நடிகர் விஜய் 2012 -ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காருக்கான நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்குக்கு தீர்ப்பளித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய கருத்துகளை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நுழைவு வரி ரத்து செய்யக் கோரிய வழக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு 2021 ஜூலை 8 அன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய் குறித்து தெரிவித்த, "சமூகநீதிக்காகப் பாடுபடுவதாக சினிமாவில் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி விலக்கு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி என்பது நன்கொடையல்ல... கட்டாயப் பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்திலிருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடமிருந்துதான் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது" எனக் கடுமையாக சாடினார். ஒரு இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் விவாதப் பொருளானது.
"இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின. கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது. வழக்கு விவரங்களில் தொழிலைக் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை” என விஜய் தரப்பில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. மேலும் ``என்னை தேச விரோதியாக விமர்சித்து கருத்து கூறியதும் தேவையற்றது’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் குறித்த எதிர்மறை கருத்துக்களை நீக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகஸ்ட் 27 இல் அபராத தொகை செலுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்கள். மேலும் நுழைவு வரி 32 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகஸ்ட் 7 ஆம் தேதி செலுத்தப்பட்டுவிட்டது என விஜய் தரப்பில் அதில் சொல்லப்பட்டிருந்தது. எதிர்மறை கருத்துகளை நீக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு தனி நீதிபதி கூறிய கருத்துக்களை நீக்குமாறு உத்தரவிட்டது.