Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

நா.சிபிச்சக்கரவர்த்தி

பாலிவுட்டில் நுழைந்ததில் இருந்தே சன்னி லியோனைச் சுற்றி சர்ச்சைதான். இந்த முறை சர்ச்சையில் சிக்கியிருப்பது சன்னி லியோனை பேட்டி எடுத்த நிருபர். ‘நீங்க சினிமாவில் நடிக்கவந்ததுக்குப் பிறகுதான் இந்தியாவில் `பலான' படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாமே?’ `நீங்க ஆசைப்பட்டாலும் அமீர்கான் உங்களோடு நடிப்பாரா?’ `உங்களைப் பேட்டி எடுப்பதால் நானும் ஒழுக்கம் தவறியவன் ஆகிவிடுவேனா?’ எனத் தொடர்ந்து கேள்விகள் கேட்க... எல்லா கேள்விகளுக்கும் நிதானமாகப் பதில் சொல்லி அப்ளாஸ் வாங்கிவிட்டார். இந்தப் பேட்டி ஒளிபரப்பான கொஞ்ச நேரத்திலேயே, அமீர்கான் ‘சன்னி... உங்கள் கடந்த காலம் பற்றி பிரச்னை இல்லை. உங்களுடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி’ என ட்வீட் தட்ட, சன்னி செம ஹேப்பி!

பிட்ஸ் பிரேக்

அரசியல் மேடைகளில் எதிரும் புதிருமாகச் சண்டைபோட்டாலும், பிரதமர் மோடியும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், ட்விட்டரில் நட்பு பாராட்டுகிறார்கள். `மம்தாஜியிடம் இருந்து ரொம்ப டச்சிங்கான புத்தாண்டு வாழ்த்து, அதுவும் என் தாய்மொழியான குஜராத்தியில் வந்திருக்கிறது. மிகுந்த நன்றி’ என  மோடி ட்வீட் தட்ட, பதிலுக்கு `நன்றி... நீங்கள் பெங்காலியில் அனுப்பிய பதில் வாழ்த்தும் கிடைத்தது’ என மம்தாவும் ட்வீட் தட்டினார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், `இது என்ன புதுசா?’ எனக் குழம்புகிறார்கள் திரிணமுல் - பா.ஜ.க தொண்டர்கள்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

யூடியூப் இணையதளத்துக்கு சமீபத்தில் ஸ்பெஷல் பேட்டி அளித்திருந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அதில் `என் சட்டைப்பையில் சில பொருட்களை எப்போதும் வைத்திருப்பேன். மனச்சோர்வு ஏற்படும்போது அவற்றை எடுத்துப் பார்த்துக்கொள்வேன்’ எனக் காண்பித்தார் ஒபாமா. அதில் போப் பிரான்சிஸ் அளித்த ஜெபமாலை, சிறிய புத்தர் சிலை, அனுமார் சிலை, எத்தியோப்பியா சென்றபோது அளிக்கப்பட்ட சிலுவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. `இவை மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதற்காக, இந்தப் பொருட்களை நான் வைத்திருக்கவில்லை. மனச்சோர்வு அடையும் சமயத்தில் இந்தப் பொருட்களைப் பார்க்கும்போது, இவை எப்படி என் கைக்கு வந்தன என்ற நிகழ்வுகள் நினைவில் வரும். அப்போது என்னுள் இருக்கும் மனச்சோர்வு நீங்கும். உடனடியாக அடுத்த வேலை பற்றி யோசிப்பேன்’ என  ரிலாக்ஸ் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் ஒபாமா!

பிட்ஸ் பிரேக்

`மொட்டைமாடி கல்பனா’ உண்மையில் செல்போன் நிறுவன உரிமையாளரையே திருமணம் செய்துவிட்டார். 39 வயதான மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவுடன், நடிகை அசினுக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கடந்த வாரம் திருமணம் நடந்தது. முக்கியமான உறவினர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தார்கள். அக்‌ஷய் குமார் மூலம்தான் ராகுல் ஷர்மாவோடு, அசின் நட்பு ஆனார் என்பதால், அவர் மட்டுமே திருமணத்துக்கு வந்த ஒரே சினிமா பிரபலம். பாலிவுட், கோலிவுட், மல்லுவுட்... சினிமா நண்பர்களுக்கு மட்டும் தனி ரிசப்ஷன் நடத்த இருக்கிறார்கள் அசின் - ராகுல் ஜோடி!

பிட்ஸ் பிரேக்

பாபா ராம்தேவ் - ஷில்பா ஷெட்டி யோகாதான் சமீபத்திய வைரல் ஹிட் வீடியோ. மும்பையில் ஐந்து நாட்கள் யோகா திருவிழாவை பாபா ராம்தேவ் நடத்த, அதில் சர்ப்ரைஸ் என்ட்ரி ஷில்பா ஷெட்டி. இருவரும் மேடையில் போட்டிபோட்டு யோகா செய்ய, ஒரு கட்டத்தில் ஷில்பா `என்னால் முடியவில்லை’ என ஒதுங்க, தனியாக ஸ்கோர்செய்தார் பாபா. கூட்டத்தில் இருந்தவர்கள் பாபா - ஷில்பாவின் போட்டி யோகா சாகசங்களை வீடியோ எடுத்து, உடனே ஆன்லைனில் பரப்ப, பல ஆயிரம் மீம்ஸ் முளைத்து கலகலப்பானது  சோஷியல் மீடியா!