சினிமா
தொடர்கள்
Published:Updated:

அமீலா - சிறுகதை

அமீலா - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
அமீலா - சிறுகதை

தெய்வீகன்

அமீலா - சிறுகதை

ரும்புச்சர்ப்பம் மெதுவாக வந்து அருகில் நின்றது. வேலைநாளின் முன்னிரவு என்பதால் இன்னமும்கூட இருக்கைகளை இலகுவில் பிடித்துவிட முடியாத அளவுக்குப் பயணிகள் நிரம்பிக் காணப்பட்டார்கள். பூர்வஜென்ம புண்ணியம். ஜன்னல்கரை இருக்கை ஒன்று அன்போடு வரவேற்று என்னை ஏந்திக்கொண்டது. யாரோ ஒருவர் அன்றைய மாலை நாளிதழை வாசித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். பத்திரிகையின் ஓரங்கள் படித்து முடித்ததைக் காட்டிக்கொடுக்கும் கசங்கல்களைக் கலையாமல் வைத்திருந்தது.

அமீலா - சிறுகதை

எனது பெட்டியில் திரும்பிய இடமெல்லாம் கறுப்பர்களே இருக்கைகளை நிறைத்திருந்தார்கள். அநேகமானவர்கள் கண்களை மூடியபடி காதுகளில் பொருத்திய கேட்பானில் எதையோ கிரகித்தவண்ணமிருந்தார்கள். இன்னும் சிலர் என்னைப்போலவே ஜன்னல்கரையிலிருந்து வெளிக்காட்சிகளின்மீது தாபம் கொண்டவர்களாகக் கண்ணாடியோடு ஒட்டியிருந்தார்கள்.

“மெல்பேர்ன் வீதிகளில் ஆப்பிரிக்க இளைஞர் கோஷ்டிகளின் அட்டகாசம் அதிகரித்திருப்பதால் சாதாரண மக்கள் உணவகங்களுக்குச் செல்வதுபோன்ற அடிப்படைக் களியாட்டங்களுக்குக்கூட நகர வீதிகளுக்கு வருவதற்கு அஞ்சுகிறார்கள்.”

சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் ஒருவர் அரசியல்சீற்றம் கொண்டு அறிக்கை விடுத்ததை எதிர்த்து இன்றைய பத்திரிகையிலும் புத்திஜீவிகளும் அவர்களுடன் இணைந்து சில எதிர்க்கட்சியினரும், குறிப்பிட்ட அமைச்சரைக் குதறியெடுத்திருந்தார்கள்.

சர்ப்பம் அசையத்தொடங்கியது.

நிற ரீதியாகக் கறுப்பர்களின் மீதான ஆஸ்திரேலிய அச்சத்துக்குப் பெரிய வரலாறே உண்டு. நிறவெறி உச்சம்பெற்றிருந்த காலப்பகுதியில் தமது நாட்டுக்கு ஒத்துவரக்கூடிய முகச்சாயலையுடையவர்களுக்குத்தான் ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சு விசா கொடுத்தது என்றுகூட ஒரு காலமிருந்தது. அதிலிருந்து இந்த நாடு இப்போது சற்றுத் திரும்பிப்படுத்திருக்கிறதே தவிர, இன்னமும் தூக்கத்திலிருந்து முற்றாக எழுந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

சர்ப்பத்தின் வேகம் சற்று உச்சம் பெற்றது.

நகரத்தை நோக்கிப்போகும் ரயில்களிலிருந்து கண்களுக்கு விருந்தாகும் காட்சிகள் எதையும் கண்டுகளித்துவிட முடியாது. விமானத்திலிருந்து பார்த்தால் ஒரு தேசத்தின் அழகைக் காணலாம் என்றால், ரயிலில் போகும்போது ஒரு தேசத்தின் அழுக்குகளைத்தான் காணலாம். பெரும் பெரும் வர்த்தகக் கட்டடங்கள், வீடுகள், ஹோட்டல்கள், உணவகங்கள் எல்லாவற்றினதும் கொல்லைப்புறங்களின் வழியாக ஓடிக்கொண்டிருந்த சர்ப்பம், திடீர் திடீரென்று சில வனப்புக்களை வரைந்துகொண்டு ஓடியது.

என்னைக் கடந்து சென்ற அந்தப் பெருநீரேரியைக் கண்ணிமைக்காமல் பார்த்தவாறு என்னை அறியாமலேயே என் முகம் திரும்பிக்கொண்டபோதுதான் எனக்கு முன்னால் நான்காவது வரிசையிலிருந்த அவளைக் கண்டு திடுக்குற்றேன்.

அமீலா!

