கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

பயணம்: சிறுகதை

பயணம்: சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
பயணம்: சிறுகதை

ஒருவேளை முன்பதிவு செய்து ஏ.சி பெட்டியில் பயணிப்பவர்களுக்கான சிரிப்பாக இருக்கக்கூடும்! விசித்திரமாக உணர்ந்தேன்

முத்து நகர் எக்ஸ்பிரஸ் புறப்பட இன்னும் 10 நிமிடங்களே இருந்தன. அழைத்து வந்த நண்பன் அநியாய பைக்ரேஸ் பிரியன். ரயில் நிலையம் இருக்கும் 2.5 கி.மீ தூரத்தை இரவு நேரப் போக்குவரத்து நெரிசலில் அநாயசமாகக் கடந்துவந்து ரயில் நிலைய வாசலில் விட்டுச்சென்றான். அவனைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் என் கால்கள் பயணச்சீட்டு வாங்க விரைந்தன. முன்பதிவில்லா டிக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு நடைமேடையில் ஓடத் தொடங்கினேன். டிசம்பர் மாதக் குளிர் முகத்தில் அறைந்தது. பெரும்பாலானோர் பெட்டிகளுக்குள் அடைந்துவிட்டனர். ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தேன். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டியின் வாசலில் என் வயதையொட்டிய அழகிய பெண் ஒருத்தி காத்திருந்தாள். வாசலருகே நின்றிருந்த சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வட்ட முகம், நூறு கத்தரிப் பூக்கள் கொண்டு செய்த முகம், ஆயிரம் நிலவைச் சேர்த்துப் பார்த்த பிரகாசம், கரிய இமைகளுக்கிடையில் பழுப்பு நிற விழிகள், பருமன் எனச் சொல்லிவிட முடியாத உடல் வாகு. ‘டிங்க், டிங்க், டிங்க்’ என மூன்று குறுஞ்செய்திகளுக்கான ஒலி என் கைப்பேசியில் ஒலித்தது. எவ்வளவு அவசரத்திலும் அதை எடுத்துப் பார்த்துவிடும் பழக்கம் இருந்தது. தலை கவிழ்த்து கைப்பேசியை எடுக்கும்போது, அவள் என்மீது வந்து மோதினாள். இதுவென்ன ஈர்ப்பு விசையா? நான் நிமிர்ந்து பார்த்து, “சாரி” என்றேன். என்ன எண்ணினாளோ, பல்லைக் கடித்துச் சிரித்துவிட்டு, என்னைக் கவனிக்காதது போல ரயில் பெட்டியினுள் நுழைந்தாள். அவள் சிரிப்பில் நாணம் இல்லை; பெண்களுக்கே உரிய சிரிப்பும் இல்லை.

ஒருவேளை முன்பதிவு செய்து ஏ.சி பெட்டியில் பயணிப்பவர்களுக்கான சிரிப்பாக இருக்கக்கூடும்! விசித்திரமாக உணர்ந்தேன். முகத்தைத் திருப்பிச் சுழித்துவிட்டு தொடர்ந்து நடந்தேன். முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டிக்குள் தவறுதலாக ஏறிவிட்ட மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டுக் கொண்டிருந்தார். கல்லூரித் தோழனிடமிருந்து `புறப்பட்டாச்சா' என்றும், ஊரில் இருக்கும் நண்பர்களிடமிருந்து `சேஃப் ஜர்னி' வாழ்த்துகளும் குறுஞ்செய்திகளாக வந்திருந்தன. வழக்கமான செய்திகள், வழக்கமான புன்சிரிப்புடன் கடந்துவந்தேன். நேரம் 8 மணியை எட்டிவிட்டது. நடைமேடையின் கடைசியில் இருக்கும் முன்பதிவில்லாப் பெட்டிக்கு விரைந்தேன்.

8 மணிக்குத் தூத்துக்குடியிலிருந்து புறப்படும் முத்து நகர் எக்ஸ்பிரஸ், நள்ளிரவு 1 மணிக்கு திருச்சியைச் சென்றடையும். அங்கிருந்து அதிகாலை 3 மணிக்குத் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸில் தஞ்சாவூர் சென்று, மீண்டும் உள்ளூர் வண்டியில் திருவாரூர் செல்வதுதான் என் பயணத் திட்டம். ஏதேனும் ஒரு ரயிலை விட்டுவிட்டாலும் அதிக பணம் கொடுத்துப் பேருந்தில் செல்ல நேரிடும்.

முன்பதிவு செய்யாமல் பயணிப்பவர்களுக்கு ரயிலின் முன்பக்கத்தில் இரண்டு பெட்டிகளும், கடைசியில் இரண்டு பெட்டிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. கடைசிப் பெட்டிகள்தான் இலக்கு. ஒரு பெட்டிக்கு மூன்று வாசல்கள். முதல் வாசலும் கடைசி வாசலும் கழிப்பறைக்கு அருகில்தான் இருக்கும். அவற்றில் ஏறுவது பயணத்தை ரணமாக்கிவிடும். நடுவாசலின் முதல் படியில் காலெடுத்து வைத்தேன்,

“இங்க இடம் இல்லப்பா தம்பி...” - வாசலில் நின்றுகொண்டிருந்த 30 வயது இளைஞரிடமிருந்து நான் ஏறுவதற்கு மறுப்பு வந்தது.

பயணம்: சிறுகதை

“அட்ஜஸ்ட்பண்ணிக்கிறேன்” என நானும் அவரை மறுத்துவிட்டு இடது காலை எடுத்து வைத்தேன்,

“அடுத்த பெட்டியில் வாப்பா…” எனப் பின்னிருந்து இன்னொரு குரலும் வந்தது.

மற்ற வாசல்களில் ஏறிவிடக் கூடாது என்பது அழுத்தமான முடிவாக இருந்தது. அதனை மாற்றிக்கொள்ள முடியாது. கடைசிப் பெட்டிக்குச் சென்று ஏற முயன்றேன். “இங்கயே நிக்க இடம் இல்லாம நிக்கிறோம்…” எனக் கூறியவாறு என் தோளில் கைவைத்துக் கீழே தள்ளினார், சக பயணி. கோபம் பொத்துக்கொண்டுவந்தது. மேகம் சூழ குடிகொண்டிருந்த காரிருளையும், டிசம்பர் மாதக் குளிரையும் கிழித்துக்கொண்டு ரயில் விருட்டெனக் கிளம்பியது. வேறு வழியின்றிக் கடைசி வாசலில் ஏறிக்கொண்டேன். படியில் அமரத் திட்டம் போட்டிருந்த இருவர் என்னை உள்ளே செல்லக் கேட்டுக்கொண்டனர். கழிப்பறையை ஒட்டிய இருக்கைகளுக்கு இடையில் நிற்க இடம் கிடைத்தது. இருக்கைக்கும் கழிப்பறைக்கும் நடுவே 12 பேர் நின்றுகொண்டிருந்தோம். ரயில் நிலையத்தைக் கடக்கும்போது ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். அந்த மூதாட்டி ஓடிவந்து ஏறிக்கொள்ள இயலாமல், ரயிலை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடம் பாவப்பார்வையை வீசிவிட்டு உள்ளே திரும்பினேன். கிழவர் ஒருவர் தரையில் அமர்ந்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எத்தனை வயதானவராயினும் குழந்தையாயினும் தூத்துக்குடியில் பரோட்டாதான் இரவில் விருப்ப உணவாக இருக்கும். ஓடும் ரயிலில், சுடச்சுட பிய்த்துப் போட்டு, காரசாரமான சிவப்பு சால்னா ஊற்றி ஊறவைத்துச் சாப்பிடும் ஒப்பில்லாப் பேரானந்தத்தை, முன்பதிவு செய்து நெருக்கடியின்றி வருபவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவரும் பலரின் கால்களுக்கு இடையில் கழிப்பறை நாற்றத்திலும் அமர்ந்து ஆனந்தமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

நெரிசல் அதிகமாக இருந்தது. எல்லோரும் அவரவர் இடத்தில் சற்று அமைதியாக நின்றுகொண்டிருந்தனர். கழிவறை நாற்றத்தைத் தவிர்க்க உள்பக்கம் தள்ளி நிற்கலாம் என எண்ணி, உள்ளே திரும்பி மேலும் கீழும் பார்த்தேன்.

