Published:Updated:

களப்பலி: சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கவிப்பித்தன்

களப்பலி: சிறுகதை

கவிப்பித்தன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

பேருந்து அசுர வேகத்தில் தான் விரைந்துகொண்டிருந்தது. ஆனால் வெங்கடேசனின் மனம் அதைவிட வேகமாகப் பறந்துகொண்டிருந்தது. அவன் வேகத்திற்கு முன்னால் பேருந்தின் வேகம் சலிப்பாக இருந்தது.

காலையில் அம்மாவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்ததிலிருந்தே… இருட்டிய கீழ் வானத்தில் ஏக்கமாய்க் கூவிக்கொண்டு பறக்கும் ஒற்றைக் கொக்கைப்போல அவன் மனம் தவிப்பில் பறந்துகொண்டிருக்கிறது. “சாந்தா அத்த சீரிசா கீதுரா…. இன்னிக்குப் பகலு தாங்காது…” என்று இவன் அம்மா சொன்ன போதே இவன் தொண்டையில் ஈரம் கட்டிக் கொண்டது.

களப்பலி: சிறுகதை

முதலில் இவன் மட்டும்தான் ஆதாபாதையாகக் கிளம்பினான். சட்டென்று நினைவு வந்தவனாக மகள் பாவனாவையும் அழைத்துக்கொண்டான். மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்குள் போகாமல் ஆம்னிகள் நிற்குமிடம் தேடிப் போய், புத்தம் புதுசாய் இருந்த ஒரு பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்கள். அரசுப் பேருந்துகள் வேலூர் போகவே ஐந்து மணி நேரம் ஆகும். ஆம்னிகள் மூன்றரை மணி நேரத்திற்குள் போய்விடும். கட்டணம் பற்றிக் கவலைப்பட நேரமில்லை.

கப்பல்போன்று மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்த பேருந்தின் சில்லிட்ட காற்றையும் மீறி அவன் மனம் புழுங்கிக்கொண்டிருந்தது. பெங்களூரு நகரத்தின் காலை நெரிசலைக் கடந்ததும் நீண்டுகிடக்கிற அகலச் சாலையில் தடங்கலின்றி விரையத் தொடங்கியது பேருந்து. பாவனா அவன் மடியில் தலை சாய்த்து உறங்கத் தொடங்கிவிட்டாள்.

மாநில எல்லைச் சாவடிகளையும், ஓசூரையும் கடந்த பின்னர் முன்செல்லும் லாரிகளையும், பேருந்துகளையும் அநாயாசமாகப் பின்தள்ளி விரைகிற இந்த அசுரத்தனத்திற்கு மற்ற நேரமாக இருந்தால் இவன் பதைபதைத்திருப்பான். இப்போதோ அசதியாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிருஷ்ணகிரியைக் கடப்பதற்குள்ளாகவே இவன் மனம் மேலும் துவண்டுவிட்டது. உள்ளுக்குள் அலையடித்துக்கொண்டிருந்த கடல் இப்போது அவனை மேலும் கீழுமாய்ப் புரட்டிப் போடத் தொடங்கியது. அத்தையின் முகம் ஆணி அடித்து மாட்டியதைப்போல அவன் கண்களுக்குள் ஆடாமல் அசையாமல் நின்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தது.

எவ்வளவு களையான முகம் சாந்தா அத்தைக்கு. அப்போதுதான் குளித்தது போன்ற பிரகாசமான அழகு. அதிகாலை கிழக்கில் எழுகிற சூரியனைப்போல அவள் நெற்றியில் குங்குமப்பொட்டு எப்போதும் சுடர் விடும்.

தையல் இலை நிறைய சோற்றைப் போட்டு… தளரத் தளர குழம்பை ஊற்றுவாள். கடித்துக்கொள்ள நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து, கதவை ஒருக்களித்துச் சாத்திவிட்டு வாசலோரம் உட்கார்ந்துகொள்வாள்.

அவளுக்கு வெங்கடேசன்மீது பாசம் அதிகம். இவன் அப்பாவோடு பிறந்த இரண்டு அக்காக்களில் அவள்தான் மூத்தவள். இளையவள் கோலார்ப்பக்கம் தூரத்தில் இருந்ததால் கல்யாணம், சாவு என்று எப்போதாவதுதான் பார்க்க முடியும். சாந்தா அத்தையின் ஊர் இவர்களின் ஊரிலிருந்து நடந்து போகும் தூரத்தில்தான் இருந்தது. இரண்டு ஊர்களுக்கும் நடுவில் நீவா நதி மட்டும்தான் நீளமாகப் படுத்துக் கிடந்தது.

களப்பலி: சிறுகதை

நதியின் கிழக்குக் கரையிலிருக்கிற இவர்களின் ஊரிலிருந்து பொடி நடையாகக் கிளம்பினாலே போதும். வெள்ளைக்காரன் கட்டிய ஓட்டு பங்களாவைப் பார்த்தபடி தடுப்பணையின் மீது நடந்து, மறுகரைக்குப் போய்… ஒற்றைச் சாலையின் ஓரமாகவே அரை மைல் தூரம் நடந்தால் எருக்கம்பட்டு. அப்படியே சில நிமிடங்கள் நடந்தால் கொக்கேரி. அடுத்தது புண்ணிய பூமி. அப்போதெல்லாம் பதினைந்து இருபது வீடுகள்தான் அங்கே இருந்தன. எல்லாமே கூரை வீடுகள்.

மாமாவுக்கு இரண்டு ஏக்கர் செழிப்பான நிலம் இருந்தது. வற்றாத தண்ணீர்க் கிணறு. பள்ளியில் படிக்கிறபோது வாரம் தவறாமல் அத்தை வீட்டுக்குப் போய்விடுவான் வெங்கடேசன். சில முறை இவன் அப்பாவும் வருவார். பலமுறை அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தனியாகவே கிளம்பிவிடுவான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“உனுக்கும் உங்கொப்பனுக்கும் வேற வேலையே இல்ல... ஆ ஊன்னா அங்க கெளம்பிடுங்க… கெலீஜ் புட்சவ… எப்டிதாங் அந்த ஊட்ல போயி சோத்தத் துன்றீங்களோ..?” என்று இவனிடம் முகம் சுளிப்பாள் இவன் அம்மா.

அதுதான் இவனுக்குப் பல நேரங்களில் வியப்பாகவும் புதிராகவும் இருக்கும். மழையில் குளித்த மல்லிகைப்பூவைப் போல எப்போதுமே மலர்ந்திருக்கும் அத்தையின் முகத்தைப் பார்த்தால் யாருக்குமே திட்டத் தோன்றாது. ஆனால் இவன் அம்மா மட்டும் அவள் பேரைக் கேட்டாலே சிடுசிடுப்பாள்.

“ஏம்பா அம்மா எப்பப் பாத்தாலும் அத்தையத் திட்டிகினே கீது…” என்று ஒரு முறை அப்பாவிடம் கேட்டான் இவன். அப்போது இவன் நான்காவது படித்துக்கொண்டிருந்தான்.

அப்போது நீவா நதியில் அளவுக்கு மீறிய வெள்ளம். தடுப்பணையைத் தாண்டி ஆறடி உயரத்துக்கு மேல் நுரையும் நொப்புமாய் தண்ணீர் குதித்துக் கொண்டிருந்தது. இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு யாராலும் போக முடியவில்லை. வேடிக்கை பார்ப்பவர்களையும் லஸ்கர்கள் தூர விரட்டிக்கொண்டிருந்தனர்.

வெள்ளம் குறைய மூன்று வாரம் ஆனது. அணைமீது தண்ணீர் குதிப்பது நின்று, இரண்டு பக்கக் கால்வாய்களிலும் வெள்ளம் திரும்பிய பிறகுதான் அணை மீது நடக்க அனுமதித்தார்கள். மூன்று வாரங்கள் கழித்து அத்தை வீட்டை நோக்கி… அப்பாவுக்கு முன்னால் வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோதுதான் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.

“அது இப்ப உனுக்குப் புரியாதுடா…” என்று அவனது தோளைத் தொட்டு அவனின் வேகத்தை மட்டுப் படுத்தினார் அவர்.

அத்தைக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தான். பெயர் சந்திரன். அவரைச் சின்ன மாமா என அழைப்பான் இவன். அவரும் ரொம்பச் சுத்தம். இவன் பத்தாவது படிக்கிறபோது அவருக்குத் திருமணம் நடந்தது. இவன் கல்லூரிக்குப் போகிற வரை வாரம் தவறாமல் அத்தை வீட்டுக்குப் போவது தொடர்ந்தது. இவன் எப்போது போனாலும், செய்து கொண்டிருக்கிற வேலையை அப்படியே போட்டுவிட்டு, இவனை உட்கார வைத்து முதலில் சாப்பாடு போடுவாள் அத்தை.

வெள்ளை வெளேரென்ற புழுங்கல் அரிசிச் சோற்றுக்கு முருங்கைக்காய் சாம்பார், வெண்ணெய்க் கத்திரிக் குழம்பு, மொச்சைக்கொட்டை கருவாட்டுக் குழம்பு, வெண்டைக்காய்க் காரக்குழம்பு என எல்லாமே அவள் கைப்பக்குவத்தில் நாக்கில் நின்று ருசிக்கும்.

