Published:Updated:

தன்னைத்தானே எலிமினேட் செய்துகொண்ட சினேகன்! #ThrowBack

தன்னைத்தானே எலிமினேட் செய்துகொண்ட சினேகன்! #ThrowBack
தன்னைத்தானே எலிமினேட் செய்துகொண்ட சினேகன்! #ThrowBack

தன்னைத்தானே எலிமினேட் செய்துகொண்ட சினேகன்! #ThrowBack

தன்னைத்தானே எலிமினேட் செய்துகொண்ட சினேகன்! #ThrowBack

கவிஞர் சினேகன் - `பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் மூலம் தினம்தோறும் தொலைக்காட்சியில் தோன்றுகிறார். குறிப்பிட்ட ஒரு பரப்புக்குள் கிட்டத்தட்ட முழு கண்காணிப்புக்குள் வளையவரும் சினேகன் குறித்தும், அவர் மற்றவர்களுடன் பழகும் விதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் தற்போது ஊடக உலா வந்துகொண்டிருக்கின்றன. நெகட்டிவ் பாசிட்டிவ் கலந்துவரும் அத்தகைய விமர்சனங்களுடன் `ஊரறிய வாழும்' சினேகன் இன்று பார்க்கப்படுகிறார். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் விகடன் பிரசுரத்தில் வெளியான `அவரவர் வாழ்க்கையில்...' என்ற புத்தகத்தில் தன் சொந்த வாழ்க்கை குறித்த கருத்துகளை முன்வைத்துள்ளார். N.C.C கேம்பில் இன்றைய `பிக் பாஸ்' போல ஒரு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.  ப்ளஸ் டூ ஹாஸ்டல் வார்டனுடன் பிரச்னையாகி, தன்னைத்தானே எலிமினேட் செய்துகொண்டு வெளியேறிய கதை என சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். அதிலிருந்து  சுவையான செய்திகள்...

``ஒரு வெற்றி கற்றுத் தரும் பாடங்களைவிட, ஒரு தோல்வியால் ஏற்பட்ட பாடங்கள் நிறைய என்பதை அன்றுதான் உணர்ந்தேன். அந்தத் தோல்வி, என்னை நிறையவே சலவை செய்தது. நினைவுக்காயங்கள் எல்லாம் மரத்துப்போயின. என் நண்பர்கள் எல்லாம் என் நிலைமையை உணர்ந்துகொள்ள முடியாமல் திணறினார்கள். அப்போதும் சரி, இப்போதும் சரி என் சந்தோஷங்களை எல்லோரிடமும் சொல்லிவிடுவேன். என் துக்கங்களை எனக்குள்ளேயே புதைத்துவிடுவேன். மெள்ள மெள்ள உயிர்த்தெழுந்தேன். மெள்ள மெள்ள துளிர்த்தெழுந்தேன். வழக்கம்போல் வாழ்க்கை என்னை அரவணைத்துக்கொண்டது. மீண்டும் நண்பர்கள் தோள்களோடு தோள்கள் சேர்ந்தனர். முன்பைவிட உலகம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. 

பள்ளியில் N.C.C பயிற்சி வகுப்புக்கு மாணவர்களைத் சேர்த்தார்கள். என் நண்பர்களோடு நானும் சேர்ந்தேன். அந்த வாழ்க்கை, கொஞ்சம் புதுமையானது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை இப்போது இல்லை. பயிற்சி நாள்களில் காலை 5 மணிக்கே எழுந்து, குளித்து முடித்து, சீருடை அணிந்து 6 மணிக்கெல்லாம் மைதானத்தில் தயாராக இருக்க வேண்டும். சீருடை தனியாக நாம் வாங்கக் கூடாது. பள்ளியில் தருவதைத்தான் சலவை செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மடிப்பு கலையாமல் கஞ்சிபோட்டுத் தேய்த்து, அந்தக் காக்கிச் சீருடையை அணிந்தால் ஒரு புத்துணர்வு உடலெங்கும் பரவும். கண்ணாடிபோல் ஷூவுக்கு பாலீஷ் போட்டு மாட்டும்போது நடையில் ஒருவித பெருமிதம் ஏற்படும். தோள்பட்டைகளில் N.C.C என்ற எழுத்துகள் பொறித்த பட்டைகளை மாட்டும்போது விருது அணிந்த சந்தோஷம் கிடைக்கும்.

