
ஜி.வெங்கட்ராம்
எஸ்.பி.பி என்ற மூன்றெழுத்து மந்திரம் அரை நூற்றாடு காலமாக தமிழர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது. ஒவ்வொரு தனி மனிதனின் மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், காதல், பிரிவு என எல்லா உணர்வுகளிலும் எஸ்.பி.பியும் இருந்தார்.
பலருக்கும் உயிர்மூச்சாகத் திகழ்ந்த உன்னதப் பாடகர். அந்தப் பலரும் அவர்மீது கொண்டிருந்த பாசம், பற்று, மரியாதை எதையும் தராசுக் கல் வைத்துத் தரம் பிரித்துவிட முடியாது. ஆதர்ச பாட்டு பயில்வானை ஆராதித்து, ஆனந்தம் அடைந்து, அர்ச்சித்து அகம் மகிழ்ந்தார்கள் அவர்கள்.
வசீகரமான குரல் அவருக்கு. `மின்சார கனவு' படத்தில் அவர் பாடியிருக்கும் ‘தங்கத் தாமரை மகளே...' பாடலில் இருபது வயது `யூத்'தாக மாறியிருப்பார் எஸ்.பி.பி!
பாடல் வரிகளை அவற்றில் உள்ளடங்கிய பொருளுக்கு ஏற்ப மாடுலேஷன் கொடுத்து உயிர்ப்பிப்பதில் உலகமகா இசைக்கலைஞன் அவர். “கொட்டும் மழைக் காலம் உப்பு விக்கப் போனேன்... காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்...'' என்ற வாலியின் வரிகளில் (அபூர்வ சகோதரர்கள்) தமது குரலால் தவிப்பையும் உருக்கத்தையும் ஒருசேர வெளிப்படுத்துவார்.
“சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடலில் ஆக்ரோஷத்தையும் ஆத்திரத்தையும் அமர்க்களமாகப் பிரதிபலிப்பார்!

“மலரே மௌனமா...'' பாடலில் தர்பாரி கானடா ராகத்தின் சங்கதிகளை எஸ்.பி.பி அவிழ்த்து கோலிகுண்டுகள்போல உருள விடும்போது, உருகாத சங்கீத கலாநிதிகளே கிடையாது!
பாடல்களுக்கு நடுவே சிரித்தும் அழுதும், ரொமான்ஸ் செய்தும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, கேட்போரிடமும் அதே உணர்வுகளைக் கடத்திச் செல்லும் கலையை எஸ்.பி.பி எங்கே கற்றார் என்று கேட்பதே சிறுபிள்ளைத்தனம்! குருவிடம் குருகுலவாசம் இருந்து இதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியுமா என்ன? சங்கராபரணத்தில் இருந்து சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் பாடியிருக்கத்தான் முடியுமா? எஸ்.பி.பி-யின் ரத்தத்தில் இரண்டறக் கலந்துவிட்டிருக்கும் இணையற்ற ஆற்றல் அது!
தங்கள் அபிமான பாடகரின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, உருகிப்போனார்கள் விசிறிகள். கைதட்டியும் விளக்கேற்றியும், விசிலடித்தும் கொரோனாவை நாட்டை விட்டு விரட்ட மக்கள் முனைந்தது ஒருபுறமிருக்க, நாளும் நேரமும் குறிப்பிட்டு தனியொரு மனிதனுக்காக இசை ஆர்வலர்கள் நடத்திய கூட்டுப் பிரார்த்தனை ஓர் உலக அதிசயம். பாடும் நிலாவை `ஆயிரம் நிலவே வா' என்று பல்லாயிரக்கணக்கானவர் ஏக்கத்தோடு அழைத்தார்கள்.
எஸ்.பி.பி தெலுங்கு தேசத்துக்காரர். அவரது தந்தை சாம்பமூர்த்தி உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் நடத்தியவர். எஸ்,பி.பி., காளஹஸ்தியில் எஸ்.எஸ்.எல்.சி-யையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பி.யு.சி-யையும் முடித்துவிட்டு, அனந்தபூரில் பொறியியல் படிக்கச் சேர்ந்தார். உடல்நல பாதிப்பால் முதல் வருடத் தேர்வு எழுத இயலவில்லை. அனந்தபூர் படிப்பை அத்தோடு நிறுத்திவிட்டு சென்னைக்கு வருகிறார். இங்கே பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை. ஏ.எம்.ஐ.ஈ கோர்சில் சேருகிறார்.

சினிமாவில் பாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?
“அப்போ எனக்கு 17 வயது இருக்கும். தி.நகர் விஜயராகவாச்சாரி ரோட்டில் உள்ள ஆந்திரா கிளப் நடத்திய ஒரு லைட் மியூசிக் போட்டியில் பாடிக் கொண்டிருந்தேன். மறைந்த மியூசிக் டைரக்டர் கோதண்டபாணி பார்வையாளர்களில் ஒருவராக உட்கார்ந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் என்னிடம் வந்தார் அவர். `நான் உன்னை படத்தில் பாட வைக்கிறேன். உனக்கு சினிமாவில் பாட விருப்பமா?' என்று கேட்டார்.
`உங்களுக்கு முயற்சி செய்து பார்க்க விருப்பம்னா எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை . ஆனால், நான் இப்போ படிச்சுக்கிட்டு இருக்கேன். அது எந்த விதத்திலேயும் தடைப்பட்டுப் போகக்கூடாது'ன்னு சொன்னேன். மறுநாள் அவர் என்னை ஒரு தயாரிப்பாளர்கிட்டே அழைச்சுக்கிட்டுப் போனார். அவரிடம் பாடிக் காட்டினேன். `பாட்டு நல்லாத்தான் இருக்கு. ஆனா, உன் குரலை குழந்தை நட்சத்திரத்திற்கும் பயன்படுத்த முடியாது. ஹீரோவுக்கும் சரிப்பட்டு வராது. குரல் இன்னும் மெச்சூர் ஆகணும்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். நாலு வருடங்கள் கழித்து மறுபடியும் ஆள் விட்டு அனுப்பினார் கோதண்டபாணி. அப்போ தெலுங்கில் பிரபலமாக இருந்த காமெடியன் பத்மநாபன் ‘ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா'ன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தார். அந்தப் படத்துலதான் நான் முதல் தடவையா ஹீரோ ஷோபன் பாபுவுக்காகப் பாடினேன்.''
விகடனுக்காக 82 -ம் வருடம் எஸ்.பி.பி-யை நான் சந்தித்தபோது, தான் வளர்ந்த கதையைப் பற்றி விரிவாகப் பேசினார் அவர்.
தமிழுக்கு இவர் எப்படி அறிமுகமானார்?
“68-ல ஒரு சமயம் அனைத்துக் கல்லூரிப் போட்டிக்காக தியாகராஜா காலேஜ்ல பாடிக் கொண்டிருந்தேன். நான் பாடுவதைக் கேட்ட ஓவியர் பரணி, என்னை டைரக்டர் ஸ்ரீதரிடம் அழைச்சிட்டுப் போனார். ஸ்ரீதருக்கு நான் பாடிக்காட்டினேன். `நீங்க பாடுவது எனக்குப் பிடிச்சிருக்கு. இருந்தாலும் மியூசிக் டைரக்டர் கேட்கணும். நாளைக்கு எம் .எஸ். விஸ்வநாதன் ஆபீஸ்ல கம்போசிங் இருக்கு. அங்கே வந்து பாடிக் காட்டுங்க’ன்னு சொன்னார்.
அடுத்த நாள் விஸ்வநாதன்சார் கிட்டே போய் இந்திப் பாட்டுகளைப் பாடிக் காட்டினேன். ‘தமிழ் தெரியுமா?’ என்று கேட்டார். எனக்குத் தமிழ்ல பாட வரும். ஒழுங்கா பேசவும், படிக்கவும்தான் வராது’ன்னு சொன்னேன். அவர் `காதலிக்க நேரமில்லை,' `ராமு' படங்களோட பாட்டுப் புத்தகங்களைக் கொடுத்தார். அந்தப் பாடல்களைத் தெலுங்கில் எழுதிக்கிட்டு பாடிக்காட்டினேன். அதைக் கேட்டுட்டு, `நான் சான்ஸ் தரேன். ஆனா, உங்க தமிழை மட்டும் இம்ப்ரூவ் செய்துக்கங்க'ன்னு சொல்லி அனுப்பினார் எம்.எஸ்.வி.
சொன்னபடியே ‘ஓட்டல் ரம்பா’ படத்தில எல்.ஆர்.ஈஸ்வரியுடன் டூயட் பாட சான்ஸ் தந்தார் அவர். ஆனால், அந்தப் படம் வெளியாகவே இல்லை. பிறகு, `சாந்தி நிலையம்' ‘குழந்தை உள்ளம்’ படங்களுக்காகப் பாடினேன். `அடிமைப்பெண்' படத்தில்தான் எனக்கு பிரேக் கிடைத்தது'' என்றார் எஸ்.பி.பி. அந்தத் திருப்புமுனைப் பாடல், `ஆயிரம் நிலவே வா!'