தையல் இலை நிறைய சோற்றைப் போட்டு… தளரத் தளர குழம்பை ஊற்றுவாள். கடித்துக்கொள்ள நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து, கதவை ஒருக்களித்துச் சாத்திவிட்டு வாசலோரம் உட்கார்ந்துகொள்வாள். இவன் சாப்பிடுவதைப் பார்த்து யாருடைய கண்ணும் பட்டுவிடக் கூடாது என்று சிரிப்பாள்.

சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, ஏப்பம் விடும் வரை வேறு எந்த யோசனையும் வராது இவனுக்கு. கை கழுவிய பின்னர்தான் அந்தக் கேள்வி அவன் முன்னால் நின்று குதிக்கும்.

“கெலீஜ் புட்சவ…” என்று அம்மா ஏன் முகம் சுளிக்கிறாள்…?

அத்தையிடம் கேட்க பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.

இவர்கள் ஊரில் நடக்கிற கெங்கையம்மன் ஜாத்திரைக்கு வருடம் தவறாமல் வருவாள் அத்தை. தலைநிறைய மல்லிகைப்பூவும், கனகாம்பரமும் சிரிக்க, மஞ்சள் பூசித் தகதகக்கும் முகமும், வழக்கமான குங்குமப் பொட்டுமாக அவள் வீட்டுக்குள் நுழைகிறபோது… அந்த கெங்கையம்மனே வீட்டுக்குள் வருவதைப்போல இருக்கும்.

சந்திரனுக்கு வரிசையாக ஐந்தும் பெண்களாகவே பிறந்தன. ஆண் வாரிசுக்காகப் பெண் குழந்தையைக் கொன்றதால்தான் பெண்களாகவே பிறப்பதாக ஊரார் பேசிக் கொண்டனர். அந்த ஐந்து பேத்திகளில் ஒன்றுகூட இறந்துபோன லட்சுமியைப் போல இல்லையே என அத்தை ஏங்கினாள்.

ஆற்றிலிருந்து பூங்கரமும், அம்மன் சிரசும் ஊருக்குள் நுழைகிற போதுதான் அவளும் வருவாள். ஊர்வலம் முடிந்து, அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, விருந்துண்டு ஊரே ஓய்வெடுக்கிற உச்சிவெயில் வரைகூட சாப்பிட உட்கார மாட்டாள். பெரியப்பா, சித்தப்பா, அத்தைமார் வீடு என வாசல் வாசலாகப் பூரிப்போடும், கண்களில் நிறைந்து வழிகிற பாசத்தோடும் நுழைந்து கொண்டிருப்பாள். அம்மா பலமுறை வேண்டிய பிறகு ஏதோ பேருக்குச் சாப்பிடுவாள். ஆட்டுக்கறி, கோழிக்கறி எதுவும் அவளுக்கு இறங்காது. கெங்கையம்மனைப்போலவே கொழுக்கட்டைதான் அவளுக்கும் பிரியமானது. வருடம் தவறாமல் தீபாவளிக்கு மறுநாள் மாலை தீபாவளிச் சீர் எடுத்துக்கொண்டு அத்தை வீட்டுக்குப் போவார் அப்பா. கூடவே இவனும் போவான்.

இவர்கள் போகும்போதே அங்கே உளுந்த வடை கடலை எண்ணெயில் வெந்துகொண்டிருக்கும். மரவட்டைப் பட்டாசைக் கொளுத்தி எண்ணெயில் விட்டதைப்போல நுரைக்க நுரைக்க அந்த வடைகள் வேகிறபோதே அதன் வாசனை வாசல் வரை வரும். ஏற்கெனவே வீட்டில் கார வடையும், அதிரசமும், நோன்புச் சோறும் தின்று… செத்த தவளையின் வயிற்றைப் போல இவன் வயிறு உப்பியிருக்கும். இருந்தும் அந்த வடையின் வாசனை இவன் வயிற்றுக்குள்ளே போய்… அடுத்து உள்ளே வரப்போகிற அந்த வி.ஐ.பி. வடைக்காக மற்றதையெல்லாம் ஒரு பக்கமாக ஒதுக்கி, இடத்தைக் காலி செய்து வைத்துவிடும்.

தீபாவளிச் சீர் என இவர்கள் கொண்டு போகிற இருபது காரவடையையும், இருபது வெல்லப் பணியாரத்தையும் பூரிப்போடு வாங்கி, காமாட்சியம்மன் விளக்கின் முன்னால் வைப்பாள் அத்தை. அந்த தீபாவளிப் பலகாரம்தான் அவளின் பெருமை.

“வெங்டா… வெங்டா…” என்று இவனிடம் வெல்லப் பாகாய் உருகுவாள். “எனக்கு ஒரு பொண்ணு இருந்தா உனுக்குதாண்டா கட்டிக் குடுப்பங்…” என்று இவன் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே சொல்வாள். அப்போதெல்லாம் அவள் கண்கள் கலங்கும். திடீரென அமைதியாகி விடுவாள்.

