Published:Updated:

``நாங்களும் ஒரிஜினல்ஸ் தயாரிப்போம்!” - அமேசான், நெட்ஃப்ளிக்ஸுக்கு யூடியூபின் சவால்

``நாங்களும் ஒரிஜினல்ஸ் தயாரிப்போம்!” - அமேசான், நெட்ஃப்ளிக்ஸுக்கு யூடியூபின் சவால்
``நாங்களும் ஒரிஜினல்ஸ் தயாரிப்போம்!” - அமேசான், நெட்ஃப்ளிக்ஸுக்கு யூடியூபின் சவால்

கூகுளின் அங்கமான யூடியூப் நிறுவனமும் சாத்தியங்கள் பல நிறைந்த இந்தியச் சந்தைக்காக ஒரிஜினல் கன்டென்ட் தயாரிக்கத் திட்டமுள்ளதாக அந்நிறுவனத்தின் சர்வதேச ஒரிஜினல் புரோகிராமிங் தலைவர் சூசன் டேனியல்ஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் நடந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் மிகவும் வேகமாக மக்கள் மத்தியில் புகழ்பெற்று வருகிறது OTT (Over the Top) என அழைக்கப்படும் ஸ்ட்ரீமிங் சேவைகள். இந்தியாவில் ஏறகெனவே ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் இதில் பலமாகக் கால்பதித்திருந்த நிலையில், முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களாக வெளிநாடுகளில் பார்க்கப்படும் நெட்ஃளிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகிய நிறுவனங்களும் கடந்த சில வருடங்களில் தங்களது சேவைகளை இந்தியாவில் வழங்கத்தொடங்கின; நல்ல வரவேற்பையும் பெறத் தொடங்கியுள்ளன .

இந்தச் சேவைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது இவை தயாரிக்கும் ஒரிஜினல் கன்டென்ட் எனப்படும் சொந்தத் தயாரிப்புகள். ஏற்கெனவே பல அமெரிக்க நிகழ்ச்சிகளைத் தயாரித்திருந்தாலும் அவற்றால் மட்டுமே இந்திய மக்களின் அபிமானத்தைப் பெறமுடியாமல் தவித்தன இந்த நிறுவனங்கள். நெட்ஃளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் முதலில் இந்தப் பிரச்னையால் தான் தவித்தன. பின்பு நமது பார்வையாளர்களுக்கேற்ப சேவைகளை புரோகிராமிங் செய்ய ஆரம்பித்ததுதான் இந்தியாவில் அதிக பயன்பாட்டாளர்களைப் பெறப் பெரிதும் உதவியது. இந்தச் பிரச்னை ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற இந்திய நிறுவனங்களுக்கு இல்லை. ப்ரீத், இன்சைடு எட்ஜ் ஆகிய சீரிஸ்கள் உட்பட பல இந்திய நிகழ்ச்சிகளை அமேசான் ப்ரைம் தயாரிக்க நெட்ஃளிக்ஸும் தனது முதல் இந்திய ஒரிஜினல் சீரிஸான சேக்ரெட் கேம்ஸை சமீபத்தில் வெளியிட்டது. இந்தத் தொடரை அனுராக் காஷ்யப் இணைந்து இயக்க, சைப் அலி கான், நவாஸுதீன் சித்திக்கி, ராதிகா ஆப்தே போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைப் போன்ற உள்ளூர் தயாரிப்புகள் உள்ளூர் பார்வையாளர்கள் மட்டுமின்ற உலகளவிலும் பல சந்தாரர்களை இந்த நிறுவனங்களுக்குப் பிடித்துக்கொடுத்தது. இந்நிலையில் கூகுளின் அங்கமான யூடியூப் நிறுவனமும் சாத்தியங்கள் பல நிறைந்த இந்தியச் சந்தைக்காக ஒரிஜினல் கன்டென்ட் தயாரிக்கத் திட்டமுள்ளதாக அந்நிறுவனத்தின் சர்வதேச ஒரிஜினல் புரோகிராமிங் தலைவர் சூசன் டேனியல்ஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரிஜினல் புரோகிராமிங்கில் ரியாலிட்டி ஷோ, நாடகத்தொடர்கள், ஆவணத்தொடர்கள் எனப் பல வகைகளான நிகழ்ச்சிகளைத் தயாரிக்க உள்ளதாகவும், ஏற்கெனவே ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ``அன்-கிரிக்கெட்" என்ற விளையாட்டுத் தொடர் எதிர்பார்ப்பையும் தாண்டி பல மக்களைக் கவர்ந்துள்ளது இன்பஅதிர்ச்சியாக உள்ளதாகவும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் டேனியல்ஸ் தெரிவித்திருந்தார். இந்த முயற்சிகளை இந்தியா மட்டுமன்றி பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மெக்சிகோ போன்ற நாடுகளிலும் முன்னெடுக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த ஒரிஜினல் நிகழ்ச்சிகளை ``யூடியூப் ஒரிஜினல்ஸ்" என்ற பேனரின் கீழ் தயாரிப்பது வழக்கம். முதன்முதலாக 2016 ல் வெளியாகத் தொடங்கிய இவை யூடியூப் பிரீமியம் என்ற தனிக்கட்டண சேவைத் தளத்தில் மட்டும் பார்க்கும்படியாக இருந்துவருகின்றன. அதில் சிலநிகழ்ச்சிகளை சாதாரண யூடியூப் தளத்திலும் விளம்பரங்களுடன் பார்க்க இயலும். இன்னும் யூடியூப் பிரீமியம் இந்தியாவில் ஆரம்பிக்கப்படாத நிலையில் அதுவும் விரைவில் இங்குக் கால்பதிக்கும் என நம்பலாம். இதைப் பற்றிய விரிவான திட்டங்கள் வரும் வாரங்களில் தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்ட்ரீமிங் சேவைகள் சினிமா, தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்கு என்றிருக்கும் மக்களுக்குத் தேர்ந்தெடுக்க தரமான பல்வகை நிகழ்ச்சிகளை வழுங்குவதோடு, இங்கு உள்ள கலாசாரத்தையும், திறமையையும் கலையின் வழியாக அனைத்து நாட்டு மக்கள் பார்வைக்கும் கொண்டுசெல்லவும் உதவுகிறது. மேலும் இதைப் போன்ற பெரிய நிறுவனங்களின் ஸ்ட்ரீமிங் சேவைகள் கலையுலகத்தில் வாய்ப்பு தேடும் பலருக்கும் தங்களின் திறமையை வெளிக்காட்ட பல கதவுகளை இங்குக் திறந்துவைக்க ஆரம்பித்துள்ளன. 
 

அடுத்த கட்டுரைக்கு