Published:Updated:

இடியட் பாக்ஸ்: 26 | ஆரஞ்சு டிவியின் எம்ஜிஆரா மார்க்ஸ்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ்: 26 | ஆரஞ்சு டிவியின் எம்ஜிஆரா மார்க்ஸ்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் தனது அறையில் அமர்ந்தபடி கையில் இருந்த ஸ்கிரிப்ட் பேப்பர்களை படித்துக் கொண்டிருந்தான். எதிரில் நெல்லையப்பன், பாண்டியன் நின்று கொண்டிருந்தனர். யோசனையாக தலை நிமிர்ந்த மார்க்ஸ் “இது யார் எழுதுனது?” என்றான்.

“நம்ம அண்ணாமலைதான்” என்றான் பாண்டியன்.

“அவரே எழுதுனாரா இல்லை... அசிஸ்டெண்ட் யாரையாவது வச்சி அடிச்சு விட்டாரா?!”

“இல்லப்பா நம்மகிட்ட அப்படி எல்லாம் பண்ணமாட்டார்” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் யோசிக்க...

“என்னப்பா சரியில்லையா?”

“பள்ளிக்கூட கதை.... வசனமெல்லாம் ஸ்கூல் பசங்க பேசுற மாதிரி இருக்க வேண்டாமா... பெரிய ஆளுங்க பேசுற மாதிரி சீரியசா இருக்குன்ணே...”

“ஆமா தலை... நானும் யோசிச்சேன்” என்றான் பாண்டியன்.

“டிவியில இருக்கிறதுலயே பெரிய ரைட்டர் அவர்தான். அவரே சரியில்லன்னா வேற யாரப்பா பிடிக்கிறது?” என நெல்லையப்பன் கவலையானார்.

மார்க்ஸ் யோசித்தவன், “ஹவுஸ்கீப்பிங் சிவா, ரவின்னு ரெண்டு பசங்க இருப்பாங்கல்ல கூட்டிட்டு வா அவனுங்கள!”

“என்னப்பா டீ காபி ஏதாவது வேணுமா?” என்றார் நெல்லையப்பன்.

“இல்லன்ணே... அந்த பசங்களதான் டயலாக் எழுத வைக்கலாம்னு யோசிக்கிறேன்”

நெல்லையப்பன் அதிர்ச்சியானார்.

“ஹவுஸ் கீப்பிங் பசங்களை டயலாக் எழுத வைக்க போறியா?!”

“அந்த சிவாவோட டைரிய நீங்க படிச்சிருக்கீங்களா?”

“இதெல்லாம் எப்ப படிக்கிற நீ?!”

“தீப்பெட்டி வாங்க பேன்ட்ரி போறப்ப அப்படியே படிக்கிறதுதான்” என்றான்.

பாண்டியனுடன் சிவாவும் ரவியும் அறைக்குள் நுழைந்தார்கள்.

“வணக்கண்ணா” என்றனர் இருவரும் கோரஸாக.

“டேய் தம்பி நம்ம புதுசா ஒரு சீரியல் பண்றோம். ஸ்கூல் பசங்க கதை அது. பாண்டியன் என்னென்ன காட்சின்னு சொல்லுவாரு. அதுல இருக்கிற ஆளுங்களோட கேரக்டர் என்னன்னு சொல்லுவாரு. நீங்க ரெண்டு பேரும்தான் அதுக்கு வசனம் எழுதப்போறீங்க சரியா?”

“அண்ணா” என்ற அவர்கள் முகத்தில் அதிர்ச்சியும் நம்பிக்கையின்மையும் தெரிந்தது.

“என்னடா ஷாக்காவுறீங்க?”

“இல்லன்னா நாங்க போய் எப்படிண்ணா?” என அவன் தயங்க...

“சிவா உன் டைரி படிச்சிருக்கேன். பக்கம் பக்கமா எழுதியிருக்கியே... அதே மாதிரி அடிச்சி விடு போதும். ரவி ஆபிஸ்ல எந்த ஃபங்ஷன்னாலும் நீ பண்ற காமெடிதான் பெஸ்ட்டு. இரண்டயும் கலந்து பக்காவா பண்ணுங்க!”

“அண்ணா நாங்க....” என சிவா இழுக்க...

“வாய்ப்பு நீ தேடும்போது வராது... அது உன்ன தேடி வரும் போது கப்புன்னு புடிச்சுக்கணும்... காசா பணமா பேஷன்ட் நானே ரெடியா இருக்கேன். நீ எதுக்கு ஆப்ரேஷன் பண்ண யோசிக்கிற? நான் சொல்றேன் உன்னால முடியும்... பண்ணு”

அவர்கள் தலையாட்டினர்.

“அண்ணே நீங்க அத எப்படி டயலாக் ஃபார்மேட்ல போடணும்னு பயலுகளுக்கு சொல்லிக் குடுங்க... கூட இருந்து பார்த்துகுங்க...”

“சரிப்பா” என்றார் நெல்லையப்பன்.

“தம்பிகளா... ஸ்கூல் பசங்க பேசுற மாதிரி இருக்கணும்.... அப்புறம் இந்த பசங்க எல்லாம் நிறைய வார்த்தைகள் யூஸ் பண்றாங்களே... 'டுமாங்கி, வயலின் வாசிக்கிறது, பல்பு வாங்கிட்டான்...' இப்படியான வார்த்தைங்களை எல்லாம் யூஸ் பண்ணுங்க சரியா!”

அவர்கள் இருவரும் பேசாமல் பார்க்க...

“என்னடா என்னாச்சு...”

“எங்களால முடியுமான்னா?” எனத் தயக்கமாக கேட்டான் ரவி...

“இந்த கேள்வியை நீ கேட்கவே கூடாது... மத்தவங்க கேக்கணும். நீ முடியும்னு அதுக்கு பதில் சொல்லணும். புரியுதா? ஃபீரியா இருக்கும் போது ஸ்கூல் ஸ்கூலா போ... ராத்திரி பகலா வேலை செய்... நீங்க யாருன்னு காட்டுங்க!”

மார்க்ஸ் தந்த தைரியத்தில் அவர்கள் உற்சாகமாக தலையாட்டினார்கள்...

“டேய் உங்க வேலை முடிஞ்சதும் 6 மணிக்கு வாங்க நாம பேசிடலாம்” என்றான் பாண்டியன்.

“தலை நீங்க நிஜமாவே...'' என பாண்டியன் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்ல வர...

“பாண்டியன் நோ சில்லி ஃபீலிங்ஸ்... வேலையை மட்டும் பாரு” என மார்க்ஸ் சிரிக்க பாண்டியனும் சிரித்தான். ஆனாலும் அவன் கண்களில் நெகிழ்ச்சி தெரிந்தது. ஹவுஸ் கீப்பிங் ஆட்களின் கைகளில் இருக்கும் காபி டீயை தவிரவேறு எதையும் கவனிக்க யாரும் முனைந்ததில்லை. மார்க்ஸின் கண்களுக்கு மட்டும்தான் அந்த அக்கறை இருந்தது.

“யாரு டைரக்ட் பண்ணப் போறது?”

“ராக்ஸ்ன்னு ஒரு புது பையன் ஷார்ட் ஃபிலிம் எல்லாம் பண்ணியிருக்கான்.”

“ஓகே... கூட இருந்து பார்த்துக்கோ. இது ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட்... டிஆர்பி வருதா இல்லையான்றது நம்ம கையில இல்ல... ஆனா அசத்திட்டானுங்கடான்னு எல்லாரும் சொல்லணும் பார்த்துக்குங்க!”

நெல்லையப்பனும் பாண்டியனும் உணர்ந்து தலையாட்டினர்.

மார்க்ஸின் போன் அடித்தது. போனை எடுத்து பேசியவன், “மேனன் சார் கூப்புடுறாரு... வந்தடுறேன்” என சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தான்.

மேனனும் திவ்யாவும் தல்வார் டவரின் கீழே காத்திருந்தார்கள். அவர்களை அழைத்து செல்ல கார் ஒன்று காத்திருந்தது. லிஃப்ட் திறக்க அவசரமாக வெளியே வந்த மார்க்ஸ் மேனனைப் பார்த்து ஓடி வந்தான்.

“போலாமா மார்க்ஸ்?” என்றார் மேனன்.

“எங்க சார்?” எனப் புரியாமல் கேட்டான் மார்க்ஸ்.

“திவ்யாவோட மூணு சீரியல்ஸும் சூட்டிங் ஆரம்பிச்சு போயிட்டு இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்னுதான்”

மார்க்ஸ் தயக்கமாக, “நான் வரல சார்... கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.

திவ்யா முகம் மாறியது.

