சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“மனசுக்குள்ள எப்பவும் பாட்டு ஒலிச்சுட்டே இருக்கும்!”

நஞ்சியம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
நஞ்சியம்மா

ஒருநாள் பழனிச்சாமி வந்து ஏதோ சினிமாவுக்குப் பாடணும்னு கூப்டான். அங்க போனப்பறம்தான் தெரிஞ்சுது.

ச்சர்யங்களுக்கும் அதிசயங்களுக்கும் பஞ்சமில்லாத கேரள சினிமாவின் அடுத்த சர்ப்ரைஸ் நஞ்சியம்மாள் என்ற 60 வயது பழங்குடிப் பெண். தமிழக, கேரள எல்லையான அட்டப்பாடி என்ற பழங்குடி கிராமம்தான் நஞ்சியம்மாவின் பூர்வீகம். கணீர் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான நஞ்சியம்மா, கலைக்குழுக்கள் மூலம் ஏராளமான மேடைகளில் பாடியிருக்கிறார். ‘ஆசாத் கலாசங்கம்’ கலைக்குழுவின் பழனிச்சாமி என்பவர் மூலம் இப்போது வெள்ளித்திரையிலும் ஒலித்திருக்கிறது நஞ்சியம்மாவின் குரல்.

இயக்குநர் சச்சி இயக்கத்தில், பிரித்திவிராஜ், பிஜூ மேனன் இணைந்து நடித்து கேரளாவில் வெளியாகியுள்ள படம் ‘அய்யப்பனும், கோசியும்.’ இந்தப் படத்தில், ‘களக்காத்த சந்தனமேரம் வெகு வேகா பூத்திருக்கு’ என்று தொடங்கும் டைட்டில் பாடலைப் பாடியிருக்கிறார் நஞ்சியம்மா. யூ-ட்யூபில் 45 லட்சம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் என்று அனைத்துத் சமூக வலைதளங்களிலும், அந்தப் பாடல்தான் வைரல்.

நஞ்சியம்மா
நஞ்சியம்மா

இந்தப் பாடலைப் பாடிய நஞ்சியம்மாவுக்கு பிரித்திவ் ராஜ், பிஜூ மேனன் யாரென்றே தெரியாது என்பதுதான் இதில் ஆச்சர்யம். இவ்வளவு ஏன்... அந்தப் பாடலைப் பாடி முடிக்கும் வரை, எந்தப் படத்துக்காகப் பாடினோம் என்பதுகூட நஞ்சியம்மாளுக்குத் தெரியாது. குளிர்காற்று சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்த ஒரு காலை நேரத்தில் அட்டப்பாடி சென்றோம். பழங்குடி மக்களுக்காக அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீட்டில் இருந்து வெளியில் வந்தார் நஞ்சியம்மா.

“என்னய பார்க்கறதுக்கு கோயம்புத்தூர்ல இருந்து வந்துருக்கீங்களா...? வா மோனே.. வா மோனே..” என்று கை கூப்பி வரவேற்றார்.

நஞ்சியம்மா
நஞ்சியம்மா

“பொறந்ததுல இருந்து காட்லதான் இருக்கேன். என் வீட்டுக்கார் நஞ்சப்பன் இறந்து எட்டு வருஷம் ஆச்சு. எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ஆடு மாடு மேய்ச்சுட்டு, காட்ல வெளையறத வெச்சு அவங்கள வளத்துட்டேன். சின்ன வயசுல இருந்தே என்கூட பாட்டும் வளந்துச்சு. நான் பார்க்கற செடி கொடி மரங்க, பூச்சி, பறவை, ஆடு, மாடு, நாய், கோழி, பூனை எல்லாத்தப் பத்தியும் பாடுவேன். அட்டப்பாடில நல்லது கெட்டது எல்லாத்துலயும் என் குரல் ஒலிக்கும். அப்படியே கேரளா, தமிழ்நாட்ல பல மேடைகள்ல பாடிட்டு இருந்தேன்.

ஒருநாள் பழனிச்சாமி வந்து ஏதோ சினிமாவுக்குப் பாடணும்னு கூப்டான். அங்க போனப்பறம்தான் தெரிஞ்சுது. அந்த டைரக்டர், அவரு படத்துல என்ன பாட வெக்கணும்னு ரொம்ப நாளா காத்துட்டு இருந்தாங்களாம். எனக்கு எழுதி வெச்சு, பார்த்தெல்லாம் பாடத் தெரியாது. என் மனசுக்குள்ள எப்பவும் பாட்டு ஒலிச்சுட்டே இருக்கும். ரெக்கார்டிங் போனதும் அது டப்பு டப்புனு வந்துருச்சு. என் வாழ்க்கைய அப்படியே பாடினேன். பாட்டு பாடி முடிக்கறப்ப என் கண்ல இருந்து கொட கொடன்னு தண்ணி வந்துருச்சு. நான்தான் அழுகறேன்னு வெளிய வந்து பார்த்தப்ப, டைரக்டர், மியூசிக் டைரக்டர்னு அங்க இருந்த எல்லாருமே அழுதுட்டிருக்காங்க. அத நினைச்சா இப்பவும் அழுகை வருது” என்றவர் அருகில் வந்த ஒரு நாய்க்குட்டியைத் தடவிக்கொடுத்து, ‘இந்தக் குட்டியெல்லாம் சினிமால வந்துருக்கு’ என்று மீண்டும் தொடர்ந்தார்.

“சினிமா மேல பைத்தியமா இருந்தது எல்லாம் ஒரு காலம். சினிமா இருந்தா சோறுகூடத் தேவையில்ல. எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா படங்கள் ரொம்பப் பிடிக்கும். இப்பெல்லாம் படமே பார்க்கறது இல்ல. டி.வி கூட பார்க்க மாட்டேன். அதுல கவனம் செலுத்தினா நம்ம பொழப்பு மாறிடும். அப்படிப்பட்ட எனக்கு பாட வாய்ப்பு கொடுத்து, படத்துலயும் நடிக்க வெச்சுட்டாங்க.

நஞ்சியம்மா
நஞ்சியம்மா

பிருத்திவிராஜ் யாருன்னு எனக்கு சத்தியமா தெரியல. அதான் அப்படிச் சொன்னேன். அதுக்கப்பறம் அவரப்பத்தி எல்லாரும் சொன்னதும், பிருத்திவிராஜ்கிட்ட சொல்லி வருத்தப்பட்டேன். ஆனா, பிருத்திவிராஜ், ‘அம்மா நீங்க வருத்தப்படக் கூடாது. நாங்கதான் உங்களத் தெரிஞ்சு வெச்சுருக் கணும். இந்தப் படத்துல இவங்க வாய்ப்பு கொடுக்காட்டி.. என்னோட அடுத்த படத்துல நானே உங்கள பாட வெச்சிருப்பேன் அம்மா’ன்னு சொன்னார். அப்பதான் என் மனசு நிம்மதியாச்சு.

படம் பார்க்க தியேட்டர் போனேன். ரெண்டு தடவை டிக்கெட் கிடைக்காம திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன். அப்பறம், பழனிச்சாமி டிக்கெட் புக் பண்ணி, படத்துக்கு கூப்டுப் போனான். நம்ம படத்த இத்தன பேரு பாக்கறாங்களான்னு ஆச்சர்யமா இருக்கு. என் பாட்டுக்கு இப்ப இருக்கற இளசுங்க எல்லாம் ஆடறத பார்க்கறப்ப, இன்னும் சீக்கிரமா சினிமால பாடியிருக்கணு மோன்னு தோனுது.

எனக்குத் தமிழ் சினிமா ரொம்பப் பிடிக்கும். கமல், பாக்யராஜ், வடிவேல் எல்லாரயும் பார்த்துப் பேசியிருக்கேன். தமிழ், மலையாளத்துல நிறைய பாடணும்.

பிருத்திவிராஜ்
பிருத்திவிராஜ்

இப்ப நிறைய வாய்ப்பு வருது. ஆனா, வீட்டு வேலையே சரியா இருக்கு. எனக்கு குழந்தைங்கள ரொம்பப் பிடிக்கும். இப்ப என் மருமக மாசமா இருக்கா. குழந்தை நல்லபடியா பொறக்கணும். அது மட்டும்தான் ஆசை. எனக்குப் பணம் காசு மேல எல்லாம் ஆசை இல்ல. பணம் இன்னிக்கு வரும், நாளைக்குப் போகும். இப்படியெல்லாம் ஒரு பாட்டு இருக்குன்னு இப்ப இருக்கற பசங்களுக்குத் தெரியணும். என் பாட்டுனால அவங்க சந்தோசப்படணும். அதப் பார்த்து நான் சந்தோசப்படணும். அவ்வளவுதான் சாமி” என்று புன்னகைத்தார்.