Published:Updated:

இடியட் பாக்ஸ் - 71 | மாறாவின் போன் அழைப்பும், ஆரஞ்சு டிவியின் பதற்றமும்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 71 | மாறாவின் போன் அழைப்பும், ஆரஞ்சு டிவியின் பதற்றமும்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

மேனன் தனது அறைக்குள் நுழைந்தபோது மார்க்ஸ் திவ்யா தாட்சா மூவரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

“சாரி ஐ ஆம் லேட்... நீங்க பிரஸ் மீட்டுக்கு கிளம்பியிருக்கலாமே?” என்றார் மேனன்.

அவர்கள் மூவரும் மௌனமாக இருந்தார்கள்.

“என்னாச்சு?” என்றார் மேனன்.

“இந்த பிரஸ் மீட் தேவையா மேனன்?” எனக் கேட்டாள் தாட்சா

மேனன் புரியாமல் பார்த்தார்.

“ஷோ யார் பண்ண போறதுன்னு வீடியோ நேத்தே லீக்காயிருச்சு... தமிழ்நாட்டோட மூலை முடுக்குல இருக்கிற எல்லாருக்கும் இந்த ஷோ பண்ண போறது மாறாதான்னு தெரிஞ்சிடுச்சு... அதை சொல்றதுக்கு எதுக்கு தேவையில்லாம இந்த பிரஸ்மீட்?” என்றாள் தாட்சா.

“அஃபிஷியலா நாம சொன்னாதான அது கன்ஃபர்ம் நியூஸ்.”

“நம்மதான அன் அஃபிஷியலாவும் சொன்னது?”

மேனன் தாட்சாவை ஏறிட்டு பார்த்தார்.

“ஏன் அப்படி பண்ணீங்க மேனன்?”

“என்ன பண்ணேன்?”

“ஒரு வாரமா இன்னும் 7 நாள்ல, 6 நாள்ல, 5 நாள்ல ஹோஸ்ட் யாருன்றத ரிவீல் பண்ணப் போறோம்னு புரொமோ ஓட்டிகிட்டு இருக்கோம். ஆனா நேத்து ஒரு சாதாரண வீடியோ போட்டு அந்த புரமோஷனுக்கு அர்த்தமே இல்லாம பண்ணிட்டீங்களே மேனன்”

மேனன் திரும்பி பார்த்தார். மார்க்ஸும் திவ்யாவும் தாட்சாவின் மனநிலையில் இருப்பது அவருக்கு புரிந்தது.

“நான்...” என மேனன் ஆரம்பிக்க தாட்சா கையை உயர்த்தி அவரை இடைமறித்தாள்.

“இத நான் பண்ணலைன்னு சொல்லாதீங்க... உங்க போன்ல நீங்க ஷூட் பண்ணதை சிசிடிவி கேமரா வச்சு பிடிச்சாச்சு... அது உங்க லேப்டாப்ல இருந்து அப்லோட் ஆனதையும் ஐடி ஆளுங்க கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க”

“ஆமா அத நான்தான் பண்ணேன்” என்றார் மேனன்.

அனைவரும் அவரை ஏறிட்டுப் பார்த்தார்கள்.

“என்ன மேனன் சாதாரணமா சொல்றீங்க?”

“யெஸ்... இட்ஸ் ஏ பார்ட் ஆஃப் புரோமோஷனல் பிளான்” என்றார் மேனன்.

அவர்கள் புரியாமல் பார்த்தார்கள்.

“நம்ம புரமோ மூலமா ஹோஸ்ட் யாருன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தை ஜனங்ககிட்ட ஏற்படுத்திட்டோம். இன்னைக்கு அத அபிஷியலா நாம சொல்லியிருந்தா அது எத்தனை பேரை ரீச் பண்ணும்னு நீங்க நினைக்கிறீங்க?”

“நீங்க கேக்குறது எனக்கு புரியல” என்றாள் தாட்சா

“இந்த அனவுன்ஸ்மென்ட் எத்தனை பேரை ரீச் பண்ணும்னு நாம எதிர்பார்த்தோம்?” என கேட்டார் மேனன்.

“3 மில்லியன் சார்” என்றாள் திவ்யா.

“ஒரு சாதாரண மொபைல் போன்ல, குவாலிட்டியே இல்லாம நான் ஷூட் பண்ண அந்த 30 செகண்ட் வீடியோ எத்தனை பேரை ரீச் பண்ணியிருக்கு தெரியுமா? 10 மில்லியனுக்கு மேல... ஏறக்குறைய ஒரு கோடி பேர்… ட்விட்டர்ல்ல இன்னைக்கு இந்தியாவில டிரெண்டிங் நம்பர் ஒன் அதுதான். எல்லா யூடியூப் சேனல்லயும் இதுதான் ஹாட் டாப்பிக். இந்த புரமோஷன் நாம எத்தனை கோடி செலவழிச்சிருந்தாலும் கிடைச்சிருக்காது” என்றார் மேனன்.

அனைவரது முகமும் ஆச்சர்யத்தால் விரிந்தது.

“நீ சொல்லி நான் தெரிஞ்சிக்கிறதைவிட ... உனக்கு தெரியாம நான் தெரிஞ்சுகிட்டேன் பாருன்றதுல ஜனங்களுக்கு ஒரு கிக் இருக்கு. அனவுன்ஸ்மென்ட்டை விட ரகசியம் ஜனங்களுக்கு ரொம்ப பிடிக்கும். காலையில முழு படத்தை தியேட்டர்ல பார்க்கலாம். ஆனா, அதுல ஒரு 20 செகண்ட் கிளிப்ப முந்தின நாள் யாராவது லீக் பண்ணிட்டா அதை விழுந்து விழுந்து பார்ப்பாங்க. எட்டிப் பாக்குறதுல எப்பவுமே எல்லோருக்கும் ஒரு ஆர்வம் உண்டு. அதைத்தான் நாம யூஸ் பண்ணிக்கிட்டோம். இந்த டெக்னிக்கை நாங்க ரெண்டு மூணு ஷோஸ் புரமோட் பண்ண பாம்பேல யூஸ் பண்ணி இருக்கோம்” என்றார் மேனன்

இது முழுக்கத் திட்டமிடப்பட்டது என்பது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. “நம்மளே ஒரு வீடியோ எடுத்து நமக்கு தெரியாம அதை யாரோ லீக் பண்ண மாதிரி பண்றது... இது பல தடவை சூப்பரா வொர்க் ஆகியிருக்கு” என்றார் மேனன்.

“சாரி சார்...நாங்க உங்கள தப்பா நினைச்சிட்டோம்” என்றான் மார்க்ஸ்.

“இட்ஸ் ஒகே... இன்னைக்கு இந்தியா லெவல்ல மாறாவும், ஆரஞ்சு டிவியும், நம்ம ஷோவும்தான் டிரெண்டிங்னு சந்தோஷமா வந்து சொல்வீங்கன்னு பார்த்தேன். இப்படி கோபமா சொல்வீங்கன்னு நான் எதிர்பார்க்கல” எனச் சிரித்தார் மேனன்.

“சாரி சார்” என்றாள் திவ்யா.

“சே... சே... இட்ஸ் ஒகே.. நம்ம பிரஸ் மீட்டுக்கு கிளம்பலாம்” என்றார் மேனன்.

திவ்யாவும் மார்க்ஸும் அறையை விட்டு நகர்ந்தார்கள்.

இடியட் பாக்ஸ் - மேனன், தாட்சா
இடியட் பாக்ஸ் - மேனன், தாட்சா

தாட்சா மட்டும் அவரது அறையில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தாள்.

“என்கிட்ட மட்டுமாவது சொல்லியிருக்கலாம் இல்ல” என்றாள் தாட்சா.

“இல்ல... இந்த சஸ்பென்ஸ்...”

“மண்ணாங்கட்டி... இப்ப நான் உங்கள சந்தேகப்பட்ட மாதிரி ஆயிடுச்சு.”

மேனன் புன்னகைத்தார்.

“சிரிக்காதிங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு.”

“எல்லாமே இருந்தாதான் தாட்சா அது வாழ்க்கை. கசப்புதான் இனிப்போட அருமையை நமக்கு சொல்லிக் கொடுக்குது. துக்கம் இல்லன்னா சந்தோஷம்னு ஒரு உணர்வு இருக்குன்னு எப்படி நாம தெரிஞ்சுக்க முடியும். சந்தேகம் நல்லதுதான்.”

“என்ன நல்லது?”

“அந்த சந்தேகம் தீர்ந்ததும் இவனைப்போய் சந்தேகப்பட்டுட்டோமேனு கண்ணு கலங்கி நிற்கிற தாட்சா எவ்வளவு அழகுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்” என்றார் மேனன்.

தாட்சா சிரித்தாள்.

“இந்தப் புடவை நல்லா இருக்கு... புதுசா?”

“ஆமா...”

“பிரஸ்மீட்டுக்காக எடுத்தீங்களா?”

“இல்ல... அதுக்கப்புறம் ஒருத்தரோட லன்ச் போலாம்னு எடுத்தேன்.”

“யார் அந்த அதிர்ஷ்டசாலி?” எனச் சிரித்தார் மேனன்.

“அவரு... அவரு ஒரு ஆளு” என்றாள் தாட்சா

“எப்படி இருப்பாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“அச்சு அசலா உங்கள மாதிரியே இருப்பாரு மேனன்” எனச் சிரித்தாள் தாட்சா.

மேனனும் சிரித்தார்.

“ஒருவேளை அவர் லன்ச்சுக்கு வரலைன்னா எனக்கு உங்க கூட லன்ச் சாப்பிடுற வாய்ப்பு கிடைக்குமா?”

“அவர் எங்கேயும் போக முடியாது... நான் கூப்பிட்டா அவரு வந்தே ஆகணும்” என்றாள் தாட்சா

“ஆமா... அவருக்கும் உங்களைவிட்டு எங்கேயும் போக விருப்பம் இல்ல. உங்க கூடவே இருக்கிறதுதான் அவருக்கும் சந்தோஷம்” என்றார் மேனன்.

தாட்சா சிரித்தாள். மேனனும் சிரித்தார்.

………………………………………………………..

பிரஸ் மீட்டில் அனைவரும் கூடியிருந்தார்கள். திவ்யா, தாட்சா, மாறா மற்றும் நிகழ்ச்சியின் இயக்குநர் ஆகியோர் மேடையில் இருந்தார்கள்.

முன்னால் வரிசையாக அனைத்து பத்திரிகை, செய்தி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மீடியாக்கள் குவிந்திருந்தன. ஏஞ்சலும் மார்க்ஸும் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த விஷயங்களை திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

மேனன் அந்த இடத்திலிருந்து சற்று தள்ளி பின்புறம் மதிய உணவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு கவுன்ட்டர்கள் அருகே நின்று கொண்டிருந்தார்.

நெல்லையப்பன் மெதுவாக அவர் அருகே வந்தார். “என்ன நெல்லையப்பன்... இங்க நிக்கிறீங்க... அங்க போல” எனக் கேட்டார் மேனன்.

“இந்த கேள்விய நான்தான் கேட்டிருக்கணும்... நீங்க முந்திகிட்டீங்க” என்றார் நெல்லையப்பன்.

மேனன் சிரித்தார்.

“உண்மைய சொல்லுங்க... அந்த மேடையில இல்லையேன்னு உங்களுக்கு வருத்தமா இல்லையா... மத்தவங்க எல்லாம் சீன் போடும்போது நீங்க மட்டும் சைலன்ட்டா இருக்கீங்களே” என்றார் நெல்லையப்பன்.

மேனன் சிரித்தார்.

“சும்மா சிரிக்காதிங்க.. இந்த பேர் புகழ்ல எல்லாம் எனக்கு ஆசை இல்லன்னு மட்டும் சொல்லாதீங்க... நான் நம்ப மாட்டேன்!”

“நெல்லையப்பன் நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டா”

“கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டீங்களா... எதிர் கேள்வி போட்டு என் வாயை அடைச்சிருவீங்களே...”

“சே… சே... அப்படி எல்லாம் இல்ல... சிம்பிள் கேள்விதான்”

“கேளுங்க” என்றார் நெல்லையப்பன்

“லட்ச ரூபா வெச்சிருக்கிறது கெத்தா? இல்ல இந்தா வச்சுகுங்கன்னு அந்த லட்ச ரூபாவை தூக்கி அசால்ட்டா கொடுக்கிறது கெத்தா?”

நெல்லையப்பன் யோசித்தார்

மேனன் புன்னகைத்தார்.

“லட்ச ரூபாவை ஒருத்தன் அசால்ட்டா தூக்கி குடுக்குறான்னா அவன்தான் சார் கெத்து.”

“அதைத்தான் நானும் பண்றேன்... உண்மையில பார்த்தா அவங்களைவிட நான்தான் ஓவரா சீன் போடுறேன்” என்றார் மேனன்.

“எல்லாத்துக்கும் ஒரு பதில் இருக்கே உங்ககிட்ட...”

“நெல்லையப்பன்… பதவின்றது பவர்னு பாதி பேர் நினைச்சுகிட்டு இருக்கான். உண்மையில பதவின்றது பெரிய பொறுப்பு. பாக்க அழகா இருக்குன்னு பாறாங்கல்லை தூக்கி சுமந்தா கஷ்டம்தான் மிச்சம்” என்றார் மேனன்.

“இந்த பேரு புகழ்...”

“அத வச்சு என்ன செய்றது... ஒரு டீ கூட வாங்க முடியாது... ஆமாவா இல்லையா?”

“ஆமா சார்” எனக் குழப்பமாக சொன்னார் நெல்லையப்பன்.

“அப்புறம் அந்த கருமம் என்னத்துக்கு நமக்கு?” என மேனன் சிரித்தபடி நெல்லையப்பன் தோளைத் தட்டினார்.

இடியட் பாக்ஸ் | மாறா
இடியட் பாக்ஸ் | மாறா

பிரஸ் மீட்டில் கேள்வி பதில்கள் ஆரம்பித்தன. இருவரது கவனமும் மேடை நோக்கி திரும்பியது.

“பிக் ஸ்கிரீன்ல இருந்து ஸ்மால் ஸ்கிரீனுக்கு வந்துட்டீங்களே” என பத்திரிகையாளர் ஒருவர் மாறாவிடம் கேட்டார்.

“நீங்க நினைக்கிற அளவுக்கு இது சின்னத்திரை எல்லாம் இல்ல… இப்ப டிவி எல்லாம் கூட 75 இன்ச் 85 இன்ச்னு பெரிய ஸ்கிரீனா ஆயிடுச்சே” என்றார் மாறா.

அனைவரும் சிரித்தார்கள்.

“மக்களை சந்தோஷப்படுத்துறது என் வேலை. அதுக்கான சம்பளம் எனக்கு வருது. அதைத்தான் நான் இப்பவும் பண்ணப் போறேன். என்னோட படங்கள் தியேட்டருக்கு வந்து பாக்க வசதியில்லாம டிவியில மட்டுமே பாக்குற எத்தனையோ ரசிகர்கள் இருக்காங்க... டிவியில் பாக்குறதால அவங்களை எல்லாம் என் ரசிகர்கள் இல்லைனு நான் சொல்ல முடியாதில்ல” என்றார் மாறா.

மாறாவின் புத்திசாலித்தனம் அனைவரையும் யோசிக்க வைத்தது.

“உங்களுக்கு ஏதோ பணக்கஷ்டம் அதனால்தான் நீங்க டெலிவிஷன் பண்ண ஒத்துகிட்டதா ஒரு பேச்சு இருக்கு” என்றார் ரிப்போர்டர்.

“நல்ல விஷயம்தான்... சினிமா தராத பணத்தை டிவி தருதுனா அது சினிமாவை விட பெரிய மீடியம்னுதானே அர்த்தம்” என்றார் மாறா.

அனைவரும் சிரித்தனர்.

“சார்... நீங்க டிவி...”

“வேற ஏதாவது கேட்க கூடாதா? எவ்வளவு பெரிய ஷோ இது. அதைப் பத்தி பேசலாமே” என்றார் மாறா.

கேள்விகள் மாறின.

“பிரில்லியன்ட்” என்றார் மேனன்.

“ஆமா சார்... பெரிய அறிவாளி... கரெக்டான ஆளதான் நாம இந்த ஷோவுக்குப் பிடிச்சிருக்கோம்” என்றார் நெல்லையப்பன்.

“இந்த ஷோவை எப்படியாவது பெரிய ஹிட்டாக்கணும். இது ஜெயிச்சா மாறா மாதிரி நிறைய பேர் டிவிக்கு வருவாங்க” என்றார் மேனன்.

நெல்லையப்பன் தலையாட்டினார்.

மாறா ஹோஸ்ட்டாக இருக்கும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கியது. திவ்யா ஏஞ்சல் என மொத்த புரோகிராமிங் டீமும் பம்பரமாக வேலை செய்து கொண்டிருந்தது. எப்படியேனும் இந்த நிகழ்ச்சியை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தங்களுக்கிடையில் இருந்த வேறுபாடுகளை களைந்து அவர்கள் அனைவரும் இரவு பகலாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அனைவரும் வியந்து போனது மாறாவின் ஒத்துழைப்பைப் பார்த்துத்தான். நிகழ்ச்சியை ஒப்புக் கொள்வதற்கு முன் பார்த்த மாறா வேறு. ஒப்புக்கொண்ட பிறகு அவர்கள் பார்த்த மாறா வேறு. ஒப்புக்கொண்ட விஷயத்தை சிறப்பாக செய்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மாறாவிடம் இருந்தது. அதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தார் மாறா.

இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. ஏசி ஃப்ளோரிலிருந்து வெளியே வந்தான் மார்க்ஸ். பிளாஸ்டிக் சேர் ஒன்றில் நெல்லையப்பன் அமர்ந்திருந்தார்.

“என்ன மாமா, கிளம்பலையா நீ?” என்றபடி ஒரு சேரை இழுத்துப்போட்டு நெல்லையப்பன் அருகில் அமர்ந்தான் மார்க்ஸ்.

“ஷூட்டிங் முடிஞ்சிரட்டும்”

“போய் ஒழுங்கா தூங்கலாம் இல்ல... ஏற்கெனவே பிபீ, சுகர் எல்லாம் இருக்குது... ஏதாச்சும் ஒண்ணு இழுத்து வச்சுக்க போற... இப்படி நீ வெளிய உட்கார்ந்திருக்கறதால என்ன பிரயோஜனம் சொல்லு” என்றான் மார்க்ஸ்.

“ஏம்பா புள்ளைய பெத்துக்கப்போறது ஒருத்தின்னாலும் மொத்த குடும்பமும் ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல காத்திருக்கிறது இல்லையா... அவங்க வாசல்ல நின்னு என்ன ஆகப் போகுது?” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் சிரித்தான்.

“அதுக்கு பேர் அக்கறைப்பா... அதெல்லாம் ஃபீலிங்ஸ்...”

“நீ இங்க இருக்கிறது உள்ள இருக்குறவங்களுக்கு தெரியக்கூட போறதில்ல” என்றான் மார்க்ஸ்.

“இது அவனுங்க தெரிஞ்சுக்கனும்னு பண்றதில்ல மார்க்ஸ்... நம்ம மன திருப்திக்காக பண்றது” என்றார் நெல்லையப்பன்.

“வேற ஆள் மாமா நீ” என்றபடி மார்க்ஸ் சிகரெட்டை பற்ற வைத்தான். மாறா ஃப்ளோரிலிருந்து வெளியே வந்தார்.

