவரின் உடல் நலம் ஏறுமுகத்தில்தான் இருந்தது. மூச்சு சீரானது. ஏழாம் நாள் மூக்கின் வழியே குடலுக்குக் குழாயிட்டு உணவளிக்கத் தொடங்கப்பட்டது. கண்விழித்துப் பார்க்கும் நிலைக்கு வந்ததும், நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டார். பொதுவாக உணர்வற்றவராகத் தெரிந்தாலும் கிஷோரைப் பார்த்தால் மட்டும் அவர் மெலிதாகச் சிரிப்பதாக எல்லோரும் சொன்னார்கள். தலைமயிரும் தாடியும் முழுவதுமாகச் சிரைக்கப்பட்ட நிலையில் அந்த முகம் ஒரு மெல்லிய மண்டை ஓட்டுக்குக் கறுப்புத் தோல் போர்த்தப்பட்டதைப்போல இருந்தது. தொண்டையில் இருந்த ட்ரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்பட்டது. தலையில் இருந்த காயம் காரணமாக, சுவாதீனமற்றுப் பிதற்றிக்கொண்டும் கத்திக்கொண்டும் இருந்தார். பெரும்பாலான நேரங்களில் கட்டிலில் கட்டிப்போட்டுத் தூக்க மருந்து கொடுக்க வேண்டியிருந்தது. இரவுகளில் அருகில் இருக்க உறவினர்கள் இல்லாத காரணத்தால், உருண்டு விழாமல் இருக்க தரையில்தான் படுக்க வைக்கப்பட்டார்.

அந்த வார்டை நிர்வகித்த ஜெகதம்மாள் சிஸ்டர்தான் இத்தனை முன்னேற்றத்துக்கும் முதல் முக்கியக் காரணம். அநாதரவான நிலையில் இருக்கும் ஒரு மனிதன்மீதான கரிசனம் என்பதைவிட, தன் தொழிலுக்கு அவர் நேர்மையாக இருப்பவர் என்றுதான் சொல்ல வேண்டும். தான் பணியில் இருக்கும் ஒரு நாளின் ஆறு மணி நேரத்துக்குள் அந்த மனிதருக்குப் போதுமானதை அவர் செய்து முடித்திருப்பார். பற்களை/உடலைச் சுத்தம் செய்தல், இரு வேளை உணவு, நாற்காலியில் வெளிச்சமான இடத்தில் அமரவைப்பது, பிசியோதெரப்பி மாணவர்களை வைத்து நடக்கப் பழகவைத்தல் இப்படியாக, அந்த மனிதரை ஜெகதம்மாள் சிஸ்டர் இந்த உலக ஓட்டத்துக்குத் தயார்செய்தார். கிஷோர், தான் பயன்படுத்தாத சில பழைய உடைகளை அந்த மனிதருக்கு உபயோகித்துக்கொள்ளுமாறு வார்டு ஊழியரிடம் கொடுத்துவிட்டு வந்த அடுத்த நாள் மாலை, கடைவீதியில் அந்த வார்டு ஊழியர் அதில் ஒரு துணியை இஸ்திரி போட்டு அணிந்தபடி உலாவிக்கொண்டிருந்தார்.

அந்த அன்நோன் நோயாளி, ஒருகட்டத்தில் கொஞ்சம் உளறலாகப் பேச ஆரம்பித்தார். அங்கு இருப்பவர்களுக்கு அது வேடிக்கையாகவும், சமயங்களில் வெறுப்பாகவும் இருந்தது. மற்ற நோயாளிகளின் உறவினர்கள், அந்த மனிதரை வேறு வார்டுக்கு மாற்றுமாறு பலமுறை கோரிக்கைவைத்தனர். கிஷோர் வம்படியாக அதைச் செய்யவேயில்லை. வேறு வார்டில் ஜெகதம்மாள் சிஸ்டர்போல ஒருவர் கிடைப்பது சுலபமல்ல. ஆனால், இன்னும் எத்தனை நாளுக்கு இதைச் செய்ய முடியும்? இதற்கு முடிவுதான் என்ன? கிஷோர் முதலில் அதையெல்லாம் யோசிக்கவேயில்லை. அந்த மனிதரிடம் ஒருநாள் கேட்டான், ``உங்க பேரு என்ன?’’

யோசிக்காமல் திருத்தமாய்ச் சொன்னார், ``ராஜராஜசோழன்.’’

``எந்த ஊர் நீங்க?’’

``ராஜராஜசோழன்.’’

``ஊரு... ஊரு... எந்த ஊருன்னு கேட்கிறேன்.’’

``ராஜராஜசோழன்.’’

``இப்ப எங்க இருக்கீங்கன்னு தெரியுதா?’’

``ராஜராஜசோழன்.’’

அதன் பிறகான நாள்களில் அங்கு கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் இதுதான் ஒரே பதில். ஒரே நல்ல விஷயம், அந்த மனிதரை `அன்நோன்’ என்று சுட்டுவது குறைய ஆரம்பித்தது.

அவர் தானாகவே நடமாடும் நிலை வந்ததும், சிக்கல் அதிகமானது. எழுந்து போய் நடுவார்டில் சிறுநீர் கழிப்பது, இன்னதெனப் புரியாத வசைமொழிகளைப் பேசுவது, இரவில் கூச்சல்போடுவது... இந்தப் புள்ளியில்தான் கிஷோர் அடுத்தகட்டம் பற்றி யோசிக்க வேண்டியிருந்தது. கிஷோர், ஜெகதம்மாள் சிஸ்டரிடம்தான் விசாரித்தான். அவரின் முப்பதாண்டுக்கால அனுபவத்திலிருந்து அவனுக்கான பதில்கள் தேவைப்பட்டன.

``இந்த மாதிரி அன்நோன் பேஷன்ட்லாம் எப்படி சிஸ்டர் டிஸ்சார்ஜ் பண்றது?’’

``நிறையபேர் அன்நோனா அட்மிட்டானாலும் சீக்கிரமா நோன் ஆயிடுவாங்க. ஐடி கார்டு ஏதாவது வெச்சு சொந்தக்காரங்களைப் புடிச்சிடலாம். உங்களுக்கே தெரியும், அது ஈஸி நமக்கு. இந்த மாதிரி அநாதை பேஷன்ட்னா கான்ஷியஸ் ஆகி உடம்பு சரியா ஆயிட்டுன்னா அவங்களே கிளம்பிடுவாங்க. ஒருசிலர் இங்கேயே நோகாம மூணு வேளை சோறு கிடைக்குதுன்னு போக மாட்டாங்க. நாமளே ஜெனரல் வார்டுக்கு மாத்தி, அப்ஸ்காண்டுன்னு காமிச்சு, கேஸ் ஷீட்டை க்ளோஸ் பண்ணிடுவோம். ஐ.சி.யு போஸ்ட்-ஆப் வார்டுலேருந்தெல்லாம் அப்ஸ்காண்டு காமிக்க முடியாது. நமக்குதான் பிரச்னை. இவரை மாதிரி எப்பவாச்சும் சிக்கிடும். ஜெனரல் வார்டுக்கு மாத்துற அளவுக்கு கண்டிஷனும் இருக்காது. இங்கேயும் வெச்சுக்க முடியாது. சிரமம்தான். இப்பவே நைட்ஷிஃப்ட் நிர்மலா சிஸ்டர் அலுத்துக்குறா. எவ்ளோ செடேஷன் கொடுத்தாலும் அடங்கவே மாட்றாராம். உங்ககிட்ட சொல்லி ஜெனரல் வார்டுக்கு மாத்திவிடணும்னு புலம்பிட்டு இருந்தா...’’

``ஜெனரல் வார்டுக்கு மாத்தி அப்ஸ்காண்டு பண்றதுக்கா?’’

