Published:Updated:

இடியட் பாக்ஸ் - 33 : ஏஞ்சலின் வீட்டில் மார்க்ஸ்... உப்புமா எப்படி?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 33 : ஏஞ்சலின் வீட்டில் மார்க்ஸ்... உப்புமா எப்படி?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மார்க்ஸ், நெல்லையப்பன், பாண்டியன், டார்லிங் என அனைவரும் கான்ஃபரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தனர். மார்க்ஸ் தனது போனில் எதையோ பார்த்தபடியிருந்தான். நெல்லையப்பன் பாண்டியனைப் பார்த்து கண்ணைக் காட்ட...

“தல நம்ம எபிசோட் ஆரம்பிக்க போகுது” என்றான் பாண்டியன்.

மார்க்ஸ் தெரியும் என்பதாகத் தலையாட்டினான்.

“பார்க்கலாமா தல...”

“நாமதான் எடிட்டிங்ல, மிக்ஸிங்லன்னு 100 தடவை பார்த்தாச்சே... இதுக்கப்புறம் ஜனங்கதான் பார்க்கணும்!”

“அதுவும் சரிதான்” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் டீமின் 3 சீரியல்கள், திவ்யா டீமின் 3 சீரியல்கள் என 6 புது சீரியல்கள் அன்று ஆரம்பிக்கின்றன. 7 மணி முதல் 10 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை அவை ஒளிபரப்பாகும். இந்த வாரத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளுக்கான ரேட்டிங் அடுத்த வாரம் வியாழக்கிழமை வரும். அந்த ரேட்டிங் அதிகரித்துக் கொண்டே போனால் சீரியல் பிக்அப் ஆகிறது என்று அர்த்தம்.

“எனக்கென்னவோ திவ்யா டீம் பண்ண மூணு சீரியலும் பெரிய ஹிட்டாகும்னு தோணுது” என மார்க்ஸைப் பார்த்தபடி சொன்னார் நெல்லையப்பன்.

“ஏன் மாமா?” எனப் புன்னகையுடன் கேட்டான் மார்க்ஸ்.

“ஏன்னு தெரியாதாக்கும்... உன் ஃப்ரெண்டு போட்ட டைட்டில் சாங் பின்னி எடுத்திருச்சு... அவங்க சீரியலுக்கு சூப்பர் ப்ரொமோஷன்!”

“நம்ம ப்ரொமோ கூட நல்லாதான் இருந்திச்சு!”

“அவங்க ப்ரொமோவுக்கு முன்னால நம்ம ப்ரொமோ மியாவ்னு இருந்திச்சுப்பா...”

மார்க்ஸ் சிரித்தான்.

“யப்பா நீ எதிரியை நேசி... ஏசு நாதாரா வாழு... நாங்க வேணாம்னு சொல்லல... அப்படியே கொஞ்சம் உன் கூட இருக்கிற எங்களையும் கவனிச்சுக்கோன்னுதான் சொல்றேன். எதிரியை ஓவரா நேசிக்கிறேன்னு ஃப்ரெண்ட்ஸைப் போட்டுத் தள்ளுனா அது பாவம் இல்லையா?”

“உடனே ஓவரா சீன் போடுவியே நீ” என்றான் மார்க்ஸ்.

“இல்ல தல... அவங்களுக்கு 3 சாங் வாங்கி குடுத்தீங்க... அப்படியே நமக்கும் ஒரு சாங் வாங்கியிருக்கலாம்” எனத் தயக்கமாகச் சொன்னான் பாண்டியன்.

“நம்ம ஷோ அவங்க ஷோனெல்லாம் யோசிக்கல பாண்டியா... வீக்கா இருந்த 3 ப்ரொமோவுக்கு சாங் மாத்துனோம்... அவ்வளவுதான்” என்றான் மார்க்ஸ்.

“நம்ம ஷோ அவங்க ஷோன்னு நீ யோசிக்கலப்பா.... அடுத்த வாரம் ரேட்டிங் பார்க்கும்போது அவங்க யோசிப்பாங்களே!”

“இப்ப என்ன வேணும் உனக்கு?”