“என்னோட ஷூட்டுக்கு அவர் ஏன் வரணும்னு யோசிக்கிறார் சார்” எனக் கடுப்பாகச் சொன்னாள் திவ்யா.

“அப்படியெல்லாம் இல்ல சார்....” என அவசரமாகச் சொன்னான் மார்க்ஸ்...

“அப்ப வாங்க” என்றார் மேனன்.

“சாரி சார்... நான்...” என மார்க்ஸ் மீண்டும் தயங்க....

“வேற ஏதோ யோசிக்கிறீங்க... பரவாயில்ல.. நாங்க போயிட்டு வந்துடுறோம்.”

“சாரி சார்”

“இட்ஸ் ஓகே” என சொல்லிவிட்டு மேனன், திவ்யாவுடன் காரில் ஏறி கிளம்பினார்.

திவ்யாவும் மேனனும் காரில் அமர்ந்திருக்க... கார் மெல்ல பாரிஸின் டிராஃபிக்கில் தட்டு தடுமாறி நகரத் துவங்கியது.

கார் கிளம்பிய சில நொடிகளில் மேனனின் போன் அடிக்க மேனன் போனை எடுத்து காதில் வைத்தவர், “மார்க்ஸ்.... சொல்லுங்க” என்றார்.

திவ்யா திரும்பி அவரைப் பார்த்தாள். மார்க்ஸ் மறுமுனையில் ஏதோ சொல்வதை மேனன் புன்னகையுடன் கேட்டபடி இருந்தார். “ஓகே ஓகே புரியுது... புரியுது... சரி பார்த்துக்கலாம்” என அவர் போனை வைத்தார்.

அவர் ஏதாவது சொல்வார் என எதிர்பார்த்து திவ்யா அவரைப் பார்த்தபடியிருந்தாள்.

“ஏன் வரலன்னு மார்க்ஸ் காரணம் சொன்னான். உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னான்” என மேனன் சிரித்தார்.

“அவன் ஃபிராடு சார்... அவன் சொல்றதை நம்பாதிங்க” எனக் கடுப்பாகச் சொன்னாள் திவ்யா.

மேனன் அவளது கோபத்தை ரசித்து மீண்டும் சிரித்தார்.

திவ்யா அவரை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

“சார்”

“சொல்லு திவ்யா”

“உங்களுக்கு நான் ரொம்ப க்ளோஸா? இல்ல மார்க்ஸ் க்ளோஸா?”

“என்னம்மா கேள்வி இது... நீ தான்மா எனக்கு க்ளோஸ்... வீ நோ ஈச் அதர் ஃபார் 5 இயர்ஸாச்சே!”

“அப்ப அவன் என்ன சொன்னான்னு சொல்லுங்க சார்!”

மேனன் சிரித்தார்.

திவ்யா அவரது பதிலுக்காகக் காத்திருந்தாள்...

மேனன் சிரித்தபடி, “நம்ம மார்க்ஸ் ஒரு எம்ஜிஆர்ன்னு உனக்கே தெரியும். ஆபிஸ்ல யாரைக் கேட்டாலும் மார்க்ஸ் மார்க்ஸும்ப்பாங்க... அதேதான் ஷூட்டிங் ஸ்பாட்லயும்... எல்லாருக்குமே ஆரஞ்ச் டிவின்னா மார்க்ஸைத்தான் தெரியும்”

“அதுக்கும் அவன் வராததுக்கும் என்ன சார் சம்பந்தம்?”

“உன்னோட ஷோ இது... நீ ஸ்பாட்டுக்கு போனா எல்லாரும் உன்னை ரெஸ்பெக்ட் பண்ணி உன்கிட்ட பேசணும். மார்க்ஸ் வந்தா அட்டென்ஷன் டைவர்ட் ஆகும். எல்லாரும் அவனை... தலைவா நீங்கதான் கிரேட் அப்படி இப்படின்னு பாராட்டி தள்ளுவாங்க... உனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்னு மார்க்ஸ் ஃபீல் பண்றாரு!”

திவ்யாவுக்கு மார்க்ஸின் எண்ணம் தெளிவாகப் புரிந்தது. அவள் பதில் எதுவும் பேசாமல் புன்னகையை மறைக்க காரின் கண்ணாடி வழியாக வெளியே பார்ப்பது போல நடிக்கத் துவங்கினாள்.

“என்ன திவ்யா பதிலே காணோம்?”

