சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நூறு கேள்விகள் கேளுங்கள்!”

“நூறு கேள்விகள் கேளுங்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நூறு கேள்விகள் கேளுங்கள்!”

கே.யுவராஜன் - படம்: ப.சரவணக்குமார், யஷ்வந்த்

“டைரக்டர் ஆகணும்ங்கறது என்னுடைய இலக்கு. அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் சென்னைக்கு வந்தேன். ஏவிஎம் ஸ்டுடியோவில் செக்யூரிட்டியாக இருந்தேன். ‘பாக்யா’ பத்திரிகையில் சேர்ந்தேன். செக்யூரிட்டி ஆகறதோ, பத்திரிகையில் இருக்கிறதோ என் இலக்கு இல்லை. ஆனால், அந்த இலக்கை நோக்கிப் போகும்போது கிடைச்ச வழிகளை எல்லாம் நேசிச்சு செஞ்சேன். இதுதான் என் வாழ்க்கை, இதுவாகத்தான் நான் ஆகப்போறேன் என நீங்க ஓர் இலக்கை முடிவு செய்துட்டீங்கன்னா, அதை நோக்கி நம்பிக்கையோடு அடியெடுத்து வைங்க. அதுக்கு இடையில நீங்க என்னவாக வேணும்னாலும் இருக்கலாம். அதையெல்லாமும் நேசிச்சு செய்ங்க. அந்த இலக்கை நோக்கிக் காலம் உங்களைக் கூட்டிட்டுப் போகும்’’ - ‘பசங்க’ படைப்பின் மூலம் குழந்தைகளின் உலகத்தை நமக்குப் புரியவைத்த இயக்குநர் பாண்டிராஜ், அந்த 55 குழந்தைப் படைப்பாளிகள் எதிரே பேசிக்கொண்டிருந்தார்.    

விகடனின் இரு பெரும் பலங்கள், வாசகர்களும் மாணவப் பத்திரிகையாளர்களும். விகடனின் மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்று, பத்திரிகையில் மட்டுமன்றி, பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனை புரிந்து கொண்டிருப்பவர்கள் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கல்லூரி மாணவர்களுக்கு எப்படி மாணவப் பத்திரிகையாளர் திட்டமோ, அதேபோல பள்ளி மாணவர்களுக்காக விகடன் குழுமத்தின் சுட்டி விகடனால் நடத்தப்படுவது, ‘பேனா பிடிக்கலாம், பின்னி எடுக்கலாம்’ பயிற்சித் திட்டம்.

“நூறு கேள்விகள் கேளுங்கள்!”

பள்ளியில் படிக்கும்போதே, கற்பனைத் திறனிலும் சமூக விஷயங்களிலும் ஆர்வத்துடன் இருக்கும் சுட்டிகளைக் கண்டறிந்து, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் சுட்டி விகடனில் இதற்கான விண்ணப்பம் வெளியாகும். தமிழ்நாடு முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிலிருந்து மாணவ நிருபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ‘சுட்டி ஸ்டார்ஸ்’ என்ற பெயரில் சுட்டி விகடனில் கதைகள், செய்திகள், பிரபலங்களின் பேட்டிகளை எடுத்து அனுப்புவார்கள். சுட்டி விகடனின் ‘சுட்டி ஸ்டார்’களாக பேனாவைப் பிடித்து, பிறகு கல்லூரி படிக்கும்போது விகடனின் மாணவப் பத்திரிகையாளர்களாக உயர்ந்து, இன்று விகடனிலேயே நிருபர்களாக வலம்வருபவர்கள் இருக்கிறார்கள். ‘கலாம் சேட்’ என்ற பெயரில் மிகக் குறைந்த செலவில், சேட்டிலைட் தயாரித்து நாசாவை வியக்கவைத்த ரிஃபாத் ஷாரூக், ஒரு முன்னாள் சுட்டி ஸ்டாரே.

11-ம் ஆண்டாக இந்தமுறை 55 சுட்டி ஸ்டார்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள். அவர்களுக்காக நடந்த அறிமுகப் பயிற்சி முகாமில், கல்வி, ஆளுமைத்திறன், படைப்பாற்றல் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தந்தத் துறையின் ஆளுமைகள் பங்கேற்று வழிகாட்டினர்.

‘`எந்த விஷயமாக இருந்தாலும் நூறு கேள்விகளாவது கேளுங்கள். அந்தக் கேள்விகள் சிந்தனையை உருவாக்கும். அந்தச் சிந்தனைகள் 1000 புதிய படைப்புகளை உருவாக்கும். ‘ஸ்டார்ட் அப்’ என்ற வார்த்தை மூலம் புதிய புதிய படைப்புகளை உருவாக்குபவர்களும் பெரும் வெற்றிகளைக் குவிப்பவர்களும் கேள்வி கேட்டவர்கள்தாம்’’ என்றார் செந்தில்குமார். ‘கடைசி பெஞ்ச்’ மாணவர்களுக்காகவே, ‘ஹெலிக்ஸ்’ என்ற பள்ளியைத் தொடங்கி, மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வருபவர். எழுத்தாளர் ‘ஆயிஷா’ நடராசன், கதை, கட்டுரைகள், பேட்டிகள் எழுதுவது குறித்து வழிகாட்டினார். குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன், கலகலப்பான ஒரு நாடகம் வழியே, மாணவர்களைப் புதையல் வேட்டைக்கு அழைத்துச் சென்று புதிய உலகத்தைக் காட்டினார்.

நிகழ்வின் முக்கியப் பகுதியாக, குழந்தை நிருபர்களான ‘சுட்டி ஸ்டார்ஸ்’, ஒரு சிறப்பு விருந்தினரிடம் தங்களது முதல் பேட்டியை எடுக்க வேண்டும். அவர்தான் இயக்குநர் பாண்டிராஜ்.

‘பசங்க’ பாசத்தில் ஆரம்பித்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, விவசாயம், இன்றைய அரசியல் வரை அவரிடம் சுட்டி ஸ்டார்ஸ் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் ஆசம்.

‘`நீங்க எல்லாம் நல்லா படிங்க. ஆனால், பாடப்புத்தகங்கள் மட்டுமே நமக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிடாது. அதுக்கு வெளியே நிறைய படிங்க, படிச்சுக்கிட்டே இருங்க. நான் தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தின் 50 பக்கங்களாவது படிக்காமல் தூங்கப்போறதில்லை. அதேபோல, நிறைய மனிதர்களைப் படிங்க. அவங்ககிட்டதான் நமக்கான வெற்றி இருக்கு’’ என்றார் பாண்டிராஜ்.