சினிமா
தொடர்கள்
Published:Updated:

“கமல் ‘பிரியாணியில் தொடங்கி பிரியாணியிலேயே முடிக்கிறோம்’ என்றார்!

மாதம்பட்டி தங்கவேலு டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாதம்பட்டி தங்கவேலு டீம்

மாதம்பட்டியில் அர்த்தநாரி என்ற சமையல்காரர் இருந்தார். பெரிய விருந்துகளுக்கு சமையல் செய்வார். அவரிடம் இணைந்து பணியாற்றினேன். அவர்தான் எனக்கு குரு.

உ ணவு சமைத்துப் பரிமாறுவது ஒரு கலை. அதில் நல்ல கலைஞர்கள் மட்டுமே தடம் பதிக்க முடியும். அப்படி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தடம் பதித்துக்கொண்டிருப்பவர்கள்தான் கோவை மாதம்பட்டி தங்கவேலு கேட்டரிங் நிறுவனத்தார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இயக்குநர் ராஜமௌலி குடும்ப நிகழ்ச்சி தொடங்கி பல்வேறு துறைகளில் உள்ள வி.வி.ஐ.பி-களின் வீட்டு நிகழ்ச்சிகள் வரை மாதம்பட்டி சாப்பாடுதான். விக்ரம் பட சக்சஸ் மீட்டில் ‘இன்னிக்கு ஒரு புடி’ என கமல், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டட அனைவருக்கும் சிறப்பான விருந்தளிக்கப்பட்டது. அதுவும் மாதம்பட்டி தங்கவேலு கேட்டரிங் கைவண்ணம்தான்.

கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற புகார் கிளம்பிய சூழலில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவின் தரம் பரவலாகப் பாராட்டப்பட்டது. அந்தப் பெருமையும் இவர்களுக்குத்தான். இப்படி சாமானியர்கள் தொடங்கி சாதனையாளர்கள் வரை பாராட்டும் மாதம்பட்டி கேட்டரிங் நிறுவனம் ஒரு குடும்பத் தொழிலாகும்.

“கமல் ‘பிரியாணியில் தொடங்கி பிரியாணியிலேயே முடிக்கிறோம்’ என்றார்!

தண்ணீர்ப் பந்தல் பகுதியில் உள்ள அவர்களின் கார்ப்பரேட் அலுவலகத்துக்குச் சென்று நிறுவனர் மாதம்பட்டி தங்கவேலுவிடம் பேசினேன். “1968. ஜி.டி.நாயுடு பங்களாவில் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கு வரும் வி.ஐ.பி-களுக்கு உணவு கொடுக்கும் வேலை செய்தேன். பிறகு பாலத்துறையில் ஒரு வீட்டில் சமையல் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதில்தான் என்னை மேம்படுத்திக் கொண்டேன். இதையடுத்து பெங்களூரில் ஓர் உணவகத்தில் மாஸ்டருக்கு உதவியாளராகச் சேர்ந்தேன். அதன் பிறகு அங்கேயே ஓர் அசைவ உணவகத்தில் பணியில் சேர்ந்தேன். அங்கு எனக்கு தினசரி ரூ. 20 சம்பளம். ஒருகட்டத்தில் அந்த உணவக உரிமையாளர் தினசரி ரூ. 600 கொடுத்துவிட்டு ‘நீங்களே ஹோட்டலைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார். ஓராண்டுக்கு மேல் என்னால் அதை நடத்த முடியவில்லை. மீண்டும் கோவைக்கே வந்து சமையல் பணி செய்துகொண்டிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு ஏதேதோ செய்து பார்த்தேன். எதுவும் செட் ஆகவில்லை.

“கமல் ‘பிரியாணியில் தொடங்கி பிரியாணியிலேயே முடிக்கிறோம்’ என்றார்!

