Published:Updated:

மேடம் ஷகிலா - 44: பெண்களின் சமையலறை ஆதிக்கம் குடும்ப நிர்வாக ஆதிக்கமாகக் கட்டமைக்கப்படுவது எதற்காக?

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
News
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

ஆண்களும் போன தலைமுறை பெற்றோர்களும் மட்டும்தான் குற்றவாளிகளா? பெண்ணடிமைத்தனத்தின் இந்த 'பாலீஷ்ட் வெர்ஷனுக்கு' பெண்களும் காரணம் இல்லையா?

Published:Updated:

மேடம் ஷகிலா - 44: பெண்களின் சமையலறை ஆதிக்கம் குடும்ப நிர்வாக ஆதிக்கமாகக் கட்டமைக்கப்படுவது எதற்காக?

ஆண்களும் போன தலைமுறை பெற்றோர்களும் மட்டும்தான் குற்றவாளிகளா? பெண்ணடிமைத்தனத்தின் இந்த 'பாலீஷ்ட் வெர்ஷனுக்கு' பெண்களும் காரணம் இல்லையா?

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
News
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் பலவிதமான உரையாடல்களைத் துவக்கி வைத்தது. தங்களைத் திரைப்படத்தோடு பொருத்திப் பார்த்துக் கொண்ட ஆண்கள் பதற்றமாக, ‘தான் அவ்வாறு இல்லை’ என்பதை சமூக வலைதளங்களின் மூலமாக வெளிப்படுத்தினர். பலரும், ’இத்திரைப்படம் போன நூற்றாண்டைச் சேர்ந்தது, இன்று யாரும் அதுபோல் நடந்து கொள்வதில்லை’ என்று கேலி செய்தனர். எதிர்வினைகள் எப்படி இருந்தாலும் பெண்களிடம் ஒரு சிறு உரையாடலையும், சிந்தனையையும் அப்படம் உருவாக்கி இருந்தது. ஆண்களுக்கு எதிரான ஒரு திரைப்படமாக அந்தப் படத்தை பெரும்பாலான சராசரி ஆண்கள் எதிர்கொண்டனர்.

அதேபோல் ’எதார்த்த சினிமாவாக’ தற்போது தமிழில் வெளி வந்திருக்கிறது வஸந்த் சாய் இயக்கத்தில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ (Sivaranjaniyum Innum Sila Pengalum).

பெரும்பான்மையான இந்திய குடும்பங்களில் கடந்த நாற்பது ஆண்டுகளில் அன்றாடம் நிகழும் காட்சிகளின் தொகுப்புதான் இத்திரைப்படம். ஆண்களின் மனதைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது சரஸ்வதி, தேவகி மற்றும் சிவரஞ்சனியின் கதைகள்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

1980இல் நடக்கும் முதல் கதை சரஸ்வதியினுடையது. முதல் காட்சியே ஸ்தம்பிக்க வைத்துவிடுகிறது. கைகளில் இரண்டு பைகளையும், இடுப்பில் குழந்தையையும் தூக்கிக் கொண்டு சரஸ்வதி நடக்க, அவளுக்கு முன்னால் கணவன் வெறுங்கையுடன் வேகமாக நடந்து செல்கிறான். ஓடிச்சென்று பேருந்தில் கணவன் ஏறிவிட, குழந்தை மற்றும் பையை தூக்கிக் கொண்டு ஓட்டமும், நடையுமாக வரும் மனைவியால் ஏற முடியாமல் போகிறது. அதற்காக நடுச்சாலையில் வைத்து மனைவியை திட்டுகிறான்.

வீட்டிற்கு வந்ததும் மனைவி பையிலிருந்த சாவியை தேடி எடுக்கவும் திட்டு வாங்குகிறாள். உள்ளே சென்ற கணவன் சாப்பிட உட்காருகிறான். இருவரும் ஒன்றாகச் சென்றுவிட்டு, ஒன்றாகத் திரும்பிய வீட்டில் காலையில் செய்த உணவை பரிமாறும்போது அது சூடாக இல்லை என முகத்தைக் காண்பிக்கிறான். அவன் தூங்கும்போது அழும் குழந்தையின் ’அழுகையை நிறுத்த தெரியாத நீ எல்லாம் என்ன அம்மா’ என்று மனைவியை கேட்கிறான். ’குழந்தை என்றால் அழத்தானே செய்யும்’ என்று பதில் சொன்னவுடன் அவளை அடித்து, வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு சொல்கிறான். அவனை எதிர்த்து ஒரே வார்த்தை ’அடிக்காதீங்க’ என்று சொல்லும் மனைவியிடம் அதோடு பேசுவதை நிறுத்தி விடுகிறான். பிறகு காணாமல் போய்விடுகிறான்.

இன்றைய 90s கிட்ஸ் வரை இப்படியான காட்சிகளை சிறுவயதில் பார்த்து வளர்ந்திருப்பார்கள். அப்போதெல்லாம் சுற்றியிருக்கும் அவ்வளவு கணவன் மனைவியும் இதேபோல்தான் குடும்பம் நடத்தினார்கள். 80களில் மட்டுமல்ல 90கள் வரையிலும்கூட வீட்டில் ஏதாவது பொருள் தீர்ந்துவிட்டால் மனைவி அதை பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வந்து சமைக்க வேண்டும். கணவனின் மனநிலை, சூழ்நிலை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு மனைவி குடும்பம் நடத்த வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்துபவளுக்கு உண்டான அதிகாரம் இருக்குமா என்றால் நிச்சயம் கிடையாது.

80களில் வாழும் சரஸ்வதி காபிப்பொடி, மளிகை பொருள்கள் முதற்கொண்டு பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வந்து கணவனுக்கு சமைத்து கொடுக்கிறாள். எப்படியாவது சமைத்து கணவனுக்கு சோறு போட சரஸ்வதி அனைத்து முயற்சிகளையும் செய்வாள். வீட்டில் சமையல் பொருள்கள் தீர்ந்துவிட்டது என்று சொல்லும்போது அவள் மேல் கோபமாக இருக்கும் கணவன் அதை கண்டுகொள்ளாமல் செல்வான்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

’வீட்டில் எந்தப் பொருளும் இல்லை அதனால் நான் சமைக்கவில்லை’ என்று கணவனை எதிர்த்து பெண்கள் சொல்ல முடியாது. அதே சமயம் பெண்கள் வேலைக்குச் சென்று குடும்பத்திற்கு சிறிய அளவில் உதவி செய்யக்கூட அவர்களுக்கு அனுமதியும் கிடைக்காது. பொதுவாக சமையலறை என்பதை ஓர் அட்சய பாத்திரமாகவும், கணவன் கேட்டவுடன் மனைவி அதில் இருந்து உணவை எடுத்து பரிமாறுவது கடமை என்பது போலவும் எழுதப்படாத விதி இருந்தது.

அப்பாவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறது. வீட்டிற்கு வருபவர்களை வந்தவுடன் உடனடியாக சாப்பிடவும், காபி அல்லது டீ குடிக்கவும் கட்டாயப்படுத்துவார். வீட்டில் என்ன இருக்கிறது என்று கேட்டிருக்க மாட்டார். பல சமயங்களில் சாப்பாடு கூட பிரச்னையாக இருக்காது. ஆனால் முன்பு பாக்கெட் பால் இல்லாத காலத்தில் நினைத்த நேரத்தில் பால் கிடைக்காது. அம்மா அவசரமாக பின்வாசல் வழியாக பால்காரர் வீட்டுக்கோ அல்லது வேறு யாரிடமாவதோ வாங்கி வந்து காபி போட்டுக் கொடுப்பார். ஒருநாளும் வீட்டில் இது இல்லை அதனால் சமைக்கவில்லை என்று அம்மா கூறியதில்லை. சமைப்பதும், பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதும், வீட்டுக்கு வருபவர்களை மனமுவந்து கவனிப்பதும் தன்னுடைய கடமை என்று அவர் நினைத்தார். கிட்டதட்ட எல்லா அம்மாக்களும் இப்படித்தான் இருந்தார்கள்.

மனைவி கணவனை புரிந்து கொள்வதும், அனுசரித்துச் செல்வதும், அவன் சொல்வதை எல்லாம் கேட்பதும் அவளது கடமை என்றும் கணவன் ஆண் என்பதனால் அவன் போக்கில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், யாரை வேண்டுமானாலும் அதிகாரம் செய்யலாம் என்பதும் எழுதப்படாத கோட்பாடுகளாக இன்னமும்கூட இருந்து வருகின்றன. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகளை தாண்டி பொதுவாக ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

'தேவகி சித்தியின் டைரி' என்கிற எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை வஸந்த் படமாக்கியிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் கணவரையும் வைத்துக்கொண்டு அலுவலகம் செல்லுமளவு முற்போக்கு பெண்ணான தேவகி, டைரி எழுதுகிறாள் என்பது அவளது புகுந்த வீட்டில் பிரச்னை ஆகிறது. வீட்டில் இருக்கும் அவ்வளவு பேரும் கணவனுக்குத் தெரியாமல் உனக்கு டைரியில் எழுத என்ன ரகசியம் இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஜெயமோகனின் கதையில் இறுதியில் தேவகியை ஒதுக்கி வைக்கும் கணவனுடன் மீண்டும் அவளை சேர்த்து வைக்க தேவகியின் குடும்பத்தினர் முயற்சி செய்து விவாகரத்தில் முடிகிறது. ஆனால், வஸந்த்தின் தேவகியோ தன்னுடைய சுயமரியாதை முக்கியம் என கருதி வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள், இதுவெல்லாம் மாற்றம் இல்லையா என்கிற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் தனது வீட்டுக்குள் ஒரு டைரி எழுதி அதை யாரிடமும் காட்ட தேவையில்லாமல் வைத்துக் கொள்ளும் சுதந்திரம் கூட 90களில் பெண்களுக்கு இல்லை. டைரி எழுதுவது பெரிய குற்றம் எனவும் அந்தக் குற்றத்தை செய்பவள் குடும்ப பெண்ணே இல்லை என்பது போலவும் பேசுவதால் தேவகிக்கு அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

80களில் இருந்த சரஸ்வதி கணவனை எதிர்த்து ’அடிக்காதீங்க’ என்று ஒரு வார்த்தை சொன்னதற்கு கணவன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு செல்கிறான். 90களின் மத்தியில் தேவகி மத்திய அரசின் வேலையில் இருக்கிறாள். கணவனை பின்னால் உட்கார வைத்து இருசக்கர வாகனம் ஓட்டுகிறாள். ஆனாலும் அவளுக்கு டைரி எழுத அனுமதி இல்லை. 2000ங்களின் மத்தியில் வாழும் சிவரஞ்சனியின் பெற்றோர் அவளை விளையாட்டு வீராங்கனை ஆக அனுமதித்திருக்கின்றனர். ஆனால், கல்லூரி படிப்பு முடிக்கும் முன்னரே திருமணம் செய்து வைக்கின்றனர். சிவரஞ்சனியின் மாமியார் அவளது நாவல் வாசிக்கும் பழக்கத்தை பார்த்துவிட்டு இதற்கெல்லாம் எப்படி தன் மகன் அனுமதிக்கிறான் என்று கேட்கிறார். புத்தகம் படிக்க அனுமதிக்கும் கணவன், அவள் தனியாக பெற்றோரின் வீட்டிற்கு ஒரு நாள் சென்று வருவதற்கு கூட முழு மனதுடன் அனுமதிக்காதவனாக இருக்கிறான்.

1995லேயே பெண்கள் தேவகியை போல படித்து, வேலைக்குச் சென்று இருக்கிறார்கள். அதன் பிறகு 10 ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் வந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. 2007-இல் தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த சிவரஞ்சனி தன்னுடைய கனவு, லட்சியம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்கிறாள். அவளுக்கு தன்னுடைய லட்சியம்தான் முதன்மையானது என்று சொல்லும் அளவு வீட்டில் சுதந்திரம் இல்லை. எவ்வளவு பெரிய அலுவலகத்தில் வேலை செய்தாலும் பெரிய சாதனைகள் செய்திருந்தாலும் அதைவிட திருமணமும், குழந்தை பெற்றுக் கொள்வதும் முக்கியம் என கிட்டதட்ட இன்று வரையிலும் கூட பெண்களின் பெற்றோர்களே எண்ணுகிறார்கள். அதை பெண் குழந்தைகளுக்கும் சொல்லி வளர்ப்பதால் தங்களுடைய ரூல் புக்கில் ப்ரோகிராம் செய்யப்பட்டது போலவே நடமாடும் ரோபோக்களாக பெண்கள் நடந்து கொள்கின்றனர். சுதந்திரம், சுயமரியாதை போன்ற வார்த்தைகள் என்னவென்று தெரியாதளவு பாசம் என்கிற பெயரில் அடிமைத்தனத்தில் பெண் பிள்ளைகளை வளர்த்தெடுக்கின்றனர். அவர்களுக்கு அதுவெல்லாம் புரியும் கட்டத்தில் வயதும், வாய்ப்புகளும் கடந்து போயிருக்கும்.

ஆண்களும் போன தலைமுறை பெற்றோர்களும் மட்டும்தான் குற்றவாளிகளா? பெண்ணடிமைத்தனத்தின் இந்த 'பாலீஷ்ட் வெர்ஷனுக்கு' பெண்களும் காரணம் இல்லையா?
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

பெண்களுக்கு சமையலறைதான் உலகம் என்று ஆண்கள் நினைப்பது அவளை அடிமைப்படுத்தி வைப்பதற்காக! ஆனால், சமையலறை கையிலிருந்தால் வீட்டு நிர்வாகமே கையில் இருப்பது போல என்று நினைத்துக் கொண்டு பெண்களும் சமையலறையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் அதை தங்களது உலகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் எதிர்பார்ப்பது போல் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். ஒரு பெண் சமையலறையை விட்டுக் கொடுக்கவும், விட்டு வெளியேறவும் தயக்கமில்லாமல் எண்ணும் போதுதான் அவள் தனது சுதந்திரத்தை உணர முடியும்.

படிப்பு போதும் என்று சொல்லும் பெற்றோர்கள், வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லும் கணவன் மற்றும் அவனது வீட்டார் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு புரிய வைத்து, அவர்களை மாற்றி, தனது லட்சியத்தை ஒரு பெண் அடைய சிலபல வருடங்கள் ஆகிவிடும். யாரையும் திருத்துவது இங்கு யாருடைய வேலையும் அல்ல. பெண்கள் இவர்களைக் கடந்துபோக பழகிக்கொள்ள வேண்டும். அவர்களைத் திருத்திதான் நாம் நமது லட்சியத்தை அடைய வேண்டும் என்று நினைத்தால் இருக்கும் இடத்திலேயே தேங்கி விடுவோம்.

ஈகோ எல்லா தலைமுறை ஆண்களிடமும் தொடர்ந்து ஏதோ ஒரு வடிவத்தில் இருந்து வருகிறது. ஆண் எப்போதும் ஆணாகவே இருக்கிறான், வடிவம்தான் மாறி இருக்கிறதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை என்பதைத்தான் இந்த மூன்று படங்களுமே பேசுகின்றன. நிறைய சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் நடக்கின்றன என்றாலும் அது ஆண்களின் காரியங்களுக்கான மாற்றங்களாக இருக்கிறதே தவிர பெண் சமத்துவத்தை புரிந்து கொண்டு நடந்த மாற்றமாக இல்லை.

சரஸ்வதியின் கணவன் அவளை பிரிந்து சென்றபின் அவள் முகத்தில் ஒரு தெளிவு வருகிறது. அதுவரையிலும் எப்போதும் குழப்பம் மற்றும் அச்சத்துடனும் இருந்தவள் முதன்முறையாக சிரித்து, அலங்கரித்து, தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வாள். அவள் தன் மகளுடன் வாழ்க்கையை மிக இயல்பாக நடத்தத் தொடங்குவாள்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

அதேபோல் கணவன் காணாமல் போவது, விவாகரத்து, மரணம் போன்ற காரணங்களால் தனித்து வாழும் பெண்களின் உடல் சார்ந்த தேவைகள் பற்றிய உரையாடல்கள் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் தவறான கண்ணோட்டத்திலேயே இதுவரை வந்திருக்கின்றன. இதே சூழ்நிலையில் இருக்கும் ஒரு ஆண் பாவம் என்பது போலவும், பிள்ளைகளுக்காக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்கள் தியாகி என்பது போலவும் சித்திரிக்கும் திரைப்படங்கள், பெண்கள் என்று வரும்போது மட்டும் அவர்களது ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை காட்சிப்படுத்துகின்றன. அதற்கு பயந்தே பெண்கள் மோசமான டாக்ஸிக் திருமண உறவுக்குள் இறுதிவரை துன்பப்படுகிறார்கள்.

வயதான ஆண்கள் இறந்த சில நாள்களில் அவர்களது மனைவிக்கு உடல் எடை கூடினால் அது நிம்மதியின் காரணமாக என்று ஊரில் பெண்கள் பேசிக் கொள்வார்கள். உண்மையில் அது கணவரை இழந்த மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். ஆனால், 60 வயதிற்கு மேல் இருக்கும் ஆண்கள் இறந்த பிறகு அவர்களது மனைவி கொஞ்சம் கூடுதலாக பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதை, பிடித்த இடங்களுக்குச் செல்வதை, தனக்கான நேரத்தை பொறுமையாக அனுபவிப்பதை பார்க்கலாம். அதுவரை தாம் செய்யும் எல்லாவற்றிற்கும் மற்றவரின் அனுமதியை எதிர்பாத்திருந்தவர்களுக்கு தாமே முடிவு எடுக்கும் தருணம் வாய்ப்பது சிறிது 'கான்ஃபிடன்ஸ்' கொடுக்கலாம். அதனால் நிம்மதி உண்டாகலாம். தன் கணவன் பிரிந்து சென்றதும் சரஸ்வதியின் முகத்தில் தெரிவதும் அதுதான். இதை பற்றி வெளிப்படையாக பேச பெண்களே தயங்குகிறார்கள். பலரும் உள்ளுக்குள் நிம்மதி இருந்தாலும் அதனால் குற்றவுணர்ச்சி அடைந்து வலிந்து சோகத்தை உருவாக்கிக் கொள்வதையும் காண்கிறோம்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சமூகம் என்பது நாம்தான். மன உணர்வுகளை வெளிப்படையாக பேசி, பிடித்ததை பயமில்லாமல் செய்யும் சூழலை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அனைத்து வயது பெண்களிடத்திலும் அதற்கான உரையாடல் இங்கே சாத்தியப்பட வேண்டும். அதுதான் அடுத்த தலைமுறை பெண்களுக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஏனென்றால், திருமணம் என்பது பெண்கள் தங்களின் உரிமைகளை அடகு வைக்கும் அடிமை சாசனம் இல்லை. அது இருவர் இணைந்து தம் வாழ்வைச் சுதந்திரமாக வாழ்வதற்கான உடன்படிக்கை!