Published:Updated:

இடியட் பாக்ஸ் - 46: ஒரு சேனலைப் பார்க்கவைக்க என்னவெல்லாம் செய்றாங்க?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 46: ஒரு சேனலைப் பார்க்கவைக்க என்னவெல்லாம் செய்றாங்க?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பேபியம்மா அடக்க முடியாமல் கடுமையாகச் சிரித்தார். மார்க்ஸ் சீரியசான முகத்துடன் பேபியம்மாவை பார்த்துக் கொண்டிருந்தான். ஆட்கள் யாருமின்றி பேபியம்மா வீட்டு மொட்டை மாடி காலியாக இருந்தது. மார்க்ஸும், பேபியம்மாவும் மொட்டைமாடியின் நடுவே ஆளுக்கொரு சேரில் அமர்ந்திருந்தார்கள். காற்றில் அசைந்தபடி சீரியல் பல்புகள் மின்னிக் கொண்டிருந்தன. காலி கோப்பைகள், கலைந்து கிடக்கும் நாற்காலிகள் என பார்ட்டிக்கு பிந்தைய சூழலில் இருந்தது அந்த இடம்.

பேபியம்மா மீண்டும் மார்க்ஸைப் பார்த்து சிரித்தார்.

“என்னம்மா நீங்க... ஆறுதலா ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தா இப்படி சிரிச்சு என்ன வெறுப்பேத்துறீங்க?”

“இல்லடா...” என ஏதோ சொல்ல வந்தவர் “ஆமா... நிஜமா ஏஞ்சல் அப்படியா சொன்னா?” என கேட்டார்.

மார்க்ஸ் பதிலேதும் சொல்லாமல் பேபியம்மாவைப் பார்த்தான். பேபியம்மா சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஏண்டா... எனக்கே தெரியாம என் பொண்ணுக்கு நீ முத்தம் குடுத்திருக்கல்ல!”

“அப்புறம் உங்க கிட்ட சொல்லிட்டா முத்தம் குடுப்பாங்க”

பேபியம்மா சிரித்தபடி “திவ்யா என்ன சொல்றா?”

“யாருக்குத் தெரியும்? அதுக்கப்புறம் கிளம்புற வரைக்கும் அவ முகத்தையே நான் பார்க்கல” என்றான் மார்க்ஸ்.

“அவ்வளவுதான் முடிஞ்சுது கதை...”

“என்னம்மா இப்படிச் சொல்றீங்க...” என ஆதங்கமாக கேட்டான் மார்க்ஸ்.

“காதலிக்கிற பொண்ணுக்கு முத்தம் குடுக்குறது ஓகேடா... அத முன்னாள் காதலி வீட்ல வச்சு கொடுக்க கூடாதில்ல...”

“தப்புதான்” என்றான் மார்க்ஸ்.

“அதுவும் அவளுக்கு முத்தம் குடுத்த அதே ஸ்பாட்ல” என பேபியம்மா சிரித்தார்.

மார்க்ஸுக்கும் சிரிப்பு வந்தது.

“உனக்கும் சிரிப்பு வருதுல்ல?”

“அம்மா”

“என்ன?”

“எனக்கும் ஏஞ்சலுக்கும் நடுவுல என்ன பிரச்சனைன்னு நீங்க ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லையேம்மா!”

“எனக்கு எதுக்கு உங்க கதை? உன் கதைய கேட்டா... அவ கதைய கேட்கணும். அப்புறம் ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் சரி, தப்புன்னு முடிவு எடுக்கத் தோணும். எதுக்கு வம்பு? எனக்கு ரெண்டு பேரும் வேணும். அதான் உங்க கதைய கேக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

“நாங்க பிரிஞ்சது உங்களுக்கு சங்கடமா இல்லையா?”

“அது எப்படி இல்லாது போவும்...”

“ஏஞ்சல் நாங்க பிரிஞ்சிட்டோன்னு சொன்னப்ப என்னம்மா யோசிச்சிங்க?”

“உன்ன மாதிரி ஒரு புள்ள இந்த வீட்டுக்கு மருமகனா வர குடுத்து வைக்கலியேன்னு வருத்தமா இருந்துச்சு!”

மார்க்ஸின் கண்கள் கலங்கின.

“போய் என் மக கிட்ட மன்னிப்பு கேளுடான்னு நீங்க சொல்லியிருந்தா நான் சத்தியமா மன்னிப்பு கேட்டிருப்பேன்மா!”

“அதனாலதான் அத நான் சொல்லல” என்றார் பேபியம்மா.

மார்க்ஸ் பேபியம்மாவை ஏறிட்டுப் பார்த்தான்.

“எனக்காக நீ அவள ஏத்துக்க கூடாதில்ல... நீங்க மனசார பிடிச்சுதான சேரணும்”

“நான், ஏஞ்சல பிரிஞ்சதுன்னு தப்புன்னு உங்களுக்கு தோணுதாம்மா?”

“தப்பு பண்றவன் தாண்டா மனுஷன். தப்பே பண்ணாம இருக்க முடியுமா? தப்பு பண்ணனும், தப்புன்னு தெரிஞ்சதும் திருத்திக்கனும். அதான் வாழ்க்கை. காதல மட்டும் கரெக்டா பண்ணிட முடியுமா? அதுலயும் இதெல்லாம் நடக்கும்.”

மார்க்ஸ் பேபியம்மாவை பார்த்தபடி இருந்தான்.

இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், ஏஞ்சல்
இடியட் பாக்ஸ் - மார்க்ஸ், ஏஞ்சல்

“என்னடா பாக்குற?”

“எப்படிம்மா... உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது?”

“போதும் போதும் பாராட்டுனது.... மணி மூணாவுது... நீ முதல்ல கிளம்பு...”

“அம்மா... நான் இந்த வீட்டுக்கு மருமக புள்ளயா வரணுன்னு கர்த்தர் யோசிக்கல… உங்களுக்கு நான் புள்ளையா வரணுன்றது தான் அவரோட சித்தம்.”

“ஆமா இவருக்கு ரொம்ப தெரியும் கர்த்தர் பத்தி... போடா...”

“அம்மா... நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன்.”

“ஏஞ்சல் எந்திரிச்சு வர்றதுக்குள்ள முதல்ல கிளம்பு... அது போதும்.”

“போறது இருக்கட்டும்... இந்தப் பிரச்னைய எப்படிம்மா நான் டீல் பண்றது?”

“முன்னாள், இந்நாள் காதலி ஒரே இடத்துல இருந்தா என்ன பண்ண முடியும்? அனுபவிச்சுதான் ஆகணும்.”

“ஏஞ்சலுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல!”

“நீ சந்தோஷமா இருக்குறதுக்கு என் பொண்ணுக்கு நான் உடனே கல்யாணம் பண்ணி வைக்கணுமா? அதெல்லாம் முடியாது!”

“அப்ப எனக்கு என்னதான் வழி?”

“உனக்கு வழி எல்லாம் இல்ல... வலிதான்” என பேபியம்மா சிரித்தார். மார்க்ஸும் சிரித்தான்.

நம்மை வேண்டாமென தூக்கி எறிகிற பெண்கள் அதோடு நம்மை விட்டு விலகி விடுவதில்லை. அந்தப் பிரிவை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அவர்களுக்கு அது மிக முக்கியம். அந்தப் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் நாம் தவித்தால் அவர்கள் ஆறுதலடைவார்கள். நிஜமாகவே இவன் நம்மை நேசித்திருக்கிறான் என்கிற ஆறுதல் அது. பிரிவை எளிதாக ஆண் கையாளும் போது அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். அந்த ஏமாற்றம் கோபமாக மாறுகிறது. தன்னை பிரிந்து சந்தோஷமாக இருக்கும் ஆணை பெண் வெறுக்கிறாள். அந்த சந்தோஷத்தை கெடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறாள். உன்னோடு வாழ எனக்கு விருப்பமில்லை. உன்னை நினைத்த மனதால் வேறொருவனையும் நினைக்க முடியவில்லை. நீ வேறு யாரையாவது நினைத்தாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிட்டே வராமலும் விட்டு விலகாமலும் தொடர்கிற இது போல பல கதைகள் இங்கு உண்டு.

……………….

மார்க்ஸ் தனது அறையிலிருந்தான். அவனது புதிய அறையின் ஓரமாக இருந்த சோஃபாவில் அமர்ந்து காலை எதிரே இருந்த டீபாயில் வைத்து தலையை பின்னுக்கு சாய்த்து உறக்கத்தில் இருந்த அவனை கதவு தட்டப்படும் ஓசை எழுப்பியது. அவன் கண்விழித்து பார்த்தான். நந்திதா தயக்கமாக உள்ளே நுழைந்தாள்.

“சாரி எழுப்பிட்டனா?”

“மணி என்ன ஆச்சு!”

“நைன் தேர்ட்டி”

“நைன் தேர்ட்டி ஆயிருச்சா?” என மார்க்ஸ் எழுந்து அமர்ந்தான்.

“ஆபீஸுக்கு எப்ப வந்த?” என்றாள் நந்திதா.

“வந்துட்டேன்” எனப் பொதுவாக சொன்னான் மார்க்ஸ்.

பேபியம்மா வீட்டிலிருந்து கிளம்பி மார்க்ஸ் அவன் வீட்டுக்கு வந்த போது காலை மணி ஐந்தாகிவிட்டது. உறக்கம் வராமலும் திவ்யாவை சந்திக்க தைரியமில்லாமலும் அப்படியே குளித்து விட்டு 6 மணிக்கெல்லாம் ஆபிஸுக்கு வந்துவிட்டான் மார்க்ஸ். யோசனையுடன் சோஃபாவில் அமர்ந்தவன் அப்படியே உறங்கிப் போய்விட்டான்.

சோம்பல் முறித்தபடி எழுந்து வந்த மார்க்ஸ் தனது சேரில் அமர்ந்தபடி, “சொல்லு” என்றான்.

“நீ புரோகிராமிங் ஹெட்டானதுக்கு நான் உன்ன விஷ் பண்ணல... நீயும் ஏன் விஷ் பண்ணலன்னு கேக்கவே இல்லைல்ல!”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

'நான் உன்னை கண்டுக்கொள்ளாமல் இருக்கக் காரணமே நீ என்னை கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அதையும் நீ கண்டு கொள்ளாமல் இருந்தால் எப்படி?’ என்கிற மன வருத்தம் தெரிந்தது நந்திதா குரலில்.

“ஏன் விஷ் பண்ணல?” எனப் புன்னகையுடன் கேட்டான் மார்க்ஸ்.

“உன் மேல எனக்கு கோபம்!”

“இப்ப நான் ஏன் கோபம்னு கேக்கணுமா?”

அவள் ஆமென தலையாட்டினாள்.

“ஏன் கோபம்?”

“ஏன் கோபம்னு உனக்கு தெரியாதா?”

மார்க்ஸ் புன்னகையுடன் அருகில் வந்தவன் செல்லமாக அவள் தலையில் தட்டி அவளை ஒரு கையால் அணைத்துக் கொள்ள, அதற்கென காத்திருந்தவள்போல நந்திதா உடைந்து அழத்தொடங்கினாள். மார்க்ஸ் ஆதரவாக அவளது முதுகில் தட்டிக் கொடுத்தான். அவள் அழுது தீர்க்கட்டும் என்பது போல காத்திருந்தான். நந்திதா விலகியவள் மெதுவாக கண்களை துடைத்து கொண்டு “சாரி” என்றாள்.

“நானும் உன் கிட்ட சாரி சொல்லணும்” என்றான் மார்க்ஸ்.

“நீ எதுக்கு சாரி சொல்லணும்?”

“எங்கேயோ ஒரு இடத்துல உனக்கு ஒரு நம்பிக்கையை நான் தந்துட்டேன்.”

“நம்பிக்கை தர்றது தப்பான விஷயமா?” என்றாள் நந்திதா.

“இல்ல… இல்ல நான் அந்த அர்த்தத்துல சொல்லல... இது காதல்ன்ற மாதிரி ஒரு தப்பான நம்பிக்கையை நான் உனக்கு தந்துட்டேன்னு நினைக்கிறேன்.”

நந்திதா மார்க்ஸை உற்றுப் பார்த்தாள்.

“எனக்கு யாரும் புரபோஸ் பண்ணியிருக்க மாட்டாங்கன்னு நீ நினைக்கிறியா?”

“சே... சே... அழகி நீ... எப்படியும் உனக்கு ஏகப்பட்ட புரபோசல் வந்திருக்கும்.”

நந்திதா இல்லை எனத் தலையாட்டினாள்.

“நிஜமாவே உன்ன லவ் பண்றேன்னு யாரும் சொன்னதில்லையா?” என ஆச்சர்யமாக கேட்டான் மார்க்ஸ்.

“அப்படி ஒரு விஷயமே நடக்காம நான் பார்த்துகிட்டேன். இது காதலை நோக்கித்தான் போகுதுன்னு தெரிஞ்சா அந்த ஆளுங்கள நான் ஆரம்பத்திலேயே கட் பண்ணிடுவேன்.”

“ஏன் அப்படி?”

“தெரியல... யாராவது என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னா சந்தோஷமா இருக்காது. பயமாதான் இருக்கும். அவங்க பாதியில என்ன விட்டுட்டு போயிருவாங்களோன்ற பயம். அதனால தனியாவே இருந்து நான் பழகிக்கிட்டேன்.”

மார்க்ஸ் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

“ஆனா எனக்கே ஒருத்தர பிடிச்சுதுன்னா அது உன்னதான்.”

“எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்.”

“பொறு நான் முடிச்சிடுறேன்” என்றாள் நந்திதா.

மார்க்ஸ் கைகளை கட்டிக் கொண்டவன், புன்னகையுடன் 'நான் பேசல' என சைகை செய்தான்.

“எப்பவும் என் கூட இரு மார்க்ஸ்... ஃபிரண்டு, தங்கச்சி இல்ல வேற என்ன வேணா இந்த உறவுக்கு நீ பேர் வச்சுக்கோ. ஆனா கூட இரு... பாதியில ஓடிடாத… அது போதும்” என்றாள் நந்திதா.

மார்க்ஸ் தலையாட்டினான்.

“நாளைக்கு எனக்கு ஆள் வரலாம், நான் கல்யாணம் பண்ணலாம். புள்ளைங்க பொறக்கலாம்... அவங்கல்லாம் இருக்காங்கன்னு சொல்லி நீ எஸ்கேப் ஆயிடாத. அப்பவும் நீ என் கூட இருக்கணும்” என்றாள் நந்திதா.

சரி என்பதாக மார்க்ஸ் தலையாட்டினான்.

“இதனால எல்லாம் நீ திவ்யாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்ததை நான் மறந்துட்டேன்னு அர்த்தம் இல்லை... அதுக்கு நான் இன்னும் கோபமாதான் இருக்கேன்” என்றாள் நந்திதா.

மார்க்ஸ் சிரித்தான். நந்திதா அறையை விட்டு நகர்ந்தாள். அவனது போனடித்தது. போனை எடுத்தான் மார்க்ஸ். மறுமுனையில் பாண்டியன்.

“தல... 10 மணிக்கு புரோகிராமிங் மீட்டிங்!”

“வந்தர்றேன்” என போனை வைத்தான் மார்க்ஸ்.

மார்க்ஸ் வேகமாக கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தான். அனைவரும் அவன் வருவதற்க்கு முன்னால் கூடியிருந்தார்கள். “சாரி” என பொதுவாக சொன்னவன் தனது சேரில் அமர்ந்தான். திவ்யா சீரியசான முகபாவனையுடன் அவனுக்கு எதிராக அமர்ந்திருந்தாள். மார்க்ஸ் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். அவள் எதுவும் நடக்காத ஒரு பாவனையில் அமர்ந்திருந்தாள். ஏஞ்சல் சற்று தள்ளி அமர்ந்திருந்தாள். மனதுக்குள் அவள் கிண்டலாக சிரிக்கிறாள் என மார்க்ஸுக்குத் தோன்றியது.

மெதுவாக அறையை சுற்றிப் பார்த்தான் மார்க்ஸ். கூலிங் கிளாஸ் அணிந்து பாண்டியன் அருகில் அமர்ந்திருக்கும் நெல்லையப்பனை பார்த்ததும் அவனையறியாமல் அவனுக்கு சிரிப்பு வந்தது.

புன்னகையுடன் மேனன் “என்ன நெல்லையப்பன் கூலிங் கிளாஸ் எல்லாம்?” என்றார்.

“தண்ணி பிராப்ளம் சார்... கண்ணு வீங்கிடுச்சு” என சிரித்தபடி சொன்னான் பாண்டியன்.

நெல்லையப்பன் திரும்பி அவனை முறைத்தார்.

“இல்ல சார்... டேங்க் தண்ணியில குளோரின் ஜாஸ்தியாகி… அதுல குளிச்சதுனால மாமா கண்ணு வீங்கிடுச்சு” என்றான் பாண்டியன்.

“புரியுது” என புன்னகையுடன் சொன்ன மேனன் “இது எத்தன நெல்லையப்பன்?” என விரல்களை மடக்கி காட்டினார்.

“சார்” என நெல்லையப்பன் ஆதங்கமாகச் சொல்ல மேனன் சிரித்தார்.

அறையில் இருந்த அனைவரையும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது.

மார்க்ஸ் சிரித்தபடி திவ்யாவைப் பார்த்தான். அவன் பார்க்கவும் அவள் நிமிரவும் சரியாக இருந்தது. இருவரது பார்வைகளும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டு சட்டென விலகின.

சீரியசான மீட்டிங்குகளை இது போல ஒரு சின்ன ஜோக்குடன் துவங்குவது நல்ல தலைவர்களின் பாணி. பெரிய பிரச்னைகள் கூட நகைச்சுவையாய் அணுகும் போது சமாளிக்க கூடியவைதான் எனத் தோன்றும்.

“மார்க்ஸ்... GRP புரஜக்ஷனைப் பார்த்திடலாமா?” என்றாள் தாட்சா.

டார்லிங் லேப்டாப்பை ஆன் செய்ய திரையில் எக்ஸெல் ஷீட் விரிந்தது.

“இப்ப நம்ம 240 GRP-ல இருக்கோம்.. நம்ம GRP-ய ஒரு வருஷத்தில 500 ஆக்கணும்னு சவுத் ஹெட் டார்கெட் குடுத்திருக்காரு” என ஆரம்பித்தான் மார்க்ஸ்.

“பக்கத்து சேனல்ல இருந்து ஒரு 250 GRP கடனா வாங்கிரலாம்பா” என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தனர்.

“இந்த ஓட்ட கண்ணாடிய போட்டுகிட்டு ஓவர் நக்கல்யா உனக்கு” என்றான் பாண்டியன்.

“ஆமா... 250 எப்படி ஒரே வருஷத்துல 500 ஆவும். தப்பா கூட்டுனா கூட வராதய்யா” என்றார் நெல்லையப்பன். அவர் சொன்ன உண்மை அங்கிருக்கும் அனைவருக்கும் புரிந்தது. மேனன் மட்டும் சின்ன புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"மார்னிங் 6 மணில இருந்து 10 மணி வரைக்கும் இருக்கிற மார்னிங் பேண்ட்ல எட்டு ஹாஃப் ஹவர்... வாரத்துக்கு ஏழு நாள் ஒவ்வொரு ஹாஃப் ஹவரும் அட்லீஸ்ட் ஒரு TVR பண்ணா கூட 56 GRP வரும்."

“அது எல்லாம் டம்மியான பேண்டுப்பா... காலையில எல்லாம் எவன் டிவி பாக்குறான். பாயின்ட் திரீ... பாயின்ட் ஃபோர் பண்ணிகிட்டு இருக்கு. அதுல எப்படி ஒரு TRP வரும்.”

“ஒரு கணக்கு போட்டு பார்ப்போம்... அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?”

“சரிப்பா... சரிப்பா” என்றார் நெல்லையப்பன்.

“காலையில 10 மணியில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் நான்-பிரைம் டைம். 16 அரை மணி நேரம். வீக் டேஸ் 5 நாள்... மொத்தம் 60 அரை மணி நேரம். அதில் ஒரு ஒன்னரை TRP போட்டா 90 GRP நான்-பிரைம் டைம்ல வரணும்.”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“சாயங்காலம் சீரியல் எல்லாம் பகல்ல ரிப்பீட் போடுறோம்... ராத்திரி ஒரிஜினலையே ஒரு பய பாக்க மாட்டுறான். ரிப்பீட்ட எப்படி பகல்ல பார்ப்பாணுங்க?” என்றார் நெல்லையப்பன்.

“புது சீரியல் எல்லாம் நல்ல நம்பர் பண்ணுதே” என்றாள் ஏஞ்சல்.

“சரி அத விடு... நாம மத்தியானம் போடுற படம் எல்லாம் அரத பழசு. அது தியேட்டர்ல ஓடுனத விட நம்ம சேனல்ல தான் அதிகமா ஓடியிருக்கு. இன்னும் சில படமெல்லாம் அப்படி ஒரு படம் இருக்குறதே நம்ம சேனல் பார்த்துதான் பல பேருக்கு தெரிஞ்சிருக்கு... அத எல்லாம் சேர்த்து 90 GRP ஓவரா இல்லையா?”

அனைவரும் சிரிக்க மார்க்ஸ் சிரிப்பை அடக்கியபடி நெல்லையப்பனை முறைத்தான்.

“சரிப்பா ஒரு பேச்சுக்கு சொல்ற... அப்படியே வச்சுப்போம்... 90 இருக்கட்டும்” என்றார் நெல்லையப்பன்.

“சாயங்காலம் 6 மணில இருந்து ராத்திரி பதினோறு மணி வரைக்கும் பிரைம் டைம் பத்து ஹாஃப் ஹவர். வாரத்துக்கு 5 நாள். மொத்தம் 50 ஹாஃப் ஹவர். ஆவரேஜா ஒரு சீரியல் 3 TRP பண்ணா 150 GRP” என மார்க்ஸ் சொல்லி முடிக்க அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“என்ன நெல்லையப்பன் இதுக்கு ஒண்ணும் சொல்லல?" என்றார் மேனன்.

“ஓரளவுக்கு படம் வரைஞ்சா பரவாயில்ல சார் ஓவரா போர்டை தாண்டி சுவத்தில எல்லாம் வரையறார்... இதுக்கு என்ன சார் சொல்றது?” என்றார் நெல்லையப்பன். மேனன் சிரித்தார்.

“வீக் எண்ட் சனி ஞாயிறு நம்மளோட நான் ஃபிக்ஷன் ஷோ, புதுப்படம் எல்லாம் சேர்த்து ஒரு 150 GRP பண்ணா...” என மார்க்ஸ் சொல்லி வாய் மூடும் முன் “நானூத்தி நாப்பத்தாறு GRP வருதுப்பா” என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தனர்...

“அப்பவும் 54 GRP குறையுது” என்றார் அவர்.

"டார்லிங் பிரைம் டைம் ஷோல எல்லாம் மூணு மூணு போட்டிருக்க இல்ல... அதை மூனறை மூனறையா மாத்திக்கோ” என்றான் மார்க்ஸ்.

“யப்பா நிறுத்துப்பா நீ பாட்டுக்கு போட்டு கிட்டே போற... எக்ஸெல் ஷீட்டுல டார்கெட் அச்சீவ் பண்றது ஈஸிப்பா... நிஜத்துல எப்படி நடக்கும்?!”

மார்க்ஸ் யோசனையாக எக்ஸெல் ஷீட்டைப் பார்த்தான்.

“நீ வீக் எண்டுல போடுறதா சொல்றயே புதுப்படம், அது மொத்தமாவே சேனல்ல பத்துதான் இருக்கும். ஆனா வருஷத்துக்கு 52 வாரம் இருக்கே ராஜா” என்றார் நெல்லையப்பன்.

“அதே படத்தை ரிப்பீட் பண்ண வேண்டியது தான்”

“அப்ப அதுக்கு பேர் புதுப்படம் இல்லையே ராஜா!”

மார்க்ஸ் திரும்பி மேனனை பார்த்தான். அனைவரும் திரும்பி அவரை பார்த்தனர்.

மேனன் சின்ன புன்னகையுடன் பேசத் துவங்கினார்.

“அவங்க நமக்கு குடுத்து இருக்கிற டார்கெட் இப்ப இருக்கிற சூழ்நிலையில ரொம்ப அதிகம்தான். அத முடியாதுன்னு சொல்றது ஒரு விதம்னா, முயற்சி பண்ணி பார்ப்போம்ன்னு சொல்றது இன்னொரு விதம். உடைக்க முடியாத ரெக்கார்ட்டுன்னு ஏதாவது இருக்கா என்ன? ஒரு ட்ரை அடிச்சு பார்க்கலாமே!”

அனைவரும் அவரைப் பார்த்தனர்.

“மார்க்ஸ் போட்டிருக்கிற GRP ப்ரொஜக்‌ஷன் பிளான் பர்ஃபக்ட். அதைப் பண்ணாதான் 500 GRP வரும். அந்தந்த டைம் பேண்ட்ல அதைக் கொண்டு வர என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.”

அனைவரும் மேனன் பேசுவதையே பார்த்தனர்.

“நம்மளோட பட்ஜெட் 4 மடங்கு அதிகமாயிருக்கு... GRP ரெண்டு மடங்கு உயரணும்னு மேனேஜ்மென்ட் எதிர்பார்க்குது. அது அப்படி நடக்காதுதான். ஆனா, நடக்காதுன்னு சொல்றதுக்கு நம்ம எதுக்கு? யார் வேணா சொல்ல முடியுமே. ஐநூறுன்னு யோசிச்சு அசந்து போகாம அடுத்த 4 மாசத்துல 350 வரணுன்னு யோசிங்க முடியும்னு தோணும்.”

“அப்புறம் அடுத்த நாலு மாசத்துல 350 லேர்ந்து 400 யோசிங்க அதுவும் முடியும்னு தோணும். விளையாடிப் பார்க்கலாம். அதிர்ஷ்டம் எப்பவுமே உழைப்பைத் தேடி வரும்னு நம்புறவன் நான்.”

“முடியலன்னா சார்” என்றான் தனபால்.

“முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணமான்றதுதான் முக்கியம். அப்பவும் முடியலன்னா அது ஓகேதான்” என்றார் மேனன்.

“ஒவ்வொருத்தரும் ஒரு பொறுப்பை எடுத்துகிட்டு வேலை செய்யுங்க. இது நான் சொல்றதுக்காகவோ தருண் சொல்றதுக்காகவோல்லாம் இல்ல... நம்ம பவர் என்னன்னு நாம தெரிஞ்சுக்க வேண்டாமா… அதுக்காகவாவது பண்ணிப் பார்ப்போம்!”

அனைவரும் கோரஸாக “யெஸ் சார்” என்றனர்.

மேனன் திரும்பி பார்த்தார். தாட்சா காதலாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மேனன் மெதுவாக அவளருகே குனிந்தவர், “சாரி... நீங்க பேச வேண்டியதெல்லாம் நான் பேசிட்டேன்” என தயக்கமாகச் சொன்னார்

“தேங்க் யூ” என்றாள் தாட்சா. அன்பான இதயங்கள் எப்போதும் ஒன்றை மற்றொன்று போட்டியாக பார்ப்பதே இல்லை.

மார்க்ஸூம் திவ்யாவும் அவனது அறையில் தனித்திருந்தார்கள்.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் மார்க்ஸ்.

“அதுக்கு முன்னால நான் நினைக்கிறதை சொல்லிடுறேன்... முதல்ல என்கிட்டயே நிறைய குழப்பங்கள் இருக்கு. உன்ன விட்டு விலகணும்னு நான் நினைக்கிறேன். ஆனா, உன் கூடவே இருக்கேன். காதல் இல்லைன்னு சொல்றேன். ஆனா, கட்டி பிடிச்சு முத்தம் குடுக்குறேன்!”

“திவ்யா” என மார்க்ஸ் ஏதோ பேச வர இடைமறித்தவள்,

“இத உன்னோட தப்பு இல்ல... என்னோட குழப்பம். அத நான்தான் சரி பண்ணிக்கனும்... பண்ணிக்கிறேன்” என்றாள் திவ்யா.

“அதில்ல நேத்து ஏஞ்சல் சொன்ன விஷயம்!”

“அதுவும் தப்பில்ல... நீ அவளை லவ் பண்ணதை என்கிட்ட மறைக்கல.. லவ் பண்ணும் போது உங்களுக்கு நடுவுல எவ்வளவோ விஷயங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் பத்தி பேசுறது நாகரிகம் இல்ல... ஆனாலும், ஏஞ்சல் அப்படி சொன்னப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.”

மார்க்ஸ் திவ்யாவையே பார்த்தான்.

“எனக்கு கோபம் வந்துச்சு... அந்த ஒரு செகண்ட் நீ எனக்கு வேணாம்னு கூட தோணுச்சு!”

மார்க்ஸ் மௌனமாக இருந்தான்.

“எனக்கு...” என அவள் ஏதோ சொல்லப்போக....

அவசரமாக கதவைத் திறந்து கொண்டு பாண்டியன் பதற்றமாக வந்து நின்றான்.

“தல” என மேற்கொண்டு பேச முடியாமல் அவன் உடல் பதற்றத்தில் ஆடியது.

“என்னடா ஆச்சு?”

“மேகலா சூசைட் பண்ணிக்கிச்சு தல” என்று அழுகையுடன் சொன்னான் பாண்டியன்.

மார்க்ஸும் திவ்யாவும் அதிர்ந்து போனார்கள்!

- Stay Tuned...