கல்லூரியில் மூன்றாவது வருடம் வரை படிப்பு, பாட்டு இரண்டிலும் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். பிறகு, படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேரப் பாடகராக மைக் பிடிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விஸ்வரூபம் எடுத்துவிட்டார். இந்த ஐம்பது வருடங்களில் 16 மொழிகளில் 40,000 பாடல்களுக்கும் அதிகமாகப் பாடியிருக்கிறார் பாடப்பிறந்த இந்த அசுரன்.
“இப்போது திரும்பிப் பார்த்தால் நான் இன்னும்கூட நல்லாப் பாடியிருக்கணும்னு தோணுது... எனக்கு எப்படி இத்தனை வாய்ப்புகள் கிடைச்சுதுன்னு வியப்பா இருக்கு. ஏதோ தன்னடக்கம் காரணமாக இதை நான் சொல்லலே. இந்த மில்லியன் டாலர் கேள்வி நான் உயிருடன் இருக்கற மட்டும் என்னைத் துளைச்சுட்டு இருக்கும்'' என்று 8 வருடங்களுக்கு முன் ‘ஹிந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொன்னார் எஸ்.பி.பி.
“ஒரு சாது மாதிரியான வாழ்க்கை வாழணும்ங்கறதுல எனக்கு நம்பிக்கை இல்லே... பாட வந்த பிறகு நான் நிறைய சிகரெட் பிடிச்சுக்கிட்டுதான் இருந்தேன். நீண்ட நாள் வாழணும்கறதால இப்போ நிறுத்திட்டேன். பருமனா இருந்ததால BARIATRIC அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போ ஹெல்த்தியா ஆயிட்டேன்... உற்சாகமாக இருக்கேன்...'' என்றும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் அவர்.
சின்னஞ்சிறுசுகள் பாடும்போது உற்சாகம் வெள்ளமெனப் பெருகும் எஸ்.பி.பி-க்கு. அதுவும் சினிமாவில் தான் பாடிய பாடல்களை அந்த இளம் மொட்டுகள் சிறப்பாகப் பாடும்போது சந்தோஷம் சிறகடித்துப் பறக்கும் அவருக்கு!

ஒருமுறை விஜய் டி.வி சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவுக்கு, விருந்தினராக வந்திருந்தார் எஸ்.பி.பி. ஒன்பது வயது சின்னப்பெண் ஸ்பூர்த்தி பாடினாள். ‘ராகங்கள் மாறுவதில்லை’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் எஸ்.பி.பி பாடியது. கல்யாணி ராகத்தில் ‘விழிகள் மீனோ... மொழிகள் தேனோ...' வைப் பாடி ஸ்வரங்களில் மேலும் கீழுமாகப் பயணித்துவிட்டு ஸ்பூர்த்தி நிறுத்தியபோது, கண்ணாடிகழற்றிகண்களைத் துடைத்துக்
கொண்டார் எஸ்.பி.பி. ``இங்கே வா'' என்று, பாடிய இளம்தளிரை அழைத்தார்; கட்டித் தழுவி உச்சிமுகர்ந்தார்.
‘‘உன் வயசுக்கும் உன் குரலுக்கும் சம்பந்தமே இல்லை கண்மணி... எங்கே அந்த ‘நாயகி பாதம்... நாயகன் வேதம்...’ வரியை மறுபடியும் பாடு...”
ஸ்பூர்த்தி இரண்டொரு தடவை பாடிக்காட்டினாள்.
“போடி. உனக்கு என்ன ரொமான்ஸ் தெரியும்டீ! எந்தப் பாடலிலும் ‘வேதம்’னு சொல் வந்தா, நான் அங்கே எந்த அசைவும் தரமாட்டேன். மந்திரம் மாதிரி plain notes-லதான் பாடுவேன்... நீயும் அப்படியே பாடுறே... இந்த எபிசோடுக்கு வர்றதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும்...'' நாத் தழுதழுக்கச் சொன்ன எஸ்.பி.பி., முத்தாய்ப்பாகக் கூறியது-
“இத்தனை நாளா இந்தப் பாடலை மேடைகள்லே நான் பாடாமலேயே விட்டுட்டேன்... இப்போ போய் நல்லா பிராக்டிஸ் பண்ணி அடுத்த கச்சேரியில் பாடப் போறேன்!''
இன்னொரு எபிசோடு. அதே சூப்பர் சிங்கர் ஜூனியர் செட். ஸ்பெஷல் கெஸ்ட் எஸ்.பி.பி. 1982-ல் வெளியான ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடல். பந்துவராளி ராகம். அன்று, கல்பனா ராகவேந்திராவுடன் இணைந்து பாடினான் சிறுவன் ஹ்ரிதிக்.

‘இலைகளில் காதல் கடிதம்... வண்டு எழுதும் பூஞ்சோலை’ என்றெல்லாம் ஹ்ரிதிக் பாடிக்கொண்டே போக, எஸ்.பி.பி-யால் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவனை அருகில் அழைத்துக் கட்டித் தழுவி, உச்சி முகர்ந்து... அரங்கில் இருந்தவர்கள் நெகிழ்ந்து போன சம்பவம் அது.
பேசும்போது இளையராஜாவைப் புகழ்ந்து தள்ளினார் எஸ்.பி.பி. பாடலில் அவர் செய்திருக்கும் சங்கீத ஜாலங்களை விளக்கினார். ‘சுருதி கொடுங்க சார்...' என்று சொல்லிவிட்டு பாடலின் சில வரிகளைத் தானே பாடிக்காட்டி லைவ் டெமான்ஸ்டிரேஷன் செய்தார்.
``இதோ இந்த சுண்டைக்கா பையன் பாடும்போது எனக்குப் பொறாமையா இருக்கு. விக்கி விக்கி அழணும்னு தோணுது. இது இதயத்தையும் ஆன்மாவையும் தொட்டு உலுக்குது... எங்கே அந்த வரியைத் திருப்பி பாடுடா கண்ணா... ப்ளீஸ்...'' என்று ஆனந்திக்கிறார், ஸ்ரீபதி பண்டிதராதயுல பாலசுப்ரமணியம் என்னும் எஸ்.பி.பி!
பணிவின் பிறப்பிடம் எஸ்.பி.பி. ஒருமுறை தியாகராஜர் தமிழ் மேடை நாடகத்தின் ஐம்பதாவது ஷோவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் அவர். யாரையும் காக்க வைத்து டென்ஷன் படுத்தாமல் குறித்த நேரத்துக்கு வந்துவிட்டார். திரைக்குப் பின்னால் நடந்த ‘நாடக பூஜை’யில் கலந்து கொண்டார். முதல் வரிசையில் அமர்ந்து முழு நாடகத்தையும் பார்த்துவிட்டு மேடையேறிப் பேசினார்:
‘‘ஒரு அழகான வேற உலகத்துல இத்தனை நேரம் இருந்துவிட்டு, திடீரென ஒரு லௌகீக பிரபஞ்சத்துக்கு வந்திருக்கோம். எனக்கு ஸ்வரம் எழுதத் தெரியாது. அரைகுறையா ஸ்லோ மோஷன்லதான் எழுதுவேன். சம்பிரதாய சங்கீதம் தெரியாது; மனோ தர்மம் தெரியாது; ஒண்ணுமே தெரியாது. இது பொய் கிடையாது. சத்தியம்... 50 வருஷமா பாடிக்கிட்டு இருக்கிறேன். இனிமே பொய் சொல்லி எனக்கு ஆகப்போவது எதுவுமில்லை'' என்றெல்லாம் பேசிவிட்டு, சதாசிவ பிரமேந்திரரின் ‘பிபரே ராம ரஸம்' பாடலை ‘ஜனன மரண பய சோக விதுரம்...' என்ற இடத்தில் எடுத்து எஸ்.பி.பி பாடியபோது பார்வையாளர்கள் பருகியது ஈடு இணையற்ற பாலு ரசம்!
`இனி தேவைப்படும்போதெல்லாம் நான் பாடி வைத்துள்ள ஆயிரக்கணக்கான பாடல்களை ஆசைதீரக் கேட்டு மகிழுங்கள்' என்று சொல்வதுபோல், கடந்த செப்டம்பர் மாதம் பறந்துசென்றுவிட்டது, மறைந்தாலும் என்றும் தேயாத பாடும் நிலா! பிரிவின் துயரம் தாங்காமல் கலைத்தாய் இன்னமும் அழுதுகொண்டிருக்கிறாள்.