Published:Updated:

`விசாரணை மையங்களின் இன்னொரு முகம்' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல் #Ghoul #PartTwo

`விசாரணை மையங்களின் இன்னொரு முகம்' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல் #Ghoul #PartTwo
`விசாரணை மையங்களின் இன்னொரு முகம்' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல் #Ghoul #PartTwo

`விசாரணை மையங்களின் இன்னொரு முகம்' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல் #Ghoul #PartTwo

`அதன் இருப்பை நீங்கள் அறியமாட்டீர்கள்...
விழிப்போ நித்திரையோ...
இனி துர்க்கனவுகள் தொடங்கும்...!'

- இப்படித்தான் தொடங்குகிறது இரண்டாவது எபிசோட். விசாரணை அறைக்கு அழைத்து வரப்படுகிறான் அலி சயீத். அங்கே அவனின் பெயர், வயதை ஓர் அதிகாரி கேட்க, அவன் மௌனமாக நீடாவைப் பார்க்கிறான். திரும்பத் திரும்பக் கேட்டு கடுப்பாகும் அதிகாரி சயீத்தை அடித்து நொறுக்குகிறார். சங்கிலியில் கட்டித் தொங்கவிடப்படுகிறான் சயீத். ஏற்கெனவே நீடாவை தேசத்துரோகி எனச் சந்தேகிக்கும் லெப்டினென்ட் லஷ்மி தாஸ் அவரை விட்டே சயீத்தை அடிக்கச் சொல்கிறார். நீடா தயங்க, `இவ இந்த வேலைக்குத் தகுதியில்லனு எனக்குத் தெரியும்' என்கிறார் லஷ்மிதாஸ். 

`நமக்கு 24 மணி நேரம்தான் டைம். அதுக்குள்ள அலி சயீத்தை பேச வைக்கணும். எப்படியாவது பேச வைங்க' எனத் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார் மேக்தூத் 31-ன் தலைமை அதிகாரி கலோனல் சுனில். அன்றிரவு தனித்துவிடப்படுகிறான் அலி சயீத். கொஞ்ச நேரத்திலேயே அந்த முகாமிலிருக்கும் அதிகாரிகள், கைதிகள் எல்லாருக்கும் விசித்திரக் கனவுகள் வருகின்றன. நீடாவுக்குத் தன் தந்தை சுட்டுக்கொல்லப்படுவது போல கனவு வர, பதறி விழிக்கிறார். வெளியே இன்னும் மழை பெய்துகொண்டிருக்கிறது.

மறுநாள் முகாம் முழுவதும் அவரவர்களுக்கு வந்த கனவுகள் பற்றி விவாதங்கள் எழுகின்றன. நீடாவைப் போலவே விசாரணை அதிகாரிகளாக இருக்கும் சவுத்ரிக்கும் குப்தாவுக்கும் தாங்கள் விசாரணையின்போது சுட்டுக்கொன்ற அம்மா - மகள் பற்றிய கனவு வந்திருப்பதை தெரிந்துகொள்கிறார் நீடா. கலோனலின் உத்தரவுப்படி நீடா, சவுத்ரி, குப்தா மூன்று பேரும் சயீத்தை விசாரிக்க அறைக்குள் செல்கிறார்கள். தன்னை அடிக்க வருபவர்களிடம் `உங்களுக்கு அந்தச் சத்தம் கேக்குதா?' என வினவுகிறான் சயீத்.

மற்ற மூவரும் காதுகளை கூர்மையாக்குகிறார்கள். ஒரு குழந்தையின் அழுகுரலும் தாயின் ஓலமும் அந்த அறைக்குள் கேட்கிறது. சவுத்ரியும் குப்தாவும் பதற்றமாகிறார்கள். `அவங்களைக் கொல்லணும்னு சொன்னது யாரோட ஐடியா?' எனக் கேட்கிறான் சயீத். குழப்பத்தில் சவுத்ரியும் குப்தாவும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள். கேமரா வழியே அறைக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒன்றும் புரியாமல் போக, முழிக்கிறார்கள். திரையில் ஒரு மங்கலான முகம் தோன்றி மறைகிறது. ஏதோ சரியில்லை என மற்ற அதிகாரிகளுக்குத் தோன்ற, அவர்கள் விசாரணை அறைக்கு விரைகிறார்கள். 

அவர்கள் வந்து கதவைத் திறக்கும் அதே சமயம் வாக்குவாதம் முற்றி குப்தாவை கத்தியால் குத்திக் கொல்கிறார் சவுத்ரி. அதிகாரிகள் வந்து சவுத்ரியை இழுத்துச் செல்ல, `அவன் மனுஷனே இல்ல, அவனுக்கு எல்லாம் தெரியுது! அவன் மனுஷனே இல்ல...' என அலறியபடி இருட்டில் மறைகிறது சவுத்ரியின் உருவம். நிலைமை மோசமாவதை உணரும் கலோனல் சுனில் விசாரிக்கும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்கிறார். `நீ உண்மையைச் சொல்லலன்னா உன் குடும்பத்தை இங்கே கூப்பிட்டுவந்து உன் கண் முன்னால டார்ச்சர் பண்ணுவேன்' என சயீத்தை மிரட்டுகிறார் சுனில். 

சயீத் புரியாத மொழியில் ஏதோ முனங்கத் தொடங்க, கேமராவில் அதைப் பார்க்கும் நீடா அதென்ன மொழி என்பதயறிய சிறையிலிருக்கும் சயீத்தின் கூட்டாளி ஒருவரை அழைக்கிறார். `இது அராமீக்னு சொல்லப்படுற புராதன மொழி. ஆனா சயீத்துக்கு இந்த மொழி தெரியாது. இப்ப எப்படிப் பேசுறான்னு தெரியலை' என்கிறான் அவன். `அவனின் குற்றவுணர்ச்சியைத் தூண்டி அதன்பின் அவன் சதையைப் பிய்த்துச் சாப்பிடு' என சயீத் சொல்வதை மொழிபெயர்க்கிறான். எல்லாருக்கும் வியர்க்கிறது. அதேசமயம் அறையில் சுனிலின் மனைவி, குழந்தை பற்றிப் பேச்செடுக்கிறான் சயீத். கடுப்பாகும் சுனில் அவன் வாயில் மின்கம்பியை வைத்து ஹை வோல்டேஜ் தருகிறார். வாயில் நுரை தள்ள சயீத் கீழே விழ, கரன்ட் கட்டாகிறது. எங்கும் நிசப்தம்.

கேமரா அறையிலிருந்து விசாரணை அறைக்குச் செல்கிறார் நீடா. சுற்றிலும் இருள் ஆதிக்கம் செலுத்த, ஒரு மூலையில் சயீத் எழுந்து முதுகுகாட்டி நிற்பதை பார்க்கிறார். அருகே அவர் செல்லச் செல்ல சட்டென அந்த உருவம் திரும்புகிறது. நீடா அலறும் அதேவேளையில் மின் இணைப்பு உயிர் பெற அதிகாரிகள் உள்ளே வருகிறார்கள். காலடியில் கிடக்கிறான் சயீத். அவ்வளவு மின்சக்தி தாக்கியும் எப்படி உயிர் பிழைத்தான் இவன் என எல்லாரையும் ஆச்சர்யம் ஆட்கொள்கிறது. இவனை இப்படி விசாரித்தால் சரிப்படாது என முடிவு செய்யும் சுனில் அந்தப் பிரதேசமே அஞ்சி நடுங்கும் விசாரணை அதிகாரியான பவுலத் சிங்கை அழைக்கச் செல்கிறார்.

மறுபக்கம் நீடா, அலி சயீத் சாதாரண மனிதனில்லை என மற்ற அதிகாரிகளிடம் கூறுகிறார். அவர்கள் நீடாவைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அதிகாரிகளின் பலத்த ஆரவாரத்தோடு விசாரணை மையத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார் பவுலத் சிங். முகாமின் மற்றொரு மூலையின் விசாரணை அறைக்குள் இருக்கும் சயீத்தின் உதடுகள் லேசாக வளைகின்றன. `இதுதான் தொடக்கம்' என முணுமுணுக்கின்றன அவனின் உதடுகள். 

அடுத்த கட்டுரைக்கு