Published:Updated:

சிக்குவாரிடம் சிக்கிய குட்டி - சிறுகதை

சிக்குவாரிடம் சிக்கிய குட்டி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்குவாரிடம் சிக்கிய குட்டி - சிறுகதை

ஓவியங்கள்: அரஸ்

குட்டி, சேவலை முழுதாக அதன் உடலில் இருந்த பொங்குகளைப் பொசித்து முடித்து, அருகில் கிடந்த பனை ஓலை மீது வைத்தான். தோட்டத்தினுள்ளிருந்து முன்பாகவே குட்டி பொடிக் குச்சிகளையும் காய்ந்த தென்னை ஓலையையும் கொஞ்சமாய்ச் சேகரித்து வைத்திருந்தான். அவற்றில் கொஞ்சமாய் எடுத்து வைத்து, தலையில் கட்டியிருந்த உருமாலைக்குள் கை விட்டு, தீப்பெட்டியை எடுத்து உரசிப் பற்றவைத்தான். சேவலைத் தீயில் நன்கு காட்டி வாட்டினான்.

சிக்குவாரிடம் சிக்கிய குட்டி - சிறுகதை

சேவல் எப்படியும் ஐந்து கிலோவுக்கும் பக்கமாகத் தேறும்போல் இருந்தது. முழுதாக வாட்டி முடித்த பிறகு, தோட்டத்தில் தொட்டி இருக்கும் இடம் நோக்கி சேவலைத் தூக்கிக்கொண்டு நடந்தான். பங்களாக்காரர், தொட்டிக்கு அருகில் மஞ்சள்தூள் கிண்ணமும் பெரிய சில்வர் போசிகள் இரண்டும் வைத்திருந்தார். சற்றுத் தள்ளி கத்தியும் முட்டியும் வாழைமர நிழலில் கிடந்தன. குட்டி, போசியில் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீரை மோந்து சேவலை நனைத்தான். பிறகு மஞ்சள் தடவி மீண்டும் சேவலைக் கழுவி போசிக்குள் போட்டு எடுத்துக்கொண்டு வாழைமர நிழலில் அமர்ந்தான்.

பங்களாக்காரருக்கு, `பழனிச்சாமி’ என்ற பெயர் முன்பு இருந்தது. அவரது வீடு ஒன்றும் பங்களாவும் இல்லைதான். இரண்டு மாடிகள்கொண்ட வீட்டை முதலாக இந்தக் கிராமத்தில் அவர் கட்டி முடிக்க, பழனிச்சாமியை `பங்களாக் காரர்’ என்றே உள்ளூர் சனம் கூப்பிட ஆரம்பித்துவிட்டது. பங்களாக்காரருக்கு இரண்டு பையன்கள். இருவருமே படித்து முடித்து வெளிமாநிலத்தில் வேலையில் இருந்தார்கள். மனைவி குழந்தைகளோடு பெங்களூரில் தங்கி வேலைபார்க்கும் சின்னவன் கதிர்வேலன், நேற்று மாலை குடும்பத்தோடு வந்திருந்தான்.

பேரனையும் பேத்தியையும் கண்ட சந்தோஷத்தில் பங்களாக் காரர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார். காலையிலேயே இவனது வீடு தேடி வந்துவிட்டார். முந்தின இரவு போதையில் எத்தனை மணிக்கு வந்து கட்டிலில் விழுந்தோம் என்ற நினைவின்றிக் கிடந்த குட்டி, சடவாய் எழுந்து வெளிவாசலுக்கு வந்தவன் வாசலில் பங்களாக்காரரைக் கண்டதும் குனிந்து கும்பிடு ஒன்றை வைத்தான்.

