
- கவின் கார்த்திக்
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னான சில மாதங்கள் அவை. ‘இனிமேல் நாம் இந்தியர்களை ஆட்சி செய்வது கடினம்’ என உணர்ந்து ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்குச் சுதந்திரம் வழங்கி அதிகாரத்தை ஒப்படைக்கவிருந்த நேரம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை அப்போது உச்சத்தை எட்டியிருந்தது. நாடு முழுவதும் பரபரப்பான சூழலே நிலவியது. அதனால் விளைந்த கடுமையான பாதிப்புகளுக்கு இடையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஒருபக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அப்படி வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது மெட்ராஸின் மூர் மார்க்கெட். அன்று திங்கட்கிழமை என்பதால் கூட்டம் கடுமையாக இருந்தது. சார்லஸ் மார்க்கெட்டின் உள்ளே நுழைந்ததுமே வியாபாரிகள் ஒவ்வொருவரும் அவன் கைகளைப் பிடித்து இழுத்து அவரவர் கடைகளுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினர். அவன் கைகளில் சில கிராமபோன் இசைத்தட்டுகளை வைத்திருந்தான். அவையனைத்தும் நீண்ட நாள்களாக அவனிடமிருந்த ஐரோப்பிய இசைத்தட்டுகள். அவற்றை விற்றுக் கிடைக்கும் பணத்தில் சில புதிய இசைத்தட்டுகளையும் புத்தகங்களையும் வாங்கிச் செல்ல அங்கு வந்திருந்தான்.

மூர் மார்க்கெட்டின் இரண்டு பக்கமும் இரண்டு வகையான கடைகள் இருந்தன. பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாகச் செய்து, கண்ணாடிச் சட்டமிட்ட கதவுகளைக் கொண்ட பீரோக்களில் உள்நாட்டு, வெளிநாட்டுப் புத்தங்களை அடுக்கி வைத்திருக்கும் நிரந்தரக் கடைகள் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் வராண்டாக்களில் கடை விரித்திருக்கும் பழைய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விற்பனை செய்யும் `கேர் ஆஃப் பிளாட்பாரம்' வகைக் கடைகளும் இருந்தன. அவற்றில் வலதுபக்கமிருந்து ஆறாவது கடை மதியினுடையது.
சார்லஸ் மதியின் கடையைத் தேர்வு செய்ய, மதியின் கடை வாசலில் பளிச்செனத் தெரிந்த போர்ஹேவின் ஒரு புத்தகம்தான் காரணமாக அமைந்தது. சார்லஸ் போர்ஹேவின் தீவிர வாசகன். ``கம் சார்... கம் சார்... ஐ கிவ் வாட் யூ வான்ட்’’ என, மதி அரைகுறை ஆங்கிலத்தில் அவனை அழைத்த விதமும் அவனுக்குப் பிடித்திருந்தது. சார்லஸ் ஆங்கிலோ இந்தியன் என்பதால், பேசுவதற்குக் கொஞ்சம் எளிதாக இருக்கும் என மதியிடமே சென்றான்.

மதியிடம், ``டு யூ ஹெவ் லேட்டஸ்ட் ஜாஸ் டைப் கிராமபோன் ரிக்கார்ட்ஸ்? அண்ட் எனக்குக் கொஞ்சம் புக்ஸ்கூட வேணும்’’ எனக் கேட்டான்.
``இருக்கு சார்... கிங் ஆலிவர், லா ரோக்கா, ஸ்காட் ஜால்பின்... எல்லார் மியூசிக்கும் இருக்கு’’ என, மதி வரிசையாக ஒவ்வொரு இசைக்கலைஞர்களின் பெயர்களாகச் சொல்லி அவர்களின் இசையில் தனக்குப் பிடித்ததைச் சொன்னபோது சார்லஸுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
``கிரேட்! யூ ஆர் சோ இன்டெலிஜென்ட்’’ என்றான் சார்லஸ்.
``ஐ ஹெவ் லாட் ஆஃப் ஆங்கிலோ இந்தியன் ஃப்ரெண்ட்ஸ் சார்... தே டீச் மீ’’ என்றான் மதி.
புத்தகங்களிலும் மதி அப்படியே. உள்நாட்டு, வெளிநாட்டு எழுத்தாளர்கள் அனைவரையும் தெரிந்துவைத்திருந்தான். விற்பனை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் இடைவிடாமல் புத்தகங்களை வாசித்தபடியே இருப்பான்.
``இந்தாங்க சார்... ஃபேர்லே ஓயெட்டன் புக்’’ என்று சரியாக ஆங்கிலோ இந்திய எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தை சார்லஸ் கேட்காமலேயே மதி அவனிடம் நீட்டியபோது, சார்லஸ் வாயடைத்து நின்றான். இருவரும் நீண்ட நேரம் புத்தகங்கள் குறித்தும் இசைத்தட்டுகள் குறித்தும் உரையாடிக்கொண்டிருந்தனர்.
மதியின் பரிந்துரையால் தான் தேடி வந்த புத்தகங்கள் போக இன்னும் சில புத்தகங்களையும் வாங்கிச் சென்றான் சார்லஸ். இருவருக்கும் நல்ல நட்பு உருவாக அந்த முதல் சந்திப்பே காரணமாக அமைந்தது. அதற்குப் பிறகு சார்லஸ் அடிக்கடி மதியின் கடைக்கு வரத்தொடங்கினான்.
பின்பு ஒருநாள் மதியைத் தங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் தின இரவு விருந்துக்கு அழைக்க வந்தான் சார்லஸ்.
``நோ சார்... இட்ஸ் ஓகே... லவ் இஸ் இனாஃப்’’ என்று அன்பாக மறுத்தான் மதி.
``நோ... நோ... யூ ஷுட் கம்... மை சிஸ்டர் லைக்டு ஆல் தி புக்ஸ் யூ சஜ்ஜெஸ்டடு... ஷீ வான்ட் டு மீட் யூ...’’ என்று சார்லஸ் கூறியபோது, யார் அந்தப் பெண் என்று தெரிந்துகொள்ள மதிக்கு ஆர்வம் அதிகம் ஆனது.

மறுநாள் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தான். கிறிஸ்துமஸ் தினம் என்பதால் அவர்கள் வீடே கோலாகலமாக இருந்தது. சார்லஸின் தந்தை ரிச்சர்ட் எக்மோர் ரயில் நிலையத்தில் என்ஜின் மாஸ்டராகப் பணிபுரிவதால் அவருடன் வேலைசெய்யும் நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். இயேசு கிறிஸ்துவின் வருகையை எடுத்துரைக்கும் வகையில் அழகான குடில்கள் அமைத்திருந்தனர். வண்ண விளக்குகள் ஒளிர, ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரம் என வீடே வண்ணமயமாகக் காட்சியளித்தது. வீடு முழுக்கவே ஆங்கிலோ இந்தியர்கள் டிப் டாப் உடைகளில் வலம் வந்தனர். விருந்திற்கு முன்பு நடன நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒலித்துக் கொண்டிருந்த ஐரோப்பிய இசைக்கு ஏற்ப அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். கைகளில் மதுக் கோப்பைகளுடன் அந்த மெல்லிய இசைக்கேற்ப அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் இணைகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆடுவதைப் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருந்தது. இவையனைத்தும் மதிக்கு ஆங்கிலப்படம் ஒன்றை நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்தின.
அமைதியாக நின்ற மதியிடம் வந்த சார்லஸ், ``யூ வான்ட் வொய்ன்?’’ என்று கேட்டான். கூச்சப்பட்டுக்கொண்டே ‘ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டினான் மதி. ஆங்கிலோ இந்தியர்கள் அவர்கள் வீட்டிலேயே தயாரிக்கும் வொய்ன் பற்றி முன்னமே அவன் நிறைய கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அன்றே முதல்முறையாக அதைச் சுவைக்கும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது. வொய்னின் சுவை அவன் நாவை விட்டு அகல மறுத்ததால் இரண்டாவது முறையாகவும் வாங்கிக் குடித்தான்.
``யூ லைக் இட்? கிரெடிட் கோஸ் டு மை சிஸ்டர் மேன்...’’ என்று ஆலிஸை நோக்கிக் கைகாட்டினான் சார்லஸ்.
கைகளில் கிடார் பிடித்தபடியே கிறிஸ்துமஸ் தினப் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தாள். அதுவரை அவன் தன் வாழ்நாளில் பார்த்திராத அழகைக் கொண்டவளாக இருந்தாள் ஆலிஸ். அவளுடைய அசைவுகள், சுருட்டை முடி, அவளது பார்வை, அவள் அணிந்திருந்த வெல்வெட் சீருடை என எல்லாமே அழகாகவும் எடுப்பாகவும் இருந்தன. தன் நிறத்திற்கேற்ப அவள் அணிந்திருந்த பிங்க் உடையில் கைகளில் கிடாருடன் பார்ப்பதற்கு ஓவியம் போலவே இருந்தாள். கண் இமைக்காமல் அவளைப் பார்த்தபடியே நின்றான் மதி. இசை நிகழ்ச்சி முடிந்து அனைவரும் உணவு விருந்துக்கு மெதுவாகச் செல்லத் தொடங்கினர்.
சார்லஸ் மதியை அறிமுகம் செய்து வைக்க ஆலிஸை அழைத்தான்.
``ஹீ இஸ் மதி...’’ என்று சார்லஸ் சொன்னதும், ``ஓ... ஐ ஜஸ்ட் லவ் தி புக்ஸ் யூ சஜ்ஜெஸ்டடு... தேங்க்ஸ் ஃபார் இட்..!’’ என்று புன்னகைத்தபடியே கூறினாள் ஆலிஸ்.
``நீங்க வெயிட் பண்ணுங்க... வீ வில் ஈட் டுகெதர்...’’ என்று தன் மென்மையான குரலில் சொல்லிவிட்டுச் சென்றாள். விருந்தில் மேற்கத்திய அசைவ உணவுகளே பிரதானமாக இருந்தன. முல்லிகாதாவ்ணி சூப், மட்டன் சாசெஜ், கிராண்ட்மாஸ் சிக்கன் கன்ட்ரி கேப்டன், கிளாசிக் பிரட் புட்டிங் என ஆலிஸ் ஒவ்வொரு உணவின் பெயராகச் சொல்லச் சொல்ல, மதி ஒன்றும் புரியாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு நின்றான். ஒவ்வொரு உணவிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அவன் தட்டில் வைத்த பின் ஆலிஸும் மதியும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே உணவருந்தினர்.
ஆங்கிலோ இந்தியர்கள் பற்றி அதிகம் தெரிந்திருந்ததால் மதி அவளின் மூதாதையர்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்பினான். அவள், அவர்கள் பிரிட்டன் மற்றும் டேனிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறினாள்.
பிறகு புத்தகங்கள் பற்றியே அவனின் அறிவைப் பாராட்டியதோடு, தானும் ஒரு தீவிர புத்தக விரும்பி என்றும், அன்று சார்லஸ் வாங்கி வந்த புத்தகங்கள் அனைத்தும் அவளுக்காகவே என்பதையும் சொன்னாள்.
திடீரென, ``வாட் இஸ் மீன் பை மதி?’’ என்று அவனின் பெயருக்கான அர்த்தத்தைக் கேட்டாள்.
``மதி... மதி மீன்ஸ் நிலா...’’ என்று அவன் கூறியது அவளுக்குப் புரியவில்லை.
சட்டென அவனுக்கு மூன் என்று ஆங்கிலம் வாயில் நுழையாததால் வானிலிருந்த நிலாவைக் காட்டி அவளுக்குப் புரியவைத்தான்.
``ஓ... யூ மீன் மூன். வாவ்! நைஸ் நேம்...’’ என்றாள்.
பேசிக்கொண்டே உணவருந்தியதால் மதி தன்னையும் அறியாமல் நிறைய சாப்பிட்டிருந்தான்.
இறுதியாக, அவள் கேக் ஒன்றினை அவனிடம் சாப்பிடச் சொல்லி நீட்டியபோது இதற்குமேல் தன் வயிற்றில் இடமில்லை என்பதுபோல முகபாவனை செய்தான் மதி. அது தான் ஸ்பெஷலாகச் செய்த கேக் என்று சொன்னாள். அதற்குப் பிறகு கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுப் பார்த்தான். கேக்கின் சுவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
``யூ லைக்டு தி டிஷ்?’’ என்று அவள் கேட்டதற்கு, உணவு அருமையாக இருந்ததெனச் சொன்னான். அதற்குப் பெயர் ‘மெடைரா கேக்’ என்றும், அது ஆங்கிலோ இந்திய வீடுகளில் பிரத்தியேகமாகச் செய்யப்படுவது என்றும் கூறினாள்.
அப்போது இதேபோல தனக்கும் மெட்ராஸ் உணவுகளைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் நெடுநாளாக இருப்பதையும், இதுவரை அந்த விருப்பம் நிறைவேறாததையும் சொன்னாள்.
``யூ நாட் வொரி ஆலிஸ்... நா கூட்டிட்டுப் போறேன்’’ என்றான்.
இறுதியாக அனைவரிடமும் சொல்லிவிட்டுப் புறப்படும் முன் ஆலிஸிடம் மட்டும், ``ஸ்பெஷல் தேங்க்ஸ் ஃபார் தட் கேக்’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னான். அன்று இரவு முழுக்க ஆலிஸின் புன்னகையும் அவள் செய்திருந்த கேக்கின் சுவையும் அவன் நினைவிலேயே இருந்தன.
சில நாள்களுக்குப் பிறகு தான் சொன்னபடியே அவளை அவ்வப்போது வெளியே அழைத்துச் சென்று மெட்ராஸின் ஸ்பெஷலான உணவுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அவளுக்கு வாங்கிக் கொடுத்தான். எல்லாவற்றையும் அவள் விரும்பிச் சாப்பிட்டாள். பொடி இட்லி, மசால் தோசை, குழிப்பணியாரம் தொடங்கி கடற்கரை நெத்திலி மீன் வறுவல், கோலா உருண்டை, சிக்கன் பக்கோடா வரை எல்லாவற்றையும் விரும்பிச் சாப்பிட்டாள்.
வேப்பேரி பக்கத்தில் கிடைத்த ரோஸ் மில்க்கும் பன்னீர் சோடாவும் பிடித்துப்போக, அடிக்கடி இருவரும் அங்கே சென்று அவற்றைப் பருகினர். இருவரையும் இணைக்கும் ஆதர்சப் புள்ளியாக உணவே இருந்தது. மதி அவள்மீது காட்டிய கனிவும் அக்கறையும் அவளை வெகுவாகக் கவர்ந்தது.
ஒருநாள், ``ஐ லவ் பீயிங் வித் யூ...’’ என்று அவள் சொன்னபோது அவனுக்குப் பெருமிதமாக இருந்தது.
அவள் வாசிக்க நினைக்கும் புத்தகங்களை வீட்டிற்கே வந்து கொடுக்கத் தொடங்கினான். ஒவ்வொருமுறை அவன் அவள் வீட்டிற்குச் செல்லும்போதும் அவனுக்கு கிடார் வாசிக்கக் கற்றுக் கொடுத்தாள்.
இன்னொரு நாள் தான் விருந்தின்போது சாப்பிட்ட மெடைரா கேக்கையும் ரெட் வொய்னையும் எப்படிச் செய்வது என்று அவளிடம் கேட்டான். பொறுமையாக அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.
பிராட்வே பேருந்து நிலையத்தின் பின்புறமிருக்கும் பெரியபாளையத்தம்மன் கோவில் அருகில்தான் மதியின் வீடு இருந்தது. திடீரென ஒருநாள் ``சர்ப்ரைஸ்ஸ்ஸ்...’’ என்று சொல்லியவாறே அவன் வீட்டிற்குள் நுழைந்தாள் ஆலிஸ்.
``ஒன்லி யூ கம் டு மை ஹவுஸ்? வொய் நாட் மீ?’’ என்று கேட்டாள்.
``ஸ்மால் ஹவுஸ் ஆலிஸ்’’ என்று அவன் கூறியதற்கு, ``ஐ லவ் திஸ் ஹவுஸ் அண்ட் பீப்பிள் ஹியர்’’ என்றாள்.
அந்தப் பகுதியில் ரிக்ஷாக்கள் அதிகம் இருந்ததால் அதில் பயணிக்க ஆசைப்பட்டாள். இருவரும் பக்கத்திலிருந்த தேவாலயத்திற்குச் சென்றுவந்தனர். இப்படியாக இருவருக்குமான நட்பு அதிகமாகிக்கொண்டே சென்றது.
அப்போது வெகுநாள்களாக இந்திய மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த வரலாற்று முக்கியச் செய்தி உலகெங்கும் ஒலித்தது. இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற செய்திதான் அது. நாடு முழுவதும் மக்கள் இனிப்புகளை வழங்கியும் கைகளில் தேசியக்கொடியை ஏந்தியும் உற்சாகமாக வலம்வந்தனர். குறிப்பாக தலைநகர் தில்லி தீபங்களால் ஒளிர்ந்தது.
ஆனால், இன்னொரு பக்கம் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்து ஆங்கிலேயர்கள் இங்கிருந்து வெளியேறியது பல ஆங்கிலோ இந்தியர்களைச் சிறுபான்மையாக உணர வைத்தது. மேலும், அவர்களுக்குத் தங்களின் எதிர்காலம் குறித்த பயமும் அதிகரித்திருந்தது. ஏனெனில் பெரும்பான்மையான ஆங்கிலோ இந்தியர்கள் சுதந்திரப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் காரர்கள் பக்கமே நின்றனர். ஆலிஸின் தந்தையான ரிச்சர்டும் அப்படியே.
அவர்களில் பலர் இங்கிருந்து வெளியேறி பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறத் தொடங்கினர். ரிச்சர்டும், ஆலிஸின் தாயான நான்சியும் பிரிட்டனுக்குப் போய்விடலாம் என எவ்வளவோ வற்புறுத்தியும்கூட ஆலிஸ் மெட்ராஸிலிருந்து வர மறுத்தாள். சார்லஸும் பிரிட்டன் செல்லவே விருப்பப்பட்டான்.
அவர்களின் வாழ்க்கைமுறை, கலாசாரம், உணவுப் பழக்கவழக்கங்கள் என எல்லாமே இந்தியர்களோடு தொடர்பில்லாதவையாக இருந்தும் ஏன் ஆலிஸ் தங்களுடன் வர மறுக்கிறாள் என்பது அவர்களுக்குப் புரியவேயில்லை.
``யூ நோ... தே ஆர் ஆஸ்கிங் மீ டு கம் டு பிரிட்டன்’’ என்று மதியிடம் அவள் சொன்னபோது அவன் அமைதியாகவே நின்றான்.
``ஐ திங் தீஸ் ஆர் மை லாஸ்ட் டேஸ் இன் இண்டியா’’ என்றாள். தன் பெற்றோர்களின் வற்புறுத்தல்களிலிருந்து ஓரளவுக்குமேல் தன்னால் தப்ப முடியாது என்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள்.
எப்படியும் அவள் இங்கிருந்து விரைவிலேயே விடைபெற வேண்டிவரும் என்பது அவனுக்கும் தெரிந்திருந்தது. நாட்டின் நிலைமையும் அவ்வாறாகவே இருந்தது. இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி அறிவிக்கப்படவுள்ளது என்பது போன்ற செய்திகளும் ஒருபக்கமிருந்து வந்து கொண்டிருந்தன. அப்படி ஒருவேளை நடந்தால் அதற்குமேல் இந்தியாவில் இருக்க முடியாது என்பதில் ரிச்சர்டும் நான்சியும் உறுதியாகவே இருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த அறிவிப்பும் வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு எஞ்சியிருந்த ஆங்கிலோ இந்தியர்களும் இந்திதான் அலுவல் மொழி என்று தெரிந்தவுடன் இங்கிருந்து புறப்படத் தயாராகினர்.
மதி இறுதியாக ஒருமுறை ஆலிஸுடன் சேர்ந்து மெடைரா கேக் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டான். அன்று அவளிடமிருந்து கற்றதை வைத்துத் தானே அந்தக் கேக் செய்து அவளுக்குக் கொடுத்தான். தன்னைவிட அவன் அற்புதமாகச் செய்திருப்பதாகப் பாராட்டினாள்.
``தேங்க்ஸ் ஃபார் தி பியூட்டிஃபுல் ஃப்ரெண்ட்ஷிப் மதி... தேங்க்ஸ் ஃபார் மேக்கிங் மை லாஸ்ட் டேஸ் ஸ்பெஷல்’’ என்று கண்கலங்கியபடியே அவள் நன்றி சொன்னபோது அவன் நெகிழ்ந்துபோனான். வழக்கமாக நிறைய பேசும் மதியிடம் அன்று வார்த்தைகளே இல்லை.
`என்ன துயரம் இது? இவ்வளவு நாள் இங்கேயே இருந்த பெண் எதற்காக திடீரென இங்கிருந்து செல்ல வேண்டும்? அப்படி விடைபெறவிருக்கும் தறுவாயில் எதற்காகத் தன்னைச் சந்திக்க வேண்டும்? எதற்காக இப்படி ஒரு நட்பு உருவாக வேண்டும்?’ என்று தனக்குத்தானே யோசித்துக் கொண்டிருந்தான். வாழ்க்கை முதல்முறையாக அவனுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது.
பிரிவதற்கு முன்பு மதியிடம் புத்தகம் ஒன்றை வழங்கிவிட்டுச் சென்றாள். `வித் லவ், ஆலிஸ்' என்று அதில் எழுதியிருந்தது. `ஆங்கிலோ இந்தியன் குக்கரி' என்ற பெயரில் 1804-ல் ஹிக்கின்பாதம்ஸ் வெளிட்ட அந்தப் புத்தகத்தில் அவர்களின் உணவுகள், அவற்றின் செய்முறை என எல்லாமே இடம்பெற்றிருந்தன.
ஆலிஸை அதற்குப் பிறகு மதி பார்க்கவில்லை. ஆலிஸ் இல்லாத மெட்ராஸ் தன் பழைய வசீகரத்தை இழந்திருப்பதாகக் கருதினான். இருவரும் உணவருந்திய கடைகளை அவ்வப்போது தூரத்தில் நின்று பார்த்துவிட்டு வருவான். அவள் சென்றபிறகு அவன் அந்தக் கடைகளில் ஒருபோதும் உணவருந்தியதில்லை.
பத்து வருடங்களுக்குப் பிறகு மூர் மார்க்கெட்டிலிருந்த தன் கடையை விற்றுவிட்டு மௌன்ட் ரோடில் பேக்கரி ஒன்றை ஆரம்பித்தான். அதற்கு ஆலிஸ் நினைவாக அவளின் பெயரை வைத்தான் மதி. ராயபுரம் பக்கத்தில் குடியிருந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி ஒருவரை அதற்கு குக்காக நியமித்தான். முழுக்க முழுக்க ஐரோப்பிய வகை ஸ்பெஷல் பண்டங்களே பேக்கரியில் பிரதானமாக இருந்தன. ஆலிஸ் பேக்கரியின் மெடைரா கேக்குக்கு மெட்ராஸ்வாசிகளிடையே மிகப்பெரிய ஆதரவு இருந்தது.
பேக்கரியிலிருந்து கிடைத்த வருமானத்தில் ஒவ்வொரு ஆண்டும் எக்மோர் பக்கத்தில் சின்னதாக ஆங்கிலோ இந்திய உணவுத் திருவிழா ஒன்றை நடத்தினான் மதி. அதற்குக் கிடைத்த வரவேற்பில் மெட்ராஸின் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல்களிலும் அதுபோல உணவுத் திருவிழா நடத்தித் தருமாறு அவனிடம் கேட்டனர்.
ஆலிஸ் இல்லாத குறையை இப்படியாக அவள் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்ற உணவுகளின் வழியாகவே போக்கிக்கொண்டான் மதி. அந்த பேக்கிரியும், மெடைரா கேக்கின் சுவையும் அவனுக்கு இறுதிவரை ஆலிஸை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தன.
உணவு என்பது வெறும் சுவைக்கானது மட்டுமன்றி மனிதர்களை நினைவூட்டும் கருவியும்தானே!