ங்கள் வீட்டில் இடம்பெறுகின்ற மிகப்பாரதூரமான பிரச்னைகளுக்கெல்லாம் புத்தி நிறைந்து வழியும் எனது மூளையின் துணைகொண்டு தீர்வுகளைக் கண்டுபிடித்துவிடுவதில் நான் சுழியன். அப்படியென்று வீட்டில் எல்லோரும் என்னைப் பல தடவை பாராட்டியிருக்கிறார்கள். ஆனால், என்னால் எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியாதிருக்கும் சாகாவரம்பெற்ற பிரச்னை ஒன்றுண்டு என்றால், அது துவைப்பதற்காகத் துவையல் இயந்திரத்தினுள் போடப்படும் எனது காலுறை ஒருபோதும் அதன் சோடியோடு வெளியில் வருவதில்லை என்பதுதான். ஏனைய ஆடைகள் சிலவேளைகளில் துவையல் இயந்திரத்தினுள் போட்ட எண்ணிக்கையைவிடக் கூடுதலாகக்கூட வெளியில் வந்து சேர்ந்திருக்கின்றன.
அது எப்படி என்று கேட்க வேண்டாம். ஆனால், இந்தக் காலுறை மாத்திரம் எப்போது பார்த்தாலும் தனியனாகவே என்னை வந்தடைந்துகொண்டிருக்கிறது.

இந்தச்சிக்கல், நான் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலப்பகுதியில் மிகச்சிக்கலானதொரு அனுபவத்தை எனக்குள் ஒப்படைத்திருந்தது.

மாணவர் குடியிருப்பில் தங்கியிருந்தபோது, நான் பயன்படுத்துகின்ற துவையல் இயந்திரத்தைத்தான் அதே குடியிருப்பிலிருந்த சோமாலியப் பெண்ணொருத்தியும் பயன்படுத்தக்கண்டிருந்தேன். சுமார் நூற்றுப்பத்து அறைகள் கொண்ட அந்த மாணவர் குடியிருப்பில் எத்தனையோ மாணவர்கள் தங்கியிருந்தார்கள். ஆனால், குடியிருப்புக்குப் பொதுவான அந்தத் துவையல் இயந்திரத்திலிருந்து எனது காலுறை காணமால்போகின்றபோதெல்லாம் அந்த சோமாலியப்பெண்தான் அதனைத் திருடுகிறாள் என்று சம்பந்தமே இல்லாத ஒரு சந்தேகம் எனக்குள் பரவத்தொடங்கியது. எந்த திசையில் யோசித்தாலும் அப்படியொரு சந்தேகம் வருவதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் எனக்கே புரிந்துகொள்ள முடியாதுள்ளபோதும் அவள்மீது எனக்குத் தீராத சந்தேகம் மொய்த்தபடியிருந்தது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவளது கால்களைப் பார்ப்பேன். அவளும் தன்னில் பார்ப்பதற்கு எத்தனையோ விடயங்கள் கிடக்க, இவன் ஏன் காலைப் பார்க்கிறான் என்று ஆரம்பத்தில் என்னை விசித்திரமாகப் பார்ப்பாள். இது ஒருவிதமாக, தலைகால் புரியாத மர்மமான உறவாக எங்களுக்குள் ஆரம்பித்தது.

காலுறைக்காக அவளுடைய கால்களைப் பார்க்கத் தொடங்கியபோது ஒன்றைக் கவனித்தேன். அவளுடைய கால்கள் சாதாரணமானவை அல்ல. கமுகு மரம்போல நெடியவை. நீளம் என்றால் பயங்கர நீளம். இன்னொரு பக்கத்தால் யோசித்துப்பார்த்தால் இந்த சோமாலியப்பெண்ணின் கால்களுக்கு எனது காலுறையெல்லாம் அளவே வராதுதான். இருந்தாலும் நான் காலுறைகளைத் தொலைக்கும்போதெல்லாம் அவள்மீது சந்தேகம் வலுத்தபடியேயிருந்தது.

அது எனக்கே என்மீது கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவள் கால்களை நான் தொடர்ந்து கவனிக்கும் கலாசாரத்தைக்கண்டு அந்த ஆப்பிரிக்க அழகி காலப்போக்கில் என்னைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக வெட்கப்பட ஆரம்பித்தாள். எனக்குக் காட்டுவதற்காகவே கெந்தி கெந்தி நடக்கத்தொடங்கினாள். கால்களை முற்றாகவே எனக்குக் காண்பிக்க வேண்டும் என்ற தயாள சிந்தையுடன் கால்களை மறைக்கும் ஆடைகளையும் குறைக்கத் தொடங்கினாள். ஆப்பிரிக்கர்களில் நான் மிக ஆழமாக அவதானித்த ஒன்று, அன்பென்றாலும் அழகென்றாலும் எதுவென்றாலும் அதனை அவர்கள் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளக்கூடியவர்கள்.

இப்படிக் கால்வழியாக எங்களுக்குள் கூர்ப்படையத்தொடங்கிய உறவு நீட்சியடைந்துகொண்டிருந்த ஒருநாளில்தான் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்பதை அவள் அறிந்துகொண்டாள். அதன் பிறகு, அவள் என்னை ‘`லங்கா” என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள்.

அவள் அவ்வாறு அழைப்பது ஏதோ பால்மாவின் பெயரில் என்னைக் கூப்பிடுவதுபோல இருந்தாலும் என் காலுறைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்கு அத்தியாவசியமான அவளது உறவுக்கு அந்த அழைப்பு உதவியாக இருக்கட்டுமே என்று பதிலுக்கு வெட்கப்பட்டுக்கொண்டே அவளுடைய கால்களைப் பார்த்துக்கொண்டேன். அவளும் தனது கரிய வெட்கத்தை எனக்காக நாளும் பொழுதும் உருக்கி ஊற்றினாள். வெட்கத்தோடு சேர்த்து போனஸாக உதிர்க்கும் அவளது சிரிப்பு நாங்கள் அடிக்கடி சந்திக்கும் துவையல் இயந்திர அறையில் வெளிப்பக்கமாக சாதுவாக உடைந்திருக்கும் பதினாலாம் நம்பர் துவையல் இயந்திரத்தில் வெளித்தள்ளும் சோப்பு நுரைபோல அடர்த்தியாக இருந்தது.

மிகச்சொற்பமான ஆப்பிரிக்கப் பெண்களுக்கு மாத்திரம் அழகாகக் காணப்படும் விசித்திரமான முடி அலங்காரங்களையெல்லாம் தனக்கும் அணிவித்து எனக்குக் காண்பிக்கவேண்டும் என்று அவள் கடும் முயற்சி செய்தாள். முடியைத் தனித்தனிக் குட்டிப்பின்னல்களாகச் செய்து வளைய வளைய விட்டபடி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அழுக்கு உடுப்புகளுடன் துவையல் இயந்திர அறைக்கு வருவாள். அவளது தலையில் பாம்புக்குட்டிகள் படுத்துக்கிடப்பதுபோல இருக்கும். அது அவளுக்கு அழகாகவும் இருந்தது.

அமீலா - சிறுகதை

“லங்கா... அழகாக இருக்கிறதா” - என்று ஒருமுறை கேட்டாள்.

“ம்” - என்றேன்.

“க்ளுக்” - என்றாள்.

என் அம்மாவுக்கு ஆப்பிரிக்க மருமகளாகிவிட வேண்டும் என்ற அபாரமான ஆசைகள் அவளுக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன என்பதை என்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவளின் நிறத்தோடு ஒப்பிடும்போது நானொரு வெள்ளைக்காரனாகத் தெரிந்துகொண்டதும்கூட அதற்கான காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அவள்மீதான எனது விம்பத்தை ஆரம்பத்திலேயே ஒரு திருடியாகவே எனக்குள் கட்டியமைத்துக்கொண்டதால் அவளை எப்படியாவது காலும் களவுமாகப் பிடிக்கவேண்டும் என்பதிலேயே என்மனம் கவனம் கொண்டிருந்தது தவிர, அவளது சிருங்காரங்களை ரசிப்பதற்கு அது அனுமதிக்கவில்லை.

இவ்வாறு நான் தொலைத்துக்கொண்டிருக்கும் காலுறைகளை ஒருநாள் கண்டுபிடித்து அதற்கு அவள்மீது திருட்டுப்பட்டம் சுமத்திவிடவேண்டும் என்றும் அவளிடம் ஒளிவீசத்தொடங்கியிருந்த காதலுக்கும் அப்பால் அவளிடம் ஒளிந்துகிடக்கும் என் காலுறைகளை சுவீகரிக்கவேண்டும் என்றும் எண்ணியிருந்த நாளொன்றில், நான் சற்றும் எதிர்பாராதவண்ணம் அவளது உள்ளாடையொன்று எப்படியோ எனது உடுப்புக்களுடன் சேர்ந்து எனது அறைக்கு வந்துவிட்டது.

லங்காவுக்கு பிடரியைப் பொத்தி அடித்தது போலிருந்தது.

இதனை இப்போது எப்படி அவளிடம் கொண்டுபோய்க் கொடுப்பது? இதை அவள் அறிந்தால் லங்காவின் மானம் என்னாவது? கேவலமாக நினைக்கமாட்டாளா? அப்படியானல், அவளுக்குத் தெரியாமல் இதனை எப்படி அவளிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது?

பொதுவிலேயே உள்ளாடை பற்றிப்பேசுவதென்றால் எனக்கு உடம்பெல்லாம் புழு நெளியும். அப்படிப்பட்டதொரு பிறவிப்பிரச்னை எனக்குப் பலகாலமாக இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வெளிநாடு வரும்வரைக்கும் எனக்கு ஜட்டி வாங்கித்தந்தது அம்மாதான். எனக்குப் பிடித்தமான நீலக்கலர் பொண்ட்ஸ் ஜட்டியை வாங்குவதில் எனக்கிருந்த கொள்கைப்பிடிப்பு ஒருபோதும் கடைக்குப்போய் அதனை வாங்குவதற்கான துணிச்சலைத் தந்ததே இல்லை. துவைத்து ஒரே நிறத்தில் வரிசையாகக் கொடியில் காயவிடுகின்ற ஜட்டிகளைக்கூட, வீட்டுக்கு யாராவது வருகிறார்கள் என்றால் ஓடிப்போய் காய்ந்தும் காயாததுமாகத் தூக்கிவந்துவிடுவேன்.

அதுபோலவே, ஜட்டியைக் கடையில் போய் வாங்குவதென்பதும் நான் அங்கு அம்மணமாகவே போய் நிற்பதுபோன்ற அதிவெட்கத்துக்குரிய விடயமாகவும் அதனை அம்மா வாங்கித்தந்தால் போட்டுக்கொள்வது என்பது
பரம திருப்திக்குரியதாகவும் தொடர்ந்து வந்தது.

அம்மாவுடன் புடைவைக்கடைக்குப் போகும் சந்தர்ப்பங்களிலும்கூட, அம்மா தனக்குரிய சேலை மற்றும் உடுபுடைவைகளைத் தெரிவுசெய்துவிட்டு, எனக்கு ஜட்டி வாங்குவதற்கான பேச்சினைக் கடைக்காரரிடம் கேட்கப்போகிறார் என்று தெரிந்தால் கடை வாயிலுக்கு ஓடிவந்துவிடுவேன். கதவு விளிம்பில் நின்றபடி உள்ளே என்ன நடக்குது என்று எட்டிப்பார்ப்பேன். அம்மா எப்போதுமே உடுப்பு வாங்குவதற்காக எண்ணெய்க்கடை சந்திக்குப் பக்கத்திலிருந்த புடைவைக்கடைக்குத்தான் போவது வழக்கம். அங்கு வேலை செய்த நளாயினிக்கு எப்போதுமே என் மீதொரு நக்கல் பார்வையிருக்கும். அவளின் தங்கை என்னோடு படித்தவள். அவள் ஊடாக ட்யூசனில் நான் போடுகின்ற குழப்படிகள் அனைத்தையும் அறிந்துகொள்வதாலோ என்னவோ என்னை எப்போது பார்த்தாலும் ஒரு வசீகரமற்ற சிரிப்பைத்தான் நளாயினி உதிர்ப்பாள். அதில் ஏதோ ஒரு கபடமிருப்பதுபோலிருக்கும்.

ஆக, அவள் வேலை செய்யும் கடையில் ஜட்டி வாங்கிப்போடுவதும் அவள் எடுத்துக்கொடுத்த ஜட்டியைத்தான் நான் போட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை அவள் தெரிந்திருப்பதும் எனக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது.

இதை எப்படி அம்மாவிடம் சொல்வது? 

அங்கு மாத்திரமல்ல, எங்கு போய் உள்ளாடை வாங்குவதென்றாலும் அது எனது வெட்கத்தோடு மல்லுக்கட்டுகின்ற பெரும் போராட்டமாக இருந்தது.

அப்படிப்பட்ட எனது வீட்டுக்குள் இப்போது சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணின் உள்ளாடையொன்று வந்திருக்கிறது என்றால் எப்படியிருக்கும்? இதற்கு நளாயினியே பரவாயில்லை என்பதுபோலிருந்தது.

இப்போது இதற்கு என்னதான் தீர்வு?

இதுபோன்ற பிரச்னைகளுக்கு விஞ்ஞானம் எந்தத் தீர்வையும் தராதது மனிதகுலத்தின் பெரும் அவமானமல்லவா?

சரி.

அவளது உள்ளாடையைத் துவையல் இயந்திர அறையிலேயே கொண்டுபோய் அநாமதேயமாகப் போட்டுவிட்டு வந்துவிடலாமா? அப்படியே போட்டாலும், அது அவளிடம் போய்ச் சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே.

வெட்கம் மானம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு அவளின் கைகளில் கொண்டுபோய் இந்த உள்ளாடையைக் கொடுத்துவிட்டு வருவதுதான் சரி. அவள்தான் இப்போது சிரிக்கத்தொடங்கிவிட்டாளே, அதற்கும் மேலாக வெட்கத்தையும் தருகிறாள். பதிலுக்கு நான் அவளது உள்ளாடையையாவது கொடுக்காவிட்டால் எப்படி?

எனது உயிரெடுக்கும் நண்பர்கள் சிலர் அப்போது எனது பல்கலைக்கழகக் குடியிருப்பு அறைக்கு அடிக்கடி வந்துபோவது வழக்கம். அவரவருக்கு வீடு வாசலிருந்தபோதும் தங்களுடைய உடுப்புகளைக் கொண்டுவந்து நானிருந்த மாணவர் குடியிருப்புத் துவையல் இயந்திரத்தில் துவைத்துக்கொண்டு போகுமளவுக்குப் பெருந்தன்மை உடையவர்கள் அவர்கள். அவர்களில் இந்தத்துறையில் மிகுந்த பரிச்சயமுள்ள சிலரை அழைத்து பிரச்னைக்கு யோசனை கேட்டேன்.

அவர்கள் உடனே, தாங்கள் இவ்வளவு காலமும் இந்த இயந்திரத்தில்தான் துவைக்கிறோம். தங்களுக்கு அப்படியெந்த அதிர்ஷ்டமும் கிடைக்கவில்லையே என்ற சொந்த சோகங்களைக் கொட்டத்தொடங்கினார்களே தவிர, எனது பிரச்னைக்குத் தீர்வு சொல்லவில்லை.

இப்படியாக இரண்டு கிழமைகள் அந்த ஆப்பிரிக்கக்காரியின் உள்ளாடை எனது அறையில் கிடந்தது. அதனை என்ன செய்வதென்று தெரியாமல் அது கிடக்கும் அறையில் தனியே தூங்குவதற்கு ஏற்பட்ட பயத்தினால் என் நண்பன் ஒருவனைத் துணைக்கழைத்தேன். அவனும் வந்து எனது அறையிலேயே தங்கினான்.

