Published:Updated:

``எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பாங்க, முதல்முறை அழுதாங்க..!’’ -நெகிழும் மிர்ச்சி செந்தில் 

அந்த வீடியோவை சீரியலின் நாயகன் மிர்ச்சி செந்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து சீனி பாட்டி ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி
மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலின் 500-வது எபிசோட் வெற்றி விழா அண்மையில் நடந்து முடிந்தது. விழாவில் மாயனுக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்ந்தது சீனி பாட்டிதான். சீரியலில் மாயனும் பாட்டியும் வரும் காட்சிகளுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி
மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி

வெற்றிவிழா மேடையில் சீனி பாட்டியின் பேச்சு அனைவரையும் நெகிழவைத்தது. ``யாரையும் எதிர்பார்க்கக் கூடாது, நம்மளா சம்பாதிக்கணும். நம்மளா நம்மை பார்த்தக்கணும். யார் கையையும் எதிர்பார்க்கக்கூடாது. யாரையும் தொந்தரவு பண்ணாம வாழ்ந்துட்டு போகணும்’’ என்று அவர் பேசி முடிக்கையில் அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அந்த வீடியோவை சீரியலின் நாயகன் மிர்ச்சி செந்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து சீனி பாட்டி ரஜினி படத்தில் நடித்து கொண்டிருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

சீனி பாட்டி குறித்து செந்திலிடம் பேசியதிலிருந்து சில வரிகள்... ``சீனி பாட்டிக்கு 80 வயசு தாண்டிடுச்சு. தனி ஆளா யாருடைய தயவும் இல்லாம சென்னையில் வீடு எடுத்து தங்குறாங்க. ஷூட்டுக்கும் அவங்களாதான் வருவாங்க. அவங்க சிகை அலங்காரம் எல்லாத்தையும் அவங்களே பண்ணிப்பாங்க. டயலாக் என்னன்னு கேட்டுட்டு அவங்க பாணியில் பேசுவாங்க. இயக்குநரும் பொறுமையா சொல்லிக்கொடுப்பார். இதற்கு முன்னாடி மெர்சல் படத்துல விஜய்கூட நடிச்சிருக்காங்க. விஸ்வாசம் படத்துல அஜித் கூட நடிச்சிருக்காங்க. இப்போ ரஜினி கூட நடிச்சிட்டு இருக்காங்க.

மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி
மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி

இந்த வயசுல அவங்களோட தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பும் என்னை ஆச்சர்யப்பட வைக்குது. ஷூட்ல ரொம்ப கலகலப்பா இருப்பாங்க. இதுவரைக்கும் ஒருவாட்டிகூட அயர்ந்து சோர்ந்து போய் பார்த்ததேயில்ல. மனசையும் உடம்பையும் ஆரோக்கியமா வெச்சிப்பாங்க. அவங்கள பார்த்தாலே புத்துணர்ச்சியாகிடுவேன். நானும் அவங்களும் செம ஃப்ரெண்ட்ஸ்.

சீனி பாட்டி சமீபத்துல ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினாங்க. அதில் செல்ஃபி எடுத்து எடுத்து அவங்க பிள்ளைகளுக்கு அனுப்பச் சொல்லி என் உயிர வாங்குவாங்க. சீரியல்ல வர மாதிரி நேர்லையும் கிழவின்னுதான் செல்லமா கூப்பிடுவேன்.

மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி
மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி

என் செல்லக்குட்டி அவங்க. அவங்க முதன்முதலா 500 வது எபிசோட் வெற்றி விழா மேடையில் அழுதப்போ எனக்கு கஷ்டமாகிடுச்சு. அவங்க அழுது முதல்முறை பார்த்தேன். இதே மாதிரி சந்தோஷமா ஆரோக்கியமா இருக்கணும் அவங்க எப்பவும்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.