Published:Updated:

இடியட் பாக்ஸ் - 67: யார் கிளாஸ், யார் மாஸ்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 67: யார் கிளாஸ், யார் மாஸ்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொழுது மெதுவாக புலர துவங்கியிருந்தது. மார்க்ஸ், பாண்டியன் நெல்லையப்பன் மூவரும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த டீக்கடையில் டீ குடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

“இன்னும் எதுவும் சொல்ல மாட்டுறானுங்களே” என்றார் நெல்லையப்பன்.

“ஆபரேஷன் முடிஞ்சுது... 10 மணிக்குள்ள கண்ணு முழிச்சிட்டா பிரச்னை இல்லைன்னுதான் சொல்றாங்க” என்றான் பாண்டியன்.

“தேவைப்பட்டா இன்னொரு ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றாங்க” என்றான் மார்க்ஸ்.

“வேற ஏதாவது நல்ல ஆஸ்பிட்டலுக்கு வேணா மாத்திரலாமா மார்க்ஸ்!”

“இல்லன்ணே.. இந்த மாதிரி ஆபரேஷனுக்கு எல்லாம் இது நல்ல ஆஸ்பத்திரின்னுதான் சொல்றாங்க” என்றான் மார்க்ஸ்.

“ஆமா மாமா.. ஆபரேஷன் பண்ணது மூர்த்தின்னு பெரிய டாக்டர்தான். யுஎஸ்-லயிருந்து ஏதோ கான்ஃபரன்ஸுக்கு வந்தவரு இங்க தங்கி இருந்திருக்காரு. டக்குன்னு அவரை வர வச்சிட்டானுங்க. அவரு பெரிய பிஸ்துன்றானுங்க” என்றான் பாண்டியன்.

“கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம்” என்றார் நெல்லையப்பன்.

வந்தியத்தேவன் நல்லபடியாக பிழைத்து எழ வேண்டுமே என்கிற எண்ணம் மட்டுமே மார்க்ஸின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

வந்தியதேவன் ஆரஞ்சு டிவியின் அடையாளமாக உலகுக்கு தெரிந்த முதல் முகம். ஆரஞ்சு டிவியுடன் அவரும் வளர்ந்தார். கடந்த மாதம் ஏற்பட்ட பிரச்னையில் ஆரஞ்சு டிவியில் இருந்து விலகி அவர் மற்றொரு சேனலுக்கு போன போது இருந்த கோபமெல்லாம் அவருக்கு விபத்து என்றதும் சுத்தமாக மறைந்து போய் அனைவரையும் பதற வைத்தது. அர்த்த ராத்திரியில் அனைவரையும் ஓடி வர வைத்தது.

“ராத்திரி அவர் வீட்டை தட்டி அவர் வொய்ஃப்கிட்ட விஷயத்தை சொல்றதுக்குள்ள உசுரே போயிருச்சு மாமா” என்றான் பாண்டியன்.

“கஷ்டம்தான்” என்றார் நெல்லையப்பன்.

“பசங்களை எல்லாம் எழுப்பி பக்கத்து வீட்டுல விட்டுட்டு கிளம்பி வந்தாங்க!”

“அந்த பொண்ணு அழுத அழுகை இன்னும் காதுக்குள்ளேயே நிக்குதுப்பா” என்றார் நெல்லையப்பன்.

“அவங்க எங்க?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“ஐசியூ வெளியேதான் உட்கார்ந்திருக்காங்க!”

“அவங்களுக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது...”

“கேட்டேன் வேணாம்னுட்டாங்க...”

“தைரியமா இருக்காங்களா?”

‘’கையில மாலை மாதிரி வெச்சுக்கிட்டு ஏதோ மந்திரம் சொல்லிட்டே இருக்காங்க” என்றான் பாண்டியன்.

“அந்த கழுதைக்கு ஒண்ணும் ஆகாது... எந்திருச்சு வந்திருவான்” என்றார் நெல்லையப்பன். அவர்கள் அனைவரும் கவலையை நம்பிக்கையால் கரைக்க முயன்றுக் கொண்டிருந்தார்கள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

சில நொடிகள் மெளனமாகக் கடந்தன.

மார்க்ஸ் திரும்பி நெல்லையப்பனை பார்த்தான். அவர் முகத்தில் மெலிதான புன்னகையொன்று ஒட்டிக் கொண்டிருந்தது.

“மாமா..."

நெல்லையப்பன் திரும்பி மார்க்ஸை பார்த்தார்.

“என்ன யோசிக்கிற?”

“வெள்ளம் வந்தப்ப நாலு நால் சேனல்ல தங்கியிருந்தமே ஞாபகம் இருக்கா?”

மார்க்ஸ் முகத்திலும் புன்னகை.

“இந்தாளும் நம்ம கூட தங்கியிருந்தானே. கீழ ஜட்டியும் மேல கோட்டும் போட்டு தண்ணியில நிறுத்தி ஷோ பண்ணோமே!”

“பெரிய தெர்மாகோல்ல அவரை உட்கார வச்சுகிட்டு தள்ளிட்டு போனோம்” என பழைய நினைவுகள் தந்த சந்தோஷத்தில் சிரித்தான் மார்க்ஸ்.

“அந்தாள மாதிரி எவனும் வேலை செய்ய முடியாதுப்பா... ஸ்டார்ட் கேமரான்னு சொல்லிட்டு மாடியில இருந்து குதின்னா குதிச்சிருவான். அப்படி ஒரு டெடிகேஷன்பா” என்றார் நெல்லையப்பன்.

“ஒரு நாளும் லேட்டா வந்து நான் பார்த்ததில்லை” என்றான் பாண்டியன்.

“ஏசி ரூம் குடு, பிக்அப் பண்ண தனி கார் குடுனு எதுவும் கேட்டதில்லை. ‘நல்ல ஷோ குடு’... இது ஒண்ணுதான் அந்தாளு கேட்கிறது!”

கஷ்டகாலத்தில் ஒருவரின் நல்ல இயல்புகளை நினைத்து பார்ப்பதென்பது நல்ல விஷயம்தான். ஆனாலும் அவர் கோபித்துக் கொண்டு விலகுகிறேன் எனச் சொல்லும்போது இதை யோசித்திருந்தால் பிரிவென்ற ஒன்றே நிகழ்ந்திருக்காது எனத் தோன்றியது மார்க்ஸுக்கு.

வினு மருத்துவமனை கட்டடத்திலிருந்து வெளியே வந்தான். மெல்லிய பரபரப்பு அவர்களைத் தொற்றிக் கொண்டது.

“என்னடா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“ஒண்ணும் இல்ல தல... இன்னும் பத்து லட்சம் கிட்ட கட்ட வேண்டியது வரும்றாங்க” என்றான் வினு.

“இன்ஷூரன்ஸ் எதுவும் இல்லையா... அவர்கிட்ட?”

“இல்ல தல முடிஞ்சிருச்சாம்”

“இப்ப என்னப்பா பண்றது?”

மார்க்ஸ் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வந்தியத்தேவனின் மனைவி சாந்தி வெளியே வந்தார்.

“மாமா அவங்க வர்றாங்க... அப்புறம் பேசிக்கலாம்” என்றான் மார்க்ஸ். அவர்கள் நம்பிக்கை தரும் புன்னகையொன்றை வலிய வரவழைத்துக் கொண்டவர்களாக சாந்தியை எதிர்கொள்ள தயாரானார்கள்.

“வாம்மா” என்றார் நெல்லையப்பன்.

“நீங்க வீடு வரைக்கும் போயிட்டு வரணும்னா போயிட்டு வாங்க. நாங்க இங்கதான் இருப்போம். பார்த்துகிறோம்” என்றான் மார்க்ஸ்.

“நீங்க எல்லாம் இல்லன்னா நான் என்ன பண்ணிருப்பன்னே தெரியல” என கண்கலங்கினார் சாந்தி.

“அழாதம்மா அதான் நாங்க வந்துட்டோம்ல... அப்புறம் என்ன?”

“ரெண்டு பேருக்கும் அப்பா அம்மா கிடையாது. கூட பொறந்தவங்க யாரும் கிடையாது... நல்லது கெட்டதுன்னா வந்து நிக்க உங்க ஆளுங்கள விட்டா எங்களுக்கு யாரும் இல்லை” என சொல்லும் போதே சாந்திக்கு அழுகை வந்தது.

நல்ல அலுவலகங்கள் இன்னொரு இல்லங்களாக இருக்கின்றன. சக பணியாளர்கள் உறவினர்களை காட்டிலும் நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். வேலை விட்டு போகும்போது ஏற்படும் பண நெருக்கடியை சமாளிப்பது ஒரு பிரச்னை என்றால் மன நெருக்கடியை சமாளிப்பது என்பது அதைவிட பெரும் பிரச்னை.

“நீ அப்படி உட்காரும்மா... முதல்ல ஒரு டீ குடி”

“இல்லன்ணே வேண்டாம்”

“உட்காருன்றேன் இல்ல... ஒரு டீ போடுப்பா” என்றார் நெல்லையப்பன்.

சாந்தி டீக்கடைக்கு எதிரே இருந்த மரத்தடியில் இருந்த சிமென்ட் பென்ச்சில் அமர்ந்தாள்.

அவள் கையில் டீயை கொடுத்த நெல்லையப்பன் அவளுக்கு எதிரே இருந்த பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு அமர்ந்தார். மார்க்ஸ் மற்றொரு நாற்காலியில் அமர்ந்தான்.

“ரொம்ப நன்றிணே... நீங்களாம் வந்ததுக்கு” என்றாள் சாந்தி.

“எதுக்கு நன்றி எல்லாம் ... நாங்க வராம வேற யார் வருவாங்க”

“இல்லணே அவரு ஆரஞ்சு டிவியை விட்டு வெளியே போறாருன்னு சொன்னப்ப வேணாம்னு நான் ரொம்ப சண்டை போட்டேன்ணே... அவருக்கும் போக பிடிக்கலதான். ஆனா வேற வழியில்ல” என கண்ணீருடன் சொன்னாள் சாந்தி.

“இப்ப எதுக்குமா அதெல்லாம் பேசிக்கிட்டு...”

“இல்லைணே... அவர் ஏன் வெளிய போனார்னு உங்களுக்குத் தெரியணும்ல” என்றாள் சாந்தி.

மார்க்ஸ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“இத்தனை வருஷமா ஆங்கர் பண்றாரு... ஆனா இன்னும் நாங்க குடியிருக்கிறது வாடகை வீடுதான்... வர்ற காசுல பாதி அவரு டிரஸூக்கே செலவாகிடும். டிவியில வர்றவரு நல்ல டிரஸ் போடணும் இல்ல. மேக்கப்... அவருக்கு ஜிம்ல பர்சனல் ட்ரெய்னர்... டயட் சாப்பாடு... இப்படி அவர மெயின்டெய்ன் பண்றதுக்கே ஒரு பெரிய செலவாகும்” என்றார் சாந்தி.

வெளியே பார்ப்பதற்கு வண்ண மயமாக தெரியும் நடிகர், நடிகைகளின் வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் துயரம் அவர்கள் மட்டுமே அறிந்தது.

“என் கிட்ட எதுவுமே சொன்னதே இல்லயம்மா” என்றார் நெல்லையப்பன்.

“அது மரியாதையா இருக்காதுன்னு சொல்றதே இல்லைணே... கார்ல இருந்து ஐ போன் வரைக்கும் எல்லாமே இஎம்ஐ-ல தான் இருக்கு. மாச மாசம் அதை கட்டணும். அவரு டிவியில பெரிய ஆளா இருக்காருன்றதால அவரோட ஊர்ல இருந்து உதவி கேட்டு நிறைய பேர் வருவாங்க... முடியாதுன்னு சொன்னா, ‘டிவியில பேசுறது எல்லாம் பெரிய இவன் மாதிரி பேசுறான் ஆனா உதவின்னு போய் நின்னா எதுவும் பண்ண மாட்டுறான்’னு காதுபடவே சொல்லுவாங்க. அதுக்கு பயந்து கிட்டே கடன் வாங்கியாவது உதவி பண்ணிடுவாரு!”

சாந்தி பேச பேச மார்க்ஸும் நெல்லையப்பனும் வாயடைத்துப் போனார்கள்.

“அவங்க ஊர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 3 லட்ச ரூபா குடுத்தாதான் ஆச்சுன்னு சொல்லி இவரை டார்ச்சர் பண்ணிட்டாங்க... 10 வட்டிக்கு வாங்கி குடுத்தாரு... போஸ்டர்ல பேர் போட்டாங்க... பரிவட்டம் எல்லாம் கட்டி மரியாதை குடுத்தாங்க. ஆனா, அந்த பணத்துக்கு இன்னைக்கு வரைக்கும் நாங்க வட்டி கட்டிக்கிட்டு இருக்கோம்” என்றார் சாந்தி.

மருத்துவமனை செலவை சாந்தி கட்ட வாய்ப்பில்லை என்பது மார்க்ஸுக்குத் தெளிவாக புரிந்தது.

“6 மாசம் ஷோ எதுவும் இல்லாம உட்கார வச்சிட்டீங்க”

“இல்லங்க... அடுத்த ஷோ உடனே ஆரம்பிக்க முடியல” என்றான் மார்க்ஸ்.

“அவரும் அதைத்தான் சொன்னாரு... ஆனா அந்த 6 மாசம் நாங்க என்ன பண்றது? இந்த சேனல்ல பண்ணா அந்த சேனல்ல பண்ணக் கூடாதுன்னு சொல்லிடுறீங்க... அப்ப நீங்களாவது ஷோ தரணும்... இல்ல ஸ்கிரீனுக்கு பின்னாடி வேலை செய்றவரா இருந்தா வேற வேலை ஏதாவது கூட பண்ணிரலாம். வெளியே இறங்கினாலே வந்தியத்தேவன் வந்தியத்தேவன்னு போட்டோ பிடிக்க ஆள் வந்துடுறாங்க... அவரு என்னதான் பண்ண முடியும் சொல்லுங்க!”

மனதில் தேக்கி வைத்திருந்த ஆதங்கம் முழுவதையும் அழுகையும் கண்ணீருமாய் அவள் சொல்லி முடித்தபோது வந்தியதேவன் பக்கமிருந்த நியாயம் மார்க்ஸுக்கும் நெல்லையப்பனுக்கும் தெளிவாகப் புரிந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

உலகத்தில் மிக அவஸ்தையான விஷயம் அரைகுறையாய் பிரபலமாவதுதான். சாதாரண மனிதனுக்கு கிடைக்க கூடிய சுதந்திரமும் பறி போய் விடும். பிரபலங்களுக்கு கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்புகளும் கிடைக்காது. இந்த திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்வது மிகக் கொடுமையானது.

விமானத்தில் போக வசதி இருக்காது. ரயிலில் இரண்டாம் வகுப்பில் போகையில் மொத்த ரயிலும் வேடிக்கை பார்க்கும். இல்லாத இமேஜை காப்பாற்றிக் கொள்கிற போராட்டம் மிகவும் சிரமமானது. கஷ்டப்படுகிறோம் என்று சொன்னால் மேலிருப்பவன் தன்னுடன் சேர்த்துக் கொள்ள மாட்டான். கீழே இருப்பவன் நம்ப மாட்டான்.

திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தாங்கள் வாங்கும் சொற்ப சம்பளத்தில் பெரும் பகுதியை தங்களைப் பராமரிக்கவும், திரையில் தங்களது தோற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆடை அணிகலன்களுக்கும், மேக்கப் சாதனங்களுக்குமே செலவழிக்க வேண்டியதிருக்கும். உலகத்துக்குத்தான் அவர் பிரபலமான நடிகை. ஆனால், உள்ளுக்குள் அவர்கள் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள் கேட்பவர்களுக்கு அவர்கள் மேல் பரிதாபத்தைக்கூட வரவழைக்காது என்பதுதான் கொடுமை.

“ஆபரேஷனுக்கு பத்து லட்ச ரூபா கேக்குறாங்கன்ணே. நான் என்ன பண்ணுவேன்?” என சாந்தி கண்கலங்கியபோது ஆறுதல் சொல்ல அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.

“ஏதாவது பண்ணலாம் நீங்க கவலைப்படாதீங்க. நாங்க டாக்டர் கிட்ட பேசிட்டு வந்துடுறோம்” என மார்க்ஸ் எழுந்து நடந்தான். நெல்லையப்பன் அவசரமாக அவனைப்பின் தொடர்ந்தார்.

“இப்ப என்னப்பா பண்றது?”

“ஆபிஸ்ல பணம் கலெக்ட் பண்ணலாமா மாமா?”

“அதுல எவ்வளவுப்பா வரும்”

“வேற என்ன மாமா பண்ணலாம்?” எனக் கவலையாக கேட்டான் மார்க்ஸ்.

“என் தம்பி ஒருத்தன் கேஎம்சி-ல வேலை பாக்குறான். அங்க மாத்திரலாமா?”

“மாத்துறது மேட்டர் இல்ல மாமா... அதனால அவருக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா எல்லாமே தப்பாகிடும்!”

மார்க்ஸ் சொன்னதில் இருக்கும் நியாயம் அவருக்கு புரிந்தது.

அவர்கள் கேஷ் கவுன்ட்டர் அருகே வந்து சேர்ந்தார்கள். மார்க்ஸ் குனிந்து அங்கு அமர்ந்திருந்த பெண்ணிடம் “எமர்ஜென்ஸில இருக்காரே” என ஆரம்பிக்கும் முன் அவள் குறிக்கிட்டு “தெரியும்... வந்தியத்தேவன்தானே” என்றாள்.

“ஆமாங்க... அவரோட ஆபரேஷனுக்கு பணம் கட்ட சொன்னாங்க!”

“தேவையில்ல சார்... கட்டிட்டாங்க”

மார்க்ஸும், நெல்லையப்பனும் ஆச்சர்யமானார்கள்.

“யார் கட்டுனாங்க?”

“மார்ஸ் டிவியில இருந்து ஃபுல் அமெளன்ட் பே பண்ணிட்டாங்க… அவரை சூட் ரூமுக்கு மாத்த சொல்லியிருக்காங்க... அவங்களே எல்லா செலவும் பார்த்துக்கிறதா சொல்லிட்டாங்க” என்றாள் அந்த பெண்.

மார்க்ஸும் நெல்லையப்பனும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனார்கள்.

“நீங்க நேத்து கட்டுன ஐம்பதாயிரம் ரூபாயை ஒரு லெட்டர் எழுதி குடுத்திட்டு கலெக்ட் பண்ணிக்கலாம்."

“மாமா சான்சே இல்ல மாமா” என்றான் மார்க்ஸ்.

“ஆமாப்பா அசத்திட்டாங்க!”

“அங்க ஹெச்ஆர்ல நம்ம பிகே-தான இருக்காரு... அவருக்கு போன் பண்ணுங்க மாமா”

“எதுக்குய்யா?”

“அவங்களைப் பார்த்து ஒரு நன்றி சொல்லணும் மாமா” என்றான் மார்க்ஸ்.

நெல்லையப்பன் தயக்கமாக “கண்டிப்பா சொல்லணுமா” என்றார்.

“எவ்வளவு பெரிய விஷயம் பண்ணியிருக்காங்க... நன்றி சொன்னா குறைஞ்சா போயிடுவோம்.”

“சரிப்பா” நெல்லையப்பன் போனை எடுத்தார்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

சென்னையின் முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பிரசிடென்ஷியல் சூட்டின் வரவேற்பறையில் நெல்லையப்பன், பாண்டியன், மார்க்ஸ் மூவரும் அமர்ந்திருந்தார்கள்.

“என்னப்பா பங்களா வீடு மாதிரி இருக்கு இந்த ரூம்” என்றார் நெல்லையப்பன்.

“இது ரூம் இல்ல மாமா... சூட்.. பிரசிடென்ஷியல் சூட்.. இந்த ஹோட்டல்லயே உசத்தியான ரூம் இதுதான்!”

“எவ்வளவுப்பா வாடகை இருக்கும்!”

“2 லட்சம்”

“ஒரு நாளைக்கா” என நெல்லையப்பன் வாய் பிளக்க, தாம்சன் அறை கதவை திறந்து கொண்டு வந்தார்.

வேஷ்டியும், லினன் ஜிப்பாவும் அணிந்திருந்தார்.

அவர்கள் எழுந்து நின்றார்கள்.

“ப்ளீஸ் சிட் டவுன்” என அவர் அமர்ந்தார்.

“சார்... வேஷ்டி எல்லாம் கட்டி உங்கள இப்படி எதிர்பார்க்கல சார்” என்றான் மார்க்ஸ்.

தாம்சன் சிரித்தார்.

“தாம்சன்னதும் வெள்ளைக்காரரா இருப்பீங்கன்னு நினைச்சேன்” என்றார் நெல்லையப்பன்.

“இல்ல.. இல்ல... மதுரைக்காரன்தான். தேனி பக்கத்துல அல்லிநகரம்தான் என்னோட சொந்த ஊரு. மதுரையிலதான் ஸ்கூல் காலேஜ் எல்லாம் படிச்சது” என்றார் தாம்சன். அவர் அவ்வளவு எளிமையாகப் பேசுவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

“நீங்க மனோஜுக்கு போன் பண்ணி எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு சொன்னதா சொன்னார். எனக்கும் உங்கள மீட் பண்ணலாம்னு தோணிச்சு... அதான் வர சொன்னேன்!”

“இல்ல சார்... இது ரொம்ப பெரிய விஷயம் சார்” என்றான் மார்க்ஸ்.

“எங்களுக்காக அவர் உங்களை விட்டுட்டு வந்திருக்காரு. அந்த முடிவுக்காக அவர் வருத்தப்படக்கூடாதில்ல... அவரை நாங்க பார்த்துக்கிறோம். இப்ப அவர் எங்க ஆளு... மெடிக்கல் செலவு மட்டும் இல்ல.. அவர் நல்லாகி ஷோ பண்ற வரைக்கும் அவருக்கு மாச மாசம் 2 லட்சம் தர சொல்லியிருக்கேன்”

“சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்” என்றார் நெல்லையப்பன்.

“பிசினஸ்ல நான் ரொம்ப கட் த்ரோட்டா இருப்பேன். ஆனா, இதெல்லாம் அதுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். இதை செய்யாதவன் மனுஷனே இல்லையே” எனப் புன்னகைத்தார் தாம்சன்.

மூவருக்கும் கண்கள் கலங்கின.

“பதவி அதிகாரத்தை பயன்படுத்தி நாலு பேருக்கு நல்லது பண்ண வாய்ப்பு கிடைச்சா பண்ணிரணும்... விடக்கூடாது” என்றார் தாம்சன்.

“சார் எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல... ரொம்ப நன்றி சார்” என தழுதழுத்தான் பாண்டியன்.

“இதனால எல்லாம் ஆரஞ்சு டிவியை நான் விட மாட்டேன்.. நீங்க எப்பவும் என்னோட காம்பட்டிஷன்தான்” என சிரித்தார் தாம்சன்.

மூவரும் புன்னகைத்தார்கள்.

“நீங்க எங்கள காம்ப்பட்டிஷனா நினைக்கிறதே எங்களுக்கு பெருமை சார்” என்றான் மார்க்ஸ்.

“நீங்க காம்பட்டிஷன்தான்... ஆனா பயமுறுத்துற காம்பட்டிஷன் இல்லை”

“சார் நாங்க என்ன பண்ண சரியா வரும்னு நீங்க நினைக்கிறீங்க சார்” எனக் கேட்டான் மார்க்ஸ்.

‘அடப்பாவி அந்தாள அடிக்க அந்தாள் கிட்டயே ஐடியா கேக்குறானே’ என மனதுக்குள் முணங்கினார் நெல்லையப்பன்.

“சொல்லட்டா” என்றார் தாம்சன்.

அவர்கள் ஆவலாக அவரைப் பார்த்தார்கள்.

“நீங்க பத்து பெர்சன்ட் கிளாஸுக்கு புரோகிராம் பண்றீங்க... நாங்க 90 பெர்சன்ட் மாஸுக்கு புரோகிராம் பண்றோம். நீங்க அந்த 90 பெர்சன்ட் மாஸுக்கு புரோகிராம் பண்ணாத வரைக்கும் உங்களால 300 GRP-ய தாண்டவே முடியாது.”

அறையில் இருக்கும் அனைவருக்கும் சட்டென உறைத்தது. அவர்கள் முகம் மாறியதை பார்த்த தாம்சன் சிரித்தார்.

“நான் சொன்னது சாதாரண விஷயம்தான். நீங்க ஆச்சரியப்படுற அளவுக்கெல்லாம் ஒண்ணுமில்ல” என தாம்சன் சிரித்தார்.

“உங்க மனசுல நீங்க பெரிய மேதாவின்னு நினைச்சுக்கிறீங்க.. உங்களைப் பாக்குற ஆடியன்ஸ் இப்படித்தான் இருக்கணும்னு நீங்களே முடிவு பண்ணிறீங்க... உங்க டிவியை பாக்குறதுக்கு ஒரு புத்திசாலித்தனம் வேணும்னு நீங்க நினைக்கிறீங்க. ஆடியன்சோட தரத்தை உங்க நிகழ்ச்சிகள் மூலமா உயர்த்துற ஒரு வேலைய நீங்க செய்யுறதா நினைச்சு பெருமைப்பட்டுக்கிறீங்க... ஆனா உண்மை அதில்ல... அவன் தான் நம்ம முதலாளி. அவனுக்கு பிடிச்சதை அவன் கேட்குறதை நாம பண்ணனும். அதான் ஜெயிக்கிறதுக்கான வழி” என்றார் தாம்சன்.

அவர் சொன்ன உண்மை அவர்கள் முகத்தில் அறைந்தது.

“நீங்க பெரிய மனுஷங்களுக்காக ஷோ பண்றீங்க... நாங்க சாதாரண மக்களுக்காக சிம்பிளா ஷோ பண்றோம். தட்ஸ் த சீக்ரெட்”

தாம்சன் போகிற போக்கில் சொன்ன வார்த்தைகள் மார்க்ஸின் மனதை சுழற்றிப் போட்டது.

“என்ன சார் உங்க சீக்ரெட்டையே வெளிய சொல்லிட்டீங்களே”

“கண்ணுக்கு எதிர்ல நாங்க என்ன பண்றோம்றதை எல்லாரும் பாக்குறாங்க. டிவி இண்டஸ்ட்ரியில சீக்ரெட்டுன்னு எதுவுமே கிடையாது. எல்லாமே ஒப்பன்தான். அத நீங்க எந்த ஆங்கிள்ல பாக்குறீங்கன்றதுல தான் வித்தியாசம் இருக்கு. அது மட்டும் இல்ல... என் கிட்ட ஒரு கேள்வி கேட்டீங்கன்னா நான் பொய் சொல்ல மாட்டேன்” என தாம்சன் சிரித்தார்.

அவர் ஏன் அத்தனை உயரத்தில் இருக்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

சென்ட்ரல் ரயில் நிலையம், குருவாயூர் எக்ஸ்பிரஸ் கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்தது. அதன் ஏசி பெட்டிகளுக்கு அருகே மார்க்ஸும், திவ்யாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

‘ட்ரெயின் 5 மணி நேரம் லேட்டு... நாளைக்கு போய் சேர சாயங்காலமாயிடும்” என்றான் மார்க்ஸ்.

திவ்யா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தாள்.

“ட்ரெயின் டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு காலையில ஃபிளைட்ல போலாமே”

“இல்ல பரவாயில்ல” என மார்க்ஸின் முகத்தை பார்க்காமல் பதில் சொன்னாள் திவ்யா.

“என்ன திவ்யா இப்ப எதுக்கு இப்படி கோச்சிக்கிட்டு இருக்க?”

“உன்கிட்ட நான் ஒரு கேள்வி கேட்டேன்... அதுக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்லை” என்றாள் திவ்யா.

“நீ என்ன லவ் பண்ற... அதை உன் அப்பாகிட்ட சொல்றதுக்கு நீ ஏன் யோசிக்கிற?’’ என்றான் மார்க்ஸ்.

“ஏன்னா அவர் ஒத்துக்க மாட்டாரு... ஏன்னா அவருக்கு உன்னை பிடிக்காது”

“எனக்கும் கூடத்தான் உங்கப்பாவை பிடிக்காது... ஆனாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்க தயாரா இருக்கேன்ல” என்றான் மார்க்ஸ்.

“இதுதான் உன் பதிலா?”

“இங்க பாரு திவ்யா... ஒண்ணு அவர் மாறனும்... இல்ல நீ அவர மாத்தணும். இல்லைன்னா அவர விட்டுட்டு நீ வரணும்!”

“இதுதான் உன் ஆப்ஷன்ஸ் இல்லையா?” எனக் கோபமாக கேட்டாள் திவ்யா.

“என் ஆப்ஷன்ஸ் இல்ல... மொத்தமாவே இவ்வளவு தான் ஆப்ஷன்ஸ் இருக்கு” என்றான் மார்க்ஸ்.

ரயில் கிளம்புவதற்கான விசில் ஊதப்பட்டது.

திவ்யா பதில் ஏதும் சொல்லாமல் ரயிலில் ஏறினாள்.

“திவ்யா... உங்கப்பாவை சமாளிச்சுட்டு வா... அப்புறமா நாம பேசி என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்” என்றான் மார்க்ஸ்.

அவள் Bye என்பதாக கையை உயர்த்தி நெற்றியருகே கொண்டு போனவள் சல்யூட் செய்வது போல சைகை செய்தாள். அது குட்பை சொல்வது போல மார்க்ஸுக்கு பட்டது. திவ்யா திரும்பி உள்ளே போனாள். ரயில் தடதடத்து வேகமெடுக்க... மார்க்ஸுக்கு ஏதோ தவறாக நடக்கப்போவதாக உள்ளுணர்வு சொன்னது.

- Stay Tuned...