அறையிலிருந்த உயரமான உடுப்பு அலுமாரியின் மேல்தட்டில் அந்த உள்ளாடையை பொலித்தீன் பையில் போட்டுச் சுற்றிக்கட்டி பத்திரமாக வைத்துக்கொண்டேன். நாங்கள் இருவரும் பெரும் குற்றமொன்றைச் செய்வதுபோலவும் எமது அறைக்குள் எமக்குத் தெரியாமலேயே இன்னொருவர் ரகசியமாகத் தூங்கிக்கொண்டிருப்பது போலவும் ஒரு பிரம்மை எங்கள் இருவரையும் மிரட்டிக்கொண்டிருந்தது.

இரண்டு கிழமைகளாக நானும் அவனும் பல்கலைக்கழகத்துக்குப் போவதும் வீட்டுக்கு வந்து இந்த உள்ளாடையை எப்படியாவது அவளிடம் கொண்டு சேர்ப்பது பற்றியும் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். அடிக்கடி அலுமாரி மேல்தட்டையும் கவனித்துக்கொண்டோம். ஆனால், இரண்டு மூன்று நாள்களாக அவளை துவையலறைப்பக்கம் காணவில்லை.

அவள் குடியிருக்கும் அறை அந்தக் குடியிருப்பில் குத்துமதிப்பாகத் தெரியும் என்பதனால் காற்று வாங்கப்போவதுபோல நடந்துசென்று அவளது வீட்டுப்பக்கத்தை நோட்டமிடலாம் என்று ஒருநாள் மாலையில் புறப்பட்டுச்சென்றோம்.

அவள் தங்கியிருந்த வீட்டில் இன்னொரு ஆப்பிரிக்க இளைஞன் தங்கியிருந்தான். அவன் மேலாடை இல்லாமல் வெளியில் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த எவருமே ஆப்பிரிக்கா ஒரு வறிய கண்டம் என்பதை ஒப்புக்கொள்ளவேமாட்டார்கள். அவனுக்குப் பின்னால் தெரிந்துகொண்டிருந்த அந்த வீட்டின் குளிர்சாதனப்பெட்டியின் இருமடங்கு அகலத்தில் அவன் தெரிந்தான்.

“அவன் கிடக்கிறான் மலையன்! மச்சான், இண்டைக்கு இரவு அவளிண்ட வீட்டு வாசலிலேயே கொண்டுபோய் இதைப் போட்டிட்டு வருவம். விடிய எழும்பிப் பார்த்து, தான் துவையல் அறையிலிருந்து கொண்டுவரும்போது விழுத்திப்போட்டதாக நினைத்து அவளே எடுத்துக்கொள்வாள்.”

துவையல் தோழன் சொன்னது எனக்கும் சரியென்று பட்டது.

ஆனால், அன்று மாலை பல்கலைக்கழகத்தில் பாய்ந்து விழுந்து ஓடிவந்தவன் - “மச்சான், அவள் இப்ப அங்க இல்லையாம். வீடு மாறிப்போட்டாளாம்”  என்றான்.

இந்தத் தகவல் எனக்கு ஒரேயடியாக ஒரு திடீர் திருப்தியைத் தந்தாலும் ஆப்பிரிக்காவை நானும் கடைசியில் சுரண்டிவிட்டேனே என்பதை எண்ணியபோது வருத்தமாக இருந்தது. அதுவும் இவ்வளவு கேவலமான முறையில் அமெரிக்காகூட ஆப்பிரிக்காவைச் சுரண்டவில்லை என்பதை நினைக்கும்போது என்மீதே எனக்குக் கோபமும் வந்தது.

அன்று மாலை, இருவரும் பாம்புக்குட்டிப்பெண்ணின் உள்ளாடையை பொலீத்தீன் பை ஒன்றில்போட்டுக்கட்டி மிகுந்த பாதுகாப்புடன் கொண்டுபோய் எறிந்தோம். குப்பைத்தொட்டியில் அது விழுந்தபோது `க்ளுக்’ என்றொரு சத்தம் கேட்டது. அது அவள் ஞாபகமாக சிறியதொரு பரிதாபத்தை எனக்குள்ளே ஏற்படுத்தியது.

அவள் எங்கே போயிருப்பாள், ஏன் போயிருப்பாள் என்ற கேள்விகளையெல்லாம் மனம் ஒரு நொடியில் கேட்டு பின்னர் மறைந்துவிட்டது. அதற்குப்பிறகு அவளிருந்த வீட்டுப்பக்கம் போய்ப் பார்த்தபோது அந்த இருநூறு கிலோ இளைஞனையும்கூட அங்கு காணவில்லை. அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்திருந்த சீனப்பெண்கள் கூட்டமொன்று என்னைப்பார்த்து சிணுங்கிக்கொண்டு சிரித்தது. நானும் பதிலுக்கு அனுங்கிவிட்டு வந்துவிட்டேன்.

அதன்பிறகான நாள்களில் அவள் தொடர்பான காலுறை ஞாபகங்கள் அகன்று அவளது பாம்புக்குட்டிப் பின்னல்கள்தான் நினைவில் வளைந்து வளைந்து வந்தன. அவள் அந்தக்குடியிருப்பில் இல்லை என்று உறுதியான பின்னரும்கூட நான் என் காலுறைகளைத் தொலைத்துக்கொண்டுதானிருந்தேன். அதனால் துவையல் இயந்திர அறைப்பக்கம் போகின்றபோது அழுக்குத்துணிகளையும்விட மிகப்பாரமானதொரு உணர்வு மனதில் ஏற்படத்தொடங்கியது. உடுப்புகள் துவைத்து இயந்திரம் ஓயும்வரைக்கும் அவள் காத்திருக்கும் துவையலறைக்கதிரை, அவள் அடிக்கடி பயன்படுத்துகின்ற துவையல்தூள் என்று அந்தத் துவையல் அறை பல ஞாபகங்களை பாம்புச்செட்டைகள்போல உரித்து உரித்து எனக்குள் போடத்தொடங்கியது.

காலுறையுடன் அவள் ஓடிப்போய்விட்டாள் என்று புலனாய்வுத்தகவலோடு அவளது பெயர் அமீலா என்ற புதையல் தகவலையும் என்னிடம் சமர்ப்பித்த மறுநாளே என் துவையல் தோழனும் தனது வீட்டுக்குப்போய்விட்டான்.

அவனுக்குச் சொல்லாத எனது பசுமையான கறுப்பு நினைவுகளோடு நான் பல்லைக்கழகத்தின் எல்லாக் கட்டடங்களுக்கும் அவளைத் தேடித் தேடி எறி இறங்கிப் பார்த்தேன். முதன் முதலாக அவளது முகத்தைத் தேடி என் கால்கள் நடக்கத்தொடங்கியிருப்பதை நினைத்தபோது எனக்குள் துயர்நிறைந்த சிறுகோபம் வந்தது. அது சுகமாகவும் இருந்தது. பல்கலைக்கழகக் குடியிருப்பில் தங்குவதற்கு அறை வேண்டுமென்பவர்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம் என்று, `லங்கா’ எனப் பெயரைப்போட்டு எனது இலக்கத்தையும் எழுதி நோட்டீஸ் பலகைகளில் போட்டுவிட்டேன். அது அவளுக்கு மாத்திரம் தெரிந்த பெயர் என்பதால் அதைக்கண்டால் நிச்சயமாக அவள் என்னை அழைப்பாள் என்று நம்பினேன்.

அன்றாடம் காலுறை அணியும்போதெல்லாம் அவள் நினைவுகள் வெட்ட முடியாத கிளைகளாக நெஞ்சில் நிழல் பரப்பும். கூடவே “க்ளுக்” என்ற அவள் சத்தமும் ஒரு கணம் ஒலிசிந்தி நினைவில் மறையும்.

மீலா எனது பெட்டியிலேயே தனியே இருந்தாள். எல்லோரையும்போல காதுக்குள் கேட்பானை அணிந்திருந்தாள். கண்டபோது முதலில் அதிர்ச்சி. பின்னர் மிகச்சாதாரணமாக உணர்ந்தேன். அது பல்கலைக்கழக வாழ்வின் பின்னரான முதிர்ச்சியோ அல்லது இயல்பாக வயதின் மீது ஒட்டிக்கொண்ட முதுமையோ தெரியவில்லை. அவளது பாம்புக்குட்டிப் பின்னல்களோ முந்தைய கூர் பார்வையோ எல்லாமே மாறி, இப்போது புதிய ஒப்பனைக்குள் ஒளிந்திருந்தாள். இருந்தாலும் அதே அழகு அவள் உடலில் அந்தந்த இடங்களில் உள்ளொழிந்துகொள்ளமுடியாமல் வெளியிலும் வீழ்ந்தவண்ணமிருந்தன.

எழுந்து சென்று அறிமுகப்படுத்தவதற்கு முன்னரே, என்னைக் கண்டுவிட்டாள்.

“லங்கா” – என்று எழுந்த வேகத்தில் காதுகளிலிருந்து கலைப்பனைப் பிடுங்கிக்கொண்டு பாய்ந்துவந்து கட்டியணைத்துக்கொண்டாள். சர்ப்பம் சற்று ஆடியபோது இருவரும் சுதாரித்துக்கொண்டு இருக்கைகளில் அமர்ந்துகொண்டோம். தன் முன்னால் கண்ட காட்சியைக் கண்களால் ஜீரணிப்பதற்கு தன்னிரு கண்கள் போதாது என்பதுபோல விழிகளை இன்னும் இன்னும் விரித்துக்கொணடே என்னைப் பார்த்தாள். என் கண்களுக்குள் அவள் நிச்சயம் தெரிந்திருப்பாள்.
நான் வெட்கங்கொண்டு பார்த்திராத அவளுக்கு அது முதல் அனுபவமாக இருந்திருக்கலாம்.

குத்துச்சண்டை வீரர்கள்போல இரண்டுகைகளையும் நெஞ்சுக்கு முன்பாக வைத்துக்கொண்டு சத்தம் வராமலேயே வாய்திறந்தபடி சிரித்தாள். நான் பார்த்திருக்க கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் கரும்பாறையில் நெளிந்தோடும் மழைநீர்போல கன்னங்களில் வழிந்தது. தோளில் தொங்கிய தோகையினால் அள்ளித்துடைத்தாள். அது சீவி விட்டதுபோன்ற இமைக்கறுப்பின் விளிம்புகளையும் சாதுவாக அள்ளிச்சென்றது. அவளால் என்னை நம்பமுடியவில்லை. எனக்கோ எம்மையே நம்பமுடியவில்லை. ரயிலின் வெளியே வேகமாக ஓடிக்கொண்டிருந்த காட்சிகளைவிட வேகமாக நாங்கள் காலங்களைக் கடந்துவந்து ஒரு ராஜதருணத்தை வென்றிருக்கிறோம் என்பதை இருவரும் உணர்ந்துகொள்வதற்குச் சில நொடிகளானது.

என் கைகள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு மீண்டுமொரு “லங்கா” என்றாள். அவளால் அதையாவது சொல்லமுடிந்தது. எனக்கோ திமிர்கொண்ட கண்ணீர்ச் சுரப்பிகள் நீர் சிந்தவில்லையே தவிர அவளைக் கண்டதில் - அவள் கண்ணீரில் - அவள் ஸ்பரிசத்தில் - எனக்குள் உறைமெழுகாயிருந்த நினைவுக்குமிழ்கள் ஒவ்வொன்றாக எழுந்து ஒளிசிந்திக்கொண்டிருந்தன. எனக்குள் ஒரு பெரு வெளிச்சம் எல்லா இருட்டுகளையும் விரட்டியதுபோல உணர்ந்தேன்.

அந்த ரயில் பயணம் முழுவதும் ஒலிகுன்றாது பேசினோம். எமக்குள் மீண்டும் ஏதோ ஒன்று சூழ்ந்துகொண்டதுபோன்ற அரூபம் துளிகொண்டது. தான் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகவிருப்பதாக அவள் சொன்னாள்.

அவளது தொலைந்துபோன உள்ளாடை பற்றியும் என்னால் தொலைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலுறை பற்றியும் தவிர்த்து மிகுதி எல்லா விடயங்களையும் பேசினோம். ஏதோ ஒன்றைக் கேட்டுவிடவேண்டும் என்று நான் குரலெடுத்தபோது, அடுத்தநாளே வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்துவிட்டு தனது தொலைபேசி இலக்கத்தையும் தந்துவிட்டுப்போய்விட்டாள்.

காடொன்றில் இறங்கிச்சென்ற கண நேர மின்னல்தான் அது. நினைவுச்சிசுக்களின் கண்கள் அனைத்தும் ஒருகணம் கூசிவிட்டன.

அவள் இறங்கிச்சென்ற கணத்திலிருந்து எத்தனையோ எண்ணங்கள் என் நினைவுக்குகைகள் அனைத்திலும் தீவெட்டிகளோடு படையெடுத்துத் திரிந்தன.

அவள் கணவன் யார் என்பது மனதைச்சுரண்டத்தொடங்கியது. முன்பு அவளிருந்த மாணவர் குடியிருப்பில் நாங்கள் கண்ட இருநூறு கிலோ மலையனாக இருப்பானோ.

கேள்விகள் மனக்கிணற்றில் தவளைகள் போலப் பாய்ந்துகொண்டிருந்தன.

அடுத்தநாள் அமீலா வீட்டுக்குச்சென்று அழைப்பு மணியை அழுத்தியபோது, கறுத்த - கட்டுமஸ்தான கனவான் கதவைத் திறந்தார். அவர் நிச்சயமாக பல்கலைக்கழகக் குடியிருப்பில் அவளோடு தங்கியிருந்தவர் போலில்லை. அமீலாவுக்குச் சிறந்த சோடி என்று என்னையே நம்பவைக்குமளவுக்கு நயம் கொண்டிருந்தார். அமீலா உள்ளிருந்து ஓடிவந்தாள். ரயிலில் பார்த்த அந்தக் கண்களில் கடந்த 24 மணிநேரத்தில் எந்தப்பரவசமும் குறைந்ததாகத் தெரியவில்லை. கணவன் கை தந்து வரவேற்று முடித்த மாத்திரத்தில் அவள் கட்டியணைத்தாள்.

அமீலா - சிறுகதை

அவளது குழந்தை அவளைப்போலவே குறுகுறுத்த பார்வையும் நீண்ட கால்களோடும் ஓடிவந்தது. அவளுக்குப்பிடித்த பாம்புக்குட்டிப் பின்னல்களைக் குழந்தைக்கும் போட்டிருந்தாள். அது அந்தச் சுட்டிக்கு இன்னும் அழகாக இருந்தது.
அந்தச் சுட்டி என்மீது பாய்வதும் கட்டி அணைப்பதுமாக அப்படியொரு அந்நியோன்யத்தை எனக்குள் விதைத்தாள். அவளைப்போலவே அவளின் மகள் அடிக்கடி சிந்திக்கொண்டிருந்த “க்ளுக்” சத்தம் இன்னும் இன்னும் அழகாக இருந்தது.
அவளின் மகள் என்மீது அலைபோல வந்து விழுவதும் சிரிப்பதுமாக விளையாடுவதைப் பார்த்து அவள் தனது முகம் முழுவதினாலும் சிரித்தாள். பூரித்தாள். இருவருக்கும் இடையில் முன்பும் இப்போதும் இன்னமும்கூட சொல்லமுடியாத – சொல்லவேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளே நுரைத்திருக்க, எங்களுக்குள்ளேயே அவற்றுடன் பேசிக்கொண்டோம்.

