Published:Updated:

இடியட் பாக்ஸ் - 55: ஆரஞ்சு டிவியே சேர்ந்து நடத்திய கல்யாணம்… ஏன், எதற்கு?

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 55: ஆரஞ்சு டிவியே சேர்ந்து நடத்திய கல்யாணம்… ஏன், எதற்கு?

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸின் அறையில் திவ்யா அமர்ந்திருந்தாள். மார்க்ஸ் லேப்டாப்பில் ஏதோ டைப் பண்ணிக் கொண்டிருந்தான். திவ்யா சின்ன புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஓரக்கண்ணால் அவளை பார்த்த மார்க்ஸ் “என்ன?” எனக் கேட்டான்.

“நீ தான் சொல்லணும். நீ தான ஏதோ பேசணும்னு வர சொன்ன” என்றாள் திவ்யா.

“அது வந்து அது… மண்வாசனை ஷோ பத்தி எப்ப டிஸ்கஸ் பண்ணலாம்?”

“எப்ப வேணா பண்ணலாம்!” என திவ்யா சட்டென சொல்ல மார்க்ஸ் அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் தடுமாறினான். திவ்யா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

“சாப்பிட்டியா?”

“மணி இப்ப அஞ்சாகுது... நீ லன்ச்சை கேக்குறியா? இல்லை டின்னர் கேக்குறியா… மார்க்ஸ்ன்னா ஆபிஸே பார்த்து நடுங்குற டெரர்... இப்படி ஒரு சாதாரண விஷயத்தை கேட்குறதுக்கு தட்டு தடுமாறுறியே!”

“சரி நேராவே கேக்குறேன்... அந்த ராய்க்கு என்ன வேணுமாம்?” என்றான் மார்க்ஸ்.

“அவனுக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா என்ன?”

மார்க்ஸ் அவளை உற்றுப் பார்த்தான். திவ்யா குறும்பாக அவனை பார்த்தாள்.

“நீ என்ன சொன்ன அவன் கிட்ட?”

“நான் என்ன சொல்லணும்னு நீ எதிர்பாக்குற?”

பெண்கள் எப்போதும் கேள்விகளுக்கு கேள்விகளால் பதில் சொல்வதில் வல்லவர்கள்.

“இங்க பாரு திவ்யா அவன் நமக்கு நடுவுல இருக்கிறதை டிஸ்டர்ப் பண்ணனும்னு பார்க்குறான்.”

“நமக்கு நடுவுல என்ன இருக்கு?” எனச் சிரித்தாள் திவ்யா.

எவ்வளவு பெரிய எதிரியையும் நம்மால் சமாளித்து விட முடியும். ஆனால் நாம் நேசிப்பவர்கள் நம்மை போட்டு பார்க்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால் வலியை தவிர வேறு வழியில்லை.

“அப்ப நமக்கு நடுவுல எதுவும் இல்லைன்றயா?”

“இல்லன்னு நான் சொல்லல.... என்ன இருக்குன்னு கேக்குறேன்” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் அதற்கு பதில் சொல்ல முடியாமல் திவ்யாவை பார்த்தான்.

உலகையே மிரட்டுற வீரன் தன் முன்னால் குழந்தையாக தட்டு தடுமாறுவதை ரசிக்காத பெண்கள் யார்தான் இருக்க முடியும்.

ஒற்றை வார்த்தையில் ஒளிந்திருக்கும் காதலின் முடிவுக்காக பலர் வாழ்க்கை முழுவதும் காத்திருக்கிறார்கள். காதலின் இனிமையான தருணமே தனக்குள் பூத்த காதல் மற்றொருவருக்குள்ளும் பூத்திருக்கிறதா என்பதைத் தெரியாமல் தவிக்கும்காலம் தான். இறக்கையிலும் தரையிலும் இல்லாமல் நடுவில் பறக்கிற இறகுதானே அழகு.

“திவ்யா சீரியசா கேக்குறேன்... அவன் உன்கிட்ட என்னதான் எதிர்பாக்குறான்?”

“இன்னொரு சான்ஸ் குடுன்றான். அப்பவும் செட்டலாகலன்னா விட்டுறலாம்ன்றான்.”

“ஓங்கி அவன் முகத்துலயே ஒரு குத்து குத்த வேண்டியதுதானே!”

