காபி ஷாப் ஒன்றில் மார்க்ஸ், பாண்டியன், நெல்லையப்பன் மூவரும் அமர்ந்திருந்தார்கள்.
“தல அந்த சின்ன பசங்க கிட்ட பேசுறதுக்கு நீங்க வரணுமா? நான் பார்த்துகிறேன் தல” என்றான் பாண்டியன்.
“பசங்க சின்னவங்கதான்... ஆனா, அவங்க பண்ற ஷோ பெரிசாயிடுச்சே” என்றான் மார்க்ஸ்.
தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளில் இதுவும் ஒன்று. திரைப்படம் என்பது ஒரு குறுகிய கால பந்தம். தொலைக்காட்சி தொடர் அப்படியில்லை. வருடங்களைத் தாண்டி தொடர்கள் நீள்வதுண்டு. பத்து வருடங்கள் எல்லாம் கூட சில தொடர்கள் ஒளிபரப்பாகியிருக்கின்றன. அதில் நடிக்கும் நடிகர்கள் இடையில் திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக் கொண்டு நம் கண்ணுக்கு முன்னால் அவர்களுக்கு வயதாவதை பார்க்க நேர்வதுண்டு. சீரியல் நாயகிகள் நிஜ வாழ்க்கையில் குழந்தை உண்டாகும் போது சீரியலிலும் அவர்கள் கர்ப்பமாவதுபோல கதைகளை மாற்றி எழுதிய வரலாறு நிறைய உண்டு.
தொடர்களைப் பொறுத்தவரை நடிகர்களின் நீண்டநாள் அர்பணிப்பு மிகவும் முக்கியம். உருகி உருகி ஓர் எழுத்தாளர் கதை எழுதி, பாடுபட்டு, இயக்குநர் அதற்கு உருவம் கொடுத்து, தண்ணீராய் பணத்தை தயாரிப்பாளர் செலவு செய்து இவை அனைத்துமே பேரும் புகழுமாக போய் சேர்வது நடிகர், நடிகைகளுக்குத்தான். திரைக்குப் பின்னால் இருக்கும் அத்தனை பேரின் உழைப்புகளும் திரைக்கு முன்னாலிருக்கும் நடிகர், நடிகைகள் மேல்தான் முதலீடு செய்யப்படுகின்றன.
தொடர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பார்வையாளர்களின் வீட்டில் ஒருவராக மாறிவிடுகிறார்கள். அதன் பிறகு திரைக்குப் பின்னால் இருக்கும் யாரை வேண்டுமானாலும் நீங்கள் மாற்ற முடியும். திரைக்கு முன்னால் இருக்கும் நடிகர்களை மாற்றுவது எளிதான காரியம் கிடையாது.
அப்படி இவருக்குப் பதில் இவர் என சில நடிகர் நடிகைகள் மாற்றப்படும் போது அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் அந்தத் தொடர்கள் தோல்வியடைந்த நிகழ்வுகளும் நிறையவுண்டு.
பேரும் புகழும் கூட்டு முயற்சி என்பதை உணர்கிற நடிகர்கள் எப்போதும் போலிருக்கிறார்கள். தான் என்ன செய்தாலும் தன்னை இவர்கள் மாற்ற முடியாது என நினைக்கிற சில நடிகர்கள் சீரியலின் வெற்றிக்குப் பிறகு வேறொருவராக மாறிவிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் செய்கிற அத்தனை அலப்பறைகளையும் சகித்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தயாரிப்பாளரும் இயக்குநரும் தள்ளப்படுகிறார்கள்.
“அவனுங்க எங்க தங்கியிருக்காங்க?” எனக் கேட்டான் மார்க்ஸ்.
“அந்த படம் பண்ற ப்ரொடியூசரோட கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வச்சிருக்காங்களாம்.” என்றார் நெல்லையப்பன்.
மார்க்ஸுக்கு சிரிப்பு வந்தது.
“எத்தனை நாள் இப்படி பசங்களை அடைச்சு வைக்க முடியும்?”
“சும்மா ஒரு நாலு நாள் தங்க வச்சு நீங்க எல்லாம் ரஜினி ஆக போறீங்க, கமலாகப் போறீங்கன்னு அந்த பயலுகளை ஏத்தி விடுவானுங்கப்பா... அதுக்குள்ள நம்ம சீரியலுக்கு ஒரு முடிவு வந்திரும்... அப்புறமா அவனுங்க மெதுவா சினிமாவுக்கு பிளான் பண்ணுவாங்க!” என்றார் நெல்லையப்பன்.
மார்க்ஸ் யோசனையாகத் தலையாட்டினான்.
“பத்து வருஷம் பாடுபட்டு ஒரு சீரியல் ஹிட்டாயிருக்கு... அது பொறுக்கல இவனுங்களுக்கு... நேத்து கேக் வெட்டினோம் இன்னைக்கு சீரியல் இருக்குமா இல்லையான்னு ஆயிடுச்சு” என்றார் நெல்லையப்பன்.
மார்க்ஸ் புன்னகைத்தான்.
“நம்ம சீரியல்ல ட்விஸ்ட் வைக்கிறோமோ இல்லையோ இவனுங்க வைக்கிறானுங்க” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காபி ஷாப்பின் வெளியே பைக் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இருவர் இறங்குவது கண்ணாடி வழியே தெரிந்தது.
“யப்பா... அவன்தான் ரஞ்சித் பெரிய விஷம், பின்னாடி இருக்கிறவன் பிரமோத், அது சின்ன விஷம்” என்றார் நெல்லையப்பன்.
“மாமா சின்ன பசங்களைப் போயி விஷம் அது இதுன்னு” என்றான் மார்க்ஸ்.
“பாம்பு பார்க்க அழகா தான்பா இருக்கு... ஆனா, பட்டுன்னு போடும். இவனுங்கதான் பேசி அவ்வளவு பேர் மனசையும் கலைச்சது!”
ரஞ்சித்தும் பிரமோத்தும் உள்ளே வந்தார்கள்.
“ஹாய் சார்” எனப் பொதுவாக சொன்னான் ரஞ்சித்.
“உட்காரு ரஞ்சித்” என்றான் பாண்டியன்.
அவர்கள் இருவரும் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தனர். கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த தோரணை எதையும் கேட்டுக் கொள்ள வரவில்லை, சொல்லி விட்டுப்போகத்தான் வந்திருக்கிறோம் என்பதாகவே இருந்தது.
“என்னப்பா சாப்பிடுறீங்க?” என்றார் நெல்லையப்பன்.
“ஒண்ணும் வேணாம் சார். இப்பதான் ஜூஸ் குடிச்சிட்டு வந்தோம்” என்றான் ரஞ்சித்.
“பரவாயில்ல குடிப்பா”
“வேணாம்னு சொல்றேன்ல சார்” என்ற பிரமோத்தின் தொனியே தவறாக இருந்தது.
“சொல்லு ரஞ்சித்” என்றான் பாண்டியன்.
“நாங்க சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லியாச்சு. நீங்கதான் சார் சொல்லணும்”
“சீரியல் ஆரம்பிச்ச எட்டாவது வாரத்துல நடிக்க மாட்டேன்னு சொல்றது நியாயமே இல்லையே ரஞ்சித்.”
“ஆரம்பிக்கும்போது 80 வாரம் நடிக்கணும்னு எல்லாம் நீங்க சொல்லலையே சார்” என்றான் ரஞ்சித்.
“யப்பா... ஒரு மெகா சீரியல் 500 எபிசோட் போகும், 1000 எபிசோட் போகும்னு உனக்குத் தெரியதா?”
“இது மெகா சீரியலா சார்?” எனக் கிண்டலாகக் கேட்டான் பிரமோத்.
நெல்லையப்பன் முகம் மாறியது. மார்க்ஸ் அமைதியாக அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரிப்பா, நீங்க படம் பண்ணுங்க வேணாம்னு சொல்லல... அதுவரைக்கும் இதை பண்ணுங்க... பூஜை போட்டு ஆரம்பிக்கிறப்ப பார்த்துக்கலாம்.”
“இல்ல சார் சீரியல்ல ரொம்ப முகத்த காட்டுனா சினிமாவில பார்க்கும்போது ரொம்ப யூஸ்டா இருக்கும் இல்ல சார்” என அவன் பேச்சைத் தொடர...
“டேய் இன்னொரு வார்த்தை பேசுன பாட்டில எடுத்து நெஞ்சில உட்டு ஆட்டிருவேன்” எனக் கோபத்தின் உச்சியில் சொன்னார் நெல்லையப்பன்.
அதை எதிர்பார்க்காத ரஞ்சித்தும் பிரமோத்தும் ஒரு கணம் ஆடிப்போனார்கள்.
“மாமா” என பாண்டியன் அவரை சமாதானப்படுத்த முயல...
“ஏண்டா இவன் எல்லாம் ஒரு ஆளு... இவன் பேசுறான்னு கேட்டுகிட்டிருக்க... வாங்குற டப்பா சம்பளத்துக்கு எத்தனை பேர் கால்லடா விழுறது. வர்ற கோபத்துக்கு அப்படியே காபி எடுத்து மூஞ்சில ஊத்தி விட்டிருவேன்.”
அவர்கள் முகம் இருண்டது.
“ஏண்டா சான்ஸ் குடுங்க சார்னு காலைப் பிடிச்சுகிட்டு அழுததெல்லாம் மறந்து போச்சா... இன்னைக்கு என்னமோ பெரிய இவன் மாதிரி பேசுற... எங்க வேணா போடா... போறதுக்கு முன்னால இந்த கமிட்மென்ட் முடிச்சு குடுத்துட்டு போ...”
“மாமா நீ கிளம்பு... நான் பசங்க கிட்ட பேசிக்கிறேன்” என அவரை அங்கிருந்து வெளியே அனுப்ப முயன்றான் பாண்டியன்.
“பாண்டியா... இவனுங்க வேலைக்காவ மாட்டானுங்க... நீ என்னதான் சொன்னாலும் இவனுங்க அதே பாட்டுதான் பாடப் போறானுங்க... பெரிய புத்தம் புது மூஞ்சி இது... சீரியல்ல நடிச்சா பழசாயிடுமாம்.”
ரஞ்சித்தும் பிரமோத்தும் பதற்றத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தனர்.
“ஆரம்பிக்கவே இல்லை... அதுக்குள்ள பேச்ச பாரு”
ரஞ்சித்தும் பிரமோத்தும் எழுந்தார்கள்.
“சார்... நீங்க எங்க மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்கீங்கன்னு எங்களுக்கு புரிஞ்சிருச்சு சார். நாலு நாள் நடிச்சு ஒழுங்கா சீரியல முடிச்சு குடுக்கலாம்னுதான் வந்தோம். இப்ப சொல்றேன் சார்.. இனிமே நாங்க வர மாட்டோம். உங்களால முடிஞ்சதைப் பாருங்க!”
“டேய் ஒழுங்கா ஓடிப் போயிரு... இல்லன்னா வண்டிய கொளுத்தி விட்டிருவேன்” என்றான் நெல்லையப்பன்.
அவர்கள் தங்கள் பயத்தைக் கோபத்தில் மறைத்தபடி அங்கிருந்து விருட்டென நகர்ந்து சென்றனர்.
“என்ன மாமா இப்படி பண்ணிட்ட?” எனக் கோபமாக கேட்டான் பாண்டியன்.
“என்னடா பண்ண சொல்ற... அவனுங்க கால்ல கழுவ சொல்றியா?”

“பேசிப் பார்த்திருக்கலாம்ல, ஒட்டு மொத்தமா கெடுத்துவிட்டியே” என்றான் பாண்டியன்.
“மார்க்ஸு…. நம்ம கனவு ப்ராஜெக்ட்பா அது. நாலு நாள்ல நடிச்சு முடிச்சு கொடுக்கறானாம்... எப்படியிருக்கும் எனக்கு?” எனச் சொல்லும் போதே நெல்லையப்பன் கண்கள் கலங்கின.
“ப்ரொடியூசர் 25 லட்சம் மைனஸ்ல இருக்கான்ப்பா.. இப்பதான் சீரியல் ஹிட்டாயிருக்கு... இனிமேதான் அவனுங்க மெல்ல மெல்ல அதை சரி பண்ணி சம்பாதிக்கணும். இவனுங்க இப்படி பண்ணா எப்படிப்பா?”
“மாமா... நீ ஃபீல் பண்ணாத... இது ஒட்டு மொத்த பசங்களோட கருத்து கிடையாது. இவனுங்களோட கருத்து. எல்லாரையும் ஒண்ணா பார்த்து பேசுனா சரியாயிடும். அது எப்படின்னு தான் யோசிக்கணும்” என்றான் மார்க்ஸ்.
“மண்டேக்கு டேப் இல்ல தல... நாளைக்கு ஷூட் பண்ணியே ஆகணும்” என்றான் பாண்டியன்.
சற்று நேரம் யோசித்த மார்க்ஸ், “மேனன் சார் கிட்ட பேசலாம்” என்றான்.
………………………………………….
அஞ்சலி சமைத்துக் கொண்டிருந்தாள். மேனன் அவளுடன் கிச்சனில் நின்று கொண்டிருந்தார்.
“அப்பா”
“சொல்லுடா”
“தாட்சாவை நாளைக்கு வீட்டுக்கு டின்னருக்கு கூப்பிடலாமா?”
“ஏதோ முடிவோடதான் நீ வந்திருக்க போல இருக்கே” என சிரித்தார் மேனன்.
“அப்பா... தாட்சா ஒரு பர்ஃபெக்ட் சாய்ஸ்”
“அந்த அளவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்லம்மா!”
“மிஸ்டர் மேனன்...” என அஞ்சலி ஆரம்பிக்க சிரித்தார் மேனன்.
“என்னப்பா சிரிக்கிறீங்க?”
“இல்ல... செல்லமா ஏதாவது சொல்றதா இருந்தா தாட்சாவும் இப்படித்தான் மிஸ்டர் மேனன்னு ஆரம்பிப்பாங்க!”
“செல்லமாவா? பார்றா” எனச் சிரித்தாள் அஞ்சலி. மேனன் தனது தவற்றை உணர்ந்து உதட்டைக் கடித்தார்.
“அப்பா... உலகத்துல இருக்கிற எல்லா பிரச்னைக்கும் உங்க கிட்ட ஒரு சரியான பதில் இருக்கு. இதுக்கு மட்டும் யோசிச்சா எப்படி?’’
“அப்படி இல்லம்மா... சில விஷயங்கள் தானா நடக்கணும்... பார்க்கலாம்!”
“அப்பா உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா”
“சொல்லும்மா”
“4 வருஷமா நான் அம்மா கூடதான் இருக்கேன். ரொம்ப ரேராதான் உங்களை பார்க்க வரேன்... ஆனாலும் நீங்க எப்பல்லாம் வீடு மாத்துறீங்களோ, அப்பல்லாம் அந்த வீட்ல எனக்காகவும் ஒரு ரூம் ரெடி பண்ணி வைக்கிறீங்களே... அது தேவையாப்பா?”
மேனன் அவளை புன்னகையுடன் பார்த்தார்.
“எனக்கு பிடிச்ச போட்டோஸ்ல ஆரம்பிச்சு.. எனக்காக டிரஸ்ஸஸ், நான் யூஸ் பண்ற பெர்ஃப்யூம், லிப்ஸ்டிக்ல இருந்து எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க”
“அதனாலதான நீ போட்ட டிரஸ்ஸோட அப்பாவைப் பார்க்க கிளம்பி வர முடியுது!”
“அது உண்மை தான்... ஆனா, அந்த ரூமை நீங்க உங்களுக்கான ஆபிஸ் ரூமா மாத்திக்கலாம் இல்ல...”
“ஆபிஸ் ரூம் வேணும்னா ட்ரிப்பிள் பெட்ரூம் வீடு மாறிட்டா போச்சு!”
அஞ்சலி அவரை உற்றுப் பார்த்தாள்.
“ஆமாடா... நீ என் கூட இல்லைன்னு எப்பவுமே நான் யோசிச்சது இல்லை… அந்த ரூம்ல நீ இருக்க... கதவை பூட்டிட்டு பிஸியா இருக்கேன்னு நினைச்சுப்பேன்... உன்ன மிஸ் பண்ற ஃபீல் இருக்காது!”
கண்கள் கலங்க அஞ்சலி, மேனனின் கைகளைப் பிடித்தவள் “மத்ததை எல்லாம் ரொம்ப ப்ராக்டிக்கலா யோசிக்கிறீங்க... என் விஷயத்துல மட்டும் ஏன்பா இப்படி!”
“நான் உன் அப்பாடா” எனச் சிரித்தார் மேனன்.
“லவ்யூப்பா” என மேனனை அவள் அணைத்துக் கொண்டாள்.
மேனனின் போனடித்தது. போனை எடுத்தவர் “சொல்லு மார்க்ஸ்” என்றார்.
……………………...
மேனனின் அறையில் தாட்சா, மார்க்ஸ், நெல்லையப்பன், பாண்டியன் அனைவரும் கூடியிருந்தார்கள்.
“பசங்க எல்லாம் சூப்பர் ஹிட்... அவங்கள மாத்தினா சீரியல் நிக்காது” என்றாள் தாட்சா.
“வரமாட்டுறானுங்க மேடம்” என்றான் பாண்டியன்.
“ஆடியன்ஸ் முதல் தடவையா நம்மளோட ஒரு சீரியலைப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க.மெதுவா இந்த சீரியலுக்கு முன்னாடி பின்னாடி இருக்குற சீரியல்ஸ் எல்லாம் கூட பிக்அப் ஆக ஆரம்பிச்சிருக்கு... இதுல தப்பு நடந்தா நம்ம திரும்பவும் பழைய இடத்துக்குப் போயிடுவோம்” என்றாள் தாட்சா.
அனைவரும் மேனனின் பதிலுக்காகக் காத்திருந்தார்கள்.
“மார்க்ஸ் அந்த பசங்கள....”
“அவங்க யாரும் வீட்ல இல்ல சார்” என்றார் நெல்லையப்பன்.
“அந்தப் பசங்க தேவையில்ல... அவங்களோட பேரன்ட்ஸ் எல்லாம் பாக்கணும்… கூப்பிடுங்க” என்றார் மேனன்.
அனைவரது முகமும் ஆச்சர்யத்தில் மாறியது.
“இந்தக் காலத்து பசங்ககிட்ட நன்றிய பத்தி பேசுனா புரியாது. ஆனா அவங்களோட அப்பா அம்மாக்களுக்கு புரியும். அவங்களை வர சொல்லுங்க!”
“யெஸ் சார்” என சொன்ன மார்க்ஸின் குரலில் இப்போது நம்பிக்கைத் தெரிந்தது.

கான்ஃபரன்ஸ் அறையில் ஸ்கூல் ஸ்டோரியில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் பெற்றோர்கள் கூடியிருந்தார்கள். மேனனும் மற்றவர்களும் அறைக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்றனர். அவர்கள் அனைவரது முகங்களிலும் குற்றவுணர்வு தெரிந்தது.
“ப்ளீஸ் உட்காருங்க” என சொல்லியபடி மேனன் அமர்ந்தார். தாட்சா, மேனன் அருகில் அமர மார்க்ஸ் பாண்டியன் நெல்லையப்பன் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார்கள்.
“என்ன பிரச்னை நடந்துட்டு இருக்குன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்” என நேராக மேனன் பிரச்னை பற்றிய பேச்சுக்கு வந்தார்.
அனைவரும் அவரை உன்னிப்பாகக் கவனிக்க, மேனன் தொடர்ந்தார்.
“இதுல எத்தனை பேர் உங்க பசங்க பெரிய ஹீரோவாகணும்னு நினைச்சு இந்த சீரியல்ல நடிக்கிறதுக்கு அனுப்புனீங்க”
அறை நிசப்தனமானது.
“ஹீரோ ஆகனுன்னு எல்லாம் அனுப்பல சார். அவனுக்கு ஒரு டேலன்ட் இருக்கு… ஆசைப்படுறான். சரி பண்ணட்டும்னு அனுப்பி வெச்சேன்.”
“கரெக்ட் அப்படித்தான் நாங்களும் அவங்கள பத்தி யோசிக்கிறோம். மோஸ்ட்லி எல்லாரும் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் பண்றாங்க... அவங்களோட படிப்பு பாதிக்கப்படாம சனி, ஞாயிறுல லீவ் நாள்ல ஷூட் பண்றோம். காலேஜ்ல வாரத்துக்கு ரெண்டு நாள் பெர்மிஷன் வாங்கி ஷூட்டிங் பிளான் பண்றோம். எக்ஸாம் டயத்துல ஷூட் இல்லாம பார்த்துகிறோம். இது எல்லாம் அவங்க மேல இருக்கிற அக்கறையில் பண்றது.”
அனைவரும் மெளனமாக இருந்தனர்.
“ஐம்பதாயிரம் அப்ளிகேஷன்ல உங்க பசங்க பத்து பேருக்குதான் வாய்ப்பு கொடுக்க முடிஞ்சுது.. அதுக்கப்புறம் 10 நாள் வொர்க்ஷாப் பண்ணி அவங்களை ஒரு ஸ்டைலிஸ்ட் வச்சு க்ரூம் பண்ணித்தான் கேமரா முன்னாடி கொண்டு போய் நிறுத்தினோம். இதுக்கு பின்னால டீமோட கடுமையான உழைப்பு இருக்கு.”
அவரது பேச்சிலிருந்த உண்மை அனைவருக்கும் புரிந்தது.
“இவங்க எல்லாமே புதுசுன்றதால 15 நாள்ல எடுக்க வேண்டிய ஷூட்டிங் 30 நாள் எடுக்க வேண்டியதாயிருந்திச்சு. டபுள் செலவு... இது எல்லாம் ஒரு பக்கம். இதைத்தாண்டி உங்க பசங்க ரொம்ப சின்சியரா டெடிகேட்டடா ராத்திரி பகல் பார்க்காம இந்த சீரியலுக்காக கஷ்டப்பட்டாங்க. அத நாங்க மறுக்கல!”
மார்க்ஸ் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தபடி இருந்தான்.
“அவங்களோட பிரைட் ஃபியூச்சர கெடுக்கணும்றது எங்க எண்ணம் கிடையாது. ஆனா, இது சரியான சமயம் இல்ல. ரெண்டு வருஷம் நடிக்கட்டும், காலேஜ் முடிக்கட்டும் அதுக்குள்ள அவங்களுக்கும் ஒரு கிளாரிட்டி கிடைக்கும். அப்புறமா ஆக்டிங்தான் கரியர்னு தோணுச்சுன்னா அவங்க முடிவு எடுக்கட்டும்.”
மேனனின் பேச்சு அனைவரையும் தொட்டது.
“வாய்ப்பு கிடைச்சதும் வளர்த்து விட்டவங்களை தூக்கி எறியறது தப்பில்லையா? என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க” என முடித்தார் மேனன்.
அறையில் சின்ன மௌனம் நிலவியது. சிலர் அவர்களுக்குள் பேசிக் கொள்ள மார்க்ஸும் மற்றவர்களும் காத்திருக்க... அறைக்கதவைத் தட்டிவிட்டு வினோ உள்ளே நுழைந்தான்.
“முருகனோட அம்மா வந்திருக்காங்க”
“வர சொல்லு” என்று சொன்ன பாண்டியன், மேனனை பார்த்து “இதுல நடிக்கிற பையனோட அம்மாதான் சார்” என்றான்.
கதவைத் திறந்து கொண்டு முருகனின் அம்மாவும் பின்னால் தயக்கமும் கூச்சமுமாக தலை குனிந்தபடி முருகனும் உள்ளே நுழைந்தார்கள். அனைவரின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது. முருகனை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
“சொல்லு” என முருகனைப் பார்த்து சொன்னார் அவனது அம்மா.
“அது வந்து... நான்” என முருகன் தயங்க... யாரும் எதிர்பாரா வண்ணம் பளார் பளார் என முருகனின் கன்னத்தில் அவனது அம்மா அறைந்தார். அவன் அலறியதில் கான்ஃபரன்ஸ் ரூமே உறைந்து போனது.
“சொல்லுடா...” என உரத்த குரலில் அதட்டினார் முருகனின் அம்மா.
“மன்னிச்சிருங்க சார்... தெரியாம பண்ணிட்டேன் சார்.. நாளைலேர்ந்து ஷூட்டிங் வந்தர்றேன் சார்” என அழுகையுடன் சொன்னான் முருகன்.
“அய்யா... தப்பா எடுத்துக்காதீங்க... அறியாத புள்ள தெரியாம பண்ணிட்டான்… அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த பய நடிக்க மாட்டேன்னு சொல்லி எங்கயோ போய் ஒளிஞ்சிகிட்டு இருக்கிறது எனக்கு தெரியாது. விஷயம் தெரிஞ்சது, நேரா போய் அவனை பிடிச்சு இங்க கூட்டிட்டு வந்திட்டேன்!”
முருகனின் அம்மா தொடர்ந்தார்.
“மனுஷனுக்கு நன்றி வேணும் சார். நான் அவிச்சு குடுக்கிற இட்லிய வீடு வீடா போய் வித்துக்கிட்டு இருந்தான். உங்க டிவிதான் அவனுக்கு வாய்ப்பு கொடுத்திச்சு... நடிக்கிறப்ப போட நல்ல துணிமணி கிடையாது சார். இந்த மார்க்ஸ் தம்பி தான் இவன் இப்படி நிக்கிறத பார்த்துட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு துணி மணி வாங்கி கொடுத்துச்சு. போன மாச சம்பளம் இருபதாயிரம் கொண்டு வந்து குடுத்தான். அவ்வளவு பணத்தை மொத்தமா நான் பார்த்தது அப்பதான். ‘பன்னு பாபு... பன்னு பாபு’ன்னு இந்த பயலை பார்க்கிறவங்க எல்லாம் கொண்டாடுறாங்க. இதெல்லாம் யாரால... உங்க டிவியால... நன்றி மறந்த பய சினிமால நடிக்க வைக்கிறேன்னு எவனோ சொன்னான்னு உங்களுக்கு டிமிக்கி குடுத்திட்டு எங்கயோ போய் உட்கார்ந்துட்டு இருக்கான்.”
நேர்மையும் சத்தியமும் இன்னும் மிச்சமிருப்பது எளியவர்களிடத்தில்தான் என மார்க்ஸுக்குத் தோன்றியது. வசதி படைத்தவர்கள் அதை ஒரு பெரிய சாதனையாக நினைத்து கடைபிடிக்கும் போது சாதாரணமானவர்கள் அதை பல் துலக்குவது போல் அவர்கள் அறியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“சார்... இவங்க அப்பாவுக்கு ஒரு நடிகனாகணும்னு ஆசை சார். அது நடக்காமலயே அவரு செத்துட்டாரு. அந்த கனவு இவன் மூலமா நடக்கட்டும்னுதான் நான் இவனை நடிக்க அனுப்ப சம்மதிச்சேன். உங்க முதுகுல குத்திட்டு இவன் இந்தப் படத்தில நடிச்சான்னா வாழ்க்கை பூரா உருப்பட மாட்டான் சார். நடிகனாவுறது அப்புறம்... நல்லவனா இருக்கிறது தான் ரொம்ப முக்கியம். இவன் எங்கேயும் போக மாட்டான். நீங்க வேணாம்னு சொல்ற வரைக்கும் நம்ம சீரியல்ல நடிப்பான் சார்!” என முருகனின் அம்மா பேசி முடிக்க, மார்க்ஸ் அம்மாவை கண்கள் கலங்க அணைத்துக் கொண்டான்.
“இவன் பண்ண தப்புக்கு நீ ஏம்பா கண்ணு கலங்குற... எல்லாம் சரியா வரும். நான் போறேன். இவன் இருப்பான். புத்தி சொல்லி அனுப்பு... வரேங்க” என பொதுவாகக் கையெடுத்து கும்பிட்டு விட்டு முருகனின் அம்மா நகர்ந்தார்.
“சார்… நாங்களும் எங்க பசங்களோட பிஹேவியருக்கு மன்னிப்பு கேட்கிறோம். நாளைக்கு அவங்க ஷூட்டிங்ல இருப்பாங்க சார். அதுக்கு நாங்க கேரன்ட்டி” என அனைவரது சார்பாக பேசினார் ஒருவர்.
மேனன் தலையாட்ட அவர்கள் கலைந்தார்கள்.
“சார் கலக்கிட்டீங்க சார்” என்றார் நெல்லையப்பன்.
“கலக்கினது நான் இல்ல... முருகனோட அம்மாதான். அவ்வளவு பேரோட மனசையும் அந்தம்மாவோட பேச்சில் இருந்த நிஜம் உலுக்கிருச்சு. முருகனுக்கு விழுந்த அடி இங்க இருந்த எல்லோருக்கும் வலிச்சுது. முருகன் அம்மா மாதிரி ஆளுங்க பட்டுன்னு மனசைக் கேட்டு முடிவெடுத்துருவாங்க. அறிவு ஆப்ஷன் கொடுக்கும். மனசு ஆப்ஷன் கொடுக்காது. அதுக்கு எது சரியோ, அது மட்டும்தான்”
அனைவரது மனதிலும் முருகனின் அம்மா மட்டுமே நிறைந்திருந்தார்.
……………
திவ்யா தனது அறையில் அமர்ந்திருந்தாள். கதவைத் தட்டிவிட்டு மார்க்ஸ் உள்ளே நுழைந்தான்.
திவ்யா அவனை முறைத்துப் பார்த்தாள்.
“எனக்கு தெரியும் நம்ம சண்டையில இருக்கோம். அது அப்படியே இருக்கட்டும். நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ எது நடந்தாலும் நான் முதல்ல பார்க்கணும்னு நினைக்கிறது உன்னைத்தான். அதனால் தான் வந்தேன். நீ என் கிட்ட பேச வேண்டாம்... நான் ஒரு 5 நிமிஷம் இப்படி ஓரமா இருந்திட்டு போயிடுறேன்” என மார்க்ஸ் கையை கட்டிக் கொண்டு அமர்ந்தான்.
திவ்யா அவனைப் பார்த்தாள்.
மார்க்ஸ் வாயை மூடிட்டு இருக்கேன் என்பது போல சைகை காட்டினான்.
“இப்ப நடந்தது நல்ல விஷயமா கெட்ட விஷயமா?” என கேட்டாள் திவ்யா.
“நல்ல விஷயம்தான்!” என்றான் மார்க்ஸ்.
சிறிது நேரம் யோசித்த திவ்யா “உன்னப் பத்தி எல்லாமே எனக்கு தெரியும். ஆனா என்னப் பத்தி உனக்கு என்ன தெரியும்?” என்றாள்.
திடீரென அவள் ஏன் அப்படி கேட்டாள் எனப் புரியாமல் பார்த்தான் மார்க்ஸ்.
“இங்க நான் வர்றதுக்கு முன்னாடி என் வாழ்க்கையில என்ன நடந்திச்சுன்னு எப்பவாவது கேட்டிருக்கியா?”
அவளது கேள்வியின் நியாயம் அவனுக்கு உறைத்தது.
“லவ்வு லவ்வுன்ற நான் யாருன்னே தெரியாம எப்படி லவ் பண்ணுவ?”
“சொல்லு நான் தெரிஞ்சுக்கிறேன்” என்றான் மார்க்ஸ்.
திவ்யா சேரில் சாய்ந்து அமர்ந்தாள்.
தனது மற்றொரு பக்கத்தை புரட்டிக் காட்ட திவ்யா தயாராகிறாள் என்பது மார்க்ஸுக்குப் புரிந்தது. மெல்லிய படபடப்புடன் திவ்யாவின் முன் கதைக்காக காத்திருந்தான் மார்க்ஸ். அது தான் தனக்கும் அவளுக்குமான பின் கதையை தீர்மானிக்கப்போகிறது என்பது அவனுக்குப் புரிந்தது!