மார்க்ஸ் அந்த நாற்பதடி ஆழக் கிணற்றில் சடாரெனப் பாய்ந்தான். பெரிய சத்தத்துடன் உடல் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு சில அடி ஆழத்தில் பயணித்தது. உலகின் அத்தனை சத்தங்களும் சட்டென நின்று போய் தண்ணீருக்குள் இருக்கும் அந்த சில நொடிகள் மார்க்ஸுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. காலுக்கு கீழ் ஏதோ ஒன்று அவனை மீண்டும் வெளியே உந்தித்தள்ள மார்க்ஸ் தண்ணீருக்கு வெளியே வந்தான்.
சண்முகமும் அன்பும் கிணற்று விளிம்பில் அமர்ந்திருந்தார்கள்.
“போலாம் மாப்ள” என்றான் சண்முகம்.
“இன்னொரு 10 நிமிஷம்டா மாப்ள” என்றான் மார்க்ஸ்.
“இந்த மெட்ராஸ்காரனுங்க தண்ணியைப பார்த்தா விட மாட்டானுங்க” எனச் சிரித்தான் அன்பு.
சண்முகமும் அன்பும் மார்க்ஸுடன் ஆரம்பப் பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். சண்முகம், அப்பாவின் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு ஊரிலேயே செட்டிலாகி விட்டான். அன்பு திருச்செந்தூர் பஜாரில் பலசரக்கு கடை வைத்திருக்கிறான். மார்க்ஸ் ஊருக்கு வரும் போதெல்லாம் அவர்கள் இருவரும்தான் அவனுக்குத் துணை. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அவனை அழைத்து செல்வதில் ஆரம்பித்து மீண்டும் அவனை ரயில் ஏற்றி விடும்வரை அவர்கள் அவனுடனேயே இருப்பார்கள்.
“டிவில உன் பேரை பார்க்குறப்ப சந்தோஷமா இருக்குடா மாப்ள… கலக்குறடா” என அவர்கள் அவனைப் பார்த்து சொல்லும் போதெல்லாம் கலக்குவது அவர்கள்தான் எனத் தோன்றும் மார்க்ஸுக்கு. வெற்றி என்பது முன்னோக்கிப் போவது. நிம்மதி, சந்தோஷம் என்பது இதுபோதும் என்று பின்னோக்கிப் போவது. அன்பும், சண்முகமும் அப்படித்தான்.
“ஏன்டா மாப்பிள்ளை அந்த வேல்முருகன் வயல், விலைக்கு வருதே வாங்கிப் போடலாம்ல” எனப் போனதடவை வந்தபோது சண்முகத்திடம் மார்க்ஸ் கேட்டான்.
“வேணாம்டா... இருக்குற வயலையும், தோப்பையும் ஒழுங்கா பார்த்துக்கிட்டாலே போதும்டா” என்றான் சண்முகம்.
“பணம் ஏதாவது தேவைன்னா சொல்லுடா லோன் போட்டு தாரேன்!”
“அப்ப ஒண்ணு பண்ணு லோனைப் போட்டு நீயே வயல வாங்கு... நான் பார்த்துகிறேன்… உன் பேர்ல ஒரு சொத்து இருக்கட்டும்” என்றான் சண்முகம்.
“ஏன் அந்த சொத்து நீ வாங்குறது?” எனக் கேட்டான் மார்க்ஸ்
“சொத்து சுகம் சேர்க்குறது எல்லாம் பெரிய போதைடா மாப்பிள்ளை. அதுல விழுந்திட்டோம்னா வெளிய வர முடியாது... போயிகிட்டே இருக்கும். சேர்த்து வைக்கணும், செலவழிக்கனும். அதுதான வாழ்க்கை. சாவுற வரைக்கும் செலவழிக்க நேரமில்லாம சேர்த்து வச்சுகிட்டே போறது எல்லாம் ஒரு வாழ்க்கையா!” இதுதான் சண்முகத்தின் தத்துவம்.
சண்முகம், மார்க்ஸ் அப்பாவிடம் வயலை வாங்கலாம் என்ற போது அவர் சிம்ப்பிளாகச் சொல்லிவிட்டார். “அவன் இருந்து பார்த்துக்கிறதா இருந்தா வாங்கச் சொல்லு... வயலை வாங்கி வேலைக்கு ஆள் வச்சு பார்த்துக்கிறது எல்லாம் எனக்கு மனசுக்கு ஓப்பலை. அதெல்லாம் பண்ணையார் பயலுக பண்றது’’ என மறுத்துவிட்டார் . மார்க்ஸுக்கே அப்பா அல்லவா அவர்!

அன்புவின் வாழ்க்கையும் அப்படித்தான். கல்லூரி இறுதி ஆண்டு முடித்து விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் போதுதான் அவனது அப்பா தவறிப்போனார். அவனுக்கு நான்கு அக்காக்கள். தவமிருந்து பெத்த கடைசி ஆண்பிள்ளை அவன். அன்புவுக்கு மேற்படிப்பு படித்து பேராசிரியராக வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அப்பா இறந்ததும் அவரது பலசரக்கு கடையை எந்த வருத்தமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டான் அவன்.
“நீ மேல படிடா யாராவது ஆள் போட்டு கடைய பார்த்துக்கலாம்” என்றான் மார்க்ஸ்.
“இல்லடா அது சரியா வராது. காசு புழங்குற இடம் யாரையும் நம்பி வைக்க முடியாது. எனக்கொன்னும் கஷ்டம் இல்லடா மாப்பிள்ளை” என அப்பாவின் பொறுப்புகளை புன்னகையோடு ஏற்றுக்கொண்டான் அன்பு.
ஊருக்குப்போனால் மார்க்ஸின் ஒருநாள் ஷெட்யூல் என்பது காலையில் சண்முகத்தின் கிணற்றில் குளிப்பது, வீட்டுக்கு வந்து அம்மாவுடன் சமையலறையில் அமர்ந்து சென்னை கதைகளை பேசிக் கொண்டிருப்பது, மதிய உணவுக்கு அப்புறம் ஒரு தூக்கம். மாலையில் அன்புவின் கடைக்கு வெளியே நின்று கொண்டு வெட்டிக் கதை பேசுவது, செகண்ட்ஷோ ஞானக்குமார் தியேட்டரில் ஒரு படம். அதன்பிறகு விடிய விடிய பஸ் ஸ்டாண்டில் திறந்திருக்கும் சாந்தி பேக்கரியில் டீ குடித்து அரட்டையடித்து விட்டு அரவம் இல்லாமல் மொட்டைமாடியில் வந்து படுத்துக்கொள்வது. சொல்லிவைத்தது போல ஊரில் இருக்கும் எல்லா நாள்களும் இதேதான் நடக்கும். ஊருக்கு வந்துவிட்டு சென்னைக்கு மீண்டும் ரயில் ஏறும் போது 'கண்டிப்பா போகணுமா' என ஒவ்வொரு முறையும் நினைப்பான்.
ஈர வேட்டியை உதறிக் கட்டினான் மார்க்ஸ். துண்டை தோளை சுற்றி போட்டவன் சண்முகத்தின் பைக்கில் ஏறி அமர்ந்தான். மார்க்ஸ் வீட்டு வாசலில் அவனை இறக்கிவிட்டு விடைபெற்றார்கள் இருவரும். காம்பவுண்ட் கிரில் கேட்டைத் திறந்தவன் உதிர்ந்து கிடக்கும் காகித பூக்களைக் கவனமாக மிதிக்காமல் வீட்டு படியேறினான். அப்பா யாருடனோ அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். “வந்துட்டான்” என அப்பா சொல்ல அவருக்கு எதிரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த திவ்யா அவனைப் பார்த்து திரும்பினாள்.
மார்க்ஸுக்கு சட்டென தூக்கி வாரிப்போட்டது. அவளிடமிருந்து அதிகபட்சமாக போன் வரும் என்றுதான் எதிர்பார்த்தான் மார்க்ஸ். அவளே வருவாள், அதுவும் அவனை தேடிக் கொண்டு திருச்செந்தூர்வரை வருவாள் என்பதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“ஹாய்” என புன்னகைத்தாள் திவ்யா. உனக்கு மட்டும்தான் அசத்த தெரியுமா எனக்கும் தெரியும் என்றது அவளது சிரிப்பு. வார்த்தை வராமல் மார்க்ஸ் தடுமாறினான். மிகவும் பழக்கப்பட்டவள் போல அவனது வீட்டு ஹாலில் அவள் அமர்ந்திருந்தாள்.
“ஏதோ பிரச்னைன்னு சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்திட்டியாம்ல” என்றார் அப்பா. மார்க்ஸுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
“அதான் உன்ன தேடிக்கிட்டு அதே வந்திருச்சு... நல்ல ஃபிரண்ட்ஸ்ன்னா இப்படித்தான் இருக்கணும்” என்றார் அப்பா.
வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த தங்கை வாணியின் முகத்தில் கொஞ்சம் கேள்வியும் நிறைய பெருமையும் தெரிந்தது. அழகான அண்ணியைப் பிடித்துவிட்டான் என்கிற பெருமையா எனத் தெரியவில்லை.
“எப்படி இங்க” என மார்க்ஸ் இழுத்தான்.
“7 மணி இண்டிகோ எடுத்தேன். எட்டு பத்துக்கெல்லாம் தூத்துகுடி வந்திருச்சு. அங்க இருந்து ஒரு டாக்ஸி. 40 நிமிஷத்துல இங்க வந்தாச்சு” என்றாள் திவ்யா.
“போடா... போயி டிரெஸ் மாத்திட்டு வா சாப்பிடலாம்” என்றார் அப்பா...
அவன் தலையாட்டிவிட்டு அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தான்.
அவன் வேஷ்டியை மாற்றும்போது அம்மா வந்தாள்.
“அம்மா நான்...” என மார்க்ஸ் விளக்க ஆரம்பிக்கும்போதே குறுக்கிட்டு அம்மா சொன்னாள் “எனக்கு பிடிச்சிருக்கு!”
“என்ன பிடிச்சிருக்கு?!”
“டேய்... வழியுது துடைச்சுக்கோ!”
“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல...”
“இவரு கோச்சுக்கிட்டு வர்றதும், பின்னாடியே அந்தம்மா பிளேனைப் பிடிச்சு தேடிக்கிட்டு வர்றதும்... என்னடா அர்த்தம் இதுக்கெல்லாம்!”
மார்க்ஸுக்கு சிரிப்பு வந்தது.
“உங்கம்மாடா நானு... இப்படித்தான் 25 வருஷத்துக்கு முன்னாடி உங்கப்பா முழிச்சாரு...” என சிரித்தாள் அம்மா.
“அப்ப அவளுக்குள்ள ஏதோ இருக்குன்றயா!”
“நீ நிஜமாவே டியூப் லைட்டா... இல்ல அது மாதிரி நடிக்கிறயா?”
“அப்பா என்ன சொன்னாரு!”
“அவரு சொல்றதுக்கு என்ன இருக்கு... மாமனாரும் மருமகளும் இங்கிலீஷ்ல வேற பேசிக்கிட்டாங்க” என்றாள் அம்மா. அப்பா ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கும் ஒரு தமிழாசிரியர். தமிழாசிரியர்தானே என நினைத்து யாராவது ஆங்கிலத்தில் சீண்டினால் பின்னியெடுத்து விடுவார். “வேற வழியில்லாம தமிழ் படிக்கல... பிடிச்சதுனால படிச்சேன்” என்பார் அவர். “நாலு மொழி தெரிஞ்சப்புறம் தாண்டா தமிழோட அருமையே எனக்குப் புரிஞ்சுது” என்பது அவரது வாதம்.
“இப்ப என்னம்மா பண்றது?”
“இன்னைக்கு ஏதாவது முகூர்த்தம் இருக்கான்னு காலண்டர்ல பார்க்கவா” என்றாள் அம்மா!
மார்க்ஸ் சிரித்தபடி “ஐ லவ் யூம்மா” என்றான்
“அதை வெளிய இருக்கிறவ கிட்ட சொல்லு” எனச் சொல்லிவிட்டு அம்மா வெளியே சென்றாள். அப்பா ஊருக்கே தெரிஞ்ச புரட்சிக்காரர் என்றால் அம்மா ஒரு அமைதிப் போராளி.
இதுவரை அவனைத் தேடிவரும் நண்பர்கள் யாரிடமும் அவள் சாதி கேட்டதில்லை. ரமலான் சமயத்தில் குரூப் ஸ்டடி பண்ணும் போதெல்லாம் மார்க்ஸின் கல்லூரித் தோழன் அன்வர் அவன் வீட்டில் தொழுவதற்கு அம்மா மொட்டை மாடியில் பாய் விரித்து தருவாள். அவன் நோன்பு திறக்க அம்மா சிற்றுண்டி செய்து தருவாள். கடவுளே இல்லை என்பார் அப்பா. எல்லாமே ஒரே கடவுள்தான் என்பாள் அம்மா. சஷ்டிக்கு விரதம் இருப்பாள். தங்கைக்கு உடம்பு சரியில்லை என்றால் தர்க்காவுக்கு அழைத்து போய் தண்ணீர் எறிந்துவிட்டு வருவாள். மீன் வாங்க அமலி நகர் கடற்கரைக்கு போகும்போதெல்லாம் மாதா கோயிலில் முட்டங்காலிட்டு பிரார்த்தனை செய்வாள். யாராவது கேட்டால் ‘’சாமியில ஏதுடா நல்ல சாமி கெட்ட சாமி?’’ என்பாள் அம்மா.
அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். “தரையில உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா இருந்தா மேசையில உட்கார்ந்துக்கம்மா” என்றார் அப்பா.
“இல்ல அங்கிள் இது வசதியாதான் இருக்கு” என திவ்யா தரையில் அமர்ந்து சாப்பிட்டது அவருக்குப் பிடித்திருந்தது.
அப்பா கூடையை எடுத்து கொண்டு கறி வாங்க கடைக்குப் போனார். தங்கை கம்ப்யூட்டர் கிளாஸ் இருக்கு எனக் கிளம்பிச் சென்றாள். அம்மா சமையலறையில் வேலையாக இருந்தாள் அல்லது வேலையாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாள்.
மார்க்ஸூம் திவ்யாவும் மட்டும் தனித்திருந்தார்கள்.
“என்ன இப்படி பண்ணிட்ட?” என்றான் மார்க்ஸ்.
“அத நான் கேட்கணும்...”
மார்க்ஸ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நீ பாட்டுக்கு ரிசைன் பண்ணிட்டு கிளம்பிட்ட?!”
“நீ கல்கத்தா போறேன்னு சொன்ன... எதுக்கு நீ போகணும்னுதான்”
“நான் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போறேன்னுதான் சொன்னேன். உன்ன மாதிரி வேலைய விட்டுட்டு போறேன்னு சொல்லல!”
“எல்லாம் ஒண்ணுதான்!”
“இப்ப என்னடா வேணும் உனக்கு?” எனக் கோபமாகக் கேட்டாள் திவ்யா.
“நீ சென்னையை விட்டு போகக்கூடாது. புரோகிராமிங் ஹெட்டாதான் நீ இருப்பேன்னா உன் லீடர்ஷிப்ல நான் வேலை செய்யுறேன். எனக்கு அது பிரச்னையில்ல... ஒருவேளை நான் இல்லாம இருக்கிறதுதான் உனக்கு வசதின்னா” என நிறுத்தியவன் தலை குனிந்தபடி, “அதுக்காகத்தான் நான் ரிசைன் பண்ணேன்” என்றான்.
“உன் பிரச்னையே இதுதான்… ஒவரா நல்லவனா இருந்து எதிர்ல இருக்குறவங்களை கில்ட்டியா ஃபீல் பண்ண வைக்குறது... நீ வேலையை ரிசைன் பண்ணிட்டா நான் சந்தோஷமா பதவி ஏத்துப்பேன்னு நினைச்சியா!”
“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல... நீ கூட இருக்கணும் அவ்வளவுதான். அன்பா இருப்பியோ சண்டை போட்டுகிட்டு இருப்பியோ அது உன் இஷ்டம்... ஆனா கூட இருக்கணும்!”
“நீ வேலைய விட்டுட்டுப்போனா எப்படி கூட இருக்க முடியும்?”
மார்க்ஸ் சட்டென திவ்யாவை நிமிர்ந்து பார்த்தான்.
“நான் போறேன்னு உன்கிட்ட சொன்னேன்ல… அதே மாதிரி நீயும் என்கிட்ட சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு நீயா பேப்பரைப் போட்டுட்டு போனை ஆஃப் பண்ணி வெச்சிட்டு ஊருக்கு வந்துட்டா என்ன அர்த்தம்?”
“இப்ப நான் என்ன செய்யணும் சொல்லு?”
“உடனடியா கிளம்பி வந்து வேலையில ஜாய்ன் பண்ணு!”
“மேனன் சார் என்ன சொன்னாரு?”
“ஒண்ணும் சொல்லல”
“வருத்தப்படலையா”
“அவர் எதுக்கு வருத்தப்படணும்?”
“இல்ல நான் ரிசைன் பண்ணிட்டேனே”
“அது ஒரு டுபாக்கூர் ரிசைனிங் லெட்டர்னு அவருக்குத் தெரியாதா? நீ திரும்ப வருவேன்னும் அவருக்குத் தெரியும். உன்னை நான் வர வெச்சிருவேன்னும் அவருக்குத் தெரியும்”

மார்க்ஸ் புன்னகையுடன், “அப்படியா சொல்ற” என்றான்.
“அதனாலதான் அவர் சித்தார்த் மேனன். நீ நிஜமா வேலையை விடுறேன்னு தெரிஞ்சா நான் வந்திருக்க மாட்டேன். அவர் வந்திருப்பாரு!”
“திவ்யா”
“என்ன?”
“தேங்ஸ்”
“எதுக்கு?”
“சில சமயத்தில நாம யாருன்னு நமக்கு உணர்த்துறதே நம்மகூட இருக்கிறவங்கதான். அவங்க நம்ம மேல அன்பு காட்டுறப்பதான் நமக்கே நம்ம மேல ஒரு நம்பிக்கையும் மரியாதையும் வருது!” என்றான் மார்க்ஸ்.
“ஈவ்னிங் ஃபிளைட்ல கிளம்புறோம்... ரெடியாகு!”
மார்க்ஸ் தலையாட்டினான்.
“உங்கம்மா என்ன சொல்றாங்க?”
“மருமக அழகா இருக்கான்றாங்க!”
“அடப்பாவி நீ ஏதாவது சொன்னியா?”
“நான் வேற சொல்லணுமா? என்னைத்தேடி என் வீட்டுக்கு வந்த முதல் பொண்ணு நீதான்!”
திவ்யா புன்னகைத்தாள்.
“உன் அப்பா” என திவ்யா இழுக்க...
“அவர் இதுக்குள்ள எல்லாம் தலையிட மாட்டாரு… ஆனா, அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்றது அவர் பேச்சிலயே தெரியுது!”
“உன் அப்பா கிட்ட நான் நல்ல பேர் வாங்கியிருக்கேன்... நீ தான் எங்கப்பாவ வெறுப்பேத்தி அனுப்பிச்சிட்ட!”
“எப்படியாவது நான் அவரை சரி பண்ணிடுறேன் திவ்யா” என்றான் மார்க்ஸ்.
“இங்க பாரு உன்ன திரும்ப வேலைக்கு வான்னு சொல்லததான் கிளம்பி வந்தேன்... உடனே லவ்வு அது இதுன்னு ஆரம்பிச்சிடாத!”
மார்க்ஸ் ‘இல்லை’ என்பதாகத் தலையாட்டி புன்னகைத்தான்.
“வேலையில எப்பவும் போல நம்ம ஆப்போஸிட் டீம்தான்”
“ஆமா”
“ம்... அத மறந்திடாத...”
“திவ்யா ஒரு ரெண்டு நாள் நீ நம்ம ஊர்ல இருந்திட்டு போலாமே...”
“குலசை தசராவுக்கு வர்றேன்னு அம்மா கிட்ட சொல்லியிருக்கேன்!”
“இது எப்ப பேசுனீங்க?” என ஆச்சர்யமானான் மார்க்ஸ்.
“அது எங்களுக்குள்ள... அத நான் ஏன் உன்கிட்ட சொல்லணும்?”
மார்க்ஸ் நிறைவாகப் புன்னகைத்தான்.
தூத்துக்குடி ஏர்ப்போர்ட்டின் வெளியே திவ்யாவும் மார்க்ஸூம் நின்று கொண்டிருந்தார்கள். அன்பும் சண்முகமும் அவர்களை வழியனுப்பிவிட வந்திருந்தனர்.
“ஒரு ரெண்டு நாள் இருந்திருக்கலாம்” என்றான் அன்பு.
“அடுத்த தடவை ஒரு வாரம் இருக்கிற மாதிரி வர்றேன் அன்பு!” என்றாள் திவ்யா.
“இதுல சில்லுக்கருப்பட்டி, மக்ரூன், பரு மிச்சர் எல்லாம் இருக்கு” என சண்முகம் பார்சலை நீட்ட திவ்யா வாங்கிக் கொண்டாள்.
“உங்க ஃபிரண்டுகிட்ட சொல்லுங்க… அவசரப்பட்டு இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் எல்லாம் பண்ண வேணாம்னு!”
“இனி அவன் கோடி ரூபா குடுத்தா கூட வேலைய விட மாட்டான்” என சிரித்தார்கள் சண்முகமும், அன்பும். நாற்பது நிமிட கார் பயணத்தில் அவர்கள் திவ்யாவுடன் நண்பர்களாகியிருந்தார்கள். திவ்யாவும் சிரித்தாள். அவள் தலைமுடியை கலைக்கும் அளவுக்கு காற்று பலமாக அடித்தது.
வழியனுப்பும் போது அம்மா நெற்றியில் வைத்துவிட்ட குங்குமமும் திருநீறும் அவளை மேலும் அழகியாகக் காட்டின.
“காபி சாப்பிடுறீங்களா?” என்றான் அன்பு.
“குடிக்கலாமே” என்றாள் திவ்யா.
“வாங்கிட்டு வந்துடுறேன்” என அன்பு நகர கூடவே சண்முகமும் நகர்ந்தான்.
“ஒரு நிமிஷம் நானும் வந்துடுறேன்” என மார்க்ஸூம் அவர்கள் பின்னால் செல்ல திவ்யா சின்ன புன்னகையுடன் தனது மொபைலை எடுத்துப் பார்க்கத் துவங்கினாள்.
“மாப்ள… கை குடுடா” என மார்க்ஸின் கையைப் பற்றி அன்பு குலுக்கினான்.
“எதுக்குடா”
“அருமையான புள்ள மாப்ள... சூப்பர் செலக்சன்”
“டேய்... வெறும் ஃபிரண்டுடா அது”
“யப்பா எங்களுக்கு மூணு வயசிலயே காது குத்தியாச்சு” என்றான் சண்முகம்.
“நிசமாவே ஒண்ணும் இல்ல” என்றான் மார்க்ஸ்.
“போடா... ஒண்ணும் இல்லாமத்தான் உன்னைத் தேடி வந்துச்சாக்கும்?”
“அப்படி இல்ல... எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கு… ஆனா அதுக்கு....”
அவன் அடுத்து என்ன சொல்வான் என்கிற எதிர்பார்ப்புடன் நண்பர்கள் அவன் முகத்தையே பார்த்தார்கள்.
“இது கொஞ்சம் வேற மாதிரிடா… சொன்னா உங்களுக்கு புரியாது”
“பிடிச்சிருக்கா, இல்லையா… அவ்வளவு தானப்பா விசயம்!’’.
அப்படி காதல் எளிதாக இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றியது மார்க்ஸூக்கு.
“மாப்ள... பார்த்தாலே தெரியுது உங்களுக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்குன்னு... அப்படியே அத டெவலப் பண்ணு மாப்ள சரியா வரும்” என்றான் அன்பு.
“சத்தியமா சொல்றேன்... இது உனக்கு அமைஞ்சுதுன்னா நீ யோகக்காரண்டா... அது சாதிக்கவும் செய்யும். உன் குடும்பத்துக்கும் ஏத்த ஆளா இருக்கும்!”
மார்க்ஸ் புன்னகையுடன் நண்பர்களைப் பார்த்தான். மனது எப்போதுமே எளிதாக முடிவு செய்துவிடுகிறது. அறிவுதான் ஆராய்கிறேன் என்று குழம்பி தவிக்கிறது என அவனுக்குத் தோன்றியது. ஒரு சின்ன கார் பயணத்தில் அவர்கள் திவ்யா மார்க்ஸுக்கு ஏற்றவள் என முடிவு செய்து விட்டார்கள். வாழ்க்கைப் பயணம் முழுக்க அவள் வருவாளா என்பதை திவ்யாதான் முடிவு செய்ய வேண்டும்.
மார்க்ஸ் திரும்பி திவ்யாவைப் பார்த்தான். அலைபேசியில் பேசியபடியே, ‘’என்ன நடக்குது அங்க?’’ எனப் புன்னகையுடன் கேட்டாள்.
‘’ஒன்றுமில்லை’’ எனச் சிரிப்புடன் தலையாட்டினான் மார்க்ஸ்.
மேனன் தனது அறையில் அமர்ந்திருந்தார்.
கதவைத் தட்டிவிட்டு பிரசாத் உள்ளே நுழைந்தான்.
“சார், மார்க்ஸோட ரிசைன் லெட்டரை என்ன சார் பண்ணலாம்?”
“சொல்லுங்க என்ன பண்ணலாம்?” என்றார் மேனன்.
“மார்க்ஸ் ஒரு நல்ல டேலன்ட் சார்... அவரை நாம விட்டுடக்கூடாது. நான் பேசி அவனை கன்வின்ஸ் பண்றேன் சார்” என்றான் பிரசாத்.
“என்னை சந்தோஷப்படுத்துறதுக்காக அப்படிச் சொல்றீங்களா?”
வாய்வரை வந்த “ஆமா” வை விழுங்கியவன் “இல்லை சார்” என்றான்.
“எனக்கு மார்க்ஸைப் பிடிக்குங்கறதுக்காக பேசக்கூடாது. நியாயமா என்னவோ அத பேசணும்!”
‘என்ன சொன்னாலும் மாத்தி சொன்னா எப்படி’ என்றது பிரசாத்தின் மனது.
“அப்ப நான் ரெசிக்னேஷனை பாம்பேக்கு ஃபார்வேர்ட் பண்ணவா சார்” என குழம்பி போய் கேட்டான் பிரசாத்.
“மார்க்ஸ் வேலைக்கு சேர்ந்து ஹாஃப்டே ஆகுது... அந்த லெட்டரை என்ன செய்யலாம்னு அவன் கிட்டயே ஒரு வார்த்தை கேட்டிருங்க” எனச் சிரித்தார் மேனன்.
“சாரி சார்... நான் பார்த்துகிறேன் சார்” என எரிச்சலை மறைத்து சிரித்து சமாளித்தபடி அங்கிருந்து நகர்ந்தான் பிரசாத். மேனனை எப்படிக் கவர்வது என்பது அவனுக்கு குழப்பமாகவே இருந்தது. நல்லவர்களுக்கு உங்களை பிடிக்கவேண்டும் என்பதற்காக மெனக்கெட வேண்டியதே இல்லை. நீங்கள் நல்ல விஷயங்களை செய்தாலே போதும்.
மார்க்ஸ் தனது அறையில் அமர்ந்திருந்தான்.
இன்டர்காம் ஒலித்தது.
“சார், உங்களைப் பார்க்க ஆர்ட்டிஸ்ட் மேகலா வந்திருக்காங்க” என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.
“வரச்சொல்லுங்க” என போனை துண்டித்தான் மார்க்ஸ்.
கதவு தட்டப்பட மார்க்ஸ் திரும்பினான். மேகலா கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் பின்னால் உடலெங்கும் கட்டும் வீங்கிப்போன மூக்குமாக பாக்யா உள்ளே நுழைந்தான். பாக்யாவைப் பார்த்த மார்க்ஸின் முகம் மாறியது.
அவசரமாக “அவர் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும்னு சொன்னாரு… அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றாள் மேகலா.
மார்க்ஸ் மெளனமாக இருந்தான்.
“சாரி சார்... மன்னிச்சிருங்க... நான் மேகலாகிட்ட அப்படி நடந்துகிட்டது தப்புதான்” என்றான் பாக்யா.
மார்க்ஸ் எதுவும் பேசாமல் மெளனமாகயிருந்தான்.
“பண்ண தப்புக்குத்தான் அடி பொளந்திட்டீங்களே சார்... மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா... நிசமாவே நான் திருந்திட்டேன் சார்!”
மார்க்ஸின் மெளனம் நீடித்தது.
“நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க... நான் சார் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என மேகலா சொல்ல “வரேன் சார்” என சொல்லிவிட்டு பாக்யா வெளியே நகர்ந்தான்.
மார்க்ஸ் கோபமாக நிமிர்ந்தான்.
“என்ன இதெல்லாம்?!”
“உன்னதான் உசிரா நினைக்கிறேன்... தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிருன்னு அழுதார் சார்... பார்க்க பாவமா இருந்திச்சு அதான்” என்றாள் மேகலா.
பாவங்கள் கூட மன்னிக்கப்படலாம். ஆனால் உலகத்தில் மன்னிக்கவே முடியாத குற்றம் முட்டாள்தனம். இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத பெருவியாதி அது.
“உங்க கோபம் புரியுது சார்… அதான் மன்னிப்பு கேட்க அவரை நானே கூட்டிட்டு வந்தேன்” என்றாள் மேகலா.
“சரி நீ கிளம்பு!”
“சார்”
“எனக்கு வேலை இருக்கு... வேற ஒண்ணும் இல்லையே?!”
மேகலா காயப்பட்டவளாக தலையாட்டினாள்.
“சரி... பார்க்கலாம்… Bye” என அவன் திரும்பி தனது லேப்டாப்பை பார்க்கத் துவங்கினான்.
“வரேன் சார்” என மேகலா கதவைத் திறக்கப்போகும் சமயம் மார்க்ஸ் லேப்டாப்பை பார்த்தபடி சொன்னான்.
“உன்னை ஒரு நாள் அவன் கொன்னாலும் கொன்னுடுவான். அத மட்டும் யோசிச்சுக்கோ!”
மார்க்ஸின் வார்த்தைகள் மேகலாவைத் தாக்க அவள் பேசாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள். மார்க்ஸுக்கு அதை சொல்லியிருக்க வேண்டாமோ எனத் தோன்றியது ஆனாலும் அதுதான் உண்மை என்றது அவன் மனது!