
சுகந்தன் படுத்திருந்தான். ஒய்யாரமாக என்ற சொல் சற்று அபத்தமாக ஒலிக்கக்கூடும். ஏனெனில் அவன் படுத்திருந்த இடம் அவனது வீடோ, ஏதோ ஒரு கல்யாண சத்திரமோ அல்லது ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையோ அல்ல.
ஒரு மருத்துவமனைப் படுக்கை. ஆனால், வலி சற்றுக் குறைந்ததான உணர்வில் சற்றே நிம்மதியாகப் படுத்திருந்த நேரமது. விடிந்தால் அறுவை சிகிச்சை நடக்கப்போகிறது.
உடலினுள் இத்தனை நாள் அதிகம் பெயர்கூட அறிந்திராதிருந்த, இன்னுமே அதன் பயன்பாடு என்ன என்று தெளிவு அடையாதிருந்த ஓர் உறுப்பை அவன் இழக்க இருக்கிறான். அதை எடுத்தாலும் பெரிய பிரச்னை ஏதுமில்லை என்பதை மூன்று மருத்துவர்கள் உறுதி செய்திருந்தனர். இப்படியான அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த உறவினரோ அல்லது அப்படியான உறவினரைக் கொண்டிருந்த நண்பர்களோ திரும்பத் திரும்ப தைரியம் சொல்லி அவனை இங்கு அனுப்பி வைத்திருந்தனர். சுகந்தன் படுத்திருந்தான்.

இதற்குமுன்பும் அவன் வயிற்று வலியை அனுபவித்தவன்தான். பெரும்பாலும், இரவு நேரங்களில், வீடு முச்சூடும் கண்ணயர்ந்து கிடக்கையில்தான் அவனுக்கு வயிற்று வலி தொடங்கும். தண்ணீர் அருந்திப் பார்ப்பான். பிறகு அடுக்களையில் புகுந்து ஏதேனும் தின்னக் கிடைத்தால் விழுங்கி வைப்பான். வயிற்றைத் தடவிப்பார்ப்பான். அப்போதும் வசப்படவில்லை எனில், வழக்கமாகத் தேடும் ஓமியோபதி மாத்திரை உருண்டைகளை எடுத்துப் போட்டுக்கொள்வான். சாதாரண சமயத்திலேயே படிக்க இயலாத கனமான புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கி வயிறு ஏமாந்துபோய் வலிக்க மறந்துவிடுமா என்று சோதிப்பான். தன்னை மறந்து தூங்க முயன்று தன்னிடமே தோற்றால் மட்டுமே மனைவியை எழுப்பி மெதுவாக விஷயத்தைச் சொல்லத் தொடங்குவான்.
அப்போது அவளைப் பார்க்க அவனுக்கு மிகவும் பாவமாக இருக்கும். அவள் அந்த வலி தனக்கே வந்ததுபோல் துடித்துப் போவாள். கோபமான நேரங்களில் அவனைத் திட்டித் தீர்ப்பதுகூட அவளுக்கு அப்போது கைவராது. முன்னாடியே எழுப்பியிருக்கக் கூடாதா, இந்த நேரம் நான் என்ன பண்ணுவேன், டாக்டர் கிட்டகூட இப்ப போக முடியாதே... என்று தனக்குத் தானே புலம்பியபடி ஏதேதோ கை வைத்தியங்களை முயன்று பார்ப்பாள். மறுநாள் காலை எல்லாம் சரியாகிப் போயிருக்கும். அதற்குப் பிறகு அவனை ஒரு வாங்கு வாங்கிவிடுவாள்.
இந்தமுறை அப்படி எந்த மாயமும் நடக்கவில்லை. வலி சற்றும் குறைவதாக இல்லை. சொல்லப்போனால் நேரம் ஆக ஆக வலி கூடிக் கொண்டிருந்தது. அவனது நம்பிக்கைகள் மெல்ல மெல்ல நொறுங்கத் தொடங்கியதும் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லலாம் என்ற மனைவியின் யோசனையை ஏற்றுக்கொண்டான். அங்கும் சட்டென்று மருத்துவரைப் பார்க்க முடியவில்லை. காத்திருந்தான். முதல் நாள் என்ன நடந்தது, என்ன சாப்பிட்டீர்கள், அன்றாட நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் இருந்ததா என்ற கேள்விகளைக் கேட்டார் மருத்துவர். எதையோ சொல்லி முடித்தான். அவர் வலி தீருமென்று சொல்லி ஊசி போட்டுக் கொள்ளச் சொன்னார். மாத்திரைகள் எழுதித் தந்தார். எதற்கும் வலி குறையவில்லை என்றால் மீண்டும் வருமாறு சொல்லி அனுப்பிவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும், மனைவி, “ஏதாவது சாப்பிடுங்கள், வெறும் வயிறு மேலும் படுத்தி எடுக்கும்” என்று இட்லி ஊற்றி வைக்க சமையலறை சென்றாள். மருந்து மாத்திரை வாங்கி வரும்போது ரொட்டி பார்சல் வாங்கி வந்ததும் டைனிங் டேபிள்மீது இருந்தது. எதையும் விரும்பிச் சாப்பிடும் நிலையில் இல்லை சுகந்தன். அருந்தியது போற்றி உணின் என்ற ஈற்றடி நினைவுக்கு வந்தது... ஏற்கெனவே வயிறு உப்பசமாக இருந்தது. இதில், மேலும் தின்றுகொண்டிருக்க வாய்ப்பே இல்லை. கஞ்சியாவது குடிக்கட்டும் என்று மனைவி தயாரித்துக் கொண்டுவந்ததை, பாவம் அவளது திருப்திக்காக வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கத் தொடங்கினான். பின்னர் அவனறியாது கண்ணசந்தான்.
பிற்பகல் எழுந்து உட்காரும்போது நிச்சயம் வலி குறைந்திருக்கும் என்று நம்பினான். வைத்த பொருள் பத்திரமாக இல்லாது தொலைந்துபோகும் இந்தக் காலத்தில், வலி மட்டும் வந்து உட்கார்ந்த இடம் நகராமல் வலித்தபடி இருந்தது. வயிற்றை இறுக்கிப் பிடித்தபடி நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் சற்று இதமாகத் தெரிந்தது.

அப்படி என்னதான் நடந்தது நேற்று என்று யோசிக்கத் தொடங்கினான் சுகந்தன். முதல்நாள் மாலை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நேரே புத்தகக் கண்காட்சிக்குச் சென்றான். அன்றுதான் கண்காட்சி தொடங்குகிறது. தலையைக் காட்டியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தாமதமானாலும் பரவாயில்லை என்று ஏழு மணிக்குப் போய்ச் சேர்ந்து ஒரு முழு வட்டமடித்துவிட்டு வெளியே வந்தவன், பசியாயிருக்கிறது என்று ஒரு போளி வாங்கித் தின்றுவிட்டு காப்பி அருந்தினான். அப்போதே சற்று வித்தியாசமாக உணர்ந்தான். போளி காரணமில்லை; அன்று காலை நேரத்தில் உண்ணவில்லை. பதினொரு மணிக்கு அவசர அவசரமாக எதையோ விழுங்கிவிட்டு அலுவலகம் புறப்பட்டது, மதிய உணவையும் மூன்று மணிவரை தள்ளிப்போட்டது எல்லாம் ஒரு காட்டு காட்டியிருந்தது நினைவுக்கு வந்தது.
அன்றைக்குக் காலை நேரத்தில் சாப்பிட முடியாமல்போனது தவிர்க்க முடியாமல் நடந்தது. நண்பன் எழில் சிம்மனின் தந்தை இறந்துபோன தகவல் வரவே காலையிலேயே மனைவி, மகளுடன் அங்கே சென்றிருந்தான்.
எழில் சிம்மன் எனும் சந்திரசேகரன் நாற்பதாண்டுக்கால நண்பன். ஓய்வு பெற்றுவிட்ட வங்கி அதிகாரி. புதிய மரம் எனும் சிற்றிதழின் ஆசிரியர். நவீன இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பெயர். எழில் சிம்மனின் இலக்கியச் செயல்பாடுகளுக்கு, மறைந்த அவரது தந்தை மிகவும் உதவியாக இருந்தவர். வெளியீட்டாளர் என்ற இடத்தில் அவரது பெயரைத்தான் சிம்மன் போட்டுவந்தார். தொண்ணூறு வயதைக் கடந்த நிலையிலும் முந்தைய சில மாதங்கள்வரை மகனுக்குத் தனது கையால் காப்பி போட்டுத் தந்து இன்புற்றவர். அந்த வீட்டில் முன்பக்கம் கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய காலத்து சைக்கிள் அவரைக் குறியீடாக உணர்த்துவதாக ஒரு முறை சுகந்தன் சொன்னபோது வாயாரச் சிரித்து மகிழ்ந்தார்.
அன்று காலை எழில் சிம்மன் வீட்டுக்குப் போனபோது மறவாமல் கண்கள் சைக்கிள் வைக்கப்பட்டிருந்த பக்கம் சென்றது. சைக்கிள் முன்பே போய்விட்டிருந்தது. மிகக் குறைவான உறவினர்கள் மட்டும் வீட்டுக்குள் இருந்தனர். சிம்மனின் மனைவி சிவந்துபோன கண்களோடு வருத்தம் தோய நின்றிருந்தாள். அவளும் அதற்கு முந்தைய ஆண்டுதான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாள். வீட்டின் மூவருமே சீனியர் சிட்டிசன் ஆகிவிட்டதாக எழில் சிம்மன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறான். எப்போதும் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பட்டவர்த்தனமாக சம்பந்தப்பட்டவர்கள் பெயரைக்கூட மாற்றாமல் அப்படியே நடந்தது நடந்தபடி சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதுவது அவனது பாணி.
சுகந்தன் உள்ளே நுழைகையில், மூத்த எழுத்தாளர் சுகமித்திரன், சிம்மனிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். தமது அஞ்சலியை இருகரம் கூப்பித் தெரிவித்துவிட்டு வெளியே வந்தார். கூடவே சிம்மனும் அவரது கை பிடித்தபடி வந்தான்... சுகந்தனைப் பார்த்ததும், “இவரை எங்கோ பார்த்திருக்கேனே... ஆமாம், உங்க நீண்டகால சிநேகிதன்தானே... `புதிய மரம்’ நூறாவது இதழ் வெளியீட்டு விழாவில் பேசினாரே... அவர் மார்க்சிஸ்ட் இல்லியோ...” என்றார். உடனே சிம்மன், “அவன் எங்க பேங்க் யூனியன்ல இருக்கான்... நல்லவன்... நல்லா எழுதுவான்’’ என்றான்.
சுகந்தன், அவரது கையைப் பிடித்துக் கீழே அழைத்துவந்தபோது அவரின் மகனும் உடன் வந்திருந்தார். வாடகைக் கார் காத்திருந்தது. அந்த ஓட்டுநரிடம் சென்று சுகந்தன், “சார் பெரிய எழுத்தாளர்” என்று அவரது பெயரைச் சொன்னான். ஓட்டுநர், “அப்படியா சார்...கேள்விப்பட்டிருக்கேன்... நான் பார்த்து கவனமாகக் கொண்டு சேர்க்கிறேன் சார்” என்றார். அது சுகந்தனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
சுகந்தன் பின்னர் உள்ளே சென்று சிம்மனிடமும், அவன் சகோதரனிடமும் அவர்களின் தந்தை மறைவுக்கு வருத்தம் தெரிவித்தான். நேரம் கடந்துகொண்டிருந்தது. ‘தான் கூடமாட கொஞ்சம் ஒத்தாசையா இங்கே இருந்துவிட்டு வரேன்’ என்று சொல்லி மனைவியையும் மகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.
சிம்மன் அவனிடம், “நீ வேணா போய் டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கிண்டு வந்திரேன், முடியுமா... நம்ம டாக்டர் பாஸ்கரன் தரேன்னு சொன்னார்...” என்றான். சுகந்தன் தலையாட்டிவிட்டு, எழுத்தாளராகவும் தனக்கு அறிமுகமான டாக்டர் பாஸ்கரன் வீட்டுக்குப் போனான். சுகந்தனைப் பார்த்ததில் பாஸ்கரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.. ‘உள்ளே வாங்கோ பரவாயில்லை...நானும் காலையில் சிம்மன் வீட்டுக்குப் போய்விட்டுத் தான் வந்தேன்... ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டு சர்ட்டிபிகேட் வாங்கிக்கலாம்’ என்று வற்புறுத்தி, சான்றிதழ் கொடுத்து அனுப்பி வைத்தார். சர்ட்டிபிகேட்டுக்கு நகல் பின்னர் தேவைப்படும் என்று மேட்டுத் தெரு நெடுக அலைந்தான், ஒன்பது மணிக்குக் கடைகள் எதுவும் திறந்தபாடில்லை. அப்புறம் ஒரு கடையைக் கண்டுபிடித்து நகல்கள் எடுத்துக்கொண்டு சிம்மன் வீட்டுக்கு வேகமாக நடந்தான்.

அங்கே வீட்டுக் கீழ்த்தளத்தில் வேலைகள் மும்முரமாக நடந்துமுடிய, சிம்மன் தந்தையின் உடல் கீழிறக்கிக் கொண்டுவரப்பட்டு வெளியே வாகனத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. சுகந்தனும் யாரோ ஒருவரது பைக்கில் அமர்ந்து காட்டுக்குப் புறப்பட்டான்.
அங்கே எல்லாம் முடிந்து சுடுகாட்டுக்கு அருகே இருந்த கடையில் தேநீர் வாங்கி அருந்திவிட்டுத் தனது வீட்டுக்குத் திரும்பினான். ஏற்கெனவே நேரமாகிவிட்டதால் தாமதமான காலை உணவை அவசர அவசரமாக விழுங்கினான். இப்படிக் காலை உணவைத் தாமதமாகச் சாப்பிடும் நாள்களிலும் அல்லது சாப்பிடாமலே கடத்தும் நாள்களிலும் வயிறு சில காலமாகவே பிரச்னை செய்வது நினைவுக்கு வந்தது. இப்போது யோசித்து என்ன செய்ய...மருத்துவமனைக்குக் கொண்டுவந்துவிட்டது வயிற்றுப் பிரச்னை.
எழுந்து உட்கார்ந்தான் சுகந்தன். வலி குறைந்தபாடில்லை. மருத்துவமனை அறை வசதியாகத்தான் இருந்தது. தான் எப்படி இங்கே வந்து சேர்ந்தோம்? குடும்ப மருத்துவரான நண்பர் பிவிவி, ஸ்கேன் எடுத்துக்கொண்டு வரச்சொல்லியிருந்தார். பார்த்த மாத்திரத்தில் சொல்லிவிட்டார், ‘பித்தப் பையை உடனே எடுத்துவிட வேண்டி இருக்கும். வேறு வழியில்லை. டாக்டர் சுரேந்திரனை உடனே பார்த்துவிடுங்கள். அவரிடமே அறுவை சிகிச்சை முடித்துக்கொண்டு விடலாம்’ என்றார். அன்றிரவே டாக்டர் சுரேந்திரனைப் பார்க்கையில், அவரும் வியப்பூட்டும் விதத்தில் அதே மொழியில் அறிவுறுத்தினார். அவர் சொன்னபடி, மருத்துவமனை வந்து சேர்ந்தாகிவிட்டது. விடிந்தால் சர்ஜரி.
அறைக்கதவு திறக்கவும், மருத்துவர் சுரேந்திரன் உதவியாளர்களோடு உள்ளே வந்தார்.
“எப்படி இருக்கீங்க..?”
“வலி கொஞ்சம் பரவாயில்லை டாக்டர்...”
இலேசாகப் புன்னகை செய்தார் சுரேந்திரன். நர்ஸ் எடுத்துக் கொடுத்த மருத்துவ அறிக்கைகளைக் கையில் எடுத்துக் காட்டியபடி, “சுகந்தன் சார், உங்களுக்கு நாளைக்கு சர்ஜரி பண்ணப்போறதில்ல... ஏன்னா, நுரையீரல் மருத்துவர் உங்களுக்கு சளி கட்டியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இப்போ சர்ஜரி பண்ணக்கூடாது. ஆனாலும், இந்தப் பித்தப் பை பிரச்னை அப்படியே இருந்தாலும் உங்களுக்கு வலி குறையாது. அதனாலே உங்களுக்கு நிவாரணம் கொடுக்க ஒரு சின்ன ப்ரொசீஜர் நாளைக்குச் செய்யப்போறோம். அதுக்கப்புறம் இரண்டு நாளில் வீட்டுக்குப் போய்விடலாம். ஒரு வாரம் பொறுத்துப் பார்த்துட்டு சர்ஜரி எப்போ பண்றதுன்னு முடிவு செய்யலாம்” என்றார்.
உதவியாளர்களோடு அவர் சென்றபிறகு, நாளை என்ன நடக்குமோ என்று நினைத்தபடியே உறங்கிப்போனான் சுகந்தன்.
மறுநாள் காலை வழக்கம்போல் ஐந்து மணிக்கு முழிப்பு வந்துவிட்டது. மனைவி பாவம் அருகே பெஞ்சில் படுத்திருந்தாள். இவன் எழுந்திருக்கவும் சட்டென்று அவளும் எழுந்தாள். ‘நான் பார்த்துக்கறேன்’ என்றபடி மெதுவாக எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான். ‘பல் தேய்ச்சாச்சு, காப்பி வருமா இப்போ’ என்று கேட்டான். பிறகு கொஞ்சம் பலமாகச் சிரித்தான்.
“என்ன ஆச்சு, ஏதாவது பிடிச்சிருச்சா... இது ஆஸ்பத்திரி... இங்கே வந்தும் உங்க கெக்கபிக்க சிரிப்பு அடங்கலியே” என்று கோபித்துக் கொண்டாள் மனைவி.
அவன் எதுவும் சொல்லாமல் கட்டிலில் படுத்துக்கொண்டான். எழில் சிம்மன் தந்தையை மின் மயானத்தில் தகனம் செய்யச் செல்கையில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வரவேதான் சிரித்தான். எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தைத் தான் செய்தோம் என்று நினைக்கவே வெட்கமாக இருந்தது.
எழில் சிம்மன் தந்தையின் உடலை எரிக்கச் செல்கையில் மிகமிகக் குறைவான அளவிலேயே உறவினர்களும் நண்பர்களும் உடன் வந்தனர். அதனாலேயேதான் சுகந்தன் இறுதிவரை செல்லவேண்டும் என்று நினைத்துப் போயிருந்தான். சின்னச் சின்ன சடங்குகள் எல்லாம் முடித்து, உடல் வைத்திருந்த இடத்தை மூன்று முறை மாற்றி பின்னர் தகன மேடைக்கு என்று அவர்களே செய்துவைத்திருந்த மூங்கில் படுக்கையில் உடலை மாற்றி மெதுவாகத் தூக்கி, படியேறிச் சென்று அங்கே தண்டவாளங்கள் போல இருந்த மேடையில் வைத்துமாயிற்று.
மின்விசையை அழுத்த வேண்டிய நபர், ‘தலை இன்னும் கொஞ்சம் மேலே வரட்டும், இழுக்கணும்’ என்று குரல் கொடுத்தார். உடல் வைத்திருக்கும் இரும்பு மேடையை, உள்ளே எரியூட்டும் இடத்திற்கு உந்தித்தள்ளும் பிடியைப் பிடித்தபடி நின்றிருந்த மற்றொரு சிப்பந்தி, ‘வேண்டாம் விடு, சரியாயிருக்கும்’ என்றார். ‘இல்லே, தலை இன்னும் கொஞ்சம் மேலே வரணும்’ என்று சொல்லவும், சுகந்தன் அந்த மூங்கில் பாகத்தைப் பிடித்து இழுக்க, அதே நேரத்தில் பின் பக்கத்தில் நின்றிருந்த சிப்பந்தி கால் பக்கத்திலிருந்து முன்னோக்கித் தள்ள, தலை மூங்கில் பகுதியோடு கீழே இறங்கிவிட்டது.
சட்டென்று சுகந்தன் தனது கையைக் கீழே கொடுத்து, சிரமத்தோடு மூங்கில் பாகத்தோடு தலையை மேலே ஏற்றி வைக்க, எல்லோரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான். அதற்குள் முன்பாக நின்றிருந்தவர் மின்விசையை அழுத்தவும், எரியூட்டும் பகுதியின் இரும்புக்கதவு மெல்ல மேல்நோக்கித் திறக்கவும், அனல் பறக்க நெருப்புத்துண்டங்கள் உள்ளிருந்து காட்சி அளிக்க, இங்கிருந்து சடலமிருந்த இரும்புப்பகுதியை வேகமாகத் தள்ளி, மூங்கில் பகுதியோடு உடலை நெருப்பினுள் இறக்கி, அதே வேகத்தில் தண்டவாளப் பகுதியைப் பின்னோக்கி வெளியே இழுக்கவும், அதே வேளையில் தகன நெருப்பு கண்ணிலிருந்து மறையுமாறு கதவு மூடிக்கொள்ளவுமாக எல்லாம் நடந்து முடிந்தது.

பெரிய அவமரியாதையைப் பெரியவருக்குச் செய்துவிட்டோமோ என்று தன்னையே நொந்துகொண்டான் சுகந்தன். தன்னை யாரும் செய்யச் சொல்லாத வேலையை தான் எதற்கு செய்து இப்படிச் சொதப்பியிருக்கவேண்டும் என்று நினைத்தான். ஆனால், சிம்மன் தன்னிடம் அதுபற்றி எதுவும் சொல்லாதது ஆறுதலாக இருந்தது. தன்னுடன் இந்தமாதிரி நேரத்தில் கூடவே இருந்தது பற்றி சிம்மன் நன்றிதான் தெரிவித்தார். அதோடு சுகந்தன் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டான். அப்புறம்தான், வீடு சென்று சேர்ந்தது, மிகத் தாமதமாகச் சாப்பிட்டது, மதிய உணவைத் தாமதப்படுத்தி உண்டது, அன்று மாலை புத்தகக் கண்காட்சிக்குப் போய்வந்தது எல்லாமே!
காப்பி வந்தது. சுகந்தன் மெதுவாகப் பருகினான். அதற்குள், மருத்துவமனைச் சிப்பந்திகள் வந்தனர். மருத்துவர் நேற்றிரவு சொன்ன ப்ரொசீஜர்தான் என்று புரிந்துகொண்டான். ஸ்ட்ரெச்சரில் ஏறிப்படுத்துக் கொண்டான். அறுவை சிகிச்சை அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கே நிறைய சிப்பந்திகள் ஆணும் பெண்ணுமாக சுறுசுறுப்பாக வேலையில் இருப்பதை வியப்போடு பார்த்தான்.
மருத்துவர் ஒருவர் அருகே வந்தார். “சுரேந்திரன் சார் வருவாரா” என்று கேட்டான் சுகந்தன்.
“நோ, நான்தான் இந்த ப்ரொசீஜர் செய்யப்போறேன், யூ வில் பி ஆல்ரைட், ஐ ஆம் டாக்டர் மாதவன்” என்று சிரித்தார் மருத்துவர். “இது ரொம்ப சிம்பிள் ப்ரொசீஜர், சீக்கிரம் முடிஞ்சுடும். நாளைக்கு நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகிப் போய்விடலாம்... ஸ்ட்ரெச்சரிலிருந்து அதில் ஏறிப் படுத்துக்குங்க. அவங்கள ஹெல்ப் பண்ணச் சொல்லட்டுமா?” என்றார்.
“வேண்டாம், டாக்டர், நானே மாறிக்கிறேன்” என்று சொல்லி சுகந்தன் ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறே புரண்டு அருகிலிருந்த சிகிச்சைக்கான படுக்கையில் மாறிக்கொண்டான்.
அப்போது சிப்பந்தி ஒருவர், “தலை கொஞ்சம் இன்னும் மேலே வரணும் சார்” என்றார். அவ்வளவுதான், சுகந்தன் உரக்க சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.