அந்தச் சீருடையில் நடக்கும்போது காவல்துறை அதிகாரியாகவோ, ராணுவ அதிகாரியாகவோ என்னை நினைத்துக்கொள்வேன். அங்கிருந்து தேசப்பற்று ஊற்றெடுத்தது. படிப்பிலும் பயிற்சியிலும் என் கவனம் ஓடியதால், வேறு எந்த நினைவும் என்னை நெருங்கவில்லை. N.C.C பயிற்சி ஆசிரியரின் செல்லப்பிள்ளையாக மாறினேன். என் தீவிர ஈடுபாட்டின் காரணமாகவே என்னை அவருக்குப் பிடிக்கச் செய்தது. பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 10 சதவிகித மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். இதற்கும் தேர்வு உண்டு, பயிற்சி உண்டு, உடல் தகுதிகள் சில உண்டு. இது ஏறக்குறையக் குட்டி ராணுவம்போலத்தான் இருக்கும். இந்த மாணவர் பாதுகாப்புப் படையில், மூன்று முதன்மை மாணவர்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். அதுவும் அங்கு உள்ள மாணவர்களாலேயே நடக்கும். அந்த மாணவர்  தலைவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. மூன்று பேரையும் மூன்று குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒரு குழுவை நிர்வகிக்கும் பொறுப்புக் கொடுக்கப்படும். யார் அணியில் சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது, யார் அணி ஒழுக்கமாகச் செயல்படுகிறது என்பது வருட இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சில நாள்கள் பயிற்சி ஆசிரியர்களின் கண்காணிப்பில் நாங்களே பயிற்சி வகுப்பை நடத்துவோம். பல நாள்கள் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஒருமுறை, தஞ்சைக்கு மிதிவண்டியில் சென்று வரும் பயிற்சி நடந்தது. அந்தப் பயிற்சியில் என் அணி முதல் இடம் வகித்தது, என்னால் இன்னும் மறக்க முடியாதது. திருக்காட்டுப்பள்ளிக்கும் - தஞ்சைக்கும் இடையே உள்ள தூரம் 25 மைலாவது இருக்கும். அதுதான் நான் நீண்ட தூரம் சென்ற முதல் மிதிவண்டிப் பயணம். இந்தப் பயிற்சியில் எங்கேயாவது வெளியூர் (முகாம்) அனுப்புவது வழக்கம். அங்கே ராணுவ அதிகாரிகள்தான் பயிற்சி கொடுப்பார்கள். தெரிந்த முகம் இருக்காது. அந்தப் பயிற்சிக்கு எல்லா மாணவர்களையும் அனுப்ப மாட்டார்கள். அதற்கு ஒரு தேர்வு வைத்து, அதில் தேறும் மாணவர்கள் மட்டுமே அனுப்பப்படுவார்கள். 400 மாணவர்களில் 40 மாணவர்கள் மட்டுமே தேர்வானார்கள். அதில் நான் ஒருவன். 20 நாள்கள் பயிற்சி. இடம் காரைக்குடி. அந்த இடங்களையும், அங்கு ஏற்பட்ட நிகழ்வுகளையும் இன்று நினைத்தாலும் நெகிழ்ந்துபோவேன். ராணுவத்துக்குப் போவதுபோல் அல்லவா புறப்பட்டுப் போனோம். அது ஒரு, `பூப் பூக்கும் போர்க்களம்’ என்பது புறப்படும்போது தெரியாது''  என்று அதில் கேம்புக்குச் சென்ற தகவல்களைத் தெரிவித்துள்ள சினேகன் தொடர்கிறார்.

``அறிவியலின் அபூர்வக்குழந்தை கணினி. இதிலிருந்தே விஞ்ஞானம் தன் விலாசத்தை விரிவுபடுத்திக்கொண்டது. இன்றைய விஞ்ஞானம் வியக்கத்தக்க சாதனைகளைத் தன் தலையில் வைத்துக்கொண்டு ஆடினாலும், மனிதனின் விரல்களுக்கு அவை அடிமை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு சாண் வெற்றிடத்தில் இருந்தே வானம் விரிந்திருக்கிறது. ஒரு துளி சுவாசத்தில் இருந்தே காற்று பறந்திருக்கிறது. எதற்கும் ஒரு புள்ளி இருக்கிறது. அது கவனிக்கப்படாமல் கிடந்தாலும் ஆதாரம் அதுதான். அதுபோல் நாம் என்ன பணிக்காகப் படிக்க வேண்டும்; என்ன பட்டத்துக்காகப் படிக்க வேண்டும் என்பதை, பள்ளி இறுதி ஆண்டிலேயே முடிவுசெய்ய வேண்டும்.

அந்தப் பள்ளி இறுதி ஆண்டில் நான் இருந்தேன். அதே சமயம் விடுதியில் மாணவர் தலைவனாகவும் தேர்வுபெற்றிருந்தேன். உடலெல்லாம் உற்சாக நதி ஓடியது. நான் எப்போதும் மாணவர்கள் பக்கம்தான். விடுதியில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகள் மறுக்கப்பட்டுக் கிடந்தன. இதைத் துணிவோடு முதலில் எதிர்த்தவன் நான்தான். மாணவர்களும் என் பக்கம்தான். இதனால் விடுதிக் காப்பாளர் செய்யும் ஊழல்கள் வெளியே தெரியத் தொடங்கின. தனியொரு மாணவனை வேண்டுமானால் தண்டிக்கலாம்; மாணவச் சமுதாயத்தையே தண்டிக்க முடியுமா என்ன? 

இதனால் விடுதிக் காப்பாளர், என்னுடைய அத்தனை செயல்களையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். எந்த நொடியிலும் என்னிடமிருந்து தவறுகளைக் கண்டுபிடிப்பதே குறிக்கோளாக இருந்தார். எனக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம் என்பதை ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். அவர்களிடமிருந்து என்னைப் பிரிப்பதும், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நான்தான் காரணம் என்பதும் விடுதிக் காப்பாளரின் பிரசங்கமாக இருந்தது. இந்தத் தகவல் என் வீட்டாருக்கும் தெரிந்துவிட்டது. இதனால் வீட்டாரும் எனக்கு எதிரிகளாக மாறினார்கள். இது நாளடைவில் முழுமையாக என்னைத் தனிமைப்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. என்மீது உள்ள கோபத்தில் யார் யாரையோ தண்டித்தார் காப்பாளர். 12-ம் வகுப்பு இறுதி நாள்கள் எவ்வளவு கடினமானது என்பது நாம் அறிந்ததே. அரசுத் தேர்வு நெருங்குகிறது. ஒருவனின் எதிர்காலத்தை இதுவே முடிவுசெய்கிறது. விடுதியில் எனக்கும் காப்பாளருக்கும் உள்ள பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால் அதிகமான மாணவர்களின் வாழ்க்கை பாழாய்ப்போய்விடுமே என அஞ்சினேன்.

எனக்கு நான்தான் நல்ல நண்பன்; நல்ல நீதிபதி என்பதால், ஒரு முடிவுக்கு வந்தேன். ‘விடுதியிலிருந்து விலகிச் செல்கிறேன்’ என ஒரு கடிதத்தில் எழுதி, காப்பாளரின் கையில் கொடுத்தேன். கடிதத்தைப் படித்த காப்பாளர், காரணம் கேட்டார். `தேர்வு நெருங்குகிறது. தனக்கு இங்கு படிக்கும் வசதி போதவில்லை' என்ற காரணத்தைத் தவிர, வேறு எதையும் சொல்லவில்லை. நீண்டநாள் எதிர்பார்த்ததைப்போல மறுப்பு ஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார்.

நான் விடுதியைவிட்டு வெளியேறுகிறேன் என்ற தகவல், விடுதி மாணவர்களுக்கு மத்தியில் பரவத் தொடங்கியது. அது என் நண்பர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. தேர்வு நேரத்தில் நான் ஊரிலிருந்து தினமும் வந்து எழுத முடியாது என்பதுதான் அவர்களின் ஏக்கம். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது எனக்கு இல்லை. ஒரு சனிக்கிழமை மாலை, விடுதியைவிட்டு வெளியேறினேன். காப்பாளர், அன்று விடுதியில் இல்லை. இருந்திருந்தால் ஏதாவது கலகம் மூண்டிருக்கும் என்பது அவருக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். விடுதியிலிருந்து பேருந்துநிலையம் இரண்டு கிலோமீட்டர் தூரம். என்னை வழியனுப்ப, விடுதி நண்பர்கள் அத்தனை பேரும் திரண்டு வந்தனர். அதுமட்டுமின்றி விடுதியைச் சுற்றியிருந்த நண்பர்களும் என் வகுப்பறை நண்பர்களும் உடன் வந்தனர். அன்று பேருந்துநிலையமே பெரும் பரபரப்பாக இருந்தது. தங்களுக்காகப் பரிந்துபேசியதால்தான் எனக்கு இந்த நிலை என்று விடுதி மாணவர்களின் கண்களில் விடைபெறா நீர்த்துளிகள். எத்தனை கனவுகளை வளர்த்த பூமி, எத்தனை நட்புகளைக் கொடுத்த பூமி எல்லாம் கண்முன் வந்து கை அசைத்தன. பேருந்து புறப்படும்போது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். என் முகம் பார்த்த நண்பர்களும் அழுதுவிட்டனர். அன்று பேருந்துநிலையமே கண்ணீரால் நனைக்கப்பட்டது.

தற்போது அந்தப் பேருந்துநிலையத்தைப் பார்த்தேன். கொஞ்சம் மக்கள்தொகை அதிகரித்திருந்தது. ஆனால், அந்தப் பள்ளிக்கால நினைவுகள் பத்திரமாக அங்கேயே படர்ந்து கிடக்கின்றன. பேருந்து புறப்பட்டது. ப்ரியமில்லாமல் பிரிந்துபோகிறேன். திருக்காட்டுப்பள்ளி வழியெல்லாம் வசந்தகால நினைவுகள். வண்ண வண்ண கனவுகள் எல்லாம் சாயம்போனதாகத் தெரிந்தது.

ஊரை அடைந்ததும் மேலும் ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது. அம்மாவைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. ‘படிக்கப்போன இடத்தில் தேவையில்லாத வேலை எதற்கு?’ என்பதுதான் அண்ணன்களின் கேள்வி.  நடந்ததைச் சொன்னால், `நீ என்ன சீர்திருத்தவாதியா..? எவனாவது எப்படியாவது போறான்' என்றார்கள். என்னால் அப்படிப் போக முடியாது. நியாயத்துக்குப் புறம்பானது எதையும் நான் அனுமதித்ததில்லை; அனுமதிக்கப்போவதுமில்லை. எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. என் கோபம் எல்லாம், என்னைப் புரிந்துகொள்ள யாரும் இல்லையே என்பதுதான்.'

அடுத்த கட்டுரைக்கு