“பத்து நாளா கண்முழிச்சு வேலை செஞ்சு பாடியெல்லாம் ஹீட்டாகிப் போச்சு!”

“அதுக்கு?”

“ஒரு தவுசண்ட் ரூபிஸ் குடுத்தேன்னா... பாடிய கூல் பண்ணுவோம்”

மார்க்ஸ் பாக்கெட்டில் இருந்து 2000 ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.

பணத்தை வாங்கிய நெல்லையப்பன் “தேங்ஸ்ப்பா அக்கவுன்ட்ல வெச்சுக்க!”

“யார் அக்கவுன்ட்ல?”

“மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி”

மார்க்ஸ் சிரித்தான். அனைவரும் சிரித்தபடி நகர்ந்தனர்.

பாண்டியன் மட்டும் தயங்கி “தல உங்களுக்கு...”

“இல்ல பாண்டியா நீங்க போங்க... மாமா சரக்கு போட்டு என்னை எப்படியும் திட்டுவாரு... நான் இருந்தா அவருக்கு டிஸ்டர்ப் ஆகும். ஃப்ளோவா திட்டட்டும்” எனச் சிரித்தான்.

பாண்டியன் சிரித்தபடி நகர்ந்தான்.

மார்க்ஸ் மட்டும் தனித்திருந்தான்.

டேபிளில் இருந்த அவனது போன் அடித்தது. போனை எடுக்காமல் வாட்சைப் பார்த்தான். சீரியல் ஒளிபரப்பாகி முடிந்து இருக்கும் என்பது புரிந்தது. அதில் நடித்தவர்கள், வேலை செய்தவர்கள் என அத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் முதல் எபிசோட் முடிந்ததும் போன் பண்ணுவது ஒரு சம்பிரதாயம். நன்றி சொல்வார்கள்.

“சீரியல் சூப்பரா இருக்கு” என்பார்கள். “எல்லா வீட்லயும் நம்ம டைட்டில் சாங் ஒடுற சத்தம் கேட்டிச்சு. தெருவுல எல்லோருமே நம்ம சீரியல்தான் பார்த்தாங்க” என்பார்கள். “வேற லெவல்ல இருக்கு சார்” எனப் பாராட்டுகள் குவியும். இவையெல்லாம் அடுத்த வியாழக்கிழமை ரேட்டிங் வரும் வரைதான். அது உண்மையை சொல்லிவிடும். எத்தனை பேர் அந்த சீரியலை பார்த்தார்கள் என்று!

போன் மீண்டும் அடிக்க அதை சைலன்ட்டில் போட்டான் மார்க்ஸ். கிளம்பலாமா வேண்டாமா என்கிற யோசனையுடன் அமர்ந்திருக்க அறைக்கதவை திறந்து கொண்டு மேனன் உள்ளே நுழைந்தார்.

“மார்க்ஸ்...”

“சார்” எனப் பதறி எழுந்தான் அவன். அவரை அந்தச் சமயத்தில் அவன் எதிர்பார்க்கவில்லை.

“உட்காரு” என்றபடி எதிரில் அவர் அமர்ந்தார்.

“என்ன மார்க்ஸ் இன்னும் கிளம்பலையா?” என்றார் மேனன்.

“கிளம்பணும் சார்”

மேனன் அவனைப் பார்த்து புன்னகைத்தார். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரியாமல் பதிலுக்கு மார்க்ஸும் புன்னகைத்தான்.

“டென்ஷனா இருக்கா?”

“கொஞ்சம் சார்...”

“எவ்வளவு ஷோ பண்ணியிருப்பீங்க... இன்னுமா அந்த டென்ஷன் இருக்கு!”

“ஆமா சார்”

மேனன் சிரித்தார்.

“நீங்க எப்படி சார் எப்பவும் கூலா இருக்கீங்க?”

“அதுக்கு ஒரு ஃபார்முலா இருக்கு... அதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபார்முலா!”

மார்க்ஸ் புன்னகையுடன் “அது என்ன சார்?” என்றான்.

