சினிமா
Published:Updated:

ஜவுளிக் கடையை முதுகில் சுமப்பவனும் வலைமீன் கண்களும் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- புலியூர் முருகேசன்

நகரம் இருள் கவியத் தொடங்கும் பொழுதிற் காகத் தயாரானது. பெருமரங்களுக்குக் கூட்டமாய்த் திரும்பிய பறவைகள் கொத்துக் கொத்தாய் சத்தங்களை வீசிக் கொண்டிருந்தன. கடைக் காரர்கள் மின்விளக்குகளை எரியச் செய்ததும் கீறலளவு பக்தியுடன் கன்னத்தை விரல்களால் தட்டிக் கொண்டனர். அது புழுதிக்காலமென்பதால் உயர்ந்து நிற்கும் சோடிய விளக்கொளியில் மஞ்சள் புழுதி அடர்ந்து பரவியது.

ஆற்றுப்பாலம் பகுதியிலிருந்து அவர்கள் நடக்கத் தொடங்கி னார்கள். அவர்கள் முதுகில் நகரின் பிரபல ஜவுளிக்கடையின் விளம்பரப்பலகை ஒளிர்ந்து கொண்டிருந்தது. நீள் செவ்வக வடிவிலான விளம்பரப் பலகை இடுப்பிலும் நெஞ்சுப் பகுதியிலும் வார்கொண்டு பிணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பத்துப் பேரும் வரிசையாக நடந்தனர்.

பிரகாஷ் வரிசையின் முதலாவது நபராக இருந்தான். அவன் மட்டும் முகத்தைக் கைக்குட்டையால் மூடியிருப்பது வித்தியாசப்படுத்திக் காட்டியது. அவர்கள் எல்லோரும் குனிந்தபடியே ஊர்ந்தனர். பின்னால் சைக்கிள்களிலும் வண்டிகளிலும் வருபவர்கள் விளம்பரப் பலகையைப் பார்த்து விட்டு, அவர்களைக் கடக்கும்போது திரும்பி முகத்தை உற்று நோக்கிவிட்டே சென்றனர். நடக்கும்போது முன்புறம் குனிந்தபடி நடக்க வேண்டும், அப்போதுதான் ஒளிரும் விளம்பரப் பலகை பார்ப்பவர்களின் கண்களுக்கு வாட்டமாகத் தெரியும் என ஜவுளி நிறுவனம் கட்டளையிட்டிருந்ததை பிரகாஷ் சௌகரியமாக உணர்ந்தான். பிறந்து வளர்ந்த ஊரின் ஆற்றங்கரை வீதியில், பெரியகோயில் சாலையில், மருத்துவக் கல்லூரிப் பகுதிகளில் தெரிந்தவர்களைப் பார்ப்பது கூச்சத்தைத் தந்தது. முகத்தைக் கைக்குட்டையால் மூடிக் குனிந்தபடி நடப்பது ஒருவிதத்தில் நிம்மதியாக இருந்தது.

ஜவுளிக் கடையை முதுகில் சுமப்பவனும் வலைமீன் கண்களும் - சிறுகதை

ஆற்றுப்பாலத்தில் கிளம்பிய விளம்பரப்பலகை ஊர்வலம், பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே போனதும் இடதுபுறம் திரும்பிப் பெரிய கோயில், ராணி பேரடைஸ், மேம்பாலம் தாண்டி மருத்துவக் கல்லூரிச் சாலையில் பாலாஜி நகர் வரை சென்று திரும்பி மீண்டும் ஆற்றுப்பாலத்தில் வந்து முடிவடையும். சில நாள்களில் மருத்துவக் கல்லூரிவரை சென்று திரும்ப வேண்டும். மழைக்காலம் தவிர எல்லாக் காலத்திலும் சாலையில் புழுதி ஆளுயரத்திற்கு அலைவுற்றுக்கொண்டே இருக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்து ஐந்து வருடங்களாக ஆறு மாதத்திற்கொரு வேலை என அலைந்துகொண்டிருந்த பிரகாஷ், இதில் நிலைத்திருக்க விரும்பினான். அதற்குக் காரணம் அவள்.

அவளை முதன்முதலாகப் பார்த்தது மருத்துவக் கல்லூரியின் முதல்கேட் அருகே மாலைநேர பானிபூரிக்கடையில்தான். அது ஒரு அழியாத ஓவிய நினைவு பிரகாஷுக்கு.

காலை நேரத்தில் வெளிப்புற நோயாளிகளால் நிரம்பித் ததும்பும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாலையில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தொடங்கும். தஞ்சை மருத்துவக் கல்லூரியின் பரப்பளவு பெரியதென்பதால் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. மாலை கவியத் தொடங்கியதும் ஒவ்வொரு நுழைவாயில் அருகேயும் தள்ளுவண்டிக் கடைகள் வரிசையாக இடம்பிடிக்கும். பர்மா கௌசா கடை, இட்லிக் கடை, சிக்கன் 65 கடை, ஆட்டுக்கால் சூப், சுண்டல் கடை என விதவிதமாக ருசிக்கலாம்.

பெரிய வளைவுடன் பளீரிடும் விளக்கொளியைக் கொண்ட முதல் கேட் முன்புறம் இருக்கும் பானிபூரிக் கடையில் எந்நேரமும் கூட்டம் இருக்கும். குறிப்பாக, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அது மிகவும் பிடித்தமான கடை.

வழக்கம்போல சிநேகிதிகளுடன் சிரித்துப் பேசியபடி நின்றுகொண்டிருந்த அவள் விளம்பரப்பலகையை முதுகில் ஏந்தி ஊர்வலமாக வருபவர்களைத் திகைப்புடன் பார்த்தாள். ‘இப்படியெல்லாமா ஜவுளிக்கடையை விளம்பரப்படுத்துவார்கள்!’ என்கிற பச்சாதாபம் உண்டானது அவளுக்குள். மற்றவர்களெல்லாம் ஏளனமாய்ப் பார்க்க, அவள் கண்கள் மட்டும் இரக்கம் ததும்ப இருந்ததை பிரகாஷும் கண்டுகொண்டான்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு பகற்பொழுதில் வீட்டுக்கு வெளியே வந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவன் வீடிருக்கும் தெருவிலிருந்து டூவீலரைக் கிளப்பி அவள் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தான்.

அம்மாவிடம் தயக்கத்துடன் அவளைப் பற்றி விசாரித்தான். ‘‘என்னடா, இப்பிடியெல்லாம் எந்தப் பொண்ணப் பத்தியும் இதுவரைக்கும் விசாரிச்சதில்லையே! என்னா விசயம், எதும் லவ்வா?’’ எனக் கேட்ட அம்மாவிடம் ஏதேதோ உளறினாலும் தகவலைச் சேகரிக்கத் தவறவில்லை. நாகூரைத் தாண்டியிருக்கும் வாஞ்சூர் சொந்த ஊர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் மூன்று மாணவிகள் சேர்ந்து வீடெடுத்துத் தங்கியிருக்கின்றனர், பெயர் ஆனந்தி என அனைத்தையும் அம்மா சொல்லித் தெரிந்துகொண்டான்.

அதன்பிறகு வாரத்திற்கு ஒருமுறையாவது மருத்துவக் கல்லூரிவரை விளம்பரப் பலகை ஊர்வலம் நீண்டு திரும்பும். ஆனந்தியை அந்த இடத்தில் பார்க்காமல் திரும்பியதில்லை. கண்கள் மட்டும் தெரியும் அளவிற்கு கைக்குட்டையால் முகம் மறைத்துக் கட்டியிருக்கும் பிரகாஷை ஒருசில விநாடிகள் ஆனந்தி உற்று நோக்குவதன் அர்த்தம் புரிந்த மாதிரியே இருந்தது. ஆனால், ஒரு குழப்பம் மட்டும் தீரவில்லை. பகல் நேரத்தில் அவளின் கண்களில் படும்படி எதிரே வந்தாலும், ஒருநாள்கூட அவள் தெரிந்ததாகக் காட்டிக் கொள்வதில்லை. அது ஏனென்று அவனுக்குப் புரியவில்லை.

அதை அன்றைய சனிக்கிழமை இரவில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே சந்திரனுடன் சேர்ந்து மது அருந்தும்போது அவனிடம் கேட்டுவிட்டான்.

“நாஞ் சொன்னன்ல. அந்தப் பொண்ணு மொகத்த கர்ச்சீப்பால கட்டியிருக்கிறப்ப நல்லா உத்துப் பார்க்குது. அதுமாதிரி என்னைய இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்ல. பார்வையா அது? குணங்குடிதாசன் பால்சர்பத் மாதிரி சும்மா ஜில்லுன்னு உள்ள பாயுந்தெரியுமா! ஆனா, எங்க தெருவுல பார்க்கறப்ப தெரியாதது மாதிரியே போவுது. என்னவா இருக்கும்டா சந்திரா?”

“ம்… அதான் நானும் யோசிக்கிறேன். இப்பிடி செஞ்சு பாரேன். பகல் நேரத்துல ஒங்க தெருவுல எதுத்தாப்புடி பார்க்கறப்ப சட்டுன்னு கர்ச்சீப்ப எடுத்து அதே மாதிரி கட்டிக் காட்டேன். அப்ப கண்டிப்பா அடையாளம் தெரிஞ்சுக்கும்” என்றான். ஆனால் அது சரிவருமா என யோசித்தான் பிரகாஷ்.

ஜவுளிக் கடையை முதுகில் சுமப்பவனும் வலைமீன் கண்களும் - சிறுகதை

இருக்கிற நண்பர்களிலேயே பிரகாஷுக்கு மிக முக்கியமானவன் சந்திரன். அவனுக்கும் நிரந்தர வேலை ஏதும் கிடைக்கவில்லை. வண்டியில் எந்நேரமும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு ‘உணவு டோர் டெலிவரி’ செய்யும் கம்பெனியில் டெலிவரி பாய் வேலை கிடைத்தது. காலையிலிருந்து இரவு பத்து பதினொரு மணிவரைகூட டெலிவரி செய்ய வேண்டியிருக்கும். நகருக்குள்ளேயே வந்துகொண்டிருந்த ஆர்டர்கள் இப்போது வல்லம், பள்ளியக்ரஹாரம், மாரியம்மன் கோவில், பட்டுக்கோட்டை பைபாஸ்வரை தொலைவை நீட்டித்துவிட்டன. சத்தார் பிரியாணியிலிருந்து ஐம்பது ரூபாய் பர்மா கௌசாவரை எல்லாவற்றையும் மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யவே விரும்புகிறார்கள்.

இன்ஜினீயரிங் படித்தும் வேலை கிடைக்காத அதிகம்பேர் அந்தக் கம்பெனியின் சிவப்பு நிற டீசர்ட், சதுர வடிவப் பை என அன்றாட வாழ்க்கையைத் தேர்வு செய்துகொண்டனர். ‘நாற்பதாயிரம் ரூபாய்வரை சம்பாதிக்கின்றனர்’ என்ற புரளியே நிறைய பேரை அந்த டீசர்ட்டை அணியச் செய்தது. நிரந்தரச் சம்பளம் கிடையாது. ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் ஓரளவிற்கு வருமானம் கிடைக்கும். அதற்காக நாளொன்றுக்குப் பதினாறு மணிநேரம்வரை வண்டியில் அலைய வேண்டும்.

சந்திரன் வெறித்தனமாக ஆர்டர் எடுத்து டெலிவரி செய்வான். பெட்ரோல் செலவு போக மாதம் இருபதாயிரத்திற்குக் குறையாமல் பார்த்துக்கொள்வான். நகரின் அத்தனை சந்துகளும் அவனுக்குத் தெரியும். ஆர்டரின் முகவரியைப் பார்த்ததும் கூகுள் மேப் வழியைத் தேடுவதற்குள், மனக்கண்ணால் ஒவ்வொரு சந்தாக அவனுடைய வண்டி புகுந்து சென்று முகவரியைச் சரிபார்த்துக்கொள்ளும்.

நகரின் மத்தியிலிருக்கும் ஐஸ்கிரீம் பாரின் கசட்டாபால் கேட்டு ஒருமுறை ஆர்டர் வந்திருந்தது. அதுவும் வல்லத்திலிருந்து. மே மாதத்தில் அவ்வளவு தூரம் ஐஸ்கிரீமைக் கொண்டு செல்வது சரி வராது என நினைத்தான் சந்திரன். இருந்தாலும் டெலிவரிக்குக் கிளம்பினான். நினைத்தது நடந்துவிட்டது. கதவைத் திறந்து டெலிவரிக் கவரை வாங்கிய பெண்மணி, பணத்தைக் கொடுக்குமுன் லேசாக கவரை ஆட்டிப் பார்த்தாள்.

‘‘மிஸ்டர், என்ன கசட்டாபால் லிக்விடா மாறிடுச்சா, சத்தம் கேட்குது?’’

‘‘சாரிங்க மேடம், முடிஞ்சவரை வேகமாத்தான் வந்தேன். வல்லம் கொஞ்சம் தூரமில்லையா, அதனாலதான்...’’

‘‘அப்போ, நாங்க இதுக்காக தஞ்சாவூர்ல வந்து குடியிருக்கணுமா? இல்ல வல்லத்துல இருக்கிறவங்க ஆர்டர் பண்ணக்கூடாதா? அப்புறம் எதுக்கு ஆர்டர் எடுக்கறீங்க?’’

‘‘ஐயோ! அப்படி இல்லைங்க மேடம்.’’

‘‘நோ! ஆர்டர் கேன்சல். நா இனிமே வேற ஃபுட் டெலிவரி கம்பெனியில புக் பண்ணிக்கிறேன்.’’

‘‘சாரிங்க மேடம்! ஆர்டர் கேன்சலாச்சுன்னா பில்லை நான்தான் கட்டணும். ப்ளீஸ் மேடம்!’’

அந்தப் பெண்மணியை சந்திரனின் தழுதழுத்த குரல் ஏதும் செய்யவில்லை. படாரெனக் கதவைச் சாத்திக்கொண்டாள். சந்திரனுக்கு நூறு ரூபாயும், பெட்ரோலும் நஷ்டம். மன உளைச்சல் வேறு. இப்படியான உளைச்சல் பொழுதுகளில் பிரகாஷுடனான இரவுச் சந்திப்பும் பேச்சும் சந்திரனின் மனதை இலகுவாக்கச் செய்யும்.

சனிக்கிழமையின் பொழுது கவியக் காத்திருந்தான் பிரகாஷ். கடந்த சில நாள்களாக ஆனந்தியின் கண்கள் அடிக்கடி முன்னால் வந்து வந்து வேறு உருவம் காட்டிப் போகின்றன. சில பொழுது மீனாக, சில பொழுது வலையாக, வலையை அறுத்தெறிந்து வெளியே திமிறித் துள்ளும் பெருஞ்சுறாவாக மாயம் செய்கின்றன. திடீரென அவை விளம்பரப் பலகையின் ஊதா நிற சீரியல் பல்புகளாக உருமாறிக் கண் கூச வைப்பதும் உண்டு.

அன்றைய ஊர்வலம் மருத்துவக்கல்லூரியின் முதல் கேட்டை நெருங்கியதும் வேகமாக நடந்தான் பிரகாஷ். பின்னால் வருபவர்கள் ‘ஏன் இவன் இந்த இடத்திற்கு வந்ததும் ஓடுவதுபோல நடக்கிறான்?’ எனத் திகைத்தனர். அவர்கள் தன்னை நெருங்குவதற்குள் ஆனந்தியின் கண்களைச் சில நொடிகள் அதிகமாகப் பார்த்துவிடத் துடித்தான். அந்த அதிகப்படியான நொடிகள் அவனுக்கு ஒரு பெரும் பரிசையே அளித்தன. அன்றைக்கு அவளின் விழிகளிலிருந்து சொற்கள் வெளியேறி தன்னை நோக்கி மிதந்து வருவதாக உணர்ந்தான். அச்சொற்களை அப்படியே கண்களால் உள்வாங்கி இமை மூடியதும் கிறக்கம் வந்தது.

விடிந்த ஞாயிறில் ஆனந்தி ஊருக்குப் போய்விட்டிருந்தாள். அவள் இல்லாத தெரு விசனம் பூசியதாக இருந்தது. ஆனந்தி தினமும் டூவீலரில் செல்லும் தெருவின் மையப் பகுதியில், எதிர்ப்புறமாக நடந்து வந்து ஒத்திகை பார்த்தான். நல்லவேளையாக யாருமில்லை. ஒரு நாய் ஓரமாக மண்ணைக் கிளறி சுருண்டு படுத்திருந்தது. நான்காவது வீட்டில் செம்போத்து ஒன்று பப்பாளி மரத்தில் பழத்தைக் கொத்திக்கொண்டிருந்தது. ஆனந்தி எதிரே வருவதாக பாவனை செய்து, சட்டென பேண்ட் பாக்கெட்டி லிருந்து கர்ச்சீப்பை உருவி முக்கோண வடிவில் மடித்து முகத்தில் கட்டினான். ஆனந்தி எப்படித் திகைத்து அடையாளம் கண்டு புன்னகைப்பாள் என எண்ணியதும் கால்கள் தரையிலிருந்து மேலெழும்பின.

ஆனந்தியுடன் காதலாகிக் கசிந்துருகத் தொடங்கி ஓரிரு மாதங்கள் ஆகிவிட்டன. முன்பெல்லாம் வாரந்தவறாமல் சந்திரனுடன் சனிக்கிழமை இரவைக் கொண்டாடுபவன் அதை முற்றிலுமாக நிறுத்திவிட்டான். ஞாயிறு விடிந்தால் வாஞ்சூருக்குக் கிளம்ப வேண்டுமென்பதால் சனிக்கிழமை இரவிலிருந்தே அதற்குத் தயாராகிவிடுவான்.

“ஆனந்தி வந்ததும் முன்னமேறி நீ நம்மளையக் கண்டுக்கிறதில்ல பிரகாஷ். பரவாயில்லை. எங்கிருந்தாலும் வாழ்க!” என சந்திரன் கிண்டல் செய்தபோதும் சிரித்தபடி அதைக் கடந்தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திரனுடன் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே மது அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தபோது, “நாளைக்கு வெளியில போயிட்டு வரலாம். லீவு போட்டுரு” என்றான் பிரகாஷ். “எங்கடா?” எனச் சந்திரன் கேட்டதற்கு “காலையில ரயிலடிக்கு ஏழரைக்குள்ள வந்திரு! அங்க சொல்றேன்” என்றான்.

காலையில் முன்னதாக ரயிலடிக்கு வந்துவிட்டான் சந்திரன். பிரகாஷைப் பார்த்ததும் “இப்ப புரிஞ்சிருச்சுடா! காரைக்கால் பாசஞ்சர்ல ஏறி நாகூர்ல இறங்கறோம். அப்புறம் வாஞ்சூர். அங்க உங்க ஆள் வீட்டுக்குப் போறோம். அதான!” என்றான்.

“எல்லாம் சரிதான். ஆனா, வீட்டுக்குப் போகலை.”

“ஏண்டா, அட்ரஸ் தெரியாதா?”

“அதெல்லாம் வாங்கிட்டேன். வர்றேன்னுகூடச் சொல்லியிருக்கேன். இருந்தாலும் வேண்டாம்.”

ரயில் வந்துவிட்டது. சந்திரன் குழப்பத்துடனேயே ஏறினான். நாகூரில் இறங்கும்வரை வேறு ஏதேதோ கதை பேசியபடியே வந்தான் பிரகாஷ். ஆனந்தியைப் பற்றி எதுவுமே பேசவில்லை. நாகூரிலும் உடனே டவுன்பஸ் வந்துவிட்டது.

வாஞ்சூரில் செக்போஸ்ட்டில் இறங்கியதுமே கருவாட்டு வாசனை கமகமக்கவும் பிரகாஷின் முகம் மலர்ச்சியடைந்தது. கருவாட்டு வாசனை அவனை அந்தப் பகுதிக்கு நெருக்கமானவனாக உணரச் செய்தது.

பிரகாஷ் ஆனந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு தானும் நண்பனும் வந்திருப்பதைச் சொன்னான். ஆனால், ஆனந்தி சொன்ன பதில் பிரகாஷின் முகத்தைச் சொடுங்கச் செய்தது. ஏன் அவள் இப்படிச் சொல்கிறாள் என யோசித்தான். ‘நீ மட்டும்தான வருவ, இப்ப என்ன புதுசா உன் ஃப்ரெண்டுன்னு எவனையோ கூட்டிக்கிட்டு வர்ற?’ என ஆனந்தி கேட்டது பிரகாஷுக்குப் பிடிக்கவில்லை. ‘உயிருக்கு உயிரானவனல்லவா என் சந்திரன்’ என நினைத்துக்கொண்டான்.

இருவரும் காரைக்கால் சாலையில் நடக்கத் தொடங்கினர். வலதுபுறம் ஒரு வீதி நீண்டு தெரிந்தது. “இந்த வீதிதான்” என்ற பிரகாஷ், சில நொடிகள் அங்கே நின்று அந்த வீதியையே உற்றுப் பார்த்தான். அவன் முகம் அந்த நொடியில் சட்டென ஒளிர்ந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்டான் சந்திரன். ஆனால், அந்த வீதிக்குள் பிரகாஷ் செல்லவில்லை. சந்திரனுக்குப் புரிந்துவிட்டது. ‘ஓ, ஆனந்தியின் வீடு இந்த வீதியில்தான் இருக்கிறதா!’

தூரத்தில் ஆனந்தி நடந்து வருவதைப் பார்த்தான் பிரகாஷ். இத்தனை முறை வந்தும் பிரகாஷை வீட்டுக்கு அழைத்ததில்லை ஆனந்தி. தெருவின் முன்னால் புதிதாக முளைத்திருக்கும் ஐங்கரன் காபிக்கடைதான் அவர்கள் சந்திக்கும் இடம். அவள் வருவதைப் பார்த்ததும் பிரகாஷ் சந்திரனை அழைத்துக்கொண்டு ஐங்கரன் காபி கடைக்குள் நுழைந்தான். வேகமாகக் கடையினுள் வந்த ஆனந்தி, பிரகாஷைப் பார்த்ததும் சட்டென முகம் மலர்ந்து சிரித்தாள். சந்திரனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான் பிரகாஷ். ஆனால், அவள் முகத்தைக் கடுகடுவென மாற்றிக்கொண்டாள். சந்திரன் அதைப் பார்த்ததும் திகைத்தான். “சரி நான் கிளம்பறேன். வீட்ல கெஸ்ட் வந்திருக்காங்க” எனச் சொல்லி விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் விருட்டென வெளியேறினாள். வழக்கமாக கால் மணி நேரமாவது பேசிவிட்டுத்தான் கிளம்புவாள். இன்று ஏன் இப்படி நடந்துகொண்டாள் என்பது பிரகாஷுக்குப் புரியவில்லை.

ஜவுளிக் கடையை முதுகில் சுமப்பவனும் வலைமீன் கண்களும் - சிறுகதை

வெளியே வந்த பிரகாஷும் சந்திரனும் தார்ச்சாலையிலேயே நடக்கத் தொடங்கினர். சந்திரனுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. கொஞ்ச தூரத்தில் வலதுபுறமாக ஒரு மண்சாலை பிரிந்து உள்ளே போனது. சந்திரனின் கையைப் பிடித்தபடி சாலையைக் கடந்து அதில் நடக்கத் தொடங்கினான் பிரகாஷ். அதன் முடிவில் மிகப்பெரிய இரண்டு ஒயின்ஷாப்புகள் இருந்தன. சந்திரன் அதைப் பார்த்ததும் உற்சாகமானான். அவை இரண்டும் பெரிய குடில்போல இருந்தன. நல்ல காற்றோட்டமாக இருந்தது. நல்ல இடமாகத் தேடி உட்கார்ந்த பிரகாஷ் சந்திரனுக்கு மட்டும் ஆர்டர் செய்தான்.

“உனக்குடா?” எனக் கேட்ட சந்திரனிடம், “இல்லடா! எனக்கு மனசு சரியில்லை. அவ ஏன் உங்கிட்ட இப்படி நடந்துக்கிட்டான்னு தெரியல” என சலிப்பாகப் பேசினான்.

சந்திரன் “அட விடுடா! நானே கவலைப்படல. இவன் போட்டுக் குழப்பிக்கிறான்” எனச் சொல்லி, கொஞ்சம் குடித்ததும் பிரகாஷை வற்புறுத்திக் குடிக்க வைத்தான். “இந்த ஊருக்கு வந்துட்டுக் குடிக்காமப் போனா நல்லாருக்குமா!” சந்திரன் சொன்னதும் இருவரும் நிறைய குடித்தனர்.

எல்லாம் முடிந்து நிறைபோதையில் இருவரும் சாலையில் நடக்கத் தொடங்கினர். செக்போஸ்ட் வரை நடந்து வந்தால்தான் பஸ் ஏற முடியுமென்பதால், ஆளுக்கொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டனர்.

தன்னுடனே வந்துகொண்டிருந்த பிரகாஷை அந்த இருளில் காணாத சந்திரன் சட்டென நின்று திரும்பிப் பார்த்தான். பிரகாஷ் மண்சாலை பிரியும் ஒற்றை விளக்குக் கம்பத்தின் கீழ் நின்றபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சந்திரன் திரும்பி பிரகாஷை நோக்கிப் போனான். பிரகாஷ் கண்களில் நீர் வழிய விளக்குக் கம்பத்தைப் போலவே அசையாது நின்றபடி அந்த வீதியின் கடைசி இருள்வரை பார்த்துக்கொண்டே இருந்தான்.

ஆனந்தியைப் பார்த்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதைப் பற்றி பிரகாஷ் யோசித்தான். ‘வீடு மாறியது ஏன்னு தெரியல. பானிபூரிக் கடைப் பக்கமும் வர்றதில்ல. மணிமண்டபப் பூங்காவுலயும் பார்க்க முடியல. போனும் சுவிட்ச் ஆஃப்!’ யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை, குழப்பமாக இருந்தது. சந்திரனையும் சந்திக்க முடியவில்லை. வாஞ்சூர் பாரில் சந்திரனுடன் இருந்த அன்றைய இரவுதான் அவனைப் பார்த்த கடைசி இரவு.

அந்த சனிக்கிழமை மருத்துவக் கல்லூரிவரை விளம்பரப் பலகை ஊர்வலம் செல்ல வேண்டும் என ஜவுளிக்கடை நிறுவனம் சொல்லவும் பிரகாஷ் சந்தோஷமடைந்தான். வழக்கமாக விளம்பரப் பலகையை முதுகில் கட்டிக்கொள்ளத் தொடங்கும்போதே அவன் முகம் சொடுங்கி விடும். முகத்தைக் கைக்குட்டையால் மூடிவிடுவதால் அவனின் முகச்சொடுக்கம் யாருக்கும் தெரியாது.

ஆனால், இன்று மிக உற்சாகமாக விளம்பரப் பலகையைத் தூக்கி முத்தமிட்டுத் தன் முதுகில் கட்டத் தொடங்கினான். அவனுடன் வரிசையில் வரும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று, பிரகாஷின் கால்கள் ஊர்வலத்தில் நடக்கவில்லை; ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜவுளிக் கடையை முதுகில் சுமப்பவனும் வலைமீன் கண்களும் - சிறுகதை

மருத்துவக் கல்லூரியின் முதல் கேட்டை நெருங்க நெருங்க மஞ்சள் நிற சோடிய விளக்கு வெளிச்சத்தின் கீழ் ஆனந்தியைத் தேடினான். அதிசயமாக ஆனந்தி அங்கே இருந்தாள். ‘அப்பாடா, பார்த்து எவ்வளவு நாளாச்சு!’ எனக் கண்கள் துளிக்க அவளை நெருங்கினான். வழக்கம்போல் எந்த இடத்தில் நின்று தன்னைக் கவனிப்பாளோ அதே இடத்தில், சாலையைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவளை நெருங்கியதும் இடதுபுறமாக முழுவதுமாகத் திரும்பி அவளின் கண்களைத் தேடினான். வரிசையில் வந்த விளம்பரப் பலகைகளில் அவனுடையது மட்டும் ஒருகணம் அணைந்து ஒளிர்ந்தது. அவள் முற்றிலுமாகத் தன்னைப் புறக்கணித்துவிட்டு சாலையின் எதிர்ப் பக்கத்தைப் பார்ப்பதைக் கண்டான். வலதுபுறம் திரும்பி என்னவென்று கவனித்தான் பிரகாஷ்.

சாலையின் எதிர்ப்பக்கம் இருக்கும் ‘ஸ்ரீதேவர் மெஸ்’ வாசலில், சதுர வடிவிலான உணவு ஆர்டர் பையை முதுகில் சுமந்தபடி டூ வீலர்மீது உட்கார்ந்திருந்த சந்திரன், பிரகாஷைக் கவனிக்காமல் சைகை மொழியில் ஆனந்தியுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆனந்தியின் விழிகள் தார்ச்சாலையில் பட்டுத் துள்ளித் திமிறி சந்திரனை நோக்கிப் போகும் மீன்களாக உருமாற்றம் காட்டின.