
இன்பாக்ஸ்

கன்னடத்தின் இளம் ஹீரோ யாஷ் நடித்திருக்கும் படம் ‘KGF (கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ்)’. சமீபத்தில் இதன் ட்ரெயிலர் வெளியாகி இந்திய அளவில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி; சீன, ஜப்பானிய எனப் பன்மொழிகளில் தயாராகியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடப்போவது நடிகர் விஷால். இரண்டுபாகங்களாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தின் முதல் பாகம் டிசம்பரில் வெளியாகிறது. சபாஷ் யாஷ்!
கர்நாடக அரசு காவிரித்தாய்க்கு சிலை வைக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. கிருஷ்ணசாகர் அணையில் 325அடி உயரம் கொண்ட சிலை வைக்கவுள்ளதாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கூடவே அதே அணைப்பகுதியில் டிஸ்னி லேண்ட் போன்ற அம்யூஸ்மென்ட் பார்க் ஒன்றையும், மெழுகுச்சிலை மியூசியம் ஒன்றையும் கட்டவிருக்கிறார்களாம். மறுபடி சிலையா?

பாகுபலி டீமோடு ராஜமௌலி தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிற இப்படத்தில், கீர்த்தி சுரேஷும் ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஷ்மிகா மந்தனாவும் இருக்கிறார்களாம். இன்கேம் இன்கேம் காவாலே...!
உலகிலேயே முதன்முதலாக ஸ்காட்லாந்து அரசு தங்களுடைய அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு LGBT குறித்த பாடங்களைக் கட்டாயமாக்கியுள்ளது. ஒருபால் ஈர்ப்பாளர்கள் குறித்த கற்பிதங்களை அகற்றத்தான் இந்த முயற்சியாம். வெல்டன் ஸ்காட்ஸ்!

சர்வதேச குழந்தைகள் அமைப்பான UNICEF-ன் இந்தியாவுக்கான இளம் தூதுவராக (Young ambassador) தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அறிவிக்கப் பட்டுள்ளார். அஸ்ஸாமின் நாகாவ்னில் வறுமையான குடும்பத்தில் பிறந்து, கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பல சாதனைகள் புரிந்தவர் ஹிமா. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். வாழ்த்துகள் ஹிமா!
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ட்ரோன் ஆராய்ச்சிகளுக்கான ஆலோசகராக அஜித்குமாரை (Helicopter Test Pilot and UAV System Adviser)நியமித்திருந்தது. அவருடைய ஆலோசனையில் இயங்கும் எம்ஐடியின் ‘தக்ஷா’ ஆராய்ச்சிக்குழு மாணவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியொன்றில் வெற்றிபெற்றிருந்தனர். அந்தச் சமயத்தில் ‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கில் இருந்த அஜித், ஊர்திரும்பியதும் முதல்வேளையாக மாணவர்களைச் சந்தித்து வாழ்த்தியதோடு அவர்கள் உருவாக்கிய ட்ரோனையும் இயக்கிப் பார்த்திருக்கிறார். தெறிக்க விடுங்க!
மென்னோ மெய்ஜோஸ் எழுதி புலிட்சர் விருது பெற்ற நாவல் `தி கலர் பர்ப்பிள்’. இதை 1984-ல் திரைப்படமாக்கினார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இப்போது அதே படத்தை மீண்டும் இயக்க விருக்கிறார். ஓபரா வின்ப்ரேயுடன் ஸ்பீல் பெர்க்கோடு இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். அவார்ட்ஸ் நிச்சயம்!

இந்தியாவின் பல கோடி இளைஞர்களுக்குக் கண்ணீரையும் கடுப்பையும் வரவழைத்த தீபிகா- ரன்வீர் திருமணம் இத்தாலியில் இனிதே நிறைவடைந்திருக்கிறது. 20 லட்சம் ரூபாய் தாலி, இரண்டு கோடி ரூபாய் மோதிரம், ஒன்பது லட்ச ரூபாய் காஸ்ட்யூம் என செம காஸ்ட்லி கல்யாணம். பாலிவுட் வரலாற்றிலேயே இதுதான் ஹை-பட்ஜெட் கல்யாணம் என சிலிர்க்கிறது பாலிவுட் மீடியா. வாழ்த்துகள் மக்களே.
இந்தியக் கால்பந்து பற்றி `BAREFOOT TO BOOTS’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் பிரபல ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர் நோவி கபாடியா. ஆனால், தப்பித்தவறிக்கூட அந்தப் புத்தகத்தில் தமிழகக் கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பதுதான் மோசம். ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கடைசியாக கோல் அடித்த சைமன் சுந்தர்ராஜ், ஃபிஃபா உலகக் கோப்பையில் உதவி நடுவராக இருந்த கே.சங்கர், இந்தியாவின் பீலே எனப் போற்றப்பட்ட வடசென்னை நாகேஷ் என இந்தியக் கால்பந்துக்குப் பெருமைசேர்த்த தமிழர்கள் பற்றி இந்தப் புத்தகத்தில் எந்தத் தகவலும் இல்லை என்று வறுத்தெடுக் கிறார்கள் தமிழகக் கால்பந்து பிரியர்கள். கபாடியா... வாட்யா?