Published:Updated:

செல்ஃபி எடுப்பதிலும் யோகா இருக்கு... முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!

செல்ஃபி எடுப்பதிலும் யோகா இருக்கு... முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!
செல்ஃபி எடுப்பதிலும் யோகா இருக்கு... முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!

முந்தைய காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களைப் பாராட்டி பல செய்திகளை நாம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் பெருமையோடு பகிர்ந்து வருகிறோம். இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தால் நாமும்கூட அந்த `முன்னோர்கள்' லிஸ்ட்டில் சேர்ந்து விடுவோம். அப்படி நாமும் முன்னோர்களாகும்போது இப்போது நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் எவராவது ஒருவர் புகழ்ந்து பாராட்டி பார்வர்டு மெஸேஜ்களை அனுப்பக்கூடும்! அப்படி என்ன மாதியான பாராட்டுகள் கிடைக்கும்னு ஒரு முன்னோட்டம் பார்க்கலாமா?!

கட்டை விரலைப் பயன்படுத்தும் டச் ஸ்கிரீன்
நம் முன்னோர்கள் டச் ஸ்கிரீன் எனப்படும் மொபைல்போன்களைப் பயன்படுத்தியிருக்காங்க. அந்த மொபைல் போனை இயக்குவதற்கு கட்டை விரலை மட்டுமே பயன்படுத்துவாங்க. நம் கையிலிருக்கும் விரல்களிலேயே ரொம்ப சின்ன விரல் கட்டை விரல்தான். அதேபோல கையில் அது மட்டும் தனியா கீழ இறங்கி அமைந்திருக்கும். அதனால அந்தக் கட்டை விரலுக்கு ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்காகத்தான் நம் முன்னோர்கள் கட்டை விரலைப் பயன்படுத்தியே மொபைல் போன்களை இயக்கியிருக்காங்க. ஆக, நம்ம விரல்களே ஆனாலும் அதுல உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாதுங்கற நல்ல கருத்தை நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிட்டுப் போயிருக்காங்க!

டூவீலர் பெண்கள் துப்பட்டாவால் ஹெல்மெட் போல கட்டுவது
தலைக்கு மாட்டும் ஹெல்மெட்டுகள் பயன்பாட்டில் இருந்த காலகட்டத்திலேயே இளம்பெண்கள் மட்டும் துப்பட்டாவால் தலை முழுவதையும் சுற்றி, கண்களுக்கு மட்டும் இடைவெளி விட்டுக் கட்டியபடி டூவீலரில் செல்லும் பழக்கம் முந்தைய காலத்தில் இருந்தது. தலையைச் சுற்றிக்கட்டி துப்பட்டாவைப் பயன்படுத்தியதற்குப் பின்னால் ஓர் அறிவியல் இருந்தது. இவர்கள் துப்பட்டாவை வெறும் ஹெல்மெட்டாக மட்டுமே பயன்படுத்தியதில்லை. அதை ஒரு ஃபில்டராகவும் பயன்படுத்தினார்கள். போக்குவரத்துப் புகையை வடிகட்டி தூய காற்றை நாசிக்கு அனுப்பும்! யாராவது தவறுதலாக மோதிவிட்டால் அவர்களைக் கெட்ட வார்த்தையால் திட்ட நினைத்தால் இந்தத் துப்பட்டா அதை வடிகட்டி நல்ல வார்த்தைகளாக மாற்றித்தரும்! அதுமட்டுமல்லாது, சாலையில் வேகமாகப் பயணிக்கும்போது சவுரி முடி அவிழ்ந்து விழாமலும் காப்பாற்றும்! துப்பட்டாவின் துணிக்கு அந்த அளவுக்கு சக்தி உண்டு பாஸ்!

ஸ்கூல் அட்மிஷனுக்காக க்யூவில் நிற்கும் பெற்றோர்கள்
பிள்ளைகளை ஸ்கூலில் சேர்க்க அப்ளிகேஷன் பார்ம் வாங்கறதுக்காகப் பள்ளிக்கூட வாசலில் நீண்ட க்யூவில் அதிகாலையிலிருந்தே பெற்றோர்கள் நிற்பாங்க. அப்படி நிற்பதில் ஓர் அறிவியல் இருக்குது. பொதுவா பெற்றோர்களுக்குக் குடும்ப பாரத்தைச் சுமப்பதால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அதிலும் பசங்களுக்கு அந்த ஸ்கூலில் அட்மிஷன் கிடைக்குமா என்ற கவலையால ப்ரஷர் ரொம்பவே ஏறிடும். அவங்க எல்லாரும் விடிகாலையிலேயே பள்ளி வாசலில் நிற்கும்போது அந்த நேரத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் புற ஊதாக்கதிர்கள் அவங்களோட மண்டையில் ஸ்ட்ரெயிட்டா ஊடுருவி, மூளைக்குள்ள போயி உட்கார்ந்து, அந்தப் பதற்றத்தையெல்லாம் தணிச்சு, உடல்நலத்தை மேம்படுத்தும். அதுவும் இவங்க ரொம்ப நேரம் நிற்கும்போது விடிகாலையில் பரவியிருக்கும் ஆல்பா கதிர்கள் மூட்டுகளுக்கு வலு ஏத்தி சுறுசுறுப்பை அதிகரிக்கும். இல்லைன்னா நம் முன்னோர்கள் ஏன் வீணா மணிக்கணக்கில் நிற்கப் போறாங்க?!

நொடிக்கு நூறு செல்ஃபி எடுப்பது
நம் முன்னோர்களுக்கு மொபைல்போனில் செல்ஃபி எடுக்கும் பழக்கம் தீவிரமாக இருந்துள்ளது. நொடிக்கு நூறு செல்ஃபிகூட எடுப்பார்கள். அப்படி செல்ஃபி எடுக்கும்போது முகத்தை அஷ்டகோணலாக மாற்றுவது, கைவிரல்களை வளைப்பது, உடம்பை முறுக்குவது போன்ற செயல்களைச் செய்வார்கள். முகத்தை அஷ்டகோணலாக மாற்றும்போது முகத்தில் உள்ள தசைகள் அனைத்தும் இறுக்கம் தளர்ந்து மென்மையான முகப்பொலிவைத் தரும்! அதேபோல கை, கால், உடம்பை முறுக்குவது அனைத்துமே யோகா போன்றதே! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல செல்ஃபியும் எடுப்பார்கள், அதேநேரம் யோகாவையும் செய்து முடிப்பார்கள்! இதில் நம் முன்னோர்களின் நேர மேலாண்மை பாராட்டுக்குரியது! இப்படி நம் முன்னோர்களின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் முறையாக நாமும் கடைபிடிப்பதே நம் முன்னோர்களுக்கும், நமது கலாசாரம், பண்பாட்டுக்கும் செய்யும் சேவையாகும்!

இரவு 12 மணிக்கும் மேலாகத் தூங்காமல் செல் நோண்டுவது
அந்தக் காலத்தில் இளைஞர்கள் எல்லோரும் விடிய விடிய மொபைல்போனை பயன்படுத்தி வாட்ஸ் அப், ஃபேஸ்புக்னு பிஸியா இருப்பாங்க. தினமும் தூங்குறதுக்குள்ள விடியவே தொடங்கிடும். அப்படிச் செய்ததில் ஒரு சமூக நோக்கம் இருந்தது. இந்த உலகத்தில் ஒரு பக்கம் பகலா இருக்கும்போது இன்னொரு பக்கம் இரவாக இருக்கும். ஒரு பக்கம் முழிச்சிருக்குறப்ப, இன்னொரு பக்கம் எல்லோரும் தூங்கிட்டு இருப்பாங்க. இப்படியே போயிட்டு இருந்தால் இரண்டு பக்கத்து மக்களுக்கும் ஒரு பிணைப்பே இல்லாமல் சமூகம் துண்டுபட்டு போகும்! அப்படி துண்டுபட்டு போகாமல் இருக்கறதுக்காகத்தான் இரவு நேரத்திலும் கண் விழித்து சமூகக் கடமையாற்றுவதை இளைஞர்கள் வழக்கமாக வச்சிருந்தாங்க. ஆனால் இந்தக் காலத்து இளைஞர்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் சமூகப்பொறுப்பே கிடையாது! நம் முன்னோர்களைப் பார்த்துதான் நாம கத்துக்கணும் பாஸ்!

டிவைடர்களில் கட்சிக்கொடிக் கம்பங்களை வரிசையாக நடுவது
அந்தக் காலத்தில் சாலையின் நடுவே இருக்கும் டிவைடர்களை கட்சிக்கொடிகளை வரிசையாக நடுவதற்கு மட்டும்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அது ஏனென்றால், கட்சிக்கொடிகளில் இருக்கும் பல வண்ணங்கள், சூரிய வெப்பத்தைச் சிதறடித்து குளிர்ச்சியைத் தரவல்லவை! மேலும், கொடிக்கம்பங்கள் இரும்பால்தான் செய்யப்பட்டிருக்கும். அதிலிருக்கும் இரும்புச்சத்து, அவ்வழியே பயணிக்கும் அனைவருக்கும் திடகாத்திரமான உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் தரவல்லது! 
 

அடுத்த கட்டுரைக்கு