சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

செம்புலம்
பிரீமியம் ஸ்டோரி
News
செம்புலம்

சமூகம் குறித்த வர்க்கப்பார்வையுடன் படைப்புகளைத் தரும் இரா.முருகவேள் முக்கியமான தமிழ் எழுத்தாளர்.

அவருடைய ‘செம்புலம்’ நாவலும் தனக்கேயுரிய தனித்துவமான அரசியல் பார்வையையும் படைப்பு நுட்பத்தையும் கொண்டு விளங்குகிறது.

தொடக்கத்தில் ஒரு துப்பறியும் நாவலைப்போல ஆரம்பிக்கும் ‘செம்புலம்’, போகப் போக வெவ்வேறு பிரச்னைகளையும் அதன் பரிமாணங்களையும் சுவைபடக் கூறுகிறது. பெயர் தெரியாத ஒரு பிணம் குறித்து வரும் தகவல், காவல்துறையினரின் விசாரணை, இறந்தவர் பெயர் பாஸ்கர்; தலித் இளைஞர், அவர் தன் பொதுவாழ்க்கையில் பல எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்பவர் என்பவை தொடக்கப்புள்ளியாக இருக்கிறது.

படிப்பறை

நூற்பாலைகளில் பணிபுரியும் அமுதா என்ற பெண், அவர் அம்மாவின் கணவன் சென்றாயன், ஆலைகளில் நிலவும் கொடூரமான உழைப்புச் சுரண்டல், சொந்தமாகத் தறி வைத்து ஓட்டும் வெள்ளிங்கிரி, அவரிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வேலைக்கு வந்தவர்கள் ஊரைவிட்டு ஓடிவிடும் பிரச்னை, சாதி சங்கத் தலைவர் மனோகரன், உண்மை அறியும் குழுவை அமைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்று பல்வேறு பாத்திரங்களின் வழியே கொங்கு மாவட்டத்தில் நிலவும் சாதிய - வர்க்கப் பிரச்னைகள் குறித்த பார்வைகளை முன்வைக்கிறது ‘செம்புலம்.’

பாஸ்கர் என்னும் தலித் இளைஞன், சிலருக்கு அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போராளியாகவும் சிலருக்குக் கட்டப்பஞ்சாயத்துக்காரனாகவும் தெரியும் முரணையும் கதைப்போக்கு விவரிக்கிறது. ‘கட்டப்பஞ்சாயத்து’ என்ற விமர்சனத்துக்குப் பின்னுள்ள பல்வேறு பரிமாணங்களையும் இது முன்வைப்பது, வாசகர்களுக்குப் புதிய பார்வைகளை அளிக்கக்கூடும். சாதிச்சங்கத் தலைவர் மனோகரன், அவர் மனைவி பூரணி ஆகியோரின் பாத்திரப் படைப்பு, கறுப்பு - வெள்ளை இருமைகளுக்கு அப்பாலான சித்திரிப்புகள். சாதிச்சங்கங்களாய்த் திரள்வதன் மூலம் தங்கள் வணிகத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயலும் சிறு முதலாளிகள், காலமாற்றங்களால் அழியும் தொழில்கள், எல்லாவற்றையும் புராஜெக்ட்களாகப் பார்க்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சட்டக மனப்பான்மை ஆகியவை குறித்த நுட்பமான விவரிப்புகள் இந்த நாவலின் பலம்.

சில இடங்களில் கதைத்தன்மையிலிருந்து நழுவி ஆவணத்தன்மைக்குச் சென்றாலும், பன்முகப் பார்வைகளுடன் சமூக அமைப்பை விளக்கும் கதைப்போக்கு, ‘செம்புலம்’ நாவலை முக்கியமானதாக்குகிறது.

செம்புலம்

இரா.முருகவேள்

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம், பாரதி நகர், 3-வது வீதி, 4/413, பிச்சம்பாளையம் (அஞ்சல்), திருப்பூர் - 641 603.

பக்கங்கள் : 320

விலை : 250 ரூபாய்