இனி எதுவும்
மாறப்போவதில்லை என்கிறாய்
கடவுள் எப்படியும் கைவிடமாட்டார் என்ற
உன் பிரார்த்தனைகள் என்னவாயிற்று
என்னை நானே சவுக்கால் அடித்துக்கொள்ள
உனக்காகக் கவிதைகள் எழுதுகிறேன்
உனக்காகக் கதைகள் சொல்கிறேன்
யாரிடமோ மன்னிப்பு கேட்கிறேன்
யாரிடமோ அழுதுகொண்டிருக்கிறேன்
நான் திருந்துவதில்லை
முற்றாகக் கைவிடபட்டவர்களுக்கே
பின்னிரவில் இருள் இருப்பதாக
எங்கும் போய்ச் சேராத பாதை இருப்பதாக
திறக்கப்படாத கதவுக்கு முன் அமர்த்திருப்பதாக
அர்த்தமற்ற ஒரு சொல்லை வைத்திருப்பதாக
ஒரு துணிச்சலை
ஒரு நம்பிக்கையை
பலவந்தமாக நிரப்புகிற
ஒரு கோப்பையில்
மதுவோ நஞ்சோ இருந்துவிட்டுப்போகட்டும்
இனி வாழ்தல் பற்றி
எப்போதும் சிந்திப்பதில்லை நான்.

- கோபி சேகுவேரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅவரவர் நியாயம்
ஏசியை அணைக்க மறுத்து
குளிர்ந்த அறையில்
வியர்க்கிறதெனப் போர்த்துகிறது குழந்தை.
வெக்கை அதிகமான அறையில்
குளிர்கிறதென ஏசியை
இயக்க மறுக்கிறாள்
சிக்கனமான அம்மா.
தர்மாஸ்பத்திரி மாத்திரைதான்
நன்றாகக் கேட்கும் என்கிறார்
பெருமைக்கு மாவிடிப்பவர்.
விலைப்பட்டியலில்
உணவைத் தேடாமல்
தொகையைத் தேடுவது
வழக்கமான ஒன்றாகிப்போனது.
ஆடைக்குப் பின்னால்
ஒளிந்திருக்கும் விலையைத்
தேடுவது எளிதில்லை.

ஆட்டோ வாடகை தவிர்த்து
வாக்கிங் போன மாதிரியும் இருக்கும்
காசும் மிச்சமென
சிரிக்கிறாள் மனைவி.
பொய் கூறி
உண்மையை விளக்கும்
65வது கலையில்
எளிதாகத் தேர்ச்சியானதைப்போல்
நீட் தேர்வில்லை.
- காரைக்குடி சாதிக்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஹேங்கர் மனது
மடிப்பு கலையாமலும்
தேவைக்கு உடுத்தும் பொருட்டும்
உடைகளைத் தொங்கவிடவென்று
சுவரில் பொருத்தப்பட்ட
ஹேங்கர்போல் ஆகிவிடுகிறது
சமயங்களில் மனது.

உவகையோ துக்கமோ
சமமாகப் பாவித்தல்
ஹேங்கர் மனதின் கைங்கர்யமே.
பிடித்த உடைகள் அகிகமாயிருக்கையில்
தேர்ந்தெடுக்கத் திணறும் நாம்தான்
அவை ஒன்றுகூட
துவைக்கப்படாத நேரங்களில்
பிடிக்காத உடையையும்
உடுத்தும்படி ஆகிவிடுவதைப்போல
ஒவ்வாதவற்றையும்
ஏற்கும்படி ஆகிவிடுகிறது.
புதிதாய் ஒன்றை மாட்டும்போதே
பழையதைக் கழற்றி எறிவதான
பாவனையில்
புதிய நினைவுகளை இருத்தும்போதே
கடந்தவற்றை மறக்கும்படியும்
ஆகிவிடுவதும்
ஹேங்கர் மனதின் காரணமாகவே.
- பாப்பனப்பட்டு வ.முருகன்
புதுமனை
வாகனம் நிறுத்துமிடத்தோடு
2 BHK
3 BHKவாக எழும்பும்
ஏழுமாடிக் கட்டடத்துக்காக
குத்தகைக்காரரோடு
மாநிலம் கடந்து மாநிலம்
வந்திறங்கிய அம்மா, அப்பாவும்
அவர்தம் உறவினர்களோடு
வந்திறங்கி கூடாரம் அமைத்து
இரவு பகல் நடக்கிறது வேலை.

குழந்தைகளெல்லாம் ஒன்றுகூடி
ஆற்றுமணலை
பிஞ்சுக் கைகளில் அள்ளியெடுத்து விளையாடுகின்றன
நீர் வழித்தடத்தின் குறுக்கே
நீச்சல் குளத்தோடு
உருவாக்கப்படும் வீட்டு மனையில்
ஆற்று நீரைத் தேக்கி வைக்க
அணைகளைக் கட்டியபடி.
- துரை.நந்தகுமார்