Published:Updated:

’காற்று வெளியிடை’ என்றால் என்ன அர்த்தம்?

’காற்று வெளியிடை’ என்றால் என்ன அர்த்தம்?
’காற்று வெளியிடை’ என்றால் என்ன அர்த்தம்?

மணிரத்னத்தின் அடுத்த படம் - காற்று வெளியிடை.

இதற்கு அர்த்தம் என்ன என்று ஒரு பெண் ட்விட்டரில் கேட்க, மகாகவி பாரதியாரைக் கேளுங்க’ என்றிருக்கிறார் சுகாசினி.


ஏன் பாரதியைக் கேட்கச் சொன்னார் என்றால்... பாரதியின் கவிதை ஒன்றின் ஆரம்ப இரண்டு வார்த்தைகள் அவை;

அந்தக் கவிதை:

காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)

நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று)


சரி.. இதில் உள்ள ‘காற்று வெளியிடை’க்கு என்ன அர்த்தம்?

சில இளைஞர்களிடம் கேட்டபோது.. .

‘காற்று போல பிடிக்க முடியாத இடை உள்ள ‘கண்ணம்மா’ன்னு அர்த்தம்’ (ஆஹான்!)

‘காற்றைப் பிடித்தால் நழுவும் இல்லையா.. அதே போல பிடிச்சா நழுவுகிறாளாம்..” (ஆஹா.. அச்சடா!)

‘பூமியில் காற்று நிரம்பியுள்ள பகுதி எவ்வளவோ அவ்வளவு தன் காதல் நிரம்பியிருக்கிறதாம்’ (பலே பலே!)

’ஏன் சார்.. இவ்ளோ யோசிக்கறீங்க? படத்தில ஹீரோ பைலட். காற்று வெளில ப்ளைட் ஓட்டறார்.. அதான் காற்று வெளியிடை!’ (கரெக்ட்டா வருது!)

‘மூச்சுக் காத்து இருக்கறதாலதான் இதயம் துடிக்குது. அந்த மூச்சுக் காத்து இருக்கற இதயத்துல... ‘ (தம்பி.. போதும்.. முடியல)

’காற்று வெளியிடை கொண்டு கூட்டுப் பொருள் கோள் காற்று இடைவெளி. காற்று இடைவெளியற்றது. அவ்வாறு இடைவெளி இருப்பினும் அந்த வெளியும் உன் மீதான என் காதலால் நிரம்பியிருக்கிறது’ (நான் ரெண்டு நாள் லீவு.. என்னை விட்ருங்க!)

’சார்.. படத்தில ஹீரோயின் யார் சார்?’ (நான் உன்னை, என்ன கேட்டா.. நீ என்னை என்ன கேட்கற? ரேஸ்கெல்!)

இது சரிவராது என்று கவிஞர் மகுடேசுவரனைத் தொடர்பு கொண்டோம்:

‘என்னென்னமோ சொல்றாங்க. எனக்கே பயமா இருக்கு சில விளக்கமெல்லாம் பார்த்து. ரொம்ப சாதாரணமான அர்த்தம்தான். ‘இருவருக்கும் இடையே’ங்கறதுல வர்ற ‘இடை’க்கான அர்த்தம்தான். இடையே. காற்றுவெளி இடையே. வானத்திடையே பறவை பறக்குது-ங்கற மாதிரி.. காற்று வெளியிடை(யே) நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்’-னு சொல்லிருக்கார்’

ஆக, மணிரத்னம் காதலுக்காக மட்டுமில்லாமல்.. நாயகன் பைலட் என்பதாலும் பொருந்தி வருகிறபடியால் இந்த டைட்டிலை வைத்திருப்பார் போல.  

கலக்குங்க சார்!

பிற்சேர்க்கை:- (11.04.2017)

அன்றைக்கு அலைபேசியில் விளக்கிய கவிஞர் மகுடேசுவரன், இப்போது முகநூலில் விளக்கம்  எழுதியிருக்கிறார். அது;  
 

 எடுத்த எடுப்பில் இத்தொடர்க்குப் பொருள்காண முயன்றால் “காற்று வெளி இடுப்பு” என்று கொள்ள நேரும். ஆனால், இது முற்றுத் தொடரன்று.

“காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்கின்றார் பாரதியார்.

இடை என்பது இங்கே இடுப்பு இல்லை. இடையில் (நடுவில்) என்னும் பொருளிலும் பயிலவில்லை. ஏனென்றால் “வெளியிடைக் கண்ணம்மா” என்று பாரதியார் வலிமிகுவித்து எழுதியிருக்கிறார். அவ்வாறு வலிமிகுவித்து எழுதியமையால் ‘இடை’ என்பது இங்கே ஏழாம் வேற்றுமை உருபு எனக்கொள்ளல் வேண்டும்.

ஏழாம் வேற்றுமை உருபென்று “கண்” என்பதை மட்டுமே கருதியிருக்கிறோம். ஏழாம் வேற்றுமைக்குப் பல உருபுகள் உள்ளன. அவற்றுள் இடை என்பதும் ஒன்று.

இங்கே இடை என்பதற்குக் ‘கண்’ என்ற உருபின் பொருளையே கருதலாம். “காற்றுவெளிக்கண் நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் கண்ணம்மா” என்றே பாரதியார் பாடியதன் பொருளை உணரலாம்.

கண்ணம்மாவின் காதலை எண்ணியபடி காற்றுவெளியில் மிதப்பதுபோன்ற எடையறு நிலையை, மெய்ம்மறந்த நிலையை அடைந்து மகிழ்கின்றேன்.

இங்கே காற்றுவெளி என்பது தரையில் கால்படாத மிதப்பு நிலையைக் குறிக்கிறது. வான்வெளி எனலாம். அதனால் ‘காற்று வெளியிடை’ என்னும் தொடர்க்கு ‘வானத்திலே’ என்று பொருள் கொள்ள வேண்டும்.

 
 

-பரிசல் கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு