சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மணமகள் தேவை - சிறுகதை

மணமகள் தேவை  - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
மணமகள் தேவை - சிறுகதை

- எம்.ஜி.கன்னியப்பன்

அதிகாலை. அஜய் வீட்டு அழைப்புப் பொத்தானை அழுத்தாமல், டொக்...டொக்... டொக். மூன்று முறை விரல் மடக்கித் தட்டினேன். சில நொடிகளில், அன்றைய தினத்தின் முதல் கொட்டாவியை பிரசவித்தபடி கதவு திறந்த அஜய்க்கு 34 வயது. இருபதாண்டுக்கால நண்பன் என்கிற ஆகச் சிறந்த தகுதியும் பெருமையும் பெற்றிருக்கிறான் என்பதைத் தாண்டி… எளிமையாக ‘கொரோனா’ திருமணம் முடித்த கையோடு, கிடைத்த நெடிய ஊரடங்குத் தனிமையில், மனைவியை ஏழு மாத வளைகாப்புக்காக மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு… பிறக்கப்போகும் குழந்தைக்காகக் காத்திருப்பவன்.

‘‘என்னடா சீக்கிரம் வந்துட்டே?”வில், 40 சதவிகித தூக்கம் கலந்திருந்தது.

‘‘கொஞ்சமாச்சும் உனக்குப் பொறுப்பு இருக்கா… உன்ன நம்பித்தானடா எங்கம்மா ஒப்படைச்சிருக்காங்க...” இதைப் பல சமயம், பல நவரசங்களில் உபயோகித்துவிட்டதால், அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், சட்டையை உதறி மாட்டி, கடைசிப் பொத்தானைப் போட்டுக் கொண்டு, ‘‘வா… டீ குடிக்கப் போலாம்” என்றான். அதுவும் எனக்கு சரியாகப்பட்டது.

டீ சொல்லிவிட்டு அமர்ந்தவன், எண்ணெய் ஒழுக வடிகட்டியில் இருந்த மெதுவடை ஒன்றை ஆவி பறக்கக் கடித்து, சூடு தாங்காமல் வாயை அகலமாகத் திறந்து ‘ஆ… ஆ...’ என வெப்பத்தை வெளியேற்றினான்.

‘‘இங்க பாரு சுரேந்தரு… நைண்டி கிட்ஸுக்கு பொண்ணு கெடைக்கறது அவ்ளோ சுலபம் இல்ல. பார்த்தே இல்ல... நானே அஞ்சு வருஷம் நாய் மாதிரி நாக்கு தள்ள அலைஞ்சி, போனா போவுதுன்னு ஒரு புண்ணியவதி புருஷன்ங்கிற அந்தஸ்தைக் கொடுத்திருக்கா.”

மணமகள் தேவை  - சிறுகதை

‘‘உனக்குக் கெடைச்ச மாதிரி எனக்கும் ஒருத்தி இண்டு இடுக்குல இருப்பாதான… இனிமே ‘க்குவா… க்குவா’ன்னு பொறக்கவா போறா? டூ கே பசங்க மட்டும் எப்டிடா டென்த்ல லவ் பண்ணி, காலேஜ் போறதுக்குள்ளயே மேரேஜ் பண்ணிக்கிறானுங்க..?” என்றேன்.

‘‘அதான். அவனுங்களுக்கும் நமக்கும் இருக்கிற கெமிஸ்ட்ரி. எதிர்ல பொண்ணு வர்றான்னு குனிஞ்சி போன பசங்க நாம… இவனுங்க பொண்ணுங்க எங்க போறாங்கன்னு ஃபாலோ பண்ணி, என்னத்தையாவது கொரலி வித்தை காட்டி, அந்தப் பொண்ணுகிட்ட ஒரு ஸ்மைல் வாங்கிட்டுதான் திரும்பி வர்றானுங்க. இன்னொன்னு சொல்லட்டா... அவனுங்க ஹேர் ஸ்டைல் கலாசாரத்துக்கே நாம முப்பது வருஷம் பின்தங்கி யிருக்கோம்” என்றவன், துண்டு நியூஸ் பேப்பர் வாங்கி, கைகளைத் துடைத்துக்கொண்டான்.

அதே பேப்பரில் உதடுகளையும் ஒத்திக்கொண்டு, ‘‘இந்த ஜெனரேஷனுக்குக் காதல்ங்கிறது, மேகம் கறுத்து மழை மாதிரி இயல்பா நடக்குது. நமக்கு மேகத்த அள்ளிட்டு வந்து அதைப் பிழிஞ்சி தண்ணீர் எடுக்க நினைக்கிற மாதிரி ரொம்ப சிரமம்” சித்தர்களின் சித்தப்பா போல அவன் சொன்ன விளக்கத்திற்கு மையமாகச் சிரித்துவைத்தேன்.

அப்போது அஜய்க்கு வந்த செல் அழைப்பை எடுத்து, ‘‘மேட்ரிமோனில இருந்தா… யாரு, என் நம்பர் கொடு…” என்றவன் ‘‘த்தது..?’’ முடிப்பதற்குள் செல்லைப் பறித்தேன்.

‘‘சுரேந்தர் பேசறேன். சொல்லுங்க சார்..?” என்றேன்.

‘‘திருவெற்றியூர்ல ஒரு பொண்ணு இருக்கு. அப்பா இல்ல. அம்மா, பத்தாவது படிக்கிற ஒரு தம்பி மட்டும்தான். ஒரு பிரைவேட் கம்பெனில ஒர்க் பண்ணுது. மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம். வாட்ஸப்ல போட்டோ அனுப்பு றேன். புடிச்சிருந்தா சொல்லு, ஜாதகம் செட்டாச்சின்னா பேசி முடிச்சிடலாம்” என்றார்.

பெண் என்றதும் அவர் குரலில் லேசான தித்திப்பை உணர்ந்தேன். பதினைந்தாயிரம் சம்பளத்தில், தோளில் பேக் மாட்டிக்கொண்டு கீர்த்தி சுரேஷும், அபர்ணா பாலமுரளியும் கண் முன்னே கடந்து போனார்கள்.

“சார். இப்போ பேசிக் கிட்டிருக்கிறது என் செக ரெட்ரி யோட மொபைல். பொண்ணுங்க போட்டோஸ் அனுப்பறதுக்கு என் நம்பர் தர்றேன் அதுக்கு அனுப்புங்க” என்றதும் மிகக் கொடிய மிருகம் போல் என்னைப் பார்த்த அஜய்யிடம,

‘‘இல்ல நண்பா... பொண்ணு வீட்டுல ‘ட்ரூ’ காலர்ல போட்டுப் பாத்து வேற பேரு வந்தா நம்பகத்தன்மை கொறைச்சிருமில்ல, அதான்” என்றதில் சாந்தமும், சமாதானமும் உண்டாகாதவன் பல்லைக் கடித்து உள்ளுக்குள் முணுமுணுத்ததை மொழிபெயர்த்தால்… வேண்டாம். மிகக் கெட்ட சொற்கள்.

மணமகள் தேவை  - சிறுகதை

மேட்ரிமோனியல் நபரிடம் பேசிவிட்டு செல்லை அஜய்யிடம் நீட்டி… ‘‘எனக்குன்னு உன்னைத் தவிர யாருடா இருக்கா?” என்ற எனது சென்டிமென்ட் மூக்கு சுண்டல் அவனிடம் வேகவில்லை. வெடுக்கென்று பிடுங்கி வைத்துக் கொண்டான்.

அப்போது எனது பாக்கெட்டில் இருந்த கைப்பேசி ‘கண்டா வரச் சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்’கேவில் எடுத்தேன். அம்மாவின் அழைப்பு.

‘‘சொல்லும்மா…”

‘‘சுரேந்தரு... திருமணஞ்சேரிக்குப் போயிட்டு வந்தா உடனே பொண்ணு கெடைக்கும்னு எல்லாரும் சொல்றாங்கடா” என்றார். ‘`வேண்டாம்மா, அதெல்லாம் சும்மா கப்ஸா’’ என்றுவிட்டு, ஸ்பீக்கரை ஆன் பண்ணினால், உங்களுக்கே கண் கலங்கும் அளவுக்கு, ‘‘ஓ வயசுப் பசங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டாங்க. நீ மட்டும்தான்...’’ என்று ‘உறீச்... உறீச்’ சிந்தித் துடைக்க ஆரம்பிப்பார்.

“சரிம்மா… அதான் உன் ஆசைன்னா போலாம் விடு.”

வீட்டில் தலை துவட்டிக் கொண்டிருந்தவன், ‘‘என்னம்மா சொல்ற…?” என்றேன். அந்த அதிர்ச்சிக் கேள்விக்கு முன், ‘‘கோயிலுக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் வீட்டுல நான் வெஜ் பண்ண வேணாம்.” அம்மாவின் அந்த ‘ஹைவோல்டேஜ்’ தாக்குதல் கலங்கடித்தது. பின்னணியில் ஒற்றை வயலின் ஈய்ங் ஈய்ங் என்று சோகம் இசைத்தது. நானென்றாலும் பரவாயில்லை. அப்பாவை நினைத்தால்… ஐயகோ... தினம் ஐந்து ரூபாய் கடலை பர்ப்பி அளவுக்கேனும் ஒரு கறித்துண்டு வேண்டும். அதுவும் மீன் இல்லையென்றால் முறுக்கிக்கொண்டு மீனம்பாக்கம் வரை ஓடுவாரே. இந்தப் பேரிடியை எப்படித் தாங்குவார்.

அப்பா சோபாவில் அமர்ந்து அமைதியாக டிவி பார்த்துக் கொண்டி ருந்தார். ‘‘அப்பா… கோயிலுக்குப் போற வரைக்கும் வீட்ல கறி…” முழுதாக முடிக்கும் முன்,

‘‘நோ பிராப்ளம்... யூ மதர் ஆல் டீட்டெய்ல் புரொஸிட். ஐ மேனேஜ் இன் நான் வெஜ்” என்றார். அதாவது ‘கறி சாப்பிடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதாகும். அப்பா ஆங்கிலம் பேசுகிறார் எனில், ஆஃப் பாட்டிலில் பாதி திரவம் உள்ளுக்குள் இறங்கியிருக்கிறது. முழுதும் இறங்கினால் ஆன்மிக எதிர்ப்பு அரசியல் பேச ஆரம்பித்துவிடுவார். வேண்டாம். நிற்க வேண்டாம்.

சமையலறையில் இருந்த அம்மாவிடம் வந்தேன். விரல்களுக்கிடையே பிதுங்கப் பிதுங்க ரசத்துக்கான புளியைப் பிசைந்து கொண்டிருந்தார். ‘‘கோயிலுக்கு யாரெல்லாம் போறோம்?” என்றேன்.

‘‘நம்ம வீட்டுல நாம மூணு பேர்.”

‘‘இரு, நம்ம வீட்ல மூணு பேர்னா அப்றம் சொந்த பந்தமெல்லாம் கூப்புடுவியா?”

‘‘பின்ன... அவ்ளோ தூரம் போறோம். நாம மட்டுமா போறது? யாரையும் கட்டாயப்படுத்தல. வர்றவங்க வரட்டும்’’ என்றார்.

பின், பாட்டி, மாமா கோபித்துக் கொள்வார் என்று அத்தை, அத்தையை விட்டு இருக்க மாட்டார்கள் என்று அவரின் பேத்திகள் இருவர், பெரியப்பாவுக்காக அக்கா, ‘கோயிலுக்கு விட்டுட்டுப் போனோம்னு நாளைக்கு ஒரு சொல் வந்துடக் கூடாதுல்ல...’ அம்மாவின் அந்த ஒற்றை வார்த்தையில் கார், மினி வேனாக மாறியது.

ஒரு வழியாக திருமணஞ்சேரிக்கு ஒரு ஜாலி டூர். இருபத்தைந்தாயிரத்தைச் செலவு செய்துவிட்டு வந்து சேர்ந்தோம். வந்த இந்த ஆறு மாதத்தில் பொண்ணுக்கான வாசனைகூட அடிக்கவில்லை. நாள்கள் கடந்துகொண்டிருந்தன. அஜய் அவனது நண்பர்கள் சிலரிடம் சொல்லி வைத்ததில், நண்பன் ஒருவன் பல்லாவரம் வரச் சொன்னான்.

மறுநாள் காலை நானும் அஜய்யும் பல்லாவரம் சென்றோம். நண்பனை அறிமுகம் பண்ணி வைத்தான். ரெயில்வே ஸ்டேஷன் அழைத்துச் சென்று, ‘‘ஏ பெரியம்மா பொண்ணுதான். இப்ப ‘ட்ரெயின்’ ஏற வருவா. அவங்களுக்கும் எங்களுக்கும் கொஞ்சம் பிரச்னை. அதான் வீட்டுக்குக் கூட்டுப்போயி காட்ட முடியலை” என்றவன் கை நீட்டி, ‘‘அதோ... அந்தப் பொண்ணுதான்” தூரத்தில் வந்துகொண்டிருந்த புளூ கலர் சுடிதார் பெண்ணைக் காட்டினான்.

‘‘சுரே, பொண்ணு அம்சமா இருக்குடா. மிஸ் பண்ணிடாத” என்றவனின் அவசரம், ‘இப்போதே கூட்டிப் போய் மாலை மாற்றச் சொல்லிவிடுவான்’ போல இருந்தது. அவனைப் பொருத்தவரை என் கல்யாணக் கட்டுமானத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே.

‘‘இருடா... பக்கத்துல வரட்டும்” என்றேன்.

பக்கத்தில், அப்பெண் என்னைவிட வயது கூடுதல், உயரம் வேறு. ம்ஹும்... பிடிக்கவில்லை.

மீனா அக்கா ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினாள். திருமணம் ஒன்றில் எடுத்துக் கொண்ட படம் அது. குழுவாக முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். ‘‘மேல் மூணாவது வரிசைல நிக்குது பாரு. மெரூன் சுடிதார், அவதான். அந்த மெரூன் முகத்தைத் தேடிப் பெரியதாக இழுத்துப் பார்த்ததில் முகம் திட்டுத் திட்டாய்த் தெரிந்ததில் அழகைக் கணிக்க முடியவில்லை.

முருங்கைக்காயுடன் வந்த அம்மா, ‘‘மீனா… உன் ஆபீஸ்ல யார்ட்டையாவது சொல்லி வையேன்” என்றதில் சோகமிருந்தது. இரண்டு முருங்கைக்காய் வாங்கி வர மூன்று மணி நேரத்தை மார்க்கெட்டில் செலவழித்தார். அங்கு வரும் என் வயதொட்டிய பெண்களின் அம்மாக்களிடம் பேச்சு கொடுத்து மொத்த டீட்டெய்ல்ஸும் கலெக்ட் பண்ணுவதுதான் அம்மாவின் தற்போதைய வேலையாக இருந்தது. அதில், மகளைக் கட்டிக் கொடுத்து பேரப்பிள்ளைகளுடன் வந்த அம்மாக்கள் சிலரிடம்கூட ‘பெண் கேட்டுப் பார்க்கட்டுமா..?’ என்றதுதான் கொடுமை.

‘‘மேனேஜர் வரைக்கும் சொல்லி வெச்சிருக்கேம்மா. ஒரு தடவை காளகஸ்திக்குப் போயிட்டு வாங்க. ஏ மாமன் பொண்ணுக்கு அங்க போயிட்டு வந்த ஒரு வாரத்துல பேங்க்ல வேலை பாக்குற பையன் கெடைச்சான்னு சொன்னாரு” என்றாள்.

அம்மா என்னைப் பார்த்தார். என் முறைத்தலை பதிலாக வாங்கிக்கொண்டு... ‘‘நிறைய பேர் சொல்லி நானும் கேட்டிருக்கேன், இந்த வீட்ல ஏ வார்த்தைய யாரு மதிக்கிறா...” காளஹஸ்தி வரை இன்னொரு ஜாலி டூருக்கு அடிக்கல் நாட்டிவிட்டு விலகினார்.

‘‘ஆமாண்டா தம்பி... போயிட்டு வந்தாதான் என்ன, உனக்கும் சீக்கிரம் மேரேஜ் நடந்தாதானே எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்” என்றாள். 
‘‘இங்க பாரு... உன் கல்யாணப் பட்டுப் புடவைய என் கல்யாணத்துக்குக் கட்டிக்கிட்டு பந்தா பண்றதுக்கு என்ன அவசரப்படுத்தக் கூடாது. எல்லாருக்கும் புடிக்கிறது முக்கியமில்ல. எனக்கும் புடிக்கணும்.”

‘‘எஸ் மை சைட்டு மை அப்ரிசியேட்” என்றபடி மிக்சர் கவரைப் பல்லில் கடித்துப் பிரித்துக்கொண்டிருந்தார் அப்பா.

அதன்பின், எல்லோருடைய ஒட்டுமொத்தக் கோரிக்கையாக… ‘92 வயதான பாட்டி மூச்சு இருக்கும்போதே எனக்கு ஒரு திருமணம் பண்ணிப் பார்த்துவிட வேண்டும்’ என்பதை மையப்புள்ளியாக வைத்தார்கள். இப்படி திடீரென்று ஒரு சென்டிமென்ட் ஆயுதத்தை வீசுவார்களென்று ‘மைனஸ் பாயின்ட்’ அளவுக்குக்கூட நினைக்கவில்லை.

அதற்காகவே சொந்தங்கள் இதை ஒரு புராஜெக்டாகக் கையிலெடுத்து பெண் தேட ஆரம்பித்தார்கள். குழுவுக்கு இரண்டு பேர் வீதம், மூன்று குழுக்களாகப் பிரித்துக்கொண்டு, உறவினர்களின் ஊர்களுக்கு, அம்மாவின் வெற்றித்திலகத்தை நெற்றியில் வாங்கிக்கொண்டு, பஸ் பயணத்தை மேற்கொண்டனர். போக்குவரத்து மற்றும் உணவுச்செலவு என்னுடையது. குழுவினர் அனுப்பும் பெண்ணைத் தேர்வு செய்யும் குழுவில் அம்மா, நான், மீனா இடம்பெற்றோம்.

சுகுமாரி அத்தை அனுப்பிய காஞ்சிபுரம் பெண் போட்டோவை அம்மாவிடமும், மீனாவிடமும் காட்டினேன். ‘‘பொண்ணு நல்லா இருக்கு. ஜாதகம் வாங்கி அனுப்பச் சொல்லு” என்றார்கள்.

“நீங்களே சொல்லுங்க, ஸ்பீக்கர்ல போடுறேன்” ஸ்பீக்கரில் போட்டு ‘பேசுங்க...’ ஜாடை காட்ட…

‘‘அத்தை! பொண்ணு தம்பிக்கும் புடிச்சிருக்கும்போல. ஜாதகம் வாங்கி அனுப்புறீங்களா?” என்றாள் மீனா.

‘‘கேட்டேம்மா. அவங்க பையன் அடுத்த வாரம் ஜாமீன்ல வர்றானாம். வந்ததும் ஒரு வார்த்தை கேட்டுட்டுக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டாங்க.”

‘‘ஜாமீன்லயா, பொண்ணோட அண்ணன் ஜெயில்ல இருக்கானா?”

“ஆமாம். சின்ன வாய்த் தகராறுக்கு கோவத்துல டீ கடைக்காரனை வெட்டிக் கொன்னுட்டானாம். ஆனா பொண்ணு ரொம்ப தங்கமான குணம்.” கேட்டதும் வைப்ரேஷனுக்கு மாறினேன். அம்மா பீதியில் ‘வேண்டாம்’ என்பதுபோல் தலையாட்டினார்.

ஒரு குழுவின் தலைவியாக தனக்குத் தானே பொறுப்பு ஏற்றுக்கொண்ட மீனாவின் சின்ன மாமியாருக்கு போன் பண்ணினேன். ‘‘பொண்ணு வீட்லதான் பேசிட்டு இருக்கேன் தம்பி” என்றதில் உண்மையில்லை. தியேட்டரில் ‘சுல்தான்’ படம் பார்க்கிறார். பக்கத்து இருக்கையில் இருந்த யாரோ, ‘‘வெளிய போயி பேசும்மா… டயலாக்கே கேக்கல’’ என்பதில் புரிந்துகொண்டேன்.

‘‘இங்க பாரு சுரேந்தரு.. நா பாக்குற பொண்ணுதான் உனக்கு செட்டாகும்.’’ பெரியம்மா மகள் திலகா உறுதியாகச் சொன்னதில் முழுதாக நம்பினேன். அனுப்பிய பெண்களும் என்னைக் காட்டிலும் ‘பர்சனாலிட்டி’ கூடுதலாக இருந்தார்கள். தினம் பத்துப் பெண்களின் படங்களை அனுப்பிக்கொண்டே இருந்த திலகாவின் இடைவிடாத தேடலும், ஆர்வமும் கண்டு மெய் சிலிர்த்து, ‘இதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?’ என்று பொங்கிப் பேதலித்துக்கொண்டிருந்தபோதுதான், இடையிடையே நடிகைகள் அஞ்சலி, தமன்னா, திவ்யா போட்டோவும் வர ஆரம்பித்தது. ஆக, பெண்கள் படங்களை கூகுளில் டவுன்லோடு பண்ணி அனுப்புகிறார் என்ற விவரம் புரியத் தொடங்கியது.

‘‘இந்தப் பொண்ண ரொம்பப் பிடிச்சிருக்குடா. போன் நம்பர் கேளு... நேர்ல போய் பேசிட்டு வருவோம்.” தமன்னா போட்டோவைக் காட்டிக் காட்டி சிலாகித்தார் அம்மா.

பாட்டிக்கு வேறு இரண்டு முறை முடியாமல் மருத்துவம் பார்த்தோம். அதற்கும் காரணமாக என் திருமணத்தைச் சொன்னார்கள். ‘பெண் கிடைத்து மாலையும் கழுத்துமாகப் போய் நின்றால், இருபது ஆண்டுகளாகப் படுக்கையில் சுருண்டு கிடக்கும் பாட்டி, சந்தோஷத்தில் அடுத்த நாளே எழுந்து லன்ச் பேக் மாட்டிக்கொண்டு வேலைக்குக் கிளம்பி விடுவார்’ என்கிற ரேஞ்சுக்குப் பேசிக் கொண்டார்கள்.

அதிலும், அம்மாவின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது. இரவு தனக்கு நடத்திக்கொண்ட வாட்டர் சர்வீஸில் மயக்கம் தெளியாமல் படுத்துக் கிடந்த அப்பாமீது ஒரு குடம் தண்ணீரைக் கொட்டித் தொப்பலாக நனையவிட்டு, மஞ்சள் வேட்டி, மஞ்சள் துண்டு, மாலை சகிதமாக கோயில் முன் நிறுத்தி, 24 அடி நீள வேல் கம்பி அலகை ஒரு கன்னத்தில் செருகி இன்னொரு கன்னத்தில் இழுக்கும் வரை அப்பாவுக்கு நடக்கப்போவது தெரியாமல், வேல் கம்பியை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார்.

‘‘நல்லபடியா திருமணஞ்சேரி போயிட்டு வந்தா அப்பாவுக்கு வேல் அலகு குத்துறதுன்னு வேண்டிக் கிட்டேன்டா” என்றார் அம்மா. எதையும் கண்டுகொள்ளாமல் விலகியே இருந்த அப்பாவுக்கு இப்படியொரு விபரீதம்.

எனக்குத்தான் மனசு கேட்கவில்லை. வாயில் அலகுடன் நின்ற அப்பாவுக்கு மட்டும் புரியும்படி ‘கட்டிங்’ என்பதுபோல் விரலைக் காட்டி ‘‘வேணுமாப்பா…?” என்றேன். தலையாட்டினார். ‘வேண்டாம்’ என்கிறாரே என்று வியந்தேன். 4 மணி நேரத்துக்குப் பிறகு வாயிலிருந்த வேல் பிடுங்கப்பட்டதும்தான் தெரிந்தது, அது ‘வேண்டும்’ என்பதற்கான தலையாட்டல்தானாம். என் மர மண்டைக்குத்தான் அது புரியவில்லை.

அம்மாவின் வற்புறுத்தலால், சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு நெய் விளக்கேற்றுவது, பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு வடை, கருமாரிக்கு உப்பு, மிளகு... புத்து மாரிக்கு பால், முட்டை... விநாயகருக்கு வெண் பொங்கல் என மெனு லிஸ்ட் நீண்டுகொண்டே சென்றது. குறி கேட்பது முதல் வெற்றிலையில் மை போட்டுப் பார்ப்பது வரையும், சோழி முதல் சொக்கட்டான் வரை உருட்டியும் பார்த்தாயிற்று… வீண் அலைச்சலும் நேரமும்தான் விரயமானது. அதற்கான செலவில் இட்லி, தோசை, பொங்கல், கேசரி, காபியுடன் சிம்பிளாக ஒரு திருமணம் முடித்திருக்கலாம். மாதங்கள் கடந்தன. பேங்க் பேலன்ஸ் குறைந்தது. பெண் தேடும் மகளிர் குழுக்களும் ஆர்வமிழக்காமல் போட்டோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

‘அண்ணே... அண்ணே...’ என்று பின்னால் வலம் வந்த பொடியன்கள் பொசுக் பொசுக்கென்று திருமண அழைப்பிதழை நீட்டி ‘‘அவசியம் வந்துருங்க. நீங்கதான் முன்ன நின்னு ஏ மேரேஜை நடத்தி வைக்கணும்’’ என ஊர்ப் பெரியவர் ரேஞ்சுக்கு என் கையில் பத்திரிகையைத் திணித்துவிட்டுப் போனார்கள்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போயிற்று. ‘என்னடா இந்த சுரேந்தருக்கு வந்த சோதனை..?’ திருமணமே வேண்டாம் என்கிற எண்ணம்கூட அவ்வப்போது தோன்றி மறைந்தது. அந்த மன அழுத்தத்தைப் போக்க எங்காவது தனியாகச் சென்று வரலாமெனத் தோன்றியது. அஜய்யிடம்கூடச் சொல்லாமல் நான்கு பேன்ட் ஷர்ட்டுடன் கிளம்பிவிட்டேன்.

முதல் நாள் பாண்டிச்சேரி… மிகவும் ஆறுதலாக இருந்தது. இரண்டாம் நாள் கும்பகோணம். அது ஒரு ஆசிரமத்துடன் இருந்த கோயில். அமைதியாக இருந்தது. என்னைப்போன்ற இளைஞர்களுடன், முதியவர்களும், நடுத்தர வயது ஆண்களும், பெண்களும் அமர்ந்திருந்தனர். எல்லாருடைய முகங்களிலும் இனம்புரியாத கலவரம்.

உள்ளே நுழைந்தபோதே மஞ்சளாடை உடுத்திய ஆங்கிலேயன் கை காட்டி ‘கோ டூ ரைட் சைட்’ என்றான். அங்கிருந்த ஆண்கள் வரிசையில் அமர்ந்தேன் ஆங்கிலேயனைப் போலவே பல இளைஞர்களும் இளைஞிகளும் மஞ்சளுடையில் ஆங்காங்கே தென்பட்டார்கள். ‘ஏதோ பிரசங்கம் நடக்கப்போகிறது. இறுதியில் வெண்பொங்கலும் சுண்டலும் உறுதி’ என்று மட்டும் தெரிந்தது.

அப்போது ஓர் இளம்பெண் வந்தாள். மஞ்சள் நிறப் புடவை அணிந்து நெற்றியில் பட்டையாய்ப் பூசிய திருநீற்றுக்கு நடுவே குங்குமம் இட்டுக்கொண்டு, கழுத்தில் சிறிதும் பெரிதுமாக ருத்திராட்ச மாலைகள் அணிந்திருந்தாள். பேரழகியாய் இருந்தாள். அந்த இடத்தில் கொஞ்சமும் எதிர்பாரத அழகு. எத்தனையோ மஞ்சள் சேலைகளுக்கிடையே அவள் மட்டும் அமைதியாய், தனியாகத் தெரிந்தாள்.

கையிலிருந்த கற்றை அப்ளிகேஷன்களை ஒவ்வொருவருக்கும் விநியோகித்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதுமாறு புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள்.

என்னிடமும் நீட்டினாள். பார்த்தேன். அவள் இரண்டு விழிகளிலும் பிரகாசம் தெரிந்தது. புன்னகைத்தாள்; பதிலுக்கு நானும். ஐந்தாவது நொடி அடுத்த ஆளை நோக்கி நகர்ந்திருந்தாள். அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தது போல வேறு யாரிடமும் அப்படி ஒரு ஈர்ப்பான புன்னகை புரியவில்லை என்று தோன்றியது.

அப்ளிகேஷனைப் பார்த்தேன். ‘ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரா? கடவுள் காலடியில் சரணடைந்து பொதுத் தொண்டு புரியும் நோக்கம் இருக்கிறதா? முழுக்க ஆசிரம வாழ்க்கைக்கு சம்மதமா? எதனால் எங்கள் ஆன்மிக இயக்கத்தில் இணைகிறீர்கள்…?’ போன்ற பல கேள்விகள் அதில் இருந்தன.

மணமகள் தேவை  - சிறுகதை

திரும்பி வரிசையில் அப்பெண்ணைத் தேடினேன். கடைசியில் ஒருவருக்குக் கொடுத்துவிட்டுச் சென்றவள்… என்னையா… என்னைத்தான்… என்னையேதான் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்துச் சென்றாள். ஆன்மிகத்தில் அர்ப்பணித்துக்கொண்டவர்களின் ‘ரெடிமேடு’ புன்னகையிலிருந்து மாறுபட்டி ருந்தாள்.

அடுத்த அரை மணி நேர அவகாசத்துக்குப் பிறகு, கொடுத்த அப்ளிகேஷன்களைப் பெற்றுக் கொள்ள வந்தாள். எல்லாவற்றிலும் ஏதேதோ எழுதிவிட்டு, ‘எதனால் ஆன்மிக இயக்கத்தில் இணைகிறீர்கள்?’ என்ற இடத்தில் ‘பெண் கிடைக்காத விரக்தியில்’ என்று எழுதியிருந்தேன். என் அப்ளிகேஷனை வாங்கி, குறிப்பிட்ட அந்தக் கேள்விக்கான பதிலைப் பார்த்துப் புன்னகைத்தவள், ‘‘என்னை ஞாபகம் இருக்கா?” என்றாள்.

‘‘இல்லை” என்று தலையாட்டினேன்.

‘‘செவ்வாய் தோஷம்னு உங்க வீட்டுல என்னை நிராகரிச்சிட்டாங்க… உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்திச்சி தெரியுமா..?” என்றாள்.

‘இவளையா… இந்த தேவதையையா நிராகரித்தது. நிராகரித்த இந்த உலகமே எரிந்து நாசமாகப் போகட்டும்.’

சாபம் விட்ட நேரத்தில், நினைவு வந்தது. ‘‘உளுந்தூர்ப்பேட்டை பெண்” என்றேன்.

‘‘எஸ்” என்றாள்.

‘‘நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க. எதுக்குங்க இங்க வந்து சேர்ந்தீங்க?” என்றேன்.

“உங்களுக்குப் பெண், எனக்கு மாப்பிள்ளை. மாப்பிள்ளைத் தேடி வெறுத்துப்போச்சி. வந்து சேர்ந்துட்டேன். நம்ம ஜாதகம் மட்டும் ஒத்துப் போயிருந்தா ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி ஒன்பது மாசமாகியிருக்கும்” என்றாள்.

பட்டாம்பூச்சிகளும், மெல்லிய மழைத் தூறலும், இளையராஜா காதல் பாடலுக்கும் சம்பந்தமில்லாத அந்த இடத்தில் எல்லாம் நிகழ்ந்தன.

அவளிடமிருந்து எனது அப்ளிகேஷனை வாங்கிக் கிழித்தேன்.

‘‘என்னாச்சிங்க?” என்றாள்.

“பெண் கிடைச்சிட்டாங்க” புன்னகைத்தேன்.

“அப்புறம் இங்க எதுக்கு வந்தீங்க?”

‘‘வந்ததாலதான் கிடைச்சாங்க…” என்றேன்.

என் பதிலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள், தனது ருத்திராட்ச மாலையைக் கழற்ற ஆரம்பித்தாள்.