``ஆமா, ஏதோ கோயில்ல பிச்சை எடுக்கிற வராமே. ஒரு ஆட்டோ வெச்சு கொண்டுபோய் அங்கேயே இறக்கிவிட்டுட்டு, இங்கே அப்ஸ்காண்டுன்னு கேஸ் ஷீட்டை க்ளோஸ் பண்ணிடலாம்.’’

``இந்த கண்டீஷன்ல எப்படி சிஸ்டர், இப்பவும் அவருக்கு சப்போர்ட் தேவைப்படுதுல்ல?!’’

``வாஸ்தவம்தான்... ஆனா, அதான் வழி!’’

``ஆசிரமம், ஹோம் மாதிரி ஏதாவது..?’’

``இங்கே அப்படி ஒண்ணும் சரியா இல்லை. இந்த ஆளையெல்லாம் அப்படி நாலு செவுத்துக்குள்ள அடைக்க முடியாது. வெளியில விட்றணும்.’’

``இல்லை... கொஞ்சநாள் வெயிட் பண்ணுங்க. நான் ஏதாவது ஹோமுக்கு விசாரிக்கிறேன்.’’

ஆதரவற்றோர் ஆசிரமம் இரண்டில் கிஷோர் விசாரித்துப்பார்த்தான். அவர்கள் இந்த நிலையில், தலை காயம்பட்டு புத்திசுவாதீனமற்ற மூர்க்கத்தனமான ஒருவரை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மனநலப் பிரிவு மருத்துவரிடம் `தங்கள் வார்டுக்கு மாற்றிக்கொள்ள முடியுமா?’ என்று கேட்டதற்கு, சம்பிரதாயமாக நான்கு மாத்திரைகளை எழுதிவிட்டு, இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டுக் கழன்றுகொண்டார்.

ராஜராஜசோழனின் முரட்டுத்தனம் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் அவர் அனைவருக்கும் தொந்தரவாகத் தெரிய ஆரம்பித்தார், கிஷோருக்கும்கூட. கண் முன்னால் தினமும் அதே கரங்கள் ஏந்தப்பட்டால் கருணை அங்கே காலாவதியாகிப்போய்விடுகிறது. ஆனாலும் அவரை அவனால் உதறித்தள்ள முடியவில்லை. நிர்மலா சிஸ்டர், கிஷோரிடம் ஓரிரு முறை சொல்லிப்பார்த்துவிட்டு, பயனி ல்லாமல்போகவே சங்கரநாராயணனிடம் முறையிட்டார்.

``வியாழக்கிழமை ஜெனரல் வார்டுக்கு மாத்திடலாம் சிஸ்டர்.’’

சிறுகதை: அன்நோன்

கிஷோருக்குத் தெரியும். வியாழன், சங்கரநாராயணன் விடுப்பு எடுக்க உள்ளார். அன்று நோயாளியை அப்ஸ்காண்டு செய்தால், அவர் கையெழுத்துப் போடவேண்டியதில்லை. அதுதான் அவர் கணக்கு.

அந்த வியாழக்கிழமை இன்றுதான். அதுதான் அந்த அதிகாலை அழைப்பு. மணி 8.50 ஆனது. காலையிலிருந்து மூன்று சிகரெட் முடிந்துவிட்டது. முதல் நாள் தன் முகத்தில் தெளித்த வாந்தி நினைவுக்கு வந்தது. அதன் துர்நெடி, மண்ணீரலை அகற்றி வெளியே எடுத்தபோது காலில் சொட்டிய ரத்தம், அதன் பிசுப்பிசுப்பு, கழுத்தில் துவாரமிட்டதும், அது மூடிய பிறகு ஒலித்த ராஜராஜசோழன்களும்... எல்லாம் எதற்காக? வென்ட்டிலேட்டர் மறுக்கப்பட்டும் வாழ்க்கை மறுக்கப்படாமல் மீண்டெழுந்து வந்ததெல்லாம் எதற்காக? இதெல்லாம் இருக்கட்டும், அவர் பரிபூரணமாக குணமாகியிருந்தால் மட்டும் என்னவாகிவிடப்போகிறது? தானாகவே நடந்துபோய் அந்தக் கோயில் வாசலில் அமர்ந்திருப்பார். தனக்கான வெளியைத் தானே தேர்ந்தெடுக்கும் தெளிவைத் தவிர அவரது உடல் சுகம் எதை மீட்டுக்கொடுத்துவிட முடியும். எல்லாமே ஏதோ நிர்ணயங்களின் தொகுப்பாகவே அவனுக்குத் தெரிந்தது. இவனால் எதையும் மாற்ற முடியப்போவதில்லை. யாராலும் நிர்ணயிக்கப்பட்டவற்றை மாற்ற முடியப்போவதில்லை. அனுகூலங்கள், அதிர்ச்சிகள், வெற்றி, தோல்வி… எதையும் நாம் முடிவுசெய்வதில்லை. ஒருகட்டத்தில் இதெல்லாம் அவனுக்கு ரொம்பவே சோர்வாக இருந்தன. செண்பகராமனுக்கு போன் செய்து, தான் விடுப்பு எடுத்துக்கொள்வதாகச் சொன்னவன், போஸ்ட் ஆஃப் வார்டுக்கு போன் செய்து, ராஜராஜசோழனை ஜெனரல் வார்டுக்கு மாற்றச் சொன்னான். ஒருவிதத்தில் அவனுக்கு அது ஒரு விடுதலை உணர்வைக் கொடுத்தது. சோர்வோ நிம்மதியோ மதியம் வரை தூங்கிவிட்டான்.

விழித்த பிறகு ஜெனரல் வார்டுக்கு போன் செய்து, அந்த மனிதரைப் பற்றி விசாரித்தான். மதிய நேரப் பணியில் இருந்த செவிலி, காலையிலேயே அந்த கேஸ் ஷீட் மூடப்பட்டதாகச் சொன்னாள்.

கிஷோருக்கு எல்லாம் ஸ்தூலமாகத் தெரிந்தன. ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டதும், அவர் மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் ஒரு ஆட்டோவில் ஏற்றப்பட்டிருப்பார். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து முரண்டுபிடித்திருப்பார். வழி நெடுக்க அவர் அந்த அர்த்தமற்ற வசைமொழிகளைப் பிரயோகித்திருப்பார். அதே மாரியம்மன் கோயிலிலோ வேறு எங்கேயோ அவர் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டிருப்பார். இந்த மாநகரின் மூலையில் எங்கேயோ அந்த ராஜராஜசோழனுக்கு ஒரு சிறு கோட்டை நிச்சயம் கிடைத்திருக்கும். சுவர்களும் விட்டமும் இல்லாத கோட்டை. நினைவில் காடுள்ள மிருகம் அது. நிச்சயம் இந்த வெயில் அவருக்கு ஆறுதலாக இருக்கும். வெயில் அப்படியேவா இருந்துவிடப்போகிறது. இப்போதே மேற்கில் வானம் இருட்டிக்கொண்டி ருக்கிறது. இன்னொரு மழை நாளில் அவர் மீண்டும் சாலைக்குக் குறுக்கே ஓடலாம். அப்போதும் ஒரு டாட்டா ஏஸ் குட்டியானை வேகமாக வரலாம். அது எப்போது வேண்டு மானாலும் நடக்கலாம். ஏன், இப்போதேகூட நடக்கலாம். வெளியே சட்டென கனமழை கொட்டத் தொடங்கியது. கூடவே கொஞ்சம் வெயிலும். அன்றைய தினத்தின் நான்காவது சிகரெட், நீண்டநேரம் பற்ற வைக்காமல் வாயிலேயே இருந்தது.

- ஓவியங்கள்: ஸ்யாம்