அத்தைக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததும், அது ஆறு வயதில் திடீரென இறந்துபோனதும், அப்போது இவன் பிறக்கவே இல்லை என்பதும், ஒருமுறை இவன் அம்மா சொல்லி இவனுக்கும் தெரியும்.

இவன் கல்லூரி முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தபோது ஒரு முறை திருவிழாவுக்கு அத்தையை அழைத்துவர அப்பா போயிருந்தார். அப்போது அத்தையைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தான் இவன். அப்போதும் வழக்கமாக “கெலீஜ் புட்சவ…” என்று அம்மா சிடுசிடுத்தாள். அப்போது ஆத்திரம் தாங்காமல் இவன் அம்மாவைத் திட்டியபோதுதான் இவனிடம் பழைய சம்பவங்களைச் சொல்லத் தொடங்கினாள் அம்மா.

சாந்தா அத்தை திருமணமான அடுத்த ஆண்டிலேயே கருவுற்றாள். வழக்கத்தைவிட வயிறு சற்றுப் பெரிதாக இருந்தது. அப்போது ஸ்கேன் வசதி எல்லாம் இல்லை. பெண் குழந்தையாக இருக்கலாம் என எல்லோரும் பேசிக்கொள்ள… பெண் ஒன்று, ஆண் ஒன்று என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அளவில்லா மகிழ்ச்சியில் பூரித்துப்போனாள் அத்தை.

ஆனால் இதை அதிசயமாகப் பார்த்தது ஊர். இரட்டையர் என்றால் இரண்டும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோதான் பிறக்கும். இப்படிக் கலந்து பிறப்பது அரிதிலும் அரிது. அப்படிப் பிறப்பதும் நல்லதல்ல என்று உறவினர்களும் மாமாவும் கவலைப் பட்டனர்.

பெயர் வைக்கவே தடுமாறினார் மாமா. யோசித்து யோசித்துதான் சந்திரன் என்றும் லட்சுமி என்றும் பெயர் வைத்தனர்.

லட்சுமிக்குக் கண்கள்தான் அழகு. புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியின் கண்களைப்போல அகலமான துருதுருக்கும் கண்கள். தலை முடியும் மைக் கறுப்பு. அதைப் படிய வாரிப் பின்னல் போட்டுத் தொங்கவிட்டால் படமெடுத்து ஆடும் நல்ல பாம்பைப் போல முதுகில் புரளும். கலப்பு இரட்டையர்கள் குடும்பத்துக்கு ஆகாது என்று யார் யாரோ மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். சந்திரனுக்குக் காய்ச்சல், சளி என்று ஏதாவது வரும்போதெல்லாம் மாமாவும் கவலைப்பட்டார்.

நான்கு வயதுக்கு மேல் சந்திரனுக்கு அடிக்கடி உடல் சுகவீனப்பட்டது. நாள்பட்ட காய்ச்சல், மூச்சிழுப்பு, வயிற்றுக்கோளாறு என அவனை அடிக்கடி வைத்தியரிடம் காட்ட வேண்டியிருந்தது. நாளுக்கு நாள் உடலும் இளைத்துக்கொண்டிருந்தது. மாறாக லட்சுமி அடியுரம் போட்ட நெற்பயிரைப்போல புஷ்டியாக வளர்ந்தாள். அத்தையைப்போலவே தகதகக்கும் நிறம். துள்ளல் நடை. தழையத் தழையத் தலையை வாரி, பின்னல்களுக்கு நடுவே பூச்சரம் வைத்து, அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்துப் பெருமைப்படுவாள் அத்தை. அடுத்த கனமே சந்திரனின் சயரோகத்துக்காகப் பெருமூச்சு விடுவாள்.

ஆறாவது வயதில் சந்திரனின் உடல்நிலை மேலும் மோசமானது. வைத்தியர்களிடம் அலையாய் அலைந்தார் மாமா. எந்நேரமும் காமாட்சியம்மன் விளக்கேற்றி வைத்து உருகி உருகி அழுதாள் அத்தை. தனியாக ஒரு சாமியாரைத் தேடிப்போனார் மாமா. நெடுநேரம் கண்களை மூடிக் கணக்குகளைப் போட்டுவிட்டு அவர் சொன்னார்.

“அரவாங் கள பலிதாங்… ரெண்டுல ஒன்ன கலச்சிடு…. வாழக்கன்ன கலைக்கிறமாதிரி…”

அதைக் கேட்டு வாய்விட்டே அலறிவிட்டார் மாமா. தடுமாறியபடி வீட்டுக்கு வந்தவர் மூன்று நாள்கள் வரை இதை யாரிடமும் சொல்ல வில்லை. சந்திரனின் உடல் மேலும் சுகவீனப்படத் தொடங்கியது. சில பெரியவர்களோடு ரகசிய ஆலோசனை நடத்தினார் மாமா.

அதன்படி ஒரு வைத்தியரிடம் போய் ஏதோ ஒரு மருந்தை வாங்கி வந்து… அத்தைக்கே தெரியாமல் அதை லட்சுமி சாப்பிடும் சோற்றில் கலந்து வைத்தார். அன்று பிற்பகலிலிருந்து லட்சுமிக்கு தொடர் பேதி. குழாய் உடைத்துக்கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப்போல பிய்த்துக்கொண்டு அடித்தது.

களப்பலி: சிறுகதை

தொடர்ந்து பாவாடையிலேயே கழியும் பேதியைப் பார்த்து வெலவெலத்துப்போனாள் அத்தை. அந்தப் பாவாடைகளை மாற்றிக்கொண்டே இருந்தாள். அவை வீட்டின் பின்புறம் குவியக் குவிய… வெய்யிலில் அறுத்துப்போட்ட வாழை மட்டையைப்போல… காய்ந்து சருகாகிய லட்சுமியைப் பார்த்துப் பார்த்துப் பதறிக் கொண்டிருந்தது அவள் மனம்.

மறுநாள் காலையில் லட்சுமியின் உயிர் அடங்கிவிட்டது. அதற்கு மேல் நடந்தது எதுவுமே அத்தைக்கு உறைக்கவில்லை.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு பெட்சீட்டில் தோலி கட்டி… அதில் லட்சுமியின் உடலை வைத்துச் சுடுகாட்டுக்குக் கொண்டுபோய்… அவசர அவசரமாய்ப் புதைத்து விட்டனர்.

குழந்தையின் கையிலிருக்கிற பொம்மையை திடீரென யாரோ வந்து பிடுங்கிக்கொண்டு போய்விட்டதைப் போல… இறந்த குழந்தையை வலி தீரக் கட்டிப்பிடித்து அழக்கூட அவகாசம் தராமல்… கண்மூடித் திறப்பதற்குள் பிடுங்கிக் கொண்டு போய்விட, பித்துப்பிடித்தபடி உட்கார்ந்திருந்த அத்தைக்கு மூன்றாவது நாள் காலையில்தான் உண்மை தெரிந்தது.

அந்த நொடியில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறினாள்.

“அய்யோ…. எங்கொல சாமியே…. இந்த வம்சக் கொடி வளர… உங்கொடிய அறுத்துட்டாங்களே… எஞ்சாமி… சாமி…” என்று கதறினாள்.

லட்சுமியின் முகம் அவள் கண்ணீரில் ஊறி ஊறி அலைந்தது. எழுந்து வீட்டின் பின்புறம் ஓடினாள். பேதி கழிந்த துணிகள் அங்கே கும்பலாய்க் கிடந்தன. அதைச் சுற்றிச் சுற்றி ஈக்கள் பறந்துகொண்டிருந்தன. மொத்தத் துணிகளையும் வாரி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அழுதாள். அதன்மீது படுத்துப் புரண்டாள். அதைப் பார்த்துத் திகைத்த மாமா, துர்நாற்றம் வீசிய அந்தத் துணிகளைப் பிடுங்கி வேலிக்கு அப்பால் வீசினார். அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வீட்டில் உட்கார வைத்தார்.

மறுநாள் அதிலிருந்து ஒரு பாவாடையை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து வீட்டில் ஒளித்து வைத்துக்கொண்டாள் அத்தை. மாலையில் நிலத்திலிருந்து வீட்டுக்கு வந்த மாமா இதைப் பார்த்து அதிர்ந்து போனார். முதலில் கோபம் வந்தாலும் பின்னர் பரிதாபமும் பயமும் வந்தது. அந்தப் பாவாடையைப் பிடுங்கி நெருப்பு வைத்துக் கொளுத்தினார்.

திருமணத்துக்குப் பிறகு அத்தை வீட்டுக்குப் போவதற்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது இவனுக்கு. எப்போதாவது ஊர்த் திருவிழாவிற்குப் போகிறபோது இவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்குவாள்.

பதினோராவது நாளில் புண்ணியா தானம் நடந்தது. அன்று மாலையில், வள்ளிமலைக்குப் பின்புறமாக சூரியன் இறங்கிய பிறகு மசங்கல் இருட்டு பரவத் தொடங்கியது. வேலியின் பின் பக்கமிருந்து லட்சுமி தேம்பித் தேம்பி அழுவதுபோலக் கேட்டது அத்தைக்கு. “அம்மா… வயிறு நோவுதுமா… நோவுதுமா…” என்று லட்சுமி அழுதாள். அந்தக் குரல் அத்தையின் அடிவயிற்றில் நுழைந்து சில்லிட்டது. சிறிது நேரம் கழித்து “அம்மா… தல வாரி உடுமா… தல வாரி உடுமா…” என்று கெஞ்சத் தொடங்கியது லட்சுமியின் குரல்.

சட்டென்று எழுந்தாள் அத்தை. சீப்பை எடுத்தாள். இருட்டோடு இருட்டாகச் சுடுகாட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவள் நடையில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. நிர்மூலமான வானத்தைப்போல அவளின் பார்வையில் ஒரு தெளிவு. சுடுகாட்டில் இருட்டின் நிறம் மேலும் அடர்ந்திருக்க, சுற்றிலும் இருந்த செடி கொடிகளும், மண் மேடுகளும் மங்கலாய்த் தெரிந்தன. சற்று தூரத்தில் ஆற்றின் இறக்கத்தில் இருந்த நானல் புதர் மறைவிலிருந்து குள்ள நரிகளின் ஊளைச் சத்தம் கேட்டது.

லட்சுமியைப் புதைத்த குழியின் அருகில் போய் நின்றாள். குழியின் தலைமாட்டில் வைத்திருந்த நித்ய கல்யாணிச் செடியும் நீள நிழலாய்த் தெரிந்தது.

சட்டென்று கீழே குனிந்து அந்தச் செடியைப் பிடுங்கிவிட்டு, மண் மேட்டைக் கலைத்துப் பரபரவெனக் குழியைத் தோண்டத் தொடங்கினாள். மணல் குழிதான். எந்தச் சிரமமும் இல்லை. தூரத்தில் கேட்ட குள்ள நரிகளின் ஊளைச் சத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. மூன்றடி ஆழம் தோண்டியதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட லட்சுமியின் உடல் கைகளுக்குத் தட்டுப்படத் தொடங்கியது. துர்நாற்றம் குபீரென்று மூக்கில் அறைந்தது. குள்ளநரிகளின் ஊளைச்சத்தம் மிக அருகில் கேட்டது. அவை நெருங்கி வருகின்றன. இந்த துர்நாற்றம் அவற்றை அழைத்திருக்கலாம். திடீரென்று தூரத்தில் யாரோ இருமும் சத்தம். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். ஆற்றோரம் வெண்பனிபோல எதுவோ நகர்ந்தது. திடீரென்று உடலில் பதற்றம் பற்றிக்கொண்டது. வியர்வை பெருகியது.

துணியை விலக்கி முகத்தைத் திறந்தாள். “லச்சுமி… வா நம்ம ஊட்டுக்குப் போலாம்…” என்று லட்சுமியின் தலையைப் பிடித்து மேலே இழுத்தாள். இழுத்த வேகத்தில் தலைமுடி மட்டும் மொத்தமாய்க் கழற்றிக்கொண்டு கையோடு வந்தது. அதை அப்படியே தோளில் போட்டுக் கொண்டு, வேக வேகமாக மண்ணைத் தள்ளிக் குழியை மூடினாள். தோளில் தவழும் லட்சுமியின் தலைமுடியோடு வேகவேகமாக நடந்து வீட்டுக்கு வந்தாள். அதை ஒரு மஞ்சள் கைப்பைக்குள் மறைத்து வைத்துவிட்டு, புறக்கடைக்குப் போய் உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாகக் குளித்தாள். வேறு துணியை மாற்றிக் கொண்டு வீட்டுக்குள் வந்து படுத்துக்கொண்டாள்.

ஒரு நாள் மதியம் திடீரென வீட்டுக்கு வந்த மாமா அதைப் பார்த்துவிட்டார். நடந்ததைத் தெரிந்துகொண்டதும் அவர் உடல் பதறிவிட்டது. அந்தத் தலைமுடியை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு போய் மீண்டும் அதே குழியில் புதைத்துவிட்டு வந்தார். ஒரு தாயாக அத்தையின் வலியைப் புரிந்து கொண்டாலும்… இவன் அம்மாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கிரீன் சர்க்கிள் மேம்பாலத்திற்கு முன்னதாக, வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள் நுழையாமலே குலுங்கிக்கொண்டு நின்றது பேருந்து. பாவனாவோடு வேகமாய்க் கீழே இறங்கினான் வெங்கடேசன். வேலூர் வெயிலும், அனல் காற்றும் முகத்தில் அறைந்தன. சற்று தூரம் முன்னால் நடந்து, பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து, ஏற்கெனவே நிரம்பியிருந்த சோளிங்கர் பேருந்தில் ஏறி நின்றுகொண்டனர் இருவரும். அங்கிருந்து ஒரு மணி நேரப் பயணம். கைப்பேசியில் அம்மாவிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் அத்தை வீட்டில் இருப்பதாகச் சொன்னாள். அத்தையின் பேத்திகள் எல்லோருமே வந்துவிட்டதாகவும் சொன்னாள்.

சந்திரனுக்கு வரிசையாக ஐந்தும் பெண்களாகவே பிறந்தன. ஆண் வாரிசுக்காகப் பெண் குழந்தையைக் கொன்றதால்தான் பெண்களாகவே பிறப்பதாக ஊரார் பேசிக் கொண்டனர். அந்த ஐந்து பேத்திகளில் ஒன்றுகூட இறந்துபோன லட்சுமியைப் போல இல்லையே என அத்தை ஏங்கினாள். பேத்திகளில் ஒருத்தியையாவது வெங்கடேசனுக்குக் கட்டி வைத்துவிட வேண்டும் என அவள் ஆசைப்பட்டாள். அதுவும் நடக்கவில்லை.

கல்லூரிப் படிப்பு முடிந்து சென்னையில் சில ஆண்டுகள் தனியார் வேலையிலிருந்தான் இவன். அதற்குப் பிறகு மத்திய அரசில் வேலை கிடைத்து, பெங்களுரு வந்து, அங்கேயே சொப்னாவைக் காதலித்து இவன் கைப்பிடித்தபோது, திருமண மண்டபத்தில் சத்தமின்றி அழுதாள் அத்தை. திருமணத்துக்குப் பிறகு அத்தை வீட்டுக்குப் போவதற்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது இவனுக்கு. எப்போதாவது ஊர்த் திருவிழாவிற்குப் போகிறபோது இவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்குவாள்.

நடந்ததெல்லாம் தெரிந்த பிறகு… அத்தையைப் பார்க்கிற போதெல்லாம் இவன் மனசுக்குள் சில்லென்று ஒரு நீரூற்று பீறிடும். அப்போது அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு அழ வேண்டும் என இவன் மனசு ஏங்கும். ஆனால் கூச்சமாக இருக்கும். மாமாவின் மறைவிற்குப் பிறகு, பாவனா பிறந்தபோது அவளைப் பார்க்க பெங்களூரு வந்தவள் வாயடைத்து நின்றுவிட்டாள். அவளது கை விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. கண்களில் ஒரு வெளிச்சம் படர்வதையும், திரையிடும் கண்ணீர் அதை மறைப்பதையும் இவன் கவனித்தான்.

இறந்துபோன லட்சுமியைப் போலவே பாவனா இருப்பதாக இவன் அம்மா சொன்னபோது அமாவாசை நாளின் கடற்பரப்புபோல இவன் மனதிற்குள் பெரும் அலையடிக்கத் தொடங்கியது. பேருந்திலிருந்து இறங்கி, பாவனாவுடன் வேக நடையில் அத்தையின் வீட்டை நெருங்கினான். அவன் வேகத்துக்கு பாவனா தடுமாறினாள். அவளுக்கு இப்போது சரியாக ஆறு வயது. வெயிலும், புழுக்கமும், பேருந்து நெரிசலும் அவளைச் சோர்விலாழ்த்தியிருந்தன. வதங்கிய பூச்சரம் போல அவள் முகம் வாடியிருந்தது.

அத்தையின் வீட்டு வாசலிலேயே சிறிய கூட்டம் நின்றிருந்தது. உச்சிவெயில் உக்கிரமாயிருந்தது. தென்னை மரங்கள் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தன. பழைய கூரை வீடு இருந்த இடத்தில் புதிய மெத்தை வீடு அகலமாய் உட்கார்ந்திருந்தது. அதிகாலை ஆகாயத்தின் அடர் சிவப்பு நிறச் சுவர்கள் அத்தையின் குங்குமத்தை நினைவுபடுத்தின. பழைய நினைவுகள் எல்லாம் அவனுக்குள் திடீரென முட்டிக்கொண்டு எழ, தடுமாற்றத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான். அத்தை மரக் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள். தலை மொட்டையடிக்கப் பட்டிருந்தது.

சுற்றியிருந்தவர்கள் விலக, நெருங்கிப்போய் உற்றுப் பார்த்தான். தளதளத்து தளர்ந்த முகத்தில் மாம்பழத்தைப் போன்ற அடர் மஞ்சள் நிறம் கூடியிருந்தது. பார்வை விட்டத்தில் நிலைத்திருக்க, கண்கள் அசைவற்றிருந்தன.

களப்பலி: சிறுகதை

“அக்கா… வெங்டா வந்து கீறாம் பாரு…” என்றார் அப்பா.

எந்த அசைவும் இல்லை. “அத்த…” என்றான் இவன். தண்ணீரில் நனைந்ததைப்போல இவன் குரல் அவ்வளவு குளிராகவும், நடுக்கமாகவும் இருந்தது. மீண்டும் “அத்த…” என்றான்.

எந்தச் சலனமும் இல்லை.

“நேத்லருந்து இப்டிதாங் உயிரு பிரிய மாட்டன்னு ஊசலாடிகினு கீது… மேல் மூச்சு எட்துகிச்சி… ஆனா எதுக்கோ புடிவாதமா உயிரு போவாம இஸ்துகினு கீது…” என்றாள் அம்மா.

பேத்திகள் ஆளுக்கொரு மூலையில் நின்று கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தனர்.

“சித்தி… பாவனா வந்து கீறாப் பாரு…” என்று பாவனாவை அருகில் இழுத்து நிற்க வைத்தாள் அம்மா.

எல்லோரையும் மலங்க மலங்கப் பார்த்த பாவனா திரும்பி இவனை பயத்தோடு பார்த்தாள்.

“பாட்டின்னு கூப்டு…” என்று பாவனாவிடம் சொன்னாள் அம்மா. அவளும் பயந்துகொண்டே “பாட்டி…’ என்றாள். நிலைத்த பார்வையில் எந்த அசைவுமில்லை.

“அம்மான்னு கூப்டு…” என்றான் இவன் பாவனாவிடம். எல்லோரும் இவனைத் திரும்பிப் பார்த்தனர். பாவனாவைப் பார்த்துக் கண்களைக் காட்டினான். அவளுக்கு எதுவும் புரியவில்லை. மீண்டும் கண்களைக் காட்டினான்.

“அம்மா…” என்றாள் பாவனா.

பனிக்கட்டி உருகிக் கைகளில் படுவது போன்ற குளிர்ச்சியான குரல். சட்டென்று அத்தையின் கண்களில் ஒரு அசைவு. பார்வை சுழன்றது. தலை திரும்பியது. பாவனாவைப் பார்த்தது. எல்லோரும் ஆச்சர்யத்தோடு அதைப் பார்த்தனர்.

`ஹக்’ என்று ஒரு சத்தம். அத்தையின் உடல் குலுங்கியது. மார்பு அதிர்ந்தது. அடுத்த நொடி அவள் தலை ஒரு பக்கமாகச் சாய்ந்தது.

சுடுகாட்டை நோக்கிக் கிளம்ப தேர்ப்பாடை தயாராய் நின்றது. சாங்கியங்கள் முடிந்து உடலைத் தூக்கிப் பாடையில் வைத்தனர். அத்தையின் அந்தப் பழைய தலையணையையும் இடது கையால் தூக்கி வந்து பாடையில் வைத்தார் டோபி. பாடை எழும்பி மெதுவாய் நகரத் தொடங்கியது. இடுகாட்டில் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து… பாடையிலிருந்த பிணம் இறக்கிக் குழிக்குள் வைக்கப்பட்டது. பாடையைப் புரட்டி குழியின் அடுத்த பக்கம் தள்ள வெட்டியான் தயாரானான்.

“இர்ரா… உயிரோட இருந்த வரைக்கும் அந்தத் தலகாணில யாரையுமே கை வைக்க உடல எங்கம்மா… அதுல அப்டி இன்னாதாங் கீதுனே தெர்ல… ஒரு வேள பணம் சேத்து வெச்சிருக்கும்னு நெனைக்கிறேங்… அதக் கிழிடா பாக்கலாம்… ” என்றார் மாமா.

அவர் அப்படிச் சொன்னதும் எல்லோருமே ஆச்சர்யத்தோடு அந்தத் தலையணையைப் பார்த்தனர். எண்ணெய்ப் பிசுபிசுப்பில் அழுக்கேறியிருந்த அதை எடுத்து குழிக்கு அருகிலேயே கீழே வைத்தான் வெட்டியான். அதன் குறுக்கில் கவனமாகக் கத்தியால் கீறினான். எல்லோரின் கண்களும் ஆர்வ குறுகுறுப்போடு பார்த்துக்கொண்டிருந்தன. அந்த நீல நிறத் தலையணை இரண்டாய்ப் பிளந்துகொள்ள…எதிர்பார்த்தபடியே அதன் உள்ளே சில நூறு ரூபாய் நோட்டுக்கட்டுகள் மடித்த வாக்கில் இருந்தன. அதன் அடியில் ஒரு மஞ்சள் நிறத் துணிப்பையும் இருந்தது. மெத்மெத்தென்ற அதையும் எடுத்துப் பிரித்தான் வெட்டியான்.

அடுத்த நொடி எல்லோரின் கண்களிலும் திகைப்பு... அதிர்ச்சி. அதன் உள்ளே கறுகறுவென்ற நீளமான தலைமுடி. அது லட்சுமியின் தலை முடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism