Published:Updated:

அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை

அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை

- எம்.ஜி.கன்னியப்பன்

அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை

- எம்.ஜி.கன்னியப்பன்

Published:Updated:
அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை

காலை பற்களை பிரஷ் பண்ணிக்கொண்டிருந்த கவுதமுக்கு இது அதிர்ஷ்ட அழைப்பென்று `ஆண்ட்ராய்ட்’ எடுத்து இந்த ``ஹலோ” சொல்லும் வரை தெரியாது.

“சொல்லுங்க. கவுதம்தான் பேசுறேன்.”

``மஜா பர்னிச்சர் ஷோரூம் மேனேஜர் பேசறேன். கங்கிராஜுலேஷன் சார். தீபாவளி லக்கி வின்னர் நீங்கதான்.”

நிஜமாகவே புரியாமல் ``புரியலை” என்றான்.

``தீபாவளி அன்னைக்கு எங்க ஷோரூம்ல கூப்பன் வாங்கியிருக்கிங்க. அதுக்கு ஐம்பதாயிரம் மதிப்புள்ள பரிசு விழுந்திருக்கு. கூப்பனோட ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி கொண்டு வந்து கலெக்ட் பண்ணிக்கலாம் சார்.”

“இதெல்லாம் வேணும்னு கூப்பன் கொடுக்கும்போது சொல்லலையே...”

``எங்க ஓனர் `மிட் நைட்’ல திடீர்னு யோசிச்சுச் சொன்னார். பாலோ பண்றோம்.” தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை

கடந்த தீபாவளிக்கு முதல் நாள். தினசரி பேப்பரில் கட்டிய உளுத்தம் பருப்புப் பொட்டலம் பிரித்து டப்பாவில் கொட்டியபோதுதான் மோகனா கண்ணில் அந்த விளம்பரம் பட்டது. அது பர்னிச்சர் ஷோரூமின் தீபாவளி ஆஃபர். தீபாவளியன்று 1,000 ரூபாய்க்கு பொருள்கள் வாங்குபவர்களில் அதிர்ஷ்ட கூப்பன் மூலம் குலுக்கல் முறையில் தேர்வாகும் ஒருவருக்கு 50,000 மதிப்புள்ள பொருள் இலவசம் என்றிருந்தது.

கண்ணாடி முன் நின்றிருந்த கவுதம் கன்னத்தில் கிரீம் தடவி, கன்னச் சதையை உயர்த்திப் பிடித்து மிஷின் வைத்து இழுத்தான். பிளேடுக்கு இது ஆறாவது ஷேவ் என்பதால் `வரட் வரட்’ என்றது.

`என்னங்க, நாளைக்கு இந்தக் கடையில 1,000 ரூபாய்ல எதாச்சும் பர்சேஸ் பண்ணி, பரிசுக் கூப்பனை வாங்கணும்.’

இடது பக்கம் இழுத்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

`என்ன லுக்கு... நாளை போறோம். ரெண்டு பிளாஸ்டிக் சேர் வாங்குறோம். ஐம்பதாயிரம் பரிசை வின் பண்றோம்.’

`வாங்கறது சரி. ஹால்ல ரெண்டு சேர் போட்டா கிச்சன் போக வர இடைஞ்சலா இருக்கும். வேறு வீடு போகும்போது வாங்கிக்கலாமே.’ அவ்வளவுதான் சொன்னான்.

மோகனா அன்றிரவு குழந்தைகள் அறையில் படுத்துக்கொண்டாள். வழக்கமாய் இருவரும் ஹாலில்தான் வசதியாய் படுப்பது. அவளது எதிர்ப்பை இப்படித்தான் அவன் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்கழியில் சோதிக்கிறாள். `சரி காலை போலாம் வா’ என்றான் கனிவுடன்.

இடுப்பில் கால் போட்டுக்கொண்டிருந்த 4 வயது மகள் ரித்திகாவின் தூக்கம் கெடாமல் காலைத் தூக்கிக் கீழே வைத்துவிட்டு எழுந்தாள்.

விளம்பர பேப்பரில் இருந்த விலாசம் தேடி `ஷோரூம்’ கண்டுபிடித்து இரண்டு பிளாஸ்டிக் சேர், ஆயிரத்து சொச்சம். கூப்பனில் பெயர் எழுதிப் பாதி கிழித்து பாக்ஸ் உண்டியலில் போட்டுவிட்டு வந்ததுதான், அதற்கப்புறம் மறந்தேபோயிற்று.

மோகனாவிடம் விவரம் சொன்னதும் ``எஸ்’’ கை மடக்கி வெற்றிக் குறியிட்டு... ``தெரியும். ரித்திகா கைராசி. பட்டுக் கையால் கூப்பனைப் போட்டதுதான் இவ்ளோ பெரிய அதிர்ஷ்டம்” என்றாள்.

கவுதம் குளித்து வருவதற்குள் அதிர்ஷ்ட கூப்பனை போட்டோ எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா அத்தனையிலும் பரப்பியிருந்தாள். மும்முனையிலிருந்தும் அதனதன் இசையில் வாழ்த்து வந்த வண்ணமிருந்தது.

``ஏங்க, ஐம்பதாயிரம் மதிப்புள்ள எத்தனை பொருள்கள் வேணாலும் எடுத்துக்கலாமா?”

“தெரியிலம்மா… அங்க போனாதான் தெரியும்.”

``எங்கப்பா ஈஸி சேர் கேட்டுட்டே இருந்தார். அப்றம் எனக்கு சின்னதா மிரர் வெச்ச டிரஸ்ஸிங் டேபிள், குழந்தைகள் எழுத படிக்க ரைட்டிங் டெஸ்க், மழைக்காலத்துல ரூம்லயே துணி உலர்த்த ஹாங்கர்…” அவள் யோசித்து யோசித்துச் சொல்லிக்கொண்டிருக்க...

``சரி, இதெல்லாம் வாங்கிட்டு வந்து வீட்ல வெச்சிட்டு நாம வாசல்ல படுத்துக்கணுமா? குட்டியூண்டு வீட்ல இன்னொரு பீரோ வைக்க இடமில்லாமதான வாங்காம இருக்கோம். பொருளுக்கு பதிலா பணமா கேட்டுப் பாக்கலாம். கொறைச்சிக் கொடுத்தாக்கூட போதும்” என்றபோது...

மோகனாவுக்கு வந்த செல் அழைப்பை ஏற்று ``சொல்லுங்க சித்தி.” ஸ்பீக்கரில் வைத்தாள். ``அம்மாடி. பிரைஸ்ல எனக்கு ஒரு பூஜை ஸ்டேண்ட் வாங்கிக்க. பணம் கொடுத்துடறேன். சென்னை மாதிரி சேலத்துல தரமானது கெடைக்காது.”

``சரிங்க சித்தி. டோர்ல பெல் இருக்கிற மாதிரிதான, வாங்கிடறேன்.”

அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை

``ஏம்மா... கொஞ்ச நேரத்துல சேலம் வரைக்கும் பரப்பிட்டியா?” என்றதுக்கு பதில் சொல்லுமுன் மீண்டும் அழைப்பு.

அவனிடம், ``மலேசியாலேர்ந்து வைஜூ பேசறா.” அவளிடம், ``ஆமாண்டி… ஐம்பதாயிரம்தான்” என்றபடி கிச்சனுக்குள் சென்றாள்.

ஸ்கூட்டரில் தம்பதியர் `மஜா’ ஷோரூமில் இறங்கினார்கள்.

மேனேஜர் கூப்பன் பெற்று `கவுதம்தானா’ என்பதற்கு அவனிடம் பெறப்பட்ட கார்டுகளில் இருந்த போட்டோவையும் அவனையும் உற்று உற்றுப் பார்த்துவிட்டு, ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்க…

மோகனா. நின்ற இடத்திலிருந்து தனக்குத் தேவையானது தேடிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வாங்க, பிரைஸைப் பார்த்துடலாம்.” உள்ளே உள்ளே குடோன் போன்ற இடத்துக்குக் கூட்டிப் போனார்.

``இதோ சார். உங்க பரிசு... மூணாயிரம் பேர்ல உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு.” மேனேஜர் கை காட்டின இடத்தில் கிரே கலர் ரெக்ஸின் அணிந்த சோபா, சுமோ விளையாட்டு வீரனைப் போல் கால் அகட்டி உட்கார்ந்திருந்தது. பெரிய பின்புறம் கொண்ட மூவர் சௌகர்யமாக அமரலாம்.

``இதுவா..?” மோகனாவின் `இதுவா’வில் ஏமாற்றம், அதிர்ச்சி, கோபமிருந்தன. சோபா அதே இடத்தில் பல மாதங்கள் சீண்டப்படாததன் அறிகுறி. கவுதம் ஒரு பகுதியில் தொட்டு இழுக்க, தூசு விரலில் ஒட்டிக்கொண்டு வந்தது.

அதை கவனித்த மேனேஜர் துடைப்பத்தில் தரை பெருக்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் “இதை கிளீன் பண்ணு” என்க, அதே துடைப்பத்தால் சோபாவின் நாலா பக்கமும் தட்டிவிட்டாள். கீழே பழைய துணி எடுத்து ஒப்புக்குத் துடைத்துவிட்டு மீண்டும் பெருக்க ஆரம்பித்தாள்.

``சோபாவுக்கு பதிலா அதே அமவுண்ட்டுக்கு வேற ’எக்ஸேஞ்ச்’ பண்ணிக்கலாமா..?”

“இல்ல மேடம். ஷோரூம் ஆரம்பிச்சதுலேர்ந்து சோபாதான் கொடுத்துட்டிருக்கோம்.”

``வீட்ல போட இடமில்லை. பாதியளவு பணம் கொடுத்தாகூட போதும்.”

``ஸாரி கவுதம் சார். வாய்ப்பில்லை. வேன் வரவெச்சி எடுத்துட்டுப் போயிடுங்க.”

“உங்க கடை வேன்ல கொண்டு வந்து டெலிவரி பண்ண மாட்டிங்களா..?”

“இல்ல சார். இனிமே இது உங்க பொறுப்புதான்.”

“அதான் சொல்லிட்டாருல்ல… வந்ததை விடுவானேன். வீட்ல சோபா இருக்கிறது சௌகரியம்தானே.” கவுதம் தயங்கித் தலையாட்டினான்.

சோபா முன் இருவரையும் நிற்கவும், அமரவும் வைத்து, கைப் பகுதியில், பிள்ளைகள் தாயைக் கட்டிக் கொள்வதுபோல், ஆளுக்கொரு பக்கம் வாஞ்சையோடு தலை சாய்ந்து கொள்ளும்படி வற்புறுத்தி, வேண்டிய மட்டும் படம் பிடித்தார்கள். ``மஜாவுக்கு வாங்க, மஜாவா போங்க” கேமரா பார்த்துச் சிரித்தபடி `தம்ஸ் அப்’ வேறு காட்டச் சொன்னார்கள்.

பேரம் பேசி 650-க்கு ஒத்துக்கொண்ட வேன் வரவழைத்து குட்டி யானையொன்றை நீட்ட வாக்கில் இழுத்து `செலபன்’ டேப் சுற்றியது போன்ற தோற்றத்தில் சோபாவை ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

சோபா முதலில் ஹவுஸ் ஓனர் கண்ணில் பட்டதும். கவுதமுக்குப் பதைபதைத்தது. நிச்சயம் இந்த மாதத்திலிருந்து வாடகை 100 எகிரும்.

எவ்வளவு முயன்றும் சோபாவை வீட்டினுள் கொண்டு செல்ல முடியவில்லை.

“கார்ப்பெண்டரைக் கூப்பிட்டு பக்கவாட்டு நிலைப்படியை அரை இன்ச் அளவு இழைப் புளியால் இழைத்தால் கொண்டு செல்லலாம்.” ஐடியா கொடுப்பதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட அங்குள்ள சிலரின் யோசனை.

தெரிந்த சில கார்ப்பெண்டர்கள் கலெக்டர்களைவிட பிஸியாக இருந்தார்கள்.

இரண்டு மணியளவில் வந்த கார்ப்பெண்டர், சோபா உயரம், சுற்று வட்டம், கைப்பிடி, குறுக்கு வட்டத் தோற்றம், கால் தடிமன் வரைக்கும் ஆராய்ந்தார். சோபாவை விண்கலன் ஏற்றி வான்வெளி அனுப்புவது போன்ற ஒரு நாசா விஞ்ஞானியின் செயல் அவரிடம் இருந்தது.

``அண்ணே, 100 ரூபா அதிகம் வேணாலும் கொடுக்கிறேன். பயமுறுத்தாம வேலைய பாருங்க” என்றதும்தான் இழைப்புளி எடுத்துக்கொண்டு கதவுக்குச் சென்றார்.

அதற்குள் மோகனா சோபாவுக்கு ஹாலில் இடம் தோது பண்ணியதில் புதுச் சேர்கள் பரணுக்குச் சென்றன. கவுதம் துணி அடுக்கப்பட்ட மர ரேக், டி.வி-க்குப் பின்னால் மறைந்தது.

வீட்டினுள் நுழைக்கப்பட்ட சோபாவில் கவுதம், மோகனா, குழந்தைகள் என நால்வரும் ஒரே நேரத்தில் உட்கார வேண்டுமெனும் மோகனா ஆசைக்கு மனிதச் சங்கிலி போல் கைகோத்து ``ஒன்.. டூ.. த்ரீ” சொல்லி உட்கார்ந்தார்கள்.

பரிசுப் பொருள் என்பதால் மோகனாவுக்குப் பெருமை தாங்கவில்லை. சோபாவில் உட்கார்ந்து காய்கள் நறுக்கினாள், கீரை கிள்ளினாள், தலை சீவினாள், சாப்பிட்டாள். செல்ஃபி எடுத்தாள். படுத்துக்கொண்டு டி.வி பார்த்தாள். மணிக்கொருதரம் ஈரத் துணி வைத்துத் துடைத்தாள். குழந்தைகள் ரெக்‌சினில் கீறி வைக்கும் என்று அதட்டிக்கொண்டே இருந்தாள்.

அன்று எதிர் வீட்டு தனலட்சுமி ``இந்த சோபாதானா... இதுவா ஐம்பதாயிரம்..? இதே மாதிரிதான் ஏம் பொண்ணுக்கு பன்னண்டாயிரத்துக்கு வாங்கிக் கொடுத்தேன்.” வந்த நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் சென்றாள்.

பக்கத்து வீட்டு வரலட்சுமி சோபாவைப் பார்த்துவிட்டு `மேல கவர் போட்டா ரொம்ப நாள் வரும்’ என்ற யோசனைக்கு, 450 ரூபாயில் கவர் வாங்கி கவர் செய்தாயிற்று.

சுற்றுச்சூழ வாழும் மோகனாவின் நண்பிகள் வந்து சோபாவைப் பார்த்துவிட்டு 120 ஆண்டுகள் சிதையாமல் இருக்க பாதுகாப்பு சொலிஷன்களை வழங்கினார்கள்.

மாடி வீட்டு ஆனந்தன், கவுதம் வீட்டினுள் எட்டிப் பார்த்துவிட்டு, “எலி மட்டும் வராம பாத்துக்கங்க. கடிச்சி நாசம் பண்ணிரும்.” மோகனாவுக்கு பகீரென்றது.

வீட்டில் எலித் தொல்லை இருப்பது உண்மை. புத்தகம். துணி, திண்பண்டம் ஒன்றும் விட்டு வைப்பதில்லை. எலிக்குத் தின்னக் கொடுக்கவா இவ்வளவு சிரமப்பட்டது.

போன ஜென்மம் எலி வகையறாவில் பிறந்தவள் போல ``நீங்க சோபாவில் படுத்துக்கங்க, ஆள் இருந்தா எலி கிட்ட வராது” என்றதோடு, கவுதம் கையில் ஒரு இரும்பு பைப் கொடுத்து ``மீறி வந்தா கொன்னுடுங்க. ஆனதைப் பாத்துக்கலாம்” கூலிப்படைத் தலைவிபோல் ஆணையிட்டு, குழந்தைகளுடன் கதவடைத்தாள்.

இரவில் `கிரீச்… கிரீச்...’ சத்தத்துடன் எலிகள் கவுதம் மீதே ஏறி ஓடின. விடியும் வரை கையில் பைப்போடு உட்கார்ந்திருந்தான். இப்படி எத்தனை நாள்கள் தூங்காமல் கிடப்பது. சோபாமீது ஆத்திரம் வந்தது. எட்டி உதைக்கலாம் போலிருந்தது. பாவம் இது என்ன பண்ணும்..? உதைபடும் ஆள் இந்நேரம் தூங்கியிருப்பாள்.

அன்று எதிர்வீட்டு சுசீலா ``மோகனா, ஏம் பொண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீடு வர்றாங்க... வர்றவங்களை சேரைவிட சோபால உட்கார வெச்சா நல்லா இருக்கும். உங்க சோபாவை எடுத்துட்டுப் போகட்டுமா?” என்றாள்.

மோகனா கவுதமைப் பார்த்தாள். `வேண்டாம்’ சொல்ல முடியாது. அவசரத்துக்கு சுசீலாவிடம் வாங்கும் 500, 1000 கடனுக்குச் சிக்கல் வந்துவிடும்.

எடுத்துச் சென்று, திரும்பி வரும்போது சோபா வலப்புறக் காலில் ஒரு பூண்டுப் பல் அளவு மரக்கட்டை சிதைந்திருந்தது. அதைச் சரி பண்ணித் தரக் கேட்கவும் முடியாது.

அதற்குப் பின், தெருவில் நடக்கும் பிறந்த நாள், மஞ்சள் நீராட்டு, சாந்தி முகூர்த்தம், காது குத்து, 16ஆம் நாள் காரியம் என, பிரசவம் தவிர எல்லாவற்றுக்கும் சோபாவைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

ஒவ்வொரு வீட்டுக்கும் கவுதம் பந்தோபஸ்துக்குச் சென்று சோபாவைப் பாதுகாக்க வேண்டுமென்பது மோகனா உத்தரவு. சில மாதங்களில் தெருவினருக்கு கவுதம் பேர் மறந்து சோபாக்காரர் என்றாகிவிட்டது.

போதாதற்கு மகன் உடன் படிக்கும் சிறுவர்களைக் கூட்டி வந்து ``ஐ ஜாலி... ஐ ஜாலி’’ என்று சோபாவில் குதித்துக் குதித்து அமர்க்களம் பண்ணினான்.

ஒரு முறை ரித்திகா சோபாவிலிருந்து குதிக்கிறேன் என்று `ஹே...’வென கைகளைத் தூக்கிக்கொண்டு குதிக்க… தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு 500 தண்டம்.

அன்றிரவு மோகனாவிடம் ``சோபா வந்ததுலேர்ந்து ஏகப்பட்ட தண்டச் செலவு. வீட்டையும் அடைச்சிட்டு இருக்கு. வித்துடலாமா?”

``ம்கூம்... சோபாவை விக்கிறது அதிர்ஷ்ட தேவதையை அவமானப்படுத்துற மாதிரி. அப்பறம் எந்தக் காலமும் தேவதை நம்மளைச் சீந்த மாட்டா.”

``இல்லம்மா, வண்டி வாடகைலேர்ந்து ரித்திகா ஆஸ்பிட்டல் வரைக்கும் சில ஆயிரங்கள் பிரயோஜனமில்லாத செலவு.”

``சோபா கொண்டு வந்த நாள், நேரம் குறிச்சு ஜோசியர்கிட்ட கேட்டா சொல்லிடுவார். பரிகாரம் பண்ணிட்டா போச்சு. விற்கிற பேச்சை எடுக்காதீங்க.” கோபமாய் எழுந்து குழந்தைகளுடன் படுக்கச் சென்றுவிட்டாள்.

கவுதம், மோகனா எதிரே அமர்ந்திருந்த ஜோசியர் சீரியல் ஆக்டர் போல காமெடியாக இருந்தார். மொபைலில் சோபா புகைப்படம் பார்த்தார், கண் மூடி ஏதோ முணுமுணுத்துவிட்டு... ‘‘சோபாவுக்கு திருஷ்டி பட்டிருக்கு. வீட்டுக்குள்ள கொண்டு போறதுக்கு முன்னாடி எலுமிச்சை அறுத்துக் குங்குமம் தடவி நாலு திசையிலேயும் வீசுனிங்களா?” என்றார்.

``இல்லை ஜோசியரே” பெரும் குற்றத்துக்கு ஆளானவள்போல் பார்த்தாள்.

``அதான் ஊரார் கண் பட்டிருக்கு. கண் திருஷ்டி கணபதி கோவில்ல 12 வெள்ளிக்கிழமை தேங்காய் உடைச்சி வணங்குங்க சரியாயிடும்” என்றவருக்கு 300 ரூபாய். 12 வெள்ளிக்கிழமை தேங்காய் மற்றும் மோகனா கோவில் போக வர ஆட்டோ செலவும் சோபா கணக்கில் ஏறியது.

அதிர்ஷ்ட தேவதை - சிறுகதை

சோபாவை வைத்து சமாளிக்க முடியவில்லை. செலவுக்கு மேல் செலவு. எல்லாமே வீண் செலவு. அதைவிட வீட்டை அடைத்துக்கொண்டு பெரும் சிரமம்.

ஒரு நாள் இரவு கவுதம் சோபாவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது யாரோ கவுதம் நெஞ்சில் ஏறி மிதிப்பது போல் உணர, அலறலுடன் திடுக்கிட்டு எழுந்தான்.

சத்தம் கேட்டு மோகனா பீதியுடன் ஹாலில் வந்து பார்க்க, கவுதம் முகம் வேர்த்து குளிரில் நடுங்குவது போல் உதறிக்கொண்டு கிடந்தான்.

காலை நடந்ததை விவரித்தான். ஆரம்பத்தில் மோகனா துளியும் நம்பவில்லை. திடீரென விழும் பாத்திரங்கள், இரவில் பூனையின் அமானுஷ்ய அழுகை மோகனாவுக்கு பயத்தை உண்டுபண்ணின. அன்றிரவு மோகனா சோபாவிலும், கவுதம் குழந்தைகளிடமும் தூங்க ஏற்பாடாயிற்று.

மோகனா முழுக்க போர்வையில் புகுந்திருந்த நள்ளிரவில் கழுத்து நெரிக்கப்பட்டது. மூச்சுத் திணறினாள். ஓலமிட்டாள், கண் திறந்தபோது ஹாலில் யாரும் இல்லை.

``இதை வித்துடுங்க... இதை வித்துடுங்க” சோபாவை வெறித்தபடி அலறினாள்.

``மஜா பர்னிச்சர் மேனேஜரா...”

``ஆமா...’’

``சோபாவை விற்கலாம்னு இருக்கோம்.”

“ஏன்... இவ்ளோ சீக்கிரம்..?”

“வேண்டாம்னு முடிவு பண்ணியாச்சு... பழைய பர்னிச்சர் வாங்கிற இடம் இருந்தா சொல்லுங்க.”

``ராமாபுரம் மெயின் ரோட்டுல `ரிட்டர்ன் உட் மார்ட்’னு ஒரு கடை இருக்கு. வாங்கிக்குவாங்க.”

மீண்டும் 750-க்கு வேன் பேசி சோபாவை ஏற்றி `ரிட்டர்ன் உட்’ டில் இறக்க, 3600 ரூபாய்க்கு மேல் சல்லிக் காசு பேரவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிர்ஷ்ட தேவதையால் 650 ரூபாய் நஷ்டம்தான். ஆனாலும், கவுதம் மன பாரம் இறங்கியது.

ஆனால், கவுதம் அலறியது பொய் என்பதும், மோகனா கழுத்தை நெரித்தது அவன் என்பதும் இதுவரை அவனும் சொல்லவில்லை, அவளும் கண்டுபிடிக்கவில்லை.

அன்று கவுதம் ஸ்கூட்டியில் `மஜா பர்னிச்சர் ஷோரூம்’ கடந்தபோது. எதேச்சையாக அதை கவனித்தான். அதே சோபா. காலில் பூண்டுப் பல் அளவு சேதம் நன்றாகத் தெரிந்தது. ஒரு குடும்பம் அதைப் புத்தாண்டுப் பரிசாக வேனில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். `ஷோரூம் ஆரம்பிச்சதுலேர்ந்து சோபாதான் பரிசா கொடுக்கிறோம்.’ மேனேஜர் சொன்னது நினைவு வந்தது. ஆக, அதிர்ஷ்ட தேவதை `ரிட்டர்ன் உட்’ கடைக்கும், `மஜா’ ஷோரூமுக்கும் வருவதும் போவதுமாக இருப்பது கவுதமுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அப்போது அந்த `மஜா’ கடை ஊழியன் `பொங்கல் பண்டிகை அதிர்ஷ்டப் பரிசு 50,000 மதிப்புள்ள பொருள் இலவசம்’ விளம்பர நோட்டீஸை கவுதம் கையில் திணித்துவிட்டுச் செல்ல...

அதில், கவுதமும் மோகனாவும் சோபாவை வாஞ்சையோடு கட்டிக்கொண்டு இருந்தார்கள்.