உணவு மேசையைத் தயார் செய்துகொண்டு அழைத்தபோது அங்கு அவளது அன்பும் ஆகாரமும் சம விகிதத்தில் பகிர்ந்துகிடந்தது. மேசையின் நடுவில் ஆப்பிரிக்கப் பாரம்பர்ய முறையில், பெரியதொரு மீனைப்பிளந்து அறுசுவையைப் புகுத்தி குறுகத்தறித்து வளர்த்தியிருந்தாள். அதன் தலையிலிருந்து வால்வரை சில கணங்களுக்கு முன்னர் அளவு பார்த்து ஊற்றிவிடப்பட்டிருந்த சுவைக்களிம்பினால் அந்த மீன் வெந்து தணிந்துகொண்டிருந்தது. ஆவி இன்னமும் பறந்தபடியிருந்தது. மீனைப்பொரித்த மொறோக்கோ எண்ணெய் வாசம் எனக்கான சிறப்பு வரவேற்புரையை நிகழ்த்தியபடியிருந்தது. எனது ஆசியப்பின்னணியை மிகக்கிரமமாக யோசித்து அவள் செய்திருந்த சப்பாத்திகளும் அருகிலிருந்தன. கோழிக்கால்களைப் பொரித்து நெளித்து செய்திருந்த கறியின் மீது பல வண்ணங்களில் வாசனைகளைத் தூவியிருந்தாள்.

விருந்து முடிவடைந்து வீட்டுக்குக் கிளம்பும்போது அவளும் கணவரும் நிறைவாக வழியனுப்பிவைத்தார்கள். வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு வரும்போது அங்கு அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த அவர்களுடைய காலணிகள் அனைத்திலும் அவற்றுக்கான காலுறைகளும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. ஒருகணம், அவற்றை உற்றுப்பார்த்த நான் உடனடியாகவே பார்வையைத் திருப்பிக்கொண்டேன். அதுவும்கூட, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஏற்பட்ட முதிர்ச்சி என்று உணர்ந்து தணிந்துகொண்டேன்.

அப்போது கணவனிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு, எதையோ மறந்தவிட்டவள்போல வீட்டுக்குள் ஓடினாள். கையில் பல வண்ணப்பையோடு ஓடிவந்தாள். அது தனது நினைவாக பரிசு என்றுகூறி என் கையில் கொடுத்தாள். அவளது குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டேன். காரில் வந்து ஏறும்வரை அவளின் இடுப்பிலிருந்தபடி அந்தச் சுட்டி எனக்காகக் கை அசைத்தபடியிருந்தாள். அதன்பிறகு பறக்கும் முத்தங்களை அள்ளி வீசினாள்.

வீடு வரும்வரைக்கும் அவள் கண்கள் எனக்குள் சிரித்துக்கொண்டே இருந்தன. அவளது குழந்தை தந்த முத்தமும் அவளது வாசமும் என் மேலாடையெங்கும் மேலும் மேலும் வாசங்களைக் குட்டிபோட்டபடியிருந்தது. ஒரு நீண்ட சோலையின் வழியாக ஐஸ்கிறீம் சாப்பிட்டபடி நடந்து சென்ற சிறுகுழந்தையின் பூரிப்போடு சிக்னலில் நின்றபோதும்கூட என்னையறியாமல் சிரித்தேன். அவளை மீண்டும் கண்டுகொண்டதற்காக எனக்கு நானே வாழ்த்து சொல்லிவிடவேண்டும் போலிருந்தது.

வீட்டுக்குப் போனவுடனேயே அலுமாரியின் நான்காவது தட்டில் நீண்டகாலமாக பிரிக்காமலிருந்த அந்தக் கறுப்பு நிற பொலித்தீன் பையை எடுக்கவேண்டுமென்று மனம் உந்தியது. காரின் வேகத்தைக் காலும் சற்று உந்தியது.

காருக்குள்ளிருந்த பரிசுப்பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சந்தர்ப்பங்கள் நழுவிக்கொண்டே போய்விட்டது. உந்தியபோது, அவள் முந்தியபடி “போய்ச் சேர்ந்துவிட்டாயா”  என்றாள்.

“இப்போதுதான் உள்ளே நுழைந்தேன். நீ அழைக்கிறாய்” என்றேன்.

“நினைவுப்பரிசுப்பையைப் பிரித்துப்பார்த்துவிட்டாயா?”

அவளைத்தொடர்பில் வைத்தவாறே பையைப் பிரித்தேன்.

பல்கலைக்கழகக் குடியிருப்பின் இப்போதைய தோற்றத்தைப் படம்பிடித்து, அதில் என்னுடைய பெயரைச் சிறிய நூலால் நெய்து, அழகான கைவேலைப்பாடுடன் கூடிய காலண்டராகச் செய்திருந்தாள். அவளது குழந்தையின் சிரிப்பைப்போல மிகவும் அழகாக இருந்தது. அதற்குக் கீழ் ஒரு சிறிய பொதியுமிருந்தது. அதை எடுத்துப்பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் ஒரு நீல நிற பொண்ட்ஸ் பிராண்ட் ஜட்டியொன்றிருந்தது.

“க்ளுக்.”

- ஓவியங்கள்: ஸ்யாம்