ஐந்து அடி தூரத்தில், மாநிறத்தில் தேவதை ஒருத்தி, கோயில் மேலிருக்கும் கலசம்போல இருக்கைக்கு மேலே இருக்கும் பொருள்கள் வைக்கும் பரண்மீது அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ரயிலுக்கு வெளியில் இருக்கும் காரிருளின் ஒரு துளியை எடுத்துக் கருவண்ணம் பூசியிருந்த கண்கள், சாக்லெட்டில் ஸ்ட்ராபெர்ரி கலந்த பாக்கு மிட்டாய் நிற உதடுகள், சிறிய உள்ளீடற்ற தக்காளிப்பழக் கம்மல் காதோடு ஒட்டியிருந்தது. அதற்குப் பொருத்தமான அரக்கு நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். துப்பட்டாவை ஒரு பக்கமாகப் போட்டு பின் குத்தியிருந்தாள். மேலே இடம் கிடைப்பது கடினமான விஷயம்தான். குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்பே அவள் வந்திருக்க வேண்டும். எனினும் அவளுடன் இன்னும் இருவர் அந்த இடத்தைப் பகிர்ந்திருந்தனர். பரண் மேலே இருந்தாலும் தலை நிமிர்ந்து அமர்ந்திருந்தாள். ஐந்து அடிக்கு உள்ளாகத்தான் உயரம் இருக்க வேண்டும்.

நான் `ஹாய்' சொல்லும் பாணியில் சிரித்தேன். கண்களையும் உதடுகளையும் விரித்து கையைத் தூக்கிச் சிரித்தாள். முதுகில் இருந்த பையைப் பக்கத்தில் இருந்த கொக்கியில் தொங்கவிட்டேன். ரயில் 100 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. குறுஞ்செய்திகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கினேன். ரயில் புறப்படும்போது சாப்பிடத் தொடங்கிய கிழவர், கிட்டத்தட்ட முடித்துவிட்டார். அவளுக்குக் கீழே இருக்கையில் உட்கார்ந்திருந்த கிழவி, ஒரு வாழைப்பழத்தை எடுத்து அவளிடம் நீட்டினாள். அவள் வேண்டாம் என மறுத்தாள். கிழவி வற்புறுத்தவே வாங்கி, அருகில் வைத்துக்கொண்டாள். நான்கு நபர்கள் அமரும் இருக்கையில் கிழவி ஐந்தாவதாக அமர்ந்திருந்தாள், அனேகமாக அவளது பாட்டியாக இருக்க வேண்டும். மேலும், கிழவி வேறு யாருக்கும் பழத்தைக் கொடுக்க முனையாததால், இவர்கள் இருவர் மட்டுமே வந்திருக்க வேண்டும்.

அவள் அவ்வப்போது பக்கத்தில் இருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டாள். நான் அவளையும் அவள் என்னையும் அடிக்கடி பார்த்துக்கொள்வது தொடர்ந்தது. தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கிழவர் எழுந்து, இன்னொருவரை அந்த இடத்தில் அமர்ந்து சாப்பிட வைத்தார். அவர் புரோட்டாப் பொட்டலத்தைப் பிரித்ததும் அதிலிருந்து வந்த மணம் வெளியில் செல்ல வழியில்லாமல் சுற்றியிருந்தவர்கள் மூக்கில் இடம் பிடித்தது. ஏறத்தாழ அனைவருமே அவரைத் திரும்பிப் பார்த்தனர். என்னுள் ஒளிந்துகொண்டிருந்த பசி, அதன் கோரப்பற்களைக் காட்டியது. அதன் உருமல் சத்தம் வயிற்றில் கேட்டது. இடது பக்கம் அந்தப் பெண்ணையும் வலதுபக்கம் புரோட்டாவையும் மாறி மாறி தரிசித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்திலேயே பயணம் சலிக்கத் தொடங்கியது. கடம்பூர் நிலையத்தில் முறுக்கு, வேர்க்கடலை வியாபாரிகளும் உள்ளூர்ப் பயணிகளும் இறங்கிக்கொண்டனர். சிலர் ஏறவும் செய்ததால், லேசான சலசலப்பு ஏற்பட்டது. ரயில் கடம்பூரிலிருந்து கிளம்பும்போது பேரமைதி. கூட்ட நெருக்கடியில், கழிவறை நாற்றத்தில் அமைதியின் தாக்கம் கொடூரமாக இருந்தது. அதிலிருந்து தப்பி பாடகர் பிரதீப் குமாரின் பனிபடரும் குரலுக்குச் செவிசாய்க்க முடிவெடுத்தேன்.

மோகத்திரை, கண்ணம்மா, அவள், ஆசை ஒரு புல்வெளி எனப் பாடல்களைச் செவிகளுக்கு அல்லாமல் ஆன்மாவுக்கு அளிக்கும் திறன் பிரதீப் குமாருடையது. அவர் குரலுடன் சந்தோஷ் நாராயணன் இசை செய்யும் விந்தையை வார்த்தைகளால் விளக்க முடியாது. என் கால்கள் தன்னையறியாமல் தாளம் போட்டன. என் காதுகளுக்கும் எட்டாத ஓசை என் தொண்டையிலிருந்து வார்த்தைகளற்ற பாட்டாக வந்தது.

மூன்று வாழைப் பழங்களை உள்ளே தள்ளிவிட்ட கிழவி, சிறிது நேரம் அங்கும் இங்குமாய் அசைந்து பார்த்தாள். பின் எழுந்து கழிப்பறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். மறைந்து ஒளிந்து சிரித்துக்கொண்டிருந்தவள், கிழவி போனதும் மேகம் விளக்கி பிரகாசிக்கும் நிலவைப்போல வெளிப்படையாகச் சிரித்தாள். மொட்டின் வெளியில் ஓட்டிக்கொண்டிருக்கும் மகரந்தம்போல காத்திருந்தாள் போலும். நானும் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு இரவு நேர சூரியகாந்திப் பூப்போல தலை குனிந்துகொண்டேன். அந்தக் குளிர் நேரத்தில் அச்சிரிப்பின் உஷ்ணம் தந்த சுகம் சொல்லி மாளாது!

தங்கக்கட்டிகள் இரண்டினை உரசும் குரலில் அவளே கேட்டாள், “எங்க போறீங்க?”

“திருச்சி, காலேஜுக்கு” - என் குரல் அவள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. உதட்டசைவில் புரிந்துகொண்டு பதிலளித்தாள், “சென்னை - வீட்டுக்கு. ரிலேட்டிவ் வீட்டுக்கு வந்திருந்தேன்” என்றாள்.

மதம் பிடிக்க சரியான நேரம் பார்த்துக் காத்திருந்த யானைபோல, வெளியே கருத்துக் காத்திருந்த மேகம், மழையாக வந்து ரயிலைக் கவ்விக்கொண்டது. வாசல் நனைந்தது. வாசலிலும் சன்னலிலும் நீர் வழியத் தொடங்கியது. சன்னல்களும் கதவுகளும் அடைக்கப்பட்டன. கழிவறை நாற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. ஐம்பது பேர் பயணிக்கும் இடத்தில் இருந்த நூற்றியிருபதுக்கும் மேற்பட்டோரும் ஒருசேர மழையை வெறுத்தோம். ஆயினும் தொடர்ந்து மழை பொழிந்தது. சுடச்சுட புரோட்டாவிலிருந்து வந்துகொண்டிருந்த வாசனையைத் தேடினேன். பாதி காலியாகியிருந்தது. பொட்டலத்தின் பாதி இலையில் புரோட்டாவும், பாதி இலையில் அருகில் நின்றவர் செருப்புக் காலும் இருந்தன. தான் இன்னொருவரின் உணவில் கால் வைத்திருப்பதுகூடத் தெரியாமல் அவர் நின்றிருந்தார். மழையால் கதவுகள் அடைக்கப்பட்ட போது கூட்டம் அதிகரித்ததனால் இப்படி நேர்ந்திருக்க வேண்டும். எனினும், கிழவர் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தார். அவர் சாப்பிட்டார் என்பதைவிட அவரின் பசி அதன் கோரப்பற்களால் கவ்வியது எனலாம். சட்டென தன்னை யாரேனும் கவனிக்கிறார்களா எனச் சுற்றிப் பார்த்த பெரியவர், என்னைப் பார்த்துவிட்டார். என்னைப் பார்த்து துன்பம் தோய சிரித்தார். என்ன அர்த்தம் அச்சிரிப்புக்கு?

அங்கே அவரைத் தவிர யாரும் தரையில் உட்கார்ந்திருக்கவில்லை. எனினும், உணவின் மேல் வைத்திருந்த காலை அவர் எடுக்கச் சொல்வதில் தவறில்லை. மழை வந்ததால் இவர் சாப்பிடக் கூடாதா? கூட்டம் அதிகரித்ததால், உட்கார்ந்து சாப்பிடுவது இவருக்குக் குற்ற உணர்வினை ஏற்படுத்த வேண்டுமா? இலையில் வைத்திருக்கும் காலை எடுக்கச் சொல்லும் துணிவுகூட அவருக்கு இல்லாமல்போனது ஏன்? எளிய மக்களின் அனுசரிப்புக்கு எல்லையே கிடையாதா?

இதே நொடியில், இரண்டு பெட்டிகளுக்கு முன்னால் உண்டு முடித்து, கை கால்களை நெளித்துக் கொண்டிருப்பவர்களையும், பத்துப் பெட்டிகளுக்கு முன்பாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டியில் கம்பளிகளை இறுக்க மூடியிருப்பவர்களையும் நினைத்துக் கொண்டேன். இலையில் கால் வைத்திருந்தவரை விலகி நிற்கச் சொன்னேன்.

மழைக்கு ஏற்ப குளிரும் அதிகரித்தது. கதவோரங்களில் நின்றிருந்தவர்களின் நிலை சொல்லி மாளாது. அவர்கள் கொஞ்சம் நனைந்திருந்தனர். கற்பனை செய்து பாருங்கள்... கை கால்களை அசைக்க முடியாத நெருக்கத்தில் கால் கடுக்க நின்றுகொண்டிருக்கிறீர்கள். கழிவறை நாற்றம் குடலைப் புரட்டுகிறது. கண்ணுக்கு முன் பத்து பதினைந்து மனிதத் தலைகளைத் தவிர, வேறு எதையும் காண முடியாத சிறை. உங்கள் சட்டை பாதி நனைந்திருக்கும். அவ்வப்போது நெரிசலில் ஒருவர் உங்கள் மீது வந்து மோதிக்கொண்டிருப்பார். வெளியே ஒரு மாமழை மொத்த உலகையும் குளிர வைத்துக்கொண்டிருக்கும்!

எனக்கும் நெரிசல் அதிகரித்தது. நான் இருந்த இடத்தை இன்னொருவருடன் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் விலகி நின்று நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்,

“மழை” எனக் கைகளை அசைத்து முகத்தைச் சுளித்துக் கூறினாள்.

அவளுக்கும் இந்த மழை பிடிக்கவில்லை. எனக்கும்தான். நான், `என்ன செய்வது' எனக் கூறுவதுபோல தோள்களைக் குலுக்கினேன்.

பயணம்: சிறுகதை

நான் ரயில் நிலையத்தின் வாசலில் பார்த்த பெண், இந்த மழையை அழகாக ரசித்துக்கொண்டிருப்பாள். ஆனாலும், மழை என்றால், எல்லாப் பெண்களும் விரும்பி விடுவார்களா என்ன?

கோவில்பட்டி, சாத்தூர் கடந்து விருதுநகர் வரும் வரை மழையின் கசகசப்பு தொடர்ந்தது. புதிதாக ஏறிய பயணிகளும் லேசாக நனைந்திருந்தனர். வாழைப்பழம் விழுங்கிய கிழவி இரண்டு முறை கழிவறைக்குச் சென்று வந்தாள். விருதுநகர் வந்து சேர 10:45 ஆனது. விருதுநகரில் யாரும் இறங்கவில்லை. எனினும் சிறு கூட்டம் ஏறிக் கொண்டது. மழை நின்றதால் சிலர் படிகளில் தொற்றிக்கொண்டனர். சென்னை வரையிலும் இந்த நிலை தொடரும். இறங்குபவர்களைவிட ஏறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும்.

விருதுநகரில் ஏறியவர் களையும் சேர்த்து நெருக்கடி இன்னும் அதிகரித்தது. ஏற்கெனவே நனைந்திருந்தவர், படியில் இருந்தவர்களை உள்ளே வரவிட்டு அவரது ஜீன்ஸ் உடையை உலர்த்திக்கொண்டே வந்தார். படியில் இருந்தவர்கள் உள்ளே வரவும் எனக்கு நெருக்கடி இன்னும் அதிகரித்தது. என் முகச்சுளிப்பைப் பார்த்து மேலே இருந்தவள் லேசாகச் சிரித்தாள். என் இடத்தை மேலும் ஒருவருடன் பகிர வேண்டி இருந்ததால், அப்போது ஒரு கால் மட்டுமே தரையில் வைக்க இடம் இருந்தது. ஒரு காலை வைப்பதற்கு இடம் இல்லாமல் தவித்தேன். என் தவிப்பைப் பார்த்துச் சிரித்தாள். வாழ்க்கையில் பலமுறை என் துன்பங்களைப் பார்த்து மேலிருந்து கடவுள் சிரிப்பதாய்க் கற்பனை செய்து கொண்டிருந்திருக்கிறேன். ஒருவேளை கடவுள் இருந்தால், அவர் சிரிப்பும் இவள் சிரிப்பைப் போன்றுதான் இருக்கும்.

கிழவி மீண்டும் கழிவறை செல்ல எழுந்தாள். கூட்ட நெரிசலில் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாமல் தோல்வியுற்று மீண்டும் அமர்ந்துவிட்டாள். எல்லோர் முகத்திலும் ஒருவித எரிச்சலுணர்வு படர்ந்திருந்தது. அருகில் இருப்பவர்களை ‘கொஞ்சம் இடம் கொடுத்தால் தங்கள் இடத்தைப் பிடித்துவிடுவார்கள்’ என எண்ணினர். உண்மையில் இன்னும் கொஞ்சம் இடம் கிடைத்தால், யார் தலைமீதும் ஏறி அமரத் தயாராக இருந்தனர். அத்தனை வலி எல்லோரது கால்களிலும் ஊறி இருந்தது. வயதானவர்கள் குத்த வைக்கவும் நிற்கவுமாக நேரத்தைக் கடத்தினர். எனினும், அவர்களின் முகம் அத்தனை எரிச்சலுடன் இல்லை. தங்களுக்குள் பேசிக் கிசுகிசுத்துக்கொண்டனர்.

நானோ ஒற்றைக் காலை மாற்றி மாற்றி நின்றுகொண்டிருந்தேன். கண்கள் அவளையும் கைப்பேசியையும் மாற்றி மாற்றித் துழாவின. எதேச்சையாகப் பார்த்தபோது கண்களை உருட்டிக் காட்டினாள். ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. என்னவென்று தெரியாததனால் வெறுமனே புன்னகைத்துவிட்டுக் குனிந்துகொண்டேன்.

“இஸ்ஸ்…” லேசாக சத்தமிட்டு அழைத்தாள்.

என் கண்களையும் புருவத்தையும் உயர்த்தி “என்ன?” என்று கேட்டேன்.

கண்களை மீண்டும் உருட்டினாள்... புரிந்தது. எனக்கு எதிரிலிருந்த இருக்கையின் ஓரத்தில் கொஞ்சம் இடம் இருந்தது. அதில் என்னுடைய ஒரு காலை வைக்கச் சொல்லியிருக்கிறாள். ஒரு கால் வைக்க இடம் கிடைத்தது. அது ஒன்றும் அத்தனை சௌகரியமாக இல்லை. எனினும் உடன் பயணிக்கும் ஒருவருக்கு நம் பயணத்தின் கடினம் புரிவதுதான் எத்தனை ஆறுதல்.

இதற்கு மேல் பொறுக்க முடியாது என வெகுண்டு எழுந்தாள் கிழவி. என்னையும் சேர்த்து அவளுக்குக் குறுக்கே வந்த அத்தனை பேரையும் இடித்துத் தள்ளிவிட்டு கழிவறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். கிழவர்கள் இருவரும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். நாற்றம் முன்பைவிட பயங்கரமாக இருந்தது.

மழை முற்றிலுமாக நின்றதும் இடது ஓரத்தில் நின்றிருந்த இருவர் படியில் அமர்ந்தனர். ஈரம் காயவில்லைதான். எனினும் வேறு வழியுமில்லை. மூன்றரை மணி நேரமாக நின்றுகொண்டிருக்கிறோம். நானோ, சிறப்பாக ஒற்றைக் காலில் நிற்கிறேன்.

மீண்டும் காதில் பாடல்களை ஒலிக்கவிட்டேன். இசை எனக்கு வலி நிவாரணியாக இருந்தது. கால்களை நீட்டி உட்கார்ந்து அமுக்கிவிட வேண்டும் போல் இருந்தது. மேலிருந்து அவள் பார்த்துக்கொண்டிருந்ததால் வலியைக் காட்டிக்கொள்ள முடியாமல் இசைக்கு இணங்கினேன்.

“உன் பேரென்ன?” - அவளே கேட்டாள்.

காதில் இருந்த இசைப்பானை எடுத்துவிட்டு, “என்ன?” எனக் கேட்டேன்.

“பெயர்?”

“விஜய்”

சிறு புன்னகையுடன் “ம்ம்...”

“உன் பேரென்ன?”

“ஐஸ்” புருவத்தை உயர்த்திக் கூறினாள்.

சுவாரஸ்யமாக ஏதும் இல்லாமல் அறிமுகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தோம். அவளுக்குக் கீழ் இருக்கையின் சன்னலோரத்தில் இருந்த பெண், அப்போதுதான் சாப்பிட்டுக் கை கழுவினாள்.

“ஏலே, ..... மவனுவளா...” - படியில் இருந்தவர் கத்திக்கொண்டே எழுந்துவந்து என் அருகில் நின்றார். அவர் கையில் சாப்பாட்டு பாக்கெட் இருந்தது. முகம் முழுவதும் எச்சில் தண்ணீர். ஓடும் ரயிலில் கைகழுவும்போது பின்னிருக்கும் நபர் மேல்தான் தண்ணீர் போய் விழும். ஒருவர் கைகழுவிய தண்ணீர் மேலே படும்போது அமில மழை பெய்த எரிச்சலும் அருவருப்பும் கலந்த உணர்வு ஏற்ப்பட்டிருக்கும்! அதுதான் அவரை அப்படிப் பேச வைத்திருக்கும்.

“எவன்ல கையக் கழுவினது” ஆக்ரோஷமாகக் கேட்டார்.

கைகழுவிய பெண்மணி எழுந்து, “சாரி” என்றார்.

கோபத்தில் வார்த்தைகளின் ஆழம் தெரியாது, அந்த நபர் வார்த்தைகளை வீசினார். அந்தப் பெண் அழுது கண்ணீரோடு ‘‘சாரி’’ என்றவாறு நின்றார். ஆனாலும் அவர் திட்டினார். அதற்குள் உள்ளிருந்த ஆட்களின் நடுவிலிருந்து வாட்டசாட்டமான ஒருவர் வந்து தன்னைக் காவலராக அறிமுகம் செய்துகொண்டார். அவர் வந்ததும் சத்தமிட்டுக்கொண்டிருந்த நபர் பம்ம ஆரம்பித்தார். தான் பாதிக்கப்பட்டதாக தன் சட்டையில் இருந்த ஈரத்தைக் காண்பித்தார்.

பயணம்: சிறுகதை

“அதுக்கு பொம்பளைய இப்படியாய்யா திட்டுவ?” - மிரட்டுவது போல காவலர் கேட்டார். அவரோ வார்த்தைகளின்றி முகத்தை ஏதும் தெரியாததுபோல வைத்துக்கொண்டார். நானும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம்.

யார்மீது தவறு என்பதைவிட ஒரு பெண்ணைத் திட்டும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் குறித்த புரிதல் அவளுக்கும் இருந்தது. வந்திருந்த காவலர் திரும்பிச் செல்லும்போது, மேலே இருந்தவளின் கைகளில் இடித்துவிட்டார். அவள் கைப்பேசி கீழே விழுந்தது. நான் அவளை நகையாடி சிரித்தேன். அவளும் சிரித்தாள். கீழே விழுந்த கைப்பேசியை எடுத்துக் கொடுத்தேன். கொடுக்கும்போது எங்கள் விரல்கள் உரசிக்கொண்டன. கரைவந்து கடல் திரும்ப மனமில்லாமல் தவிக்கும் அலையாக என் விரல்கள் தவித்தன. அந்தக் குறுகிய நேரத்துக்குள் அவள் திறந்து வைத்திருந்த அவளது முகநூல் கணக்கினைப் பார்த்துவிட்டேன். உடனே அவளுக்கு நட்பழைப்பும் கொடுத்துவைத்தேன்.

மதுரை வந்தது.

ஐந்து பேர், வெள்ளை வேட்டி சட்டையுடன் ஏறினர். கிழவி கழிவறையை விட்டுத் திரும்பியதும் நாற்றம் என் குடலை அரிக்கத் தொடங்கியது. அதனுடன் இப்போது ஏறியவர்களின் சரக்கு நாற்றமும் சேர்ந்துகொண்டது. கண்கள் இருட்டின... தூக்கம் ஒரு கண்ணும், நாற்றம் ஒரு கண்ணுமாக என்னை வாட்டின. எனினும் என்னைவிட மோசமாக இரண்டு கழிவறைக்கும் நடுவில் அமர்ந்து வருபவரின் நிலையை எண்ணி இன்னும் வருத்தம் கொண்டேன். சரக்கு நாற்றத்துடன் ஏறியவர்களுள் ஒருவர் பீடியை எடுத்தார். சுற்றியிருந்தவர்கள் எதிர்க்கவே... அதனைப் பற்றவைக்காமல் சட்டைப்பையில் வைத்தார். அவர் இடையில் ஒரு மது பாட்டிலும் இருந்தது! விறுவிறுவெனக் கழிவறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டார். மதுரையில் விலையில்லா பீடிகள் கிடைக்கின்றன போலும். அவ்வளவு நாற்றம்!

ஐஸ், என் நட்பழைப்பை ஏற்றுக்கொண்டாள். அவளே, ‘இவ்ளோ ஸ்பீடா’ எனக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

நகைச்சுவையாகப் பதிலளித்துவிட்டு, கால் வலியும், குடலைப் பிடுங்கும் நாற்றமும், அரைத் தூக்கமுமாகப் பயணத்தைத் தொடர்ந்தேன். கழிவறைக்குள் ஒவ்வொருவராகச் சென்று மது அருந்தி வந்தார்கள். தூக்கம் அள்ளிக்கொண்டு வந்த ஒருவர், தூங்க இடம் தேடி அலைந்தார். நெரிசலில் ஒவ்வொருவர் மேலும் இடித்து எல்லோரது முகத்திலும் எரிச்சல் மண்டியிருந்தது. என்மீது வந்து ஒருவர் மோதினார். என் அரைத் தூக்கமும் தெளிந்துவிட்டது. சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை. `உயிரோடு இருப்பது, இப்போதெல்லாம் வலித்தால் மட்டும் புரிகிறது' என நா.முத்துக்குமாரின் வரிகள் ஞாபகம் வந்தது.

திண்டுக்கல் வந்ததும் போனதும் நானறியேன். அப்படித் தூக்கம் கண்களைத் தழுவியது. திருச்சிராப்பள்ளி நிலையத்தை அடைவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகத்தான் கண் விழித்தேன். என் உடைமைகளைச் சுருட்டிக்கொண்டு இறங்கத் தயாரானேன். இறங்கும் முன் அவளிடம் சொல்லிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவளோ, பக்கத்திலிருந்த பெண்ணின் தோளில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

என்னுடன் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தவரும் திருச்சியில் இறங்கினார். அவருக்கு இதுதான் முதல் முன்பதிவில்லாப் பயணம் போலும். பயணத்தின் கொடூரம் தாங்காமல் இறங்கிவிட்டார். இங்கிருந்து சென்னைக்குப் பேருந்தில் பயணிக்கப் போவதாகக் கூறினார். நான் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்க வேண்டும். அந்த அண்ணனுடன் சேர்ந்து சூடாக காபி குடித்தேன். நான் தூத்துக்குடியில் ஏ.சி பெட்டியின் முன்பாகப் பார்த்த பெண், ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறிச் சென்றாள். நீல நிற கார் ஒன்று அவளுக்காகக் காத்திருந்தது. நான் மீண்டும் ரயில் நிலையத்துக்குள் சென்று பயணத்தைத் தொடர்ந்தேன். இரண்டு ரயிலும் ஒரு சிற்றுந்தும் மாறி காலையில் கல்லூரியைச் சென்றடைந்தேன்.

கல்லூரி வளாகத்தில் மீண்டும் அவளைப் பார்த்தேன். நேற்றிரவு காரில் ஏறிச் சென்றவள் என் கல்லூரியில் என்னுடன்தான் படித்துக்கொண்டிருக்கிறாள். உலகம் அவளுக்குக் கொடுத்த ரயில் பயணத்தை எனக்குக் கொடுக்கவில்லை. உணவு, உடை என எல்லாம் வேறுபட்டிருந்தாலும், என்னைவிடச் சிறந்தவற்றை அவள் பெற்றிருந்தாலும், அவள் பெறும் அதே கல்வியை நானும் பெறுகிறேன் என்பதை நினைத்ததும் ஒருவிதப் பெருமித உணர்வு தோன்றியது!