Published:Updated:

M3GAN Review: அனபெல் பேய் இருக்கட்டும், இது டெரரான ஆண்ட்ராய்டு பீஸ்ட்! இதுவும் பொங்கல் வின்னரா?

M3GAN Review
News
M3GAN Review

ChatGPT, AI அவதார்கள், செயற்கை நுண்ணறிவே 'வரையும்' படங்கள் போன்ற விஷயங்கள் டிரெண்டில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் இந்த 'M3GAN'-யையும் நிச்சயம் அதன் குறைகள் மறந்து ரசிக்கலாம்.

Published:Updated:

M3GAN Review: அனபெல் பேய் இருக்கட்டும், இது டெரரான ஆண்ட்ராய்டு பீஸ்ட்! இதுவும் பொங்கல் வின்னரா?

ChatGPT, AI அவதார்கள், செயற்கை நுண்ணறிவே 'வரையும்' படங்கள் போன்ற விஷயங்கள் டிரெண்டில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் இந்த 'M3GAN'-யையும் நிச்சயம் அதன் குறைகள் மறந்து ரசிக்கலாம்.

M3GAN Review
News
M3GAN Review

ஹாரர் படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் ஜேம்ஸ் வானின் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் திரைப்படம் இந்த 'M3GAN'. கடந்த வருடம் 'மலிங்னன்ட்' (Malignant) படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர், ஏற்கெனவே 'அனபெல்' பொம்மையை வைத்து மிரட்டியவர், 'அனபெல் - தி கான்ஜுரிங்' யுனிவர்ஸை உருவாக்கியவர், இந்த முறைக் கையில் எடுத்திருப்பது ஒரு ஆண்ட்ராய்டு பொம்மை. அகெலா கூப்பரும், ஜேம்ஸ் வானும் எழுதிய கதையை ஜேம்ஸ் வானே ஜேசன் ப்ளம்முடன் இணைந்து தயாரிக்க ஜெரார்டு ஜான்ஸ்டோன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு பொம்மை தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்ற எந்த எல்லைவரை போகிறது என்பதே படத்தின் ஒன்லைன்.
M3GAN Review
M3GAN Review

ஒரு விபத்தால் தன் தாய், தந்தையரை இழக்கும் சிறுமி கேடி, தன் சித்தியான ஜெம்மாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். புகழ்பெற்ற பொம்மைத் தயாரிப்பு நிறுவனமான 'FUNKI'-ல் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஜெம்மாவுக்கு வேலையையும் பார்த்துக்கொண்டே கேடியையும் கவனிப்பது சிரமமாக இருக்கிறது. தன் கனவு புராஜெக்டான செயற்கை நுண்ணறிவால் இயங்கும் M3GAN (Model 3 Generative Android) என்ற பொம்மையை உருவாக்கும் ஜெம்மா, மனப்பிரச்னைகளால் அவதியுறும் கேடிக்கு ஆதரவாக இருக்க அந்தப் பொம்மையை அவளுடன் பழக வைக்கிறாள். அந்த ஆண்ட்ராய்டு பொம்மையின் 'Primary User'-ஆக கேடியே நிறுவப்பட, அவளைப் பாதுகாப்பதையே முக்கிய பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறது 'M3GAN'. இதனால் ஏற்படும் விளைவுகளை ஹாரர் கலந்த த்ரில்லராகச் சொல்லியிருக்கிறது படம்.

படத்தின் மையமான சிறுமி கேடி பாத்திரத்தில் வைலட் மெக் க்ரா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் செயற்கைத் தனமும் மிகை நடிப்பும் எட்டிப்பார்த்தாலும் க்ளைமாக்ஸ் 'மாஸ்' காட்சியில் விட்டதைப் பிடித்திருக்கிறார். வேலைப் பார்த்துக்கொண்டே குழந்தையைப் பார்த்துக்கொள்வதிலிருக்கும் சிக்கல்களை உணர்வுபூர்வமாகக் கடத்துகிறார் சித்தி ஜெம்மாவாக வரும் ஆலிசன் வில்லியம்ஸ்.

`M3GAN' பொம்மைக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வந்திருக்கிறது அதற்குள் இருக்கும் ஏமி டொனால்டின் நடிப்பும் ஜென்னா டேவீஸின் குரலும். அனிமெட்ரானிக்ஸ், பப்பட் கொண்டு இயக்குதல், ஸ்டன்ட் டபுள், VFX எனப் பல செயல்முறைகள் மூலம் உயிர் பெற்றிருக்கிறாள் `M3GAN'. அதற்காக உழைத்த டெக்னிக்கல் குழுவுக்குப் பாராட்டுகள்.
M3GAN Review
M3GAN Review

ஒரு மென்சோக டிராமாவாகத் தொடங்கும் படத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்ட பொம்மைகள் மிகச் சாதாரணமாகச் சந்தைப்படுத்தப்படும் காலம் அது என்பது தெளிவாக நிறுவப்படுகிறது. ஆண்ட்ராய்டு, செயற்கை நுண்ணறிவு எனப் பல டெக்னிக்கல் விஷயங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அனாதையாக்கப்படும் ஒரு சிறுமியின் மனப் பிரச்னை, அதைச் சரி செய்யத் திணறும் சித்தி என எமோஷன்களில் ஸ்கோர் செய்கிறார்கள்.

'M3GAN' என்ட்ரிக்குப் பிறகே கியர் மாற்றம் நிகழ்ந்து கதையின் ஓட்டத்தில் தீப்பற்றிக்கொள்கிறது. பக்கத்து வீட்டுப் பெண்மணி, தொல்லை செய்யும் நாய், சண்டையிடும் பள்ளிச் சிறுவன், பொம்மை நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள், ஜெம்மாவின் பழைய ரோபோ என அனைத்து பிரதான கதாபாத்திரங்களுக்கும் பக்காவான ஸ்டேஜிங் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறது திரைக்கதை. ஆனால், அதுவே அடுத்து என்ன என யூகிக்கவும் வைத்துவிடுவதால் படத்தின் சுவாரஸ்யம் குன்றிவிடுகிறது.

M3GAN Review
M3GAN Review
சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்றாலும் அதில் தன் டிரேட்மார்க் ஹாரர் காட்சிகளை ஆங்காங்கே நிரப்பியிருக்கிறார் ஜேம்ஸ் வான்.

காட்டுக்குள் பள்ளிச் சிறுவனுடன் நடக்கும் சண்டை, பக்கத்து வீட்டுப் பெண்மணியுடனான சண்டை, க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்துமே சுவாரஸ்யமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இதுதான் முடிவு என்பது முன்னரே தெரிந்துவிட்டாலும் நம் கவனத்தை எங்குமே சிதறவிடாமல் கட்டிப்போட்டிருக்கிறது பீட்டர் மெக்கேஃப்ரேயின் ஒளிப்பதிவும், ஜெஃப் மெக்எவோய்யின் படத்தொகுப்பும். ஆண்டனி வில்லீஸின் பின்னணி இசை மிரட்டல் காட்சிகளுக்குப் பக்கபலம்.

ஒரு ஐடியாவாக ஈர்த்தாலும் நம்மூர் சிட்டி ரோபோ தொடங்கி, செயற்கை நுண்ணறிவு குறித்த பல ஹாலிவுட் படங்களின் அதே ஒன்லைன், அதே மெசேஜ் இதிலும் நீள்வது சறுக்கல். குழந்தைகளுக்காக உருவாக்கப்படும் பொம்மைக்கு ஓர் இரும்பு டேபிளையே தூக்கிப்போடும் அளவுக்குச் சக்தி எங்கிருந்து வந்தது என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். என்னதான் பரிசோதனை காலம் என்றாலும், எந்தவித முன் அனுமதியும் இன்றி, இத்தனை அட்வான்ஸான ஒரு சாதனத்தை ஜஸ்ட் லைக் தட் பள்ளி பிக்னிக், வீடு எனப் பொது மக்கள் மத்தியில் உலாவ விடுவது என்ன லாஜிக்கோ!

M3GAN Review
M3GAN Review

மிரட்டலான பொம்மையை ஒரு சிறுமியைப் போலவே வடிவமைத்துப் பயமுறுத்துவது என்ற புதிய ஐடியாவைச் சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கிறார்கள். அடுத்த பார்ட்டுக்கான லீடுடன் முடியும் இந்தப் படம் உலகளவில் கவனத்தையும் ஈர்த்திருப்பதால் 'அனபெல்' போலவே 'M3GAN'-யை வைத்தே ஒரு படத்தொடர் உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ChatGPT, AI அவதார்கள், செயற்கை நுண்ணறிவே `வரையும்' படங்கள் போன்ற விஷயங்கள் டிரெண்டில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் இந்த `M3GAN'-யையும் நிச்சயம் அதன் குறைகள் மறந்து ரசிக்கலாம். அந்த வகையில் இதுவும் ஒரு பொங்கல் வின்னர்தான்.