“சக்ஸஸ் வரும் போது அது என்னால தான் என்னால தான்னு ஓடி போய் வாங்கிக்கக்கூடாது. அப்படி வாங்கிக்கிட்டா ஃபெயிலர் வரும் போது நீ கேட்காமலேயே இது உன்னோடதுதான்னு உன் கையில கொடுத்திடுவாங்க. சக்ஸஸ் வரும் போது இது என்னோடதில்லைனு ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி மேல கைய காட்டிட்டோம்னா, ஃபெயிலியர் வரும் போதும் அதே மாதிரி மேலே கையை காட்டிட்டு போயிட்டே இருக்கலாம்!”

மார்க்ஸ் சிரித்தான். மேனனும் சிரித்தார்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“பழைய மேட்டர்தான்... கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே... ஏன் எதிர்பார்க்கக்கூடாது... ஒழுங்கா கடமையை செஞ்சாகூட பல சமயம் ரிசல்ட் வராம போயிடும்னு அன்னைக்கே கண்டுபிடிச்சிருக்காங்க... அதனால வேலையை மட்டும் செஞ்சிட்டு போயிட்டே இருடா. ரிசல்ட்டை எதிர்பார்த்து டிசப்பாயின்ட் ஆகாதேன்னு சொல்லி வெச்சிருக்காங்க. வேலை செய்யுறது நம்ம கைல இருக்கு... ரிசல்ட் ஒட்டு மொத்த தமிழ்நாட்டோட கையில இருக்கு. அதில நம்ம செய்யுறதுக்கு எதுவும் இல்லை!”

“சூப்பர் மேட்டர் சார்...”

“எப்பவுமே நாம பண்றதை விட பெஸ்ட்டா ஒரு விஷயத்தைப் பண்ண இன்னொருத்தன் வந்துகிட்டேதான் இருப்பான். அதுக்கு நாம தயாரா இருக்கணும். அப்படி ஒருத்தன் பண்றப்ப அதை ஏத்துக்கணும். கரன்ட்டு கண்டுபிடிக்கிற வரைக்கும் கேண்டில் கண்டுபிடிச்சவன் நம்ம தாண்டா பெரிய பிஸ்துன்னு நினைச்சிருப்பான் இல்ல!” என மேனன் புன்னகைக்க மார்க்ஸும் புன்னகைத்தான்.

“கொஞ்சம் மொக்கையான எக்ஸாம்பிள் சொல்றனா?”

“இல்ல சார்...” என சிரித்தான் மார்க்ஸ்.

“எங்க உன்னோட டீம் எல்லாம்?”

“ரிலாக்ஸிங் சார்”

“நீ போகலையா...”

“இல்ல சார்...”

“நல்ல விஷயம்தான்” என்றார் மேனன்.

“ஏன் சார் அப்படி சொல்றீங்க?”

“ரொம்ப கோபம், ரொம்ப சந்தோஷம், ரொம்ப சோகம், ரொம்ப டென்ஷன்னு இந்த மாதிரி மனநிலையில இருக்கும் போது நான் குடிக்க மாட்டேன். ஏன்னா இந்த மாதிரி எமோஷன்ஸ் அடிக்கடி வரும். அப்படி வரும் போதெல்லாம் நமக்கு குடிக்கனும்னு தோணும். அது அடிக்ஷனாயிடும்...”

“புரியுது சார்...”

“இந்த மாதிரி சமயத்தில குடிக்க மாட்டேன்னு சொன்னேன். வேற என்ன பண்ணுவேன்னு சொல்லலையே!”

“என்ன சார் பண்ணுவீங்க?”

“நம்ம மனசுக்கு நெருக்கமா... நாம மனசு விட்டு எத வேணா யார் கிட்ட பேசலாம்னு தோணுதோ அப்படி ஒருத்தங்கள தேடி போய் அவங்களோட இருப்பேன்” எனச் சொல்லிவிட்டு “குட்நைட் மார்க்ஸ்... நாளைக்குப் பார்க்கலாம்” என மேனன் நகர்ந்தார்.

மார்க்ஸுக்கு சட்டென பேபியம்மாவை பார்க்கவேண்டும் போல் இருந்தது.

மார்க்ஸ் தனது பைக்கை கொண்டு வந்து பேபியம்மாவின் வீட்டு முன்னால் நிறுத்தினான். கேட்டைத் திறந்தவன் காலிங் பெல்லை அடிக்க கதவு திறந்தது. அவனைப் பார்த்து ஆச்சர்யமானார் பேபியம்மா...

“டேய் மார்க்ஸு... இன்னாடா இந்த நேரத்தில?” பேபியம்மா ஆள் பார்க்க சீரியல்களில் வரும் அம்மா போல அழகாக இருந்தார்.

“உங்க உப்புமா சாப்பிடணும் போல இருந்துச்சு அதான்”

பேபியம்மாள் சத்தமாகச் சிரித்தவர் “வாடா” என சொல்ல மார்க்ஸ் உள்ளே நுழைந்தான். டைனிங் டேபிளில் ஏஞ்சலும் அவளது அப்பாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பேபியம்மா வேறு யாருமில்லை ஏஞ்சலின் அம்மாதான்.

“அப்பா எப்படியிருக்கீங்க?”

“சூப்பரா இருக்கேன் மார்க்ஸ்... நீ வரேன்னு சொல்லியிருந்தா நான் சாப்பிடாம வெயிட் பண்ணியிருப்பேனே. ரெண்டு ரவுண்ட் போட்டிருக்கலாம்” என்றார் ஏஞ்சல் அப்பா.

“உன் 'கிளாஸ்'மேட்தான்பா உன்ன தேடிக்கினே இருக்காரு” என சிரித்தார் அம்மா.

“நீ உட்காரு நான் போய் உப்புமா ரெடி பண்றேன்” என பேபியம்மா உள்ளே செல்ல மார்க்ஸ் ஏஞ்சலைப் பார்த்து “ஹாய்” என்றான்.

ஏஞ்சல் எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள்.

மார்க்ஸ் சோஃபாவில் அமர்ந்தான். ஏஞ்சலைப் பிரிந்த அவனால் அவளது அம்மா அப்பாவைப் பிரிய முடியவில்லை என்பதே உண்மை.

ஏஞ்சலைப் பிரிந்த பிறகு மார்க்ஸ் அவளது வீட்டிற்கு சில வாரங்கள் போகாமல்தான் இருந்தான். ஏஞ்சலை நேசிப்பது அவளது வீட்டில் அனைவருக்கும் தெரியும். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்கிற தயக்கம் அவனிடம் இருந்தது.

ஏஞ்சலின் அம்மா ஒரு நாள் அவனைத் தேடி அலுவகத்திற்கே வந்தார்.

“இங்க பாரு நீங்க லவ் பண்ணுங்க, பிரேக்அப் பண்ணுங்க... அது உங்க பிரச்னை... அதை சாக்கா வெச்சுக்கினு எங்ககிட்ட பேசாம இருந்தேன்னு வையி மவனே உன்ன கொன்னே போடுவேன்... இந்தா” என டிபன் பாக்ஸை நீட்டியவர், “பிரான் தொக்கு பண்ணேன் உன் ஞாபகம் வந்திச்சு அதான் கொண்டாந்தேன். டிபன் பாக்ஸ் வேணும் ஒழுங்கா வீட்டுக்கு எடுத்தா” என சொன்ன போது மார்க்ஸுக்கு கண் கலங்கி விட்டது.

அவன் அழுதது ஏஞ்சலின் அன்புக்காக அல்ல. அவன் இழக்க இருந்த அம்மாவின் அன்புக்காக என்பதை அவன் சொல்லவில்லை!

“வாடா சாப்பிடலாம்” என்றார் அம்மா.

“வாம்மா மின்னல் மாதிரி சமைச்சிட்டீங்களே அம்மா” என்றான் மார்க்ஸ்.

“சேம் டயலாக்கா... புதுசா எதுனா சொல்லுடா” என்றார் பேபியம்மா.

மார்க்ஸ் டேபிளில் அமர்ந்தபடி “அம்மா... சீரியல் எல்லாம் பார்த்தீங்களாம்மா?”

“ஆமா... சூப்பரா இருந்திச்சே”

“ஆமாடா... அந்த இஸ்கூல் பசங்க சீரியல் ஹிட்டடிக்கும் பாரு” என்றார் அம்மா.

மார்க்ஸுக்கு ஆச்சர்யமாக இருந்தது. “என்னமா சொல்றீங்க அதுவா உங்களுக்கு பிடிச்சிருந்திச்சு?”

“ஆமா...இன்னா டவுட் உனக்கு?”

“இல்ல சின்ன புள்ளைங்க கதை உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு நினைச்சேன்!”

“எல்லாரும் வயசாகியா வானத்துல இருந்து குதிக்கிறாங்க... அதை பார்க்குறப்ப எனக்கு நான் படிச்ச மாந்தோப்பு ஸ்கூல் ஞாபகம் வந்திருச்சு” என்றார் அம்மா.

மார்க்ஸுக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.

“அந்த கலர் கம்மியா இருக்கிற பொண்ணு கதை...”

“பயங்கரமா இருக்குப்பா... எங்கடா பிடிச்ச அந்த புள்ளய கொள்ள அழகு... கறுப்பு என் முகத்தில இல்லடா உங்க மனசில இருக்குன்னு சொல்லிச்சு பாரு... விசில் அடிச்சிட்டேன்!”

மார்க்ஸ் சிரித்தான். மனம் லேசாவதை உணர்ந்தான் அவன்.

“அந்த மூணாவது சீரியல் கொஞ்சம் சுமார் தான்பா” அம்மாவிடம் மார்க்ஸுக்கு பிடித்த விஷயம் அதுதான். உண்மையை பட்டென போட்டு உடைப்பதில் அம்மாவை அடித்துக் கொள்ள முடியாது.

“உங்க பொண்ணு பண்ண சீரியல் எப்படியிருக்கு?”

“நல்லாதான் இருக்கு... வழக்கமா இருக்கு.... ஆனா பரவாயில்லை”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“ஆமா, அந்த திவ்யாவுக்கும் உனக்கும் எதுவும் சண்டையா என்ன?”

தூக்கிவாரிப்போட்டது மார்க்ஸுக்கு... “யாரும்மா சொன்னாங்க?”

“யாரும் சொல்லல... என் பொண்ணு சந்தோஷமா இருக்காளே அதான் கேட்டேன்!” என அம்மா சிரிக்க மார்க்ஸும் சிரித்தான்.

“ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வாடா அந்தப் பொண்ண...”

“கண்டிப்பா கூட்டிட்டு வர்றேம்மா” என்றான் மார்க்ஸ்.

“முதல்ல சாப்பிடு...” மார்க்ஸ் சாப்பிடத் தொடங்கினான்.

அம்மா அவனை வாஞ்சையாக பார்த்தபடி இருந்தார். அம்மாவை பொறுத்தவரை ஏஞ்சலும் ஒன்றுதான், மார்க்ஸும் ஒன்றுதான். வீட்டுக்கு வரும் எல்லா பிள்ளைகளையும் தன் பிள்ளைகளை போல நேசிக்க மிக சிலரால் மட்டுமே முடியும். குடும்பத்தை விட்டு ஊரை விட்டு சென்னையில் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பலர் பிழைத்துக் கிடப்பது இந்த மாதிரி அம்மாக்களால்தான்!

மார்க்ஸ் வீட்டுக் கதவை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். சுவர் கடிகாரம் இரண்டு மணி எனக் காட்டியது. டைனிங் டேபிளில் காலியான பீட்சா டப்பாக்கள் கிடந்தன. கோலா ஊற்றி குடித்த கண்ணாடி டம்ளர்கள் அப்படியே இருந்தன. மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் டேபிளை சுத்தம் செய்யத் தொடங்கினான்.

“என்ன பண்ற?”

மார்க்ஸ் திரும்பினான். திவ்யா நின்று கொண்டிருந்தாள். அவளது உச்சபட்ச அழகு மேக்கப் எதுவும் இல்லாமல் உறக்கத்தில் இருந்து விழித்து எழும்போதுதான் என்றது அவன் மனது. தலைமுடிகள் அழகாய் கலைந்திருந்தன.

“இன்னும் நீ தூங்கலயா?”

“நான் தூங்குறது இருக்கட்டும் நீ என்ன பண்ற... அதை சொல்லு முதல்ல...”

“இல்ல... சும்மா இதை எல்லாம் க்ளீன் பண்ணலாம்னுதான்” என மெல்லிய குரலில் மார்க்ஸ் சொன்னான்.

“நாங்க போட்ட குப்பையை நீ க்ளீன் பண்றியா?”

அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் மார்க்ஸ் நின்றான்.

“எதுக்கு இந்த ஓவர் ஆக்டிங்?”

“தூக்கம் வரல அதான்... இது ஒண்ணும் தப்பில்லையே”

“உலகத்திலயே பெரிய வில்லத்தனம் எது தெரியுமா? உனக்கு கெட்டது பண்றவங்களுக்கு பதிலுக்கு நல்லது பண்றதுதான்...”

மார்க்ஸின் இதழில் புன்னகை...

“ஒருத்தங்களை குற்ற உணர்ச்சியில கொல்றதுக்கு பேர்தான் தியாகம்...”

“இப்ப என்ன இந்த டேபிளை நான் க்ளீன் பண்ண கூடாதா... விட்டுடுறேன்!”

திவ்யா முறைத்தாள்.

“என்னதான் உனக்கு பிரச்னை?”

“நான் உன்ன வேணாம்னு சொன்னேன். இந்த நிமிஷம் வரைக்கும் நீ அதுக்கு ரியாக்ட் பண்ணல”

மார்க்ஸ் அமைதியாக இருந்தான்.

“கோபப்படு... இல்ல வருத்தப்படு இல்லைன்னா முடியாதுன்னு சொல்லு. இப்படி எதுவுமே நடக்காத மாதிரி நீ நடந்துக்கிறது என்ன இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு.”

மார்க்ஸின் மெளனம் தொடர்ந்தது.

“எதுவுமே பேசாம அமைதியா இருந்தா எப்படி?”

“நான் என்ன சொல்லணும்னு நீ எதிர்பாக்குற... சத்தியமா எப்படி ரியாக்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியல. அதனாலதான் நான் அமைதியா இருக்கேன்!”

திவ்யா முறைப்பதைத் தொடர்ந்தாள்.

“நான் கோபப்பட்டாலோ வருத்தப்பட்டாலோ நீ என்ன விட்டு இன்னும் தள்ளிதான் போவ, கிட்ட வர வாய்ப்பில்லை. எனக்கு கெஞ்சுறது பழக்கமில்லை. அதுவும் அன்பை எப்படி கெஞ்சி கேட்குறது? அதனாலதான் அமைதியா இருக்கேன்!”

“நான் ஏன் உன்ன விட்டு தள்ளி போனேன்னு உனக்கு புரியுதா?”

“காதல விட லட்சியம் முக்கியம்னு சொன்ன... இது அத டிஸ்டர்ப் பண்ணுதுன்னு சொன்ன!”

“ஆமா சொன்னேன். அதோட அர்த்தம் என்னன்னு உனக்கு புரியலையா?!”

“நீ வேணாம்னு சொன்ன பெயின் மட்டும்தான் எனக்கு இருக்கு. காரண காரியங்ளை ஆராயுற அளவுக்கு என் மனசு யோசிக்கல!”

“உனக்குள்ள நான் கரைஞ்சு காணாம போயிருவனோன்னு எனக்கு பயமா இருக்கு மார்க்ஸ்!”

“புரியல” என்றான் மார்க்ஸ்.

“நீ ஒரு பெரிய கடல். நான் வாழ்க்கையில சந்திச்ச மிகப்பெரிய ஆளுமை நீ... வேலையைத் தூக்கி வீசியடிக்கிற பாஸா இருந்தாலும் உண்மையை பேசுற... பேன்ட்ரி பையனைக் கூப்பிட்டு வசனம் எழுதுன்ற... ஒரே ராத்திரியில பிஸியான மியூஸிக் டைரக்டர் கிட்ட ஃபீரியா 3 பாட்டை வாங்குற...”

“இதெல்லாம் தப்புன்னு சொல்றியா திவ்யா?”

“இல்ல மார்க்ஸ்... இவ்வளவு பெரிய ஆளுமைக்கு முன்னால நான் ஒண்ணுமே இல்லாம போயிடுவனோன்னு எனக்கு பயமா இருக்கு!”

மார்க்ஸுக்கு அவளது பயம் புரிந்தது.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“நான் திவ்யா... அப்படித்தான் எப்பவும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். மார்க்ஸோட ஆளால்லாம் என்னால இருக்க முடியாது!”

“நான் அதுக்கு என்ன செய்யணும் சொல்லு!”

“என்னை விட்டுத்தள்ளி இரு... உன் நிழல்ல நான் சுகமா இருக்கலாம். ஆனா வளர முடியாது!”

“சரி நான் என்னை மாத்திக்கிறேன்...”

“உன்னால முடியாது... ஏன்னா அதுதான் நீ!”

“நீ திவ்யாவா தனிச்சு தெரியறதுக்கு என்னதான் வழி?”

“உன்கிட்ட மோதணும் மார்க்ஸ்!”

மார்க்ஸுக்கு அந்தப் பதற்றத்திலும் சிரிப்பு வந்தது.

“மிகப் பெரிய ஆளுமைகளை எதிர்த்து நிக்குறது ஒண்ணுதான் நாம்ம தனிச்சு தெரியறதுக்கான ஒரே வழி!”

“ஆளுமை அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாத திவ்யா. அன்புதான் இது எல்லாத்தையும் விடவும் பெருசுன்னு நான் நினைக்கிறேன். வழக்கமான வட்டத்தை விட்டு வெளிய இருக்கிற இன்னும் நாலு பேர்கிட்ட நான் அன்பா இருக்கிறேன். அததான் நீ ஆளுமைன்ற!”

திவ்யா அவனை உற்றுப் பார்த்தாள்.

“என்னோட அன்பை ஜெயிக்கிறதுக்கு வழி அதை விட அதிகமா அன்பு காட்டுறதுதான்... விலகி ஓடுறது கிடையாது!”

“பேசி உன்னை ஜெயிக்க முடியாது!”

“இப்ப என்ன... நீ என்னை மோதி ஜெயிக்கணும் அதான... சரி போட்டு பார்க்கலாம்!”

“அதான் நானும் சொல்றேன்!”

“நான் தோத்துட்டா எனக்கு ஓகே சொல்லுவியா?”

“அத அப்பதான் யோசிக்கணும்!”

மார்க்ஸ் சிரித்தபடி சொன்னான். “எனக்கு இந்த டீல் ஓகே தான். ஏன்னா நான் தோத்துப் போனாதான் எனக்கு பரிசு கிடைக்கும்!”

“இந்த விட்டு குடுக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்!”

“இல்ல... இல்ல ஃபைட்டுன்னா ஃபைட்டுதான்...”

திவ்யா அவனை நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்.

“என்ன நம்பிக்கையில்லையா?!'' என சுற்றும் முற்றும் பார்த்தவன்.

“இங்க பாரு, நீங்க போட்ட குப்பையை நீங்களே அள்ளுங்க... நான் போய் தூங்குறேன்” எனப் புன்னகைத்தபடி நகர்ந்தான் மார்க்ஸ்.

திவ்யா அவனை காரணமில்லாத கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

காதலின் அழகே இந்த புதிர்தான். அன்பு காட்டவில்லை என்றால் ஏங்குவதும் அன்பு காட்டினால் யார் உன்னிடம் கேட்டது எனக் கோபித்துக் கொள்ளுவதும், சட்டென நெருங்கி வருவதும், விலகி நிற்பதுமான இந்தச் சிக்கல்தான் அதன் சுவாரஸ்யமே. சில நேரங்களில் வேண்டாம் என்றால் வேண்டும் என அர்த்தம். சில நேரங்களில் வேண்டாம் என்றால் வேண்டாம் என்றுதான் அர்த்தம். இது எந்த வேண்டாம் என கண்டுபிடிப்பதில்தான் வெற்றியின் சூட்சமம் இருக்கிறது!

- Stay Tuned...