சினிமா
Published:Updated:

“மசாலாப் படங்கள் இயக்குவதுதான் கடினம்!”

திலீஷ் போத்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
திலீஷ் போத்தன்

விருதுகளுக்காக நான் படம் பண்ணக்கூடாது என ஆரம்பத்திலேயே முடிவெடுத்துவிட்டேன். அப்படி ஒரு எண்ணம் உண்டானால், என்னால் சினிமா இயக்கவே முடியாது

திலீஷ் போத்தன்... இயக்கியது மூன்றே படங்கள். அதற்குள் மலையாள சினிமாவின் உச்சம் தொட்டவர். அதோடு நடிகராகவும் பிஸியாக வலம்வருகிறார். கேரளாவில் தன் அடுத்த படத்தின் கதை விவாதத்தில் இருந்தவரிடம் பேசினேன்.

‘‘மலையாள சினிமாவில் முக்கியமான இயக்குநராக உருவாகியிருக்கிறீர்கள். நீங்கள் சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்கள்?’’

‘‘எனக்கு சினிமாவைப் பிடிக்கும் முன் சினிமா என்னைப் பிடித்த கதையைச் சொல்கிறேன். அப்பா சினிமா விநியோகஸ்தர். அவருடன் கேரளா முழுவதும் சின்னச் சின்ன தியேட்டர்களுக்கு என் சிறுவயதில் போயிருக்கிறேன். பெரும்பாலும் பாதிப் படத்தில்தான் உள்ளே போவோம். இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என மீதியை நான் யூகித்து வைத்திருப்பேன். அடுத்த தியேட்டரில் அந்த மீதியை ஆரம்பத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் என் கற்பனையும், திரையில் விரியும் சினிமாக்களும் பொருந்திப் போகும். ஆனால், சத்யன் அந்திக்காடு, பிரியதர்ஷன் படங்கள் என் கற்பனைக்கு அப்பால் ஒருவித மேஜிக்கல் டச்சோடு இருக்கும். கே.ஜி.ஜார்ஜ் படங்களையும், அடூர் கோபாலகிருஷ்ணன் படங்களையும் பின்னாளில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முற்றிலும் சினிமா குறித்த பார்வையே மாறிவிட்டது. பெற்றோருக்காக மைசூர் போய் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அதன் பிறகு என் கனவுக்காக காலடி பல்கலைக்கழகத்தில் தியேட்டர் ஆர்ட் படித்தேன். முடித்துவிட்டு வெவ்வேறு டெலி சீரியல்களில் சிறிது காலம் வேலை பார்த்தேன். இயக்குநர் ஆஷிக் அபுவிடம் ஐந்து படங்கள் வேலை பார்த்தபோது சினிமா இயக்க ஆர்வம் வந்தது. 2011-ல் அவரின் சால்ட் அண்ட் பெப்பர் படத்தில் ஒரு நடிகனாகவும் அசோசியேட்டாகவும் பணியாற்றியது மிகப்பெரிய தைரியத்தைக் கொடுத்தது. அதன்பிறகு கிடைத்ததுதான் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ பட வாய்ப்பு.’’

“மசாலாப் படங்கள் இயக்குவதுதான் கடினம்!”

‘‘ரொம்ப ரியலிஸ்ட்டிக்கான யதார்த்த சினிமாக்களை இயக்குகிறீர்கள். அப்படிப்பட்ட படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக வாய்ப்புகள் குறைவு இல்லையா?’’

‘‘யார் அப்படிச் சொன்னது? நான் இயக்கிய ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ மற்றும் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படங்கள் கேரளாவில் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தன. ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ ஒரு எளிய மனிதனின் சவால் பற்றியது. நிஜத்திலிருந்து எடுக்கப்பட்டது. தன்னை அடித்தவனுக்காகச் செருப்புப் போடாமல் பத்து வருடங்கள் காத்திருந்து பழிதீர்த்துவிட்டுச் செருப்பு போட்டவனைப் பற்றிய கதை. பக்கா கமர்ஷியலாக இதை மாற்றியிருந்தால் நீங்கள் கொண்டாடியிருக்க மாட்டீர்கள்.

‘ஜோஜி', ஓ.டி.டி-க்காக எடுக்கப்பட்ட படம். இந்தியா முழுவதும் ஓ.டி.டி-யில் பலர் அதிகமுறை பார்த்த படம் என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது. என்னைப் பொறுத்தவரை மசாலாப் படங்கள் இயக்குவதுதான் கடினம். என் ஸ்டைல் என் இயல்பிலிருந்து தொடங்குவது. ஆனால், அந்த ஸ்டைலை உருவாக்க நேரம் எடுத்தது. ‘மகேஷிண்டே பிரதிகார’த்தின் திரைக்கதைக்காக இரண்டு வருடங்கள் வேலை செய்தேன். நானும் கதாசிரியர் ஷியாம் புஷ்கரனும் இடுக்கியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கதை எழுதினோம். குட்டிக்குட்டியாய் பல கிளைக்கதைகள், ஹீரோ ஒரு போட்டோகிராபர் என்ற விஷயமே அங்கு போனபிறகுதான் எங்களுக்கு உதித்தது. இல்லையென்றால் ஒரு மளிகைக்கடை ஓனராக ஹீரோ இருந்திருப்பார். இழவு வீட்டில் காதல் வளர்க்க அந்த போட்டோகிராபி ஐடியா அங்கு ஒரு வீட்டில் பார்த்த யோசனையில் பிறந்ததுதான்.

அந்தப் படத்தின் மகேஷ், நம்மில் ஒருவன்தான். சின்னச்சின்ன தோல்விகளில் நம் அடையாளத்தை இழந்துவிடுகிறோம். நிஜமான ஹீரோ நமக்கு நாம்தான். அதுதான் அந்தப் படம் சொன்ன செய்தி!''

“மசாலாப் படங்கள் இயக்குவதுதான் கடினம்!”

‘‘மகேஷிண்டே பிரதிகாரம் உங்கள் இயக்கத்தில் வந்த முதல் சினிமா. அதற்கு தேசிய விருது கிடைத்தபோது எப்படி இருந்தது?''

‘‘விருதுகளுக்காக நான் படம் பண்ணக்கூடாது என ஆரம்பத்திலேயே முடிவெடுத்துவிட்டேன். அப்படி ஒரு எண்ணம் உண்டானால், என்னால் சினிமா இயக்கவே முடியாது. நான் தலைசிறந்த கொள்கைவாதியெல்லாம் இல்லை. எளிய சினிமா பண்ண வேண்டும், அவ்வளவே. இதுவரை சொல்லப்படாத மனிதர்களைப் பற்றியும் வித்தியாசமான கதைக்களத்திலும் கதைகள் சொல்ல ஆசை. அதற்காக, ரொம்பவே பார்வையாளனின் கருணையை எதிர்பார்க்கும் சினிமாக்களையும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் தெளிவுடன் இருக்கிறேன்.’’

‘‘தற்போது பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். வெவ்வேறு இயக்குநர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக் கொள்கிறீர்களா..?''

‘‘நிச்சயமாக... ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு ஸ்டைலில் படம் எடுப்பதைப் பார்க்க முடிகிறது. எனக்கு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி எப்படி ஒரு படத்தை உருவாக்குகிறார் என்று பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருந்தது. ‘இ.மா.யூ’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பல புது இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு படப்பிடிப்பிலும் அத்தனை அனுபவங்கள் கிடைக்கின்றன. என் சினிமா இயக்கும் திறனும் இதனால் மேம்பட்டிருக்கிறது. 50 படங்களைத் தாண்டி நடித்தபிறகு பொருளாதார ரீதியாகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால், வரும் ரோல்களில் பாதி அரசியல்வாதியாகவும், மீதி போலீஸாகவும் வருகிறது. அதைத்தான் தவிர்த்து வருகிறேன். மனசுக்கு நெருக்கமான மற்றும் சவாலான ரோல்களில் நடிக்கவே அதிக ஆசை.’’

‘‘இந்நேரம் கேரளாவின் சூப்பர் ஸ்டார்களோடு நீங்கள் பணியாற்றியிருக்க வேண்டும். ஏன் அது நிகழவில்லை?’’

‘‘எனக்கே அது தோணவில்லை. எனக்கு ஸ்டார்களுக்காகக் கதை பண்ணத் தெரியவில்லை. என் கதைகளில் அவர்களை நடிக்க வைத்து அவர்கள் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. அதே சமயத்தில் அப்படியொரு கதை அமைந்தால் நிச்சயம் அவர்களிடம் கால்ஷீட் கேட்பேன். கதைக்காக நான் மெனக்கெட விரும்பவில்லை. இங்கு திறமையான கதையாசிரியர்கள் இருக்கிறார்கள். கேட்டுக்கொண்டே இருக்கிறேன். மம்மூட்டி, மோகன்லாலை இயக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.’’

‘‘அதென்ன பகத் பாசிலோடு மட்டும் சினிமாக்கள் பண்ணுகிறீர்கள்?’’

‘‘பகத் என் அருகில் இருக்கிறார். அதுதான் காரணம். என் ஒவ்வொரு படத்திலும் அவரைத் தவிர்க்க நினைத்தாலும் கடைசியில் அவர்தான் வந்து அந்தப் பாத்திரங்களில் தன்னை நிறைக்கிறார். என் படங்களில் முகங்கள் புதிதாக இருக்கவே விரும்புகிறேன். ஆனாலும் ‘தொண்டிமுதலும்’ படத்தில் அத்தனை புதுமுகங்கள் நடித்தாலும் அவர்களில் ஒருவராக பகத் நடித்திருக்கிறார். தயாரிப்பு ரீதியாகவும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். மார்க்கெட்டும் வசமாவதால் வலிய விலகி நிற்கவும் விருப்பமில்லை. நல்ல கதையில் பகத் இருந்தால் இன்னும் அது அழகாகிவிடும். நெகட்டிவ் கேரக்டர் படமான ‘ஜோஜி’யை அவர்தவிர யார் பண்ணியிருந்தாலும் நன்றாக இருந்திருக்காது.’’

“மசாலாப் படங்கள் இயக்குவதுதான் கடினம்!”

‘‘தமிழ்ப்படங்கள் பார்க்கிறீர்களா? தமிழ்ப்படங்களில் எப்போது பார்க்கலாம் உங்களை?’’

‘‘தமிழர்களுக்கு மலையாள சினிமா பிடிப்பதைப் போல எங்களுக்குத் தமிழ்ப்படங்கள் ரொம்பவே பிடிக்கும். ரஜினி, கமல் படங்கள் பார்த்துதான் வளர்ந்தோம். இளையராஜா- ரஹ்மான் இசை இல்லாமல் நாள்கள் நகராது. நிறைய பேர் சென்னையிலிருந்து அழைக்கிறார்கள். பல இளம் இயக்குநர்கள் நடிக்க அழைக்கிறார்கள். எல்லா மலையாளிகளையும் போல எனக்கும் தமிழ் சினிமாமீது காதல் உண்டு. நல்ல ரோலில் நடிக்க ஆசை. நல்ல சினிமாக்களைத் தமிழ் மக்கள் கொண்டாடும் சிறப்பே தனி. இன்னும் சிறப்பான படங்களைத் தர வேண்டும் என நினைக்கிறேன். இப்போது தென்னிந்திய மொழிகளில் தலைசிறந்த படங்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இன்னும் பல திறமைசாலிகள் தென்னிந்தியாவில் உருவாகி உலக அளவில் வலம் வருவார்கள். நிச்சயம் விரைவில் தமிழ் சினிமாவில் என்னைப் பார்க்கலாம்.’’