Published:Updated:

இடியட் பாக்ஸ் - 30 | மார்க்ஸ் - திவ்யா காதலும் கடந்துபோகுமா?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 30 | மார்க்ஸ் - திவ்யா காதலும் கடந்துபோகுமா?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

திவ்யா தனது வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினாள். அப்பா கதவைத் திறந்தார். பேன்ட் சட்டை அணிந்து சீராக தலைவாரி எங்கோ கிளம்பிச் செல்ல தயாராக இருக்கிற பாவனையில் இருந்தார்.

“எங்கப்பா வெளிய எங்கயாவது போறீங்களா?”

“இல்லம்மா ஈவ்னிங் டிரெயின்ல ஊருக்குக் கிளம்பலாம்னு!”

“என்னப்பா வந்து ரெண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ள கிளம்பறேன்றீங்க... வரும்போது ஒரு வாரம் இருக்கிறேன்னுதான சொன்னீங்க?!”

“ஆமாம்மா... உன்னைப் பார்த்து பேசி உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னுதான் வந்தோம். புது ஷோ லான்ச் டைம்... நீ பிஸியா இருக்க... எவ்வளவு நேரம்தான் டிவியைப் பார்த்துட்டு சும்மா உட்கார்ந்து இருக்குறது!” என அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் போது அம்மா அறையிலிருந்து ஹாலுக்கு வந்தாள்.

“ஆமாடி... நீ வேலையைப் பாரு நாங்க கிளம்பறோம்...”

“அப்பா... அந்த மார்க்ஸை வீட்டை விட்டு துரத்திட்டுதான் போவேன்னு சொன்னீங்கள்ல... அதையாவது பண்ணிட்டு கிளம்புங்கப்பா” என்றாள் திவ்யா.

அப்பா புன்னகைத்தார்.

“அப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?!”

“உனக்கும் உங்கம்மாவுக்கும் அவனை பிடிச்சிருக்கு... அப்புறம் நான் என்ன அவனைத் துரத்துறது?” எனச் சொல்லியபடி அப்பா சோஃபாவில் அமர்ந்தார். அவர் அருகில் வந்து அமர்ந்த திவ்யா “என்னப்பா என்ன பிரச்னை... அவனாலயா அவசரமா கிளம்புறீங்க?”

“சீசீ... அப்படி எல்லாம் இல்லம்மா... அவன் எல்லாம் ஒரு ஆளா” என்றார் அப்பா.

“அதான் சொல்றேன்... உங்களுக்கு அவன் எல்லாம் போட்டியே கிடையாது!”

“இல்லம்மா நிஜமாவே போரடிக்குது அதான்... நீ லான்ச் எல்லாம் முடிச்சிட்டு ஃபீரியா ஒரு வாரம் ஊர்ல இருக்கிற மாதிரி கிளம்பி வா!”

திவ்யா அம்மாவைப் பார்த்தாள்.

“ஆமாடி... வரும்போது அவனையும் கூட்டிட்டு வா” என அம்மா சிரிக்க அப்பா அதை ரசிக்கவில்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது.

“என்னப்பா... கூட்டிட்டு வரவா?!”

“தாரளமா கூட்டிட்டு வா... உன் ஃப்ரெண்ட்ஸை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு என் பெர்மிஷன் நீ கேட்கணுமா?!”

“ஃபிரெண்டுன்னு உங்கப்பா அண்டர்லைன் பண்றாரு பாரு” என அம்மா மீண்டும் சிரித்தாள்.

“இங்க பாரு என் பொண்ணு பத்தி எனக்கு தெரியும். எதையும் அண்டர்லைன் பண்ணி சொல்ல வேண்டிய அவசியம் எல்லாம் எனக்கு கிடையாது!”

“அப்படி சொல்லுங்கப்பா” என அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் திவ்யா.

“உன்ன அப்பா எப்பவும் சந்தேகப்பட மாட்டேன்ம்மா... ஆனா, உன்னோட கனவு என்னன்றதை ஞாபகப்படுத்த வேண்டிய கடமை மட்டும் அப்பாவுக்கு எப்பவுமே உண்டு!”

திவ்யா அப்பாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.

“நீ வேலை செஞ்சுகிட்டு இருந்த பெங்காலி சேனலை எப்படி நம்பர் ஒன் சேனலா மாத்துனியோ, அதே மாதிரி இந்த ஆரஞ்ச் டிவியையும் நம்பர் ஒன் சேனலா மாத்தி காட்டுறேன்னு உங்க பாஸ்கிட்ட சேலஞ்ச் பண்ணிட்டு நீ கிளம்பி இங்க வந்த... அதை பண்ணா உன்னோட ஒட்டு மொத்த கம்பெனியும் உன்னைத் திரும்பி பார்க்கும்னு சொன்னியா இல்லையா?”

திவ்யா 'ஆம்' எனத் தலையாட்டினாள்.

“அதுக்கான வேலைய நீ செஞ்சுகிட்டு இருக்கியான்னு மட்டும் யோசி. உன்னோட பேஷனை மறக்கடிக்கிற மழுங்கடிக்கிற விஷயங்கள் எதாவது இருந்தா அத விட்டுத் தள்ளி இரு... அவ்வளவுதான்!”

மறந்து போயிருந்த ஏதோ ஒன்றை அப்பா சரியான சமயத்தில் நினைவூட்டியது போல இருந்தது திவ்யாவுக்கு.

“எவ்வளவோ பொண்ணுங்களை அப்பா பாக்குறேன். அவங்க பெரிய பெரிய படிப்பு படிக்கிறது, நல்ல வேலை பார்க்கிறது, நிறைய சம்பாதிக்கிறது, சாதிக்கிறது இது எல்லாமே ஒரு நல்ல புருஷன் கிடைக்கறதுக்குதான்னு நினைச்சு வாழ்றாங்க. எவ்வளவு மோசமான மைண்ட் செட்ல அது”

திவ்யா முகம் மாறி அப்பாவைப் பார்த்தாள்.

இடியட் பாக்ஸ் | திவ்யா
இடியட் பாக்ஸ் | திவ்யா

“அழகான அன்பான புருஷனை அடையுறதுதான் உலகத்திலயே பெரிய சாதனைன்னு நிறைய பொண்ணுங்க நினைச்சுக்கிறாங்க... அதைத்தாண்டி அவங்களுக்குன்னு பெரிய கனவுகளோ லட்சியமோ இல்ல... என் பொண்ணு அப்படி இருக்கக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன் அவ்வளவுதான்மா!”

மார்க்ஸ் தேவையா என திவ்யாவின் அப்பா கேள்வி எழுப்புகிறார். ஆனால் அந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்த நியாயம் அவளை பேசவிடாமல் செய்தது.

“நீ யாருன்னு இந்த உலகம் உன்கிட்ட கேட்டா இன்னாரோட மனைவி இவங்களோட புள்ள, இவங்களோட அம்மான்னு மட்டும்தான் உன்னால பதில் சொல்ல முடியுதுன்னா உன் வாழ்க்கை ஃபெயிலியர்ன்னுதான் நான் சொல்லுவேன். நீ யாருன்னு சொல்ல வேண்டாமா?” என அப்பா உறுதியாகச் சொல்ல திவ்யாவுக்கு எல்லாமே தெளிவாகப் புரிந்தது.

“காதல் ஓர் அருமையான உணர்வு. ஆனா அந்த காதல் உன்னோட தனித்தன்மையை விலையா கேட்டா அதுக்கு பேர் காதல் இல்லம்மா.... நீ எப்பவும் நீயா இருக்கணும், நீ ஆசைப்பட்டதை செய்யணும், நினைக்கிறதை சாதிக்கணும். இதெல்லாம் நீ பண்றப்ப உன் கூட ஒருத்தன் இருக்கிறது தப்பில்லம்மா. ஆனா இதெல்லாம் பண்ணாம இருந்தாதான் நான் உன் கூட இருப்பேன்னு அவன் சொன்னா அவன் வேஸ்ட்டுமா!” என்றார் அப்பா.

திவ்யா தெளிவான மனதுடன் புன்னகைத்தாள்.

“இங்க பாரு திவ்யா உங்கப்பா சொல்றத அப்படியே எடுத்துக்கணும்னு எல்லாம் அவசியம் இல்லை” எனக் குறுக்கே புகுந்தாள் அம்மா

“நான் ஒண்ணும் அப்படி சொல்லலையே” என்றார் அப்பா.

“சந்தோஷமா மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழு... அது போதும்... சாதிச்சே ஆகணுன்னு எல்லாம் ஒன்ணும் அவசியம் இல்லை. வாழ்க்கைக்குத்தான் வேலை. உங்கப்பா மாதிரி ரிட்டையர்ட் ஆகுற வரைக்கும் வேலையை மட்டுமே செய்யுறதுக்கு பேர் வாழ்க்கை இல்லை!”

அப்பா அம்மாவின் கருத்து மோதலை திவ்யா ரசித்து சிரித்தாள்.

“உங்கப்பா உனக்கு சொன்ன அட்வைஸை எனக்கு சொல்ல சொல்லு பார்ப்போம். தனிக்கட்டையாதான் உட்கார்ந்துகிட்டு இருக்கணும். பொண்டாட்டிக்கு தனி ரூலு... பொண்ணுங்களுக்கு தனி ரூல்... இதுதான் ஆம்பிளைங்க...”

“என்னப்பா அம்மா இப்படிச் சொல்றாங்க?”

“அது வந்து” என அப்பா தடுமாறினார்.

“ஆம்பிளை பொம்பளைன்னு இல்ல... யாரா இருந்தாலும் விட்டு குடுத்து போறதுதான்டி வாழ்க்கை. ரெடிமேடா எல்லாம் ஒருத்தன் கிடைக்க மாட்டான். கொஞ்சம் ஆல்டர் பண்ணித்தான் அவனை ஏத்துக்கணும்!”

“இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற?” என அம்மாவைப் பார்த்து அப்பா கேட்டார்.

“நீ வாங்குன கோப்பையோ மெடலோ உன்கூட வராது. நம்ம கண்ணை மூடுறப்ப நிஜமா வருத்தப்பட்டு ஒரு 10 பேர் அழுதான்னு வையி நம்ம வாழ்க்கையை ஒழுங்கா வாழ்ந்திருக்கோம்னு அர்த்தம்” என்றாள் அம்மா.

“இதுவும் சரிதான்” என்றாள் திவ்யா.

“நீ யார் சைடும்மா அதைச் சொல்லு” என திவ்யாவை பார்த்துக் கேட்டார் அப்பா.

“நான் என்னோட சைடு தான்பா... ரெண்டு பேர் சொன்னதுலயும் நியாயம் இருக்கு. எனக்கு எது சரின்னு தோணுதோ அதை நான் எடுத்துக்கிறேன்.”

“கரெக்ட்டும்மா” எனச் சிரித்தார் அப்பா.

அவரது போன் அடித்தது. “கார் வந்திருச்சுன்னு நினைக்கிறேம்மா நாங்க கிளம்புறோம்!”

“சரிப்பா” என அவரை அணைத்துக் கொண்டாள் திவ்யா. உடனே மார்க்ஸிடம் சில விஷயங்களைப்பேசி விட வேண்டுமென தோன்றியது அவளுக்கு.

.............................................................................

மார்க்ஸ் எடிட்டிங் அறையில் அமர்ந்திருந்தான். முதல் 5 எபிசோடுகள் ஓடி முடிந்து விளக்குகள் எரிந்தன.

“எப்படி தல இருக்கு?” என ஆவலாகக் கேட்டான் பாண்டியன்.

“எப்படி இருக்கு அய்யாவு?” என எடிட்டரை பார்த்துக் கேட்டான் மார்க்ஸ்.

“ஜாலியா இருக்கு சார். ஆனா சென்ட்டிமென்ட், எமோஷன், டென்ஷன் எல்லாம் இல்ல... அதுதான்” என இழுத்தார் எடிட்டர்.

“உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையா?!”

“உண்மையை சொல்லணும்னா இல்லைங்க” என்றார் அய்யாவு.

“அப்ப சீரியல் சூப்பர் ஹிட்டு” எனச் சிரித்தான் மார்க்ஸ்.

“என்னங்க இப்படி கலாய்க்கிறீங்க?” என்றார் அய்யாவு.

“எங்க மீட்டர் நீங்கதான். உங்களுக்கு பிடிச்சிருந்தா சீரியல் அவுட்... உங்களுக்கு பிடிக்கலைன்னா ஹிட்” என மார்க்ஸ் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“பாண்டியா சூப்பரா வந்திருக்கு... ஜெயிப்பு தோப்பு எல்லாம் விஷயம் இல்லை... சீரியல் செம்மையா வந்திருக்கு” என பாண்டியனுக்கு கை குடுத்தவன், “நெல்லையப்பன் எங்க” எனக் கேட்டான்.

“அவருக்கு பாவம் முடியல... டப்பிங் ரூம்ல படுத்திட்டாரு!”

“பார்த்துடா பழைய வண்டி அது... இஷ்டத்துக்கு ஓட்டாதிங்க” என மார்க்ஸ் சொல்ல பாண்டியன் சிரித்தான்.

மார்க்ஸின் போன் அடித்தது. போனை எடுத்து பார்த்தவன் சின்ன புன்னகையுடன் “ஹலோ” என்றான்.

“பீச்சுக்குப் போலாமா?” என்றாள் திவ்யா.

“இப்பவா” என மார்க்ஸ் டைமைப் பார்க்க... மாலை 6 மணி என்றது அவனது கைக்கடிகாரம்.

“இங்க இருந்து வர்றதுக்கு எனக்கு 20 நிமிசம் ஆகும்” என்றான் மார்க்ஸ்

“நான் உனக்காக அந்த ராட்டிணம் பக்கத்துல வெயிட் பண்றேன்” என திவ்யா இணைப்பை துண்டித்தாள்.

“இப்படி எல்லாம் இறங்கி வந்து பீச்சுக்கு கூப்புடுகிற ஆள் இல்லையே அவள்” என்கிற யோசனை மார்க்ஸுக்குள் ஓடியது. யோசனையுடன் புல்லட்டை எடுத்தான் மார்க்ஸ்.

திவ்யாவும் மார்க்ஸும் மணலில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். மெல்ல இருள் கவிழ்ந்து கொண்டிருந்தது. பகலில் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.

மெளனமாக சில நிமிடங்கள் கரைந்தன.

“அண்ணே அண்ணே அக்காவுக்கு பூ வாங்கி குடுன்ணே” என்றபடி கூடையுடன் வந்தாள் பூக்கார சிறுமி.

திவ்யா அதை கவனிக்காதவள் போல இருந்தாள்.

மார்க்ஸ் சட்டை பையில் இருந்து 100 ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.

“என்ன பூண்ணா... மல்லியா, கனகாம்பரமா” பூ வாங்கி தந்துவிடுவானோ எனப் பதற்றமாக திரும்பிப் பார்த்தாள் திவ்யா.

“பூ எல்லாம் வேணாம்... நீ வெச்சுக்கோ” எனப் பணத்தை தந்தான் மார்க்ஸ்.

திவ்யாவின் பதற்றம் ஏமாற்றமாக மாறியது. அதை உணர்ந்த அடுத்த நொடி அதற்காக அவள் தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

“இனாமா வேணாம்னா... பூ வாங்கிக்கன்னா...” என்றாள் அந்த தன்மானச் சிறுமி.

“இத அட்வான்ஸா வெச்சுக்கோ... நானோ அவங்களோ எப்பவாச்சும் பூ கேட்டா காசு வாங்காம குடு சரியா” என்றான் மார்க்ஸ்.

திவ்யா திரும்பிப் புன்னகைத்தாள்.

சிறுமி குழப்பமாகப் பணத்தை வாங்கிக் கொண்டவள் “அப்ப நாளைக்கு வருவியான்னா?” எனக் கேட்டாள்.

“எப்ப வேணா வருவோம்” என்றதும் அவள் குழப்பமாகவே தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மார்க்ஸும் திவ்யாவும் தனித்திருந்தார்கள்.

“சாரி அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன். மறந்துட்டேன். உன்னோட ஸ்கூல் ஸ்டோரி சூப்பரா இருந்திச்சு!” என்றாள் திவ்யா.

“தேங்க்ஸ்” என்றான் மார்க்ஸ். திவ்யா சொல்ல வந்தது இதுவல்ல என்பது அவனுக்குப் புரிந்தது.

“திவ்யா ஏதோ சொல்லணும்னு யோசிக்கிற... ஆனா, அதை நான் கஷ்டப்படாம சொல்லனும்னு நினைக்கிற சரியா” என மார்க்ஸ் பட்டென கேட்க திடுக்கிட்டுத் திரும்பினாள் திவ்யா.

“எப்படி இவனால் மட்டும் என் மனதை சரியாகப் படிக்க முடிகிறது” என்பது போல இருந்தது அவள் பார்வை.

“என்னன்னு சொல்லு” என்றான் மார்க்ஸ்.

“நம்ம நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம் மார்க்ஸ்” என்றாள் திவ்யா..

“அப்ப இப்ப நம்ம நல்ல ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?”

திவ்யா அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தயங்கியவள்... “நமக்கு நடுவுல அதைத் தாண்டி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்குன்னு உனக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்!”

“அதுக்கென்ன இப்ப?”

“இல்ல அது வேணாம்னு” என மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறிய திவ்யா தனது தொண்டையை செருமிக் கொண்டாள்.

மார்க்ஸ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“இல்ல... என்னால வேற எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியல. எப்பவும் உன் நினைப்பாவே இருக்கு. வேலையில ஃபோகஸ் இல்லை. இப்படி நான் இருந்ததே இல்லை!”

மார்க்ஸ் திரும்பி அவளை பதில் ஏதும் சொல்லாமல் பார்த்தான்.

“இல்ல நாம கொஞ்சம் தள்ளி இருக்கலாமே... புரியுது... உனக்கு நான் கொஞ்சம் ஹோப் குடுத்திட்டேன்னு நினைக்கிறேன்... சாரி...” என உண்மையான வருத்தத்துடன் சொன்னாள் திவ்யா.

மார்க்ஸ் மௌனத்தைத் தொடர்ந்தான்.

“எனக்கு நிறைய டிரீம்ஸ் இருக்கு. நிறைய பேருக்கு நான் யாருன்னு புருவ் பண்ணி காட்டணும். அந்த வெறி எனக்குள்ள இருக்கு. அதுக்காகதான் சென்னைக்கே நான் வந்தேன். இப்ப அது எல்லாம் நடக்காம போயிடுமோன்னு பயமா இருக்கு மார்க்ஸ்” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் மௌனமாகவே இருந்தான். அவனது மௌனத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால்தான் யோசிக்கும் அனைத்தையும் இப்போதே சொல்லிவிட வேண்டும் என்பதில் மட்டும் திவ்யா உறுதியாக இருந்தாள். ஏற்கெனவே நிறைய சொதப்பிவிட்டோம் மேற்கொண்டு 'இருக்கு ஆனா இல்லை' என குழப்ப அவள் விரும்பவில்லை.

மார்க்ஸ் வார்த்தைகள் கிடைக்காமல் மௌனமாக இல்லை. ஏகப்பட்ட வார்த்தைகள் அவன் மனதுக்குள் முண்டியடித்தன. அதில் எதைத் தேர்ந்தெடுப்பது எனத் தெரியாமல் மெளனமாக இருந்தான்.

“நீ ஒரு லவ்லி பெர்சன். எனக்குதான் அதிர்ஷ்டம் இல்ல” என்றாள் திவ்யா. பிரியும்போது பிரச்னை எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக பொதுவாக பிரிபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அவை.

“பின்னாடி யோசிக்கலாம் அப்புறமா பாக்கலாம்னு எல்லாம் நான் இதை சொதப்ப விரும்பல. தெளிவா சொல்றேன். வேணாம்... அவ்வளவுதான். நான் உனக்கு எதுவும் கமிட்மென்ட்டோ ப்ராமிஸோ பண்ணிக் குடுக்கலதான். இருந்தாலும் என் மனசுக்குத் தெரியும் இல்ல... உன் கூட ஒரு ஸ்டெப் அதிகமா நான் பழகுனேன்னு அதான்!”

மார்க்ஸ் மௌனமாக இருந்தான்.

“என்ன மார்க்ஸ் எதுவுமே பேச மாட்ற?”

மார்க்ஸ் திவ்யாவைப் பார்த்தான்.

“கோபமா இருந்தா திட்டிடு... இங்க இருந்து எந்திரிச்சு போறப்ப பழைய மார்க்ஸ் திவ்யாவா நாம போகலாம்.”

மார்க்ஸ் எதுவும் பேசாமல் எழுந்தவன் ஜீன்ஸில் இருக்கும் மணலைத் தட்டிவிட்டபடி கிளம்பத் தயாரானான். புரியாமல் திவ்யாவும் எழுந்து நின்றாள்.

“எதுவுமே பேசாம போனா என்ன அர்த்தம்?”

“உன்னால முடியுமா?” எனக் கேட்டான் மார்க்ஸ்...

“புரியல”

“நடுவில நடந்ததை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு பழைய திவ்யாவா இருக்க முடியுமா உன்னால?

திவ்யா அவனைப் பார்த்தாள்.

“நல்லா யோசிச்சு பார்த்து பதில் சொல்லு!”

“நமக்கு நடுவுல ஒரு சின்ன அட்ராக்ஷன் இருந்துச்சுதான். ஆனா, அதைத்தவிர வேற எதுவும் இல்லையே!”

“நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலை...”

“என்ன?” எனக் கேள்வியை மீண்டும் அவள் யோசித்தாள்.

“நடுவுல நடந்ததை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு பழைய திவ்யாவா உன்னால இருக்க முடியுமா?

“முடியும்” என்றாள் திவ்யா.

“அப்ப சரி... நான் எடிட்டிங் போறேன்... உன்ன வீட்ல டிராப் பண்ணவா?” என சாதாரணமாக மார்க்ஸ் கேட்க திவ்யாவுக்குள் சட்டென கோபம் எட்டிப்பார்த்தது. அவன் காயப்பட்டுவிடக் கூடாது என மிகவும் யோசித்து கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொன்னால் அதை அலட்சியமாக அப்ப சரி என டீல் பண்ணும் மார்க்ஸின் ஈகோ அவளை காயப்படுத்தியது.

நோ என்பதை அழகாக அன்பாகப் பரிவாக சொன்னாலும் அது நோ தானே என்பது மார்க்ஸின் எண்ணம்.

“வீட்ல டிராப் பண்ணனுமா?” மீண்டும் கேட்டான் மார்க்ஸ்.

“தேவையில்ல நானே போய்க்கிறேன்” என்றாள் திவ்யா.

“பை” என சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான் மார்க்ஸ். வேண்டாம் எனச் சொன்னது அவள்தான். ஆனாலும் அதை அவன் எளிதாக எடுத்துக்கொண்டது அவளுக்குத் தாங்க முடியாததாக இருந்தது.

அவன் கோபப்பட்டிருக்கலாம், வருத்தப்பட்டிருக்கலாம், கண் கலங்கியிருக்கலாம். அப்படி எதுவும் இல்லாமல் அவன் சாதாரணமாக நடந்து போனது அவளை சங்கடப்படுத்தியது. காதலின் கணக்குகள் எப்போதும் புரியாதவை. நாம் ஒருவரை வேண்டாமென சொல்ல வருவோம். அதையே அவர்கள் ஒரு கணம் முந்திக்கொண்டு சொன்னால் அதை தாங்கிக் கொள்ள முடியாது.

மார்க்ஸ் திரும்பிக்கூட பார்க்காமல் புல்லட்டை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து நகர்ந்தான். அவன் போவதை பார்க்க முடியாமல் திவ்யாவின் கண்களை கண்ணீர் மறைத்தது.

நந்திதாவும் திவ்யாவும் எதிர் எதிரே டைனிங் டேபிளிலில் அமர்ந்திருந்தார்கள்.

சிறிது நேர மெளனத்திற்குப் பின் நந்திதா கேட்டாள்.

“ஒண்ணே ஒண்ணு மட்டும் யோசிச்சு சொல்லு... மார்க்ஸ் வேணாமா... இல்ல இப்போதைக்கு வேணாமா?”

திவ்யா நிமிர்ந்து அவளைப் பார்த்தாள்.

நந்திதா சொல்லு என்பது போல திவ்யாவைப் பார்த்தாள்...

“வேணாம்”

“ஏன்”

“சரியா வராது”

“பின்னாடி நீ மனசு மாற ஏதாவது வாய்ப்பிருக்கா?!”

“என்னடி வேணும் உனக்கு” என்ற திவ்யாவின் குரலில் எரிச்சலிருந்தது.

“நீ என் ஃப்ரெண்டுன்றதால நான் ஓப்பனா சொல்றேன். எனக்கு மார்க்ஸை ரொம்பப் பிடிக்கும்.”

அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள் திவ்யா...

“உனக்கு அவன் வேணாம்னு நீ முடிவு பண்ணேன்னா நான் ஏன் முயற்சி பண்ணக்கூடாது?”

“லூசாடி நீ... இது என்ன புடவையா... உனக்கு வேணாம்னா நான் எடுத்துகிறேன்றதுக்கு?!”

“இந்த உவமை எல்லாம் தேவையில்ல... நீ வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் நானும் மார்க்ஸும் நல்லா பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு லவ் பண்ணி, அப்புறமா நான் உன் கிட்ட வந்து... 'சாரி திவ்யா நல்ல நண்பர்களா நாங்க பழகுனோம், இப்ப அது காதலா மாறிடுச்சு'ன்னு சொல்றதுக்கு பதிலா முதல்லயே உன்கிட்ட சொல்றேன்... அவ்வளவுதான் வித்தியாசம்!”

திவ்யா மெல்லிய அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு அவனைப் பிடிச்சிருந்திச்சு... உனக்கு அவனைப் பிடிச்சதால வேணாம்னு முடிவு பண்ணேன். இப்ப உனக்கு வேணாம்னு நீ சொல்லிட்ட... அதனால அவனோட பழகிப் பார்க்கலாம்னு யோசிக்கிறேன்... தப்பில்லையே?” என்றாள் நந்திதா.

“எனக்குத் தெரியல” என்றாள் திவ்யா.

“சிம்ப்பிள் கொஸ்டின்... உனக்கு அவன் வேணவே வேணாம்தான... அத நீ முடிவு பண்ணிட்டல்ல?!”

“ஆமா” என மனதை திடப்படுத்தியபடி சொன்னாள் திவ்யா.

“நான் மார்க்ஸோடப் பழகிப் பாக்குறேன். ஒரு வேளை எங்களுக்கு நடுவுல செட்டானா பார்க்கலாம். இதுல எங்கயுமே உன்னை நான் கஷ்டப்படுத்திரலயே? அப்படி ஏதாவதுன்னா இப்பவே சொல்லிடு.”

“சீ... சீ... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல” என்றாள் திவ்யா.

“ஓகே....” என அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவள், “சில்லுன்னு குளிக்கனும் போல இருக்கு... குளிச்சிட்டு வந்துடுறேன்” எனச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

திவ்யாவுக்கு நந்திதா மேல் கோபமும் வந்தது. அந்த கோபம் நியாயம் இல்லை என்றும் தோன்றியது. ஆனாலும் கோபத்தை தூக்கி போட முடியவில்லை அவளால்!

- Stay Tuned...