Published:Updated:

`த்ரில்லர் - திகில், நட்பு - காதல்; எழுத்துகளில் ஒளிந்திருக்கும் அமானுஷ்யம்!’ – #Marianne ரிவ்யூ

மேரியேன்
மேரியேன் ( Netflix )

பொதுவாக ஒரு படைப்பாளிக்குப் பின்னாலிருக்கும் சோகக் கதைக்குச் சொந்தக்காரர்தான், எம்மாவும். சிறு வயதிலிருந்து துயரம், பெற்றோர்களைப் பிரிந்து வாழ்தல், நண்பர்களை விட்டு விலகி இருத்தல், மதுப் பழக்கம், சமூகத்திடமிருந்து விலகியே இருத்தல் என சகல துயரங்களும் இவரைத் தொற்றியிருக்கிறது. 

கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியான சீரிஸ், 'மேரியேன்'. பேய் படங்களுக்கே உண்டான வழக்கமான பாணியிலிருந்து விலகி, தனித்துத் தெரிவதுதான் இதனுடைய வெற்றி. இதயம் பலவீனமாக இருப்பவர்கள் இந்த சீரிஸைப் பார்க்காதீங்க!

'லிஸ்ஸி லார்க்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதுகிறார், எம்மா லார்ஸிமோன். உங்க வீட்டு புக், எங்க வீட்டு புக் இல்லை... ஒவ்வொரு அத்தியாயமும் அல்லுவிடும் அளவுக்குப் பேய்க்கதை கொண்ட புத்தகம். தன்னுடைய குழந்தைப் பருவத்தின் நைட்மேர் அனுபவத்தின் தாக்கத்தால் எம்மா எழுதிய புத்தகம் அது.

பிரான்ஸ் மட்டுமல்லாது எட்டுத்திக்கிலும் அந்தப் புத்தகமானது பிரபலமாகிறது. சாலையில் எம்மா நடந்து சென்றாலே இவர் எழுதிய புத்தகத்தைக் கொண்டுவந்து ஆட்டோகிராஃப் வாங்கிப்போகிறார்கள், ரசிகர்கள். பொதுவாக, ஒரு படைப்பாளிக்குப் பின்னாலிருக்கும் சோகக் கதைக்குச் சொந்தக்காரர்தான், எம்மாவும். சிறு வயதிலிருந்து துயரம், பெற்றோர்களைப் பிரிந்து வாழ்தல், நண்பர்களை விட்டு விலகி இருத்தல், மதுப் பழக்கம், சமூகத்திடமிருந்து விலகியே இருத்தல் என சகல துயரங்களும் இவரைத் தொற்றியிருக்கின்றன.

மேரியேன்
மேரியேன்

இப்படி பெர்சனல் பக்கங்கள் ஒரு பக்கம் எம்மாவைப் பதம் பார்க்க, ஒருநாள் தன்னுடைய சிறு வயதுத் தோழி ஒருத்தி வலுக்கட்டாயமாக வந்து, 'லிஸ்ஸி லார்க்' புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மேரியனைப் பற்றிக் கதை எழுதச் சொல்லி தொடர்ந்து நச்சரிக்கிறார். அமானுஷ்யத்தின் உச்சமாகத் தற்கொலை செய்து இறந்தும் போகிறாள். அங்கிருந்து விரிவடையும் கதை, எம்மாவின் சொந்த ஊரான எல்டனுக்கு அவரை அழைத்துச் செல்கிறது. கதை நகர, நகர எம்மா உணர்வது ஒன்றை மட்டும்தான். தான் எழுதியிருக்கும் 'லிஸ்ஸி லார்க்' புத்தக்கத்தில் இடம்பெற்றிருக்கும் கதைபோலவே இவரது நிஜ வாழ்க்கையிலும் நடக்கத் தொடங்கியிருக்கிறது. தவிர, பல்வேறு மீடியம்களின் வாயிலாக இவருக்கு வரும் அச்சுறுத்தல்கள்,  'கதையைத் தொடர்ந்து எழுது!' என்கின்றன. இறுதியில் அந்தக் கதையை இவள் எழுதுகிறாளா, இல்லையா. ஆம், இல்லையெனப் பைனரியாக இவள் பதில் சொன்னாலோ, செயலில் இறங்கினாலோ, நடப்பது என்ன என்பதை விவரிக்கிறது, 'மேரியேன்' சீரிஸ். 

பிரெஞ்சு சீரிஸ் என்பதால், ஒவ்வொரு பெயரும் வாயில் வெற்றிலை பாக்கு மென்றுகொண்டே சொல்வதுபோலத்தான் இருக்கும். எம்மா லார்ஸிமோனாக, விக்டோரி டூ போய்ஸ். குழப்பங்கள் சூழ் உலகாகத் தன் வாழ்க்கையை நகர்த்தக்கூடிய ஒருத்தியாக, பேயைப் பார்த்து பயப்படுபவளாக, துணிந்து சண்டையிடுபவளாக, அம்மா - அப்பாவை நினைத்துக் கதறி அழும் மகளாக, எழுத்தாளராக... இப்படி ஒவ்வொரு பரிணாமத்திலும் நடித்து நொறுக்கியிருக்கிறார். இவருக்குப் பின் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டியவர், பாட்டிமா Mrs.டௌகிரான்.

'பாட்டிம்மான்னா காதுல அரை கிலோவுல தோடு போட்டுக்கிட்டு, வாயில வெத்தலை பாக்கு மென்னுக்கிட்டு, புளிச் புளிச்னு துப்பிக்கிட்டு இருப்பாளே... அந்த மாதிரி பாட்டிம்மானு நெனச்சியா... பாட்டிம்மாடா' என்று மாஸ் டயலாக் பேசாதது மட்டும்தான் பாக்கி. மற்றபடி, நவரச நடிப்பால் கெத்து காட்டியிருக்கிறார், இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த மிர்ரெயில் ஹெர்ப்ட்ஸ்மெயர். பார்த்தாலே பதறவைக்கும் இந்தப் பாட்டிம்மா, வாயை கால் ஜானுக்கு விரித்துச் சிரித்தால் தூக்கம் குளோஸ்!  

மேரியேன்
மேரியேன்

இவர்களைத் தவிர, எம்மாவுடைய உதவியாளர் மற்றும் தோழியாக நடித்திருக்கும், கெமைல். எம்மாவின் கிறுக்குத்தனத்தால் கடுப்பாகி ஓடிப்போவார். பின்னர் 'எம்மா பாவமாச்சே!' எனப் பதறிடித்து ஓடியும் வருவார். வேலை, பெர்சனல் என இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில் நன்றாகவே நடித்திருந்தார். இவர்களைத் தவிர, குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள், எந்தவொரு சூழலிலும் உடன் நிற்கும் எம்மாவின் நண்பர்கள். ஒருகட்டத்திற்குமேல் கதை இவர்களோடுதான் நகர்கிறது. அதைப் புரிந்து ஒவ்வொருவருமே சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனர். த்ரில்லருக்கும் திகிலுக்கும் நடுவில், பாசத்துக்கும் வேஷத்துக்கும் நடுவில், நட்புக்கும், காதலுக்கும் நடுவில் எனக் காட்சியமைப்பின் தன்மையை உணர்ந்த இசையமைப்பாளர், இதன் இடைப்பட்ட தூரத்தில் நின்று இசையமைத்திருக்கிறார். 

இப்படியாக சீரிஸின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்குகிறார்கள், படைப்பாளிகள். கலங்கரை விளக்கம் எழுப்பிடும் 'கீச் கீச்' ஒலிகூட அவ்வளவு பீதியை உண்டாக்கியிருக்கிறது. நெகட்டிவ் எனர்ஜியை விரும்பாதவர்கள் இந்த சீரிஸைத் தவிர்ப்பது நல்லது. இதுவரை ஒரு சீஸன், அதில் 8 எபிசோடு வெளியாகியிருக்கிறது. ஆனால், 7 எபிசோடு வரை பார்க்கும்போது, எதையோ பறிகொடுத்த உணர்வு மட்டுமே ஏற்படும் அளவிற்கான நெகட்டிவ் எனர்ஜி சூழ் உலகாகக் கதையும், காட்சியமைப்பும் நகர்கிறது. இந்த சீஸனின் இறுதியில் கதை முடிந்து, காரிய காரணங்களென அனைத்தும் முடிவடைந்தாலும், அடுத்த சீஸனுக்கான தொடக்கத்தோடுதான் இறுதிக்காட்சி நிறைவடைந்திருக்கிறது.

மேரியேன்
மேரியேன்
நெட்ஃப்ளிக்ஸ்

அமானுஷ்யம், எழுத்தாளர்களுக்கே உரிய கர்வம், தக்க சமயத்தில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் உதவி, சிறு வயதில் தான் செய்த சத்தியத்தைக் காப்பாற்றும் மத குரு, தன்னை விடுவிக்கச்சொல்லி மிரட்டும் சூனியக்காரி... என இதுபோன்ற பல விஷயங்களைப் பேசியிருக்கிறது, 'மேரியேன்'. ஒரு வித்தியாசமான அமானுஷ்ய பயணத்தை அனுபவிக்க, கட்டாயம் மேரியேனைப் பார்க்கலாம்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு