Published:Updated:

விராட் கோலி தோல்விக்கான முகம் அல்ல..! ஹலோ... ப்ளூடிக் நண்பா!

விராட் கோலி தோல்விக்கான முகம் அல்ல..! ஹலோ... ப்ளூடிக் நண்பா!
விராட் கோலி தோல்விக்கான முகம் அல்ல..! ஹலோ... ப்ளூடிக் நண்பா!

`விளையாட்டோ, அலுவலகமோ அணி வெற்றியைத் தீர்மானிப்பதில் தலைமையின் பங்கு ஓர் எல்லைக்குட்பட்டதே. பெரும்பாலும் குழப்பமானதும் கூட. நல்ல திறமைகளே ஓர் அணியின் அடித்தளம். அதை உருவாக்க வேண்டும்.’

விராட் கோலி இன்று தோல்வியின் முகம். இந்த ஐ.பி.எல் சீசனில் ஆறு ஆட்டம்; அனைத்திலும் தோல்வி. சரி, ஐ.பி.எல் பரவாயில்லை; விளையாட்டான விளையாட்டுதானே எனக் கடக்கலாம் என்றால் சென்ற மாதம் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா டூர் வந்த போது டி20 தொடர், ஒரு நாள் தொடர் இரண்டையும் நம் மண்ணிலேயே பறி கொடுத்தோம். அதனால் கோலியின் தலைமைத்துவத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

எண்களின்படி பார்த்தால் ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த கேப்டன் கோலிதான் (குறைந்தது 15 போட்டிகளில் கேப்டனாக இருந்தோரை மட்டும் கணக்கில் கொண்டால்). அவரது வெற்றி விகிதாசாரம் 73.88%. தோனியே 60%க்கும் கீழ் தான். கடந்த ஐந்து ஆண்டுகளின் இந்திய கிரிக்கெட் அணிதான் இதுவரை இருந்த இந்திய அணிகளிலேயே பலமானது என்பது முக்கியமான காரணம். ஆனால், அது தாண்டி தலைமைத்துவம் என்பதும் வெற்றியைத் தீர்மானிக்கும் X-factor.

விளையாட்டோ, அலுவலகமோ அணி வெற்றியைத் தீர்மானிப்பதில் தலைமையின் பங்கு ஓர் எல்லைக்குட்பட்டதே. பெரும்பாலும் குழப்பமானதும் கூட. நல்ல திறமைகளே ஓர் அணியின் அடித்தளம். அதை உருவாக்க வேண்டும். அடுத்ததாய் திட்டமிடல், மனித வளத்தைக் கையாளுதல், நெருக்கடிகளை எதிர்கொள்தல், தவறுகளிலிருந்து கற்றல் எனப் பல விஷயங்களை ஒரு தலைமை செய்ய வேண்டும். இவை எல்லாம் தர்க்கபூர்வமாய் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். இவற்றில் பெரும்பாலானவற்றை தோனி நிரூபித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் நிரூபித்திருக்கிறார்.

2019 உலகக் கோப்பை மிக நெருங்கி விட்ட நிலையில் கோலியே கேப்டனாக நீடிக்க வேண்டும். களத்தில் அவருக்கு தோனி உதவியாய் இருக்க‌ வேண்டும். கோலி எப்படியும் இன்னும் ஏழெட்டு ஆண்டுகள் கிரிக்கெட் ஆடுவார். அதாவது 2019 தவிர இன்னும் குறைந்தது ஓர் உலகக் கோப்பைத் தொடர். அதனால் அவரது தலைமையை நம்புவது என்பது எல்லா வகையிலும் ஒரு முதலீடு. ரிஸ்க் பாராது அதைச் செய்து பார்க்க வேண்டும்.

ஸ்டீவ் வாக் போட்டுக் கொடுத்த பாதையில் சென்று ரிக்கி பான்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கான பொற்காலம் ஒன்றைக் கண்டறிந்தது போல் தோனி போட்டுக் கொடுத்த பாதையில் கோலி தங்க‌ வேட்டையாடும் காலமும் வரலாம். யார் கண்டார்!