மாதம்பட்டியில் அர்த்தநாரி என்ற சமையல்காரர் இருந்தார். பெரிய விருந்துகளுக்கு சமையல் செய்வார். அவரிடம் இணைந்து பணியாற்றினேன். அவர்தான் எனக்கு குரு. வயதாகிவிட்டதால் அவர் சமையல் பணியைக் குறைத்துக்கொண்ட காலகட்டத்தில் நான் தனியாக வேலை எடுக்கத் தொடங்கினேன். மாதம்பட்டியில் `சின்னதம்பி – பெரியதம்பி’ படப்பிடிப்பு நடந்தது. ஆரம்பத்தில் அந்த யூனிட்டுக்குச் சென்ற உணவு சரியில்லை. அதனால் அவர்களுக்கு சமைத்துக் கொடுக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அடுத்தடுத்து அங்கு நடந்த படப்பிடிப்பு யூனிட்களுக்கு சமைத்துக் கொடுத்தோம். அதற்காக ஒரு வீட்டை நானும் என் சகோதரரும் இணைந்து வாங்கினோம். நிறைய ஆர்டர்கள் வந்தன. அதுதான் வாழ்வின் திருப்புமுனை. லட்சுமி கேட்டரிங் என்ற பெயரில் வளர்ந்தோம். அப்போதே மிகப்பெரிய அணியைக் கொண்டு 60,000 பேருக்கு சமைத்துப் போட்டிருக்கிறாம். நமது பூசணிக்காய் அல்வா, சாம்பார், ரசம் சாப்பிட்டாலே ‘மாதம்பட்டி தங்கவேலு சமையலா’ என்று கேட்பார்கள்.

“கமல் ‘பிரியாணியில் தொடங்கி பிரியாணியிலேயே முடிக்கிறோம்’ என்றார்!

எங்கள் வீட்டுக்குப் பின்பகுதியில் ஒரு கிச்சன் செட்அப் போட்டிருந்தோம். மகன்கள் வந்ததும் இதை மாதம்பட்டி தங்கவேல் ஹாஸ்பிட்டாலட்டி என கார்ப்பரேட் நிறுவனமாக உயர்த்தினர். இப்போது எல்லாவற்றுக்கும் தனித்தனியாக மாஸ்டர் வந்துவிட்டனர்” என்றார்.

தங்கவேலுவின் மகனும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணகுமார், “இது எங்கள் குடும்பத் தொழில். அப்பா, அண்ணன் ரங்கராஜ், சித்தப்பா ரவிச்சந்திரன், எங்களின் இன்னொரு சித்தப்பா மகன் விமல் இணைந்து இந்தத் தொழிலை நடத்திவருகிறோம். நான் ஐ.டி துறையில் இருந்தேன். பிறகு வேலையை விட்டு இதில் இணைந்துவிட்டேன். ஏற்கெனவே கொங்கு மண்டலத்தில் அப்பா பெரிய அளவில் பெயர் வாங்கியிருந்தார். நாங்கள் வந்த பிறகு காலத்துக்குத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தி வளர்ந்தோம். ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் பொறுப்பு எடுத்துக் கொண்டோம். அனைத்துப் பிரிவுகளிலும் அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து இதை சாத்தியமாக்கினோம்” என்றார்.

“கமல் ‘பிரியாணியில் தொடங்கி பிரியாணியிலேயே முடிக்கிறோம்’ என்றார்!

விக்ரம் சக்சஸ் மீட் விருந்தை ஒருங்கிணைத்தவரும், நிறுவனத்தின் இயக்குநருமான விமல், “படிப்பை முடித்துவிட்டு, ஆட்டோமொபைல் துறையில் இருந்தேன். ஆரம்பத்தில் எனக்கு இதில் விருப்பமே இல்லை. போகப் போக எனக்கு இந்தத் தொழில் மிகவும் பிடித்துவிட்டது. எந்த முக்கியமான பணியாக இருந்தாலும் என்னை நம்பி ஒப்படைப்பார்கள். விக்ரம் சக்சஸ் மீட் அப்படித்தான் வந்தது. கோவையில் இருந்து இரண்டு டிரக்கில் சமையல் பொருள்களை எடுத்துச் சென்று, வேலையைத் தொடங்கினோம். கமல் சாருக்காக தனியாக எதுவும் செய்யவில்லை. எல்லாருக்கும் செய்ததைத்தான் அவரும் சாப்பிட்டார். பிரியாணி, பரோட்டா எல்லாமே அருமையாக இருக்கிறது எனச் சொல்லி, ரசித்துச் சாப்பிட்டார். அவர் எதையும் வீணடிக்கவில்லை. ‘படத்தை பிரியாணியில் தொடங்கி பிரியாணியிலேயே முடிக்கிறோம்’ எனக் கிண்டலடித்தார். லோகேஷ் கனகராஜ் அண்ணாவுக்கு இடியாப்பம் ஆட்டுக்கால் பாயா மிகவும் பிடித்துவிட்டது. கமல் சாருக்கு ‘விக்ரம்’ எவ்வளவு பெரிய ஹிட்டோ, அப்படி எங்களுக்கும் விக்ரம் சக்சஸ் மீட் பெரிய ஹிட்” என்றார்.

அலுவலகம், கிச்சன் ஆகியவற்றைச் சுற்றிக் காண்பித்துவிட்டுப் பேசிய அந்த நிறுவனத்தின் தலைவர் ரங்கராஜ், ‘‘ஆரம்பத்தில் எல்லா கஷ்டங்களையும் அனுபவத்திருக்கிறோம். இன்றைக்கு எங்கள் நிறுவனத்தில் சுமார் 3,000 பேர் உள்ளனர். அன்று அப்பாதான் ஒன் மேன் ஆர்மியாக எல்லாவற்றையும் செய்வார். மண்டபத்தில் சமையல் செய்யும்போது செருப்பு போட முடியாது. வேலை முடித்து வரும்போது அப்பாவின் கால்கள் எல்லாம் கரியாக இருக்கும். கை காப்புக் காய்ச்சிருக்கும்.

“கமல் ‘பிரியாணியில் தொடங்கி பிரியாணியிலேயே முடிக்கிறோம்’ என்றார்!

சமையல்காரர்கள் என்றாலே ஒரு மாதிரியான பார்வை இருக்கும். சில இடங்களில் வீட்டுக்குள் அனுமதிக்காமல் வாசப்படி அருகில் நிற்க வைத்துத்தான் பேசுவார்கள். அதை மாற்ற நினைத்தேன். மிகச்சிறந்த சமையல் கலைஞர்கள், அந்தந்தத் துறையில் சிறப்பாகச் செயல்படும் வல்லுநர்களை வைத்துப் பெரிய அணியைக் கட்டமைத்தோம். அது கைக்கொடுத்தது. சமீபத்தில் நடிகர் விஜய் அண்ணா அழைத்துப் பாராட்டினார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இயக்குநர் ஷங்கர் சார் பிறந்தநாளுக்கு நாங்கள்தான் சமைத்தோம். தன் உதவியாளர்களை அழைத்து எங்களை அறிமுகப்படுத்திப் பாராட்டினார். திருமணம்தான் எங்களின் பிரதானம். அதேபோல ஐ.டி தொழில் நிறுவனங்களுக்கு தினசரி 18,000 மீல்ஸ் செய்துகொண்டிருக்கிறோம். அடுத்ததாக கிளவுட் கிச்சன், ரெஸ்டாரன்ட் திறக்க உள்ளோம். எங்களிடம் சுமார் 3,000 ரெஸிபிகள் உள்ளன. இதில் 1,000 ரெஸிபிகள் மிகவும் சிறப்பானவை. மாதம்பட்டி குழுமத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல சினிமாவில் நல்ல நடிகராகத் தொடர வேண்டும். எங்கள் சொந்தத் தயாரிப்பிலேயே படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்ததாக சீனு ராமசாமி அண்ணா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன்” என்றார்.

மீண்டும் தொடர்ந்த தங்கவேலு, “முகூர்த்தம் முடிந்து `சமையல் நன்றாக இருந்தது’ என வந்தவர்கள் சொன்னால்தான் நிம்மதி. நாங்கள் திருமணத்துக்கு சமைத்த மணமக்கள் அவர்களது வாரிசுகளின் விசேஷங்களுக்கு எங்களைத்தான் அழைப்பார்கள். பணம் சம்பாதிப்பது குறிக்கோள் இல்லை. வாடிக்கையாளர்களின் திருப்தியுடன் தொழிலை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். அதுதான் வெற்றிக்குக் காரணம்” என்றார்.

மேன்மேலும் விருந்துகள் படைக்க வாழ்த்துகள்!