“கோபமாக கேட்டா குத்தலாம்... ஆனா அவன் பாவமா கேக்குறானே என்ன பண்றது?”

“திவ்யா இந்த மாதிரி ஆளுங்க கிட்டதான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். பார்க்க பாவமா இருப்பானுங்க. ஆனா, பயங்கரமான வில்லன் வேலை எல்லாம் பண்ணுவானுங்க”

திவ்யா சிரித்தாள்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“இல்ல திவ்யா நிஜமா தான் சொல்றேன். இவனுங்க எல்லாம் சைக்கோஸ்... என்ன செய்வானுங்கன்னே கெஸ்ஸே பண்ண முடியாது!”

மார்க்ஸின் தவிப்பை திவ்யா ரசித்தாள். தான் மற்றொருவருக்கு எவ்வளவு முக்கியமானவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்கிற தருணம் தருகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை. நேசிக்கப்படுதல் தான் உலகத்தின் உன்னதமான உணர்வு.

“நான் அவனை பாத்துக்குறேன். நீ டென்ஷனாகாத” என்றாள் திவ்யா.

மார்க்ஸின் அறை கதவு தட்டப்பட்டது. பிரசாத்தும் நெல்லையப்பனும் உள்ளே நுழைந்தார்கள்.

“என்ன மாமா? சம்பந்தமில்லாத காம்பினேஷனா இருக்கே.. ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க” என கேட்டான் மார்க்ஸ்.

“ஆன் த வேல ஜாயின்ட் அடிச்சாம்பா” என்றார் நெல்லையப்பன்.

“சொல்லுங்க பிரசாத் என்ன விஷயம்?” என்றான் மார்க்ஸ்.

“முன்னாடி எல்லாம் சார்னு சொல்லுவே... ஹெட்டானதும் பிரசாத்துன்ற?” என ஆதங்கமாகச் சொன்னான் பிரசாத்.

“தப்பு பண்ணவன் திருந்தவே கூடாதா?” எனச் சிரித்தார் நெல்லையப்பன்.

“விஷயம் என்னன்னு சொல்லுங்க?” என்றாள் திவ்யா.

“நந்திதாவோட கிரெடிட் கார்ட காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணாங்க” என்றான் பிரசாத்.

மார்க்ஸ் சேரில் நிமிர்ந்து அமர்ந்தான்.

“யாரோ அவங்க கார்டுல 25,000 ரூபாய் தேய்ச்சிருக்காங்க. மெசேஜ் வந்ததும் கார்டை பிளாக் பண்ணிட்டு என்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணாங்க...”

“போலீஸ் கம்பளைண்ட் குடுக்கலையா?”

“குடுக்கணும்... ஆனா, அதுல ஒரு சிக்கல் இருக்கு. கார்டு காணாம போனது ஆபிஸ்ல... அதனால நம்மாளுங்க தான் யாரோ ஒருத்தர் எடுத்திருக்கணும்.”

மார்க்ஸ் முகம் மாறினான்.

“கார்டை தேய்ச்ச கடை எதுன்னு கஸ்டமர் கேர்ல கேட்டு நானே நேரா போயிட்டேன். அது பாரிஸ்ல இருக்கிற துணிக்கடை. 25,000 ரூபாய்க்கு ஒரே பட்டுப் புடவை எடுத்திருக்கு!”

“யார் எடுத்ததுன்னு புடிச்சிட்டீங்களா?”

“சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்து ஆள பிடிச்சிட்டேன். ப்ரோமோல வேலை செய்யுற செல்விதான் இந்தக் காரியத்தை பண்ணது” என்றான் பிரசாத்.

அனைவரும் அதிர்ந்தார்கள்.

“அது இருக்கிற இடமே தெரியாதே” என்றார் நெல்லையப்பன்.

“கொஞ்சம் கஷ்டப்பட்ட புள்ளதான்” என்றான் பிரசாத்.

“கஷ்டப்பட்டவங்க திருடுவாங்கன்றீங்களா?” என சட்டென கோபமானான் மார்க்ஸ்.

“நீ ஏன்பா கோபப்படுற?” என்றான் பிரசாத்.

“பணக்காரனுங்க தான் பெரிய திருடனுங்க தெரியுமில்ல”

“யப்பா... நான் கம்யூனிசம் பேச வரல... உனக்கு கீழ ப்ரோமோ டிப்பார்ட்மென்ட் வருது அதனால உன் கிட்ட இன்ஃபார்ம் பண்றேன் அவ்வளவுதான்” என்றான் பிரசாத்.

“செல்வி இன்னைக்கு ஆபிஸ் வரலையா?”

“இல்ல... போனும் ஆஃப்ல இருக்கு. சாயங்காலம் வரைக்கும் பார்த்துட்டு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான் பிரசாத்.

“கொஞ்சம் பொறுங்க… இந்த விஷயம் ஆபிஸ்ல வேற யாருக்கும் தெரிய வேணாம். செல்வியோட அட்ரஸை குடுங்க... நான் நேர்ல போய் பார்த்துட்டு வந்தர்றேன்” என்றான் மார்க்ஸ்.

“நடந்ததை எல்லாம் பாம்பேக்கு மெயிலா போட்டாச்சு... வேலையை விட்டு தூக்கியே ஆகணும். அத ஒண்ணும் பண்ண முடியாது!”

“புரியுது... மாமா கூட வா நேர்ல போய் பாத்துட்டு வந்திரலாம்!”

“சரிப்பா” என்றார் நெல்லையப்பன்.

“அருமையான பொண்ணு அது. ஏன் இப்படி பண்ணுச்சுன்னு தெரியலையே” என்றான் மார்க்ஸ்.

“வேற ஏதாவது வாங்கியிருந்தா பரவாயில்ல... பட்டுப்புடவை அதுவும் ஒரே புடவை 25,000-க்கு வாங்கியிருக்குன்னா அதுக்கு கொழுப்புதான்” என்றான் பிரசாத்.

“நான் அது கிட்ட பேசிட்டு சொல்றேன் சார்” எனக் கோபத்தை மறைத்தபடி சொன்னான் மார்க்ஸ்.

மார்க்ஸின் பைக் மீஞ்சூருக்குள் நுழைந்த போது இருட்டியிருந்தது. மாலை நேர சந்தை ஒன்றுக்குள் மார்க்ஸின் புல்லட் நுழைந்தது. சாலையின் இருபுறமும் இருந்த சாலையோர கடைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பு வெளிச்சத்தில் தெருவே ஒளிர்ந்து கொண்டிருந்தது.

பரபரப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருக்க விற்பவர்களும் வாங்குபவர்களும் உரத்த குரலில் பேரம் பேசிக் கொண்டிருக்க அந்த இடமே கூச்சலும் குழப்பமுமாகக் காட்சியளித்தது.

சின்ன தெருவில் ஆட்டோக்களும், ரிக்‌ஷாக்களும், மீன்பாடி வண்டிகளும் திக்கி திணறி போய்க் கொண்டிருந்தன. இதற்கிடையே மாநகரப் பேருந்து ஒன்றும் புகுந்து சென்று கொண்டிருந்தது.

“இந்த ரோட்ல வண்டி ஓட்டுறது பெரிய சர்க்கஸ் வேலையா இருக்கேப்பா” என்றார் நெல்லையப்பன்.

“சென்னையிலயே லைஃப்பா இருக்கிறது இந்த மாதிரி ஏரியாக்கள்தான் மாமா” என்றான் மார்க்ஸ்.

“இதையும் ரசிக்கிற ஒரே ஒரு ஆள் நீ தான்பா”

மார்க்ஸ் டீக்கடை ஒன்றில் வண்டியை நிறுத்தினான்.

“அண்ணே ஜீவா நகர்”

“இதான்பா”

“இங்க பிரஸ் தெருன்றது”

“தோ எதிர்ல இருக்கு பார் அதான்... வண்டி இப்படி நிறுத்திட்டு போ” என்றார் டீக்கடைக்காரர்.

“தேங்ஸ்ன்ணே” என்றபடி புல்லட்டை நிறுத்தி விட்டு மார்க்ஸும்

நெல்லையப்பனும் எதிரேயிருந்த தெருவுக்குள் நுழைந்தனர்.

எதிர் எதிரே வரிசையாக வீடுகள் இருந்தன. அந்த குறுகலான தெருவில் வீட்டிற்கு வெளியே ஆட்கள் அமர்ந்திருக்க தெரு இன்னும் குறுகலாகி நடப்பதே சிரமமாக இருந்தது.

தெருவில் அவர்கள் நுழைந்ததும் முதல் வீட்டிலிருந்த கிழவி, “யாருப்பா வேணும்” எனக் கேட்டார்.

“இங்க செல்வின்னு...”

“டிவியில வேலை செய்தே அந்த பொண்ணா?”

“ஆமாங்க...” என்றார் நெல்லையப்பன்.

“தோ பந்தல் போட்டு சீரியல் பல்பு போட்டிருக்கே அந்த வீடுதான்” என அவர் கை காட்டினார்.

மார்க்ஸூம் நெல்லையப்பனும் செல்வியின் வீட்டை நோக்கி நடந்தனர்.

வீடு ஒன்றிற்கு முன்னால் ஷாமியானா பந்தல் போடப்பட்டு வெளியே ஐந்தாறு சேர்களில் ஆட்கள் அமர்ந்திருந்தனர். சீரியல் பல்புகள் பற்றிக் கொள்ள இடமில்லாமல் பக்கத்து வீட்டு ஜன்னலில் படர்ந்து கிடந்தன.

மார்க்ஸும் நெல்லையப்பனும் செல்வியின் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள். அது ஒரு அறை வீடென்பது வெளியிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. வீட்டுக்குள் இளம் பெண்கள் சிலர் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

“யார் வேணும்?” எனக் கேட்டார் வாசலில் இருந்த பெரியவர்.

“செல்விய பாக்கணும் அவங்க கூட வேலை செய்யுறோம்” எனத் தயக்கமாகச் சொன்னான் மார்க்ஸ்.

பெரியவர் உள்ளே பார்த்து “கல்யாண பொண்ண பாக்க அவங்க ஆபிஸ்ல இருந்து வந்திருக்காங்க... அவளை கொஞ்சம் வர சொல்லும்மா” என உரக்க குரலெழுப்பினார்.

செல்விக்குத் திருமணம் எனத் தெரிந்ததும் ஆடிப்போனான் மார்க்ஸ். நெல்லையப்பனின் முகத்திலும் தர்மசங்கடம் தெரிந்தது.

வீட்டிலிருந்த பெண்களை விலக்கி கொண்டு வெளியே வந்தாள் செல்வி. வாசலில் நின்று கொண்டிருந்த மார்க்ஸையும் நெல்லையப்பனையும் பார்த்ததும் அவள் முகம் மாறியது. உடலெல்லாம் ஆடத் தொடங்கியது.

பயத்துடன், “வாங்க சார்” என்று அவள் சொன்ன போது எந்த நிமிடமும் அழுது விடுபவள் போல தெரிந்தாள்.

“ஒண்ணும் இல்லம்மா டென்ஷனாகாத... சும்மாதான் வந்தோம்” என்றான் மார்க்ஸ்.

அவளுக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது. பெரியவர் தான் அமர்ந்திருந்த இருக்கையை காலி செய்து கொடுத்து “உட்காருங்க” என்றார்.

“இல்ல இருக்கட்டும் நீங்க உட்காருங்க...”

“பரவாயில்ல தம்பி உட்காருங்க” என வற்புறுத்தி அவர்களை அமர வைத்தார் அவர்.

“நீயும் உட்காரு செல்வி” என அவர் சேர் ஒன்றை எடுத்து செல்விக்கு போட அவள் பதற்றமாக அவர்கள் எதிரில் அமர்ந்தாள். அவள் அணிந்திருந்த அந்தப் பட்டுப்புடவை நான்தான் அது எனச் சொல்லாமல் சொல்லியது.

“வாங்க தம்பி வாங்க வாங்க” என ஒடிசலான தேகத்துடன் வயதான பெண்மணி ஒருத்தி வீட்டில் இருந்து வந்தார்.

“என் அம்மா” என்றாள் செல்வி.

“நீ பேசிக்கிட்டிரு... நான் வந்தர்றேன்” என அவசரமாக அவர் நகர்ந்தார்.

அவர் கையில் சுருட்டி வைத்திருந்த 50 ரூபாய் அவர்களுக்கு கூல்டிரிங்ஸ் வாங்க போகிறார் என்பதைச் சொல்லியது.

சில நொடிகள் மெளனத்தில் கலைந்தன.

“அம்மாவுக்கு எதுவும் தெரியாது சார்” என அழும் குரலில் சொன்னாள் செல்வி.