***

தேர்தல்களில் போலி வேட்பாளர்கள் நிற்பதுண்டு. அதாவது Dummy Candidates. அவர்த‌ம் நோக்கம் பல்வகைப்பட்டது. வரையறை மீறி பெருகும் தேர்தல் செலவுகளை பகுத்து டம்மிகளின் பெயரில் எழுதுவது, முக்கியஸ்தருக்கு தற்காலிக பினாமியாய் இருந்து ஜெயித்து பிறகு ராஜினாமா செய்வது என்றெல்லாம் இருந்தாலும் மிக முக்கியமான நோக்கம் முக்கிய வேட்பாளரின் பெயர் கொண்ட ஒருவரை - சிலசமயம் இனிஷியல் கூட பொருந்திப் போகும் - வேட்பாளராய் நிறுத்தி அவரது வாக்குகளைப் பிரித்து அவரது வெற்றி வாய்ப்பைப் பறிப்பது. இந்தியாவில் சின்னமே பிரதானம் என்பதால் ஓரளவு படிப்பறிவு வந்த பிறகு கட்சிகள் இத்தகு உள்ளடி வேலைகளில் இறங்கின.

இச்சூழ்ச்சியின் உச்சகட்டமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது சட்டீஸ்கர் மாநிலத்தின் மஹாசமுந்த் தொகுதியில் பா.ஜ.க வின் சந்து லால் சாஹுவை எதிர்த்து 10 பேர் அதே பெயரில் போட்டியிட்டனர். இது அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அஜீத் ஜோஹியின் தூண்டுதலின் பேரில் நடந்தது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடைசியில் வெறும் 1217 வாக்குகள் வித்தியாசத்தில் சந்து லால் வென்றார். (பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டுமே தலா ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றன.)

2016 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் என்ற பெயருடைய சுயேச்சைகள் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுடன் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் கடைசி நேர இழுபறியில், சொற்ப‌ வாக்கு எண்ணிக்கையில்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. அதே தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெறும் 87 வாக்குகளில் தோற்றார். அங்கே திருமாவளவன் என்ற சுயேச்சை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 289.

இம்முறையும் தமிழகத்தின் பல தொகுதிகளில் டம்மி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க எனப் பல கட்சி வேட்பாளர்கள் இவ்விஷயத்தில் பாதிக்கப்பட்டாலும் முக்கியமாக அடி பெற்றிருப்பது அ.ம.மு.க வேட்பாளர்கள்தாம். அக்கட்சி இன்னும் அங்கீகரிக்கப்படாததால் இம்முறை அதன் வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவர். அதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்ட‌ குக்கர் சின்னம் இம்முறை அவர்களுக்குக் கிட்டவில்லை. மாறாக பரிசுப்பெட்டிச் சின்னத்தை வழங்கியிருக்கிறார்கள். கடந்த ஓராண்டாக குக்கர் சின்னத்தைப் பிரபலப்படுத்தி அதைத் தன் அடையாளமாகக்கொண்டிருந்த அ.ம.மு.கவுக்கு இது பெருத்த பின்னடைவு. இச்சூழலில் சில தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயரில் போலியான சுயேச்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கை அல்லது அ.தி.மு.கவின் புத்திசாலித்தனமான திட்டமிடல் இரண்டில் ஒன்று இருக்க சம அளவு வாய்ப்புண்டு.

இம்முறை மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்துடன் வேட்பாளர் புகைப்படமும் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இம்முறை குழப்பங்கள் குறைய வாய்ப்புண்டு. (ஆனால், புகைப்படங்கள் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையிலிருந்து எடுக்கப்படாததாக இருக்க வேண்டும்!)

***

அது ஓர் ஆங்கில‌ அகராதி. ஆனால் தேவைக்கான தேடலுக்காக மட்டுமன்றி ஒரு சாதாரண புத்தகம் போல் வரிசையாய் சுவாரஸ்யமாய் வாசிக்கலாம். இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அதன் பெயர் ‘பேயின் அகராதி’. The Devil’s Dictionary!

இந்நூலை எழுதியது ஆம்ப்ரோஸ் பியர்ஸ் என்ற அமெரிக்க உள்நாட்டுப் போர் வீரர். ஒவ்வொரு சொல்லுக்கும் நகைச்சுவை மற்றும் பகடியால் நிரம்பிய அர்த்தங்கள். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பல சஞ்சிகைகளிலும் செய்தித் தாள்களிலும் தொடராய் எழுதப்பட்டு 1906-ல் `The Cynic's Word Book’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. பின் 1911-லிருந்து `The Devil’s Dictionary’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது. இன்று அமெரிக்க இலக்கியத்தின் 100 மாஸ்டர்பீஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதிலிருந்து எனக்குப் பிடித்த சில உதாரணங்கள்:
Mad (adj.) Affected with a high degree of intellectual independence.
Love (n.) A temporary insanity curable by marriage.
Egotist (n.) A person of low taste, more interested in himself than in me.

தமிழிலும் இப்படி ஓர் அங்கத அகராதி எழுத முயற்சி செய்யலாம். உதாரணமாய்:
ஜனநாயகம் - முட்டாள்களை ஏமாற்ற புத்திசாலிகள் சிரமப்படும் ஒரே இடம்.

***

`சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு காட்சியில் இறந்து போன முன்னாள் காதலனின் பிணத்துடன் சமந்தாவும் அவள் கணவனான ஃபகத் ஃபாசிலும் காரிலிருக்கையில் பிணம் சப்தமாய் அபான வாயுவை வெளியேற்றும். அதைப் பார்த்த பின் பலரும் அப்படியும் நடக்குமா எனத் தங்கள் வட்டங்களில் கிசுகிசுப்பாய் விசாரிக்கிறார்கள்!

நடக்கும்! அது மட்டுமல்ல. உயிரற்ற உடல் இன்னும் பல காரியங்கள் செய்யும்.

நின்றவாக்கில் இறந்த ஆணுக்கு குறி எழுச்சியும் சில சமயம் சுக்கில வெளியேற்றம் கூட‌ நிகழும். (தூக்கிட்டுத் தற்கொலை செய்தவர்களில் இதைப் பார்க்கலாம்.) தசை இழுப்பினால் விரல்கள் போன்ற சில பகுதிகள் அசைவைக் காட்டும்; பேச்சு போன்ற சப்தங்கள் எழுப்பும். மீத‌மிருக்கும் சிறுநீர் வெளியேறும். மிச்சமிருக்கும் உணவில் பாதி செரித்து மலமாகவும் மீது வாந்தியாகவும் வெளியேறும். கெட்ட வாயுக்கள் வாய் வழியேவும் கசியும். தோல்களின் செல்கள் இயங்கும். ஆனால் அது ஈரப்பதம் இழப்பதால் ரோமமும், நகங்களும் வளர்வது போல் தோற்றமளிக்கும். இதயம் நின்றாலும் இரத்தத்தில் மிச்சமிருக்கும் ஆக்சிஜனைக் கொண்டு மூளை இயங்கும். எல்லாவற்றுக்கும் மேலாய் கர்ப்பவதியாய் இறந்த பெண்ணின் சிசு பிரசவிக்கும்.

***

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ரச்சிதா ராம். தமிழ் ரசிகர்களுக்கேற்ற க்யூட் முகவெட்டு... கொழுக் உடல்வாகு. முக்கியமாய் ஆன்மா வழுக்கி விழுமளவு ஒரு கன்னக்குழியும், ஆவி தொலைந்து போகுமளவு ஒற்றைத் தெற்றுப் பல்லுமுண்டு. பர்ஜாரி படத்தின் புட்ட கௌரி பாடலிலும், சக்ரவியூகா படத்தின் அனைத்துப் பாடல்களிலும் இவரது அநேக‌ தாத்பர்யங்களைக் கண் பருகலாம்.

தன் முதல் படமான புல்புல்லிலேயே விருதுக்கு நாமினேட் ஆனவர். ரச்சிதா ராம் நடித்து கடைசியாய் வெளியான சீதாராமா கல்யாணா ஹிட்.

பெங்களூர்த் தமிழ்க்குடிமகனாக என் கேள்வியெல்லாம் தமிழ்த் திரையுலகுக்கு ரச்சிதாவை அழைத்து வந்து புண்ணியமடையப் போகும் அந்த‌ இயக்குநர் யார்?

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!

முந்தைய பாகங்கள்

அடுத்த கட்டுரைக்கு