“தேங்ஸ் சார்... நம்மதான் க்ளோஸ்ன்னு நீங்க புருவ் பண்ணிட்டீங்க” என்றாள் திவ்யா.

மேனன் சிரித்துக் கொண்டார்.

ஷீட்டிங் ஸ்பாட் விசிட்களை எல்லாம் முடித்துவிட்டு கார் திவ்யாவின் வீட்டிற்கு கீழே வந்து நின்ற போது இரவு 8 மணியை நெருங்கியிருந்தது. திவ்யா கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள்.

“சார் வீட்டுக்கு வாங்க சார்” என்றாள் திவ்யா...

“இன்னொரு நாள் வரேன்மா... ஃபீலிங் டயர்ட்...” என்றார் மேனன்.

திவ்யா சின்ன சந்தோஷமும் நிறைவுமாக அப்பார்ட்மென்ட்டின் லிஃப்டில் ஏறினாள். அவளது மூன்று ப்ராஜெக்ட்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதை பார்த்ததில் இருந்தே அவை சிறப்பாக வரும் என்கிற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது.

லிஃப்ட்டை திறந்து திவ்யா வெளியே இறங்க வராண்டா எங்கும் மீன் குழம்பு வாசனை தூக்கியது. சட்டென அவளுக்கு அவளது அம்மாவின் மீன் குழம்பு நினைவுக்கு வந்தது. அம்மாவை சமையலில் அடித்துக் கொள்ள முடியாது. அம்மா ஏதாவது சமைக்க ஆரம்பித்துவிட்டாள் என்றால் ஹாலில் அமர முடியாது.

மணம் கிச்சனுக்கு இழுத்துக் கொண்டு போய்விடும். மணத்தை வைத்தே அவள் மத்தி மீன் சமைக்கிறாளா இல்லை கறிமீன் சமைக்கிறாளா என்பதுவரை சொல்லி விட முடியும். அந்த அளவுக்கு ஒவ்வொரு மீனுக்கும் என அவள் ஒரு ஃபார்முலா வைத்திருப்பாள். திவ்யா நன்றாக மூச்சை இழுத்தாள் மணம் அவளை என்னமோ செய்தது. “உடனே ஒரு நல்ல மீன் குழம்பு ஆர்டர் பண்ணி டின்னர் சாப்பிட வேண்டும்” என்கிற எண்ணத்துடன் அவள் கதவை திறந்தாள்

கிச்சனில் இருந்து நந்திதா எட்டிப்பார்த்தாள்.

“என்னடி பண்ற கிச்சன்ல?”

“வந்து பாரு” என அவள் அழைக்க திவ்யா கிச்சனுக்குள் எட்டிப்பார்த்தாள். மார்க்ஸ் கறுப்பு வேட்டியை மடித்து கட்டியபடி சமைத்துக் கொண்டிருந்தான். மீன் குழம்பு சட்டியில் கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் எண்ணெயில் மீன் பொரிந்து கொண்டிருந்தது.

திவ்யா ஆச்சர்யமாக “மீன் குழம்பா” என கேட்டாள்.

“ஏன் சாப்பிட மாட்டீங்களா” என மார்க்ஸ் கேட்க...

“யாரு அவளா... மீன் குழம்புன்னா அவளுக்கு உசிரு” என நந்திதா சொல்ல மார்க்ஸ் சிரித்தபடி திவ்யாவைப் பார்த்தான். திவ்யாவும் அவனைப் பார்த்தாள். சமைக்கிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். காலங்காலமாகவே அது பெண்களின் வேலை என ஒதுக்கிவைக்கப்பட்டதால், அந்த வேலையை ஆண்கள் செய்யும் போது அது வெறும் உதவியாக மட்டும் கருதப்படுவதில்லை. அதைத் தாண்டி ஒரு சமத்துவத்தை அது பேசும். அதோடு ஆண்களின் அபரிவிதமான அன்பை வெளிக்காட்டும் ஒரு விஷயமாகவும் அது எடுத்துக் கொள்ளப்படும். அதிகார மனப்போக்குள்ள ஆண்களுக்கு சமையல் கை கூடிவருவதில்லை. சமைக்கிற ஆண் பெரும்பாலும் பெண்ணை சரியாகப் புரிந்து கொள்கிற ஆணாக இருப்பதுண்டு.

“வாசம் தூக்குது” என்றாள் திவ்யா.

“சீக்கிரம் நீ குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றாள் நந்திதா.

“2 நிமிஷம் வந்தடுறேன்” என திவ்யா மார்க்ஸை விட்டு பார்வையை மாற்றாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க... மார்க்ஸ் திவ்யாவுக்கு பரிமாறினான்.

“ஹலோ... சமைச்சது வரைக்கும் ஓகே... விட்டா ஊட்டி விடுவீங்க போல” என நந்திதா சொல்ல மார்க்ஸ் சிரித்தான்.

திவ்யா மெதுவாக சோற்றை உருட்டி வாயை நோக்கி எடுத்துச் செல்ல மீன் குழம்பு மணம் அதற்கு முன்பாக நாசியை சென்றடைந்திருந்தது.

சூடான சோறும் காரமான மீன்குழம்பும் அதன் மீது சிறிய துண்டு பொரித்த மீனுமாக அந்த முதல் கவளம் அவள் தொண்டையில் இறங்கியபோது அவளையறியமால் அவள் கண்களை மூடி “ப்பா” என்றாள்.

நந்திதாவும் மார்க்ஸும் சிரித்தனர்.

சமைப்பவனுக்கு சந்தோஷம் அதை ரசித்து சாப்பிட ஆட்கள் கிடைப்பதுதானே!

“சான்ஸே இல்லை... என் வாழ்க்கையிலயே இப்படி ஒரு மீன்குழம்பு சாப்பிட்டதே இல்லை”

மார்க்ஸ் முகத்தில் சந்தோஷமும் பெருமையும் பொங்க அவளைப் பார்த்தான்.

“எப்படி... எப்படி இப்படி சமைக்கிற?!”

“சும்மாவா... பாசம் நேசம் அன்பு காதல் எல்லாம் சேர்த்து அரைச்ச மசாலாவாச்சே அதான் ஆள தூக்குது” என சிரித்தாள் நந்திதா.

“நீ என்ன வேணா சொல்லிக்கோ சண்டை போடுற மூட்ல நான் இல்லை. நீ எப்படி ஷோ பண்ணுவேன்னு எல்லாம் எனக்கு தெரியல. சமையல்ல நீ பெரிய கில்லாடிதான். நான் ஒத்துகிறேன்!” என திவ்யா சொல்ல...

“ஏய் என்னடி... இப்படி கவுந்திட்ட” என நந்திதா சிரித்தாள்.

“10 நிமிஷம் என்ன டிஸ்டர்ப் பண்ணாத” என அவள் சாப்பிடத் துவங்க சின்னகுழந்தையை போல அவள் ஆர்வமாக சாப்பிடுவதை மார்க்ஸ் வாஞ்சையாகப் பார்த்தபடியிருந்தான்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

சாப்பிட்டு முடித்து கையில் சிகரெட்டுடன் பால்கனியில் மார்க்ஸ் நின்று கொண்டிருக்க திவ்யா கையில் சுடு தண்ணீர் கோப்பையுடன் வந்து நின்றாள். கோப்பையை பால்கனி சுவரில் வைத்தவள்.

“செம பசி... சூப்பர் டேஸ்ட்... இன்னைக்கு பயங்கரமா சாப்டுட்டேன்” என திவ்யா சொல்ல மார்க்ஸ் புன்னகைத்தான்.

“தேங்க்ஸ்” என்றாள் திவ்யா.

“இதுக்கு எதுக்கு தேங்ஸ் எல்லாம்?”

“இதுக்கு மட்டும் இல்ல... இன்னொரு விஷயத்துக்கும்”

மார்க்ஸ் என்ன என்பது போல பார்க்க...

“மேனன் சார் சொன்னாரு நீ ஏன் ஷூட்டிங் ஸ்பாட் வரலைன்னு”

“சொல்லிட்டாரா?” என மார்க்ஸ் புன்னகைக்க...

திவ்யா அவனையே பார்த்தாள்.

“என்னாச்சு?”

“உன்ன எனக்கு பிடிக்கக் கூடாதுன்னு நான் எவ்வளவோ போராடுறேன். ஆனாலும் ஏதாவது ஒண்ணு பண்ணி உன்னை பிடிக்க வெச்சுடுற” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் சிரித்தான்.

“உன்கிட்ட யாராவது சொல்லியிருக்காங்களான்னு தெரியல... அழகான சிரிப்பு உன்னோடது”

“அப்படியா” என்ற மார்க்ஸின் சிரிப்பு இன்னும் அதிகமானது.

“அந்த சிரிப்பு இல்லைன்னா பயங்கரமான ரவுடி மாதிரி இருப்ப. ஆனா அந்த சிரிப்புதான் உன்னை வேற ஆளா மாத்திடுது!”

மார்க்ஸ் திவ்யாவை காதலாகப் பார்த்தபடி இருந்தான்.

“உன்ன” என ஏதோ சொல்ல வந்து எப்படி சொல்வது எனத் தடுமாறி “உன்ன ஒரு கடி கடிக்கணும்போல இருக்கு” என்றாள் திவ்யா.

“கடிங்க” என அவன் கரத்தை நீட்ட...

சட்டென அனிச்சையாக அவள் அவனின் கரத்தைக் கடித்தவள் ஒரு கணம் தடுமாறி என்ன செய்கிறோம் என நினைவுக்கு வந்தவளாக தடுமாறி நின்றாள்.

“ஓ மை...” என தன்னைத் தானே நொந்து கொண்டவளாக “சாரி....” என சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்து செல்ல மார்க்ஸ் என்ன நடந்தது என்பதை சரியாக உணரக் கூட முடியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.

தனது கரத்தை மார்க்ஸ் மெல்ல திருப்பி பார்த்தான். திவ்யாவின் பற்தடங்கள் அதில் தெரிந்தன. சற்று அழுத்தமான கடிதான். அவன் நம்பமுடியாமல் தனது கரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சுகமாக வலித்தது. அதை நொடி நொடியாய் அனுபவித்தான். கண்ணை மூடி அது எப்படி நடந்தது என யோசித்துப் பார்த்தான். அந்தத் தருணம் அவன் நினைவில் வர மறுத்தது. புன்னகையோடு மார்க்ஸ் பார்த்தான். பால்கனி சுவரில் திவ்யா கொண்டு வந்திருந்த கோப்பை என்ன செய்வது எனத் தெரியாமல் அவளைப் போலவே அவனைப் பார்த்து கொண்டிருப்பது போல இருந்தது. அதிலிருந்த வென்னீர் ஆறத்துவங்கியிருந்தது.

காலையில் காலிங் பெல் ஓசை அவனை எழுப்பியது. மார்க்ஸ் தூக்கக்கலக்கத்துடன் தனது செல்போனை எடுத்து பார்க்க அது 7 மணி எனக் காட்டியது.

“இந்த நேரத்தில் யாராக இருக்கும்?” என்கிற சிந்தனை ஓட அவன் எழுந்து தனது வேட்டியை சரி செய்தபடி கதவை திறக்க... வெளியே கண்ணாடி அணிந்து உயரமான தாட்டியான மனிதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு வயது 50களின் இறுதியில் இருக்ககூடும்.

“என்ன வேணும்” என உறக்கம் கலையாமல் கேட்டான் மார்க்ஸ்.

“கோல்டன் அப்பார்ட்மெண்ட்ஸ் 3D” என அவர் சந்தேகமாகக் கேட்க...

“இதுதான்... நீங்க?”

“நீ யாரு” என்றார் சட்டென ஒருமையில். அவரது குரலில் இருந்த அதிகாரம் மார்க்ஸின் தூக்கத்தை சட்டென கலைந்தது.

“என் வீட்டு கதவ தட்டிட்டு நீ யாருன்ற? நீ யாரு முதல்ல” என்றான் கோபத்துடன். அவர் மார்க்ஸ் அப்படி பேசுவான் என எதிர்பார்க்கவில்லை.

“டேய் யாருடா நீ... மரியாதை இல்லாம பேசுற... வழிய விடுறா” என்றவர் குரலில் கோபம் தெறித்தது.

“என்ன வாடா போடான்ற... நீ யாருன்னு சொல்லுடா முதல்ல” என மார்க்ஸ் கதவை திறந்து சண்டைக்குத் தயாராக அவருக்கு பின்னால் இருந்து 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி எட்டிப் பார்த்தாள்.

“நாங்க திவ்யாவோட பேரன்ட்ஸ். திவ்யா இங்கதான இருக்கா?” என கேட்க மார்க்ஸுக்கு தலை சுற்றியது. கோபத்தில் உடல் நடுங்க நின்று கொண்டிருக்கும் திவ்யாவின் அப்பாவை அவன் பார்த்தான். “திரும்பவும் முதல்ல இருந்தா” என்றது அவன் மனம்.

- Stay Tuned...