``நான்கூட யாரோ என்னுமோன்னு நினைச்சனுங்க பங்களாக்கார்ரே! சாமி வெடிய காத்தாலயே வந்திருக்கீங்க... வெளியூருக்குப் போறீங்களா? சேவிங்கி பண்ணிவுடணுமா?” என்றான்.
``அதுக்கெல்லாம் நான் வரலை குட்டி. சின்னவன் பொடுசுங் களோடு நேத்து பொழுதோடு கார்ல வந்திருக்கான். சரி, நம்ம தோட்டத்துல சுத்தீட்டுத் திரியுற கோழிகள்ல ஒண்ணைப் புடிச்சு நேத்து சாயந்தரமே கட்டி வெச்சிருக்கேன். வந்தீன்னா பொசிச்சு சுத்தப்படுத்தி வெட்டிக் குடுத்துட்டுப் போயிடுவியாமா!” என்றார்.

``அதுக்கென்னுங்க பங்களாக்கார்ரே, நீங்க முன்னாடி போங்க... பொறவுக்கே எம்பட டிவிஎஸ்-ஐ எடுத்துட்டு பஞ்சா பறந்து வந்துடுறேன்” என்றான் இவனும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எக்ஸெல் சூப்பரில் வந்திருந்த அவரும் வண்டியைத் திருப்பிக் கொண்டே, “அவிங்க முடி வெட்டக் கூப்பிட்டாங்க... இவிங்க ஒரு சோலிக்கிக் கூப்பிட்டாங்கன்னு நின்னுக்காதே! காத்தாலயே கறிக்கி இட்லி சுடணும்னு வீட்டுல அவ வேற சொல்லிட்டிருந்தா” என்று சொல்லிச் சென்றார்.

குட்டியின் பிள்ளைகள் இரண்டுக்கும் பரீட்சை முடிந்து விடுமுறை என்பதால், அம்மாளைக் கூட்டிக்கொண்டு அப்பிச்சியையும் அம்மாயியையும் பார்க்கப் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. இருவரும் அரசாங்கப் பள்ளியில், பெரியவள் ஒன்பதிலும், சின்னவள் எட்டாவதிலும் படித்தார்கள். குட்டி தொண்டுப்பட்டிக்குள் நுழைந்து மொடாவிலிருந்து கையாலேயே தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிக்கொண்டான். வாய்க்குள் விரலை விட்டு தண்ணீரோடு பற்களை கீச் கீச்செனத் தேய்த்து, தண்ணீரைக் கொப்புளித்துத் துப்பினான்.

பழுப்பேறிய வேட்டியை அவிழ்த்து அதாலேயே முகத்தைத் துடைத்துக்கொண்டவன், அதையே கட்டிக்கொண்டு வீட்டினுள் சென்றான். துண்டை எடுத்து உருமாலை கட்டிக்கொண்டு தனது டிவிஎஸ்-ஐ வீட்டின் வெளியே கொண்டுவந்து நிறுத்தினான். வெளியே ஊர் சுற்றப் போயிருந்த மணியான், வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவந்தான், நான்கு கால் பாய்ச்சலில். வீட்டைப் பூட்டி சாவியை வீட்டின் மொகுட்டில் கை விட்டு வைத்துவிட்டு டிவிஎஸ்-ஐக் கிளப்பினான்.
``திண்ணையில படுத்திருக்க மொடையா உனக்கு? சோறும் கெடையாது ஒண்ணும் கெடையாது உனக்கு!” - நாயிடம் சொல்லிவிட்டு, வண்டியில் அமர்ந்து பங்களாக்காரர் தோட்டம் நோக்கி முறுக்கினான்.

சிக்குவாரிடம் சிக்கிய குட்டி - சிறுகதை

ஊரிலிருந்து ஒண்ணரை கிலோமீட்டர் தள்ளிப் பத்து ஏக்கரா தோட்டம் வைத்திருந்தார் பழனிச்சாமி. தோட்டத்தில் இருநூறு தென்னைகள் நின்றிருந்தன. அதுபோக, கொய்யா மரங்கள் ஐம்பதும், நாவல்பழ மரங்கள் பத்தும் வைத்திருந்தார். ஊருக்குள் அவருக்கு இருந்த வீடு சும்மா கிடந்தது பல வருடங்களாக. இப்போதுதான் வெளியூர்க் குடும்பம் ஒன்று தங்குவதற்கு அதைக்  கொடுத்திருந்தார். பங்களாக்காரர் வீட்டின் உட்சுவர்கள் அனைத்தும் கோழிமுட்டைகள் கலந்து பூசப்பட்டவை என்று ஊரே சொல்லிக்கொண்டிருக்கும். சுவர்கள் அவ்வளவு வழுவழுப்பாக இருக்கும்.

குட்டி, பங்களாக்காரர் சொன்னபடியே கறியைச் சிறிது சிறியதாக வெட்டி குண்டானில் போட்டு முடித்தான். எலும்புக் குழம்புக்காக மற்றொரு குண்டானில் எலும்பாகவே போட்டுவைத்து இரண்டையும் தூக்கிக்கொண்டு வீட்டுவாசலுக்குச் சென்றான். பங்களாக்காரர் மனைவியின் பெயர் இவனுக்கு சுத்தமாக மறந்திருந்தது. இவர் பங்களாக்காரர் ஆன பிறகு, அவர் மனைவியும் பங்களாக்காரம்மா வாகிவிட்டார். வீட்டுவாசலில் நின்று, ``ஏனுங்கோவ்...’’ என்று குரல்கொடுக்கவும், அந்த அம்மாவே வீட்டினுள்ளிருந்து வெளியே வந்து குண்டான்களை வாங்கிக் கொண்டார்.

``கறி என்னமோ பெருசு பெருசா கிடக்காப்ல இருக்கே குட்டி?’’ என்று சொன்னதும், ``பாக்கு பாக்கா வெட்டிக் குடுத்திருக்கேனுங்கம்மா!’’ என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தண்ணீர்த் தொட்டி அருகே வந்தான். கத்தியையும் கட்டை யையும் சுத்தமாகக் கழுவி எடுத்துப் போய் வீட்டின் திண்ணையில் வைத்துவிட்டுத் தென்னைமர நிழலுக்கு வந்தவன், உருமாலைக்குள் கையை நுழைத்து ஒரு பீடி எடுத்துப் பற்றவைத்துப் புகை இழுத்து விட்டான். ஊதி முடித்தவன் வெயிலில் நின்றிருந்த டிவிஎஸ்-ஐ வேப்ப மர நிழலில் நிறுத்தலாம் எனச் சென்றபோது, பங்களாக்காரர் வீட்டினுள்ளிருந்து ஒரு கட்டைப் பையோடு வெளியே வந்தார்.

வந்தவர் நேராக இவனிடம், ``போயி கொத்தமல்லித் தழை, இஞ்சி, பூண்டு, மசாலாப்பொடி, சின்ன வெங்காயம் ரெண்டு கிலோ இதெல்லாம் வாங்கிட்டு வந்துடு குட்டி. தக்காளி, இங்கே நம்ம தோட்டத்துலேயே இருக்குது. நாலு அவளே பொறிச்சுக்குவா!” என்று பையையும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளையும் நீட்டினார். இவனும் வாங்கிக்கொண்டு அவரது எக்ஸெல் சூப்பரைத் தருவாரா என்று அவர் முகம் பார்த்தான்.

``என்ன பார்த்துட்டு இருக்கே? சீக்கிரம் போயி வாங்கிட்டு வா’’ என்று சொல்லிவிட்டுச் செல்லவும் இவனால் எதுவும் அவரிடம் பேச முடியவில்லை. இப்படித்தான் பல சமயம் இவன் வாய் அடைத்துக் கொள்கிறது. இவன் மனைவியும் இவனைக் கட்டிக்கொண்டு வந்த காலத்திலிருந்து சொல்கிறாள், `வெளங்குனாப்புலதான்’ என்று.

இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை எல்லாம் வேண்டுமென்றால், ஊருக்குள் இருக்கும் சிறிய கடையில் கிடைக்காது. மூன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் முனியப்பன் கோயில் பஸ் ஸ்டாப்புக்குச் செல்ல வேண்டும். வண்டியை ஓர் ஆட்டு ஆட்டிப் பார்த்தான் குட்டி. சலக் என்று சத்தம் கேட்கவே, நிம்மதியாய் தன் டிவிஎஸ்-ஐ முறுக்கிக்கொண்டு கிளம்பினான். இவன் பொருள்கள் வாங்கிக்கொண்டு தோட்டம் வருகையில், பங்களாக்காரர் வாசலிலேயே இவனைப் பார்த்த படி காத்து நின்றிருந்தார். அவருக்கும் பின்னால் அவரின் பேரக்குழந்தைகள் இரண்டும் பெரிய கரடி பொம்மையை வைத்துத் தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்.

``இவத்திக்கி இருக்கிற கடைக்கிப் போயிட்டு வர்றதுக்கு இமுட்டு நேரமா? என்ன வண்டி இது... ஒர் ஒர்ர்ருனு கத்தீட்டு? பேரீச்சம் பழக்காரன் ஊருக்குள்ள வந்தான்னா எடைக்கிப் போட்டுரு!” என்றபடி பையை வாங்கிக்கொண்டு, இவன் கொடுத்த சில்லறையையும் வாங்கிச் சட்டைப்பையில் போட்டுச் சென்றவருக்கு ``முனியப்பன் கோயில் மளிகைக்கடைக்குப் போயிட்டு வர்றனுங்க நானு!’’ என்று சொன்னான். அதை அவர் கண்டுகொள்ளாமல் வீட்டினுள் சென்றுவிட்டார். வாசலில் இருந்த கொய்யா மரத்தில் கட்டிவைக்கப் பட்டிருந்த நாய், கரடி பொம்மையைப் பார்த்துக் குரைத்தது!

வண்டியைக் கொண்டுபோய் வேப்ப மர நிழலில் நிறுத்தினான் குட்டி. அங்கேயே நிழலில் அமர்ந்தவனைப் பார்த்து நாய் `உர்ர்ர்’ என முனகியது. ``சேரிச் சேரி, உம்பட பன்னாட்டை என்கிட்ட காட்டாதே! தென்னம் பட்டையை எடுத்தன்னா தெரியும்’’ என்று நாயிடம் சொல்ல, அது நீட்டிப் படுத்துக்கொண்டு கடைசியாய் `உர்ர்ர்’ என்றது. குழந்தைகள் இருவரும் வீட்டுக்குள் ஓடிவிட்டனர். மணி 9.30 இருக்கும் என நினைத்தான் குட்டி. இவனுக்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது.

`இவர் வராமலிருந்திருந்தால் நாலு வெங்காயம் மிளகா அரிஞ்சு கூட்டாஞ்சோறாக்கி இந்நேரம் தின்றிருப்போம்’ என நினைத்தான். கூட்டாஞ்சோற்றை நினைத்ததும் காலி வயிறு சத்தமிட்டது. பொறுத்தது பொறுத்தோம், இன்னம் சித்த நேரம் பொறுத் திருந்தால் இலையில் கறிக்குழம்பும் இட்லியும் போட்டுச் சாப்பிடலாம். சின்னவரின் கார், தோட்டத்து ஷெட்டினுள் நின்றிருந்தது. `போன கட்டாப்பு வந்தபோது சிவப்பு கலர் காரில் வந்தாப்பிடி இருந்துச்சே! இந்த வாட்டி காரு வெள்ளையா இருக்கு’ என்று நினைத்தான்.

பங்களாக்காரர் வீட்டினுள்ளிருந்து என்னவோ சொல்லிக்கொண்டு வெளியில் வந்தவர், நேராக இவன் அமர்ந்திருந்த மரத்தடிக்கு வந்தார். இவன் மரியாதைக்கு எழுந்து நின்றான். நாயும் வாலை ஆட்டிக்கொண்டே எழுந்து சலாம் போடுவதுபோல் முன்னால் வளைந்து அவரைப் பார்த்தது. வந்தவர் தன் வேட்டியைத் தூக்கி டவுசர் பாக்கெட்டிலிருந்து பர்சை எடுத்தார். ``சரக்கு பிளாக்குல கெடைக்குமுல்லொ குட்டி? இட்லி எல்லாம் அப்பவே ஆயிடுச்சு. கறியை அடுப்புல வெச்சுட்டாங்க. ஒரு ஹாஃப் பாட்டில் வாங்கிட்டு வந்துடு. சீக்கிரம் வரணும் பாத்துக்க. இவ சாப்பிடச் சொல்லி கறி ஆனதீம் கூப்டுட்டே இருப்பா. `இரு வார்றேன்... இரு வார்றேன்’னு சொல்லிட்டே இருக்க முடியாது என்னால. இந்தா பிடி 250!’’ என்று ரூபாயை நீட்டினார்.

சிக்குவாரிடம் சிக்கிய குட்டி - சிறுகதை

``பிளாக்குல கோட்டரு 160 ரூவாய்ங்கொ சாமி. 320 ரூவா குடுங்க” என்றான் குட்டி.

``இந்தா 50. 300 ஆச்சுல்லொ இப்ப. தெனமும் போறவன்தான நீயி. ஆளைத் தெரியாமயா இருக்கப்போவுது உனக்கு? இனி எம்பட பர்ஸுல காசே இல்லை பாரு. வெட்டி பர்ஸு! போயிட்டு ஓடியா சீக்கிரமா!” சொல்லிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு நடையிட்டார்.

320 ரூபாய் கொடுக்காமல் அந்தப் பயல் கொடுக்கவே மாட்டான். மாமூல் கொடுத்து காலையில் கொஞ்சம் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறான். சில நாள்கள் காலையில் 8 மணி என்கிற போதே பாட்டில்கள் விற்றுப்போய் விடும். இவனது அடிப்பாக்கெட்டை நசுக்கிப் பார்த்தான். எல்லாம் நேற்றே காலி. வெற்றுப் பாக்கெட்டை நசுக்கிப்பார்த்தால் மட்டும் காசு முளைத்து வந்துவிடுமா என்ன? மீண்டும் டிவிஎஸ்-ஐ ஆட்டிப்பார்த்தான். சளக்கென்றே சத்தம் வந்தது.

அருகில் இருக்கும் குறுநகருக்குச் செல்ல ஆறு கிலோமீட்டர் செல்ல வேண்டும். இவர் மளிகைக்கடைக்கு அனுப்பும்போதே இதையும் சொல்லியிருந்தால் ஒரே வேலையாக வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். மறுபடியும் முனியப்பன் கோயில் பஸ்ஸ்டாப் வழியாகத்தான் போக வேண்டும்.

``இன்னும் போகலியா நீயி... அப்படி என்ன ரோசனை உனக்கு?’’ பங்களாக்காரர் சத்தம் வீட்டுவாசலில் கேட்டது.

``இதா கெளம்பிட்டனுங்க’’ சொல்லிக்கொண்டே வண்டியை முறுக்கினான்.

`எப்படியும் ஒரு கோட்டர் அளவுதான் பங்களாக்காரர் குடிப்பார். மனுஷன், கறியை ஒரு துளியாச்சும் குடிக்காமல் சாப்பிடுவாரா என்ன? எப்படியும் நீயும் கொஞ்சம் குடிடா குட்டினு கொடுப்பார். பசிக்கு துளி ஊற்றிக்கொண்டு கறியை மென்றால் இதமாகத்தான் இருக்கும்’ - நினைக்கையில் நாவில் எச்சில் ஊறியது. டாஸ்மாக் கடை தாண்டி பெரிய வேப்ப மர நிழலில் ஆள் நின்றிருந்தான். நல்லவேளை சரக்கு காலியாகவில்லை. 300 ரூபாயைக் கொடுத்துவிட்டு அவனிடமே ஓரியாடினான். சாயந்தரம் வருகையில் கண்டிப்பாகக் கொடுத்துவிடுவதாக சத்தியம் செய்தான். கால்மணி நேரம் கழித்து மனது இளகியவன் 300 ரூபாயை வாங்கிக்கொண்டு ஹாஃப் பாட்டிலைக் கொடுத்தான்.

மகிழ்ச்சியாய் வண்டி டேங்க் கவரில் வைத்துக்கொண்டு ஊர் நோக்கி வண்டியை முறுக்கினான் குட்டி. சரியாய் முனியப்பன் கோயில் வந்ததும் வண்டி நின்று விட்டது. பெட்ரோல் காலியாகி விட்டதைத் தெரிந்தவன், சலிப்பாய் கொண்டுபோய் மளிகைக்கடை ஓரமாக நிறுத்தினான். பாட்டிலையும் வண்டிச்சாவியையும் எடுத்து டவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். அண்ணாச்சியிடம் வண்டியை நிறுத்திப் போவதாய்ச் சொல்லிவிட்டு, ஊர் நோக்கி வெயிலில் நடந்தான்.

`பேசாமல் நேராக வீடு சென்று வயிறுமுட்டக் குடித்துவிட்டுப் படுத்துக்கொள்ளலாம்’ என நினைத்தான். `பாவம் பங்களாக் காரர். நாளையும் பின்னியும் நம்பவே மாட்டார் என்னை’ என நினைத்துக்கொண்டே நடந்தான். பசியில் கிறுகிறுப்பு வந்தது. மரம் கண்ட பக்கமெல்லாம் ஓரமாய் நின்று மூச்சு வாங்கிக்கொண்டு தெம்பாய் நடந்தான். மணி 11 ஆகியிருக்கும்.

சோர்ந்துபோய்த் தோட்டம் வந்தவனுக்கு, கட்டில் போட்டு மரத்தடியில் படுத்திருக்கும் பங்களாக்காரர்தான் தெரிந்தார். நாய் இவனைப் பார்த்து `உர்ர்ர்ர்ர்ர்’ என்றது மீண்டும். அதன் வட்டலில் எலும்புத்துண்டுகள் நிறைய கிடந்தன. சாப்பிட்டு முடித்துவிட்டு போதுமென விட்டுவைத்திருக் கிறதுபோலும். நாய் `உர்ர்ர்’ என்றபோதே கட்டிலில் இருந்து எழுந்தவர், இவனைக் கண்டதும் முகம் மலர எழுந்தார். வேட்டியைச் சரியாகக் கட்டிக்கொண்டவர், இவன் நீட்டிய பாட்டிலை வாங்கி டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

``இவ்ளோ நேரமா ஆறு கிலோ மீட்டர் போயிட்டு வர்றதுக்கு? பாத்துப் பாத்து கண்ணே பூத்துப் போச்சு எனக்கு. சரி, வர்றப்ப வரட்டும்னுதான் கட்டிலைப் போட்டு சித்தே படுத்தேன். ஆமா... உன்னோட வண்டி எங்கே?” அவன் வண்டியைக் காணாததைக் கண்டவர் கேட்டார்.

``அதையேனுங்க கேட்கிறீங்க பங்களாக்கார்ரே! அவன்கூட ஓரியாடி வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சுங்க! சாயந்தரம் வந்தன்னா 20 ரூவாயக் குடுத்துடுறேன்னு சத்தியம் பண்ணிச் சொல்லிட்டு வாங்கிட்டு வந்தா, முனியப்பன் கோயில்கிட்ட வந்ததீம் எம்பட வண்டில பெட்ரோல் இல்லாமப் போயிருச்சுங்க. எனக்கு நேரமே செரியில்லீங்க!” என்று இவன் சொல்லச்சொல்லவே அவர் வீட்டினுள் சென்றிருந்தார். வீட்டினுள்ளிருந்து கோழிக்கறி வாசனை கமகமவென இவன் நாசிக்கு அப்போதுதான் அடித்தது.

தண்ணீர்த் தொட்டிக்குச் சென்றவன், கையை விட்டு அள்ளி அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டான். அள்ளி அள்ளி தாகத்துக்குக் குடித்தான். குடிக்கக் குடிக்கத் தண்ணீர் தேனாய் இனித்தபடி வயிற்றுக்குள் இறங்கியது. போதும் என இவனாக நிறுத்திக்கொண்டு வேப்ப மர நிழலுக்கே வந்தான். வெறுமனே மர நிழலில் வீட்டுவாசலைப் பார்த்தபடி வெகுநேரமாய் அமர்ந்திருந்தான் குட்டி. வீட்டினுள்ளிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. `கார் போயிடுச்சோ என்னுமோ!’ என்று பார்த்து நிம்மதியானான். கார் அதே இடத்தில்தான் நின்றிருந்தது. ``ஊட்டுக்குள்ளயே என்னதான் பண்ணுவாங்க இவங்க?’’

சிக்குவாரிடம் சிக்கிய குட்டி - சிறுகதை

மரத்தடியில் சின்னதாய் ஐந்து கற்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு சப்பணமிட்டு அமர்ந்தான் குட்டி. நிலத்தைக் கையால் கூட்டிவிட்டு, கற்களை மேலே வீசி வீசிப் பிடித்து அஞ்சாங்கல் விளையாட்டை விளையாட ஆரம்பித்தான். `பங்களாக்கார்ரு எப்பிடியும் கொஞ்சமாச்சும் பாட்டில்ல கொண்டு வந்து குடுப்பாரு! அப்பிடியே கடிச்சிக்க எலையில பத்து பீசாச்சிம் போட்டுக் கொண்டாந்து குடுப்பாரு!’

நேரம் ஆகிக்கொண்டேயிருக்க கண்ணாமுழி திருகியது இவனுக்கு. கற்களை தூரப் போட்டுவிட்டு எழுந்தான். வாசலில் போய் நின்று `பங்களாக்காரம்மாவைக் கூப்பிடலாமா?’ என நினைத்தான். அந்தம்மா வந்தால் என்ன கேட்பது? சோறு போடுங்க என்று கேட்க சங்கடமாய் இருந்தது. மெதுவாக, சொல்லிக் கொள்ளாமல் தோட்டத்தை விட்டுக் கிளம்பினான் குட்டி.

ஊருக்குள் வந்தவன் பங்களாக்காரரின் பங்காளி முத்தய்யன் வீட்டுக்குச் சென்றான். முத்தய்யன் கட்டிலில்தான் திண்ணையில் படுத்திருந்தார். இவனைப் பார்த்தவர், ``என்ன இந்நேரத்துல வந்திருக்கே? மணி 12 இருக்குமே!’’ என்றார் படுத்திருந்தபடியே.

``சாமி, ஒரு தப்புப் பண்ணிப்போட்டனுங்க. உங்க பங்காளி பங்களாக்காரரு நேத்து என்கிட்ட ஒரு விஷயத்தை ஊருக்குள்ள சொல்லச் சொல்லிச் சொன்னாருங்க. நான் கொஞ்சம் அந்தச் சமயத்துல நனைஞ்சிருந்தனுங்களா... சரி சாயந்தரமா ஊருக்குள்ளே போயி சொல்லிட்டாப் போவுதுன்னு இருந்தேன். பாருங்க, எச்சாயிப் போயி இன்னா வரைக்கிம் எங்கூட்டுல தூங்கிட்டேன். நீங்க வேற மணி 12 இருக்கும்னு சொல்றீங்களே!”

``அட சுத்தி வளைக்காம என்ன விஷயம்னு சொல்லு! இந்த இழுவை போடுறியே குட்டி?”

``அதானுங்க உங்க பங்காளி காட்டுச் சாமிக்கி காத்தால ஒரு கெடா வெட்டுறாருங்களாமா இன்னிக்கி. ஊருக்குள்ள ஒரு வீடு பாக்கியில்லாம மத்தியான விருந்துக்கு வரச்சொல்லிடுன்னு சொன்னாருங்க. பாருங்க, இப்பத்தான் மொத ஊடு உங்களுக்குச் சொல்றேன். ஊரு பூராவும் சொல்லணும், அப்ப நானு உத்தரவு வாங்கிக்கிறனுங்க!” என்று கும்புடு போட்டுவிட்டு வெளிவந்தவன், அடுத்த வீட்டுக்குச் சென்றான்.

- வா.மு.கோமு