அவரை பார்த்ததும் அவர்கள் அவசரமாக எழுந்து நிற்க மார்க்ஸ் சிகரெட்டை தன் முதுக்கு பின்னால் மறைத்தான்.

“உட்காருங்க... உட்காருங்க” என்றபடி மாறா அவர்கள் அருகே அதேபோல ஒரு பிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டு அமர்ந்தார்.

தயக்கமாக மார்க்ஸும் நெல்லையப்பனும் அமர்ந்தார்கள்.

“சிகரெட் இருந்தா குடுங்க” எனக் கேட்டார் மாறா.

மார்க்ஸ் தயக்கமாக சிகரெட்டை நீட்டினான்.

“சார் நீங்க விலை உசந்த சிகரெட் எல்லாம் பிடிப்பீங்க” எனத் தயக்கமாக சொன்னார் நெல்லையப்பன்

“அதெல்லாம் ஒண்ணும் இல்லன்ணே... காஸ்ட்லியான ஒரு சிகரெட் பாக்கெட் மட்டும் வாங்கி வெச்சுக்கிறது. மத்தவங்க பார்க்கும் போது அதுல ஒண்ணு பத்த வைக்கிறது. அது ரொம்ப கேவலமா இருக்கும். இதுதான் நம்மளோட பிராண்ட்” என்றார் மாறா.

“அப்ப இதையே ஒப்பனா குடிக்கலாமே...” என்றார் நெல்லையப்பன்

“வச்சிருக்க போன், போடுற ஷூ, குடிக்கிற சிகரெட், கார்... இதெல்லாம் இமேஜுணே... இது தேவையில்லைனு நாம குறைச்சா அவங்க நம்ம வேல்யூவை குறைச்சிருவாங்க... இந்த சீன் எல்லாம் போட்டாதான் கேக்குற பேமன்ட் தர்றாங்க என்ன பண்றது? எல்லாம் ஒரு அரசியல்தான்” எனச் சிரித்தார் மாறா.

அவர்கள் சிரித்தார்கள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“அண்ணே நான் சாப்பாடு கொண்டு வர்ற ஹாட் பேக் விலை எவ்வளவு இருக்கும்னு சொல்லுங்க.”

“ஒரு அஞ்சாயிரம் இருக்குமா?” என்றார் நெல்லையப்பன்.

“முப்பத்தைஞ்சாயிரம் அண்ணே... மேலே டெம்ப்ரேச்சர் டிஸ்ப்ளே எல்லாம் இருக்கும். உள்ளே இருக்கிற சாப்பாடு எவ்வளவு சூடா இருக்குன்னு ஹாட் பேக் மேல டிஸ்ப்ளேல வந்திரும். இந்த முப்பத்தைஞ்சாயிரம் ரூபா ஹாட்பேக்ல உள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க?” எனக் கேட்டார் மாறா.

“தெரியலையே” என்றார் நெல்லையப்பன்.

“பழையது” என சிரித்தார் மாறா... அவர்களும் சிரித்தார்கள்.

“என்ன சார் ஷூட் இன்னும் முடியலையா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“முதல் எபிசோட்... இன்ட்ரோ மட்டும் இன்னும் எடுக்கல... நச்சுன்னு ஒரு விஷயம் மாட்ட மாட்டேங்குது” என்றார் மாறா.

“நீங்க அன்னைக்கு பேசுன விஷயத்தையே கொஞ்சம் தட்டி சரி பண்ணி இன்ட்ரோவா மாத்திருங்க” என்றார் நெல்லையப்பன்.

“எப்படின்னு சொல்லுங்க...”

“இந்த ரெண்டு வாரமா என்ன பாக்குற பேசுற எல்லாரும் கேக்குற ஒரே கேள்வி... ஏன் மாறா நீங்க டிவிக்கு வந்தீங்க... அவங்களுக்கு எல்லாம் நான் சொல்ற பதில். நான் எதுல வரேன்றது முக்கியம் இல்ல… எனக்கு எதிர்ல யார் இருக்காங்கன்றதுதான் முக்கியம். சினிமா, டிவி, ரேடியோ, ஏன் மேடை நாடகமா இருந்தா கூட என் எதிர்ல என் ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் அவங்களுக்காக நான் பெர்பார்ம் பண்ணிக்கிட்டே இருப்பேன்.... அப்படி ஆரம்பிச்சு ஷோ பத்தி பேசி உள்ள போயிடுங்க சார்”

“சூப்பர்... சான்சே இல்லை... கை குடுங்க” என மாறா கை நீட்டினான்.

நெல்லையப்பன் கூச்சமாக, “சும்மா ஃபுளோவுல சொன்னேன் சார்” என்றார்.

“அதுதான்னே வேணும்... மார்க்ஸ்... அண்ணன்தான் எல்லா எபிசோடுக்கும் ஸ்கிரிப்ட்... என் கூடவே அவர் இருக்கணும்... இந்த மேட்டரை அப்படியே உள்ள போய் அடிச்சு விட்டுர்றேன்” என உற்சாகமாக மாறா எழுந்து சென்றார்.

நெல்லையப்பன் திகைத்து போய் அமர்ந்திருந்தார்.

“யோவ் மாமா என்னய்யா இப்படி அசத்திட்ட!”

“நிஜமாவே நல்லா இருந்திச்சா?”

“வேற லெவல் மாமா நீ” என மார்க்ஸ் சொல்ல நெல்லையப்பன் முகம் புன்னகைக்கு மாறியது.

……………………………………………..

மார்க்ஸூம் திவ்யாவும் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குள் நுழையும் போது மணி 4-ஐ தொட்டிருந்தது.

திவ்யா தனது அறைக்கு சென்று இரவு உடைக்கு மாறியவள் ஹாலுக்கு வந்தாள்.

“இப்படி வந்து உட்காரு” என்றான் மார்க்ஸ்.

“என்ன பண்ண போற?”

“அட உட்காரும்மா” என திவ்யாவின் தோளை பற்றி சேரில் அமர வைத்தவன் அருகில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை அவளது காலருகே கொண்டு வந்தான்.

“கால இந்த வெந்நீரில் வை”

திவ்யா புன்னகையுடன் மார்க்ஸைப் பார்த்தாள்.

“வை சொல்றேன்”

திவ்யா காலை வெந்நீர் அடங்கிய பக்கெட்டில் வைத்தாள். மிதமான சூட்டில் இருந்த வெந்நீரில் கால் வைத்ததும் இதமாக இருந்தது.

“அப்பா...” என அவளை அறியாமல் சொன்னாள் திவ்யா.

மார்க்ஸ் அவளுக்கு எதிரே அமர்ந்தவன். அவளது பாதங்களை வெந்நீருக்குள் லேசாகப் பிடித்துவிட்டான்.

“அய்யோ...வேற லெவல்ல இருக்கு” என்றாள் திவ்யா.

“ராஜா கைய வச்சா...” என மார்க்ஸ் சிரித்தான்.

“நிஜமாவே பயங்கரமா இருக்கு” என்றாள் திவ்யா.

“ஷூ காலோட ரொம்ப நேரமா நின்னுகிட்டே இருந்தல்ல... இந்த மசாஜ் அதுக்கு பெர்ஃபெக்ட்டா இருக்கும்” என்றான் மார்க்ஸ்.

அவனை வாஞ்சையாக பார்த்தவள்,

“ஒரு பொண்ணு கால பிடிக்கிறயே ஒகேவா உனக்கு?”

“ஒரு பொண்ணு இல்ல... காதலிக்கிற பொண்ணு”

“சரி லவ் பண்ற பொண்ணு காலை பிடிக்கிறியே அசிங்கமா இல்லையா?”

“இதுல அசிங்கம் என்ன இருக்கு... எனக்கு கால் வலினா நீ இத பண்ண மாட்டியா?” என்றான் மார்க்ஸ்.

“மாட்டேன்” என்றாள் திவ்யா.

இருவரும் சிரித்தார்கள்.

“நீ என் கால் பிடிச்சா லவ்... நான் உன் கால் பிடிச்சா அது அடிமைத்தனம்” என்றாள் திவ்யா.

“ஏன் அப்படி?”

“காலம் காலமா இருக்கிற ஒரு விஷயத்தை நீ பண்ண சொன்னா தப்பு. அதை உடைச்சு ஒரு விஷயத்த நீ பண்ணா அது ரைட்டு” என்றாள் திவ்யா.

“விடு... நானே பிடிக்கிறேன்” என்றான் மார்க்ஸ்.

தரையில் அமர்ந்திருந்தவன் தலையில் திவ்யா குனிந்து முத்தமிட்டாள்.

பெண்ணுக்கு தேவை என வேறெதையோ இந்த உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அவளை பெண்ணாக நடத்தாமல் இருந்தாலே போதும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

“வர்ற திங்கட்கிழமை டெலிகாஸ்ட் ஆரம்பிக்குது. அடுத்த வியாழக்கிழமை ரேட்டிங் என்னன்னு தெரியும்ல” எனக் கேட்டாள் திவ்யா.

இருவரது மனதும் அடுத்த வியாழக்கிழமை நோக்கி பயணித்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

வியாழக்கிழமை காலை வழக்கத்துக்கு மாறாக ஒட்டுமொத்த அலுவலகமும் கான்ஃபரன்ஸ் அறையில் கூடியிருந்தது.

தாங்கள் போட்ட உழைப்பும் பணமும் டிஆர்பியாக மாறி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்கிற ஆவல் அனைவருக்குள்ளும் முண்டியடித்தது.

சாந்தினி படபடப்பாக கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாள். முதலில் ரேட்டிங்கை அவள் பார்த்துதான் அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்பதால் அவளது ரியாக்ஷன் என்னவென அனைவரும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவள் டேட்டாக்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தாள்.

“எப்படியும் 10 வரும் தலை... எங்க ஏரியா பூரா இந்த ஷோதான் பாக்குறாங்க” என்றான் பாண்டியன்.

“தமிழ்நாட்டோட நம்பர் ஒன் ஷோ இதுவாதான் இருக்கும்னு எனக்கு தோணுது” என்றான் வினோ.

“எப்படிச் சொல்ற?” எனக் கேட்டான் டார்லிங்.

“அது அப்படித்தான்” என்றான் வினோ.

அவர்கள் அனைவரும் திரும்பி சாந்தினியை பார்க்க... சாந்தினி முகம் வெளிறிப் போய் இருந்தது.

“என்னமா ரேட்டிங்?” என ஆர்வமாகக் கேட்டார் நெல்லையப்பன்

“அஞ்சு” என அவள் சொன்னதும் அறையிலிருந்த அனைவரையும் ஏமாற்றம் சூழ்ந்தது.

“இதைவிட நம்மளோட ஸ்கூல் ஸ்டோரியும் இன்னொரு சீரியலும் ரேட்டிங் ஜாஸ்தி” என ஏமாற்றமாகச் சொன்னாள் சாந்தினி.

யாருக்கும் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. துக்க வீட்டை ஒத்த மெளனம் அறையை சூழ்ந்தது. மெதுவாக சிலர் கான்ஃபரன்ஸ் ரூமை விட்டு கலையத் தொடங்கினார்கள். சீயோன் பதற்றமாக அறைக்குள் ஓடி வந்தான்.

“சார்... ரேட்டிங்கை தெரிஞ்சுகிட்டு விளம்பரம் குடுத்த கிளையன்ட்ஸ் எல்லாம் போன் அடிக்கிறாங்க சார். என்ன சார் சொல்லட்டும்?” என்ற சீயோனின் குரலில் கலவரம் தெரிந்தது.

மேனன் யோசனையாக அவனைப் பார்த்தார்.

திவ்யாவின் போன் அடித்தது.

“சார்... மாறா கூப்புடுறாரு சார்...” என அவள் பதற்றமாக சொன்னாள்.

அந்தப் பதற்றம் அங்கிருக்கும் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

- Stay Tuned...