மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 33

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்றுபோகர் நகரவும், கிழார்களும் சீடர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கினர்.

``போகர் பிரானைக் கேள்விகளால் கட்டிப்போடுவது என்பது இயலாத காரியம். எப்படிக் கேட்டாலும் ஒரு பதிலைக் கூறிவிடுகிறார்’’ என்றார் ஒரு கிழார்.

``ஆம்... நாம் காண விரும்பிய ரசவாத நிகழ்வு நடக்காதுபோல் தெரிகிறது’’ என்றார் இன்னொரு கிழார்.

``எனக்கு ரசவாதம்கூடத் தெரியத் தேவையில்லை. நித்ய இளமைக்கு வித்தான யவ்வன காந்தம், மேனியை அழுகச்செய்யும் குன்மத்தைக் கட்டுப்படுத்தும் குஷ்டநிவாரணி, பெருங்காமத்தால் பிறப்புறுப்பில் உருவாகும் தொற்றுப்புண் - இந்த மூன்றுக்கும் மருந்து தெரிந்தால்கூடப் போதும்’’ என்றார் இன்னொரு கிழார்.

``ஏன்னய்யா, தமிழும் உழவும் போது மென்றாகிவிட்டனவா... சித்த வைத்தியனாக விருப்பமா?’’ என்று நட்போடு உரசினார் ஒரு கிழார்.

சீடர்களும், தங்களுக்குள் அதுவரை நிகழ்ந்த விவாதங்களை உள்ளடக்கி விவாதித்தபடி யிருந்தனர்.

``புலி, கிழார்களின் ஜாதகத்தைக் கணித்து, எப்போது பலன் கூறப்போகிறாய்?’’ என்று கேட்டான் சங்கன்.

இறையுதிர் காடு - 33

``நாளை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் இடும்பன்குளத்தில் நீராடிவிட்டு, பெரியநாயகி அம்மனையும் வழிபட்டுவிட்டு, பஞ்சாங்க ஏட்டை எடுத்துக் கணக்கிடத் தொடங்குவேன்’’ என்றான் புலி.

``புலி, எனக்கும் ஜாதகப் பலன்களை அறிந்துகொள்ள விருப்பமாகவுள்ளது. எனக்கும் கூறுவாயா?’’ என்று கேட்டான் மாறன் என்கிற சீடன்.

``முதலில் கிழார்கள், பிறகே மற்றவர்களுக்கு. இவர்களுக்கே எவ்வளவு காலமாகுமோ தெரியவில்லையே!’’

``அப்படியானால்..?’’

``ஒவ்வொருவர் கட்டமும் ஒவ்வொரு விதம். சிலர் கணக்கு, மிகச் சுலபமாய்க் கூட்டிக் கழிக்க முடிந்த முழுக்கணக்கு... சிலருடையதோ பின்னக் கணக்காய் வரும்.’’

``பின்னக் கணக்கு என்றால்?’’

``நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். நாமும் சரி, இந்த நாளும் சரி, இந்த நாடும் சரி... எல்லாமே அசைந்தபடியேதான் இருக்கின்றன. பூமி சுழன்றபடியே உள்ளது. விண்ணில் கோள்களும் தங்களுக்குள் சுழன்றபடியேதான் உள்ளன. நம் உடலில் உயிர்ச்சுழற்சி, ரத்த ஓட்டம் மற்றும் இதயத்துடிப்பு எனும் பெயரில் நிகழ்ந்தபடியே உள்ளது. மொத்தத்தில் மூன்று சுழற்சி அல்லது மூன்று ஓட்டங்கள்! ஓர் ஆச்சர்யம் தெரியுமா? இந்த மூன்றும் இப்படி இயங்கிக்கொண்டி ருப்பதைத்தான் `இயக்கவிசை’ என்கிறோம். இந்த இயக்கவிசையைத்தான் ஒரு ஜோதிடன் முதலில் கணக்கிட வேண்டும். இந்தக் கணக்கில்தான் எல்லாமே உள்ளன.’’

``அதற்கென்றுதான் விதிமுறைகள் இருக்குமே... அதன்படி கணக்கிட்டால் தெரிந்துவிடாதா?’’

`` `அதன்படி கணக்கிட்டால்’ என்று சுலபமாகக் கூறிவிட்டாய். ஒரு ஜோதிடன் சறுக்கி விழுகிற இடமே இதுதான், தெரியுமா?’’

``எப்படி என்று புரியும்படி சொல்லேன்?’’

``அது மிகக் கடினம். இருந்தாலும் முயல்கிறேன். உதாரணமாக, ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். ஒரு கப்பல்... பெரிய கப்பல்! அந்தக் கப்பலில் நாம் நடமாடித் திரியலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.’’ ``சரி...’’ ``அந்தக் கப்பல் நீர் மேல் நில்லாமல் பயணித்தபடியே உள்ளது. அதன்மேல் நிற்கும் நானும் நிற்காமல் கப்பலுக்குள் இங்கும் அங்குமாய் நடந்தபடியே இருக்கிறேன். இது பயணத்துக்குள் ஒரு பயணம் அல்லவா?’’ ``ஆமாம்.’’ ``விண்ணிலிருந்து கோள்களின் கதிர் என் மேல் விழுந்தும், நான் சுவாசிக்கையில் என்னுள் புகுந்தும், பிறகு உடம்பின் தசவாயுக்களாக மாறி நான் மனத்தாலும் உடலாலும் செயல்பாட்டோடு இருக்கக் காரணமாகிறது... இங்கேதான் சூட்சுமம் உள்ளது.’’ ``எப்படி?’’

``கோள்களுக்கும் எனக்குமான தூரம், நான் ஓர் இடத்தில் அமர்ந்துவிட்ட நிலையில் மாறாத ஒன்றாகவும், நான் நடந்து திரிகையில் மாறும் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது. அதிலும் நான் என்னைவிடப் பெரிய அசைவுகொண்ட கப்பலில் பயணிக்கையில் அதன் வேகம், அதனுள் என் வேகம், பிறகு என்னை இடையறாது தொற்றிக்கொண்டு நிற்கும் கோளின் வேகம் என மூன்று நிலைப்பாடுகளை நான் கணக்கில்கொண்டு சிந்திக்க வேண்டும்.’’

``நீ கூறுவது புரிவது போலவும் இருக்கிறது... குழப்பமாகவும் இருக்கிறது.’’

``சரியாகச் சொன்னாய்... கட்டக்கணக்கு போடுவது என்பது, மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தும். கணக்குபோடத் தொடங்கும்போது இருக்கும் கோள் நிலை, போட்டு முடிப்பதற்குள் மாறி விட்டிருக்கும். இப்போதுகூட நாம் இங்கே இன்றைய நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் `குருவின் ஹோரை’ எனப்படும் குரு எனும் கிரக ஆதிபத்ய காலத்தில் நம் குருவின் மூலம் பல அரிய விளக்கங்களைப் பெற்றபடி இருந்தோம். இன்று ஞாயிற்றுக்கிழமை - சூரிய ஹோரையில் தொடங்கிய காலத்தில் நான் குரு ஹோரை காலமான பன்னிரண்டு மணி அளவில் அவரிடம் விவாத பாடம் படித்தோம். இப்போது குரு ஹோரை முடிந்து செவ்வாய் ஹோரை காலம் வந்துவிட்டது. அவரும் நம்மைவிட்டுப் பிரிந்து முருகப்பெருமான் அவருக்கு தவவேளையில் காட்சியளித்த தண்டபாணிக் கோலத்தை நமக்குக் காட்டுவதற்காக அதற்கான வரைபடத்தை எடுக்கச் சென்றிருக்கிறார்.

செவ்வாய் ஹோரை என்பது, செவ்வாய் எனும் கோளின் குணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். கோபம், தாபம், பரவசம் என்கிற உச்சமான உணர்வு நிலையே இந்த ஹோரையில் எவருக்கும் ஏற்பட முடியும். மிதமான உணர்வு நிலை என்பது, இந்த வேளையில் யோகிகளுக்கே சாத்தியம். அவர்களும்கூட அசையாமல் யோகத்தில் இருந்தால்தான் சாத்தியம். அசைந்து நடப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த உச்சபட்ச உணர்ச்சியை வெளிப்படுத்தியே தீருவார். வேண்டுமானால் பாருங்கள், அவர் முதலில் நம்மிடம் கோபப்படுவார். பிறகுதான் மற்ற எல்லாமே...’’ என்ற புலிப்பாணி, அங்கு உள்ள நீர்க்கடிகையையும், சற்றுத் தள்ளி சூரியக்கதிர் பட்டு நிழல் விழும் நிலையில் இருந்த தூண் ஒன்றையும் பார்த்தபடியே கூறினான்.

போகர் பிரானும் கையில் தான் வரைந்திருந்த திரைச்சீலையைச் சுருட்டிப் பிடித்தவராய், அப்போது அவர்கள் முன் வந்துகொண்டிருந்தார். அவர் வருவதைச் சிலர் கவனிக்கவில்லை. தளர்வாக அமர்ந்துகொண்டு காதைக் குடைந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். போகர் பிரானுக்கும் ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டிருந்த அந்தச் சூழல் சலனத்தை உருவாக்கிவிட்டது.

அந்தக் கொட்டாரத்தில் விவாதக் கொட்டாரம், தவக் கொட்டாரம், பணிக் கொட்டாரம் என்று இடத்துக்குத் தகுந்த பெயர் உண்டு. கொட்டாரங்கள் எப்போதும் சதுர வடிவில் இருக்காது. சதுர வடிவில் இருந்தால் நான்கு மூலைகள் ஏற்பட்டு, வாஸ்து விசைப்பாடு துல்லியமாகச் செயல்படத் தொடங்கிவிடும். வட்ட கதியில் அவ்வளவு துல்லியம் இருக்காது.

பொதுவில் சந்நியாசிகள் வட்ட கதியையே தேர்வுசெய்வர். அங்கே விவாதக் கொட்டாரமும் வட்டமாயும் மேலே கூம்புக்கூரை யோடும் நேர் கிழக்கில் வாசல் திறப்போடும், கீழே கூரையில் கோரைப்பாயோடும்தான் இருந்தது. அந்தப் பாய் மேல் அமர்ந்துகொண்டும் நின்றுகொண்டும்தான் பேசுவது வழக்கம்.

இறையுதிர் காடு - 33

போகர் பிரான் படத்தோடு வந்தபோது சலசலவென்று எல்லோரும் பேசிக்கொண்டி ருக்கவும் அவருக்குள் சலனம் ஏற்பட்டு, அது ஓர் இளங்கோப மாகவும் மாறி ``என்ன இங்கே சலசலப்பு... நான் இல்லை யென்றால், அமைதியாக தியானத்தில் ஈடுபட வேண்டும் என்பது மறந்துபோய்விட்டதா?’’ என்று உரத்த குரலில் அந்தக் கோபத்தைக் காட்டினார்.

அடுத்த நொடி அங்கே அமைதி மட்டுமல்ல... சில சீடர்கள் ஆச்சர்யமாக புலிப்பாணியையும் பார்த்தனர். அதை போகரும் கவனித்தார்.

``என்ன புலி, ஏன் சிலர் உன்னைப் பார்க்கின்றனர்?’’ என்றும் கேட்டார்.

சங்கன் அதற்கு பதில் கூற விழைந்தான். ``ஆசானே, தாங்கள் விலகிய தருணம் புலியிடம் நாங்கள் ஜோதிடக்கலை பற்றிப் பேசினோம். `எங்கள் ஜாதகங்களையும் பார்த்து பலன் கூற முடியுமா?’ என்று கேட்டோம். அதற்கு `எவ்வளவு கால நேரமாகும் என்று தெரியாது. கணக்கிடத் தொடங்கினால்தான் கூற முடியும். அம்மட்டில் முழுமையான கணக்கு, பின்னக் கணக்கு என்று பல கணக்குகள் உள்ளன’ என்று விளக்கமளித்தான். அப்போது பேச்சு பலவாறு சென்று `ஹோரை’ எனப்படும் ஒரு விஷயத்தைத் தொட்டு நின்றது. அம்மட்டில் `குரு ஹோரை முடிந்து செவ்வாய் ஹோரை தொடங்கிவிட்டது. இந்த வேளையில் ஒருவரின் உணர்வு நிலை கோபம், தாபம், பரவசம் என்கிற ஏதாவது ஒன்றில் உச்சமாகவே இருக்கும்... மிதமாக இராது’ என்றான். `வேண்டுமானால் பாருங்கள், நமது ஆசான்கூட கோபத்தைத்தான் முதலில் வெளிப்படுத்துவார்’ என்றான். தாங்களும் வந்தவுடன் கோபித்தீர்கள். புலியின் கணக்கு சரியாக இருந்ததை எண்ணி வியந்தே அவனை ஆச்சர்யத்தோடு பார்த்தோம்’’ என்ற சங்கனின் பதிலைக் கேட்டு வியந்த போகர், புலிப்பாணியை அருகில் அழைத்தார்.

அவன் அருகில் வரவும், அவன் தலையைத் தன் வலது கரத்தால் வருடியவாறே ``புலி, நீ வரும் நாள்களிலும் வரலாற்றிலும் தவிர்க்க முடியாத காலஞானியாகக் கருதப்படுவாய். நீ கூறியது பெரிதும் உண்மை. கோபதாபங்களுக்கு ஆட்படக் கூடாத ஒரு சந்நியாசிதான் நான். ஆயினும் சில தருணங்களில் அதன் பிடியில் சிக்கி, பின்னரே விடுபட முடிகிறது. இங்கே உனக்கோர் உண்மையைக் கூறுகிறேன். நேற்று நான் புளி மிளகு ரசத்தை மிகுதியாக உண்டேன். அதன் சுவை உண்ணச் செய்துவிட்டது. அதன் எதிரொலியே இப்போது நான் கோபிக்கக் காரணம். இந்தக் கோபமும் சரியாக செவ்வாய் ஹோரையில் அமைய, அதன் கதிர்க்கற்றை காரணம்.

இப்படி எல்லாமே காரண காரியமாக இருப்பது, இந்த உலகின் ஓர் அதிசயம்! இப்படி ஓர் உலகைப் படைத்து அதனுள் ஓர் இயக்க கதியையும் நிர்மாணம் செய்த அந்த ஆதிசக்தி, எவ்வளவு பெரிது என்று எண்ணிப்பார்க்கிறேன். பிரமிப்பே ஏற்படுகிறது!’’ - முதலில் கோபவயப்பட்ட போகர் பிரான், பிறகு பிரமிப்புவயப்பட்டார். புலிப்பாணி கூறியதுபோல அதுவும் ஓர் உச்ச உணர்வு நிலையே. அவர் சொல்லவும் அதன் பொருள் புரிந்த நிலையில் எல்லோரிடமும்கூட பிரமிப்பு.

மொத்தத்தில் செவ்வாய் ஹோரை தன் சக்தியை ஒரு குண வடிவில் அவர்கள் அவ்வளவு பேரிடமும் காட்டிவிட்டது. கூடுதலாய், உணர்வு நிலைப்பாட்டுக்கு உணவும் ஒரு காரணம் என்னும் தகவல்.``ஆசானே... உணவுக்கும் உணர்வுக்கும் பெரும்தொடர்பு இருப்பதைத் தாங்கள் கூறியதைவைத்து உணர முடிகிறது. இது ஒரு நுட்பமான செய்தி’’ என்றார் ஒரு கிழார்.

``அதிலென்ன சந்தேகம்..? உழவால்தான் உணவு, உணவால்தான் உணர்வு, உணர்வால்தான் வாழ்வு! உணர்வு கூடவேண்டும் எனில் புணர்வு - உணர்வு கட்டுப்பட்டால் உயர்வு... உடைந்துபோனால் தாழ்வு. அழுதபடியே பிறந்திடும் நம் அகாரப் பிறப்பு, உகாரத்தில் எத்தனை வண்ணம்கொள்கிறது என்பதை கவனித்தீர்களா?’’ - போகர் பிரான் சொல்லி முடிக்கவும் கிழார் பெருமக்கள் அதைக் கேட்டுச் சிலிர்த்தனர்.

``ஐயனே, என்னே ஓர் அற்புதமான விளக்கம்! உழவு, உணவு, உணர்வு, வாழ்வு, புணர்வு, உயர்வு, தாழ்வு... இதை அகார உகாரத்தோடு தாங்கள் பொருத்திய விதம் எம்மொழியாம் தமிழை எண்ணிச் சிலிர்க்கவைக்கிறது. இந்தச் சிலிர்ப்பை இதற்கு முன் நாங்கள் அடைந்ததேயில்லை’’ என்றனர்.

இறையுதிர் காடு - 33

``ஆம்... இதுவே நம் மொழியின் தெய்விகத்தன்மைக்கும் ஒரு சான்று. ஒரு தனிமனிதன் இந்த உலகில் எவ்வளவுதான் வாழ்ந்தாலும் இப்படி வியப்பளிக்கும்விதமாய் சொற்கோவைகளை உருவாக்க ஏலாது! ஒரு மனிதக்கூட்டம் ஒரு நூற்றாண்டு வாழ்ந்தாலும் ஏலாது! நான் பிறமொழிகள் சிலவும் அறிந்தவன். அம்மட்டில் சீன மொழியும் அதன் வரிவடிவங்களும் நான் அறிந்தவற்றில் ஒன்று. அந்த மொழி மட்டுமல்ல, ஏனைய பிற மொழிகளும்கூட மனிதன் தன் தேவை நிமித்தம் வாழ்ந்த நாளில் நெருக்கடிகளுக்கு ஆட்பட்ட தருணத்தில் சிறுகச் சிறுகக் கண்டறிந்தவையே. அவையும்கூட காலத்தால் மாற்றங்களைச் சந்தித்தன. இந்தக் கண்டறிதல் சீன மொழி வரையில் கட்டுப்பாடின்றித் தொடரப்போய், 80,000-த்துக்கும்மேல் எழுத்துகள் தோன்றிவிட்டன. ஆயினும் 3,000 எழுத்துகளே அங்கே நடைமுறையில் பயன்பாட்டில் உள்ளன. ஒலிப்பியலும் இங்கே ஐந்து வகையாக இருக்கிறது. உச்ச ஒலிப்பு, ஏற்ற ஒலிப்பு, கீழ் ஏற்ற ஒலிப்பு, கீழ் ஒலிப்பு, சம ஒலிப்பு என்பதாக அவற்றை அங்கு உள்ள அறிஞர்கள் பகுத்துள்ளனர். சற்றேறக்குறைய நமக்கு இணையான தொன்மை சீன மொழிக்கும், பிறகு ஹீப்ருவுக்கும் அதற்கும் பிறகு சம்ஸ்கிருதத்துக்கும், பாலி எனும் மொழிக்கும் உண்டு.

இதில், மிகுந்த ஆச்சர்யமூட்டும் ஒரு விஷயமும் உண்டு. உலகில் தாயின்றி எவரும் பிறந்திருக்க முடியாது. தாய் எனும் சொல், தயை! அதாவது கருணை எனும் பொருளில் இருந்தே தோன்றியது. இந்தத் தாயை, பொதுவில் `அம்மா’ என்போம். ஓர் ஆச்சர்யம் பாருங்கள், மொழி என்றால் என்னவென்றே தெரியாத நிலையிலே ஒரு மனித உயிர் மட்டுமல்ல, விலங்குகளிடம்கூட `மா’ எனும் ஒலி, முதல் சத்தமாக உள்ளது. அப்படி ஒலிக்கும் அந்த `மா’வில் `அ’வன்னாவும் `ம்’மன்னாவும் மறைந்து கிடந்து ஒலிக்கிறது. அதாவது `அம்மா’ என்னும் சொல்லே உயிர் இனத்தின் முதல் சொல். இந்த அம்மாவில் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து எனும் மூன்றும் உள்ளன.

நம் மொழி குறித்து நாம் வியக்க, ஏராளமாய் இதுபோல் பல சங்கதிகள் உள்ளன. நம் மொழி வழக்கியலில் பல பிற மொழிச் சொற்களை ஏற்றுக்கொண்டதாகவும் உள்ளது. என் பேச்சிலும் அவ்வகைச் சொற்கள் இருக்கக் காணலாம். நான் உலகைச் சுற்றி வருபவன். எனவே, என்னால் அதைத் தவிர்க்க இயலவில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்ற நெடிய ஒரு விளக்கமளித்த போகர் பிரான், ``மொழிகுறித்துச் சிலிர்த்த இவ்வேளை புலி குறிப்பிட்டதுபோல் அங்காரகன் எனப்படும் செவ்வாயின் கதிர்ப்பொதி மிகுந்த வேளை... இந்த வேளையில் செவ்வாயின் தலைவனான முருகப்பெருமானின் தவப்பெருங்கோலத்தை உங்களுக்குக் காட்டுவதில் மிக மகிழ்கிறேன். கண்டு மகிழ்வதோடு ஞானம் வேண்டித் துதியுங்கள்’’ என்றபடியே திரைச்சீலைச் சுருளை விரித்து இரு கைகளால் தன் மார்பு வரை உயர்த்திப் பிடித்துத் தொங்கவிட்டார்.

தண்டாயுதபாணி எனப்படும் தமிழ்க் கடவுளின் தோற்றம், பூச நட்சத்திர நாளின் செவ்வாய் ஹோரையில் அவர்கள் அனைவருக்கும் காட்சியளிக்கத் தொடங்கியது. மழித்த தலை, பாம்படக்காது, கழுத்தில் ருத்ராட்சமாலை, மார்பில் சிவசம்புடம், இடையில் கௌபீனம் எனப்படும் கோவணம், வலதுகையில் தோள் வரையிலான தண்டக்கோல் என்று தண்டாயுதபாணியாக அந்த முருகன் அங்கு உள்ளோருக்கு ஓவியமாகக் காட்சியளித்தான்.

இன்றுஅதிர்வோடு பார்த்த சாந்தப்ரகாஷையும் சாரு பாலாவையும் உட்காரக்கூடச் சொல்லாத சேட், அவர்கள் அதிர்வதைப் பார்த்த பிறகே கேட்க விரும்பினார். ``ஆமா நீங்க யாரு? அந்தப் பெட்டியில அப்படி என்ன இருக்குது?’’ என்று கேட்கவும் செய்தார்.

``நான்தான் சேட், மும்பை சந்தோஷ் மிஸ்ராவுக்கு அந்த பங்களாவை வித்தவன். மை நேம் இஸ் சாந்தப்ரகாஷ்.’’

``ஓ... அந்த புளூமூன் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குரூப்புக்கு பங்களாவைக் கொடுத்தது நீங்கதானா... நீங்க யு.எஸ்-ல இருக்கிறதால்ல கேள்விப்பட்டேன்?’’

``இப்ப அங்கே இருந்துதான் வந்திருக்கேன். பங்களாவுக்கும் போய்ப் பார்த்தேன். பாதாள அறையில பெட்டி இல்லை.’’

`` ப்ளீஸ் உட்காருங்கோஜீ! நான் குடோனுக்கு ஆளை அனுப்பிப் பார்க்கச் சொல்றேன்’’ என்று சற்றுப் படபடப்போடு எதிரில் உள்ள நாற்காலியைக் காட்டிய சேட், அடுத்த நொடி தன் செல்போனை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்தபடி குடோன் வாட்ச்மேனைக் கூப்பிட்டார். அவனது காலர் ட்யூனில் `நான் அடிச்சா தாங்க மாட்டே... நாலு மாசம் தூங்க மாட்டே...’ எனும் திரைப் படப் பாடல்!

``இவன் நான் அடிச்சா தாங்க மாட்டான்... கர்மம் கர்மம்! இந்த செல்போன், வெளையாட்டுச் சாமான் மாதிரி ஆயிடிச்சே சாப்...’’ என்று ரசனையோடு முணுமுணுத்திட, ``சொல்லுங்க சேட்டு... நான் பூச்சி பேசறேன்’’ என்றான் அந்த வாட்ச்மேன்.

``அரே... என்னா காலர் ட்யூன் உன்னுது! சாமி பாட்டு ஏதாச்சும் வை. இல்லாட்டி மணி சத்தம் போதும். எத்தினி தபா சொல்லியிருப்பேன்.’’

``மாத்திடுறேன் சேட்டு... சொல்லுங்க சேட்டு...’’

``நம்ப குடோன்ல ஏதாச்சும் மரப்பொட்டி இருக்குதா, உனக்குத் தெரியுமா?’’

``பொட்டியா... தெர்லயே சேட்டு.’’

``நின்ன இடத்துல சொல்லாதே - பார்த்துட்டு வந்து சொல்லு. ஜமீன் பங்களா மரச்சாமான்களோடு அதுவும் சேர்ந்து வந்ததா சொல்றாங்க.’’

``சரிங்க சேட். பார்த்துட்டு வந்து போன் பண்றேன்’’ என்றவன் அடுத்த பத்தாவது நிமிடமே போன் செய்து, ``நல்லா பார்த்துட்டேன் சேட்டு... அப்படி எதுவும் இல்லை’’ என்றான்.

``இல்லையாம்ஜீ...’’

``நோ... அங்கே இருந்திருக்கு. உள்ளே இறங்கி எடுத்திருக்காங்க... நான் உள்ளே கை கால் தடங்களைப் பார்த்தேன்.’’

``அதுல எதுனா முக்கிய சாமான் இருக்குதாஜீ..?’’

``கிட்டத்தட்ட எங்க எல்லார் உயிரும் இப்ப அதுக்குள்ளேதான் சேட் இருக்கு. என் தாத்தாவோட பெட்டி அது.’’

``அச்சா... அதையெல்லாம் இந்த ஆன்டிக்ஸ் விக்கிற துரியானந்தம்கிற ஒருத்தன்தான் எடுத்துட்டு வந்தான். நான் அவனைக் கேட்டுப்பார்க்கிறேன்’’ என்று துரியானந்தத்தை அழைக்கப் பார்த்தான். ஆனால், `சுவிட்ச்டு ஆஃப்’ என்று மறுபுறம் ஒலிக்கவும்,

``எதுக்கு செல்போன் வாங்குறாங்கன்னே தெரியலை. அணைச்சு அணைச்சு வெச்சுடுறாங்கோ’’ என்று முனகிய சேட் ``ஜீ... அவன் செல்போன் இப்ப வேலை செய்யல. நீங்க உங்க நம்பர் கொடுங்கோ, நான் அவன் லைன் கிடைக்கவும் கேட்டுச் சொல்றேன்’’ - சேட்ஜி அப்படிச் சொன்னாலும் அது சாருவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

``சேட்ஜீ... ஆன்டிக்ஸ் வியாபாரின்னு சொல்றீங்க. அப்ப நிச்சயம் அந்த மாதிரி பெட்டிய பார்த்தா அவங்க விட மாட்டாங்க. அதை யாருக்காவது வித்துட்டா அப்புறம் அவங்களைத் தேடணும். இந்த விஷயத்துல நாங்களே ரொம்ப லேட் பண்ணிட்டோம். அவன் கடை எங்கே இருக்குன்னு சொல்லுங்களேன். நாங்க போய்ப் பார்க்கறோம்.’’

``அச்சா... அதுவும் சரிதான்!’’ என்ற சேட், மயிலாப்பூரில் உள்ள லஸ்ஸையொட்டிய சாலையின் ஓரத்தில் பிளாட்பாரத்தில் பழைய புத்தகக் கடையாகவும், பழைய பொருள்களின் கடையாகவும் அதுவே இருப்பதைக் கூறவும் அடுத்த நொடியே இருவரும் கிளம்பிவிட்டனர்.

சேட் வியப்போடு பார்த்தபடியே இருந்தார்.

தாம்பரம் கடந்து கார் பல்லாவரம் சாலையில் டிராஃபிக்கில் திணறிக்கொண்டிருந்த வேளை, பாரதியின் செல்போனில் அழைப்புச் சத்தம். மறுபுறம் மருதமுத்து.

``சொல்லு மருதமுத்து.’’

``அம்மா... வந்துட்டீங்களா?’’

``அரை மணி நேரத்துல பங்களாவுல இருப்போம்.’’

``சீக்கிரம் வாங்க. பொட்டி மேல அந்தப் பாம்பு உட்கார்ந்து கிட்டு நகர மாட்டேங்குது. எல்லாரும் வெளியே போர்ட்டி கோவுலதான் நின்னுகிட்டி ருக்கோம்.’’

``மை குட்நெஸ்... திரும்ப வந்துடிச்சா?’’

``ஆமாம்மா... ஆனா, அதுவும் நல்லதுக்குன்னுதான் படுது. இந்த பானு பொண்ணு ஒரு ஜோசியக்காரனோடு வந்து அந்தப் பொட்டியைத் திறக்க நினைச்சிருக்கு. பாம்பு இருக்கவும் வெலவெலத்துட்டாங்க. அந்த ஜோசியன் கற்பூரம் காட்டி உழுந்தெல்லாம் கும்புட்டுப் பார்த்தான். வேலைக்காகலை. கடைசியில, `பாம்பு புடிக்கிற வனைக் கூட்டிக்கிட்டு வரேன்’னு கிளம்பிப் போயிருக்கான்.’’

``பானு இப்ப எங்கே இருக்கா?’’

``இங்கதாம்மா இருக்குது.’’

``போனை அவங்ககிட்ட கொடு.’’

``அம்மா, தப்பா எடுத்துக்காம அது நம்பருக்கு நீங்களே பேசிடுங்கம்மா. நான் போட்டு உட்டுட்டதா அப்புறம் எம்மேல கோவிச்சிக்கும்.’’

``சரி, நான் நேர்லயே வந்து பேசிக்கிறேன்...’’ என்று கட் செய்த பாரதியின் போனில் அடுத்த நொடியே அரவிந்தனின் அழைப்பு.

``பாரதி, அந்தப் பண்டாரத்தைப் பார்த்துட்டேன். பெட்டியைத் திறக்கிறது எப்படின்னும் தெரிஞ்சுகிட்டேன். ஆனா, அதுக்கு ஒரு புத்தகம் இருக்காம். `கடபயாதி’ங்கிறது அதுக்குப் பேராம். அதைப் பார்த்தா எல்லாம் தெரிஞ்சிடுமாம்.’’

``அந்தப் புத்தகத்துக்கு எங்கே போக?’’

``அது அந்தப் பழைய புத்தகக் கடையிலேயே இருக்காம்.’’

``அது எப்படி உங்களுக்குத் தெரியும்?’’

``பண்டாரம்தான் சொன்னாரு.’’

``எதுக்கு அரவிந்தன் இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடணும்? எப்படித் திறக்கணும்னு அவருக்குச் சொல்லத் தெரியாதாமா?’’

``பாரதி... மிஸ்ட்ரி மிஸ்ட்ரின்னு பேசுறதுக்கும் அந்த அனுபவத்துக்கு ஆளாகிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நானும் செந்திலும் அந்தப் பண்டாரம்கிட்ட வெளியில சொன்னா, யாரும் நம்ப மாட்டாங்கங்கிற அளவுக்கு அனுபவப்பட்டுட்டு வந்துகிட்டிருக்கோம்.’’

``அரவிந்தன், இந்தப் பண்டாரப் புராணம் கேட்கவெல்லாம் இப்ப நேரமில்லை. அந்தப் பொட்டியை நாம மட்டும் திறக்க ஆசைப்படலை. அந்த டெல்லி ஜோசியன் கிருஷ்ணகுமார் நந்தாவும் திறக்க விரும்பியிருக்கான்! அதுக்காக, நாம இல்லாத இந்தச் சந்தர்ப்பத்துல வீட்டுக்கும் போயிருக்கான். ஆனா, பெட்டி மேல அந்தப் பாம்பு உட்கார்ந்துகிட்டு மிரட்டவும் பயந்துட்டாங்க. எனக்கு இப்பதான் தோட்டக்கார மருதமுத்து போன்ல சொன்னான்.’’

``மைகாட்..! நான் சொல்லலை, அந்தப் பாம்பு நாம நினைக்கிற மாதிரி இல்லைன்னு...’’

``இப்ப என்ன சொல்ல வர்றீங்க?’’

இறையுதிர் காடு - 33

``பண்டாரம் சொன்னபடி பார்த்தா, நான்தான் அதைத் திறக்கப்போறேன். என்னாலதான் முடியுமாம். புத்தகத்துல வழிமுறை இருக்குதாம். அதனாலதான் பாம்பு, ஜோசியனை நெருங்கவிடலைபோல.’’

``ஏன் அரவிந்தன் இப்படி அப்நார்மலாவே எல்லாம் நடக்குது? எனக்கு இது எதுவுமே கொஞ்சம்கூடப் பிடிக்கலை.’’

``கோடீஸ்வரனாலகூட அவனுக்குப் பிடிச்ச மாதிரி நூறு சதம் வாழ முடியறதில்லைங்கிறதுதான் யதார்த்தம் பாரதி. தொடக்கத்துல இருந்தே பூடகமான விஷயங்கள்மேல உனக்கு இனம்புரியாத ஒரு வெறுப்பு. அதான் இப்படிப் பேசுறே. ஆனா, நான் டியூனாயிட்டேன். அபூர்வமான அனுபவங்கள் எனக்கு ஏற்படுறதை நான் என்ஜாய் பண்ணத் தொடங்கிட்டேன். கவலைப்படாதே, எல்லாம் சரியாத்தான் நடந்துகிட்டி ருக்கு.’’

``என்ன சரியோ..! என்வரையில ஒரே ஒரு விஷயம்தான் சரி அரவிந்தன். அது அந்தக் குமாரசாமி குடும்பத்துக்கு சரியான நஷ்டஈடு கொடுக்கிறதும், அந்த இடத்தை அவங்களுக்குத் திருப்பிக் கொடுக்கிறதும்தான். நம்ப செயல்பாடு அதுக்கானதா மட்டும்தான் இருக்கணும். ஆனா, பழநி, பண்டாரம், பொட்டின்னு எங்கெங்கேயோ போய்கிட்டி ருக்கோம்னு கோபம்தான் வருது.’’

``பாரதி, என் வரையில நான் உன்னை இப்ப ரொம்பவே மதிக்கிறேன். நீ வித்தியாசமான ஒரு பெண் மட்டுமில்லை... அபூர்வமானவளும்கூட. நான் இதை ரொம்ப ஆத்மார்த்தமா சொல்றேன். எப்ப நம்ம கார்ல அடிபட்டுச் செத்துப்போன ஒரு நாய்க்காக நீ துடிச்சியோ, அப்பவே நான் என்னை உன்கிட்ட இழந்துட்டேன். இதை உடனே காதல்னுல்லாம் கொச்சைப்படுத்திட விரும்பலை.

சுருக்கமா சொல்லப்போனா, நீ ரொம்ப ரொம்ப மதிப்பானவ. காலம் சரியான சமயத்துலதான் என்னை உன்கிட்ட கொண்டுவந்து விட்டிருக்கு. எனக்கும் உனக்கும் ஒரு வித்தியாசம்தான். நீ அனுபவப்பட்டாலும் விஞ்ஞான அகந்தையோடயே இருக்கே. என்கிட்ட அது இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.’’

``எதுக்கு இவ்வளவு பெரிய பீடிகை அரவிந்தன்?’’

``பழநி, பண்டாரம், பெட்டி எல்லாமே நமக்குப் பல விஷயங்களை உணர்த்தப்போகு துங்கிறது என் பாயின்ட். உன் வரையில அதெல்லாமே பாயின்ட்லெஸ்... ஆம் ஐ கரெக்ட்?’’

``நாம உணர்ந்து என்ன செய்யப்போறோம்? நம்ப வாழ்க்கையில நாம வெளிப்படையா உணர எவ்வளவோ விஷயங்கள் இருக்கே அரவிந்தன். எதுக்கு இந்த மிஸ்ட்ரி கர்மம்லாம்? நான் இதைக் கேட்கலை, இதை விரும்பலை, இதுல எந்த அர்த்தமும் இல்லை.’’

``டெம்ப்ட் ஆகாதே. நான் இப்ப திண்டுக்கல் தாண்டிட்டேன். அஞ்சு மணி நேரத்துல அங்கே இருப்பேன், நேர்ல பேசுவோம். முடிஞ்சா அந்தப் புத்தகத்தை வாங்கி வை. நேரம் மிச்சமாகும்.’’

``அப்ப அந்தப் புத்தகம் இல்லாம பெட்டியைத் திறக்க முடியாதா?’’

``முடியாது...’’

``உடைச்சா?’’

``ஓ... நோ! அந்த மெக்கானிசத்துக்கு நாம அதை உடைக்கிறது அழகில்ல.’’

``மிஸ்ட்ரிக்கு நடுவுல மெக்கானிசம்கிற சயின்ஸை நீங்களும் சரி, அந்தப் பண்டாரமும் சரி, நம்புறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. எவ்வளவு பெரிய முரண்!’’

``நிஜமா இது நல்ல கேள்வி பாரதி. ஆனா, எனக்கே என்ன பதில் சொல்றதுன்னுதான் தெரியலை.’’

``சரி, சீக்கிரம் வாங்க. அந்த புக் அங்கே இருக்கான்னு பார்க்கிறேன். இல்லைன்னா பெட்டிய உடைக்கிறோம்’’ என்ற பாரதி, கார் கத்திப்பாராவைக் கடப்பதை உணர்ந்தவளாக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையை இலக்காகத் தீர்மானித்து இயங்க ஆரம்பித்தாள். நல்லவேளை, பின்னால் பாட்டியிடம் ஆனந்தத் தூக்கம்.

அதன் பிறகு கார் அந்த பிளாட்பாரக் கடையை அடைந்தபோது அப்படி ஒரு புத்தகம் இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. பெட்டியைப் பற்றி அவனிடம் அப்போது பேச அவள் விரும்பவுமில்லை.

``என்னா புக் சொன்னே கண்ணு... கபடவியாதியா?’’

``கடபயாதி.’’

``என்னாவோ போ... சத்தியமா சொல்றேன், இப்படி ஒரு புக்கைப் பற்றி நான் கேள்விகூட பட்டதில்லை’’ என்றான் துரியானந்தம்.

``நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, ஒரு பண்டாரம் சொல்லி நான் வந்திருக்கேன். அந்தப் பண்டாரத்தைத்தான் உதைக்கணும்போல இருக்கு. சரி, நான் வரேன்’’ பாரதி சொன்னபடி காரில் ஏறப் போன சமயம், பஞ்சகச்சம் உடுத்திய ஒரு பிராமணர், கையில் பல பழைய புத்தகங்களுடன் துரியானந்தம் முன் வந்து நின்றவராய் புத்தகங்களை அவன் வசம் தந்தார். அதில் முதல் புத்தகமே கடபயாதிதான்!

- தொடரும்...