மார்க்ஸ் தொண்டையை செருமிக் கொண்டான். அந்தச் சூழ்நிலையில் என்ன பேசுவது என அவனுக்குத் தெரியவில்லை.

“எப்ப கல்யாணம்?” என மெல்லிய குரலில் கேட்டான் மார்க்ஸ்.

“நாளைக்கு சார்... மாமா பையன்தான். முன்னாடியே ஃபிக்ஸ் ஆயிடுச்சு... மூணு வருஷமா இந்தக் கல்யாணத்துக்காகத்தான் காசு சேர்த்துட்டிருந்தேன். போன வருஷம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயி...” என முடிக்க முடியாமல் அவள் கண்கலங்கினாள்.

மார்க்ஸ் புரிந்ததன் அடையாளமாகத் தலையாட்டினான்.

“பணமெல்லாம் அம்மா ஆபரேஷனுக்கு சரியா போச்சு. சொன்ன தேதியில கல்யாணம் பண்ணியே ஆகணும்னு மாமா சொல்லிட்டாரு. சிம்பிளா சர்ச்சில பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஆனாலும் கொஞ்சமாவது பணம் வேணுமில்ல.”

மெல்லிய குரலில் செல்வி பேச அவளது கவலை எதிரிலிருந்த நெல்லையப்பனையும் மார்க்ஸையும் என்னமோ செய்தது.

“நம்ம கேன்டீன் சசி அண்ணன்தான் அப்புறமா பணம் குடுன்னு சொல்லி 250 பேருக்கு சைவ சாப்பாடு பண்ணி தர்றாரு. எனக்கு 10 சவரன் நகையும் மாப்பிள்ளைக்கு ரெண்டு சவரனும் ஒரு வருஷத்துக்குள்ள போடுறதா சொல்லியிருக்கோம். முந்தா நேத்து எங்க அத்தை வந்து எல்லாம் ஓசியில பண்றியே ஒழுங்கா ஒரு கல்யாண புடவையாவது கட்டு இல்லன்னா எங்களுக்கு அசிங்கம்னு திட்டிட்டு போனாங்க” என அவள் கையில் இருக்கும் கர்சீப்பால் கண்களை துடைத்தாள்.

மார்க்ஸின் கண்களும் கலங்கின.

“சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல சார். நானும் அம்மாவும் மட்டும்தான். உதவின்னு யார் கிட்ட கேக்குறதுன்னு தெரியல... அதான் அவங்க கார்டை எடுத்து...” என மேற்கொண்டு பேச முடியாமல் செல்வி நிறுத்தினாள்.

மார்க்ஸும் நெல்லையப்பனும் வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தார்கள்.

“மாட்டி விட்டுறாதீங்க சார். புடவையை பத்திரமா கழட்டி குடுத்துடுறேன். பில்லு கூட அப்படியேதான் இருக்கு. கல்யாணம் நின்னு போனா ரொம்ப அவமானமா போயிடும் சார்” என்றாள் செல்வி.

“ஒண்ணும் தேவையில்லை... இந்த விஷயத்தை நான் பார்த்துகிறேன். நீ சந்தோஷமா கல்யாணத்தை முடி அப்புறமா பேசிக்கலாம்” என்றான் மார்க்ஸ்.

அவள் கண்ணீருடன் கை எடுத்து கும்பிட்டாள்.

“எல்லாரும் பாக்குறாங்க... கைய கீழ இறக்கு” என்றான் மார்க்ஸ்.

அவள் கையை இறக்க மார்க்ஸ் எழுந்து நின்றான்.

அதற்குள் செல்வியின் அம்மா கூல்டிரிங்ஸ் பாட்டிலுடன் ஓடி வந்தார்.

“என்ன தம்பி கிளம்பிட்டீங்க?”

“இல்லம்மா வேலை இருக்கு அதான்.”

“இதையாச்சும் குடிச்சிட்டு போங்க தம்பி!”

“சரிம்மா குடுங்க.”

அம்மா அவசரமாக அதை உடைத்து தர மார்க்ஸ் குடித்தான்.

“தெருவில இருக்கிற இருபது பேரைத் தவிர என் பக்கம் வர்றதுக்கு யாரும் இல்ல… அதனாலதான் பத்திரிகை கூட அடிக்கல. ஆபிஸ்ல இருக்கிறவங்கள கூப்பிட சொன்னேன். செல்விதான் வேணாம்னுருச்சு” என்றார் செல்வியின் அம்மா.

மார்க்ஸ் தலையாட்டினான். செல்வி இன்னும் படபடப்பு குறையாமல் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மார்க்ஸும் நெல்லையப்பனும் கைகூப்பி விடை பெற்றனர்.

தெருவை விட்டு அவர்கள் வெளியே வரும் சமயம் நெல்லையப்பன் போனடித்தது. எடுத்து பார்த்தவர், “பிரசாத்தான்” என்றார்.

“குடு” என மார்க்ஸ் போனை வாங்கினான்.

“சொல்லுங்க பிரசாத்...”

“என்னப்பா சொல்லுது அந்த பொண்ணு?”

“கார்டுல தேய்ச்ச பணத்த குடுத்திருச்சு” என்றான் மார்க்ஸ்.

நெல்லையப்பன் மார்க்ஸை நிமிர்ந்து பார்த்தார்.

“பணத்த குடுத்திட்டாங்கன்றதால பண்ணது தப்பில்லன்னு ஆயிடாதே!”

“நேர்ல வரேன் பிரசாத் பேசிக்கலாம்” என போனை துண்டித்தான் மார்க்ஸ்.

“இந்த பிரச்னைய எப்படிப்பா டீல் பண்ணப் போற?” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

“அதை டீல் பண்ணலாம்... அதுக்கு முன்னால டீல் பண்ண வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கு’’ என்றான் மார்க்ஸ்.

நெல்லையப்பன் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

……………………...

மணப்பெண் செல்வியின் கார் சர்ச்சுக்குள் நுழைய படபடவென டென் தவுசண்ட் வாலா வெடித்து சிதறியது. இதெல்லாம் நம்ம சொல்லலயே என்கிற யோசனையுடன் செல்வி காரில் இருந்து இறங்கினாள். எதிரில் பார்த்தவள் கண்கள் தானாக கலங்கின. தாட்சா, மேனன் முதல் மொத்த ஆபிஸும் சர்ச் வாசலில் நின்று கொண்டிருந்தது.

செல்வியை பார்த்ததும் அவர்கள் ஓவென கத்த சந்தோஷத்தில் மூச்சு நின்றுவிடும் போலிருந்தது அவளுக்கு.

“வாம்மா கல்யாண பொண்ணு... என்ன பாக்குற? சொந்தக்காரங்களுக்குச் சொல்லலைன்னா நாங்க வராம இருந்திருவமா?” என்றார் பேபியம்மா.

சொந்தமென சொன்ன பேபியம்மாவை செல்வி முன்பின் பார்த்ததில்லை என்பதே உண்மை.

“சந்தோஷமா இரு... மொத்த ஏற்பாடும் உன் ஆபிஸ் ஆளுங்க பண்ணியிருக்காங்க வா” என அவளை அழைத்துக் கொண்டு சர்ச்சுக்குள் நுழைந்தார் பேபியம்மா.

“அம்மா இந்த சர்ச் இல்ல.. பின்னாடி சின்ன சர்ச்சிலதான் கல்யாணம்”

“அதெல்லாம் ஃபாதர் கிட்ட பேசி பெரிய சர்ச்சுக்குக் காலையிலயே மாத்தியாச்சு!”

சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனாள் செல்வி.

“அடிரா பேண்டை” என பேபியம்மா சத்தமிட,

பேண்ட் ஒலிக்க... ஆபிஸ் ஆட்கள் நடனமாட அந்த இடம் களை கட்டியது. சர்ச்சுக்குள் சந்தோஷமாக அடியெடுத்து வைத்தாள் செல்வி.

நடந்த கலாட்டாவை பார்த்து மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிருந்தார்கள்.

“அன்னைக்கு அப்படி பேசிட்டனேன்னு தப்பா எடுத்துக்காத செல்வி... ரோஷக்காரி அசத்திபுட்டியே... இப்படி ஒரு கல்யாணம் நம்ம குடும்பத்துல இதுவரைக்கும் நடந்ததே இல்லையே’’ என்றார் அத்தை.

தாட்சாவும் மேனனும் தட்டில் வைத்து 10 பவுன் நகையை செல்வியின் சார்பில் சீராகத் தந்தனர்.

“மாமா, மாப்பிள்ளைக்கு மோதிரம் செயின் போடு மாமா!” என்றான் மார்க்ஸ்.

“இந்த ஆபிஸ்ல அம்புட்டு பேருக்கும் நான்தான் தாய்மாமா” என மாப்பிள்ளைக்கு சங்கிலி மோதிரத்தைப் பரிசளித்தார் நெல்லையப்பன்.

மேடை அலங்காரம், போட்டோ, வீடியோ என அடுத்தடுத்த ஆச்சர்யங்களில் மூழ்கிக் கிடந்தாள் செல்வி.

சைவ சாப்பாட்டுக்கு பதில் மட்டன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை என அசத்தியிருந்தார் சசி.

செல்வி மார்க்ஸை நன்றியோடு பார்க்க, “நான் மட்டும் இல்லம்மா மொத்த ஆபிஸ்ல இருக்கிற எல்லாரும் இதுக்கான செலவை ஷேர் பண்ணியிருக்காங்க” என்றபடி நகர்ந்தான் மார்க்ஸ்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

பிரியாணியை எடுத்து வாயில் வைத்தாள் செல்வி. அவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.

“காரமா இருக்குல்ல?” என்றான் மாப்பிள்ளை.

ஆமென தலையாட்டினாள் செல்வி.

மார்க்ஸும் நெல்லையப்பனும் ஒரு ஒரமாக நின்று கொண்டிருந்தனர்.

“கலக்கிட்டப்பா” என்றார் மார்க்ஸ்.

“நான் என்ன கலக்குனேன். ஆபிஸ் வாட்ஸ் அப் குரூப்ல மெசேஜ் போட்டேன் அவ்வளவுதான்... ஆளாளுக்கு அள்ளி குடுத்துட்டாங்க”

“ஆமாப்பா... அலோக்கெல்லாம் கூட அஞ்சாயிரம் அக்கவுன்ட் டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டான். நம்பவே முடியல... பேபியம்மா டாப்புப்பா பட்டுன்னு நாலு பவுன் சங்கிலியை தூக்கி குடுத்திருச்சே!”

மார்க்ஸ் புன்னகையுடன் தலையாட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தெறிச்சிட்டானுங்க... இனி நம்ம புள்ளைய மரியாதையா நடத்துவாங்க”

“அதுக்காகத்தான் மாமா இவ்வளவும் பண்ணது. செலவு பெரிய விஷயம் இல்ல. செல்விக்கு பின்னால இவ்வளவு பேர் இருக்கோம்னு சொன்னோம் பாரு அதான் முக்கியம்.”

“ஆமாப்பா” என்றார் நெல்லையப்பன்.

இன்னைக்கு அலுவலகம் என்பதுதான் நமது இன்னொரு குடும்பமாக இருக்கிறது. உண்பது, உறங்குவது தவிர்த்து ஒரு மனிதன் அதிக நேரம் செலவிடுவது அலுவலகத்தில்தான். அலுவலக சகாக்கள் தான் நமது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். உதவிக்கு ஓடி வரும் உறவுக்காரர்களாக இருக்கிறார்கள். நம் கவலைகளை காது கொடுத்து கேட்கும் சொந்தமாக இருக்கிறார்கள்.

அதனால்தான் நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் அலுவலகத்தின் பங்கு பெரும்பான்மையானதாக இருக்கிறது. அதனால்தான் அலுவலக சூழல் நன்றாக அமைய வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது.

பிரசாத் மெதுவாக மார்க்ஸின் அருகில் வந்து நின்றான்.

மார்க்ஸ் அவனைத் திரும்பி பார்த்தான்.

“செல்வியை டெர்மினேட் பண்ணியாச்சு... நீ இத அவ கிட்ட இன்ஃபார்ம் பண்றியா?” என சீலிடப்பட்ட ஆபிஸ் கவரை மார்க்ஸிடம் நீட்டினான்.

மார்க்ஸ் திரும்பிப் பார்த்தான். சந்தோஷமாக அலுவலக பெண்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் செல்வி.

“சிரிங்க” என போட்டோகிராஃபர் சொல்ல அனைவரும் சிரித்தனர். மார்க்ஸ் தனது கையில் இருக்கும் கடிதம் கனமாவதை உணர்ந்தான்.

- Stay Tuned...