Published:Updated:

ஒரு கதை சொல்லட்டுமா?

பந்தம்
பிரீமியம் ஸ்டோரி
பந்தம்

- ஜெ.செந்தாமரை

ஒரு கதை சொல்லட்டுமா?

- ஜெ.செந்தாமரை

Published:Updated:
பந்தம்
பிரீமியம் ஸ்டோரி
பந்தம்
இந்த இதழ் அவள் விகடனில் ஆங்காங்கே இடம்பிடித்திருக்கும் ஒரு பக்க கதைகளின் கடைசி கதையில் காத்திருக்கிறது ஒரு சர்ப்ரைஸ்!
ஒரு கதை சொல்லட்டுமா?

அனுமானம்

‘‘தம்பி முரளி, திடீர்னு என் நண்பன் கணேஷ் இப்படி நம்மை தவிக்கவிட்டுப் போவான்னு நினைக்கவே இல்லப்பா. நீ எதுக்கும் கவலைப் படாதே... நான் இருக்கேன். இந்தாப்பா... உங்கப்பாவை நான் கடைசியா பார்த்தப்போ அவர் என்கிட்ட தந்த கவர். உரிய நேரத்துல உங்கிட்ட சேர்க்கச் சொன்னார். உள்ள என்ன இருக்குனு எனக்கும் தெரியாது’’ - மாதவன் கொடுக்க, முரளி கவரை வாங்கிக்கொண்டான்.

‘‘முரளி, இந்தாப்பா இதுல 5,000 ரூபாய் இருக்கு, செலவுக்கு வெச்சுக்க. நான் வர்றேன்பா’’ என்றபடி சோகத்துடன் கிளம்பினார் மாதவன்.

தன் நீண்டகால நண்பரை இழந்த துக்கம் அவர் முகத்திலிருந்து இன்னும் நீங்கவில்லை.

‘‘என்னடா இது லாட்டரி அடிச்ச மாதிரி 5,000 ரூபாய். கவர் வேற. பிரிடா... என்ன இருக்கோ...’’ - முரளியின் நண்பர்கள் பரபரப்பானார்கள்.

‘‘இவரு ஏதோ பாவப்பட்டு கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டுப் போறார். எங்க அப்பாகிட்ட எவ்வளவு சுருட்டினாரோ தெரியல. குற்றவுணர்வுல தான் இந்தப் பிச்சை காசு 5,000 ரூபாய் கொடுத் துட்டுப் போறாரு. எல்லாம் நடிப்புடா...’’ என்றபடி பிரித்தான் முரளி.

‘‘அன்பு மகனே, அப்பா எழுதியது. என் இதயம் பழுதடைந்துவிட்டது.

நீண்டநாள் இருக்க மாட்டேன். தாயில்லா பிள்ளை என்று உன்னை செல்லம் கொடுத்து வளர்த்தது தவறு என்று பிறகுதான் தெரிந்தது.

என் பொருளாதார இயலாமையால் நான் தவித்த போதெல்லாம், என் நண்பன் மாதவன்தான் உதவி செய்தான். உன் படிப்பே அவன் போட்ட பிச்சைதான். ஆனாலும் நீ புகை, குடி, போதை என்று வழி மாறியதில், என் இதயம் உடைந்ததுதான் மிச்சம்.

இனி உன்னை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அன்புடன்,

உன் அப்பா.’’

ஒரு கதை சொல்லட்டுமா?

ஐந்நூறு ரூபாய்

“ஏங்க புடவை எடுக்கப் போகலாமா? தீபாவளி நெருங்கிடுச்சு, போனஸ்தான் வாங்கிட்டிங்கல்ல..!”

“போலாம் போலாம்... இந்தப் புடவையைப் பாரு முதல்ல...”

“இது யாருக்கு?” என்று கோபமாகக் கேட்டாள் மதுமிதா.

“உனக்கு இல்லம்மா. மகாராணி இந்த மாதிரி எல்லாம் கட்டுவீங்களா? இது என் தங்கச்சி மாலா வுக்கு வாங்கியிருக்கேன்.”

அவசரமாக விலையைப் பார்த்தாள் மதுமிதா.

“என்ன 2,000 ரூபாயா?”

“இரு இரு அவசரப்படாத. இன்னிக்கு பல்லா வரத்துலயிருந்து ஒரு பெரியவர் வந்தார் ஆபீஸுக்கு புடவை வியாபாரம் செய்ய. எல்லாரும் போட்டி போட்டு ரெண்டு, ரெண்டு புடவையா எடுத்தாங்க. ஏன் தெரியுமா... 2,000 ரூபாய் விலை போட்டிருந் தாலும், எல்லா புடவையும் 500 ரூபாய்தான். ஏதோ டிஸ்கவுன்ட்டாம். அரைமணி நேரத்துல அத்தனை யும் வித்துப்போச்சு. சரி நாமும் ஒண்ணு எடுப்போ மேன்னு எடுத்தேன்.”

“அதானே பார்த்தேன்” என்றாள் மதுமிதா.

மாலை தன் அம்மாவுக்கு போன் செய்தாள் மதுமிதா. “புடவை எல்லாம் வாங்கியாச்சாம்மா?” என்று விசாரித்தார் மதுமிதாவின் அம்மா. “இல்லம்மா... நாத்தனார்க்கு மட்டும் எடுத்தாச்சு, டிஸ்கவுன்ட்ல. நாளைக்குத்தான் எனக்கு வாங்க கடைக்கு போகப் போறேன். ஆமா... அங்க துணி எடுத்தாச்சாம்மா?” - மிக ஆர்வமுடன் கேட்டாள் மதுமிதா.

`எடுத்தாச்சும்மா. பல்லாவரத்துலயிருந்து ஒரு பெரியவர் நம்ம காலனிக்கே வந்து விற்பனை செய்தார். அதுல என்ன அதிசயம்னா, 2,000 ரூபாய் புடவைய டிஸ்கவுன்ட்ல 500 ரூபாய்க்குக் கொடுத்தார். அதேபோல, 4,000 ரூபாய் புடவை 600 ரூபாய்தானாம். நல்லா இருந்துச்சும்மா... அதான் உனக்கு ஒண்ணு, எனக்கு ஒண்ணு, உன் தங்கைக்கு ஒண்ணுன்னு எடுத்துட்டேன், அலைச்சலும் மிச்சம்’ - இதெல்லாம் அம்மாவின் மனதில் ஓடினாலும், ‘இதை எப்படி மகளிடம் சொல்லமுடியும்... மற்றவர் கஷ்டம் தெரியாதவளாச்சே...’ என்று யோசித்தாள்.

‘‘என்னம்மா... கேட்கிறேன் பதில் இல்ல?”

‘‘உனக்குப் பிடிச்ச கலரே வாங்கியிருக்கேன்... 4,000 ரூபாய். என்ன மதுமிதா... சந்தோசம்தானே?’’

“எங்க அம்மான்னா அம்மாதான்!” - சந்தோசமாக போனை வைத்தாள் மதுமிதா.

ஒரு கதை சொல்லட்டுமா?

விட்டம்

‘‘தம்பி, தம்பி…’’ - அந்தி சாயும் நேரம், ரகு பின்னால் கத்தியபடியே வந்தார் கல்யாணத் தரகர் வீராசாமி. அவர் கூப்பிடுவது காதில் விழுந்தும் கேட்காததுபோல் வேகமாக நடந்தான் ரகு.

‘‘தம்பி ரகு. ஏதாச்சும் பதில் சொல்லுப்பா... உனக்கு அந்த இடம் பிடிக்கலையா?’’

ரகுவின் மனசு ஒருவித படபடப்பில் இருந்தது. ‘‘என்னப்பா ஆச்சு? ஜாதகம் சரியா இருக்கு. பொண்ணும் பிடிச்சமாதிரி இருக்கு. பின்ன என்னப்பா தயக்கம்?’’

‘‘அதெல்லாம் இருக்கட்டும்... அந்த வீட்டுல எதுவுமே நம்புற மாதிரி இல்லையே... மனசெல் லாம் திக்குனு திக்குனு அடிச்சிட்டிருக்கு...”

‘‘என்னப்பா சொல்ற?”

‘‘அது எப்படிங்க.... பொண்ணு பேரு மாயா, அம்மா பேரு சந்திரமுகி, பொண்ணுக்கு தங்கச்சி பேரு காஞ்சனானு...’’

‘‘ஏன் இதெல்லாம் வைக்கிற பேருதானேப்பா...”

‘‘சந்திரமுகினு உங்க வீட்டுல பேரு வைப்பாங்களா... சரி, ஏதோ நம்மளை கிண்டல் பண்றாங்கனு நினைச்சு வீட்டுலயிருந்து கிளம்பினா, ஆழ்வார்பேட்டை, டிமான்டி காலனினு ஒரு அட்ரஸ். நெஜமா கனவானு நானே அரண்டு போயிட்டேன். போதும் நீங்க பொண்ணு பார்த்தது, என்னை விட்டுடுங்க...’’

‘‘அப்படி சொன்னா எப்படி தம்பி... கொஞ்சம் நின்னு பேசுங்க’’ - தரகர் சமாதானப்படுத்திய படியே ரகுவின் பின்னால் வந்துகொண்டிருந்தார்.

எரிச்சலாகத் திரும்பினான் ரகு. ‘அதுக்குள்ள எங்க போய் தொலைஞ்சாரோ...’ என்று தரகரை காணாமல் தேடினான்.

பக்கத்திலிருந்த தன் தோட்டத்தின் முருங்கை மரத்தின் மேலேறி காய்களைப் பறிக்கும் முயற்சியில் தலைகீழாகத் தொங்காத குறையாகத் தொங்கிக்கொண்டிருந்தார் தரகர். அதைப் பார்த்த அடுத்த நொடி... ‘அச்ச்சோ...’ என்று அலறல் போட்டபடியே ஓட்டமெடுத்தான் ரகு.

ஒரு கதை சொல்லட்டுமா?

பந்தம்

கண்களில் கண்ணீர் வழிகிறது. 24 வருடங்கள் பட்ட கஷ்டத்தையெல்லாம் நினைத்தாள் அம்புஜம். தான் நிற்கின்ற இடம் பஸ் ஸ்டாண்ட் என்பதால் வாய்விட்டு அழக்கூட முடியாமல், மெளனமாக அழுதாள். கண்களில் நீர் ஆறாக ஓட, சிலையாக நின்றாள் அம்புஜம்.

‘எப்படி பேசிவிட்டான் அருமை மகன் ராமு. திடீரென கணவர் காலமானபோது, ‘நான் இருக்கேம்மா’ என்று தன்னை தேற்றிய மகன், இப்போது எப்படி மாறிப்போய்விட்டான். அவன் பட்டப்படிப்பை முடித்து தனியார் கம்பெனியில் வேலையில் சேரும்வரை, கஷ்டம் தெரியாமல் இவனை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன். நேற்று வரை இனித்த அம்மா, இன்று கசந்து போனது ஏன்? மனைவி வந்துவிட்டால், அம்மாவின் அன்பு தேவையில்லையா?’ - மனதுக்குள் வெம்பிய அம்புஜம் உதட்டை கடித்து அழுகையை அடக்கினாள்.

“இதோ பாருங்க, நான் இங்க வந்த ஆறு மாசமா பாக்குறேன்... உங்க அம்மா எதுக்கெடுத்தாலும் உபதேசம் பண்றாங்க, இல்ல குத்தம் கண்டு பிடிக் கிறாங்க...’’ - ராமுவின் மனைவி உமா சொன்னாள்.

‘‘அவ வேலையில தலையிடாம நீ ஒதுங்கியிருக்க வேண்டியதுதானேம்மா..?”

‘‘நீயாடா இப்படி பேசுற... நல்லது கெட்டது சொன்னா தப்பாடா... அவ என்னை எப்படி எடுத்தெறிஞ்சு பேசுறா தெரியுமா?’’

உமா அழ ஆரம்பித்தாள். ராமு பொறுமை இழந்து, “போதும்மா நிறுத்து. வீடா இது... அம்மா அவ சின்ன பொண்ணு. அமைதியா இருக்க முடிஞ்சா இரு, இல்லைன்னா கிராமத்துல நம்ம வீட்டுக்குப் போய் இரு’’ என்று கத்திவிட்டு அறைக்குள் சென்று கதவை ஓங்கி அறைந்து சாத்திக்கொண்டான்.

தன் முகத்தில் அறைந்த மாதிரி திடுக்கிட்ட அம்புஜம் சுற்றும் முற்றும் பார்த்தாள். பஸ் ஸ்டாப்பில் ஒரு பையன், கூல்டிரிங்ஸை தன் அம்மாவின் கையில் வற்புறுத்திக் கொடுக்க, அவர் ஜில்லென்று இருந்த அந்த கூல்டிரிங்ஸை வேண்டாம் என மறுக்க... ‘ராமுவும் இப்படித்தான் நமக்கு கொடுப்பான்’ என்று நினைத்தபோது அம்புஜத்துக்கு ஆதங்கத்தில் விம்மல் வந்தது.

‘ராமுவும் இப்படித்தான் என்னை நினைத்து அழுதுகொண்டிருப்பானோ’ என்று நினைத்தபோது, தூரத்தில் மகன் வருவதைப் பார்த்தாள். அவள் உடல் சந்தோஷத்தில் நடுங்கியது. ‘சமாதானப் படுத்தி வீட்டுக்குக் கூப்பிடத்தான் வர்றான். புள்ளைக்கு மறுபடியும் கஷ்டம் கொடுக்காம, அம்மாவுக்கும் கோபம் இல்லப்பானு சொல்லி அவன் கூட கிளம்பிடுவோம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவளிடம் வந்து நின்றான் ராமு.

“அம்மா, உன் கண்ணாடியை மறந்துட்ட இந்தா. இதில் கொஞ்சம் பணம் இருக்கு செலவுக்கு வெச்சுக்க. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க.”

ஒரு கதை சொல்லட்டுமா?

ஊன்றுகோல்

மன்னுர் கிராமத்தில் இட்லி விற்று வந்த பாக்கியம் ஆயா இறந்துவிட்டார். எட்டு வயதுச் சிறுமி வள்ளியும், அவளின் ஒரு வயது தம்பியும் நிராதரவானார்கள். ஆயா இவர்களுக்கு உறவில்லை. வள்ளியின் அப்பா ஓடிப்போக, பிரசவத்தில் அம்மா இறந்துபோக, அந்தப் பச்சிளம் குழந்தையையும் வள்ளியையும் அரவணைத்துக்கொண்டார் பாக்கியம் ஆயா. இப்போது அவரும் இல்லை. ‘ஆயாவுக்கும் எங்களுக்கும் வேற யாரும் இல்ல’ என்று மருத்துவமனையில் நர்ஸிடம் வள்ளி சொல்ல, மருத்துவமனை நிர்வாகமே மின்தகன மேடைவரை காரியங்களை முடித்துவிட்டது.

அந்த வளாகத்தில், அடுத்து என்ன என்றறியாமல் நின்றுகொண்டிருந்த வள்ளியிடம், “கவலைப்படாதே பாப்பா... நான் உங்க ரெண்டு பேரையும் ஹோம்ல சேர்க்கிறேன்’’ என்று சொல்லி ஆறுதல் கூறினார் ஒரு பெண். நகரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீடு மிகவும் சொகுசாக இருந்தது. அதுவே வள்ளிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

வள்ளி அருகில் வந்து அமர்ந்தார் அந்தப் பெண், ‘‘எனக்குத் தெரிஞ்ச ஒருத்தவங்களுக்குக் குழந்தை இல்ல, உங்களை அவங்க வளர்க்கிறேன்னு சொல் றாங்க. நீ பயப்படக் கூடாது சரியா?” - வள்ளிக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது.

அந்தப் பெண் அங்கிருந்து நீங்கியதும், வீட்டின் பணிப்பெண் வள்ளியிடம் வந்தார். ‘நீயும் தம்பியும் இன்னும் கொஞ்சம் நேரம் இங்கிருந்தா ஆபத்து, உங்களுக்கு விலை பேசிட்டு இருக்காங்க, கிளம்புங்க’ என்று பின் கேட் வழியைக் காட்ட, தம்பியை நெஞ்சோடு அணைத்தபடி ஓட்டமும் நடையுமாக நடந்தாள் வள்ளி.

நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தச் சாலையில், திசை தெரியாமல் நடந்துகொண்டிருந்தபோது, சைக்கிளில் ஒருவர் வருவதைப் பார்த்து அவரிடம் உதவி கேட்டாள். அவர் குடித்திருந்தது தெரிந்தது. இந்த மனிதனும் ஆபத்தானவன்தான் என்று உணர்ந்தவள், திரும்பவும் ஓட ஆரம்பித்தாள். போதையில் அவன் கீழே விழுந்தான். சூரியன் மங்க, தூரத்தில் ஒரு பெட்டிக்கடையில் விளக்கு எரிந்தது. கடையின் வெளியே தன் ஊன்றுகோலை சாய்த்து வைத்துவிட்டு அமர்ந்திருந்தார் அந்தக் கடைக்காரர். அவர் கால் இல்லாதவர் என்று புரிந்து கொண்ட வள்ளி, அவரிடம் சென்றாள்.

‘‘அய்யா, எங்க ஊரு மன்னூர். அப்பா விட்டுட்டுப் போயிட்டார். தம்பி பொறந்தப்போ அம்மாவும் இறந்துட்டாங்க. பார்த்துக்கிட்ட பாட்டியும் இப்போ இல்ல...’’ என்றதும், ‘கடவுளே’ என்று கதறிவிட்டார் அந்தக் கடைக்காரர். குரல் வந்த முகத்தை உற்றுப் பார்த்த வள்ளியும் ‘அப்பா’ என்றுகூட அழைக்க இயலாத அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். கஞ்சா விற்று, சிறை சென்று, விபத்தில் காலை இழந்த கதை சொல்லி அழுத தன் அப்பாவைத் தேற்றிய வள்ளிக்கு, இப்போது இரண்டு குழந்தைகள். தம்பி யோடு சேர்த்து தன் தந்தைக்கும் தாயாகிப்போனாள்.

அந்த சர்ப்ரைஸ்... கீழே...

 ஜெ.செந்தாமரை -  ஜெயக்குமார்
ஜெ.செந்தாமரை - ஜெயக்குமார்

இந்த ஒரு பக்க கதைகளை எழுதிய ஜெ.செந்தாமரை, பிரபல இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் அம்மா.

‘‘என் அப்பா தமிழ்ப் புலவர் ஏ.கே.வேலன் தந்த அறிவு, எழுத்து. சில வார இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். சில கவிதை தொகுதிகள் வெளியிட்டிருக்கிறேன். ஆவணப்பட இயக்குநரான கணவர் ஜெயக் குமார், என்னை ஊக்கப்படுத்தினார். மூத்த மகன் சிவா, நீங்கள் அறிந்த இயக்குநர். மருமகள் ராஜலெட்சுமி, சிவாவின் ஆகப்பெரிய பலம். மகள் தொழில் துறையில் இருக்கிறார். இளைய மகன் பாலா, கதாநாயகன். என் கைகள் என் பிள்ளைகளின் கரங்களைப் பிடித்து வளர்த்தது, கரண்டி பிடித்து சமைத்தது, தூரிகை பிடித்து ஓவியம் தீட்டியது, எழுதுகோல் பிடித்து எழுதி யது. சமீபத்திய கதைகள்தாம் இப்போது நீங்கள் படித்தவை’’ என்கிறார் ஜெ.செந்தாமரை.

‘சிறுத்தை’ சிவா
‘சிறுத்தை’ சிவா

இந்த உலகத்தை நான் பார்க்கும் பார்வைக்குக் காரணம்... அம்மா! - தன் அம்மா ஜெ.செந்தாமரை பற்றி இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா

‘‘கவிதை, கட்டுரை, கதை என என் அம்மாவுக்குள் இருந்த க்ரியேட்டிவிட்டி ஆர்வம் தான், எனக்கும் இயல்பாக அமைந்தது. என் பள்ளிக்கூட நாள்களில் நான் எடுக்கும் சின்னச் சின்ன முயற்சிகளுக்கும் அம்மா கொடுக்கும் உறுதுணை பெரிதாக இருக்கும். என்னுடைய குணத்துக்கும், இந்த உலகத்தை நான் பார்க்கும் பார்வைக்கும் முக்கியமான காரணம், அம்மா என்னை வளர்த்த விதம். எத்தனை ஜென்மம் எடுத்தாலும், என்னை சிவாவாக வார்த்தெடுத்த அம்மாவின் வளர்ப்புக்கான நன்றியை என்னால் முழுமையாகச் செலுத்தி விட முடியாது.

நான் பள்ளிக்கூட விழாக்களில் நிறைய பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டிருக் கிறேன். அப்போது எல்லாம், என்னைவிட அதிக படபடப்புடன் பார்வையாளர் பகுதியில் அம்மா பதற்றத்தோடு அமர்ந்து இருப்பார். அதே படபடப்பு, பதற்றத்துடன்தான், இப்போது எனது ஒவ்வொரு திரைப்பட ரிலீஸில் போதும் அம்மா தியேட்டர் சீட்டில் அமர்ந்திருப்பார். நான் எதிர்காலத்தில் சினிமா இயக்குநராக ஆவேன் என்று நான் நம்பியதைவிட, அம்மா என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என்பதே சத்தியமான உண்மை.

என் இயக்கத்தில் ஒவ்வொரு படம் வெளிவரும்போதும், ‘என் மகனோட படம் பெரிய வெற்றி பெறணும்’ என்ற பிரார்த்தனை யில் தன்னைக் கரைத்துக்கொண்டிருப்பார் அம்மா. அவர் எனக்குக் கிடைத்த நடமாடும் தெய்வப்பிறவி. இறைவனின் அருள், என் அம்மாவின் ஆசீர்வாதம், மனைவியின் பிரார்த்தனை இவைதான் என்னைத் தொடர்ந்து சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் நிச்சயம் நம்புகிறேன்!”

- குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism