Published:Updated:

`இந்தப் புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்..!’- நடிகை ஊர்வசி பரிந்துரைக்கும் 3 நூல்கள்

நடிகை, இல்லத்தரசி, இயற்கை விவசாய ஆர்வலர் எனப் பன்முகங்களைக் கொண்ட ஊர்வசிக்குப் புத்தக வாசிப்பிலும் அதிக ஆர்வம் உண்டு.

சங்க இலக்கியம் முதல் இன்றைய எழுத்தாளர்களின் படைப்புகள்வரை ஆர்வமாகப் படிக்கக்கூடியவர். வீட்டில் நூலகம் ஒன்றையும் வைத்திருக்கிறார். எழுத்தாளராக ஆக முடியாதது மட்டுமே ஊர்வசியின் நிறைவேறாத ஆசை.
நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி

லாக்டெளனால் சினிமா ஷூட்டிங் செல்லாமல் இருந்தாலும், குடும்பப் பொறுப்பு, வீட்டுத் தோட்டம், வாசிப்பு என பிஸியாகவே இருக்கிறார்.

தனது வாசிப்பு பற்றி விவரிக்கிறார் நடிகை ஊர்வசி.

``என் வீட்டில் பெரும்பாலும் எல்லோரும் படிச்சவங்கதான். எல்லோருக்கும் வாசிப்பு பழக்கம் இருக்கு. வரலாறு முதல் சமகால உலக நிகழ்வுகள், இலக்கியங்கள்ன்னு நிறைய படிப்பாங்க. என் உடன் பிறந்தவங்க நாலு பேர். சின்ன வயசுல வீட்டு வேலைகள் செய்யச் சொன்னதைவிடவும், எங்களை வாசிக்கச் சொல்லித்தான் பெற்றோர் அதிகம் வலியுறுத்தினாங்க.

நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி

எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்தே நாவல்கள், பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பிச்சுட்டேன். வாசிப்புப் பழக்கம் இப்போவரை தொடருது. வீடோ, ஷூட்டிங்கோ... எங்கிருந்தாலும் ஓய்வுநேரம் கிடைக்கும்போதெல்லாம் என் கையில் புத்தகம் இருக்கும். தினமும் காலையில தமிழ், மலையாளம், ஆங்கில செய்தித்தாள்களைக் கட்டாயம் படிச்சுடுவேன். தவிர வாரப் பத்திரிகைகளையும் தவறாமல் படிப்பேன். லாக்டெளன் சூழல் உட்பட பலநேரங்கள்ல ஷூட்டிங் போகாம இருந்திருக்கேன். ஆனா, ஒருநாளும் வாசிக்காம இருக்கமாட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரலாறுதான் எனக்குப் புடிச்ச ஏரியா. அந்த வரிசையில் எனக்கு ரொம்பவே பிடிச்ச ஒரு புத்தகத்தைப் பத்தி சொல்றேன். பெண்களை மையப்படுத்தி, அவங்களோட மனநிலை மற்றும் உணர்வுகளை அழுத்தமாக எழுதியவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவி. அதனாலேயே அவர் `அடுக்களை எடுத்தாளர்’னு புகழ்பெற்றார். ஞானபீட விருதும் பெற்றிருக்கார். அவரின் `முதல் சபதம்’ என்ற பெயர்ல தமிழில் வெளியான புத்தகம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

வங்காளப் பகுதிகளில் பெண்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறாங்கன்னு இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிஞ்சுக்கலாம். அங்கு சில சமூகத்தில், ஒன்பது வயசுலேயே பெண்களைக் கல்யாணம் செய்துகொடுத்துடுவாங்க. அந்தப் பெண்கள் பெரும்பாலும் கணவன் வீட்டுலதான் பருவம் எய்துவாங்க. அவங்கள்ல பலரும் 20 வயதுக்குள் கைம்பெண்ணாக மாறும் துயரம் ஏற்பட்டிருக்கு. அதற்குப் பிறகான அந்தப் பெண்களின் வாழ்க்கை மிகவும் வலியும் வேதனையும் நிறைந்ததாகவே இருக்கும். கைம்பெண்கள் தாங்கள் வசிக்கும் வீட்டின் முன்பகுதிகளுக்கு வரக் கூடாது. ஒவ்வொரு முறையும் குளிச்ச பிறகுதான் அவங்க சமையல் செய்யணும்.

கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருள்களைத் தொட்டால் அந்தப் பெண்கள் மறுபடியும் குளிக்கணும். சமையலறைக்குள் செல்லும் முன்பும் அவங்க குளிக்கணும். இதனால் ஒருநாளைக்குப் பலமுறை அவங்க குளிச்சாகணும். சாப்பிடும் உணவு விஷயத்திலும் அவங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்திருக்கு. தவிர, சொந்தமாக எந்த முடிவும் அந்தப் பெண்களால் எடுக்க முடியாது. ஏராளமான சடங்குகளாலும் சுதந்திரம் இல்லாததாலும் அந்தப் பெண்கள் அதிகளவில் மனவேதனை அடைந்துள்ளனர். இப்படியான நிகழ்வுகள் கடந்த நூற்றாண்டுவரை நடந்திருக்கு. ஆஷா பூர்ணாதேவியின் படைப்புகளில் வரும் பெண் பாத்திரங்கள், நிகழ்கால பெண்களின் வாழ்க்கையோடு ஏதாவதோர் இடத்தில் நிச்சயம் பொருந்திப்போகும். அந்த உணர்வு எனக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கு.

நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி

பாப்பிலான் (papillon) என்ற ஆங்கில நாவலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இரண்டாம் உலகப் போருக்கு இடைப்பட்ட காலத்துல, சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிக்க தொடர்ந்து முயற்சி செய்வான். ஒவ்வொருமுறையும் ஏதாவதொரு சூழலில் சிறை அதிகாரிகள்கிட்ட மாட்டிக்குவான். ஆனாலும், தனது முயற்சியைக் கைவிடமாட்டான். அவன் ஏன் தப்பிக்க முயன்றான், தப்பிச்சுப் போனானா, இல்லையா என்பதுதான் கதை. ஒரு கைதியின் நிஜக் கதையை விவரிக்கும் அந்த நாவல் ரொம்பவே திரில்லிங்கா இருக்கும்.

`கிழவனும் கடலும்’-னு ஒரு நாவல். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை. வயதான காலத்திலும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வாழும் ஒரு மீனவருக்கும் கடலுக்கும் இடையே நடக்கும் காட்சிகளை உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கும் படைப்பு. இந்த மூணு புத்தகங்களையும் லாக்டெளன் காலத்துல எல்லோரும் படிக்க நான் பரிந்துரைக்கிறேன்” என்று புன்னகைக்கும் ஊர்வசியின் பிடித்தமான பட்டியலில் இதுபோல பல புத்தகங்கள் உள்ளன.

தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் குறித்துப் பேசும் ஊர்வசி, ``மலையாளத்தில் புரட்சிகர எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மற்றும் `ஞானபீட விருது’ வென்ற சி.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் புத்தகங்களை அதிகம் படிப்பேன். இந்திரா செளந்தர்ராஜன், சாரு நிவேதிதா, சோ.தர்மன், சுந்தர ராமசாமி உட்பட பிரபல தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அதிகம் படிப்பேன்.

நீண்டகால வாசிப்புப் பழக்கத்துல நாவல்கள் அல்லது கட்டுரைகளை எழுதி எழுத்தாளராகணும்னு பல வருஷமா ஆசைப்படறேன். அது மட்டும்தான் இன்னும் சாத்தியமாகலை. அதையும் சாத்தியப்படுத்திட்டா ரொம்பவே நிறைவு கிடைக்கும்
ஊர்வசி

வரலாறு, ஆன்மிகத்தை அறிவியல் அல்லது மாயாஜாலத்துடன் இணைந்து கதை எழுதுவது, மண் மற்றும் மக்கள் சார்ந்த எழுத்துனு ஒவ்வோர் எழுத்தாளரும் தங்களுக்கான களம் எதுனு தீர்க்கமா முடிவெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்காங்க. எனவே, ஒவ்வோர் எழுத்தாளரின் புத்தகமும் புதுவிதமான தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்தும். எழுத்தாளர்களைப் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கிறப்போ, அவங்க நூல்கள் பத்தி பேசுவேன். தவிர, எனக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இருப்பதால், அதுகுறித்த நூல்களையும் படிப்பதுண்டு. இப்போ பழைய தமிழ்ப் புராண நூல்கள் சிலவற்றைப் படிச்சிட்டிருக்கேன்.

வீட்டுல படிக்கிறதைத் தாண்டி, நூலகத்துக்குப் போய் விருப்பமான, இதுவரை அறியாத சில புத்தகங்களை எடுத்துட்டுவந்து படிக்க ஆசை உண்டு. ஆனா, நான் அங்க போனா, பலரும் என்கிட்ட பேச வருவாங்க. என்னால நூலகத்தின் அமைதியான சூழல் பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. அமைதியான சூழல் நிலவுறதுதான் நூலகத்துக்கும், அங்கு படிக்க வர்றவங்களுக்கும் சிறந்தது. எனவே, விருப்பமான புத்தகங்களைக் கடைகள்ல வாங்கிப்பேன். நண்பர்கள் வாயிலாகவும் நிறைய புத்தகங்கள் எனக்குக் கிடைக்கும். எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், பொழுதுபோக்குக்கும் அறிவை வளர்த்துக்கொள்ளவும் உலக நிகழ்வுகளை அறியவும் புத்தக வாசிப்புதான் சிறந்தது. நல்ல புத்தகங்களை படிப்பதால் நம்மை நாமே உணர முடியும்.

நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி

கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் புத்தக வாசிப்புக்குச் செலவிடுறதால, சோர்வு ஏற்படுறதில்லை. படிக்கும் புத்தகங்கள் எனக்கு அமைதியைக் கொடுக்குது. நல்லது, கெட்டதை உணர்ந்து செயல்பட வைக்குது. சிந்தனையை அதிகப்படுத்துது. அதனால குடும்பப் பொறுப்பையும், சினிமா வேலையையும் சரியா செய்ய முடியுது. நான் புத்தகம் வாசிக்கிறது மட்டுமல்லாம, என் பையனுக்கும் குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்லிக்கொடுக்கறேன். அவனுக்கும் வாசிப்புப் பழக்கத்தை இப்போவே கத்துக்கொடுக்கிறேன். நீண்டகால வாசிப்புப் பழக்கத்துல நாவல்கள் அல்லது கட்டுரைகளை எழுதி எழுத்தாளராகணும்னு பல வருஷமா ஆசைப்படறேன். அது மட்டும்தான் இன்னும் சாத்தியமாகலை. அதையும் சாத்தியப்படுத்திட்டா ரொம்பவே நிறைவு கிடைக்கும்” என்கிற ஊர்வசி, வசீகர சிரிப்புடன் விடைபெற்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு